இளவரசனின் மரணச் செய்தி வருணாசிரமவாதிகளுக்கு சாதிகள் அழியாது என்று வயிற்றில் பால் வார்த்திருக்கும், சாதியம் என்பது மனித குல மேன்மைக்கு வேதங்கள் வழிவகுத்து காத்துவருபவை என்பதே வருணாசிரமவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. சாதியும் மதமும் சொந்த இனத்தையே கொன்று போடும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தான் நாம் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துவருகிறோம். குலத்தொழிலையும் அதைச் சார்ந்தவர்களையும் சேர்த்து சாதியமாக மாற்றிய பிறகே செய்யும் தொழிலால் இழிவு என்று மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர்.
திருவள்ளுவர் காலத்தில் செய்தொழிலை வைத்து திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....என்ற நிலையில் இருந்தவை ஒவ்வையார் காலத்தில் 'சாதி இரண்டொழிய......' என்ற சாதிய நடைமுறைக்குள் தமிழகம் வந்துவிட்டு இருந்ததை குறிப்பிடுவனயாகும், இன்றைய தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஒருகாலத்தில் புத்த மதத்தைப் பின்பற்றியவராக இருந்தனர், புத்தமதம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, அவர்களது வழிபாட்டு சின்னங்களை அழித்து, வரலாறுகளை அழித்து, தம்முடைய வரலாறு என்ன என்பதையே அவர்கள் அறியாவண்ணம் நூற்றாண்டு காலங்களும் அவற்றின் சுவடுகளை அழிக்க, இந்த மண்ணில் பிறந்து, மண்ணிற்கு சொந்தமானவர்களையே தாழ்த்தி பார்த்து, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் அவலம், பாரத திருநாட்டைத் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடுஞ்செயல்.
மனித உடம்பில் சாதிய உறுப்பு என்று ஒன்று இல்லாமலேயே 1000 ஆண்டுகளாக அவை மரபு ரீதியாக கடத்தப்பட்டு அதன் பலனை(?) இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது ? நினைத்துப் பார்த்தால் குல தெய்வ வழிபாடு, பரம்பரை பெருமை (அதுவும் சிலருக்கு தான்), திருமண உறவு இதைத் தாண்டி எதுவுமே இல்லை, வீட்டை விட்டு வெளியே வந்தால் பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் சாதியின் பலன் என்று எதுவும் தனித்து இருப்பதாகத் தெரியவில்லை.
இன்றைய சாதியம் என்பவை ஓட்டு வங்கி என்ற நிலையை அடைந்திருக்கிறதன்றி, அந்தந்த சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான், எத்தனையோ சாதியத் தலைவர்கள் கல்லூரிகள் துவங்கி இருக்கிறார்கள், அந்தந்த சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்களா ?
*********
மாநகரங்கள் தவிர்த்து தமிழக நகரங்கள், கிராமங்கள் இன்னும் சாதி பற்று நீங்காமல் தான் இருக்கின்றன, காரணம் சாதிக்கான தனித் தனி தெருக்கள் இன்னமும் உண்டு. நகரங்களில் / மாவட்ட தலைநகரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைத் சார்ந்த ஆணை மாற்று சாதி பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால், வெட்டிப் போடுவது, தற்கொலை நாடகம், இருதரப்புகள் அடித்துக் கொள்ளுதல் இவையெல்லாம் இருக்காது, அதற்கு பதிலாக பெண்ணின் பெற்றோர் பெண்ணை தலை முழுகிவிடுவார்கள், பெண்ணின் பெற்றோர் சார்ப்பு உறவினர்கள் கூட யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள், பெண்ணுடைய அப்பா / அம்மா இறந்தாலும் அவளால் வீட்டு வாசலை மிதிக்க முடியாது, கூடப் பிறந்தவர்களே 'பரப்பய கூட ஓடிப் போனவளுக்கு உறவு என்ன வேண்டிக்கிடக்கிறது...........?' என்று தூற்றி விரட்டிவிடுவார்கள். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை, இவை எல்லோருக்கும் தெரிந்தவை தான்.
