பூனையாரை கண்டு கொண்டு மாதங்கள் கடந்துவிட்டன, பூனையார் அமைதியானவர் கோபப்படமாட்டார் என்று அலட்சியம் செய்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன், பூனையாரின் பரம விசிறிகள் பூனையாரின் தத்துவ மொழிகளைக் கேட்காமல் எங்களுக்கு வாழ்க்கை வரண்டுவிட்டது என்று கதறிக் கதறி என்னிடம் கேட்டதால், பூனையாரை நினைத்து கண்ணை மூடி அமர்ந்தேன், சில நிமிடங்களில் பூனையார் கண் முன் தோன்றினார்.
'அன்பரே என்ன வரம் வேண்டும், எதற்கான என்னை நினைத்தாய்' என்று அமைதியே வடிவாகக் கேட்டார்.
'எகிப்திய தெய்வமே ஏகாதிபத்திய இறைவா, தங்களை இதுகாறும் நினைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்' என்றேன்.
'நீ என்னை நினைப்பதாலோ, நினைக்காமல் இருப்பதாலோ எனக்கு நட்டம் எதுவுமில்லை எனவே மன்னிக்க ஒன்றும் இல்லை அன்பரே' என்றார் பூனையார்
'பூனையாரே எனக்கு சில ஐயங்களை அதனை கேட்டுத் தெளிவுறலாம் என்றே தாங்களை நினைத்தேன், மேலும் பூனையார் பக்தர்களுக்கும் அதே ஐயங்கள் இருக்கின்றன' பூனையாரை கூர்ந்து நோக்கிக் கூச்சத்துடன் கேட்டேன்
'நீ எதற்கு கூச்சப்படுகிறாய், என்னிடம் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் கூச்சங்கள் தேவையற்றது எதுவேண்டுமானாலும் தயங்காமல் கேள்' என்றார்
'பூனையாரே... மேதகு கடவுளே தாங்கள் தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி நமது மார்க்கத்திற்கு மார்க்க நூலாக ஆக்கலாம் என்று பக்தர்கள் எல்லோரும் முடிவு செய்துள்ளோம், அதற்கு தங்கள் அனுமதி வேண்டி.....'என்று நோக்க,,,,,,,,பூனையார் சங்கடத்தால் நெளிந்தார், கோபம் வருவது போல் இருந்தது......ஆனால் அமைதியாக என்னை உற்று நோக்கினார், நான் நடுங்கியபடி
'நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உலக மதங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை தானே ?' என்றேன்
'அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், ஆனால் அது பல எதிர்கால சிக்கல்களை ஏற்படுத்தும்....'
'எதிர்காலத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாக்கி வைப்பது நமது மார்க்கத்திற்கு நல்லதல்லவா ?'
'இப்ப பிரச்சனையே மத நூல்கள் தான் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறாயே மானிடா ?'
'நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் நடைமுறைகளை மாற்றுவது நமக்கும் நல்லது இல்லையே ?'
'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....'
சொல்லுங்கள் சொல்லுங்கள்
'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.
'இந்த மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது மன்னியுங்கள் பூனையாரே,,,,,,,'என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன், அதான் பூனையாருக்கு மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் வழக்கமில்லையே.
'பூனையாரே இன்னொரு ஐயம்.......'
'சும்மா கேளு கேளு 'என்றார்
நமது மார்க்கத்திலேயே பிரிவுகள் தோன்றிவிட்டதாக வெளியுலகில் பேசிக் கொள்கிறார்களே
'உண்மை தான், நான் எகிப்தியர்களுக்கு சொன்ன சில வாக்கியங்கள் தத்துவங்களை மட்டுமே எடுத்து வைத்துக் கொன்டு சிலர் பிரிவாக ஆகிவிட்டனர்..,'
'யார் அவர்கள் ?'
'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........'
'என்ன பூனையாரே என்னென்னவோ புரியாதபடி சொல்கிறீர்கள்'
இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை, தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...
'வேண்டாம்,,,,,,,,,வரகாப்பி இயக்கத்தினரின் பெயர் காரணம் பற்றிய தகவலே தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அதற்கு மேல் கேட்டால் எனக்கு இரத்த அழுத்தமே கூடிவிடும்.....நீங்கள் மலையேரலாம்' என்று கூறி கண்ணை மூடித் திறந்தேன்
பூனையாரை பிறகு காண முடியவில்லை