பின்பற்றுபவர்கள்

சீனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீனர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 ஜனவரி, 2012

சொந்தக் கதை இரண்டு !

வழக்கம் போல் சீனப் புத்தாண்டுக்கு சென்ற வாரம் முழுவதும் விடுமுறை, எழுதவோ படிக்கவோ நேரமில்லை, விடுமுறையின் முதல் இரு நாட்களில் அதாவது சென்ற ஞாயிறு 22 ஜெனவரி 2012 மற்றும் மறு நாள் திங்கள் சிங்கப்பூருக்கு வெகு அருகில் அமைந்துள்ள மலேசியாவின் ஜோகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 'பத்து பகாட்' என்ற சிறு நகருக்குச் இல்லத்தினரை அழைத்துச் சென்றேன். சிங்கப்பூரைக் கடந்து மலேசியாவில் நுழைந்து பேருந்து எடுத்தால் இரண்டு மணி நேரப் பயணத்தில் அந்த ஊரை அடைந்துவிடலாம். முன் பதிவு செய்யவில்லை, அங்கெல்லாம் விடுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே சென்று வந்த ஊர் என்பதால் சென்றேன், நம்பிக்கை பொய்க்கவில்லை, சீனப் புத்தாண்டின் துவக்க நாள் என்பதால் கூடுதலாக 30 ரிங்கிட்டுகள் வாங்கிக்கொண்டு 153 ரிங்கிட்டுக்கு 8 ஆம் மாடி அறை கிடைத்தது. அங்கு செல்லும் போதே இரவு 8 மணி ஆகி இருந்ததால் சிறுது ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த கடை பெருவளாகத்திற்கு சென்று விட்டு திரும்ப இரவு 11 மணி ஆகி இருந்தது, விடுதியில் இருந்து அருகே உள்ள இடம் என்றாலும் இரவு நேரத்தில் விடுதிக்கு திரும்ப வாடகை உந்திகளுக்கு காத்திருந்தால் எதுவும் கிடைக்கவில்லை. போகும் போது வாடகை உந்தியில் தான் சென்றோம், வேறு வழியில்லாமல குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு நடந்தோம், சீனப் புத்தாண்டின் இரவு என்பதால் நடமாட்டங்கள் இருந்தன. வான வேடிக்கைகள் துவங்கி இருந்தது, விடுதிக்கு வந்து சன்னலை திறந்து வைக்கவும் மணி இரவு 12 ஐ நெருங்க வான வேடிக்கைகளை சீனர்கள் கொளுத்திக் கொண்டு இருந்தனர், மேலிருந்து பார்க்க நகர் முழுவதும் வெடிச் சத்தமும் உயரே சென்ற வானங்களும் ஒளிக்கு அழகு சேர்ப்பது இரவு தான் என்று காட்டியது. ஒரு அரை மணி நேரம் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு பிறகு தூங்கிவிட்டோம்.

மறு நாள் காலையில் விடுதியின் பாடாவதி உணவில் ரொட்டிகள், காஃபி தவிர்த்து எதையும் சாப்பிட முடியவில்லை, எல்லாவிற்றிலும் அசைவம், நெத்திலி கருவாடு இல்லாமல் மலாய்காரர்கள் எதையும் சமைக்க மாட்டார்கள் போல, விடுதியை அடுத்து அங்கே அருகில் ஒரு சில தமிழர் உணவகங்களும் மலையாளிகளின் உணவகங்களும் இருந்தது. ஏற்கனவே தின்ற ரொட்டி (ப்ரட்) துண்டுகள் போதுமானவையாக இருந்தால் வேறு இடத்தில் எதையும் சாப்பிடாமல் பத்து பகாட் மால் எனப்படும் மிகப் பெரிய கடை பெருவளாகத்திற்கு செல்ல முனைந்தோம், பேருந்து நிலையம் அருகே ஆறு ஒன்று ஓடுவதாக விடுதியாளர்கள் சொன்னார்கள், அதையும் பார்த்துவிட்டு பிறகு பெருவளாகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்து ஆற்றுப் பகுதிக்குச் சென்றோம், கரை புறண்ட வெள்ள மாக பெரிய ஆறு ஓடிக் கொண்டு இருந்தது.


ஆற்றின் கரைகளில் நிறைய உணவகங்கள் இருந்தன ஆனால் அவை மாலை வேளைகளில் தான் திறக்கப்படுமாம், ஒவ்வொரு உணவகத்திற்கு பின்னும் ஆற்றின் கரைப் பகுதி இருந்தது, இறங்கி கால் நினைக்கும் அளவுக்கு வசதிகள் இல்லை, தடுப்புகள் இருந்ததன, படகு சவாரி செய்யும் இடங்களும் இருந்தன, சுள்ளென்ற வெயில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, பிறகு பேருந்து நிலையம் வந்து கடை பெருவளாகத்திற்கு பேருந்து ஏறினோம். பெருவளாகத்தில் பசிபிக் என்ற பேரங்காடி இயங்கியது அங்கு குழந்தைகளுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு திரும்ப மாலை 3 மணி ஆகியிருந்தது ஏற்கனவே பேருந்தில் மாலை 4 மணிக்கு முன் பதிவு செய்திருந்ததால் விடுதிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பேருந்தில் ஏறி சிங்கப்பூருக்கு திரும்பினோம்.