எங்கள் சொந்ததிலேயே அதுபோன்று தலை முழுகப்பட்ட பெண்கள் உண்டு, இதை எழுத எனக்கு கூசுகிறது, இதுபற்றி நானும் உறவுக்காரர்களிடம் பலமுறை பேசியும், யாரும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் அல்லாத சமூகம் சார்ந்த கலப்பு திருமணங்கள் எங்கள் உறவுக்காரர்களிடம் மிகுதி. வீட்டில் உள்ள மாடுகளை மேய்க்க, அவற்றை குளிப்பாட்ட, பால் கரக்க, வயலில் வேலை செய்ய எல்லாவற்றிற்கும் பறையன் / பள்ளன் ஆகுமாம், ஆனால் சம்பந்தி என்கிற வட்டத்திற்குள் கொண்டு வந்தால் ஊரு ஒலகம் தூற்றும் என்று அச்சப்படுவார்கள். பேருந்தில் சென்று வந்தால் உடனே குளிப்பவர்கள் கூட உண்டு, ஏனென்றால் அதில் கண்ட சாதிக்காரனும் ஏறி இருப்பான், கூட்டத்தில் அவர்களையெல்லாம் ஒருவேளை தொட நேரிட்டிருக்கலாம் என்பார்கள்.
கிரமங்களில் சாதிய மோதல் என்பவை எந்த சாதிக்காரகள் மிகுதியாக வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே, தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக வசிக்கும் இடத்தில் மற்ற சாதியினர் வசிக்கமாட்டார்கள், அடுத்த அடுத்த கிராமத்தில் வேறொரு சாதிக்காரகள் வசிப்பார்கள், இந்த பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து யாரும் செயல்படுவதில்லை, இளம் பெண்களைப் பொருத்த அளவில் தன்னை நேசிப்பவர் மீது உடனேயே காதல் வயப்படுவது எங்கேயும் நடைபெருவதே, இன்றைய காலத்தில் பொருளாதரமும் கல்வித் தகுதியும் பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் இருந்து கொஞ்சம் மட்டுப்படுத்தியுள்ளது, மற்றபடி ஒரு ஆண் தன்னை நேசிக்கிறான் என்று தெரியும் பொழுது ஒரு பெண் அவன் எந்த சாதியைச் சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள், இந்தவிதத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் எந்த சமூகம் அமைப்பும் அடிக்கடி தோல்வியையே சந்திக்கின்றன, எத்தனை ஆண்கள் தன்னை விட தாழ்ந்த சமூத்தில் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? கிராமங்களில் தாழ்த்தப்பட்ட கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் கொலை / தற்கொலையில் தான் முடியும்.
ஒரு ஆணுக்கு தான் தன்னுடைய காதல் கைகூடுமா ? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும், இளவரசன் செய்தது தவறு, சாதித் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளைய கிராமத்தில் இருந்து கொண்டு காதல், ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் சென்று மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இளவரசனின் மரணம் மிகவும் வருத்தமான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, சாதிகள் ஒழியும் என்று எந்த நம்பிக்கையும் அது ஏற்படுத்தவில்லை.
தாழ்த்தப்பட்டவரை கலப்பு திருமணம் - திரைப்படத்தில் கூட காட்ட முடியாத அவல நிலை தான் தமிழகத்தில் உள்ள நிலை, சேரன் எடுத்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒரு முயற்சி எடுத்து அதிலும் காதலர்களைக் கொன்றுவிடுவார். தாழ்த்தப்பட்டவர்களை யாரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதில்லையா ? இருக்கிறார்கள் அவையெல்லாம் சென்னை போன்ற மாநகரங்களில் உண்டு, சிறு நகரங்களில் ஒதுக்கி வைக்கப்படுவது, கிராமங்களில் கொலை செய்யப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது.
திவ்யாவின் அப்பங்காரன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ? என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.
திவ்யாவின் அப்பங்காரன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ? என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.
*************
தமிழினக்காக முத்துக்குமார் உள்ளிட்டோர் பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு தீயில் கருகினார்கள், அவர்களின் தியாகம் பேசப்படுகிறது, அவர்களை ஒப்பிட இளவரசனின் தற்கொலை / கொலை மரணம், திவ்யாவின் தந்தை தற்கொலை ஆகியவை ஒரு கிராமத்தில் நடந்த சாதி வெறியின் ஊடகக் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தவிர்த்து, மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை என்பது எனது சொந்தக் கருத்து, இவை தமிழக கிராமங்களில் எங்கும் எப்போதும் நடைபெறுவையே, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்காக அவை ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளன.


