பின்பற்றுபவர்கள்

இறை நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறை நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூலை, 2010

மதப் பித்து !

பொதுவாக சாதி மதம் பிடிக்காதவங்க தான் அது பற்றி மிகுதியாகப் பேசுவதாகக் குற்றச் சாட்டுகள் உண்டு, அது 100 விழுக்காடு உண்மையே. சட்டையில் தெறித்த சந்தனம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, சாக்கடை தெறித்தால் அதுபற்றிக் கவலைப்படக் கூடாது என்பதாகத்தான் அக்கருத்தைக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது சாதி மதத்தை சமூக ஜவ்வாதாக நினைப்பவர்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். சாக்கடையாக நினைப்பவர்கள் தூப்புரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

*****

சிங்கத்தின் சொர்கம் என்னவாக இருக்கும் ? கொளுத்த மான்கள் நிறைந்திருக்கும் இருக்கும் ஒரு காடு, பன்றிக்கு ? சொல்லத் தேவை இல்லை. கொசுக்களின் சொர்கம் கூவம் ஆறு. மனிதர்களின் சுவர்க்கக் கனவுகள் கூட இப்படித்தான், நாம் எதை மகிழ்வாக நினைக்கிறோமோ அதைத்தாண்டி நம் சிந்தனைகள் செல்லாது, மதங்கள் காட்டும் சுவர்கங்கள் அனைத்துமே மனித மன சிந்தனை அடிப்படையில் எழுந்தவையே. அவதார் படம் படைப்புத் திறனின் உச்சம், அங்கு புற உலகில் வாழும் மனிதர்கள் துன்பமற்றவர்களாக இருக்கிறார்கள், அங்கும் கொடிய விலங்குகள் உண்டு என்றாலும் ஒன்றை ஒன்று வேட்டையாடுதல் என்பது கிடையாது, ஒன்றை ஒன்று சார்ந்து உதவி வாழ்ந்துவந்ததாகக் காட்டப்பட்டது, மனித சிந்தனைக்கு முரணற்றக் காட்சிகள் அவை, விதவிதமான விலங்குகள் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சி என்ற சூழல் இருப்பதாக நேரடியாகச் சொல்ல முடியாமல் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில்லை, அதாவது அமைதியான சூழலே மகிழ்ச்சியானவை என்பதாக அந்த இயக்குனர் காட்சிகளை அமைத்திருந்தார், அந்த சூழல் நரகம் ஆகுவது மனிதப் படையெடுப்புகளால் என்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், மற்றபடி அந்த நிலத்தில் நரகம் என்று ஒன்று இருப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்த உலகமாகவோ காட்டப்படவில்லை, மாறாக அமைதி நிறைந்த உலகமாகக் காட்டப்பட்டது, அந்தப் படத்தின் கற்பனையில் எனக்கு பிடித்திருந்த காட்சிகளே அங்கிருந்த சூழலை மிக அழகாக கவித்துவமாக காட்சி படுத்தி இருந்தவை.

மனித கற்பனையின் சுவர்கங்கள் இப்படிப்பட்டதாக இருந்தால் கூட என்னால் ஏற்க முடியும். ஆனால் மதங்கள் காட்டும் சுவர்கங்கள் இப்படியா ? இந்திரபுரியாகட்டும், ஆப்ரகாமிய மதங்கள் காட்டும் சுவர்கங்கள் ஆகட்டும் அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன. துவக்கம் முதலே ஆணுக்கு இருக்கும் பெண்களின் மீதான அளவிட முடியாத ஆசை ஆண்கள் படைத்த மதங்களின் சுவர்க்க கனவுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கின்றன. எந்த ஒரு மதத்தையும் பெண்கள் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஒருவேளை பெண்கள் அமைக்கும் மதமாக இருந்திருந்தால் நல்லக் கணவன் அங்கு கிடைப்பன் என்பாதாக சொல்லப்பட்டு இருக்குமோ, ஆசை அல்லது ஏக்கம் ஆகியவை உளவியல் வழியான விருப்பங்கள் ஆண்கள் படைத்த சுவர்கங்களின் பலன்களாகக் காட்டப்படுவது என்பதைத் தவிர்த்து மதக் கற்பனைச் சுவர்கங்களில் வேறொன்றும் இல்லை. அல்லது மதங்களின் சுவர்கம் என்பது அம்மதங்களை ஏற்றுக் கொண்டவர்களின் மாபெரும் கனவுலகம் எனலாம்.

எனக்கு எதாவது ஒரு மதத்தில் நல்ல பிடிப்பு இருந்தால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் வேற்று மதத்தினராக இருக்கும் சூழலில் என் நண்பன் குறித்து நான் நினைப்பது 'இறைவன் நாடினால் (விரும்பினால்) இவனும் ஒரு நாளைக்கு நம் மதத்தை ஏற்றுக் கொள்வான், இவனும் என்னுடன் சுவர்கத்தில் இருப்பான்' இணை பிரியாத நண்பர்கள் எனும் போது இப்படி நினைப்பது வியப்பொன்றும் இல்லை. பிற மதத்தைச் சேர்ந்த நெருக்கமான நண்பர்களை உடைய மதப்பாற்றாளர்கள் எவரேனும் இப்படி நினைக்காமல் இருப்பது உண்டா ? இல்லை என்றே நான் நினைக்கிறேன். அப்படி இருப்பவர் எவரும் உண்மையான நெருக்கம் கொண்ட நண்பராக இருக்கவும் முடியாது. இவற்றை எதற்குச் சொல்கிறேன் என்றால் நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய சூழலும் சேர்ந்தே பயன்(ண)ப்பட வேண்டும் என்று நாம் நினைப்போம், அந்த அளவுக்கு மனித மன மத நம்பிக்கை மனிதனை மாற்றிவிடும். ஆனாலும் இப்படியான மன உணர்வுகள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியானவை அல்லது இது போன்ற மத நம்பிக்கைகள் ஒரு வேளை பொய்யானதாகக் கூட இருக்கலாம் என்பதை மட்டும் ஏற்க மறுப்பர்.

30 ஜூன், 2010

ஆத்திக நாத்திகருக்கான பொதுக்கடவுள் !

