பின்பற்றுபவர்கள்

அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 செப்டம்பர், 2016

முடவனும் கொம்புத் தேனும்...!

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.

*****

பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.

உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.

கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.

******

நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.

ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?

கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.

வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன். 

உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.

4 செப்டம்பர், 2016

தெரியாமல் போய் இருக்கலாம்...

முன்பெல்லாம் அலைபேசிகள் இல்லாத காலத்தில் அலுவலகம் வழியாக பழகிய நண்பர்களை அந்த அலவலகத்தின்  தொடர்பு முடியும் போது கிட்டதட்ட முடிந்துவிடும், நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கொருவர் இல்லம் வரையிலான அறிமுகம் கிடைக்கப்பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்.  பேச்சிலராக இருந்த காலகட்டத்தில் நம்முடன் பழகிய நண்பர்கள் எத்தனையோ அதில் ஒரு சிலரை என்றாவது பார்ப்போம் என்று நம்பிக்கைகள் மட்டும் இருக்கும், தற்போது போன்று முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்கள் சாராத காலத்தில் தொடர்பறுந்த நட்பை தொடர்வதற்கான வாய்ப்புகள்  மிக அறிது, அப்படியும் பார்க்க நினைக்கும் நண்பர்கள் முகநூல் கணக்கு துவங்கி இருப்பார்களோ என்ற ஊகத்தில் எதிர்ப்பார்ப்பில் அவ்வப்போது ஊர் பெயர், இனிசியல், தந்தை பெயர் மற்றும் நண்பர் பெயர், பள்ளி கல்லூரி, முடித்த ஆண்டு, வேலை பார்த்த இடம் என்ற குறிச் சொற்களாக தேடித் தேடி சிலரை கண்டுபிடித்து 15-20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்களைத் தேடிச் சென்று கட்டிப்பிடித்து மகிழ்ந்ததுண்டு.

என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் பெயர் சவுரி ராஜன்,  1989 வாக்கில் ஒன்றாக வேலை செய்திருந்தோம், சென்னையில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்திருக்கிறோம்,  பிறகு 1989 - 97 வரையில் அவர் வேலை செய்த இடத்திற்கு நானோ அல்லது நான் வேலை செய்யும் இடத்திற்கு அவரோ சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் சந்தித்துக் கொள்வோம், நான் சிங்கை வந்த பிறகு அவருடன் முற்றிலும் தொடர்பு அறுந்து போனது, அதற்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய அன்றைய சூழலில் என்னால் அவரின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை, அதற்கும் முன் ஒருமுறை அவர் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது அவர் தங்குமிடம் இருக்கிறேன், அவரே அப்போது அழைத்துச் சென்றதால் எனக்கு முகவரியும் தெரியாது, 97 க்கு பிறகு முற்றிலும் தொடர்பு அறுந்துவிட 2013 வாக்கில், பதினைந்து ஆண்டுகள் கழித்து எதற்கும் பழைய அலுவலகம் இணைய தளம் (http://kores.in/) துவங்கி இருந்தால் ஒருவேளை அதில் தொடர்பு எண்கள் எதேனும் இருக்கும், முயற்சித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்து அலைத்தால் நண்பர் தற்போதும் அதே நிறுவனத்தில் மதுரையில் பணிபுரிவதாக சொல்லி அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள்,  அலைபேசியில் பேசிவிட்டு, தமிழகம் சென்ற போது அவரைப் பார்க்க வேண்டும் என்றே மதுரைக்குச் சென்றேன், என்னை இரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

15 ஆண்டுகள் ஆகிவிட்டதே நான் இன்னும் பழைய நண்பராகவே நினைக்க, 'சிங்கப்பூர்' பின்புலத்தில் இருந்து வந்ததால் என்னை பழைய படி டா போட்டு அழைத்துப் பேச நண்பர் தயங்கி 'ங்க' போட, நாய செருப்பால் அடி என்று நான் கடிந்து கொண்டு உரிமையில் ஒருமைக்கு மாறி இயல்பாக பேச அன்றைய பொழுது இருவரும் விடுபட்ட கதைகளை பேசிக் கொண்டோம், நான் மதுரையில் இருக்கேன், குடும்பம் சென்னையில் இருக்கிறது சென்னைக்கு வரும் போது சொல்லு நான் உன்னை வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன் என்றார், பிறகு பிரியா விடைபெற்றோம்,  அதன் பிறகு ஒரு சில முறை நான் சென்னை செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசுவேன், ஒரு முறை சென்னையில் இருந்தார், வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார், ஆனால் அன்றைக்கு அடைமழை சாலைகள் போக்குவரத்து இடையூறு என்று அவரது குடும்பத்துடன் எனது சந்திப்பு இயலாமல் போய்விட்டது

பிறகு சென்ற ஆண்டு மே மாதம் மும்பை சென்றிருந்த போது அங்கிருந்தே அவருக்கு அலைபேசினேன், மும்பையில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு இருந்தபடியால் எனக்கு உணவு மற்று சுற்றிப் பார்க்கும் இடம் குறித்து நிறைய தகவல்கள் சொன்னார், இப்ப சென்னைக்கே மாற்றலாகி வந்துவிட்டேன், சென்னை வரும் போது சொல்லுடா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன் என்றார்.   

பிறகு ஜூன் மாதம் திரும்பவும் மும்பை சென்றிருந்தேன், அங்கிருந்தே அவரது அலைபேசிக்கு அலைத்தேன், எதிர் முனையில் வயதான பெண்குரல், நீங்க யார் பேசுகிறீர்கள் ? அவரை எப்படித் தெரியும் போன்ற அனைத்துவிவரங்களையும் கேட்டுவிட்டு 'அவர் (சவுரிராஜன்) சென்ற வாரம் மாரடைப்பால் இறந்துவிட்டார்' நான் அவங்க மாமியார் தான் பேசுகிறேன், என் பொண்ணு (நண்பரின் மனைவி) அழுதுகிட்டே இருக்கா ஒருவாரமாக சரியாக சாப்பிடவில்லை... அவர் பையன் +12 படிக்கிறான், சரியாகவே படிக்கமாட்டேன்கிறான், என்ன செய்றது என்றே தெரியவில்லை என்று கலங்கிய குரலில் கூறினார். சென்னை வந்தால் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி  மற்றொரு அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கினேன்

கேட்க கேட்க நாம் ஒருவேளை அவரை சந்திக்காமலே இருந்திருக்கலாமோ? இ(ப்ப)டியான தகவலைக் கேட்கவா 15 ஆண்டுகள் கழித்து அவரை தேடிக் கண்டுபிடித்தேன், ஒருவேலை தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் இன்னும் என் நினைவில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பாரோ ? 

நண்பர் குடும்பத்தை இதுவரை சந்தித்தே இல்லை, அலைபேசி எண்ணை அழைத்து அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது என்பதால் நான் அவர் விட்டுச் சென்ற குடும்பத்தை சந்திக்க செல்லவே இல்லை

நான் என்ன செய்திருக்க வேண்டும் ?

நேற்று எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் இராஜ நடராஜன் மறைவு குறித்து வரூண் குறிப்பிட்டு இருந்தார்,  இராஜ நடராஜன் மறைவு கூட எனக்கு தெரியாமலே போய் இருக்கலாம், என்றாவது சந்திக்க முடியும் என்ற எண்ணிக் கொண்டிருந்த பதிவர்களில் அவரும் ஒருவர், என்னைப் போல் பலருக்கும் பிடித்தவர், காற்றுக் குமிழி போல் வண்ணங்களை காட்டி மறைந்துவிட்டார் :(



25 ஆகஸ்ட், 2013

நாமலும் சாமியார் தான் !

இராமகிருஷ்ண பரமகம்சரின் சாமியார் தன்மை பற்றி இராமகிருஷ்ண மடாலயங்களில் ஒரு தகவல் சொல்வதுண்டு, அதாவது அவர் காசுகளை கையினால் தொடுவதில்லையாம், வெற ? காலால் தொடுவாரான்னு கேட்காதிங்க, ஆதாவது ரிசிகள், ஞானிகள் சாமியார்கள் ஆகியோருக்கு பொருளாசைகளோ வேறெந்த ஆசைகளோ அறவே இருக்காதாம், மீறி காசுகளைத் தொட்டால் என்ன ஆகும் ? இராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் தனது குருவை சோதிக்க நினைத்தாராம், காசை இவர் கையில் தான் வாங்கமாட்டார், பேசாமல் காசை அவர் தூங்கும் பொழுது தலைக்கு அடியில் (தலையாணை வைச்சிருந்தாரான்னு கேட்காதிங்க) இருக்கும் படி படுக்கை விரிப்புக்கு அடியில் வைக்க, இராமகிருஷ்ணர் படுக்கைக்கு வந்து தலையை சாய்க்க, தலையே வெடித்து விட்டது போல் துடி துடித்தாராம், தன் செய்த (சூழ்ச்சி) சோதனையைச் சொல்லி 'குருவே என்னை மன்னிக்க வேண்டும்' என்று சீடர் சொல்ல, இனிமேல் அவ்வாறு செய்யாதே என்று இராமகிருஷ்ணர் சீடரை மன்னித்ததாகவும், சீடர் தெரியாமல் தவறு இழைத்து விட்டோடும் என்று மிகவும் மனம் வருந்தியதாகவும் ஒரு குட்டிக் கதையாக இராமகிருஷ்ணர் மடத்தினர் சொல்வதுண்டு.

காசு என்பது ஒரு உலோகம், அவை பண்டமாற்றுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து அந்தந்த உலோகத்தின் அடிப்படை மதிப்பு சொற்பமே, செப்புகாசு, பித்தளை காசு ஆகிய செய்யப்படும் உலோகத்தின் மதிப்பைவிட அதில் பொறிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு எப்போதும் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு உலோகம் தலைக்கு அடியில் இருந்ததற்காக இராமகிருஷ்ணர் பதறினார், துடித்தார், துன்பம் அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லை மீறிய கட்டுக்கதை என்பது தவிர்த்து அவற்றில் உண்மை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை, செம்புகளும் பித்தளைகளும் பாத்திரங்களாக பழங்கிய காலத்தில் அவை காசுகளாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும், எனவே குடிக்க செப்புக் குவளையை கையில் எடுக்கும் பொழுது ஏற்படாத அதிர்வலைகள் செம்பு காசால் ஏற்பட்டது என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் அந்தக் கதையை சாமியார்கள் காசு பணத்தின் மீது பற்றுதல் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்காக சொல்லப்படும் சற்று மிகைப்படுத்தப்பட்ட கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

நாமலும் கொஞ்ச கொஞ்சமாக சாமியார் ஆகிக் கொண்டு இருக்கிறோம், அச்சடித்த பணமும், காசுகளும் நமது பணப் பைகளின் செலவு இருப்பாக திணித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது, எல்லாவற்றிற்குமே அட்டையின் (Card) வந்துவிட்டது, ரொக்க அட்டை (debit) மற்றும் கடனட்டைகளை (credit) கையில் வைத்திருந்தாலே போதும், எங்கும் சென்று வந்துவிடலாம், பணம் களவு போகும் பயம் இருக்காது. பொட்டிக்கடைகளில் சிறிய அளவில் எதுவும் வாங்குவதற்கான தேவை என்பது தவிர்த்து பாக்கெட்டில் பணத்தை திணித்துக் கொண்டு வைத்திருக்கும் வழக்கம் படிப்படியாக குறைகிறது. முன்பெல்லாம் வாரத்திற்கு 50 வெள்ளிகளை மேல் பாக்கெட்டில் வைத்திருக்கும் நிலைமை தற்பொழுது 20 வெள்ளிகளாக சுருங்கியுள்ளது, காரணம் எல்லாவித கட்டணங்களுமே அட்டைகளால் நிறைவேற தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்திற்கு சென்று வரிசையில் நிற்பதுவும் குறைந்துள்ளது.

பேரங்காடி, தொடர்வண்டி நிலையம், பெரிய / நடுத்தர உணவகங்கள், பேருந்துகள் ஆகியவற்றிற்கும் அட்டைகளே பயன்படுவதால், அவற்றில் போதுமான தொகையை நிரப்பி வைத்துவிட்டால் வாரம், திங்கள் முழுவதும் அவற்றை பயன்படுத்த முடிகிறது. சில்லரைகளை (பத்துவெள்ளி, 20 வெள்ளி) கடனாக கேட்பவர்களுக்கும் கையில் போதிய இருப்பு இல்லை என்று கைவிரிக்க முடிகிறது (அவங்க வங்கி எண்ணுக்கு மாற்றிவிடச் சொல்லி கேட்காதவரையில் எளிதாக சமாளிக்கலாம்),
பிச்சைகாரர்களைப் பார்த்தால் பாக்கெட்டை தடவிவிட்டு நம்மிடம் சில்லரை எதுவுமே இல்லை என்று நடையைக் கட்டலாம். பக்கெட் அடிப்பவனுக்கும் ஏமாற்றம் (சிங்கையில் எனக்கு அந்த அனுபவம் நேர்ந்ததில்லை, இங்கே பாக்கெட் துண்டிப்பவர்கள் இல்லை என்னும் அளவுக்கு கடுமையான சட்டம், மாட்டினால் ஆயுதம் வைத்து கொள்ளை என்று பிடித்தவுடன் பிரம்படி கொடுத்துவிடுவார்கள், அது தவிர மிகவும் நெருக்கமான நேர பயணங்களில் அடுத்தவர் மூச்சு மேல் படும் அளவுக்கு அருகே நிற்பவரும் குறைவு), அப்படியே பாக்கெட் அடித்தாலும் 20 வெள்ளிக்கு நிரப்பிய எம்ஆர்டி அட்டை போய்விடும், வைத்திருந்த 20 வெள்ளிக்கும் குறைவான பணம் போய்விடும், மற்றபடி வங்கி அட்டைகளை உடனேயே காலாவதி செய்துவிட முடியும், பெரிய அளவில் மன உளைச்சல் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் புதிதாக வாங்க இரண்டு மூன்று நாள் ஆகும், வங்கி அட்டைகளை உடனடியாக மாற்றி வாங்கிக் கொள்ள முடியும்.


