தாம் புழு இனம் தான், நம்மால் பறக்க முடியுமா ? என்று நினைத்தால் (புழு அப்படியெல்லாம் நினைக்குமான்னு கேட்கக் கூடாது) அழகான சிறகுடன் நினைத்த இடத்துக்கு பறந்து செல்லும் ஆற்றல் சிறகு பட்டாம்பூச்சிக்கு ஏற்பட்டு இருக்குமா ?
எங்கூரில் எங்கள் வீட்டில் தோட்டம் உண்டு, இப்போதெல்லாம் எதுவும் பயிர்செய்வது இல்லை. முன்பு பனிக்காலத்தில் ஏராளமான தும்பை செடிகள் தானாக்கவே முளைத்து வளரும், 100க்கு 100 வெள்ளை நிறத்தில் தும்பைப் பூக்கள் பூத்து இருக்கும், செடிகளின் இலைகளில் பன்னீர் தெளித்தது போன்று பனித்துளிகள் இருக்கும், காலை ஆறுமணியில் இருந்து சூரியன் சுள்ளென சுடும் காலை 8 மணி வரை பல்வேறு வகையிலான வண்ணத்துப் பூச்சிகள் அந்த தும்பை பூவின் மீது அமர்ந்து தேன் அருந்தும். சிறுவயது ஆசையில் ஒன்றாக அந்த வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாடும் ஆசையில் ஒரு தும்பை செடியை வேரொடு பிடிங்கி கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டு...பதுங்கி பதுங்கி சென்று மற்றொரு செடியில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சியின் மீது கொஞ்சம் விரைவாகவும், மென்மையாகவும் அமிழ்த்த வண்ணத்துப் பூச்சி இரண்டு செடிகளின் இலைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும், மென்மையாக வண்ணத்துப் பூச்சியை எடுக்க, விரல்களில் அதன் வண்ணம் படிந்துவிடும், பிறகு வண்ணத்துப் பூச்சியின் அடிவயிற்றுக்கு மேல் இரண்டு மீட்டர் அளவுக்கு உள்ள நூலின் நுனியைக் கட்டிவிட்டு, நூலின் மறு நுனியை கையில் பிடித்துக் கொண்டு வண்ணத்துப் பூச்சியை கையில் இருந்து விடுதலை செய்ய...நூல் அளவு உயரத்தில் அங்கும் இங்கு பறக்கும், 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு ஒரு அங்குலம் வண்ணத்துப் பூச்சியுடன் நூலை துண்டித்துவிட்டு ஒரேடியாக விடுதலைக் கொடுத்துவிடுவோம். மறுநாள் அதுவே வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்போம், ஒரு நாளும் நூலோடு இணைந்த பட்டாம் பூச்சி வந்தது கிடையாது. ஒரு வேளை நூலின் இறுக்கத்தால் மடிந்திருக்கலாம்.
பட்டாம்பூச்சி பருவம் என்றால் நமக்கு, எனக்கு சின்ன வயது பருவம் தான் நினைவுக்கு வருகிறது. பட்டாம் பூச்சி பிடித்த காலத்தில் எந்த கவலையும், மனச் சோர்வும், குழப்பமும் இல்லாமல் பட்டாம் பூச்சி போன்றே திரிந்தோம்.
இயற்கை வியப்புகளில் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளின் வண்ணமும் ஒன்று. தொடும் போது ஒட்டிக் கொள்ளும் அவ்வளவு மென்மையான வண்ணம் சிறகுகள் அடித்து பறக்கும் போது உதிராமல் இருப்பது வியப்புதானே.
வண்ணத்துப் பூச்சி:
இரகசியமாய் யாரும் பார்க்கா வண்ணம்,
இரசித்து யாரும் வியக்கும் வண்ணம்,
இருசிறகுகளுக்கு மேற்ற வண்ணம், கூட்டிற்குள்
தீட்டிக் கொள்ளும் நவீன உடல் ஓவியர்கள் !
(Tatooist)
ஸ்வாமி ஓம்கார் எனக்கு கொடுத்த விருதுக்கு நன்றி கூறிவிட்டு, பட்டாம்பூச்சி விருதை மூன்று பேருக்குக் கொடுத்து அழைக்கனும் என்பது விதி(யாம்,) யாரை விட்டது ? யாரைக் கூப்பிடுவது. அகவையாம் ஐம்பதைக் கடந்தவர்கள்...ஆனால் எண்ணங்களில் பட்டாம்பூச்சி துள்ளல்.
வாலிபமே வா...வா... :)
வீஎஸ்கே : இவரப் பற்றி என்ன சொல்வது ?எல்லோருக்கும் தெரிந்தவர்தான். புதியவர்கள் அறிந்து கொள்ள, அவரது இயற்பெயர்.....வீ சங்கர் குமார்.
அமெரிக்காவில் வட கரோலினா மானிலத்தில் மருத்துவராக பணி புரிகிறார். கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் எழுதுபவர். ஐ மீன் ஒரு தியானம் போல் ஆன்மிகம் எழுதுபவர். மாறுபட்ட அரசியல் பார்வை கொண்டவர். நல்லவர் வல்லவர்...எனக்கு மிக வேண்டியவர், விருப்பம் உள்ளவர்கள் அவரது பாலியல் கேள்வி பதில்கள் பதிவை படிங்க, உங்களுக்கும் எதும் குழப்பம் இருந்தால் அவரிடம் பின்னூட்டத்தில் (வெட்கப்பட்டால் அனானியாக) கேளுங்க.
சீனா : சிதம்பரம் (சீனா) ஐயா வலைச்சரம் பேராசிரியராக அனைவருக்குமே நன்கு அறிமுகம் ஆனவர் தான்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இவருடன் பழக தொடங்கி இருந்தாலும், முப்பது ஆண்டுகாலம் பழகியதைப் போன்ற உணர்வு எனக்கு வந்தது போல் எவருக்கும் வரும்
TV இராதா கிருஷ்ணன் : செளமிய தியேட்டர் என்ற பெயரில் மேடை நாடகங்கள் நடத்துபவர். எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர். அரசியல் பகடி (பகடி அரசியல்னு மாற்றி படிச்சிடாதிங்க) செய்வதில் வல்லவர்.
குறைந்த காலத்தில் சுமார் ஓராண்டுக்குள்ளேயே 600 க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிய சாதனையாளர். சூடான இடுகையில் பெரும்பாலும் இருப்பவர்... எனக்கு மிக வேண்டியவர்
பட்டாம் பூச்சியை எப்படி விடுதலை செய்யலாம் ?

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)