நம்பிக்கை என்பது தவிர்த்து எந்த ஒரு தரவும் இல்லாத ஒன்று கடவுள் நம்பிக்கை என்று சொன்னால் அதை மறுக்க எவரும் கிடையாது அல்லது நம்பிக்கை என்பது தவிர்த்து கடவுள் இருப்பிற்கான நிருபனம் எதுவுமே இல்லை என்பது பொதுவான ஆத்திக கூற்று. நம்பிக்கைகள் நிருபனம் ஆகாது அல்லது நம்பிக்கைகளுக்கு நிருபனம் தேவை இல்லை என்கிற முரணான கூற்றுகள் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நிருபனத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் கொண்டவர்கள் ஆத்திகர்கள் மட்டுமே என்பது தவறான கூற்று ஆகும், நாத்திகர்களுக்கும் நம்பிக்கைகள் உண்டு, ஆனால் அவை நம்பிக்கைகள் என்பதாக கருதப்படாததால் அதுபற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை.

குறிப்பாக காலம் அல்லது நேரம் இவை. காலம் அல்லது நேரம் இவை உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்த்தால், அப்படி எதுவும் அறுதி இட்டு சொல்ல முடியாது. நமது நேரம் மற்றும் கால கணக்கிடின் அடிப்படை முதலில் புவியின் இயக்கம் அதாவது பகல் இரவு, அதில் காலை, நண்பகல், மாலை, இரவு என்னும் பகுப்பாக அறியப்பட்டு, பின்னர் அந்தப் பகுப்பின் சுழற்சியை மணித்துளிகள், நொடித்துளிகள் என்பதாக மாற்றி நேரக்கணக்கிடுகளின் அடிப்படையும், திங்கள் வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதாக திங்கள் (மாதக்) கணக்கும், பிறகு பருவ காலங்களின் அடிப்படையில் ஆண்டு அடிப்படைகளும், பிறகு புவியின் சுழற்சியை துள்ளியமாக அறிந்த பிறகு லீப் ஆண்டு கணக்குகளும் ஏற்பட்டன. ஒட்டுமொத்த பரவெளி, பால்வெளி இயக்கத்தின் கணக்குகளும் தற்பொழுது புவி சுழற்சியின் அடிப்படையிலான மணித் துளிகள், ஆண்டுகள், (தொலைவுகள் ) ஒளி ஆண்டுகள் என்பதாக கணக்கிடப்படுகிறது.

நாம் இருப்பதாக நம்பும் கால நேரங்கள் உண்மையிலேயே எப்போதும் இருந்ததே இல்லை அல்லது எப்போதுமே இருக்கிறது. இவை பற்றிய பகுப்புகள் வரலாறுகள் அடிப்படையில் நம்மால் நம் வசதிக்கேற்ப முன்னோர்கள் அமைத்துக் கொண்ட ஒன்றே. சமூகம் என்பதை மனிதன் ஏற்படுத்திக் கொண்டது போலவே, தனக்கான கால நேரங்களை ஒரு ஒழுங்கு முறைக் கணக்குக்குள் மனிதன் அமைத்துக் கொண்டான். காலம் இருக்கிறது என்பது தற்போது ஆத்திகர் நாத்திகர் அல்லாது பொதுவாக மனித குல நம்பிக்கை ஆகிவிட்டிருக்கிறது. நாம் பகுத்து அறிந்து கொண்ட காலங்கள் எதுவும் பிற உயிரினங்களுக்கு தாவிர வகைக்களுக்கு நம்பிக்கை என்ற அளவில் கூட கிடையாது. நாம் தற்போது நடைமுறையில் வைத்திருக்கும் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்கள் என்பது கூட முன்பு இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 60 நாழிகைகள் என்பதாக கணக்குகளாக இருந்தன. 24 மணி நேரம், 365 நாட்கள் இப்படியாக நாம் அமைத்துக் கொண்டவற்றிலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையே. இந்த கற்பனைகள் இல்லாவிட்டாலும் கூட நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.

நம்பிக்கைகள் கடவுள் என்றால், நாத்திகரும் நம்பும் கடவுள் நேரம் (Time), ஆனால் அவை இருக்கிறது என்றும் இல்லை என்றும் நினைப்பது யாவும் நம் நம்பிக்கையே. பரவெளி இயக்கம் என்னும் பேரியக்கச் செயலை நம் அறிவின் நுகர்சியால் உணரக்கூடிய, மிக குறுகிய கால எல்லைக்குட்பட்ட,பகல் இரவு புவி இயக்கத்தின் ஊடாக அளக்க முயற்சிக்கிறோம். அதை முற்றிலும் அளக்க முடியாத சூழலில் பரவெளி இயங்குகிறது என்பதாக நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். பெருவெடிப்பு நிகழ்ந்தகாக பில்லியன், ட்ரில்லியன் (அதற்குமேல் எண்ணியலை மனிதனால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை) களில் ஆண்டுகணக்கைச் சொல்லுகிறார்கள். பெருங்கடலை அளவிட இன்னும் பீப்பாய்கள் தவிர்த்து பெரிய களன் அளவைகள் கிடையாது. வேண்டுமானால் பெருங்கடளின் கொள்ளளவு பல கடல்களை உள்ளடக்கியது என்று மட்டுமே தோராயமாகச் சொல்ல முடியும். குழப்ப(ம்) ஒன்றும் இல்லை :), நம்மால் கற்பனை செய்ய முடியாதவற்றின் அளவுகளை நம் கற்பனைக்குள் உள்ள அளவிடுகளை வைத்து அளக்க முயற்சிக்கிறோம் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

கற்பனைக்கு அப்பாற்பட்டவற்றை கற்பனைக் கட்டுக்குள் கொண்டுவர எளிதான வழி நம்பிக்கை. பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கால நம்பிக்கை. இரண்டிம் கற்பனைகளுக்கு ஒழுங்குவடிவம் கொடுத்திருந்தாலும், ஓரளவுக்கு ஒழுங்கான வடிவமாக இருப்பது காலம் தான். அதுவும் புவி தன் வட்டப்பாதையை மாற்றிக் கொள்ளாதவரை, சுழற்சியில் சோர்ந்து போகதவரை மட்டுமே.

பயன் கருதி அமைத்துக் கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளது காலம், பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. காலம் அல்லது நேரம் ஆத்திக நாத்திகருக்கான பொது நம்பிக்கை என்றாலும் காலத்தை அனைவருமே வணங்குவதில்லை. காலக் கற்பனையின் எல்லைக்குட்பட்ட உருவ(க)ம் மணியாரம்(கடிகாரம்).

நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)

25 பிப்ரவரி, 2010

ஹலோவுக்கு உரிய இறைவன் மிகப் பெரியவன் !