தற்பொழுது அட்டைகளுக்கு மறை எண்களை அடிக்க வேண்டி இருக்கிறது, அதிலும் மாற்றமாக Visa Pay Wave  விசிறிவிட்டு சென்றுவிடலாம், மறை எண்ணும் கையெழுத்தும் தேவை இல்லை, அட்டை வேறு யாரிடமும் மாட்டினால் ? ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் செல்பேசிக்கு குறும் தகவல் வந்துவிடும், எனவே வங்கிக்கு தெரிவித்து உடனடியாக கண்டுபிடித்து அட்டையை முடக்க முடியும், உடனடியாக செயல்பட்டு எந்த கடையில் எந்த நபர் அந்த அட்டையை பயன்படுத்தி இருக்க முடியும் என்பதை கேமரா கண்காணிப்பு அந்த நபர் வெளி ஏறும் முன்பு கண்டுபிடித்துவிடுவார்கள்.

அட்டைகளெல்லாம் எதற்கு கைரேகை வைத்தால் போதும்  வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் வாங்கிவிடலாம், மணிபர்சே தேவை இல்லை என்னும் காலம் கூட 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும்.

கேஷ்லெஸ் (தாள் பணமற்ற) பரிமாற்றத்தினால் நல்ல பயனுண்டு, அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சடிக்கத் தேவை இல்லை, வீட்டில் பெரிய அளவில் பணத்தை வைத்திருக்கத் தேவை இல்லை, என்ன ஒன்று ? ஊதிய பணமோ, வியாபார ஈட்டலோ வங்கிக்கு வரும், வங்கியில் இருந்தே போகும் நாம் அவற்றை எண்ணால் பார்க்க முடியும் கண்ணால் பார்க்க முடியாது. அப்பறம் என்ன காசு பணத்தை கையினால் தொடவில்லை என்றால் நாமும் சாமியார்கள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் தானே ?

இதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர் அவருக்கு தெரிந்த (சென்னை) போக்குவரத்து காவலர் ஒருவர் பணத்தை கையால் தொடுவதில்லை என்றார், அவ்வளவு நேர்மையான பண்பாளரா ? என்று கேட்டேன், மறுத்த நண்பர் இல்லை இல்லை அவர் எதிரே இருக்கும் பெட்டிக்கடைக்காரரை வாங்கி வைத்துக்கச் சொல்லி அவர் மூலம் தனது வங்கியில் போடச் சொல்லிவிடுவாராம். கடைசி பத்தி தென்கச்சி கோ சுவாமிநாதனை நினைத்து எழுதினேன், அப்படித்தான் கொஞ்சம் கடியான நகைச்சுவையுடன் இன்று ஒரு தகவலை அவர் முடிப்பார்.

14 ஜூலை, 2013

"நச்" !

நடக்கூடியது,மிகவும் ஆபத்தானது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.......என்றெல்லாம் நாம எது நடக்கூடாதுன்னு நினைக்கிறமோ, எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் அது நமக்கே நடக்கும் பொழுது....நடந்த பிறகு ஏற்பட்ட வலியை மீறி......நாம நினைச்சது போல் நடந்துவிட்டது என்று முன்கூட்டிய உள்ளுணர்வை நாமே மெச்சிக் கொண்டு, நம்மை தீர்க்க தரிசியாக நினைப்பது வலிகளை மீறிய ஒரு பெருமிதமான உணர்வு, ஆனால் அது அசட்டுத்தனமானது என்று நமக்கே அது தெரியும்.

************

இங்கே எல்லாம் காப்பீட்டு திட்ட முகவர்கள் காப்பிட்டுக்காக பேசும் பொழுது தன்னை குறிப்பிட்டு ஒருவேளை நான் விபத்தில் போய் சேர்ந்தால் இன்ன இன்ன நன்மைகள் காப்பீட்டு திட்டத்தால் கிடைக்கும் தன்மை விளக்கமாக விளக்குவார்கள், 'நீங்க போய்டிங்கன்னா' என்று முன்னிலை விளக்கினால் முகவரை செருப்பால் அடிக்காத குறையாக துறத்திவிடுவார்கள், காப்பீடுகள் விபத்தின்பிறகு பயனிளிக்கக் கூடியவை என்று நமக்கு நன்கு தெரிந்து தான் வாங்குகிறோம், இதில் அபசகுணம், ஆபாசகுணம் என்று எதுவும் இல்லை என்றால் 'இன்சூரன்ஸ் வாங்கி வைத்துவிட்டால் விபத்து எதுவுமே நடக்காது.....' என்பது பெருவானவர்களின் நம்பிக்கை. மற்றபடி விபத்து நடந்தாலும் நட்டமில்லை, குடும்பத்திற்கு உதவும் என்றே காப்பீடுகளுக்கு ஒப்புக் கொண்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர், 

ஒருமுறை 'கேக்ரான், மேக்ரான்' கொம்பேனியில் இருந்து ஒருவர் காப்பீட்டுக்காக அழைத்துப் பேசினார், ஒரு நாளைக்கு இத்தனை அழைப்புக் கணக்கில் அவர்களுக்கு ஏதேனும் கமிசன் கிடைக்கலாம், என்பதால் 'காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்' என்றதும், நாம விரும்பி தலையைக் கொடுக்காவிட்டால் இவர்களிடம் பேசுவதில் எதுவும் நட்டமில்லை என்றே 'சரி சொல்லுங்க; என்றேன், எல்லாம் விசாரித்துவிட்டு, உங்க வீட்டில் குழந்தை இருக்கிறது என்கிறீர்கள், உங்க குழந்தை கை கதவில் சிக்கிக் கொண்டால் கூட எங்க காப்பீட்டு திட்டம் பயன்கொடுக்கும் என்றார், நெருப்புன்னா வாய் வெந்திடுமா ? என்று கேட்பவரிடம் செருப்பு பிய்ந்துவிடும் என்று சொன்னால் கன்னம் பழுத்துவிடுமா ? என்று கேட்டுப்பாருங்கள் பதில் வராது, அப்பறம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார். இது போன்று தான் குழந்தை கை நசுங்குவதைப் பற்றிப் பேசுகிறானே என்று எனக்கு 'திக்' என ஆகியது. 'தயவு செய்து நான் திட்டுவதற்குள் போனை வைத்துவிடுங்கள்" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன், காப்பீட்டு முகவர்களில் 'இங்கிதம்' தெரியாதவர்களும் உண்டு, என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன், குழந்தைகளுக்கு கையில் அடிபடுவது ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதற்கு குழந்தைகளின்  வலியை மீறி பெற்றோர்களுக்குத்தான் வலி மிகுதி, முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பவைத் தவிர்த்து குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் விபத்துகள் பெற்றோர்களின் கவனக் குறைவும் பெறுப்பின்மையும்  தான் காரணம், அந்த அளவுக்கு அசட்டையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொண்டு பெருமைப்பட்டு சீராட்டுவதில்  என்ன பயன், அதற்கெல்லாம் காப்பீடு எடுத்து அதை வாங்க நேரிடும் கொடுமையைப் பற்றி நினைக்க விரும்பாததால் அந்த முகவரிடம் என்னால் தொடர்ந்து பேசவிருப்பமில்லை.

எங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆம் தளத்தில் இருக்கிறது, மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் படுக்க அறைக் கதவுகள் திறந்திருக்கும் பொழுது அதை சுவற்றுடன் கூடிய காந்த பொருத்தியில் அணைத்து வைக்காவிட்டால் படுக்கை அறை சன்னல்களையும், வீட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தால் அறைக்குள் காற்று நுழைந்து வெளியேறும் காற்று சுழற்சியின் அழுத்ததால் படுக்கையறைக் கதவு 'மடிரென்று பெரும் ஓசையுடன் சாத்திக் கொள்ளும்' நானும் பலமுறை சன்னல் கதவை திறந்து வைத்தால் படுக்கை அறைக் கதவை மூடி வையுங்கள், என்று சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டேன், நான் கவனித்து இருந்தால் காற்று மிகுதியாக உள்ளே வராத அளவுக்கு கொஞ்சமாகத்தான் திறந்து வைப்பேன், வீட்டில் உள்ள மற்றவர்கள் கேட்கனுமே, எதுவும் நடக்காத என்ற நம்பிக்கையில் கதவு அறைந்து சாத்திக் கொள்ளும் சத்தத்தை அப்போது மட்டும் பொருட்படுத்தி பிறகு மறந்துவிடுவார்கள். வீட்டில் குழந்தை இருக்கிறது, நாம பெரியவங்க கை நசுங்கினால் தாங்கிக் கொள்வோம், குழந்தைக்கு ஏதேனும் ஆச்சுன்னா ? என்றெல்லாம் கூட சொல்லிப் பார்த்தேன்.

பிப்ரவரி மாதம் இங்கே நன்றாக காற்று சுழன்று அடிக்கும், ஒரு நாள் காலையில் 10 மணி இருக்கும் வசிப்பறையில் தொலைகாட்சிப் பார்த்துவிட்டு, படுக்க அறை குளியல் அறைக்கு செல்லலாம் என்று உள்ளே சென்று சட்டையை கழட்டி கதவின் பின் இருக்கும் ஹாங்கரில் மாட்ட கதவை கொஞ்சம் கைவைத்து விலக்க, ஏற்கனவே சுவற்றுடன் பொருத்தியில் சரியாக பொருந்தி இல்லாததால், அடித்த காற்றுக்கு வேகாமாக சாத்திக் கொள்ள கதவு துவங்கியது, 'மடீர்' சத்தத்தையாவது தடுக்கலாமே என்று மிக அவசரமாக, செயல்பட ஆள்காட்டிவிரல் மட்டும் முந்திக் கொள்ள, காற்றுவிசையுடன் கூடிய கதவின் (இங்கெல்லாம் தீ தடுப்பு உலோககலவையுடன் கதவு செய்திருப்பார்கள், ஒரு கதவு ஐம்பது கிலோவுக்கு குறையாது) மொத்த எடையும் கதவு தாழ்பாள் போடும் இடத்தில் ஆள்கட்டி விரலில் சரியாக நகக்கண்ணில் 'நச்ச்.......'  மிகவும் வேகமாக மோத,   மரண வலி

'நான் எவ்வளவு தலைப்பாடாக அடித்துக் கொண்டேன் கேட்டீர்களா ?' இன்னேரம் குழந்தை விரலாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? என்றெல்லாம் சொல்ல சொல்ல அதன் பிறகு கவனமாக இருக்கிறார்கள், விரல் கதவில் நசுங்கிய பிறகு தாங்க முடியாத வலி, உடனேயே இரத்தம் நகத்திற்குள் கட்டிக் கொண்டது, வெளிக்காயம் எதுவுமில்லை,  விரலில் தொடர்ந்து சுத்தியால் அடிப்பது போன்று 'விண் விண்' ஒரு மாதிரி தெறிப்பான வலி மறுநாள் காலைவரை நீடித்தது, முதல் நாள் இளம் சிவப்பாக உள்ளுக்குள் தெரிந்த நகம் நாள் ஆக ஆக கருமைக்கு மாறியது, அவ்வளவு தான் இனி ஆள்காட்டி விரலில் நகமே இருக்காது, தேவை இல்லாத பங்கம், எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது,  மூன்றாம் நாளில் இருந்து விரல் வலி முற்றிலும் குறைந்தது

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக  நகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளுக்கு நாள் கருப்படைய கொஞ்சமும் வளர்ச்சி இன்றி இருந்ததால், ஆள்காட்டிவிரலில் கதை முடிந்தது என்றே நினைக்கத் துவங்கினேன், இரண்டு மாதம் ஆன பிறகு நகக்கண்ணில் இருந்து நகம் பிரியத் துவங்கி விரலுக்கும் நகத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்படத் துவங்கியது, அவ்வளவு தான் நகம் நகம்..........போச்சு என்றே நினைத்தேன், சட்டை மாட்டும் பொழுது அல்லது ஏதோ நூலிலோ, கம்பியிலோ விபத்தாக பிய்ந்துவரும் நகம் சிக்கிக் கொண்டு பெயர்த்து கொண்டால் மீண்டும் மரண வலி எடுக்குமே.... என்பதால் பேண்ட் எய்டை விரல் மீது சுற்றிக் கொண்டேன், நாள் தோறும் அதை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டு வர நகக்கண்ணில் இருந்து மேலும் மேலும் நகம் வளரும் திசைக்கு பெரிய இடைவெளி விட்டு விலகிக் கொண்டே சென்றது, பின்னர் இரண்டு வாரம் கழித்து  அடிபட்ட நகத்திற்கும் நகக்கண்ணிற்குமான இடத்தை வலது விரல் நகத்தால் அழுத்திப் பார்த்தேன்.