பத்து பகாட் சிறிய நகரம் தான் சுற்றுலா நகரம் இல்லை, சிங்கப்பூரில் இருந்து காலையில் புறப்பட்டால் மாலைக்குள் வந்துவிடலாம், ஒரு நாள் அங்கு தங்குவது குழந்தைகளுக்கும் மாற்றாக இருக்கும் என்றே சென்று தங்கி வந்தோம், கைக் குழந்தையை வைத்துக் கொண்டு நெடும் தொலைவு பயணம் அதுவும் பேருந்தில் சென்றுவருவது எளிதல்ல, இரண்டு மணி நேரம் பேருந்தினுள் இருப்பதற்கே படுத்திவிட்டான்.

******

ஒருவார விடுமுறையில் அலுவலக வழங்கிகளுக்கு (சர்வர்) மற்றும் அந்த அறையில் குளிரூட்டிக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று அனைத்தையும் முறைப்படி நிறுத்திவிட்டு வெள்ளிக்கிழமை துவக்கி விடுவதாகத் திட்டம், சீனப்புத்தாண்டு விடுமுறையின் முந்தைய கடைசி வேலை நாள் முடிவில் திட்டப்படி அனைத்தையும் நிறுத்தினேன், இவ்வாறு செய்வதால் கொஞ்சம் மின்சாரம் சேமிக்க முடியும் மற்றும் வழங்கிகள் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப கருவிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம், தொடர்ச்சியாக ஓடுவதில் இருந்து சற்று அதற்கு சற்று ஓய்வு கிடைக்கும். திட்டமிட்டபடி சென்ற வெள்ளி அலுவலகம் சென்று வழங்கிகளை இயக்கினால் சரியாக வேலை செய்யவில்லை, இணைய இணைப்பு மற்றும் பிற வழங்கிகளையும் வழி நடத்தும் வழங்கி தொங்கி நின்றது. இரண்டு நாள் கழித்து திங்கள் தான் அலுவலக வேலைகள் துவங்குகிறது என்றாலும் முன்கூட்டியே செயல்பாட்டில் வைத்திருந்தால் திங்கள் கிழமை பதட்டம் இல்லை என்பதால் முன்கூட்டியே வெள்ளி அன்றே இயக்கத் துவங்கினேன், அன்றைக்கு எனக்கு நேரம் சரி இல்லை, அன்று முழுவதும் எத்தனையோ முந்தைய நாள் வழங்கி இயக்க சேமிப்புகளை உள் செலுத்தில் இயக்கினாலும் முரண்டு பிடித்தது. சீனர்கள் மிகவும் செண்டிமென்ட் பார்ப்பவர்கள் சீனப் புத்தாண்டு முடிந்து முதல் நாள் இணைய இணைப்பு மற்றும் கணிணிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எரிச்சல் அடைவார்கள், இது நன்கு தெரிந்ததால் எனக்கு மன அழுத்தம் மேலும் மேலும் கூடிக் கொண்டே வந்தது அடுத்து என்ன செய்வது ? இது போன்று மிக தேவையான வேளைகளில் உதவும் தொடர்பிலுள்ள பிற நிறுவனங்களிம் விடுமுறை என்பதால் திங்கள் கிழமையை எப்படி எதிர்கொள்வோம் ? என்ற கேள்வியில் அதற்கு மேல் தெளிந்த சிந்தனைகள் ஏற்படவே இல்லை, வேலை பறிபோகுமா என்பது கூட எனக்கு கவலை இல்லை. திங்கள் கிழமை காலையில் மின் அஞ்சல் பார்க்க முடியாமல் போக, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு பதில் சொல்வது நிறுவன செயல்பாட்டையே கேள்வியாக்கிவிடும் என்ற கவலை ஏற்பட்டது.

இவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கையில் முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த போது அங்கு சேவையாளராக வந்து உதவிய ஒரு சீன நண்பரின் அலைபேசிக்கு குறுந்தகவல் 'அனுப்பிவிட்டு காத்திருந்தேன், இத்தனைக்கும் எனக்கும் அவருக்குமான தொடர்புகள் விட்டுப் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது, இடை இடையே பண்டிகைகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதுடன் சரி. உடனேயே நாளை உதவுகிறேன் என்பதாக பதில் அனுப்பி இருந்தார்

அன்றைய நாள் இரவு 9 மணி வரை வழங்கியை பல முறை முயற்சி செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன், மறு நாள் காலையில் அழைத்துப் பேசினார், மாலை வருவதாகச் சொன்னார், அன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று காத்திருந்தேன் மாலை வரை வரவில்லை, பிறகு இரவு 11 மணிக்குத்தான் என்னால் வரமுடியும் என்றார். அவர் வீடு என் வீட்டில் இருந்து சில கிமி தொலைவில் இருப்பதால் நான் வீட்டுக்கு சென்று, உணவிற்குப் பின் இரவு 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகச் சொன்னேன், சொன்னபடி அங்கு காரில் வந்து என்னை ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார்

நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழங்கியை முற்றிலும் நிறுத்திவிட்டு மற்றொரு வழங்கிக்கு சேவைகள் அனைத்தையும் மாற்றிவிட்டு இயக்க அனைத்தும் இயங்கத் துவங்கியது. இங்கே பிரச்சனை என்னவென்றால் ஒரு மருத்துவர் ரத்த தொடர்புள்ளவர்களின் மீது கத்தியை வைக்க யோசிப்பது போன்றது தான், அவர் செய்த அதே வேலையை என்னால் செய்ய முடியும் இருந்தும் நம் முயற்சி வீணாகுமோ, குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட முடியுமோ என்ற அச்சம். இதே உதவியை வேறு யாரும் என்னிடம் கேட்டிருந்தால் நான் செய்து முடித்திருப்பேன். பாதிப்பு நமக்கு இல்லாத இடத்தில் நம்மால் பொருமையாக சிந்தித்து செயல்பட முடியும், நம் சார்ந்தவற்றில் ஏற்படும் பாதிப்பு அதை சரிசெய்ய நேரும் போது ஏற்படும் பதட்டம் மூளையை சிந்தனை செய்யவே விடாது.