இறை என்ற தமிழ் சொல்லுக்கு பொருந்தும் வகையில் வேற்று மொழிகளில் இறையின் பொருள் அவ்வளவு சிறப்பாகக் கூறப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடல் என்கிற சொல்லின் தன்மையுடன் 'இறை' (அழை), தொழு, வேண்டு, நினைவில் கொள் என்ற பொருளாக இறைவன் > நினைக்கப்பட்டவன், நினைக்கபடுகிறவன், நினைக்கப்படுபவன் அல்லது அழைக்கப்பட்டவன், அழைக்கப்படுகிறவன், அழைக்கபடுபவன் என்னும் வினைத் தொகையாக (முக்கால வினைச் சொல் பகுதி) தனிச் சிறப்பு வாய்ந்த சொல்லாக பயன்படுத்தபடுகிறது. மற்ற மொழியின் சொற்களில் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மொழி காட்டும் பொருளை விட எந்த ஒரு மதம் சார்ந்த சொல்லும் அந்த ஒரு தனிப் பொருளை தருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இறைவன் என்ற சொல்லை தத்தம் மதத்தின் (காட்)கடவுளைக் குறிப்பதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இன்றைக்கு பெரிய மதங்கள் என்றால் நான்கே நான்கு தான் மற்றவை சிறியவை அவை சீக்கிய,பார்ச்சி என்பது போல் இனக்குழுவுக்குள் அடங்கிவிடும். இந்த நான்கு பெரிய மதங்களின் சின்னங்களான வழிபாட்டு தளங்கள் உலகெங்கிலும் சம அளவில் உள்ளன. இதில் யார் பணக்கார கடவுள் என்பதை யாரும் எளிதாகச் சொல்லிவிட முடியாது, திருப்பதி கோவிலுக்கு வரும் உண்டியல் வருமானம் உலகில் எந்த ஒரு வழிபாட்டு தளத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமை. அதே போல் சிவன் கோவில்களுக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்புகள் அளவிட முடியாதவை. உலகங்கிலும் இருக்கும் சர்சுகள், மசூதிகள், புத்தவிகார்கள், இந்துக் கோவில்கள் எண்ணிக்கையில் சம அளவானவை, தாய்லாந்து போன்ற புத்த நாடுகளில் பிள்ளையார் கோவில் போல் புத்தவிகார்களை வீதிக்கு வீதி காணலாம், ஆசிய நாடுகளில் இருக்கும் புத்தர் கோவில்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த இந்தியாவிலும் உள்ள இந்து கோவில்கள் எண்ணிக்கைக்கு சமமானவை, இதே போன்ற எண்ணிக்கையில் தான் உலகெங்கிலும் சர்ச்சுகளும் மசூதிகளும் இருக்கின்றன.

செல்வ வளம் என்ற அடிப்படையும் எந்த மதத்தின் கடவுள் பணக்காரர் என்று சொல்வது கடினம் தான். செல்ல வசதி படைத்த பெருமாளும், நில உடமைதாரர் சிவனும், ஆயிரம் கைகளை உடைய புத்தரும், தனக்காக போர் புரியும் வீரர்களைக் கொண்ட அல்லாவும், பணக்கார மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஏசுவும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் யார் மிகப் பெரியவன் ?

உலக மக்கள் தொகையில் சுமார் 17 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாம், அதே போன்று தான் இஸ்லாமியர், இந்து, பவுத்த மதத்தினரும் இருப்பார்கள், மீதம் உள்ள விழுக்காடு உதிரி மதங்களைச் சார்ந்தவையாக இருக்கும். வருங்காலத்தில் இந்த மத இறைவன் தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்று சொல்லி மதம் மாற்றுவது கடினமாகத்தான் இருக்கும், காரணம் மக்கள் ஆதாரத்தின் படியே முடிவு எடுப்பவர்களாக உள்ளனர். மதக் கொள்கைகளைக் காட்டலாம், ஆனாலும் அதிலும் சிக்கல் உதாரண புருஷன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய மதப் பற்றாளர்கள் எவருமே இல்லை. அதனால் தான் மதவாதிகள் அறிவியல் அறிஞர்கள் பின்னே ஓடுகிறார்கள், ஒரு அறிவியலாளர் மதம் சார்ந்த நல்ல கருத்துச் சொல்லிவிட்டால் அவரது அறிவியல் அறிவு முழுவதும் மதத்தை தாங்கிப் பிடிக்கும் கேடயம் என்பது போல் பேசுகிறார்கள். இன்றை சூழலில் அறிவியல் துணை கொண்டு கடவுள் நம்பிக்கையை மெய்பிக்க வேண்டும் என்பதைவிட மதக் கொள்கைகளை மெய்பிக்க முடியுமா என்கிற முயற்சியும் மெய்பிக்கிறது என்பதாக கட்டுரைகளும் எழுதப்படுகிறது. இதில் குழப்பம் அடைபவர்கள் மதவாதிகள் அல்ல, இறை நம்பிக்கை உடைய ஒருவன் தான் குழப்பம் அடைக்கிறான், ஒருவேளை இவர்கள் சொல்வது தான் சரியோ என்பது போன்ற குழப்பம் அடைகிறான்.

நேற்று படித்த ஒரு பதிவு செய்தி உண்மையிலே வியப்படைய வைத்தது. 'வணக்கம் தமிழகம்', 'காலை வணக்கம்' போன்ற வணக்க சொற்களை இறைவனுக்கு இணை கற்பிக்க தடை விதிகப்பட்ட இஸ்லாமிய வானொலி, தொலைகாட்ச்சி அறிவிப்பாளர் பயன்படுத்தலாமா ? அப்படி அவர்களை சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துவது மத நல்லிணக்கத்தை குலைப்பதாகும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது ஆகும் என்றெல்லாம் படித்தேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்பதைத் தவிர்த்து வேறெதும் தோன்றவில்லை.

