பின்பற்றுபவர்கள்

ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 செப்டம்பர், 2016

வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?

வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே

உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்

வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்

மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது

வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது

வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே

வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,

உண்மை தானே ?

இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(

இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

*****

பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.

வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.


28 டிசம்பர், 2013

குட்டி இந்தியா கலவரம் பற்றி ...

சிங்கையில் இவ்வளவு நடந்திருக்கிறது, சிங்கையில் இருக்கும் இவரு ஏன் வாயத்திறக்காமல் இருக்காருன்னு பலர் நினைக்கக் கூடும், நேரமின்மைத் தவிர்த்து, இந்தியசார்பு ஊடகங்களில் இவை எவ்வாறெல்லாம் திரித்து எழுதப்பட்டு, உணர்ச்சி தூண்டுதலை உருவாக்குகிறார்கள் என்று கவனித்து வந்தேன்.

சென்ற டிச 9 ஆம் தேதி அலுவலகம் சென்ற பிறகு தான் முதல்நாள் இரவு குட்டி இந்தியாவில் கலவரம் நடந்தது பற்றி தெரியவந்தது. இந்தியர்கள் குறிப்பாக ஒப்பந்த பணிக்கு முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கட்டி வந்தவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது, 'உங்காளுங்க ...?' என்பது போல் பிற இனத்தவரும், வட இந்தியர்களும் நம்மைப் பார்த்து பார்வையிலேயே கேட்கும் பொழுது விட்டுக் கொடுக்க முடியாமலும், மென்று விழுங்க முடியாமலும் கொஞ்சம் அவமானமாக கூனிக்குறுகியது உண்மை.

ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் அங்கு சென்றிருக்கும் சீனர்களை தாக்கி இருந்தால் நிலமையின் விபரீதம் குறித்து அச்சமுற்றேன். கலவரம் ஏற்படுத்தியவர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது, என்னைக் கேட்டால், எடுத்துக்காட்டிற்கு ஒரு சிலர் குடித்திருக்கும் ஒரு பெரிய கூட்டத்தில் கல் எரியும் போது ஏற்படும் கொந்தளிப்பிற்கு பிறகு அவற்றை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஏற்படும் கோபம் அதனால்  'உணர்ச்சிவசப்படுதல்' என்பது தவிர்த்து பெரிய காரணம் இல்லை. ஒரு விபத்தில் / விபத்தாக ஏற்பட்ட மரணமும், அதில் இரத்த்தை கண்டதால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கோபமும் இந்த  கலவரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கருதுகிறேன்.

இங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் எதுவும் ஒப்பந்த ஊழியார்களுக்கு சிங்கப்பூரின் கட்டுப்பாடுகள் குறித்து தெளிவாக சொல்வது கிடையாது, இங்கு எந்த ஒருகாரணத்திற்காகவும் வேலை புறக்கணிப்பு அல்லது எந்த போராட்டமும் செய்வதற்கு அனுமதி இல்லை, குறைகளை மனித வள அமைச்சிடம் தெரிவிக்கலாம். எந்த ஓரு ஆயுதம் ஏந்திய தாக்குதல் என்றாலும் கடுமையான தண்டனைகள் உண்டு இதற்கு சிங்கப்பூர்வாசிகளுக்கும் சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. சிங்கப்பூரில் குப்பைப் போடக்கூடாது, எச்சில் துப்பக் கூடாது என்று வேலைக்கு எடுப்பவர்களிடம் முகவர்கள் சொல்கிறார்களே அன்றி, வேலை புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கலவரம் செய்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து தெளிவாக அறிவுறுத்துவதில்லை, இதற்கு காரணம் இவ்வாறெல்லாம் நடக்காது என்கிற அசட்டுதனமான நம்பிக்கை அல்லது முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.