வழங்கி வேலை செய்யமல் போனது, அவற்றை சரி செய்தது இங்கு முக்கிய தகவல் இல்லை, ஆனால் தொடர்ந்து தொடர்பில் இல்லாத ஒருவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நினைப்பு எனக்கு ஏன் ஏற்பட்டது ? அவர் பழகியவிதம் மட்டுமே, எத்தனையோ சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் சொல்லப்படும் ப்ரண்ட்லி முறையில் இணைந்து செயல்படுபவர்கள் குறைவே, நான் உதவி செய்யக் கோரி குறுந்தகவல் அனுப்பிய போது அவர் சீனப் புத்தாண்டு விடுமுறையில் அவரது சொந்த ஊருக்கு மலேசியா சென்று திரும்பிக் கொண்டு இருந்தாரம், அவருக்கு 4 வயதிற்குள் மூன்று குழந்தைகள் வேறு, அன்றைய நாள் சனிக்கிழமை தான் மாலை தான் திரும்பி இருக்கிறார், உடனே வரமுடியாமல் போனது, வேறு யார் என்றாலும் என்னால் முடியாது ரொம்ப அலுப்பு வருந்துகிறேன் என்று மின் அஞ்சல் அனுப்பி இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் ஒப்புதல் பெற்று இரவு 11 மணி ஆனாலும் உதவுகிறேன் என்று உதவிக்கு வந்து அனைத்தையும் சரி செய்த போது எனக்கு கடவுளாகத் தெரிந்தார், ரொம்பவும் நெகிழ்சியாக இருந்தது, என்னையும் அதிகாலை நான்கு மணிக்கு என் வீட்டின் அருகே இறக்கிவிட்டு, அருகே காபி வாங்கிக் கொடுத்துச் சென்றார். எனது அலுவலக்த்தில் என்னுடன் நல்ல நட்புடன் இருக்கும் சீனர்கள் கூட சனி / ஞாயிறு எங்காவது அழைத்தால் வரமாட்டார்கள், சனி / ஞாயிறு குடும்பத்திற்கான நாள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார்கள். அவர் செய்த உதவிக்கான பணத்தை என்னால் பெற்றுத் தரமுடியும் மற்றும் அவருக்கு அந்த வேலைக்கு பணம் கிடைக்கும் என்றாலும் வேறு சிலரிடம் கேட்கப்படும் இதே போன்ற நெருக்கடி வேலை உதவிக்கு முன்கூட்டியே பணம் பற்றி பேசப்படும், விடுமுறை நாள் என்பதால் மிகவும் கூடுதலாகவே கேட்பார்கள், எந்த ஒரு வேண்டுகோளும் வைக்காமல் வந்து உதவி செய்பவர்கள் மிக மிகக் குறைவே.

நாம எப்படிப் பட்டவராக இருந்தாலும் நம்முடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய இக்கட்டான நேரத்தில் யாருடைய முகம் தெரிகிறதோ அவர்கள் தான் நமக்கு முக்கியமானவர்கள். அப்படிப்பட்டவர்கள் நமக்கு கிடைக்கலாம் கிடைக்காமலும் கூடப் போகலாம் ஆனால் அப்படிப் பட்ட முகத்தை நாமும் வைத்திருக்க வேண்டும் என்பது நான் அவரிடம் கற்றுக் கொண்டது. நமக்கான உதவி சரியான வேளையில் கிடைக்க நாமும் கொஞ்சமேனும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்படித் தான் இருக்கிறேன் என்று அவர் வந்து உதவிய போது எனக்கும் கொஞ்சம் என்னைப் பற்றிப் பெருமையாகத் தான் இருந்தது

19 ஜனவரி, 2012

பக்வா (சீன வகை உப்பு கண்டம் ) !

சீனப் புத்தாண்டு நேரங்களில் சீனர்களிடையே வாங்கப்படும் மிக முக்கியமான பொருள்களில் இந்த 'பக்வா' உண்டு (肉干 - rou-gan,- dried meat). சீன உணவு வகைகளில் விலை உயர்ந்த உணவு பண்டமும் இது தான், மொழிப் பெயர்ப்பு என்ற அளவில் உப்பு கண்டம் என்று குறிப்பிட்டுள்ளேன், ஆனால் உப்பு கண்டமென்பது நமக்கெல்லாம் தெரியும் (மீன்) கருவாட்டைப் போன்று உப்பு சேர்த்து காய வைத்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தான் உப்பு கண்டம் என்று சொல்கிறோம், அவற்றில் உப்பு சேர்ப்பது அவை ஆண்டு கணக்கில் கெடாமல் இருக்கும் அதை தேவைப்படும் போது எடுத்து சமைக்கப் பயன்படுத்த முடியும், உப்பு கண்டம் என்படுவது ஊறுகாய் (முக்காலம் உணர்த்தும் வினைத்தொகையில் அமைந்த பெயர்ச் சொல்) போன்று ஊறூண் (அதாவது ஊறும் ஊண்) என்று சொல்ல முடியும், உப்பு கண்டம் என்றால் என்னவென்று தெரியாவதர்களுக்காக அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன், தமிழ் ஆராய்ச்சிகளை சற்று தள்ளி வைத்துவிட்டு மீண்டும் பக்வா வின் பக்குவம் பற்றிப் பார்ப்போம்.