 'அப்பாடா' நக்கண்ணில் இருந்து புதிய நகம் வளரும் அழுத்தத்தை அதில் உணர்ந்தேன், அப்போதும் முழு நகமும் நசிங்கிய பிறகு அடிச் சதை காய்ந்து போய் இருக்குமே அதன் மீது வளர்ந்து வரும் நகம் படர்ந்து வளருமா ? என்ற ஐயம் இருந்தது, நானும் தொடர்ந்து ஒரு மாதம் நாள் தோறும் பேண்ட் எய்டுகளை சுற்றி சுற்றி காத்துவந்தேன், வெள்ளைக்கரு மீது முட்டை ஓடு உருவாகுவதைப் போல் அடிபட்ட நகத்தை முட்டித் தள்ளிக் கொண்டே புதிய நகம் முன்னேற விரல் நுணியில் பாதி அளவுக்கு பழைய நகம் தள்ளப்பட்டு அதற்கு மேல் அதற்கு தாங்கிப் பிடிக்க உறுதி இல்லாததால் ஒரு நாள் பையினுள் கைவிட்டு எதோ தேட பழைய நகம் முற்றிலும் பிய்ந்து தொங்கிவிட , ஆனால் வலி இல்லை. விரல் நுணியில் பாதி வளர்ந்த நகம், மீதம் சற்று மென்மையான சதைப் பகுதியாக தெரிந்தது, இதற்கு மேல் நகம் வளராதோ ? மீண்டும் ஐயம். ஆனாலும் தொடர்ந்து விரல் நுணியை ஓரளவு ஈரப்பதத்துடன், பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற முடிவு செய்து பேண்ட் எய்டு சுற்றியே வைத்திருந்தேன், அதன் பிறகு 15 நாள் ஆகி இருக்கும், விரலில் நகம் விழுந்த அடையாளமே தெரியாத அளவுக்கு  வளர்ந்திருந்தது, அடுத்த அடுத்தவாரம் நகம் வெட்டும் அளவுக்கு வளர்ந்துவிடும். மீண்டும் நகம் பழையபடி வளர்ந்து ஆள்காட்டி விரலை வடிவத்திற்கு கொண்டுவந்த பிறகும், அதன் வளர்ச்சியின் போதும் எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் என்னால் மட்டும் தான் உணரமுடியும். 


இதிலிருந்து நான் அறிந்து கொண்டது, விபத்தில் விரல் பகுதி சேதமடையாமல்  நகம் முற்றிலும் சிதைந்தால் கூட மூன்று மாத இடைவெளியில் மீண்டும் வளர்ந்துவிடும். நாம் அதுவரை அப்பகுதியை தூய்மையாக பாதுகாத்து வரவேண்டும், கலவரம் / கவலை அடையத்தேவையில்லை.

ஏற்கனவே வேறொரு விபத்து, அதுவும்  இது போல்உள்ளுணர்வு சொன்னது நடந்திருக்கிறது

24 ஜூன், 2013

இழத்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும் !

மூன்றாம் வகுப்பு படிக்கிறச்ச....ஆண்டவாரானரும் தேவ ஆட்டுக்குட்டியானவருமான ஏசு பிரான் குறித்த 'சண்டே க்ளாஸுகளுக்கு' சனிக்கிழமை வகுப்பு முடிந்ததும் கொடுக்கும் மிட்டாய்க்கு நாக்கு சுரந்து சென்று வந்ததுண்டு, மேற்கண்ட பதிவு தலைப்பில் படத்துடன் கூடிய துண்டு சிறுகதை ஒன்றைக் கொடுத்து படிக்கக் கொடுத்திருக்கிறார்கள், கதையும் அதனுடன் சேர்ந்த கதைத் தலைப்பும் இன்றளவிலும் என்னால் மறக்க முடியவில்லை, அதற்கு காரணம் ரொம்ப எளிது தான். எப்போதாவது எதையாவது தொலைத்தால் அந்த கதை நினைவுக்கு வந்துவிடும், கதை சுறுக்கம் இது தான், ஒரு ஏழையாகப்பட்டவன் ஆடு மேய்க்கப் போறச்ச... தன்னுடைய ஆட்டுக்குட்டியை தொலைத்துவிட்டு அழுது கொண்டிருப்பான், அந்த வழியாக வந்த ஏசு பிரான் அவனுடைய ஆட்டுக்குட்டியை கண்டுபிடித்துக் கொடுப்பார், உடனே அந்த ஏழை மகிழ்ச்சி எல்லைக்கு சென்றுவிடுவான், உங்களது இன்னல்கள் யாவையும் ஏசு பிரானிடம் சொல்லிவிட்டு அவை தீரும் பொழுது அந்த ஏழையைப் போல் நீங்களும் 'சந்தோசம் (மகிழ்ச்சி) அடையுங்கள்' என்பதே அந்த கதை கூறுவதாகும், 

இந்த கதையில் நாம் புரிந்து கொள்ளும் மற்றொன்று, என்ன தான் ஒருவன் உணவுக்கே வழி இல்லை என்றாலும் அவனுக்கு வானத்தில் இருந்து எதுவும் வரவழைத்து வழங்கப்படாது, அவனிடம் இருந்த ஏதேனும் பறிபோனால் அவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, கடவுளின் திறன் இவ்வளவே என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும், கடவுளிடம் அதைக் கொடு இதைக் கொடு என்று கேட்டால் எதுவும் கொடுக்கமாட்டார், உங்களின் தற்போதைய நிலைக்கு குந்தகம் வராமல் இருக்க வாய்ப்பு உண்டு அதுவும் 'மன்றாடினால்' மட்டுமே, இவை கிறித்துவ மதம் தவிர்த்து ஏனைய மதங்களின் அடைப்படை நம்பிக்கைகளுள் ஒன்று, அதாவது வழிபாடு என்பவை இழப்பில் இருந்து மீட்டுக் கொள்ள ஒரு (நல்) வழி. இதற்கு மேல் கடவுளுக்கு இயற்பியல் அடிப்படையிலான அந்த திறன் உண்டு, இந்த திறன் உண்டு என்று கட்டுக்கதைகளை பரப்பி விடும் பொழுது அவை போலி நம்பிக்கைகள் என்னும் விமர்சன வளையத்திற்குள் வந்து விடுகின்றன.



******

கடந்த வெள்ளி அன்று அலுவலகம் முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கும் பொழுது அலுவலக நுழைவு அனுமதி அட்டை (ஐடி கார்டு) தொலைந்துவிட்டது, நானும் மேலே கீழே எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் சென்று தேடிவிட்டேன் கிடைக்கவே இல்லை, எப்படியும் அலுவலகம் நுழையும் முன் வெளியேறும் முன் அட்டையைப் பயன்படுத்தி இருப்போம், தற்பொழுது அலுவலகத்தினுள் இருப்பதால் அட்டை அலுவலத்தினுள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, கடைசியாக ஒருவரின் கணிணியில் ஒரு மென்பொருள் நிறுவ சென்ற இடம், அங்கும் சென்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை, பிறகு அட்டையை செயல் இழக்க செய்துவிட்டு, அட்டையை கண்டுபிடிப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் என்று மின் அஞ்சல் அனுப்பிவிட்டு, எதற்கும் மீண்டும் அந்த இடத்தில் சென்று தேடலாம் என்று செல்ல அங்கே அந்த நபர் இல்லை, இருக்கையின் ஓரத்தில் அட்டை தொங்கிக் கொண்டு இருந்தது, முன்பு அவர் உட்கார்ந்திருந்தால் அங்கு சென்று தேடிய பொழுது எனது கண்களில் படவில்லை, நான் அவரது இருக்கையை பயன்படுத்திய பொழுது அட்டை அங்கே இருக்கையின் ஓரத்தில் சிக்கிக் கொள்ள, நான் எழுந்த பிறகு கவனிக்காமல் அவரும் அவரும் தொடர்ந்து அதே இருக்கையில் உட்கார்திருக்க முன்பு தேடிய பொழுது  கண்டுபிடிக்க முடியாமால் போனது. அப்பாடா என்ற என் நிம்மதி பெருமூச்சு ! அட்டை காணமல் போனால்  150 வெள்ளிகள் வரை கட்டணம் செலுத்த வேண்டும், அதுனுடன் கிடைக்கும் வரை மற்றவர்களிடம் அட்டையை கடன் கேட்டு அல்லது அவர்கள் செல்லும் பொழுது கூடவே செல்ல வேண்டி இருக்கும். அட்டை கிடைத்த பிறகு மேற்கண்ட 'இழந்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும் கதை' தான் நினைவுக்கு வந்தது. மீண்டும் கிடைத்த மகிழ்ச்சி 12 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.


சென்ற சனிக்கிழமை, காலை 8 மணிக்கு வழக்கமான இரத்த சோதனைக்காக அதன் தொடர்பிலான ஆவணங்களை எனது அலுவலக பையிலேயே எடுத்துக் கொண்டு சென்றேன், சோதனை அறையில் இரத்த மாதிரிகளைக் கொடுத்துவிட்டு, வெளியே வந்து காய்கறிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டு, உணவுக் கடை பகுதிக்குச் சென்று ஒரு காஃபி குடித்துவிட்டு வீட்டுற்குள் வந்து ஒன்றை மணி நேரம் ஆன பிறகு பையில் இருக்கும் பண அட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வேறொரு வேலைக்காகச் செல்ல முனைந்து பை இருக்கும் இடத்தை தேட பையைக் காணும், அதே அலுவலகப் பையில் தான் என்னுடைய அலுவலக நுழைவு அட்டை மற்றும் பணப்பை, பண அட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் இருந்தன. காணும் என்றதும் கலவரம் ஆகியது, நேற்றாவது 150 வெள்ளி இன்னிக்கு எல்லா அட்டையும் புதுப்பிக்க ஆகும் செலவு, அது கைக்கு கிடைக்க ஆகும் நாட்கள் மன உளைச்சல். எங்கு தொலைத்தேன், எங்கு  மறந்துவிட்டு  வந்தேன்....? மருத்துவ சோதனைக்கு சென்ற இடத்திலா, காய்கறி வாங்கிய இடத்திலா ? அல்லது காஃபி குடித்த இடத்திலா ? கொஞ்சம் தான் வாங்கிய காய்கறிகள், வாங்கிய பிறகு பையில் வைத்திருக்க முடியும், ஆனால் காய்கறிகள் மட்டுமே வீடு வந்திருக்கிறது பையைக் காணும், ஒருவேளை மருத்துவ சோதனைகள் நடந்த இடத்தில் தான் இரத்தம் எடுக்கும் பொழுது கீழே வைத்து மறந்து வந்திருக்க வேண்டும், உடனடியாக சென்று பார்ப்போம் பகல் 12:30க்குள் சென்றால் உள்ளே சென்றுவிடலாம் என்று பரப்பானேன், படப்பானேன்,  இது என்ன தேவை இல்லாத அழுத்தம் ?, ஏன் இத்தனை ஞாபக மறதி ? , வயது கூடுவதும் காரணமோ, கிடைக்காமல் போனால் இழப்பு எவ்வளவு........ என்றெல்லாம் என்ன இதயத் துடிப்புக் கூடுதலானது, 'ச்சே' என்ன இது இந்த அளவுக்கு மன உளைச்சல் ஆக என்ன இருக்கிறது. கடைசியாக போகும் பொழுது காணாமல் போனவற்றில் ஒன்றையாவது கொண்டு செல்ல முடியுமா ? கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கிடைக்கட்டும், இதற்காக தேவை இல்லாமல் கலங்கவோ, வருத்தப்படவோ ஒன்றும் இல்லை, போய் கேட்டு, தேடிப் பார்ப்போம் அதன் பிறகு கிடைக்காமல் போனால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம், என்று நல்ல தெளிவான மனநிலைக்கு வந்துவிட்டேன்.

பேருந்து ஏறி நேராக மருத்துவ சோதனைக்காக சென்ற மருத்துவ கூடத்திற்கு சென்று தேடிவிட்டு விசாரித்தால், கையை விறித்தார்கள், பின்னர் பையின் நிறம், அதனுள் இருந்தவை உள்ளிட்ட விவரங்களுடன் என்னுடைய கைப் பேசி எண் ஆகியவற்றை எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து அடுத்து காய்கறி வாங்கிய கடைக்குச் சென்று பார்க்கலாம் என்று சென்றேன், கடையிலும் யாரும் இல்லை, பையை எங்காவது கண்ணில்படும் படி வைத்திருக்கிறார்களா ? என்று பார்தேன் ம்கூம். ஒரு வேளை யாராவது எடுத்திருந்தாலும் கொடுபபர்களா ? அதனுள் குறிப்பிட்ட அளவு பணமும் இருந்ததே, 'ச்சே சிங்கையில் தொலைந்தால் கண்டிப்பாக கிடைக்கும்', எனக்கு காய்கறி கொடுத்த கடைக்கார சீனப் பாட்டியையும் காணவில்லை, சரி அடுத்து காஃபி குடிக்க சென்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்று தேடலாம், அங்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு வந்து மீண்டும் கேட்டுப்பார்கலாம் என்ற நினைத்து அங்கிருந்து அகன்றேன், பொது மருத்துவ சோதனை நிலையத்தில் காணாமல் போய் கிடைக்கும் வாய்ப்பு மறு நாள் ஞாயிறு என்பதால் இனிமேல் திங்கள் தான் என்று நினைத்துக் கொண்டு க்ஃபி குடித்த மேசையைப் பார்க்க அங்கு வேறு யாரோ அமர்து குடித்துக் கொண்டு இருந்தார்கள், அந்த இடத்தில் இருப்பதற்கான அறிகுறி இல்லை, அங்கே குடித்த டம்ளர்களை , சாப்பிட்ட தட்டுகளை எடுத்து செல்லும் பாட்டியிடம் விசாரிக்க அதுவும் நான் பார்க்க வில்லை என்றது, ஏமாற்றம்....... அப்படியே திரும்பி சுற்றிலும் பார்க்க மேசைகளை துடைக்கும் வேலை செய்பவர்கள் ஓய்விற்காக அமர்ந்திருக்கும் இடத்தில் 'பை', அதோ அது தான் என்னுடைய பை என்றேன் பாட்டியிடம், போய் எடுத்துக் கொள், நான் பார்க்கவில்லை, ஒரு வேளை 'டினா' பார்த்து எடுத்து வைத்திருந்தாள் போல என்றது. அப்பாடா என்ற மன நிறைவு பெருமூச்சுடன் பையை எடுத்துக் கொண்டு, அருகே திரும்பி அமர்திருந்த 'டினா' வை விழித்து, விவரம் சொல்லி பையை எடுத்துக் கொண்டு நன்றி கூறி. உள்ளே திறந்து பார்க்க எதுவும் காணாமல் போகாமல், களவாடாமல் அப்படியே இருக்க, நன்றிக்கடனாக 10 வெள்ளியை நீட்ட, வேண்டாம் என்று மறுத்தார், பின்னர் மீண்டும் வழியுறுத்தி நன்று கூறி கொடுக்க வாங்கிக் கொண்டார், 'இழத்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும்' கதை அடுத்த அடுத்த நாளில் மீண்டும் நினைவு கூர்ந்தேன், அந்த கதையில் கடைசியாக  என்னோடு சேர்ந்து நீங்களும் சந்தோசம் அடையுங்கள் என்று முடித்திருப்பார்கள்.