சிங்கபூரின் பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், சுற்றுலாத் துறை இவற்றை நம்பியே இருக்கிறது, தவிர தனிமனித பாதுகாப்புக்கும், அவர்களது உடமைகளுக்கும் முதன்மைத்துவம் கொடுப்பதால் பெண்களால் இரவு இரண்டு மணிக்கு மேல் கூட வேலையில் இருந்து வீட்டுக்கு தனியாகவே திரும்ப முடிகிறது, இவை அனைத்தையும் கெடுக்கும் துவக்கமாக கலவரம் நடந்ததுவிட்டதோ என்று நினைக்க சிங்கப்பூரின் எதிர்காலம் / பொருளாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, இவற்றை ஒடுக்கவேண்டும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்தியர்கள் / தமிழர்கள் கூட்டமாக இருந்தாலும் கலவரம் செய்யமாட்டார்கள் என்று நம்பித்தான் அரசு அவர்களை பொது இடத்தில் கூடவும், குடிப்பதைக் கூட கண்டும்காணமால் இருந்தது, இப்படிக் கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டார்கள் என்பதே தமிழர்களின் மனநிலையாக உள்ளது, இவர்களால் அந்தப்பகுதி வியாபாரிகளுக்கும் பெருத்த நட்டம், நிலைமை பழையபடிக்கு திரும்ப ஆறுமாதகாலம் கூட ஆகலாம், ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவிற்கு செல்வதையே பலர் தவிர்க்கும் பொழுது அந்த எண்ணிக்கையை மேலும் மிகுதியாக்கிவிட்டது இந்த நிகழ்வு.

இந்த பிரச்சனையில் அறிக்கைவிடுகிறேன் என்கிற பெயரில் தமிழக அரசியல்வாதிகளும், சன் தொலைகாட்சியில் நடந்து கொண்டது மிகவும் அநாகரீகம், பொத்தாம் பொதுவாக இனக்கலவரம், தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், முடங்கிக்கிடக்கிறார்கள் என்றெல்லாம் அறிக்கைவிட்டார்கள், இந்தியாவில் / தமிழகத்தில் கலவரத்திற்கு பிறகு நடக்கும் 'விசாரணைகளை' ஒப்பிட லிட்டில் இந்தியா பகுதிகளிலும், ஒப்பந்தப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகளிலும் நடந்த விசாரணைகள் மிகவும் கண்ணியமானவை. அமைச்சரே நேரில் சென்று தவறு செய்யாதவர்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்று ஆறுதல் கூறிவந்தார்.


அடிப்பட்டு உருக்குலைந்த ஆம்புலென்ஸ் உள்ளிட்டு, அங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உண்டு என்பதால் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்

இந்திய ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சிங்கையில் மத / இனப்பாகுபாடுகள் பார்த்து சிங்கை அரசு செயல்படுவது கிடையாது, திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிட குடியுரிமை பெற்ற / நிரந்தரவாச இந்தியர்கள் / தமிழர்கள் பாதுகாப்புடனும், நல்லவசதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறார்கள். வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கும் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பும், ஊதியத்தேதிக்கு அன்றே ஒப்பந்தம் செய்த ஊதியம் அளிக்கப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வெறெல்லாம் இந்தியா உள்ளிட்ட வேறுநாடுகளிலும் நடக்கிறதா என்பதே கேள்விக்குறி. எனவே அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் கண்ணியத்துடனும் உண்மைகளை விசாரித்த பிறகே எழுதவும், தேவையற்ற இனப்பூசல்களுக்கான தூபம் சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படுத்துவது ஒரு நாட்டினரின் மேல் இருக்கும் பொறாமை / பெறுப்பின்மை என்று நினைக்கத் தோன்றுகிறது.

நடந்த கலவரத்தை பெரிதுபடுத்தாமல் சிங்கப்பூரும் சிங்கப்பூர் வாழ்தமிழ்மக்களும் மென்மேலும் வளருவார்கள்.

16 ஏப்ரல், 2009

சித்திரைப் புத்தாண்டுக்கு முழு ஆதரவு இல்லை !