பக்வா ஆடு, மாடு, பன்றி இறைச்சி என்ற வகைகளில் செய்யப்படுகிறது, இருந்தாலும் விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை, மற்றும் அது விரும்பி வாங்கப்படும் ஒன்றாகும். பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது, அதை வாங்கி பக்குவமாக (தணல் அல்லது நெருப்பில்) வாட்டி சிங்கை மற்றும் மலேசியாவில் விற்கிறார்கள், இவை மிளகு அடை போன்று தட்டையாக கருஞ்சி சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவை ? தட்டையாக்கி இதை பதப்படுத்தும் போதே இதனுடன் காரம், இனிப்பு, சோயாச் சாறு மற்றும் உப்பு சேர்த்து வெயிலில் பாறைகளின் மீது காய வைப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு காய வைக்கப்பட்டதை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடை பார்த்து காற்றுப் போகாமல் அடைக்கப்பட்டு ஏற்று மதி செய்யப்படுகிறது, அதை கடைகள் வாங்கி நெருப்புத் தணலில் இரு பக்கமும் வாட்டி சுட சுட விற்பனை செய்கிறார்கள்.

சீனப்புத் தாண்டு சீசனில் இவற்றிற்கென சிறப்புக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும், விளக்குகள் அலங்காரங்களுடன் குறிப்பிட்ட சில கடைகளின் பக்வா சுவை மிகுந்தது என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவே இருக்காது (இருட்டுக்கடை அல்வா போன்று), அதற்கு வாடிக்கையளர் சொல்லும் காரணம், அவர்கள் தரமான மூலப் பொருள்களை நம்பிக்கையான இடங்களில் இருந்து வாங்கி பக்குவமாக செய்து தருகிறார்கள், உடல் நலத்திற்கு பாதுகாப்புடன் சுவைக்கும் குறைவில்லை என்பதே.

நம் மீனவர்கள் விற்காத அல்லது நொந்து போன மீனைக் குறுக்காக வகுந்து உப்பு சேர்த்து மணலில் காய வைத்து கருவாடு போடுவார்கள், வஞ்சிரம், கொடுவா மற்றும் வவ்வாள் மீன்கள் வீணாகமல் கருவாடு ஆக்கப்படுகிறது. பக்வா முன்பெல்லாம் விற்காமல் அல்லது பயன்படுத்தி மீதமான இறைச்சியை பதப்படுத்து பக்குவா செய்யப்பட்டதாம், தற்பொழுது இருமுறைகளில் அவற்றை தயாரிக்கிறார்கள், மெல்லப் பொடித்த இறைச்சியை தட்டையாக்கி செய்வது மற்றொன்று பெரிய துண்டங்களை சிறு சிறு தட்டையாக்கி செய்வது, இரண்டாம் முறையில் செய்வது விலை மிகுதி. இவ்வகை பாக்வா பெரும்பாலும் சதுர, செவ்வக வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது, மிகவும் தரமாக தாயரிக்கப்பட்டு அவை 5 செமி விட்டமுள்ள வட்டவடிவிலும் விற்கப்படுகிறது, அதற்கு பெயர் தங்கக் காசு (Golden Coin), இவை பெரும்பாலும் பரிசு பைகளாக வாங்கிக் உறவினர்களுக்கு அளிக்க தயாரிக்கப்படுகிறது.


மதம் சார்ந்த சீன விழாக்கள் மற்றும் சீன பாரம்பரிய திருமணத்தில் பக்வா கண்டிப்பாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று. தரமான பக்வா கிலோ 60 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது என்றாலும் பக்வா விலை கிலோவிற்கு 40 வெள்ளி என்பது மலிவான விலை. பெரிய சீன நிறுவனங்கள் தங்களுக்குள் விற்பனை உறவை பேன பக்வா அடங்கிய பெரிய பரிசு பொட்டலங்கள் மற்றும் பைகளை அனுப்பும். காரமும் இனிப்பும் சேர்ந்த இறைச்சி சுவையுடன் இருந்தாலும் காரம் மிகுந்த, இனிப்பு மிகுந்த, காரம் குறைந்த, இனிப்பு குறைந்த வகைகளில் பல்வேறு தரங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

நம்மக்களிடையே கருவாட்டுக் குழம்பு, மற்றும் உப்பகண்ட விரும்பம் போல், 40 வயதிற்கு கீழ் உள்ள சீனர்கள் இதை விரும்பி உண்ணுவது இல்லை, நன்கு பழகிய நாக்குகள் அந்த சுவையைத் தேடித் தேடி வாங்குகின்றனர். மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது, மிளகு அடை (தட்டை) போன்று தனியாகவும் கடித்து உண்ணுகிறார்கள், இது பார்க்க மென்மையாக வளைக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது.

உணவுகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு சுவை, இதில் பக்வாவுக்கு மட்டும் இடம் இல்லையா என்ன ?

நான் என் சீன நண்பர்கள் சிலரிடம் இந்த புத்தாண்டுக்கு பக்வா வாங்கியாச்சா ? என்று கேட்டால் சிலர் 'ஐயே......' என்பது போல் பார்கிறார்கள், சிலர் 'யெஸ்....' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்னொரு நாள் 'பக்குத்தே' என்ற பன்றி இறைச்சி வகை உணவு பற்றி எழுதுகிறேன். அவை பெரும்பாலும் உள்ளுறுப்புகள் எனப்படும் பன்றி ஆர்கன்களில் செய்யப்பட்ட ஒரு வகையாக சூடான சாறு வகை. கணவாய் மீன், அக்டோபஸ் மற்றும் பாம்பு கருவாடுகளையெல்லாம் இங்கு தான் பார்க்கிறேன்.