'வணக்கம்' என்ற ஒரு சொல்லை பொதுவாக இந்துக்கள் 'கும்பிடுதல்' என்ற சொல்லின் மாற்றாக பயன்படுத்துவதில்லை. வணக்கம் என்பது ஒரு மதிப்பு குறித்து தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு 'அறிமுகச்' சொல் தான். அதற்கு மேல் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. வணங்குதல் என்றால் பக்தி குறித்த சொல்லாகவும் அது பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அந்த சொல் வெறும் பக்தி சார்ந்தது மட்டுமே இல்லை. உள்ளேன் ஐயாவுக்கு பதில் 'வணக்கம் ஐயா' என்று சொல்லும் மாணவர்களும், பள்ளிகளும் உண்டு, இவை வெறும் பழக்கம் சார்ந்தவை தான். ஆங்கிலத்தில் இருக்கும் 'Sir' க்கு மாற்றாக 'ஐயா' வைப் பயன்படுத்துகிறோம், அதே போன்று தான் 'வணக்கம்' 'Hello' என்பது போல் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும் போது 'ஹலோ' க்கு பதிலாக 'வணக்கம்' சொல்லுவார்கள். கண்டவர்களையெல்லாம் வணங்கி இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் வணக்கம் பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

வணக்கத்துக் குரியவன், வணங்கத்தக்கவன் இறைவன் ஒருவனே என்பதற்கு பதிலாக கும்பிடுவதற்கு உரியவன், கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொண்டால் 'வணக்கம்' சொல்வது ஒரு பெரும் குற்றமாகிவிடாது என்று நினைக்கிறேன். இறைவன் மிகப் பெரியவன் ஆனால் அவன் மொழி ஆராய்ச்சி செய்து இணை வைக்கிறார்களா என்று பார்த்து 'வணக்கம்' சொல்லும் இஸ்லாமியர்களுக்கு மறுமையில் தண்டனை விதிப்பானா என்று தெரியவில்லை. அப்படி அச்சப்பட்டால் வணக்கத்தை பின் தள்ளிவிட்டு வேண்டத்தக்கவன் அல்லது கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொள்ளலாமே. எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் எனக்கு வணக்கம் தெரிவித்து அலைபேசியில் தொடங்குகிறார்கள். அவர்களெல்லாம் இறைவனுக்கு இணை வைப்பதாக நான் நினைக்கவில்லை. வணக்கத்துக்கு உரியவன் இறைவன் என்ற நீளமான சொல் கூடத் தேவையற்றது, ஏனெனில் மேலே சொன்னது போல் 'இறை'வன் என்று சொன்னாலே அதில் வேண்டுதல், அழைத்தல், கும்பிடுதல் என பல பொருள்களை உணர்த்தும் 'இறை' என்ற வினைத் தொகையுடன் தான் இருக்கிறது.

இறைவன் அல்லா, ஆண்டவராகிய ஏசு கிறித்து, இந்து கடவுள் என இறைவன், ஆண்டவன், கடவுள் என்ற சொல்லை மூன்று மதங்களும் பயன்படுத்துகின்றன. இந்த மூன்றும் தற்காலத்தில் ஒரே பொருளைக் குறித்தாலும் அரபியில் அல்லா எனச் சொல்லப்படுகின்ற சொல்லுக்கு நேரடி பொருள் கொண்டது தானா 'இறைவன்' என்ற சொல் என்று எத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது போல் தெரியவில்லை. ஏன் கடவுள் என்றோ, ஆண்டவன் என்றொ சொல்லுவதில்லை என்று தெரியவும் இல்லை. ஆனால் கும்பிடுதல், வேண்டுதல் என்ற பொருளில் 'வணக்கத்தை' எடுத்துக் கொண்டு அதை அவ்வப்போது விவாதமாக மாற்றி வருவதற்கு இஸ்லாமியர்கள் முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. வணக்கத்திற்கு மாற்று வேண்டுமென்றால் 'தொழு' வையே வைத்துக் கொண்டு 'தொழுகைக்கு' உரியவன் இறைவன் என்றே சொல்லி வரலாமே.

இறைவன் மிகப் பெரியவன் தான், வணக்கம் மிகச் சிரியது இதற்கெல்லாம் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டுமா ? இறையச்சம், இறை வேண்டுதல் போன்ற அரபியில் பொருள் தரும் ஒரு சொல்லுக்கு (அரபி சொல் எது என்று தெரியவில்லை) பதிலாக 'வணக்கத்தை' பயன்படுத்துவது வெறும் மொழிப் பெயர்ப்பு சிக்கல் மட்டும் தானே.

வணக்கம் சொல்லுவது தவறு என்றால் 'ஹலோ' சொல்லுவது கூட தவறு தான். எனக்கு தெரிந்து ஹலோவுக்கு பதிலாகத்தான் பல இடங்களில் வணக்கம் பயன்படுகிறது. இஸ்லாமிய நண்பர்களில் பலர் கூட வணக்கம் என்றே அலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் வணக்கப் பொருள் 'ஹலோ' என்றால், ஹலோவுக்கு உரியவன் அல்லா, அல்லாவைத்தவிர யாருக்கும் ஹலோ சொல்லக் கூடாது என்று சொன்னால் அது சரியா ? வணக்கத்தை (மத)அரசியல் ஆக்குவது வெறும் மதவாதமாகத்தான் தெரிகிறது.

10 ஆகஸ்ட், 2008

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?

இந்த தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து அதிர்ச்சயடைந்தேன், அதில் பெரியாருக்கு மாலை போடுவது ஏன் என்ற கேள்வியெல்லாம் எழுப்பி இருக்கிறார்கள். பெரியார் வாழ்ந்து மறைந்தவர், மாலை மரியாதை செய்வதற்கும் கடவுள் வணக்கத்திற்கு என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. மாலை மரியாதை செய்வது ஒரு வழக்கம். என்னைக் கேட்டால் பெரியாருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம். ஆனால் அது அவரது கொள்கைக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பெரியார் என்றுமே தந்தைப் பெரியார் தான். மாதா பிதா குரு தெய்வம் என்கிற வரிசையில் தந்தையாக பெருவாரியான தமிழர்களால் போற்றப்படும் படும் பெரியார் இரண்டாவதாக இருக்கிறார். நான்காவது நிலையில் தான் கடவுளே, ஏனென்றால் அந்த கடவுளையும் கும்பிட அடைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட கோவில் கதவுகளைத் திறந்து விட்டவர் பெரியாரே. திருவரங்கம் அரங்கனை காணச் செல்பவர்கள், அதற்கும் முன்பு பெரியார் சிலையை கண்டு உள்ளே செல்வதற்கு போராடி வாய்பளித்த பெரியாருக்கு நன்றி செலுத்திவிட்டுதான் செல்கிறார்கள். அவர் வழிவந்தவரே மானமிகு வீரமணி ஐயா. வீரமணி ஐயாவைப் பற்றிய தனிப்பட்ட விமரசனங்களை அதாவது சொத்து சேர்த்தார் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றை விடுகிறேன், மனிதர்கள் ஒவ்வொருவரும் பாசம், பணம், புகழ் எதோ ஒன்றில் அல்லது மூன்றிலுமே பலவீனமானவர்கள் தான். ஆனால் கொள்கையளவில் இன்றும் அவரும் சரி, கலைஞரும் சரி சமரசம் செய்து கொண்டது கிடையாது.