ஏப்ரல் 14ல் பல்வேறு (எதிர்)தரப்பில் இருந்து சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினமலர் உட்பட பார்பன ஊடகங்கள் கூட அதைக் கண்டு கொள்ளவில்லை என்பதால் சித்திரை புத்தாண்டை மாற்றியது தவறு என்று எண்ணம் கொண்டோர் பலர் மனம் புண்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பார்பன ஊடகங்கள் பலவும் தை ஒன்றில் பொங்கல் வாழ்த்துகளுடன் முடித்துக் கொண்டனர். எனவே அவர்களெல்லோரும் சித்திரை 1ல் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சொல்லி வைத்தார் போல் இந்துத்துவாதி இல.கனேசன் உட்பட பாஜக தலைகள் கூட சித்திரைக்கு 'புத்தாண்டு' வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்பான புலம்பல்களை இங்கு இட்லிவடையார்(?) பதிவில் காணலாம் :)

ஆனால் நான் அறிந்த வகையில் பொதுமக்களில் பலர் சித்திரை ஒன்றில் வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று வந்து, புத்தாண்டுக்கு செய்ய வேண்டியதைத் செய்து, அதுபற்றி பெரிதாக பேசிக் கொள்ளாமல் கொண்டாடினர். தை திங்களில் பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துகள் கூறி பல குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் சித்திரை 1க்கு ஒரே ஒரு குறுந்தகவல் வாழ்த்து மட்டுமே வந்தது. சிங்கையில் தமிழர் அமைப்புகள் பஞ்சகச்ச பஞ்சாங்கங்களின் பிடியில் இருப்பதால் சித்திரை 1 தான் புத்தாண்டு என்பதில் பிடிவாதம் நீடிக்கிறது. மலேசியாவில் தை க்கு மாறி, நாள்காட்டிகளையும் மாற்றிக் கொண்டு விட்டார்கள். பிற நாடுகளில் விருப்பம் போல் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாகவே நினைத்து வாழ்த்துச் சொல்ல தமிழ் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை. மாற்றத்தை (வேறு வழியின்றி) ஏற்றுக் கொண்டதாக கொள்ள முடிகிறது. விதிகள் காலத்தால் மாறும் :)

தமிழ் புத்தாண்டை தை 1க்கு மாற்றியும், சீனப் புத்தாண்டை அனைத்து மதச் சீனர்களும் கொண்டாடுவது போல் தமிழ்சூழலில் அனைத்து மத தமிழர்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது போல் தெரியவில்லை :(

வழக்கம் போல் இந்துமத தமிழ் பொதுமக்களுக்கு இதையும் கொண்டாட வில்லை என்றால் சாமி குத்தம் வந்துடுமோ என்ற அச்சத்தில் இரண்டு கொண்டாட்டம், ஆண்டுக்கு கூடுதலாக இருமுறை புத்தாண்டு என்ற பெயரில் விற்பனை கலைகட்டுகிறது என்பதால் சிறு விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

5 டிசம்பர், 2008

ஊடகங்கள் என்னும் மதங்கள் !

மதம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை, எண்ணங்களை தீர்மாணிப்பது என்று சொன்னால் எவரும் மறுப்பார்களா ? எந்த ஒரு மதமும் அதைச் சார்ந்தவர்களின் குண நலன்களை உருவாக்குவதுடன், உணவு உடை மற்றும் கட்டுப்பாட்டுக்களை விதித்து ஒருவரை தன் இச்சையாக செயல்படவிடாலம் அவர் மீது ஆளுமை செலுத்தினால் அதுதான் மதம். நேரடியாக ஒருவர் மீது தாக்கத்தை ஏற்படுவதால் அதன் பண்புகளில் ஏற்படும் மிகக் கூடுதலான அளவே மதவெறி எனப்படும். சரியா ?

ஊடகங்கள் எனப்பது மக்களாட்சியின் நான்காவது தூண்கள் கிட்டதட்ட மதம் போல் ஆகிவிட்டன. மதம் என்பதே சார்பு நிலைதானே. எந்த ஒரு ஊடகமும் அது செய்தி இதழாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி மக்கள் முன் காட்சிபடுத்துதல் ( பின்நவினத்துவ சொல்லாம்) என்பதில் சார்பு நிலையில் தான் இயங்குகின்றன. சன் டிவி, ஜெ டிவி பார்க்கும் சிறுவர்கள் கூட இதை உணர்வார்கள். இவற்றைக் குறிப்பிடுவது எளிமையான உதாரணம் கருதியே.