இவற்றையெல்லாம் நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் சாப்பிடுபவர்களின் ரசனையை ரசித்து இருக்கிறேன்.


அன்றைய விற்பனையில் 'பக்வா' தீர்ந்து போன அறிவிப்பின் பிறகும் வரிசையில் நிற்பவர்கள் ()

'பக்வா' வாங்க 8 மணி நேரமாக காத்திருப்பவர்கள் (S'poreans queuing overnight for bak kwa)


'பக்வா' வாங்கி வர அனுப்பி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் (சர்சை My boss told me to come, so I came, cannot argue. I'm very tired,' )

18 ஜனவரி, 2012

மீண்டும் வந்துவிட்டது டிராகன் !

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் ராசி விலங்கு (Shēngxiào (Chinese: 生肖)) டிராகனாம், நான் சிங்கையில் பார்ப்பது இரண்டாவது டிராகன், 12 ஆண்டுக்கு ஒரு முறை 12 விலங்குகளின் சின்னம் மாறி மாறி வரும். எலி, எருது, புலி, முயல், டிராகன்(யாளி), பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகியன பணிரெண்டு விலங்குகள்.

சீனர்கள் பிறரின் வயதை அறிந்து கொள்ள நீங்கள் எந்த விலங்கில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள், அதை வைத்து அகவை (வயதை) கணக்கிடுவார்கள், உடல் தோற்றம், தலை மயிர் அடர்த்தி, நிறம், தோல் அமைப்பு வைத்து நாம் பார்க்கும் எவரையும் கிட்டதட்ட வயது முடிவு செய்யமுடியும், ஒருவர் குதிரை ஆண்டு பிறந்திருந்தால் அவரது தோற்றத்தை வைத்து அந்த சுழற்சில் 12, 24, 36, 48 என்ற அளவில் கிட்டதட்ட அவரது வயது தெரிந்துவிடும், கூடவே இந்த ஆண்டு என்ன விலங்கு என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பதால் சரியான வயதை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆண்டு டிராகன் என்றால் 40+ வயது மதிக்கத் தக்கவர் தாம் குதிரை ஆண்டு பிறந்தவர் என்று சொன்னால் அவரது சரியான வயது 46 என்று அறிய முடியும், டிராகனில் இருந்து குதிரை ஆண்டு வர இரு ஆண்டுகள் ஆகும் அப்போது தான் அவருக்கு 48 ஆக இருக்கும். வயதை மறைப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால் எதாவது பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த விலங்கு ?' என்று போட்டு வாங்கித் தான் கண்டுபிடிப்பார்கள். சீனர்கள் இந்த பனிரெண்டு விலங்கு பெயர்களையும் அவை வந்து சென்ற ஆண்டையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், 1970 ஆ ஆண்டு என்ன விலங்கு ? என்று கேட்டால் 12 வாய்ப்பாட்டில் கூட்டிக் கழித்து அந்த ஆண்டு என்ன விலங்கு (சேவல்) என்று உடனேயே சொல்லிவிடுவார்கள்.

சீனர்களின் சோதிடம் இந்த 12 விலங்குகளையே சார்ந்தது, அதாவது குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த அனைவருக்கும் ஒன்று போல பலன் தான், மொத்தம் 12 வகையான பலன்களில் ஒவ்வொருவருக்கும் மான பலன் பார்க்கப்படுகிறது, அதாவது 12 பேரில் ஒருவருக்கு ஒருவர் பலன் மாறுபடும், இந்த ஆண்டில் (டிராகனில்) பிறந்தவர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு பிறப்பவர்களுக்கும், 2000 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் ஒரே பலன் தான், பிற ஆண்டுகளில் பிறந்தவர்களின் பலன் ஆண்டில் விலங்கு ஏற்றவாறு மாறி இருக்கும்.

ஆண் குழந்தை மோகம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே இல்லை, பொதுவாக ஆசிய இனத்தின் பண்பாகத்தான் இருக்கிறது, சீனர்களும் குடும்பத்தின் அடுத்தகட்ட தொடர்சிக்கும், கடைசி கால பாதுக்காப்பிற்கும் ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்பதை விரும்புவர்களாக இருக்கிறார்கள், சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் வேறு வழியின்றி அரசை பின்பற்றுகின்றனர். என்னுடன் பணி புரியும் சீனப் பெண் இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தைப் பெற்றதும் மிக மகிழ்ச்சியாக இப்போது என்னால் குழந்தை உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினாள்.

மேற்சொன்ன விலங்கு ஆண்டுகளில் டிராகன் மற்றும் புலிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது, பல சீனர்கள் இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், மற்ற விலங்குகளை விட இந்த இரு விலங்குகள் மிகவும் அதிர்ஷடம் வாய்ந்ததாம். திருமணம் ஆனவர்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவர்களாகவும் பலர் இருக்கின்றனர், மற்ற ஆண்டுகளைவிட சீன மக்கள் தொகையில் பிறப்பு விகிதம் இந்த இரு ஆண்டுகளில் ஓரளவு கூடுதலாகவே இருக்கும்.