பை கிடைத்ததன் விவரம் வீட்டிற்கு அழைத்து சொன்னேன், 'என்ன இவ்வளவு கூலாக சொல்றிங்க' என்றார் மனைவி.

மன உளைச்சல் என்பது நாம் எதை தொலைத்தோம் என்பதைப் பொருத்தும் உள்ளது, பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கி கழுத்தில் போட்ட இரட்டை வட தங்கச் சங்கிலியையை, அல்லது ஒரு ரவுண்டு போய்டு உடனே வந்துடுறேன் என்று வாங்கி சென்ற பைக்கையா ? அல்லது சொத்தையே பறிகொடுத்தோமா ? உறவுகளை இழந்தோமோ என்ற பெரிய இழப்புகள் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை, அவற்றின் தாக்கம் வேறு, ஆனால் நம்முடைய நம்மால் ஈட்டக் கூடிய, அது இல்லாவிட்டாலும் நம்மால் வாழ முடியும் என்கிற நிலையில் உள்ள பொருள் குறித்தே எழுதியுள்ளேன்.

காணமல் போனவற்றை தேட முயற்சிக்கலாம் அவை கிட்டலாம் கிட்டாமலும் போகலாம்  அவை மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி, கிட்டாமல் போனால் நமக்கு நாமே ஆறுதலாக, அவை நம்முடனேயே வந்துவிடாது, அவை இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்ற நிலையும் இல்லை என்ற புரிதல் இருந்தால், நமக்கு மனவுளைச்சலோ, பெரிதாக இழந்தோம் என்கிற மன அழுத்தமோ ஏற்படாது. 

9 பிப்ரவரி, 2013

பல்லு போன சொல்லு மட்டும் தான் போகுமா ?


இதை ஒரு விழிப்புணர்வு பதிவு என்று நினைத்து தான் எழுதுகிறேன், உங்களுக்கு இந்த இடற்பாடு இருந்தால் பதிவை படித்து முடித்து முயற்சி செய்யுங்கள், சிறுவயதில் (7 - 8) வயதில் இனிப்பு சாப்பிடும் ஆவல் எனக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தது, தீபாவளிக்கு செய்யும் இனிப்பு பண்டங்கள், கெட்டி உருண்டை, அதிரசம், சீனி உருண்டை, கோவிலுக்கு போடும் மாவிளக்கு இவற்றில் எங்கள் வீட்டில் 75 விழுக்காடு தின்று தீர்ப்பது நான் தான், அதுமட்டும் இல்லாமல் அம்மா வீட்டில் இல்லாத பொழுது சீனியை கரண்டி கரண்டியாக அள்ளி தின்பேன், போன வாரம் தானே ஒருகிலோ வாங்கினேன் என்னா ஆயிருக்கும் என்று யோசித்து கொண்டு இருப்பார்கள், அதனால் ஏற்பட்ட எதிர்வினை கடைவாய் பற்களில் சேதம், பால் பற்கள் விழுந்து முளைந்திருந்தவைகளில் சேதாமாகியது, அந்த கால வளர்ப்பில் குழந்தைகளை இரவில் பல் துலக்கச் சொல்லும் கெட்ட பழக்கமெல்லாம் எங்கள் பெற்றோர்களிடமும் இல்லை, அது தவிர நாம பல் துலக்க பயன்படுத்துவது பயோரியா, கோபால் பற்படி,(அதன் இனிப்பு சுவையால் துலக்கி வெளியே துப்புவது ரொம்ப குறைவு) அவைகள் இல்லாத பொழுது இருக்கவே இருக்கு,  உமி கரி, வரட்டி சாம்பல் (சப்பென்றெ இருந்தாலும் சுவைதான்) , திருநீறு, செங்கல் தூள், இப்படியெல்லாம் பல்லை துலக்கி இருந்தால் அந்த பல் தான் துலங்குமா ? 10 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இருபக்கமும் பக்கத்திற்கு ஒன்றாக கடவாய் பற்களில் பள்(ல்லு)ளதாக்கு, அதை பல்மருத்துவரிடம் காட்டி அடைக்கலாம் என்று கூட தெரியாது, அப்படியே விட்டதில் நொறுங்கி நொறுங்கி இரண்டு பற்கள் காணாமல் போனது. 

நம்உடல் இருக்கும் உறுப்புகளுக்கு ஏற்ப வளைந்து கொள்ளும், கடவாய்பற்கள் இல்லாத நிலையில் உணவை மென்று உண்ணும் வழக்கம் குறைய பாதி அப்படியே விழுங்கிவிடுவதும், மென்று திங்க வேண்டிய முருங்கைக்காய் வகையறாக்களை மட்டுமே மெல்வது மென்மையான அரிசி சோறு, தோசை இட்லி வகைகளை நாக்குக் சுவை காட்டிவிட்டு அப்படியே விழுங்குவது என்று உணவு உண்ணும் முறையே மாறி போய் இருந்தது, எதனால் மெல்லாமல் விழுங்குறேன் என்பதே எனக்கு அண்மை வரை தெரியாதது, மேல் தாடையிலும் இரண்டு பற்கள் 18 - 19 வயதில் ஆட்டம் காண அதை 30 வயது வரை தாக்குபிடித்து வைத்திருந்தேன், பின்பு ஒருநாள் பட்டாணியை கடிக்க, பட்டாணிக்கு வலி பொறுக்குமா ? உடைத்துவிட்டது பல்லை, மேல் வரிசை பற்களில் முன்புறவரிசையைத் தள்ளி பக்கத்திற்கு ஒன்றாக இரு பற்கள் வேறு வேறு நாட்களில் காணாமல் போனது, விளைவு ?

சோற்றை மென்று சாப்பிடுவதற்கு பதில் விழுங்குவது இதெல்லாம் எனக்கு பிரச்சனையாகத் தெரியவில்லை, ஆனால் முன்வரிசையில் மூன்றாம் பற்கள், காணாமல் போனது வாய்விட்டு சிரிப்பது முக அழகைக் கெடுப்பதாகவே இருந்தது, நாம் சிரிக்கும் பொழுது பார்க்கிறவர்களுக்கு இரண்டு பக்கமும் பற்களில் இடையே  ஓட்டை இருப்பது தெரிந்தம் நமக்கு கொஞ்சமேனும் கூச்சம் மற்றும் அவமானம் ஏற்படும், அதைத் தவிர்க்க, பெரும்பாலும் வாய்குள் சிரிப்பது, உதடை மூடிச் சிரிப்பது என்று பழக்கப்படுத்தி கொண்டேன், வாய் முடி குலுங்கி குலுங்கி சிரிச்சா எப்படி இருக்குமோ ? அப்படி சிரிக்க வேண்டிய நிலை, கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இதுவே என் சிரிப்பு அழகு என்று இருந்தது, கொஞ்சமாக உதடு திறந்து சிரித்தால் ஒன்றும் தெரியாது, ஆனால் அதற்கும் கொஞ்சம் கூடுதலாக சிரித்தால் மேல் பக்கம் நான்காம்  பல் இல்லை என்பது தெரிந்துவிடும்.

இடையில் செயற்கையாக எடுத்து மாட்டும் பக்கத்து ஒன்றாகமேல் வாயை ஒட்டி இருக்கும் க்ளிப் வகை ஒன்றையை பொறுத்திப் பார்த்தேன், எனக்கு சரியாக வரவில்லை, சிரித்தால் க்ளிப் கம்பி தெரியும், சாப்பிடும் பொழுது துணுக்குகள் போய் அடைத்துக் கொண்டு பெரிய தொந்தரவாகவே இருக்கும், சாப்பிட்ட உடனேயே எடுத்து கழுவ வேண்டி இருக்கும், வீட்டில் இருக்கும் பொழுது பரவாயில்லை, வெளியே நான்கு பேருக்கு முன்பு அவ்வாறு செய்ய முடியாது,  தொந்தரவாகவே இருக்கும்,  படுக்கும் பொழுதும் அவற்றை அணிந்திருப்பது பொருத்தமற்றவையாக இருந்தது.  அப்பறம் கழட்டி எரியும் முன்பு அதுவே உடைந்து போக அதன் பிறகு 4 - 5 ஆண்டுகளுக்கு உதடு மூடிச் சிரித்தே பல் பிரச்சனையை சமாளித்து வந்தேன். அதற்கு மேல் மொத்தமாக மேலும் கிழும்  நான்கு பற்கள் இல்லையே என்பதை நான் ஒரு பிரச்சனையாக கருதியதில்லை,  ஆனாலும் அவ்வப்போது இந்த நான்கு பற்கள் இல்லாததால் நாம் முழுமனிதன் இல்லை என்று அதை ஒரு குறையாகவே மனசு உணரும்,

ஓராண்டு முன்பு ஊருக்குப் போன பொழுது தான், இதே பிரச்சனை உள்ள (அண்மையில் மறைந்த) என் தம்பி செராமிக் செயற்கைப் பல் பொருத்தி இருந்ததைப் பார்த்தேன், விவரம் கேட்க இந்த செய்ற்கைப் பல் எடுத்து மாட்டத் தேவை இல்லை, ஒரு முறைப் பொருத்தினால் அப்படியேதான் இருக்கும் (Permanent Fixing), வழக்கமாக பற்கள் துலக்குவது போல் துலக்கிக் கொண்டால் போதும் இதை பராமரிக்கத் தேவை இல்லை என்றான், எனக்கு ஆர்வம் பிறந்தது ஆனாலும் அப்போது செயல்படுத்த கால அவகாசம் இல்லை, பல் மருத்துவர் நமது பல் அச்சுகளை எடுத்து அவற்றை செய்யக் கொடுத்து பொருத்த குறைந்தது ஒருவார கால ஆகும் என்பதால் அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிட்டேன், 

ஐந்து மாதங்களுக்கு முன்பு வேலை மாற்றும் சூழலில் இடைப்பட்ட 10 நாள் இடைவெளியில் தமிழகம் சென்ற பொழுது, மருத்துவரைப் பார்க்க பற்களை அச்சு எடுத்து ஒருவார காலத்தில் பொருத்திவிட்டார், முதல் இரண்டு நாட்கள்  தொடர்ந்து எதோ பற்களை கடித்துக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு இருந்தது பிறகு அவை மறைந்துவிட்டன, உணவை நன்றாக மென்று விழுங்க முடிகிறது என்றாலும் பழைய பழக்கமாக அப்படியே விழுங்கும் வழக்கம் இன்னும் மாறவில்லை, என்ன தான் இருந்தாலும் உண்மையான பற்களுக்கும் செராமிக் பற்களுக்கும் அளவு நிரம் உறுதி இவற்றில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் உண்மையான பற்கள் கொடுக்கும் சுவை, குறிப்பாக முறுங்கைகாய் உள்ளிட்டவற்றைக் கடிக்கும் பொழுது கிடைக்கும் சாற்றின் சுவை வேறுபாடுகளை உணர முடிகிறது, மற்றபடி பெரிய வேறுபாடு இல்லை, வாயைத் திறந்து சிரிக்கலாம்.




(இது நான் இல்லிங்க - எனக்கு மீசை இருக்கும், இணையத்தில் எடுத்தப் படம், இதே  போன்று தான் மேல் தாடையில் பக்கத்திற்கு ஒன்றாக எனக்கு இருபற்கள் இல்லாமல் இருந்தது)

செய்ற்கைப் பற்கள் பொருத்தாமல் ஆண்டுகணக்கில் விட்டுவிட்டால் மற்ற பற்களிடையே இடைவெளிகள் ஏற்படத் துவங்கும், நாளடைவில் பற்கள் உறுதி இழக்கும், கீழ் தாடையில் ஒரு பல் இல்லாவிட்டால் மேல் தாடையில் அதற்கு நேர் மேலே இருக்கும் பற்கள் கீழாக இறங்கத் துவங்கும், சொத்தைப் பற்களை அடைக்காமல் விட்டுவிட்டால் அடிக்கடி பாக்டிரியாக்களால் ஈரல் கட்டி ஏற்படும். அனைத்துப் பற்களையும் 60 வயது வரையிலாவது பாதுக்காக்க வேண்டும், அதற்குள் சிதைந்திருந்தால், விழுந்திருந்தால் அந்த இடத்தில் செயற்கைப் பற்கள் வைத்துக் கொள்வது நல்லது, கடைவாய்பற்களில் எண்ணிக்கைக் குறைய குறைய கன்னம் குழிவிழ முக அழகை கெடுக்கும்.

மேலும் கீழும் இரண்டு பற்களைப் பொருத்த மருத்துவர்கள் செய்வது, எங்கு பல்லைப் பொருத்த வேண்டுமோ அதற்கு இரு பக்கத்திலும் உள்ள பற்களை சுற்றிலும் கொஞ்சம் குறைக்கிறார்கள், பின்னர் அந்தப் பற்களின் உறுதியினால் அதனையும் சேர்த்து மொத்தமாக ஒட்டி இருக்கும் படி மூன்று பற்கள் , அதாவது நடுவில் செயற்கைப் பல் இருபக்கமும் செயற்கைப் பல் உண்மையான பல்லை மூடி இருக்கும் படி ஒரு வித உறுதியான பசையினால் பொருத்துகிறார்கள், பல்லை கொஞ்சம் தேய்த்து எடுக்கும் பொழுது கொஞ்சம் பற்கூச்சம் இருக்கும் மற்றபடி இதற்கு எந்த அறுவை சிகைச்சையும் கிடையாது. இதற்கு பற்களுக்கு பாலம் போடுதல் என்று பெயர் ஆங்கிலத்தில் Bridge என்கிறார்கள், சிங்கையில் மூன்று பற்கள் சேர்ந்த ஒரு பாலத்திற்கு கட்டணம் 4000 வெள்ளிகள் வரை வாங்குகிறார்கள், 3000 வெள்ளுக்கும் குறைவாக இந்த சிகிச்சை இங்கு கிடையாது.