ஊடகம் என்பது தொழில் என்பதாக வளர்ந்த பின் போட்டித் தன்மை என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. முதலில் மக்கள் விரும்புவதைத் தருவதாகச் சொல்லும் ஊடகங்கள் பிறகு மக்களின் விருப்பத்தை தீர்மாணிக்கின்றன.

விபச்சாரம் நடப்பதும் அதன் மீது சட்ட நடவெடிக்கையும் இயல்பாக அன்றாடம் நடப்பவைதான். அன்று போடுவதற்கு செய்தி பஞ்சமோ, பெரிய Deal இல்லாத போது, காவல் துறையின் விபச்சார நடவடிக்கை செய்தியை எடுத்து
படத்துடன் "விபச்சார அழகிகள் உல்லாச விடுதியில் கைது" என்று போடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை அழகிகளாகக் காட்டுவதுடன், விடுதிகள் என்றால் அவை உல்லாசமாக இருப்பதற்கு உரிய இடம் என்பது இவர்கள் முன்பே பலமுறை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளதால், அந்த செய்தியை பலர் ஆர்வமுடன் படிப்பார்கள்.

ஊடகங்கள் எப்போதுமே பிரபலங்களின் செய்திகளை கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதை அண்மைய மும்பை தாக்குதலில் இரயில் நிலையத்தைவிட நட்சத்திர ஓட்டல்களின் காட்சிகளே தொலைக்காட்சியில் இடம் பெற்றதை பலரும் குறிப்பிட்டு காட்டி கண்டனம் செய்தார்கள். வாசகர்கள் காதில் புனிதம் தடவி "ஊடகம் என்பது ஜெனநாயகத் தூண்" என்பது எப்போதோ அடிப்பட்டுப் போய்விட்டது.

ஒரு ஆட்சியை மாற்றி அமைப்பதில் ஊடகம் முன்னிலை வகிக்கிறது. விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் என்றால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களை பற்றி ஒருவரி கூடச் சொல்லாமல், அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்குகளின் செய்திகளை மட்டுமே வெளியிட்ட பிற செய்திகள் தங்கள் வாசகர்களின் கண்களில் படாமல் கவனத்துடன் தவிர்ப்பர். செய்திகளாக இவர்கள் தருவது இவர்களுக்கு பிடித்தவை மட்டுமே.

இஸ்லாம் பற்றிய மேற்கத்திய (கிறித்துவ சார்பு, முதலாளித்துவ சார்பு) ஊடகங்களின் தாக்குதலும் இப்படித்தான், பின்லேடனையும் அல்கொய்தா என்ற இரண்டே விசயங்களை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு 'இஸ்லாம் என்றால் தீவிரவாதம்' என்கிற செய்தியை பதியவைக்க முயன்று வெற்றிபெற்றன. ஆனால் அதே ஊடகங்களுக்கு ஈராக்கில் எந்தவிதமான ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று தெரிந்தாலும், தெரிந்தே புஷ் அரசின் செயல்பாடுகளையும், அபுகிரைப் கொடுமைகளையும் அதிக அளவில் வெளியே பரப்பாமலும் ஓரளவுக்கு தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட சிறு சிறு செய்திகள் அளவுக்கு அதனை வெளியிட்டன.

மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பு பற்றி பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் தற்பொழுது மும்பைத் தாக்குதலில் கவனம் செலுத்தி அன்றாட தகவல் ஆக்கிவிட்டன. இந்த செய்திகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தார்போல் செய்திகளை வெளி இடுவார்கள், 'இறந்து போனவர்களில் எவரும் இஸ்லாமியர் இல்லை' என்று சொல்வது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கமாக கொண்டுள்ள செய்தி இதழ் அதனை வெளியிட்டது, அதுமட்டுமில்லாது அந்த செய்தி மக்கள் மனதில் மறையவே கூடாது என்பதற்காக இறந்து போனவர்களின் அத்தனை பேரின் வீடுகளுக்குச் சென்று அன்றாடத் தகவல்களாக அதனை வெளி இடுவார்கள். இவை சிறு இதழ்களில் செய்யப்பட்டால் பெரிய தாக்கம் ஏற்படாது, சிறிய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையான வாசகர்களை மட்டுமே கொண்டிருக்கும், அவர்களின் கவனம் வேறு இதழ்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதனை தொடர்ந்து செய்வார்கள், ஆனால் இந்திய அளவில் செயல்படும் செய்தி இதழ்கள் மறைமுகமாக செய்யும் போது வாசகர் மனதில் அந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