******

சீனப் புத்தாண்டின் போது சீனா முழுவதும் ஒருவார அரசு விடுமுறை, அரசு அலுவலங்கங்கள், பொது நிறுவனங்கள் இயங்காது, அவரவர் அவரவரது பிறப்பிடங்களில் தொடர்பு இருந்தால் சென்றுவிடுவார்கள், வனிக வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கும், சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மை என்பதால் அவர்கள் நடத்தும் உற்பத்தி சார்ந்த நிறுவங்கள் பெரும்பாலானவை ஒருவார விடுமுறையை கடைபிடிக்கின்றனர். எங்கள் அலுவலகமும் ஒருவாரம் விடுப்பு தான், சீனப் புத்தாண்டு இரண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது, பழைய பொருளில் பயன்படுத்த முடியாதவற்றை வெளியே தூக்கி வைத்துவிடுவார்கள், பழைய கணிணி, தொலைகாட்சி பெட்டிகள் கூட வெளியே வைக்கப்பட்டு பார்த்திருக்கிறேன்,

சீனப் புத்தாண்டுக்கு சீனர்கள் பெரும் செலவு செய்வார்கள், ஏராளமான இனிப்பு பண்டங்கள், ரொட்டிகளை வாங்குவார்கள், குழந்தைகளுக்கு ஹங்பாவ் (ரெட் பாக்கெட்) எனப்படும் பணப்பரிசு கொடுப்பார்கள், அதற்கே அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் வரை தேவைப்படுமாம், சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அல்லது பொது இடங்களில் குடும்பங்களாகக் கூடி உண்டு மகிழ்வர். சீனப்புத்தாண்டின் இருநாட்களும் சிங்கையில் பொதுப் போக்குவரத்தில் சீனர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், பெரும்பாலும் அன்றைக்கு உறவினர்கள் வீடு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல வாகன வசதி இல்லாதவர்கள் வாடகைக்காரில் தான் செல்வார்கள். இந்த இரு நாட்களில் சுற்றுலா தளங்களில் சீனர்களைப் பார்ப்பதே அரிது. பேருந்துகள், தொடர்வண்டிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். சிங்கையில் வசிக்கும் சீனர்களில் ஏரத்தாள முப்பது விழுக்காட்டு சீனர்கள் அண்டை நாடு மலேசியாவில் இருந்து வந்து தங்கியவர்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது மலேசியாவிற்கு திரும்பிவிடுவர். அது போலவே பிற நாட்டு சீனர்களும் தாயகம் திரும்பி இருப்பார்கள்.

சீனரின் பாரம்பரிய நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இன்றும் தொடர்கின்றனர், குறிப்பாக இறந்த உறவினர்களுக்கு தாள்களை எரிப்பது, தாள்களினால் செய்யப்பட்ட இறந்தவர்களுக்கு விருப்பமான பொருள்களை செய்து எரிப்பது, சுற்றுச் சூழல் கெடுதல் என்ற வகையில் சிங்கப்பூர் அரசு அவற்றை தடுக்காவிட்டாலும் எரிக்கும் இடங்கள், அவற்றின் புகை, கரி பரவல் குறித்த கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. சீனர் நம்பிக்கை பழங்காலத் தொடர்பில் இருந்தாலும் எங்களுடைய நம்பிக்கையே உயர்ந்தது என்று அவர்கள் பிறரை வலியுறுத்துவதோ, தாழ்த்துவதோ கிடையாது. என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு குழுவும், அமைப்பும் மூட நம்பிக்கையைக் கடைபிடித்தாலும் அவற்றினால் பிறருக்கு தீங்கு இல்லாவிட்டால் அவற்றை விமர்சனம் செய்ய ஒன்றுமே இல்லை.

சீனப் புத்தாண்டுகள் அடிப்படையில் சீனர்கள் விரும்பும் சிவப்பு வண்ணம் மயமானது, பாரம்பரிய சோதிட நம்பிக்கையின் தொடர்சி, ஆண்டு முறையின் தொடர்சி என்றாலும் அவற்றை பல்வேறு மதத்தைச் சார்ந்த சீனர்கள் யாவரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். சீனர்களைப் பொருத்த அளவில் முதலில் சீன இனம், பிறகு பேசும் மொழி, பிறகு பழக்கவழக்கம் பண்பாடு, அதன் பிறகு இறுதியில் தான் மதம் சார்ந்தவற்றிற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.

மனித இனம் நிறங்களினாலும், தோற்றங்களினாலும் பல்வேறு இனகளாக அடையாளம் கொண்டுள்ளது என்னும் போது அவ்வினங்களுக்குள்ளான பொது அடையாளத்தை தொடர்ந்து பேணுவதால் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமையை நிலைத்திருக்க முடியும் என்று சீனர்கள் நம்புவதால் சீனப்புத்தாண்டு சீனர்களுக்கு பொதுவானதாகும்.