தமிழகத்தில் செயற்கைப் பற்களின் உலோகத்திற்கு ஏற்ப ஒரு பல்லுக்கு 10,000 ரூபாய் வருகிறது, பொதுவாக செராமிக் பாலப் பற்களுக்கு பல்லுக்கு 3000 ருபாய், எனக்கு மொத்தமாக நான்கு செயற்கைப் பற்களுக்கு அக்கம் பக்கம் 8 பற்களை தேய்த்து குறைத்து, நான்கு பாலங்கள் போட 12 பற்கள் கணக்கு. செலவு 36000 ரூபாய் ஆனது, கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டேன், ஒரு பல்லாக இருந்தாலும் 12 பல்லாக இருந்தாலும் நாங்க பல்லு கணக்கு 100 ரூபாய்  கேரளாவிலில் இருந்து செய்து அனுப்பும் கூரியர் கட்டணம் வாங்குவோம், அதை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், உங்களுக்கு கூரியர் கட்டணம் 100 ரூபாய் மட்டும் போட்டுக் கொள்கிறேன், 12 பல்லும் ஒரு கூரியர் வழியாகத்தானே வந்திருக்கும் என்பதால் இவ்வாறு ஒப்புக் கொண்டு மொத்தம் 30,900/- வாங்கிக் கொண்டார். சிங்கையில் இதைச் செய்திருந்தால் 16,000 வெள்ளிகள் ஆகி இருக்கும் என்று ஒப்பிட்ட  31,900/- ரூபாய் 16ல் ஒரு பங்கு செலவு தான். ஆனால் 32,000 ஆச்சு என்றதும் எங்க அக்காவே ஆ......! அவ்வளவா ? என்றார்கள்.

பணம் என்ன ? பழைய படி வாய்விட்டு சிரிக்க முடிகிறதே, முன்பைவிட கன்னமும் கொஞ்சம் உப்பலாக வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக நமக்கே நமக்கான சிலவற்றில் நாம் அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி அப்பறம் பார்க்கலாம் என்று விட்டுவிடும் அதன் பக்கவிளைவுகள் வேறுமாதிரியாக இருக்கும். என்னுடைய குழந்தைகளை நாள் தோறும் இருமுறை பல் துலக்க வைப்பதை பழக்கப் படுத்திவிட்டேன், அவங்க என் அளவுக்கு இனிப்பு வெறியர்களாகவும் இல்லை என்பது வேற.

இப்போதெல்லாம் எனக்கு 'நான் முழுமனிதனா ?' என்ற கேள்வி வருவதே இல்லை.

2 பிப்ரவரி, 2013

சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆன கதை !


நேற்றில் இருந்து சிங்கையில் விஸ்வரூபம் ஓடுது, இங்கே முதலில் வெளி இடவும் இல்லை, பிறகு இடை நிறுத்தவும் இல்லை, தமிழக கூத்துகள் முடியட்டம் என்று இங்குள்ள தனிக்கைக் குழு காத்திருந்ததோ என்னவோ, நேற்று தீர்ப்பு அப்படி இப்படி என்றதும் அதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் அனுமதி கொடுத்துவிட்டனர், நேற்று முதல் இங்கே விஸ்வரூப காய்சல் அடிக்கக் துவங்கி இருக்கிறது, கோல்டன் டிஜிட்டல் மற்றும் ரெக்ஸ் திரைவளாகங்களில் மொத்தம் ஐந்து அரங்குகளில் விஸ்வரூபம் காட்சி. கூட்டத்திற்கு குறைவில்லை, சனி / ஞாயிறும் அரங்கு நிறையும் என்றே நினைக்கிறேன்.

145 நிமிட காட்சி, மிகப் பெரிய வெட்டுகள் எதுவும் இல்லை, தடைசெய்யக் காரணம் என்று சொல்லப்பட்ட, சர்சைகள் என்று கிளப்பிவிடப்பட்ட காட்சிகளும் இருந்தன. நடனக் கலைஞராக அறிமுகம் ஆகும் கமல் வரலாறு அஜித் போன்று செயற்கையாக செய்யாமல் உடல் நளினத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். ஆப்கான் காட்சிகள் ஆவணப்படம் போன்று இருந்தது, அதில் திரைப்படத்திற்கு முன்பே நாம் கேள்விப்பட்டது, படித்தது,  யுடியுபில் பார்த்ததில், வழிபாட்டுடன்  கழுத்தறுப்பது, மனித வெடிகுண்டு, பொது இடத்தில் தூக்குப் போடுவது, ஓஃபிய விற்பனை இவற்றை  சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று சொல்வதை விட கஷ்டப்பட்ட எடுத்த காட்சிகள் என்று தான் சொல்ல வேண்டும், 100க் கணக்கான துணை நடிகர்கள், ஆப்கான் குகைகள் ஆப்கானிய உடையுடன், ஆண்கள் பெண்கள், அவர்களின் பின்புலம், அமெரிக்க வெறுப்பு, எதிர்ப்பு.....ஆப்கானில் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்க்க ஆவணப் படம் போல் தான் இருந்தது, ஆப்கான் தவிர்த்து அமெரிக்க காட்சிகள் விறுவிறுப்பான துறத்தல் ரகம், மற்றபடி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று சொல்ல காட்சிகள் எதுவும் இல்லை. பில்லா - 2 போல் படம் முழுவதும் துப்பாக்கி சத்தம். படத்தொகுப்பாளரை படம் ரொம்ப வேலை வாங்கி இருக்கும் போல். 

படத்தில் கமல் இஸ்லாமியராகவே வந்து போகிறார்.ஹிரோவும் அவன் செயலும் நல்லவை எனும் போது ஹிரோவின் மதமும் இது தான் என்று தெளிவாகக் காட்டும் பொழுது மதத்தை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று யார் கொளுத்திப் போட்டதோ, இவை வெறும் பேரம் படியாத அரசியல் திசைத் திருப்பல்கள் மட்டுமே, அதற்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் பகடைகாய் ஆகியுள்ளன, இது தெரியாமல், படத்தையும் பார்க்காமல் தாறுமாறாக எதிர்ப்புகள் குவிந்திருப்பது, மதவாத அமைப்புகள் நினைத்தால் மதப் பற்றாளர்களை உணர்ச்சி வசப்பட வைக்க முடியும் என்பதை நிருபனம் செய்துள்ளது. விஸ்வரூபத்திற்கு எதிரான தாண்டவம் தமிழகத்தில் மதவெறிபரவி வருவதை உணர்த்துகிறது, ஒரு பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர் எடுத்தப் படத்தை சிறுபான்மையினர் எப்படி தடை செய்யலாம் ? என்று உணர்ச்சி ஊட்டப்பட்டால் மதக்கலவரம் தவிர வேறு என்ன நடக்கும் ?  கமல் நினைத்திருந்தால் இந்துத்துவவாதிகளை நாடி தன் படத்திற்கு ஆதரவாக களம் இறக்கிவிட்டிருக்க முடியும், கமலை கண்டபடி திட்டும் மடையர்களுக்கு இது புரியுமா ? புரியாதது போல் நடிக்கிறார்களா ? மற்றவர்களுக்கு உணர்ச்சி இருக்காது என்று நம்புகிறார்களோ ?

அமெரிக்ககாரன் குழந்தையை, பெண்களை கொல்லமாட்டான் என்று ஒரு தீவிரவாதி பேசும் வசனத்தை நான் ரசிக்கவில்லை, அமெரிக்ககாரன் ஈராக், ஆப்கான் போரில் குழந்தையை,பெண்களை கொன்றானா ?  இல்லையா என்பது அமெரிக்க நண்பனான சவுதிக்கு தெரியாதா ? சவுதிகாரன் சகித்துக் கொள்ளும் சங்கதி ஒன்றைத் தானே தானும் சொல்லி இருக்கிறார்.படத்தில் அமெரிக்ககாரன் பெட்ரோலுக்காக சண்டையிடுகிறான் என்றும் வசனம் வருகிறது, எனவே குறிப்பிட்ட வசனத்தை அமெரிக்க அடிவருடித்தனம் என்று சொல்வதையும் என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. ஒருவேளை ஆப்கானில் பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக பிடித்துக் கொள்வார்களோ என்னவோ, அதுபற்றி தெளிவான காட்சியை கமல் வைக்கவில்லை, என்பதால் அந்த வசனம் படத்தில் ஒரு இடறல்தான்,

படத்தைவிட படவிவகாரம் தான் விஸ்வரூபம் ஆகியது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் - 2 தொடரும் என்று போடுகிறார்கள், கமலுக்கு இனிமேலும் அந்த ஆசை இருக்குமா ?  படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா நல்ல தேர்வு, ஓமராக நடித்திருப்பவர் காட்சிக்கு காட்சி பயம் கொள்ளச் செய்யும் அளவுக்கு அசத்தி இருக்கிறார், 

*****
கூட்டத்தோடு கூட்டமாக 'சோ. இராமசாமி' விஸ்வரூபத்திற்கு தடை சரிதான் என்று பேசியுள்ளார். படத்தில் பார்பனர்கள் பற்றிய காட்சி உள்ளது, கமல் கோழி சமைத்துவிட்டு, 'பாப்பாத்தி அம்மா உங்களுக்குதான் இதோட டேஸ்டு நல்லா தெரியும், கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், எங்க ஆத்துகாரி கூட சிக்கன் விரும்பி சாப்பிடுவா என்று நடனம் கற்றுக் கொள்ளும் பெண்ணிடம் சொல்லுவார். பார்பனர்கள் கோழி சாப்பிடுவது தவறு என்று யாரும் தவறாக நினைப்பதில்லை, ஆனா கமல் இப்படி போட்டுக்கொடுக்கிறாரே என்று சோ நினைத்திருக்கக் கூடும், அடுத்து கமலின் மனைவியாக காட்டப்படுவர் சொல் தூய்மையாக 'பிராமணாள் பாஷை' பேசுகிறார், படத்தில் கமல் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தும் அவரை வெறுக்காமல் அவருடனேயே ஒட்டிக் கொள்கிறார், ஒரு இந்துப் பெண், நம் பிரமணா சமூகத்தைச் சார்ந்த பெண் ஒரு முஸ்லிமுக்கு மனைவியாக எப்படிக் காட்டலாம் ? என்று நினைத்து சோ எரிச்சல் அடைந்திருக்கக் கூடும். சாலமன் ருஷ்டியுடன் பத்மலெட்சுமி கொஞ்ச காலம் மனைவியாக வாழவில்லையா ? கமல் காட்டியது புதுசா ?  மற்றபடி சோ இராமசாமி இஸ்லாமிய நண்பன் ஆகி இருப்பதற்கு காரணம் தெரியவில்லை, ஒரு இந்துத்துவ அடைப்படைவாதி இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு ஏற்படுவை இவை இவை என்று தெரியவந்தால் உள்ளுர ரசிப்பான், சோ வுக்கு தமிழக களேபரங்கள் தெரியாதா ? தெரிந்தே கார்டூன் போட்டு கலவரம் ஏற்படுத்தும் தினமலர் வகையறாக்களை சார்ந்த இவர் இது இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் படம் என்று கூறி இருந்தால் கூட நாம் ஒருவேளை இவர்கள் மாறிவிட்டார்களோ என்று நினைக்கலாம், ஆனால் இவர் சொன்னகாரணம், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் தடை செய்யக் கூடிய படம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

*********

தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி  யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,

13 ஜனவரி, 2013

அறச்சீற்றம் !


பொதுவாகவே சிங்கப்பூர் வாழ்மக்கள் தங்களிடையே சிங்கப்பூரில் வரிசையில் நிற்பதில் பாதி வாழ்கைப் போய்விடும் என்று சொல்லுவார்கள். உண்மை தான், இங்கு வரிசையில் நிற்பதில் ஒழுங்கு கடைபிடிக்கப்படும், சின்ன நாடாக இருந்தாலும் மக்கள் நெருக்கம் உள்ள நாடு, வரிசை முறை இல்லை என்றால் எங்கும் சச்சரவுகள் ஏற்பட்டுவிடும், மற்றவர்கள் நேரத்தில் நாம் கைவைக்கக் கூடாது என்பதால் எங்கெல்லாம் வரிசையில் நிற்க வேண்டுமோ, அங்கெல்லாம் வரிசை உருவாகும், புது  ஐபேசி (ஐபோன்) வெளியிட்டால் முதல் நாள் இரவே போய் நிற்க துவங்கிவிடுவார்கள், 24 மணி நேரம் கூட வரிசையில் நிற்பதை நேரவிரயம் என்று நினைக்க மாட்டார்கள், தமக்கு ஒரு பொருள் வேண்டி இருக்கிறதென்றால் அதற்காக வரிசையில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றால் நிற்பார்கள். புதுவீடுகள் விற்பனைக்கு விடும் போது வரிசையில் நிற்பதற்கே கல்லூரி மாணவர்கள் அதை பகுதி நேர வேலையாக எடுத்துக் கொண்டு, வரிசையில் நிற்பதற்காக பணம் பெற்றுக் கொண்டு (டோக்கன்) வாங்குபவர்கள் சார்பில் நிற்பார்கள். 24 மணி நேரம் வரிசையில் நிற்க இவ்வளவு கூலி என்று மணிக் கணக்குகளை வைத்து வரிசையில் நிற்பதும் இங்கு தொழிலாகத்தான் நடக்கிறது. 