நான் 25 ஆண்டுகளாக ஆனந்தவிகடன் படிக்கிறேன், 15 ஆண்டுகளாக நக்கீரன் படிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் முன் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள், 'அந்த இதழ்களெல்லாம் உங்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை, அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் மாறி இருக்கிறீர்கள், அவர்கள் தரும் செய்தியே உங்கள் எண்ணங்களையும் சிந்தனையாகவும் மாறி இருக்கிறது, அதாவது உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் தீர்மாணிப்பவர்கள் அவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது வாசகனுக்கு பெருமையான ஒன்றா ?

ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.

ஆனால் 90 விழுகாடு வாசகர்களின் மன நிலை எதோ ஒரு சார்பில் எதோ ஒரு செய்தி ஊடகத்தை சிறப்பாக கருதும் மனநிலையில் தான் இருக்கிறது, அதில் வரும் செய்திகளே உண்மையானவவ என்று நம்புவார்கள், மற்ற இதழ்கள் திரிப்பதாகவே சொல்வார்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது துக்ளக் மட்டுமே படித்த எனது முன்னாள் பாஸிடம் நான் நக்கீரன் செய்தி பற்றி பேசினால், 'நக்கீரனெல்லாம் ஒரு புத்தகமா, அவன் பொய் பொய்யா எழுதுவானே ?' என்று சொல்லுவார். அவரைப் பொருத்து நக்கீரனின் வரும் செய்திகள் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும், ஏனெனில் நக்கீரன் எவரையும் துணிவுடன் எதிர்த்து எழுதும், ஆனால் அவ்வளவு துணிவு வாய்பே இல்லை என்று நினைப்பவராக அவர் இருப்பதால் நக்கீரன் பழிசொல்லி எழுதுவதாகவே அவர் கருதுவார். இங்கே நக்கீரன் துணிச்சலான செய்தி இதழ் என்று சொல்லவரவில்லை. நக்கீரனின் அன்மைய திமுக ஆதரவு செய்திகள் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஆதரவு நிலை என்பதற்காக எப்போதும் திமுகாவின் ஊழல் தகவல்களை, முறைகேடுகளை மறைப்பதில்லை என்பதில் ஓரளவுக்கு நக்கீரன் கோபால் பரவாயில்லை என்பேன்.

வாசகர் வட்டம் என்ற வட்டத்திற்குள் நீங்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களில் ஆளுமை செலுத்துவதில் ஒரு ஊடகம் வெற்றிபெற்றிருக்கிறது என்றே பொருள், அந்த ஊடகத்தை துதிப்பவர்களில் நீங்களும் ஒருவர் ஆகிவிடுவீர்கள். உண்மையிலேயே ஊடகம் என்பது தொழில் தான், துணிச்சலான புலனாய்வுக்கு ஊடகங்களைப் பாராட்டலாம், ஆனால் ஊடகம் தரும் செய்திகளே உண்மை என்று நம்புவோர்க்கு ஊடகங்கள் மதங்கள் போல் அவர்களின் மீது ஆளுமை செய்கிறது என்பது பேருண்மை. ஏற்றிவிடுவதும் வாசகர்களே, பிறகு மாட்டிக் கொண்டு மீளாமல் இருப்பவர்களும் வாசகர்களே !

இந்த பலரால் விரும்பிப் படிக்கப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும் :).

இதுபற்றி பலசெய்திகளை ஒப்பிட்டு விரிவாக எழுதமுடியும், பிரிதொரு இடுகையில் எழுதுவேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்