வீரமணி ஐயாவுக்கு விவாதத்துக்கு வர அரைகூவல் விடுத்து அவரை அழைப்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் சற்றேனும் சிந்திக்க வேண்டும். பிராட்டஸ்டாண்ட் கிறித்துவர்களின் 'ஏசு அழைக்கிறார்' என்ற துண்டு சீட்டை (பிட் நோட்டிசை) வாங்கிப் படித்து முகம் சுளிக்காமல் செல்லும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா ? இந்துக்கள் இருக்கிறார்களா ? ஏன் கத்தோலிக்க கிறித்துவர்கள் இருக்கிறார்களா ? பிராட்டஸ் ஸ்டாண்ட் கிறித்துவர்கள் பகுத்தறிவு வாதிகளா ? பின்பு ஏன் அவர்களைப் பார்த்து ஒதுங்கியும் சில சமயும் முறைத்துவிட்டும் செல்கிறீர்கள்.

ஈராக் போரின் போது அந்தர்யாமி என்கிற வடநாட்டு ஊழியர் ஒருவரை அல்லாவின் பெயரைச் சொல்லி கழுத்தை அறுத்ததை அல்ஜெசீராவில் காட்டினார்கள், ஆப்கானில் முகத்தை மறைத்தே இஸ்லாமிய பெண்ணை பொது இடத்தில் சுட்டுக் கொன்றதையெல்லாம் காட்டினார்கள், இதையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்கிறான். அய்யோ அய்யோ என்று அலறி மகன்களுடம் மடிந்து துடித்த ஆஸ்திரேலிய பாதிரியாரை எந்த பகுத்தறிவாளன் கொன்றான். ஐயோகோ......கற்பினிப்பெண்களின் வயிற்றைக் கீறி குழந்தையை எடுத்து வெளியில் வீசிய குஜராத் நிகழ்வு போன்ற படுபாதக செயல்களையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்தான் ? அன்றாடம் செய்தியாக எங்கோ ஒரு ஊரில் பிள்ளை வரம் தருவதாக பெண்களின் வன்புணர்ச்சி செய்வதை எந்த பகுத்தறிவாளன் செய்கிறான் ?

மாதாவின் கண்ணில் ரத்தம் வழிகிறதாம் ! எத்தனை மாற்றுமத நம்பிக்கையாளார்கள் அது உண்மையாக இருக்கும் என்று சொன்னார்கள். பிள்ளையார் பால் குடித்ததை பகுத்தறிவாளன் மட்டும் தான் கேலி செய்தானா ? சிலை வணக்கத்தை பகுத்தறிவாளன் மட்டும் தான் அபத்தம் என்று மறுக்கிறானா ? நாட்டார் தெய்வங்கள் எனப்படும் கிராம தெய்வங்கள் இழிவு என்று ஊருக்கு வெளியே அவற்றை நிறுத்து காவலுக்கு மட்டுமே அவை உரியது என்று புறம் தள்ளுபவன் பகுத்தறிவாளனா ? இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். அறிவியல் ஆன்மிகத்தை மெய்பிக்கிறதாம். தாரளமாக மெய்பிக்கட்டும். அப்படியென்றால் அடுத்து அவர்கள் கண்டுபிடிக்கும் முன் அவற்றையெல்லாம் வெளியிட்டு காப்புறிமை பெற்றுக் கொள்ளலாமே.

மதவாதிகளே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட நாகரீக வளர்ச்சியில், தன்னம்பிக்கையில் முன்னேறி இருக்கிறார்கள், தயவு செய்து அவர்களின் காலைப் பிடித்து கற்காலத்துக்கு இழுத்துச் செல்லாதீர்கள். இறைநம்பிக்கை என்பது என்றுமே நம்பிக்கைதான். உணர்வு பூர்வமானதும் கூட, அதற்கும் மேல் அதை மெய்பிக்க முடியாது. அதனால் தான் அவ்வப்போது புதிய கொள்கைகளுடன் புதிய மதங்கள் பிறக்கிறது. என்றோ அதையெல்லாம் மெய்பித்து இருந்தால் ஒரே மத்துடனே இறைநம்பிக்கை நின்றிருக்கும். பகுத்தறிவாளர்கள் தகர்க்க நினைப்பது இறை நம்பிகையல்ல, அதன் மூலம் பரப்படும் கட்டுக் கதைகளைத்தான். இவை இல்லாது இருந்தால் பகுத்தறிவாளர்களையே 'இறைவன்' படைத்திருக்கமாட்டான்.

நான் இங்கு சொல்லி இருப்பது எந்த மதத்திற்கும், அதன் அடிப்படைவாதிகளுக்கும் பொருந்தும் !

மதங்கள் கடவுளல்ல, மதங்கள் கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லைதான். அதில் கூறப்பட்டுள்ளதை மட்டுமே நம்பி அடுத்த மதத்ததைத் தூற்றுபவன் அந்த கடவுளை நம்பினாலும் அவன் காட்டுமிராண்டியே. உங்களுக்கு இருப்பது இறைநம்பிக்கையா ? கடவுள் நம்பிக்கையா ? அதில் தெளிவு இருந்தால் பகுத்தறிவாளர்களுடான உங்கள் விவாதம் தேவையற்றது !

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கும் முன் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய மூன்று மதநம்பிக்கையாளர்களும் எந்தமதம் சிறந்தது ? எது அறிவியல் பூர்வமானது ? எது மூடநம்பிக்கையற்றது ? என்று தங்களுக்குள் விவாதித்துவிட்டு, அதில் வெற்றிபெற்றால் அடுத்து பொது எதிரியான(?) பகுத்தறிவாதிகளுடன் விவாதிக்களாம் !

கடவுள் தான் காப்பாறனும் !

ஒன்றே குலம் ! ஒருவனே இறைவன் !

4 ஆகஸ்ட், 2008

பதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கேட்ட கேள்வி !