*****

மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு இனங்களுடன் பழகிவருவதால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான முயற்சி எடுத்துவருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது சமூக நல்லிணக்கத்தின் நோக்கங்களுள் ஒன்று தான், ஆனால் அந்த எண்ணம் மட்டுமே அவற்றை ஏற்படுத்திவிடாது, காரணம் மனிதன் பல்வேறு இனங்களுடன் இணக்கம் கொண்டிருக்க விரும்பினாலும் தத்தமது இன அடையாளங்கள் காக்கப்படவேண்டும் மற்றும் தாமே ஆளுமை மையமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறான். பல்வேறு இனங்கள் வசிக்கும் ஒரு நாட்டில் புதிதாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் ஆணா பெண்ணா என்பதைவிட நம் மனம் கணக்கிடுவது இவர் இந்த இனம் சார்ந்தவர் என்பதைத் தான். பல்வேறு தோற்றங்களுடன் மனித இனம் பரிணாமம் பெற்றிருப்பது இயற்கையின் சதியா ? இயற்கையின் ரசிப்பா ? ஒரே வகைப் பூக்களை, நாய்களை பல்வேறு நிறத்தில் பரிணமிக்கப்பட்டு அழகு காட்டுவதைப் போல் மனிதனின் நிறத்தை/ தோற்றத்தை ஒருவித ரசனைக்காக இயற்கை ஏற்படுத்திவிட்டு இருக்கலாம். ஆனால் இனத்தோற்றங்களை வைத்து மனிதர்கள் தான் உயர்வு, தாழ்வு மற்றும் ஆளுமை எண்ணங்களை ஆறாம் அறிவின் தொடர்பில் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் இடம் பெயரும் போது அங்கு ஒரு நாட்டை அமைத்துவிடுகிறார்கள், தங்களது பண்பாடுகளை அங்கு கொண்டு வந்துவிடுகிறார்கள், குறிப்பாக இடம் பெயர்ந்தால் பிறகு அங்கு திரும்பிச் செல்வதே இல்லை, அதனால் தான் சீன இனம் பல்வேறு நாடுகளில் நீண்டுள்ளது மேலும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஆளுமை சக்தியாக வளர்ந்துள்ளது. இடம் பெயரும் ஊரை சொந்த நாடாகவே மாற்றி அங்கேயே உழைத்து வாழ்பவர்கள் ஆசியாவில் சீனர்கள் தான். சிங்கப்பூரில் இந்தியர்களின் பெருமூச்சுகளில் ஒன்று 'நம்மால் பெரிய அளவில் சீனர்களுக்கு போட்டியாக வரமுடியவில்லை' என்பது தான், காரணம் கால் காசு சேர்த்தாலும் அதை இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு ரிடையர்மெண்ட் காலத்தில் அங்கு சென்று அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலோர் செயல்படுவது தான், ஒரு நிலையான அடித்தளத்தை சிங்கையிலோ பிற நாடுகளிலோ தமிழர்களாலும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது, இந்தியர்கள் சீனர்களை ஒப்பிட மிகச் சிலரே சென்ற நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறி இருக்கிறார்கள், சீனர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை, சென்று வசிக்கும் இடமே அவர்களது எதிர்கால தாய்நாடு.

19 பிப்ரவரி, 2010

பக்கத்து வீட்டு பாட்டி !

எங்க பக்கத்து வீட்டு சீனப் பாட்டி முந்தா நாள் இரவு 1:30 மணிக்கு போய் சேர்ந்து விட்டது. 87 வயது ஆன பாட்டி. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்தது, எப்போதாவது பார்க்கும் போது மலாய் மொழியில் எங்களுடன் பேச முயற்சிக்கும், இந்தியர்களுக்கு மலாய் நன்றாக தெரியும் என்று சீனப்பாட்டிகள் நினைப்பார்கள். எங்களுக்கு மலாய் தெரியாததால் நாங்க பேசுவதை கான்டனீசில் (சீன வட்டார மொழி வழக்கில் ஒன்று) மொழிப் பெயர்த்து அந்த பாட்டியிடம் சொல்லுவார்கள். சிரிப்பு முக மொழிகளுடன் மட்டும் தான் அந்த பாட்டியிடம் பேச முடியும்.அன்பாக எங்களைப் பற்றி கேட்டுக் கொள்கிறது என்று மட்டும் தான் பாட்டி சொல்ல வருவது விளங்கும்.

இங்கே சீனர்கள் வழக்கப்படி இறந்த உடலை கீழே குடியிருப்பின் அடித்தளத்தில் தற்காலிக பந்தல் அமைத்து வசதியைப் பொருத்து ஒரு சிலர் ஒருவார காலமும், சிலர் மூன்று நாட்கள் வரையிலும் வைத்திருக்கும் வழக்கம் உண்டு. உடல் வைத்திருக்கும் இடத்திற்கு நேர் மேலாக முதல் தளத்தின் படுக்கை அறை இருக்கும், முதல் தளத்தில் குடி இருப்பவகளுக்கு மன அளவில் சங்கடங்கள் உண்டு. இருந்தாலும் உடலை மூன்று நாள் வரை வைத்திருப்பது சீனர் வழக்கம் என்பதால் புரிந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு நான் குடியிருந்த வீடு கூட அப்படித்தான், கீழே தரைதளத்தில் உடல் பெட்டியில் கிடத்தப்பட்டு இருக்கும், முதல் தளத்தில் நான் தங்கி இருந்த வீட்டின் படுக்கை அறை இருந்தது. படுக்கும் போது நமக்கும் கீழே ஒரு பிணம் இருக்கிறது என்று நினைத்துப் பார்கும் போது தூக்கம் வருவது ஐயமும் அச்சமும் ஏற்படுத்துவதாக இருக்கும். நல்ல வேளை இப்போது இருக்கும் எங்கள் வீட்டின் நேர் கீழே மின் சார அறை இருப்பதால் அந்த பகுதி முழுவதும் இது போன்ற நிகழ்வுக்கு பயன்படுத்த வாய்பில்லை, தூங்கும் போது அச்சம் ஏற்படுவதில்லை.

