சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 8.5% விழுக்காடு ( மொத்த வாக்குகளில் அல்ல, பதிவான வாக்குகளில்) பெற்றதால் தேமுதிக மூன்றாவது பெரிய கட்சி என்ற செய்தியை அந்த கட்சியே வலிய பரப்பியது, அதன் தலைவர் விஜயகாந்தைத் தவிர வேறு யாரும் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது வேறுவிசயம். 30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள். பெற்ற ஓட்டு எண்ணிக்கைத்தான் கணக்கு :) இதை விட கூத்து மதுரை இடைத்தேர்தலில் தேமுதிக 2 ஆவது இடத்திற்கு வந்ததால் கட்சி வளர்ச்சி அடைந்துவிட்டதாம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் அள்ளிவிடும் என்பதை தற்போது ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக புரியாதவர்களுக்குக் கூட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
விஜயகாந்தின் கல்யாணம் மண்டபம் முறையற்று கட்டி இருந்து மத்திய அரசால் இடிக்கப்பட்டால் அதையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு 'தேமுதிக வளர்வது பிடிக்காமல் அழிக்க நினைக்கிறார் கருணாநிதி' என்ற குண்டை தூக்கிப் போட்டு வந்தார். டிஆர் பாலு இதையெல்லாம் புறம்தள்ளி இடித்துத் தள்ளிவிட்டார். விஜயகாந்த் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் பற்றி வாய்திறக்க மாட்டார். காரணம் உங்களுக்கே தெரியும். :)
'இராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் ? என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார் என்பதற்காக 'திருவள்ளுவர் எந்த காலேஜில் படித்தார் ?' என்ற கேள்வி எழுப்பி தனது தமிள்(?) பற்றை மெய்பித்தார் விஜயகாந்த். இது வீம்பிற்காக மீடியாவில் தம்பெயரும் கட்சியின் பெயரும் வரவேண்டுமென்பதற்கான வரட்டு அரசியல். இப்பொழுதெல்லாம் திமுகவையோ, கருணாநிதியையோ குறைச் சொல்லி நாளொரு அறிக்கை விடாவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் தன்னையோ, தன் கட்சியையோ பொதுமக்கள் மறந்துவிடுவார் என்று நினைக்கிறார் போல, காரணம்,
நேற்று மதுரையில் எம்ஜிஆர் நினைவு நாளுக்கு மாலை போடுவது யார் என்ற போட்டா போட்டியில் அதிமுகவும், தேமுதிக தொண்டர்கள் அடித்துக் கொண்டு கலவரம் வரை சென்று கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர், அதிமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றன. கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரில் இவரது கட்சி தொண்டர்கள் இவரை அழைப்பதைத் தவிர்த்து எம்ஜிஆருக்கும் தேமுதிக / விஜயகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை தெரிந்த அதிமுகவினர், மேலும் மதுரையில் தேமுதிகவினால் ஓட்டுக்கள் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் அதிமுகவினர், தேமுதிகவினர் எம்ஜிஆருக்கு மாலை அணிவிப்பதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் ?
இதில் ஈடுபட்டு சிறை சென்ற தொண்டர்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி பழியைத் தூக்கி திமுகமீது போட்டு
'தேமுதிகவின் வளர்ச்சி பொறுக்க முடியாத திமுகவின் தூண்டுதலால் அதிமுக - தேமுதிக தொண்டர்கள் மோதிக் கொள்கிறார்கள்' என்று மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கிறார். கருணாநிதி ஆட்சியில் இவர் வளர்ந்து, வளர்ச்சியைப் பற்றி பேச முடிகிறது, இதுவே ஜெ ஆட்சியாக இருந்தால் விஜயகாந்த் மீது கஞ்சா வழக்கே பாய்திருக்கும்.
திமுகவின் ஓட்டு வங்கி வைகோ பிரிந்து சென்ற போது எவ்வளவு இருந்ததோ அதே அளவில் தான் இருக்கிறது, அதிமுகவின் ஓட்டு வங்கி எம்ஜிஆர் ரசிகர்களால் உருவானது, சினிமா மோகம் உள்ள வாக்காளர், திரை கதாநாயகனை பார்த்து வாக்களிக்கும் வாக்களர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்களேயன்றி திமுகவில் இல்லை, அப்படி இருந்த்திருந்தால் திமுகவினால் நிறுத்தப்பட்ட நடிகர்கள் எவரேனும் தேர்தலில் வென்றிருக்க வேண்டும். நெப்போலியன், டிராஜேந்தர் தவிர்த்து திமுக சார்பில் நடிகர்கள் வென்றதே இல்லை. திமுகவின் வெற்றி அல்லது வளர்ச்சி சினிமா ரசிகர்களால் தீர்மாணிக்கப்படுபவை அல்ல. பின்பு ஏன் திமுக அதிமுகவின் சினிமா ரசிகர்களின் வாக்கு தேமுதிகவிற்கு சொல்வதைத் தடுக்கப் போகிறது ? திமுகவைப் பொறுத்து தேமுதிக அதிமுகவின் ஓட்டுகளைப் பிரிக்கும் கட்சி. வளர்ச்சியை தடை செய்வதைவிட வளர்த்துவிடவே கருணாநிதியும் விரும்புவார். இது விஜயகாந்துக்கு தெரியாதா ? தெரியும், மேலும் இதுதெரிந்த,
ஜெவின் எதிர்ப்பை, அதிமுகவின் எதிர்ப்பை சமாளிக்கவே கருணாநிதிமீது அள்ளித்தெளிப்பதும், அட்டாக் செய்வதுமாக, தன் இருப்பைக் காட்டிக் கொள்ளவும் விளம்பர அரசியல் செய்வதில் தேமுதிகவின் / விஜயகாந்தின் கொடி பறக்கிறது.