பதிவர் சந்திப்பின் போது பதிவர் இராம் 'உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா ?' என்ற கேள்வியை முன்வைத்தார். எனக்கு அதற்கான தேவை இல்லை என்பதைத் தவிர்த்து என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. சொல்ல ஆரம்பித்து இருந்திருந்தால் அங்கேயே என்னை சாமியார் ஆக்கிவிட்டு இருப்பார்கள், இல்லை எழுந்து ஓடி இருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்கள் எப்பொழுதும் கடவுளை நினைக்கிறார்கள் ? என்ற கேள்வியில் எந்த ஒரு மத நம்பிக்கையாளரும், (மத நம்பிக்கை என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் கடவுள் நம்பிக்கைக்கு நம் சார்ந்துள்ள மதமே காரணியாக அமைந்துவிடுகிறது) அவரவருக்கு கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது. வழிபாட்டுக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும், மதம் சார்ந்த பண்டிகைகளும் சில நொடிகளுக்கு கடவுள் இருப்பு பற்றியும், தன்னை அது பாதுகாக்கும் என்ற நம்பிக்கை வந்து செல்லும், மற்ற நேரங்களில் நம்பிக்கை இருப்பவர்கள் / இல்லாதவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

கடவுள் நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டாலும் அதை மதம் சார்ந்த நம்பிக்கை அல்லது ஒரு கோட்பாட்டின் நம்பிக்கை, கடவுள் என்ற உருவக குறியீட்டின் நம்பிக்கை என்றே அதைச் சொல்லமுடியும். இப்போதெல்லாம் நம்பிக்கையாளர்கள் மிகத் தெளிவாகவே அவரவர் மதக் கோட்பாட்டில் கூறியுள்ள கடவுள்களிடம் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதற்குப் பெயர்தான் கடவுள் நம்பிக்கையா ?

இல்லை என்று மறுத்து கடவுளை எதிர்த்து பேசிவிட்டு (இல்லை என்று நம்புபவன் எப்படி இல்லாத ஒன்றை எதிர்த்து பேசுவான்) பின்பு நரக நெருப்பில் வாடினால், அல்லது எதாவது தெய்வ நிந்தனை தண்டனைக் கிடைத்துவிட்டால்? என்கிற உள்ளார்ந்த அச்சமே தொடர்ந்து கடவுள் பற்றிய நம்பிக்கையில் ஒருவரை வைத்திருக்கிறது.

எல்லாவற்றையும் குரானில் கூறியுள்ளபடி அல்லா படைத்தார் என்று சொல்லும் இஸ்லாமியரைப் பார்த்து இந்துக்கள் கேலியாகவே சிரிப்பார்கள். இந்துமதத்தில் தத்துவசார்பாக சிலக் கோட்பாடுகள் இருப்பதால் 'அல்லா' பற்றிய இறை நம்பிக்கையை மறுத்து அவர்களால் சிரிக்கமுடிகிறது. இவை இறை நம்பிக்கையாளர்களிடம் உள்ள மிகப் பெரிய முரண்பாடு, இது அடுத்த மதத்தை கேலி செய்யும் எந்த மதத்திற்கும் பொருந்தும்.

உயிரோடு இருக்கும் போது இறைவனின் தேவை என்பதைவிட இறந்த பின்னால் என்ன ஆவேனோ என்ற பயமே இறை நம்பிக்கையின் ஈரம் காயாமல் வைத்திருக்கிறது. கடவுளுக்கு பயப்படுபவர்கள், இறையச்சம் உள்ளவர்கள், இறைவனை நம்புபவர்கள்... இவர்களே நல்லவர்கள்' என்ற கருத்து பரவலாக நம்பிக்கையாளர்களிடம் இருக்கிறது. இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை. இறை நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்களிடையே ஒருசிலர் குற்றம் செய்யும் போது அக்குற்றம் செய்யத் தூண்டுதலாக இருப்பது நம்பிக்கையின்மையா ? இறைநம்பிக்கைக்கும் குற்றத்திற்கும் என்ன தொடர்போ ? இதற்கு சரியான விளக்கம் ஆத்திக அன்பர்கள் தான் தரவேண்டும். கிருஷ்ணனை மறுத்த ஹிரன்ய கசிபுக் கூட இறைமறுப்பாளன் அல்ல, பிரம்மனை வேண்டியே அவன் சில நிபந்தனைகளுடன் கூடிய இறவா வரம் பெற்றான். பின்பு யார் பெரியவர் என்ற போட்டியில் நரசிம்ம அவதாரம் நடைபெற்றதாக கதைகள் சொல்லப்படுகிறது, அந்த கதையில் நாத்திக உருவகமாகவே ஹிரன்யகசிபு படைக்கப்பட்டான். ஹிரன்யகசிபு சைவனாகவும் காட்டப்படுகிறான். சைவ சமயப்பிரிவில் உள்ள சிவ வணக்கத்தைப் பழித்துக் கூறவே கண்ணன் பற்றிய தசாவதாரக்கதைகள் எல்லாம் தோன்றின.

எந்த ஒரு புராண இதிகாசங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அவை எதோ ஒரு காலத்தில் ஏற்பட்டவையாகவே இருக்கும், தான் தோன்றியாக எந்த ஒரு கதையும் காலம் காலமாக இருந்தது இல்லை. இவற்றின் வழி சொல்லப்பட்டுள்ள கதைகளின் மொத்த உருவகமே அந்தந்த மதங்களின் இறைநம்பிகையாக இருக்கிறது. நான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிறந்திருந்தால் என்னைப் பொருத்து ஏசு மற்றும் அல்லா பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்காது. கிமு 500 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிறந்திருந்தால் எனக்கு புத்தமதத்தில் காட்டியிருக்கும் கோட்பாடுகள் தெரிந்திருக்காது, ஏனென்றால் அதன் பிறகு தான் புத்தரே பிறந்தார். ஒவ்வொரு நம்பிக்கையின் தோற்றமும் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. இவையெல்லாம் பல்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட கோட்பாடுகளே. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எகிப்த்தியரின் கடவுள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. வேதகாலத்தில் உயர்வாகச் சொல்லப்பட்ட இந்திரன் இப்போதும் அதே உயர்வுடன் இருக்கிறானா ? சமஸ்கிரத ஸ்லோகங்களின் வாழ்வதாரத்தில் தான் அவன் உயிர் இன்னும் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது. இராமனுஜர், மத்துவர்,ஆதி சங்கரர் ஆகியோர் அவரவர் ஆழ்ந்து சிந்தித்து அவர்களுக்குத் தோன்றியதெல்லாம் வைத்து இன்று ஒருங்கிணைப்பாக உள்ள இந்து சமயத்திற்கு முன்பிருந்த பலசமயங்களைத் தோற்றுவித்துவிட்டார்கள். கிரிமி கண்ட சோழனைப் பொருந்தவரையில் அன்றைய வைணவர்கள் இன்றைய இந்துக்களைப் பார்த்து கிறித்துவர்கள் சொல்வது போல பேய்களை வழிபாடு செய்பவர்கள். சைவர்களைப் பொருத்து 'சிவன்' என்ற பெயரே கடவுள், வைணவர்களுக்கு 'விஷ்ணு' என்னும் பெயர்.