இறந்த உடலில் ஒருவார காலம் வரை உயிர் தங்கி இருப்பதாக சீனர் நம்பிக்கை, அதனால் தான் ஒருவார காலத்திற்கு உடலை புதைக்கவோ, சிதைக்கு எடுத்துச் செல்லவோ மாட்டார்கள், நாள் தோறும் புத்த மத வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் நடக்கும், பெரிய வட்ட மேசைகளில் துக்கம் கேட்க வந்திருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் வெள்ளை நிற உடை, சிலர் கருப்பு நிற உடைகளில் உறவினர்கள் துக்கம் கேட்க வருவது வழக்கம். மற்றவர்களுக்கு உடை நிறக் கட்டுபாடு எதுவும் கிடையாது. வட்ட மேசையில் சுற்றிலும் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு தோல் நீக்காத வருத்த வேர்கடலை மற்றும் இனிப்பு சாக்லேட்டுகள், குளிர்பானங்கள் வழங்கப்படும், இந்திய வழக்கப்படி துக்கத்தின் போது தண்ணீர் தவிர வேறு எதையும் உண்பது கிடையாது, அரை நாள் ஒரு நாள் என்பதுடன் இந்திய துக்கம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு பக்கம் இறந்த உடலை போட்டு வைத்துக் கொண்டு மறுபக்கம் தின்று கொண்டிருப்பது அவர்களைப் பொருத்த அளவில் பெரியது இல்லை, அவர்களது பண்பாடு பழக்கவழக்கம் அப்படி இருக்கிறது என்பதால் அது தவறாக தெரியவில்லை. அந்த பகுதியின் ஒதுக்குபுறத்தில் ஒரு விளக்கு அல்லது வத்தியை எரியவிடுவார்களாம்.

உடலை பெட்டியில் வைத்திருப்பார்கள், அதைச் சுற்றி முன்பக்கம் தவிர்த்து சின்ன தடுப்பு போல் அமைத்து வைத்திருப்பார்கள், பெட்டியில் முகத்திற்கு நேராக கண்ணாடியால் அமைக்கப்பட்ட திறப்பு இருக்கும், அந்த தடுப்புக்கு முன் பக்கம் இறந்தவரின் கருப்பு வெள்ளைப் படம் ஒன்று இருக்கும். ஏழு நாள் வரை உடல் கெடாமல் இருக்க இறந்த உடனேயே பதப்படுத்துபவர்களால் உடலுக்கு தேவையான ரசாயனங்களை உடலுனுள் வைத்த உடன் உடல் பெட்டியில் வைக்கப்படுகிறது. அந்த பாட்டியின் முகத்தை பார்த்தேன், நன்றாக ஆழமாக தூக்கத்தில் இருப்பது போன்று இருந்தது. சீனர்களுக்கு அவர்களுடைய புத்தாண்டின் போது பெரியவர்களின் வாழ்துகள் மிக முதன்மையானது, அந்த பாட்டியின் மகனுக்கு துக்கம் இருந்தாலும், அவங்க அம்மா சீனப் புத்தாண்டு வரை இருந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள் என்பதை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

அரசு விதி முறைகளின் படி இடுகாட்டில் இறந்த உடலை புதைத்து வைக்க 17 ஆண்டுகள் மட்டுமே ஒப்புதல் வழங்குகிறார்கள், அதனால் பலர் எரிக்கும் முறைக்கு மாறி இருக்கிறார்கள். ஐந்தாண்டுக்கு முன்பு உருவாகப்பட்ட உட்லே எனப்படும் மிகப் பெரிய பூங்கா ஒன்று முன்பு கிறித்துவ இடுகாடு அமைந்த இடம், அங்கு இடுகாடு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அங்கு ஐந்தாண்டுகளாக ஒரு தொடர் வண்டி நிலையம் கூட உண்டு, ஆனால் அது இன்னமும் திறக்கப்படவில்லை. சீனர்களுக்கும் ஓர் ஆண்டு துக்கம், ஓர் ஆண்டுகளில் எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் இருக்காது, கருப்பு வெள்ளை ஆடைகளை அணிவார்கள், காலணி தவிர்த்து வேறு அழகு அணிகள் எதுவும் அணியமாட்டார்கள்.

சீனர்களின் நம்பிக்கை படி வயதானவர் இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ தான் அவர்களுக்கு என்று பிறந்த உண்மையான வாரிசு என்ற பெருமை இருக்குமாம். மற்றவர்கள் அவர்களுக்கு பிறந்திருந்தாலும் கடைசியில் கூடவே இருப்பவர்கள் மட்டுமே அவர்களின் மனதிற்கும் அன்பானவர்களாக கடவுள் காட்டும் வாரிசு என்று நம்புகிறார்கள். அப்படி இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ அந்த பெருமையை அடைகிறார்கள்.

சிங்கையில் வயதானவர்களைப் பார்த்துக் கொள்வது மிகக் கடினம், ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் முதியோர்களைப் பார்த்துக் கொள்ள வசதியானவர்கள் பணிப் பெண்ணை அமர்த்துகிறார்கள், மற்றவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள், எப்படி என்றாலும் அதை முதியவர்களும் புரிந்து கொள்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பாட்டியை பணிப் பெண் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். வரும் திங்கள் கிழமை தான் உடல் எரியூட்ட எடுத்துச் செல்லப்படுமாம்.

சீனர்களின் திருமணங்கள் ஆங்கில முறைப்படியே மோதிரம் அணிந்து, கேக் வெட்டி, சாம்பேயினுடன் நடந்தாலும், இறப்பு சடங்குகள் அவர்களது பண்பாட்டு வழக்கப்படி தான் நடக்கிறது. அன்றாட (சீன) உணவு மற்றும் இறப்பு சடங்குகளில் பண்பாடு காத்துவருகிறார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்