வரிசை முறைகளை சீர்குழைக்கக் கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடுகளாக கூலிக்கு ஆள் அமர்த்தி வரிசையில் நிறுத்திக் கொள்வது இங்கு தவறாகப் பார்க்கப் படுவது இல்லை, ஒருவர் வரிசையில் நிற்பதால் இழக்கும் பணம் அவர் சார்பில் நிற்பவருக்கு சொற்பக் கூலி தான். பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் / தமிழகத்தில் இருந்து இதைப் படிப்பவர்களுக்கு வரிசை முறைக்கு ஏன் சிங்கப்பூரில் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை மேலே புரிய வைத்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். முறைப்படி வருபவர்களுக்கு முன் உரிமை இங்கு அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் ஒன்று தான், இங்கு யாரும் குறுக்கே சென்றோ, மற்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் குறுக்கு வழியில் நுழையவோ முயற்சிக்க மாட்டார்கள். சிங்கப்பூர் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்பாட நான் இதை எழுதுவில்லை, அப்படி உங்களுக்கு புரிந்தாலும் தப்பு இல்லை, கடந்த 15 ஆண்டுகளாக எனக்கும் என் இல்லத்திற்கும் சோறு போடும் நாடு, என்பதால் நீங்கள் எப்படி புரிந்து கொண்டாலும் எனக்கு சரி தான், நான் சொல்ல வந்தது பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.


*******

நாளை பொங்கலை ஒட்டி சிங்கப்பூர் குட்டி இந்தியாவில் கொள்ளை கும்பல் (நான் விற்பனையாளர்களைச் சொல்லவில்லை, பண்டிகை நாளில் விலை ஏற்றி விற்பது பொதுவானதே)  அதாவது மக்கள் கூட்டம் மிகுதி, சிங்கப்பூரில் ஆகப் பெரிய விற்பனை வளாகமான முஸ்தபா நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம், நான் இரண்டு பொருள்கள் வாங்குவதற்குத்தான் சென்றேன், வேறு கடைகளில் கிடைக்கும் என்றாலும் அந்த இரண்டு பொருள்களும் இருவேறு கடைகளில் வாங்க வேண்டி இருக்கும் என்பதால், முஸ்தபா அருகில் பேருந்தில் இறங்கியதால் முஸ்தபாவிலேயே வாங்கலாம் என்று நுழைந்தேன், வாங்கிவிட்டு பணம் செலுத்தச் சென்றால் ஒவ்வொரு தளத்திலும் பணம் செலுத்தும் இடத்திலும் குட்டி ரயில் போன்று நீண்ட வரிசை, கடைசியாக மேலே கீழே இறங்கி ஒரு இடத்தில் வெறும் 10 பேர் தான் வரிசையில் நின்று இருந்தார்கள் என்பதால் அங்கு நிற்கலாம் என்று முடிவெடுத்து நின்றேன், ஐந்து நிமிடத்தில் எனக்கு முன்பு நின்றவர் பணம் செலுத்தும் இடத்தை அடைந்துவிட்டார், 65 அகவை மதிக்கத்தக்க முதியவர். 

அந்த முதியவர் பணம் செலுத்த பொருள்களை எடுத்து வைக்கும் பொழுது எதிர்பக்கம் பணம் செலுத்தும் இடத்தை நெருங்கி ஒரு வட இந்திய ஆண். அந்த முதியவரை நெருங்கி வேண்டுகோளாக

"Sir Excuse, Only One Item, Can I Proceed ?"

என்று கூற, பெரியவரும் பெருந்தன்மையாக

"No Problem, You Proceed" என்றார்

எனக்கு செம கோபம் தலைக்கு மேல் ஏறியது, அந்த பெரியவரைப் பார்த்து

"You Cannot allow him, You have to consider the Q Behind, You have to ask opinion from all standing behind"

"No, No he is holding only one item tl"

"You...see I also having just  two item, do you appreciate if I try to skip the Q because of less no. of item ?"

அவரும் எதும் பேசவில்லை, மெளனமாக இருந்தார், இந்த இடைவெளியில் அந்த வட இந்திய ஆண் இதைப் பொருட்படுத்தாமல் பொருளுக்கு பணம் செலுத்திவிட்டு அந்த பெரியவருக்கு ஆங்கிலத்தில் "Thank You, Thank You" என்று சொல்லிவிட்டு போய்விட்டார், என்னிடம் முறைப்புக் காட்டவில்லை, எனக்கும் பிரச்சனை வட இந்திய ஆடவன் இல்லை, இந்த பெரியவர் தான் என்பதில் தெளிவாக இருந்ததால் நான் வட இந்தியனிடம் வலுக்கட்டாயமாக மல்லு கட்டவும் விரும்பவில்லை, பெரியவரும் எதுவும் அதற்கு மேல் பேச வழி இல்லாததால் அடுத்து அவருடைய பொருளை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்ததாக பணம் வாங்கும் காசாளரிடம்

"How come you allow him to pay, Are we all standing here for time pass ?"

"No,  Since the person in front of you allow him, I decide to accept this"

"You know....here lots of quarreling .. I am arguing with him, you don't consider people standing in the Q opposing this  nuisance, What Kind of Service this ?, if the person is very old or having children, or pregnant women or injured person no one care about skipping the Q right......"

அந்த காசாளர் பொண்ணும் எதுவும் பேசவில்லை, அதற்கு மேல் ஏதேனும் பேசினால் நானும் நிறுவனத்தில் முறையிடலாம் என்றே இருந்தேன், எனக்கு பின்னால் நின்றவர்கள் யாரும் வாயைத் திறக்க வில்லை, நான் சொன்னவற்றையெல்லாம் அமோதிக்கும் படி அமைதியாகத்தான் இருந்தார்கள்.

********

பெரியவர் பெரும்தன்மையாகத் தானே நடந்து கொண்டார், இதையேன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கலாம், பெரியவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அவர்களிடையேயும் அதையே சொல்லி இருப்பேன், பெரும் தன்மையாக நடக்கிறேன் என்று தன்னைத் தானே மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் குறிப்பிட்ட சூழலில் பாதிப்பு அடைபவர் தாம் மட்டும் தானா என்று சிந்திக்கவும் வேண்டும்,  உண்மையிலேயே இந்த சூழலில் பெருந்தன்மையாக நான் நடக்க விரும்பினால் பின்னால் உள்ளவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம், அவர்களின் விருப்பமும் எனக்கு தேவை இல்லை என்று நினைத்தால் முன்னால் உள்ளவரை வாங்க அனுமதித்துவிட்டு நான் வரிசையின் கடைசியில் போய் நின்று கொள்வேன். இங்கு விட்டுக் கொடுப்பது, பெரும்தன்மையாக நடப்பது என்பது தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுப்பது தான், தமக்கு பின்னால் உள்ளவர்களும் பாதிப்படையமாட்டார்கள், எரிச்சல் அடையமாட்டார்கள்.

பொதுவாகவே வட இந்தியர்களில் பலருக்கு இவ்வாறு வரிசையில் நிற்பது ஒழுங்குகளை கடைபிடிப்பதெல்லாம் பிடிக்காது, ஆஸ்திரேலியாவில் அடிக்கடி உதை வாங்குவது கூட இவர்களின் இந்த ஈனத்தனமான நடவடிக்கைகளினால் என்றே நினைக்கிறேன்.

1 ஜனவரி, 2013

2012ல் விடுபட்டவை !


நாள்,  கிழமை, ஆண்டு இவைகளில் நல்லது கெட்டது பற்றிய நம்பிக்கை எனக்கு கிடையாது,  என்றாவது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எதாவது கெடுதல் நடந்தால் நடக்க இருந்தவைகளில் ஒன்று இந்த நாளில் / இந்த காலகட்டத்தில் நடந்துவிட்டது என்பது தவிர்த்து குறிப்பிட்ட நாளை / நேரங்களை வெறுக்கும் அளவுக்கு நான் நினைத்துப் பார்ப்பது இல்லை.

சென்ற ஆண்டைப் பொறுத்த அளவில் நான்கு வெவ்வேறு இடங்களுக்கு நாடுகடந்து சுற்றுலா சென்று வந்தேன், ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்த ஆண்டு என்று சொல்ல முடியும், அதே வேளையில் உடன் பிறந்த தம்பியையும் இழந்திருக்கிறேன், இடையில் வேலை மாற்றம், அதற்கான சூழலும் உருவானது, வேலை மாற்றத்தை தொடர்ந்து பார்த்த வேலைப் போனது என்று நினைத்துப் பார்பதைவிட வேலை மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்றே கருதினேன், எந்த ஒரு நிகழ்வும், மகிழ்சியைத் தந்தாலும் துக்கத்தைத் தந்தாலும், நிம்மதியை கெடுத்தாலும் இவை நடக்க இருந்த நிகழ்வாக வந்து சென்றது என்பது தவிர்த்து குறிப்பிட்ட கால கட்டத்தை வெறுக்க ஒன்றும் இல்லை என்பது எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து.

தம்பியின் மறைவிற்கு முந்தைய வாரத்தில் இருநாள்கள் நண்பர் ஒருவருடன் கோவா சென்று வந்தேன், ஸ்பைஸ் ஜெட் சன் நிதி குடும்பத்தினரின் விமானத்தில் தான் சென்றேன், கட்டணம் ஒன்றும் அவ்வளவு மிகுதி இல்லை, போக வர சென்னை - மும்பை - கோவா - கோவா - மும்பை - சென்னை  நான்கு விமான சேவைகளுக்கு மொத்தம் 12 ஆயிரம் ஆகியது, தங்கும் செலவு இருவருக்கும் இரண்டு நாளைக்கு 5 ஆயிரம், பயணச்சீட்டை (eTicket) எடுத்துச் செல்லவில்லை என்றால் பிச்சைக்காரர்களைப் போல் 100 ரூபாய் பிடுங்கிக் கொண்டு,  அவர்களே ஒரு பேப்பரில் பிரிண்ட் எடுத்து தருகிறார்கள்,  செல்போன் வழியாக உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சலைக் காட்டி eTicket இன்றி Boarding Pass கொடுக்கும் இடம் வரை சமாளித்து வந்தவரிடம் கூட 100 ரூபாய் பிடிங்கிக் கொண்டு தான் Pass கொடுக்கிறார்கள்,  அது எதற்கு என்று தெரியவில்லை,  கோவா பற்றிய தகவல்களை பிறகு நேரம் கிடைத்தால் தனிப்பதிவாக இடுகிறேன். வெட்டியாகப் பொழுது போக்கும் பொழுது மற்றவர்கள் எப்படி நேரம் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்பதே எனது ஆராய்ச்சிக்குறிய கேள்விகளுள் ஒன்றாக இருக்கும், திட்டமிட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது "நேரமின்மை" குறித்த தெளிவு கிடைத்தது, வலைப்பதிவால் சீரழிஞ்சேன் என்று நான் புலம்புவதோ, புலம்பப் போவதோ  இல்லை, ஏனெனில் என்னுடைய எழுத்தின் வழியாக எனது எண்ணங்களைப் புரிந்தோர்  அவர்களாகவே விரும்பி நண்பர்களாக அறிமுகம் செய்து, நட்பைத் தொடரும் வாய்ப்புகள் வலைப்பதிவு வழியாகத் தான் கிடைத்தது.



கோவாவில் இருந்து சென்னையில் இறங்கி பின் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மதுரைக்கு ரயிலில் இரவுப் பயணமாகப் புறப்பட்டு முன்னாள் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றேன், மிகவும் நெருக்கமானவராக இருந்து பின்னர் தொடர்பு வசதி இன்மையால் 16 ஆண்டுகள் தொடர்பில்லாமல் சென்றவர்களில் அவரும் ஒருவர், எதற்கும் அவர் வேலை செய்த அலுவலத்தில் தான் தொடர்ந்து பணியில் இருப்பாரோ என்று மின் அஞ்சல் செய்து பார்க்க, மதுரைக் கிளையில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர், பின்னர் தொடர்பு கொண்டு அலைபேசி எண் பெற்று, சென்னை வரும் பொழுது சந்திப்பாகதாகக் கூறி, பின்னர் மதுரையிலேயே சந்திக்க முடிவு செய்து அவரை சந்தித்தேன்.

மனிதர்களுக்கு 20 - 25 வயதில் என்னமாதிரியான மனநிலை வாய்க்கிறதோ, அதுவே தான் காலம் முழுவதும் இருக்கும் என்றே நினைக்கிறேன், ஆண்டுக் கணக்கை தாண்டிய பழக்க வழக்கங்கள் இதை மெய்பிக்கின்றன, வயதின் வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு அனுபவம் ஓரளவு முடிவுகளை எடுப்பதற்கும், முன்கூட்டிய திட்டமிடலுக்கும் பயன்படுமேயன்றி, 20 வயதில் உருவான உலகம், நட்பு, சமூக எண்ணங்கள்,  தன்னைப் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றைக் குறித்த எண்ணங்களை வயதின் ஏற்றம் மாற்றிவிடாது, நண்பரைப் பார்த்த பொழுது கடந்து போன 16 ஆண்டுகள் சுருங்கி இருந்தது, எனக்கும் அவனுக்கும் முந்தைய பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியை காண முடிந்தது, தோற்றங்கள் கொஞ்சம் மாறி இருந்ததால் ஏற்பட்ட மனத் தடுமாற்றத்தில் "நீ" என்பதை "நீங்கள்" என்று பேசத் துவங்கும் பொழுதே தடுத்தேன் "என்னடா ஆச்சு உனக்கு ?" "வா போ என்றே பேசுடா" என்று சொன்னதைக் கேட்டு சிரித்து உடனே மாறிக் கொண்டான்' 

மதுரையில் ஒரு பகல் பொழுது தங்கி இருந்தேன், மூன்று வலைப்பதிவு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, ஒருவர் பேராசியர் தருமி, மற்றவர் உங்கள் சிலருக்கு அறிமுகமானவர் Consent to be......nothing! என்ற வலைப்பதிவில் எழுதும் திரு கிருஷ்ண மூர்த்தி, மற்றொரு வலைப்பதிவர் (தற்பொழுது பெயர் நினைவில்லை). தருமியை பலமுறை சந்தித்திருந்தாலும் கிருஷ்ண மூர்த்தியை சந்தித்தது முதல் முறை, சென்ற முறை மதுரை சென்ற பொழுது பார்க்க வாப்பில்லாமல் திரும்பிவிட்டேன் என்று வருத்தம் அடைந்திருந்தார், அதனால் இந்த முறை மதுரைக்கு சென்ற பொழுது அவரையும் பார்த்து வந்தேன், 


பிறகு மதுரையில் இருந்து இரவு புறப்பட்டு கோவை சென்று அங்கொரு நாள் பகல் பொழுது, நான் புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து கிளம்பிய எனது மதுரை நண்பரும், சென்னை நண்பரும் கோவையில் சந்திப்பது என்பது ஏற்பாடு, என்னுடைய சென்னை நண்பரும் மதுரை நண்பரைப் பார்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, மூவரும் பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக சந்தித்தது மற்றற்ற மகிழ்ச்சியை வாரி வழங்கியது, இடையில் பகல் பொழுதில் நம்ம ஜோதியர் இல்லம் ஜோதிஜி மற்றும் என்னுடன் நான்கு ஆண்டுகளாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் அறிவே தெய்வம் சிவா ஆகிய இருவரையும் பார்க்க திருப்பூர் வருவதாகக் கூறி இருந்தேன், அவர்களும் காத்திருந்தனர், இடையில் திட்டமிட்ட நேரம் தவற, திருப்பூருக்கும், கோவைக்கும் இடைப்பட்ட இடமான அவிஞாசிக்கு வரச் சொன்னார்கள், சாலை புதுப்பித்தல் மற்றும் செப்பனிடுதல் தொடர்பில் பேருந்து ஊர்த்து செல்ல மதியம் மூன்று மணிக்குத் தான் அவினாசிக்குச் சென்றேன். 