இந்த பெயர்களுக்கெல்லாம் தனித்தனி குணங்கள் இருப்பதாக இருபிரிவினரும் நம்பினார்களேயன்றி இருவரும் ஒருவரே என்ற நம்பிக்கைக் கொண்டவர் எவரும் இருந்ததில்லை, பிற்காலத்தில் சித்தர்கள் இவர்களை கிண்டலடித்து அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு என்று சொல்லி இவர்களின் ஒற்றுமைக்கு வழிபிறக்குமா தூற்றிப் பார்த்தார்கள். இன்றைக்கு இவையெல்லாம் தத்துவ சமாச்சாரமாக பேசப்படுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது எக்காலத்திலும் மதவழி சொல்லப்படும் கடவுள் பெயர் (நாமகரண) குறித்த நம்பிக்கையே யன்றி வேறு இல்லை, அதுவே அதாவது பெயரை மூலமாக வைத்தே அதைக் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அந்தந்த மதங்களினால் சொல்லப்படுகிறது.

கடவுள் நம்பிக்கையிலும் அதிலுள்ள வழிபாட்டு முறைகளில் ஏற்படுத்தப்பட்ட / புகுத்தப்பட்ட சடங்குகளில் உள்ள சமூக அரசியலை (யார் கோவிலுக்குள் செல்வது, யார் பூசைசெய்வது, எந்த மொழியால் பூசை செய்வது) ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒருவருடைய நம்பிக்கையின் ஆழத்தைத் தீர்மானிப்பதும்,அவரை அதிலேயே வைத்திருப்பதும் அவருக்குள்ள மரண பயம் தான். மரணம் பற்றிய தெளிவின்மையால், மரணம் பற்றிய உள்ளுணர்வு பயம் இருப்பதால் இத்தகைய நம்பிக்கையை அவர்கள் கைவிட்டுவிடாமல் தொடர்ந்து அவரை அதிலேயே வைத்திருக்கிறது. பிறந்த அத்தனை உயிர்களிலும் மனிதனுக்கு மட்டுமே மரணம் தம்மை முற்றிலும் அழித்துவிடும் என்பது தெரியும். மற்ற உயிர்களுக்கு மரணம் பற்றிய அறிவே கிடையாது. அப்படி இருந்தால் அருகில் அறுக்கப்படும் ஆட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆடு அசை போட்டுக் கொண்டே இருக்குமா ? அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யாது ? மரண பயமற்ற மற்ற உயிரினங்களுக்கு கடவுள் என்கிற கோட்பாடு தேவையற்றதாகவே இருக்கிறது. விலங்குகள் பிறவிலங்குகளிடமிருந்து தப்பிச் செல்வது மரணபயத்தினால் அல்ல, பிறவிலங்கு தாக்கவரும் போது ஏற்படும் வலியில் இருந்து தப்பிக்கவே, தன்னால் செயல்படாமல் போய்விடும் என்ற அச்சமே அவைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து சண்டை இடுகின்றன, இல்லை என்றால் விலகி ஓடுகின்றன. உடல் அழிவுக்குட்பட்டது, விபத்துக்குட்பட்டது என்று உடலின் இறப்பு குறித்த நன்கு(!) தெரிந்த மனிதனுக்கு அந்த மரணம் பற்றிய பயம் இருப்பதும் இயல்பே.

ஆழ்ந்த பக்தி கொண்டோர்களில் சிலர் சாகா வரம் பெறும் கதைகள் இருக்கின்றன, கதைகள் மட்டுமே சாகாமல் இருக்கின்றன, அதில் சொல்லப்பட்டுள்ள மார்கண்டேயன் போன்றோர் ? இல்லையே. சாகாவரக் கதைகள் சாகாமல் இருப்பதற்குக் காரணம் அவைகள் வழிவழியாகச் சொல்லப்பட்டும் வருவதால் தான் அன்றி அவற்றில் சொல்லப்பட்டுள்ளது உண்மையாக இருக்கும் என்று நினைக்கப்படுவதால் அல்ல. இது போன்ற கதைகள் மூலம் எப்போதும் இருக்கும் தன் மரண பயத்தை கடவுள் என்கிற உருவகத்துடன் இணைத்து தற்காலிக விடுதலை செய்துக் கொள்கிறான் மனிதன். இதுபோன்ற கதைகள் இல்லாத பிறமதங்களில் இறப்புக்கு பின்னால் 'நிரந்தர சொர்கம்' என்கிற கதைகள் எல்லாம் இருக்கின்றன. இவையும் அந்தந்த மதங்களைச் சார்ந்த மக்களின் மரணபயத்தைப் பற்றி சிந்திக்கவிடாமல் வாழ்வதற்கான வழிவகைகளில் அவர்களின் கவனம் செல்ல பயன்படுகிறது.

எதற்காக ஏன் பிறந்தோம் என்று தெரியாது,ஆனால் பிறந்த பின் நமது வாழ்க்கை என்பது புறக்காரணிகளையும் உள்ளடக்கியதே. ஒருவர் 100 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டாலும் கூட தண்ணீர் லாரி எதிரே வராவிட்டால் வாழ்ந்திருப்பார். பிறந்ததன் நோக்கமாக நாமாக நினைப்பது மகிழ்வான வாழ்கை, மகிழ்வு தனக்குள்ளே இருந்தாலும், வெளி உலகத்தினரிடம் பிறரிடம் அன்பு வைக்காவிட்டால் வெளி உலத்தினரின் தொடர்ப்பு மகிழ்வான வாழ்க்கையைத் குலைத்துவிடும், இவைதானே நடக்கிறது. பிறப்பவர் அனைவருமே இறப்புக்குட்பட்டவர்கள் தானே, வேறு என்ன இருக்கிறது ?

பதிவர் எனது அன்புக்குரிய மற்றொரு நண்பரான கேஆர்எஸ் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார், 'நாத்திகன் தோன்றுவது ஆத்திகனால், ஆத்திகன் தோன்றுவது நாத்திகனால்' என்று மிக அழகாகச் சொன்னார். நாத்திகனால் ஆத்திகன் உருவாகிறான் என்று தற்காலத்தில் சொல்ல முடியாது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்திருக்கலாம்.
ஆத்திகர்களின் அடாவடிகளாலேயே நாத்திகன் தோன்றுகிறான்.

கண்மூடித்தனமான இறைநம்பிக்கைக் குறித்த எதிர்ப்புகள் எனக்கும் வியப்பையே அளிக்கிறது. 'கண்ணால் காணமுடியாது ஒன்று இருக்கவே முடியாது என்றும், அப்படி ஒருவேளை இருந்தால் பல கோரத்தீவிபத்துக்கள், சுனாமி போன்றவற்றின் போது மக்கள் மடியும் போது உங்கள் கடவுள் எங்கே போனார்கள் என்று கேட்பார்கள். புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பக்கூடாது என்பதே இவர்களது கோட்பாடு, அதைச் சார்ந்தே இவர்களது இறை நம்பிக்கையின்மையும் இருக்கும். நமக்கு புலனாகாத எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது, வவ்வாலுக்கு கேட்கும் அல்ட்ரா சவுண்ட் நமக்கு கேட்கவில்லை என்பதால் அவை இல்லை என்று சொல்லிவிட முடியுமா ? மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கும் போது கழுகுக் கண்களுக்கு தெரியும் இறந்து மிதக்கும் மீன், நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா ? இறைநம்பிக்கை அற்றவர்கள் இறைவன் இல்லை என்று அறுதியிட்டுக் கூற எவ்வித முயற்சியுமே எடுக்காமல் வெறும் புலன்கள் காட்டும் தகவலே உண்மை என்று நம்புபவர்கள் தாம். எல்லாவற்றையும் புலனில் படக் கூடிய தொலைவிலும், இருப்பையும் உணர்த்திவிட்டால் மட்டும் எல்லாவற்றிற்கும் தீர்வு பிறந்துவிடுமா ? என்றெல்லாம் இவர்கள் நினைப்பதே இல்லை. கண்ணுக்கு முன் கடவுள் நின்று கொண்டிருந்தால் நீதி மன்றங்களைக் காட்டிலும் பிரச்சனைகளுக்கான உடனடித் தீர்வென்று அங்குதானே நிற்பார்கள். எல்லாவற்றிற்கும் இவனே காரணம் என்று பாதிக்கப்பட்ட சிலர் கடவுள்(!) மீதே கோபத்தில் கைவைத்துவிடுவார்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் இறைவன் தான் காரணமென்பதை மறைமுகமாக சொல்லும் 'எல்லாம் அவன் செயல்' என்கிற அபத்தமான ஆத்திக கோட்பாடே நாத்திகர்களின் பலமாகப் போய்விடுகிறது.

மேலிருந்து கண்ணாடியைக் கீழே போட்டால் உடையும். கடவுள் அதை உடையாமல் தடுத்துவிடுவாரா ? கண்ணாடி பெளதீகப் பொருள், மேலிருந்து விழுவது என்பது பெளதீக விசை, எளிதில் உடையக்கூடிய கண்ணாடி கீழ்நோக்கிய விசையில் சிக்கும் போது உடையும் என்பது பெளதீக விதி. கீழே விழும் இடம் கண்ணாடியைவிட மிக மென்மையாக (தண்ணீர்) இருந்தால் கண்ணாடி உடையாது, இதுவும் பெளதீக விதிதான். பல்வேறு உயிருள்ள உயிரற்ற பெளதீகப் பொருள்கள் மோதிக் கொள்ளும் போது அல்லது எதிர்பாராத சேர்கையினால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ? கடவுள் எந்த ஒரு பெளதீக விசையயும் கட்டுப்படுத்தும் என்று நம்புவதும், சக்தி படைத்த கடவுள் அப்படி ஏன் செய்யவில்லை என்று எதிர்கேள்வி கேட்பதும் அபத்தமானவையே. அழிவுக்கு உட்படாத பொருள் என்று எதுவும் இருக்கிறதா ? மனிதன் உடலென்பது பல பொருள்கள் சேர்ந்த பெளதீகக் கலப்புதானே. அந்த உடல் உயிரை உடனடியாக இழப்பதற்கு ஏற்படும் ஆபத்தும் எதிர்பாராத விசையினால் தானே ?

பதிவர் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே வரும்கால சந்ததியினரிடையே ப்ரீ திங்கர்களின் எண்ணிக்கை கூடுதலாகிவிடும் என்று பதிவர் ஜோசப்.பால்ராஜ் குறிப்பிட்டார். இதற்குக் காரணமே நம்பிக்கையாளர்கள் நாணயமாக நடந்து கொள்ளாதது தான். இறைநம்பிக்கை உடையவர்கள் எல்லவாற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று இருக்கிறர்களா ? நடைமுறையில் அப்படி இல்லையே. இவர்கள் எதிர்வினையாற்றி இறைவனின் இருப்பு இல்லை, எல்லாம் வெறும் நம்பிக்கை தான் என்பதாக புரியவைத்துவிடுகிறார்கள்.

பதிவு நீண்டுவிட்டது,

தன்னை நம்புவர்களை மட்டும் தான் கடவுள் காக்கும் என்று நம்புபவர்கள் உண்டென்றால் அவர்களின் அந்த கடவுளுக்கான உருவகம் மிகமிகத் தாழ்வானதே. படைப்புகள் இறைவன் படைத்ததா ? இயற்கைப் படைத்ததா ? அதன் படைப்புக்கான நோக்கம் எதுவென்று தெரியாதவரையில் நம்பிக்கை / நம்பிக்கையின்மை தொடரவே செய்யும். ஆறுநாளில் உலகைப் படைத்தான் என்று சொல்லும் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையாக இருந்தாலும் சரி, கல்கி அவதாரம் முடிந்து ஆலிழைக் கண்ணன் உலகத்தைப் படைக்கிறான் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் சரி அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரையில் படைப்பு என்ற ஒன்றே இருக்க முடியாது. பெளதீக பொருள்கள் அனைத்துமே மாற்றத்திற்கு உட்பட்டது. இல்லாத ஒன்றை உருவாக்கிவிட முடியாது, அப்படியே செய்தாலும் இல்லாத ஒன்றின் முந்தைய நிலை அதன் தற்போதைய இருப்பு நிலையின் முந்தைய வடிவம் மட்டுமே. மூலப் பொருள் இன்றி பெளதீகப் பொருள் (உயிருள்ளவையையும் சேர்த்தே) எதையுமே படைத்துவிட முடியாது. அப்படியென்றால் மூலப் பொருள் ? அதற்கும் மூலப் பொருள், அதற்கும் மூலப் பொருள் என விதை மரமாவதும், மரம் விதையாவது போன்ற சுழற்சியாகவே ஒரே பொருளின் பல்வேறு மாறுபட்ட வடிவங்கள் தான் அவை.

இறைவன் இருக்கிறான் என்று நம்புவதால் ஒருவகையான பலனோ, இறைவன் இல்லை என்று சொல்வதால் மாற்றான வேறு பலனோ எனக்கு ஏற்படப் போவதில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்