அதுவரை சாப்பிடாமல் இருவரும் காத்திருந்தனர், பார்த்ததும் தழுவல்களுடன் பலநாள் பழகியவர்களைப் போல் எந்த வித மனத்தடங்களும் இன்றி பேசிக் கொண்டே ஒரு மூன்று நட்சத்திர உணவகத்திற்குச் சென்று தாமே எடுத்து உண்ணும் (பபே) உணவுக்கு அழைத்துச் சென்றனர், ஏற்கனவே பகல் 12 மணிக்கு ஸ்வாமி ஓம்காருடன் கொஞ்சம் வயிற்றை நிரப்பி இருந்ததால், அந்த உணவை சற்று திணறியே உண்டேன், அவர்களும் அப்படியே, நேரம் தப்பிய சாப்பாடு விரும்பிச் சாப்பிட முடியாது அல்லவா ?  நட்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்த உணவுக்கு செலவளிக்கும் பணம் பயன்படும் என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் நெடும் தொலைவில் இருந்து அவர்களைப் பார்க்க வந்தேன், எனக்கு என்ன சிறப்பாக செய்துவிடமுடியும் ? என்ற அவர்களின் கேள்விக்கு அதிக நேரம் செலவழித்து பதில் தேடாத விடையாக பபே உணவு, மற்றபடி ஏன் பணத்தை இப்படி விடுதிக்காரனிடம் வீணடிக்கிறீர்கள்  ? என்று நாகரீகமும் புரிந்துணர்வும் இல்லாமல் கேட்கக் கூடாது என்பதால் அதை நண்பர்களின் உபசரிப்பு என்றே கொண்டேன்.

ஜோதிஜி நினைத்த அளவுக்கெல்லாம் ஒல்லிக் குச்சியாக இல்லை, ஓரளவு பணக்கார களையோடு தான் இருந்தார், மாறாக சிவா நினைத்த அளவுக்கே புகைப்படத்தில் பார்த்தது போல் இருந்தார், நிறைய பேசினோம், 

கோவையில் இருந்து நாகை திரும்பும் போது கோவை தனியார் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இரவில் மின்சாரம் இல்லாததால் ஒரு பயணி நகரும் பேருந்தின் முன் சக்கரத்தில் காலைவிட்டு பாதத்தை இழந்தார், அவருடைய கதறல், சுற்றி இருந்தவர்களின் உடனடியான செயல்பாடுகள், அடுத்த ஐந்து நிமிடத்து 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது, மின்சாரம் இன்மையின் கொடுமைகளில் ஒன்றாக இதுவும் நடந்தது, கருணாநிதியின் ஒரு சில திட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு நன்றாகவே பயன்படுகிறது, ஜெ - தன் ஈகோவை மீறி விட்டு வைத்திருப்பதும் அதை தொடர்ந்து நடத்துவதும் பாராட்டுக்குரியது, 


சென்னையில் அகநாழிகை பொன் வாசுதேவன் மற்றும் மூனா செந்தில், மோகன் குமார் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களையும் முதன் முறையாகப் பார்த்தேன், அதில் பொன். வாசு நான் தங்கி இருந்த இடத்திற்கே  தன் மகனுடன் வந்து பார்த்துச் என்றார், 


****

ஒரு சிலர் தாம் விரும்பி குறிப்பிட்ட நாள்களில் தம்மை மாற்றிக் கொள்கிறோம் என்று முடிவு செய்து, அதன்படி செயல்படுவதைத் தவிர்த்து எந்த ஒரு நாளுக்கும் தனிச் சிறப்பு தனியாக வந்துவிடாது, கடந்தவைகளில் மறக்கக் கூடியவையும் உண்டு, நினைக்கக் கூடியவையும் உண்டு, நடக்க இருந்த நிகழ்வுகள் கடந்து போனது என்பது தவிர்த்து சென்ற ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்று நினைக்கவில்லை, படிப்பினைகளும், அனுபவங்களும் மோசம் என்றால் அவற்றை கடந்தும் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம், கடந்த ஆண்டு பலவற்றைச் சுமத்திக் கொண்டு, தனிப்பட்ட அளவில் நாம் தொடர்ந்து இயங்க வழங்கிய வாய்ப்பு என்று பார்த்தால் எந்த நாளும் மோசமான நாள் இல்லை, எந்த ஆண்டும் மோசமான ஆண்டு கிடையாது என்பதை என்னளவில் நம்புகிறேன்.

அனைவருக்கும் அன்பான  ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

7 டிசம்பர், 2012

தம்பியின் கைபேசி எண் !

சிங்கையில் 1998 ஆம் ஆண்டு கைப்பேசிகள் புழக்கத்தில் வந்த பிறகும் நான் அவை தேவையற்ற ஆடம்பரம் என்றே வாங்காமல் இருந்தேன், 'அட வாங்கி வைத்துக் கொள், எப்போ வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாமே என்று எனக்கு ஒன்றை அவனது கணக்கிலேயே வாங்கிக் கொடுத்தான் என் தம்பி. தம்பிக்கு எனக்கும் வயது வேறுபாடு 2.5 ஆண்டுகள் தான், அவன் எனக்கு முன்பாக சிங்கை வந்திருக்காவிட்டால், எனக்கு சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணமே வந்திருக்காது, அவன் சிங்கைக்கு வந்து ஒரு ஆண்டுகள் முடிய எனக்கும் பகுதி நேர பிஇ படிப்பு முடிய நாமும் சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தேன், செல்லும் செலவு, முகவருக்கு பணம் எல்லாம் தம்பி தான் கட்டினான், திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றாலும் அந்த நேரத்தில் எனக்காக செலவழிக்கப்பட்டது பெரிய தொகை, சிங்கைக்கு  வேலைக்கு வந்த புதிதில் நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் தம்பியும், தம்பி அறையில் தங்கி இருந்தவர்களும் தான் நண்பர்கள், சனி ஞாயிறுகளில் அவர்களது அறைக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டு திங்கள் காலையில் வேலைக்குச் செல்லுவதற்காக ஞாயிறு இரவு கிளம்புவது வழக்கமாகவும் இருந்தது, வந்த ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூரில் இருந்த அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டான். 

ஏற்கனவே சென்னையில் ஒன்றாக ஒரே வீட்டிலும் வசித்தோம், பிறகு பணி இடம் தொடர்பில் வேறு வேறு இடத்திலும் வசித்தோம், சிங்கையிலும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, வேலைக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, திருமணத்திற்கு முன்பு வரை அதிக நாட்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறொம் என்ற வகையில் என்னுடன் பிறந்தவர்கள் இன்னும் ஐந்து பேர் என்றாலும் எனக்கு அடுத்து பிறந்தவனான இவனுடன் மட்டும் தான் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பும் கிட்டி இருந்தது. கிட்ட் தட்ட 20 ஆண்டுகள் ஒன்றாக வசிக்காவிட்டாலும் அருகருகே மாதம் ஒருமுறையேனும் பார்க்கக் கூடிய அளவில் வசித்து வந்தோம்,. சிங்கையில் சில ஆண்டுகள் அவனும் தனது குடும்பத்துடன் வசித்தான், பிறகு தனியாகவும் வசித்து வந்தான், கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு குறைபாட்டுடன் வாழ்ந்து வந்தவனுக்கு 2009 ஆம் ஆண்டு உடலுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அடைய, இனி இங்கே இருப்பது சரிபட்டு வராது என்று கூறி தமிழகத்திற்கே அனுப்பி வைத்தேன்,  தமிழகத்திற்கு புறப்படும் முன்பு வரை தம்பியின் பெயரில் பதிந்திருந்த அலைபேசி எண்ணைத்தான் வைத்திருந்தேன், போகும் முன்பு என் பெயரில் மாற்றிக் கொடுத்துச் சென்றான், அதே தொலைபேசி எண்ணை 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன்.

சிங்கையில் இருந்து சென்று ஒரு ஆறுமாதத்தில் நீரிழிவு மோசமடைய, இரு சிறுநீரகங்களும் பழுதடைய டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சென்று கிட்டதட்ட ஓராண்டுகள் டயாலிசிஸ் என்னும் இரத்த சுத்திகரிப்பு செய்து வந்தான், பிறகு அவனது மாமியாரின் (தாய் மாமனின் மனைவி) சிறுநீரகம் பொருத்தமாக அமைய 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதனை மாற்று சிறுநீரகமாக வைத்தோம், நன்கு பொருந்தினாலும் கணையம் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் வைத்த சிறுநீரகமும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் துவங்கி இருந்தது, இந்த கணையப் பிரச்சனையை முன்பே கண்டிருந்தால் நீரிழிவு ஏற்பட்டிருந்திருக்காது, மருத்துவர்கள் நீரிழிவிற்கான சிகிச்சை மட்டுமே அளித்து வந்திருந்தனர், பிரச்சனை கணையத்தில் தான் என்பதை நீரிழிவு முற்றும் வரை யாரும் அறிந்திருக்கவில்லை,

மூன்றுவாரம் முன்பு 10 நாள் விடுமுறையில் ஊருக்குச் சென்ற பொழுது தம்பியின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாகவே இருந்தது, விசாரித்ததில் இவரு இப்படிதான் படுத்திருப்பார் பிறகு எழுந்துவிடுவார் என்றார்கள், என்னிடம் நன்றாகத் தான் பேசினான், எழுந்து உட்கார கொஞ்ச முயற்சி எடுத்தான், கூடவே கொஞ்சம் காய்ச்சல், இரண்டு நாளாக காய்ச்சல் டாக்டரிடம் கூப்பிட்டால் சரியாகிவிடும் தேவை இல்லை என்கிறார் என்று தம்பியின் மனைவியும், என்னுடைய இன்னொரு தம்பியும் கூறினர், இதற்கிடையே நான் வேறு ஊர்களுக்கு சென்று திரும்பும் பொழுது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக எனக்கு அழைத்துச் சென்னார்கள், மருத்துவ மனைக்குச் சென்று பார்த்த பொழுது உடல் மிகவும் நலிவுற்று கைகால்கள் சோர்ந்தே இருந்தது, ரொம்பவும் அளவாகப் பேசினான், இவ்வளவு உடல் வலிகளை எப்படித்தான் தாங்கிக் கொள்கிறானோ என்று கவலையாக இருந்தது, நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு எனக்கும் சிங்கைத் திரும்ப வேண்டி சில வேலைகள் இருந்ததால் திரும்பிவிட்டேன், 

சிங்கைத் திரும்பிய மூன்றே நாட்களில் (புதன், 28 நவம்பர் 2012) 'கிட்னி மாற்றிய பிறகு ரெகுலர் செக்கப் செல்லும் சென்னை மருத்துவ மனைக்குக் வழக்கமான செக்கப்புக்கு அழைத்துச் சென்றோம், இங்கே சோதித்துப் பார்த்து டெங்கி காய்சல், இரண்டு நாள் முன்பே அழைத்து வந்திருக்கலாம் என்கிறார்கள், ரொம்ப சீரியஸ் கண்டிசன்' என்று எனக்கு இன்னொரு தம்பியும், தங்கையும் அழைத்துச் சொன்னார்கள், வீட்டில் உள்ள அனைவருக்கும் பயண ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் பொழுதே, மருத்துவர் இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் டைம் கொடுத்திருக்கிறார், நுரையீரலில் இரத்தக் கசிவு இனிமே எதுவும் செய்ய முடியாதாம், செயற்கை சுவாசம் கொடுக்கிறார்கள், நாம சொன்னா எடுத்துவிடுவாங்க, (இன்னொரு) அண்ணன் வரட்டம் என்று காத்திருக்கிறேன் என்று திரும்ப அழைத்துச் சொன்னார்கள். அப்போது என் (அடுத்த) தம்பியிடம், உடல் உறுப்பு தானம் செய்ய ஏதேனும் வாய்பிருக்கிறதா என்று கேளேன், என்றேன், 'இதுக்கு தான் ஏற்கனவே கிட்னி பிரச்சனை, கண்ணும் பார்வை குறைவாகத்தானே இருந்தது, இப்ப நுரையீரலும் போய்விட்டது தானம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லையே' என்றான், தம்பியின் உடலுறுப்புகளில் ஏதேனும் ஒன்றையாவது வாழ வைக்க முடியும், அவனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் பொய்ததது, ,    மரண செய்திகளைவிட இன்னும் கொஞ்ச நேரத்தில் மரண செய்தி வரப்போகிறது என்று உறுதியாக தெரியும் பொழுது ஏற்படும் கையறு நிலையையும் வேதனையும் விவரிக்க முடியாது,

சரியாக விமானநிலையத்திற்கு புறப்படும் முன் 'நம்முடைய சகோதரன் நம்மைவிட்டு போய்விட்டான்' என்று உறுதியான தகவலாக குறுந்தகவலை அனுப்பி இருந்தான் இன்னொரு தம்பி. சென்னை மருத்துவ மனையில் எல்லா வழக்ககங்களையும் முடித்து உடல் நாகை வரும் முன்பே, நான் திருச்சியில் இறங்கி தஞ்சைக்கே வந்துவிட்டேன்,  அங்கிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் அதிகாலை 4 மணிக்கு நகைச் சென்று தம்பி வீட்டிற்குச் செல்ல, வாசலில் பந்தல், ஜெனரேட்டர் வைத்து மின் விளக்குகள், உறவினர் பெண்கள், தம்பி மனைவி, எங்கள் அக்கா, தங்கை, அம்மா என பெண்கள் குழுமி இருக்க, நடுக்கூடத்தில் ஐஸ் பெட்டியினுள் தூங்குவது போல் படுக்க வைத்திருந்தனர், பார்த்து நான்கு நாள் தானே ஆகிறது, அதற்குள் இப்படியா ? என்னைப்பார்த்ததும் அம்மா, அக்கா, தங்கை எல்லோரும் கதறினார்கள், அவனது மனைவி பிரமைப்பிடித்தது போல் இருந்தார், அவனது 10 வயது மகனுக்கு இப்படி ஒரு நிகழ்வு வீட்டில் நடந்தது தெரியாதது போல் தூங்கிக் கொண்டு இருந்தான்,

ஊரில் அப்பா காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் ஓரளவு அறிமுகமானது தான், அண்ணன் சிவில் எஞ்சினியர், தம்பி சிங்கையில் இருந்து திரும்பிய பிறகு எலக்டிகரிகல் ஸ்டோர் நடத்தி வந்தான் என்ற வகையில் அஞ்சலிக்காக பெரிய கூட்டமே கூடி இருந்தது, ரொம்ப நேரம் வளர்த்தாமல் முதல் நாள் மூன்று மணிக்கு இறந்தவனை மதியம் 12 மணிக்கு இறுதிப் பயண ஏற்பாடு செய்துவிட்டோம், தனது அப்பா இனி வரமாட்டார் என்று தெரியாமல் தம்பியின் மகன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தான், பிறகு அவனுக்கு மொட்டை அடித்து, தண்ணீர் தூக்க வைத்து, எனது மகளும், மகனும் கூட சித்தப்பாவிற்காக தண்ணீர் குடம் சுமந்து வந்தனர்.

இறுதிப்பயணம் புறப்பட 

ஆறில் ஒண்ணு போகுதே,,,,,,,,,,,,என்ற என் தங்கையின் கதறலும்

'ஒண்ணும் தெரியாத புள்ளையை கொள்ளிப் போட கூப்பிட்டுப் போறியே' இறந்த தம்பியின் மனைவியின் கதறல், தம்பியின் சேர்ந்து எரியச் சென்ற உயிருடன் இருக்கும் அவனது மாமியார் தானமாக கொடுத்த கிட்னி ஆகியவற்றை நினைக்க மிகுந்த சோகமாக இருந்தது

*****

யாருக்கு ஒருவருடைய அருகாமையும் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுதோ அவர்களை அவருடைய மரணம் பாதிக்கும், மற்றவர்களுக்கு எங்கும் நடைபெறும் சாதரண நிகழ்வு, தம்பியின் குடும்பதிற்கும், பெற்றவள் என்ற முறையில் அம்மாவிற்கு மகனின் இழப்பு, காலம் மருந்திடும், தம்பிக்கு பால் ஊற்றிய அன்றே, 'அவளுக்கு (மருமகளுக்கு) சின்ன வயசு, மறுமணம் செய்து கொடுத்துவிடலாம்; என்று என் அம்மாவே முன்மொழிந்துள்ளார்,  விதவை வாழ்வு பற்றி அம்மாவுக்கும் தெரியும், தம்பி மனைவிக்கு மறுமணம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பமும் என்று சொல்லி வந்தோம்.

தனிக் குடும்பம் என்று ஆகிவிட்டதால் தம்பியின் இறப்பு ஒரு இரு நாள் கடைமை என்று ஆகிவிட்டது, இறுதிப் பயண ஏற்பாடு, அதற்கு முன் தம்பிக்கான சிகிச்சைகள் எல்லாவற்றிலும் ஊரில் இருந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை செய்துவந்தனர், என் பங்குக்கு நான் குடும்பத்துடன் சென்று வந்தேன் என்பது தவிர்த்து எதையும் செய்யவில்லை,  விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் வந்தவர் என்ற முறையில் மரண வீட்டிலும் நமக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து நம்மை கவனிக்கின்றனர், வெளிநாட்டில் வசித்தால் நெருங்கிய சொந்தத்தின் சாவில் கூட நமக்கு என்று எந்த பொறுப்பும் கிடையாது, எல்லாவற்றிலும் இறங்கி, எடுத்து செய்ய வேண்டிய நாம் எல்லாவற்றிலும் ஒதுங்கி இருக்கும் படி ஆகிவிட்டதே என்று வெட்கமாகவும், வருத்தமாகத்தான் இருந்தது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக எதைத் தின்றாலும் வாந்தி, கடுமையான வயிற்றுவலி உடல் உபாதைகளில் இருந்து தம்பி நிரந்தர விடுதலை அடைந்துவிட்டான் என்று நாங்கள் அனைவருமே தேற்றிக் கொண்டோம், இறக்கும் முன்று நாட்களுக்கு முன்பு பார்த்து வந்தது எனக்கு கூடுதலான ஆறுதல்

தேவையற்ற அலைப்புகளை தடுக்க, ரொம்ப நாளாக அலைபேசி எண்ணை மாற்ற நினைத்திருந்தேன், இனிமேல் மாற்றும் எண்ணம் வராது

28 நவம்பர், 2012

வேலைப் போனால் கோழை - 1


நமக்கு எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கை நம்மை கவிழ்த்துவிடும் என்பது பலருக்கு தெரியாத உண்மை, நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு எதுக்கு மாறி பிரச்சனைக்கு வழி தேடனும் ? என்று ஆண்டு கணக்கில் தனியார் நிறுவனங்களில் சம்மணமிட்டு பணிபுரிபவர்களை அம்மணமாக்கி ஆப்பு எப்போ வைபார்கள் என்று தெரியாது, ஆனா ஆப்பு கிடைப்பது உண்மை, இதற்கு காரணம் திறமை இன்மை அல்லது சோம்பல் ஆகிய காரணங்களைவிட குறிப்பிட்ட சூழலில் வேலைப் பார்த்து பழகிவிட்டு வெளியே போனால் ஒப்பேற்ற முடியாது, காலம் தள்ள முடியாது என்கிற காரணங்களையும் தவிர்த்து நாம தான் நிறுவனத்தைத் தாங்குகிறோம் என்கிற நினைப்பும் சேர ஒரு சிலரை ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் அழுத்திவிடும். சென்ற ஆண்டு சீனா, மலேசியா என்று பறந்து பறந்து வேலை செய்தாலும் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு தொடர்ச்சியான வேலை இல்லை, 

காரணம் எல்லாம் சரியாக செயல்பட்டுக் கொண்டு இருப்ப்பதால் சிஸ்டம் / சர்வர் பரமரிப்பு வேலைகள் தவிர்த்து அன்றாட வேலைகள் மிகக் குறைவே, யோவ் யாராவது வேலை கொடுங்கைய்யா என்று கெஞ்சாத குறையாக ஏதாவது கணிணி பிரச்சனை என்று சொன்னால் விழுந்தடித்து செய்து முடித்துவிட்டு வழக்கம் போல் கூகுள் ப்ளஸ் அல்லது வலைப்பதிவில் மேய்வது, திரட்டியை பார்ப்பது தான் முழுநேர வேலை என்றாக, வாங்கிற சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்பதுடன், என்னை தொடர்ந்து வைத்திருப்பது நிறுவனத்திற்கும் நட்டமே, இது சரிப்படாது என்கிற முடிவில் பிற நிறுவனங்களுக்கு ஏன் வேலைக்குச் செல்ல முயற்சிக்கக் கூடாது ? என்கிற நினைப்பில் முட்டுக்கட்டையாக இரண்டு மாத நோட்டீஸ் என்கிற நடப்பு நிறுவனத்தின் ஒப்பந்ததை கிடப்பில் போட்டுவிட்டு, கடந்த ஜூலை 26 முதல் அதையே விண்ணப்ப படிவங்களில் குறிப்பிட்டு பயோடேட்டா என்னும் தற்குறிப்பு கல்வித் தகுதி, அனுபவத் தகுதியை நிரப்பி அனுப்பத் துவங்கினேன்,


இங்கே சிஸ்டம் மற்றும் சர்வர் தொடர்பில் வேலை வாய்ப்பு என்பவை பெரிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலும் சிறு நிறுவனங்களில் நேரடி பணியாளராகவும் எடுப்பார்கள், ஆனாலும் நம்மை வேலைக்கு எடுப்பவர்கள் இரண்டு மாதம் தான் சென்று சேருவேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அரிதே, 

எதாவது முன்கூட்டிய திட்டமாக (ப்ராஜெக்ட்) மூன்று மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் அவ்வாறு எடுக்க வாய்ப்புள்ளது, அல்லது ஏதாவது கிளை நிறுவனம், அல்லது புதிய நிறுவனம் இரண்டு மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் இரண்டு மாதம் கழித்து சேருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வார்கள், அவ்வாறான வாய்ப்புக் கிடைப்பதும் அரிதே, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போட்டும் அழைத்தவர்கள் ஓரிருவர்கள் மட்டுமே அவர்களும், சிஸ்டம் என்ஜினியரிங்களில் குறிப்பிட்ட துறையில் (வெப் அட்மின், நெட் ஒர்க் அட்மின் போன்று)  மட்டுமே வேலை என்பதால் அதற்கான சிறப்பு தகுதி தனித்து இல்லை, நான் ஆல் இன் ஒன் என்பதால் எடுக்கவும் தயங்கினார்கள், இவ்வாறாக  வாரம் ஒரு நேர்முகத் தேர்வு என்று சென்று வந்து கொண்டிருந்து, 40 நாட்கள் கடந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி, நிறுவன உரிமையாளர் உன்னிடம் பேச வேண்டும் அறைக்கு வருகிறாயா ? என்று அழைப்பு விடுத்தார்.

நினைத்தது போலவே 'நீ ஏன் வெளியே வேலை தேடக் கூடாது ?' உனக்கு தேவையான நேரம் எடுத்துக் கொள், நாங்க உடனடியாக செல்ல வேண்டும் என்று சொல்லவரவில்லை, நிறுவனத்தில் இந்த ஆண்டு பிஸ்னஸ் சரி இல்லை, ஐடி வேலையை அவுட் சோர்ஸ் கொடுத்துடலாம் என்று நினைக்கிறேன், எல்லா டாகுமெண்டுகளையும் தாயார் செய்துவிடு.......' என்று சொல்ல, எனக்கு ஒன்றும் அதிர்சியாக இல்லை, நான் ஏற்கனவே அதைத்தான் செய்து வருகிறேன் என்று அவரிடம் சொல்லாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, 'நானே சொல்லாம் என்று இருந்தேன், எனக்கு கொடுக்கும் சம்பளம் உங்களுக்கு கட்டிப்படியாகாது, வேற யாராவது ஜூனியர் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள், நான் பயிற்சி கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று நான் சொல்ல இருந்தேன், ஆனால் எனக்கு இங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடும் என்பதால் சொல்லவில்லை, என்றேன், பின் அவரே தொடர்ந்தார், நீ இங்கே ஆறு ஆண்டு வேலை செய்திருக்கிறாய், உனக்கு ஏதாவது இழப்பீடு தருகிறோம் என்று சொல்ல எனக்கு பருத்தி புடவையாக காய்தது போலவே இருந்தது, சரி என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே வெளியே வந்தேன், அப்பாடா இனி திருட்டுத் தனமாக இண்டர்வியூ செல்லத் தேவை இல்லை, 
ஒருவாரம் கழித்து ஒருமாதத்திற்குள் நான் அனைத்து தகவல்களையும் கோப்பாக்கி ஒப்படைப்பதுடன் பணியில் இருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் முதல் ஏதாவது நேர்முகத் தேர்வென்றால் நிறுவனத்தில் சொல்லிக் கொண்டே சென்றேன்,  அதன் பிறகு வேலைக்கு இரண்டு மாதம் காத்திருப்பு தேவை இல்லை என்பதால் வாரத்திற்கு நான்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வரத் துவங்கியது. கார்ப்ரேட் நிறுவனங்களில் கக்கூஸ் கழுவச் சென்றாலும் ஏற்கனவே வேற கார்ப்ரேட்டில் கக்கூஸ் கழுவி இருந்தால் தான் நல்லா கழுவத் தெரியும் என்று நம்புவார்கள் போல, என்னை அழைத்த கார்ப்ரேட் நிறுவனங்களெல்லாம் கார்ப்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என்று இரண்டாம் கட்ட நேர்முகத்திற்கு அழைக்கவில்லை, இந்த நிலையில் நாளை மறுநாள் (அக்டோபர் 12) முதல் வேலை இல்லை என்ற நிலையில் அன்று மட்டுமே காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக இரு நேர்முகத்திற்கான அழைப்புகள், இது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, ஏனெனில் அதில் ஒன்று வீட்டுக்கு வெகு அருகில்...... அக்டோபர் 11 ஆம் தேதி என்ன ஆச்சு என்றால்............?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்