பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2010

கலவை 31 / மார்ச் / 2010 !

தாந்திரிகம் : ஒருவழியாக நித்தி ஆசிரம தலைமை பதவியை துறந்திருக்கிறார். முற்றும் துறந்தவருக்கு ஒட்டிக் கொண்டு இருந்தது அந்த பதவியோ (!). கிடக்கிறவ கிடக்கா கிழவியை தூக்கி மனையில் வை, என்பதற்கு ஏற்ப நித்தியின் காம விளையாட்டுகளை 'தாந்திரிக யோக பயிற்சி முறை' என்று வகைப்படுத்தி இருக்கிறது ஒரு (தமிழ்) இந்து இணையத்தளம். கேட்கிறவன் கேணையனாக இருந்தால்.... கேபிள் ஷங்கர் எடுக்கப் போகும் படத்தின் நாயகி கேஆர்விஜயா தான் என்பார்கள் போல. அதுவே யோகப் பயிற்சி என்றால் திருமணம் ஆனவர்கள் செய்வதெல்லாம் தியானப் பயிற்சியா ? பிறகு எதைத்தான் இவர்கள் பிரம்மச் சாரியம் என்று நித்தி மடத்தினர் விற்றார்கள் என்று தெரியவில்லை. நித்தியின் குசுவிற்கும் குணப்படுத்தும் சக்தி இருந்தது உண்மை தான் என்று எழுதிய எழுத்தாளர், ரிப்போர்டர் கட்டுரை ஒவ்வொன்றிலும் 'நான் அப்போதே சந்தேகப்பட்டேன்' என்பதாக நடந்த ஒவ்வொரு நிகழ்வைப் பற்றி எழுதும் போது தன் தீர்க்க தரிசனத்தை இடைச் சொருகிறார். அப்படி என்றால் இந்தாளு ஏன் நித்தி மாட்டும் வரை அவனுக்கு கொள்கை பரப்பு செயலாளாராக இருந்தார் ? லெனின் கருப்பன் கூடவே இருந்து காட்டிக் கொடுத்தான் என்றால் இந்த ஆளை எதில் சேர்ப்பது ? எட்டைய புரக்காரர்கள் பதில் தெரிந்தால் கூறுங்கள்.

கிரிக்கெட் பார்க்க அனுமதிக்காததால் வீட்டை விட்டு ஓடத் துணியும் மாணவர்கள் : சென்னையில் ஒரு எப் எம் வானொலியில் விளம்பரமாக 'என்னை கிரிக்கெட் பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு ஓடிவிடுவேன்' என்று சொல்வதாக ஐபிஎல்லுக்கு விளம்பரம் செய்கிறார்கள். கேட்கும் போதே எரிச்சலாக இருக்கிறது, இவனுங்களையெல்லாம் யார் தடுப்பது என்று குறை பட்டுக் கொண்டார் ஒரு நண்பர். கொடுமை தானே. சூப்பர் மேன் விளம்பரத்தைப் பார்த்து ஒரு சிறுவன் தானும் பறக்க முடியும் என்று நினைத்து மாடியில் இருந்து குதித்து இறந்து போனான் என்பது பலருக்கும் நினைவு இருக்கும். தேர்வு நேரத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதுமில்லாமல் பிஞ்சு மனதில் நஞ்சு வைக்கும் இது போன்ற விளம்பரங்கள்........கண்டிக்கப்பட வேண்டும்

கடவுள் துகள் ஆராய்ச்சி : வெற்றிபெற்றது என்று ஒரு தகவல் படித்தேன். அதன் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. ஆப்ரேசன் சக்ஸஸ் பட் பேசண்ட் டெட்.. என்று வருமா என்று தெரியவில்லை. பெருவெடிப்பு என்பது நிகழ்ந்திருக்க முடியும் என்பது ஊகமே.....அதை நிருபனம் செய்ய முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சின் முயற்சி, அதற்கான செலவுகளால் பல ஏழை நாடுகளின் பசிகளை ஆண்டுக்கணக்கில் போக்கி இருக்க முடியும். இப்போது மதவாதிகளின் கவலையே ஆராய்ச்சி முடிவுகள் பொய்யாகிப் போனால் மாற்றிக் கொள்ள காரணங்கள் தேவைப்படும் என்பதே. மதவாதிகள் சலிக்காமல் அறிவியலுடன் ஒன்று பட நினைப்பது பாராட்டப்பட வேண்டியது. இன்னுமா உலகம் இவர்களையெல்லாம் நம்புது என்பதே மதவாதிகளின் பலம்.

இடைத் தேர்தல் : ஆளும் கட்சி வெற்றிபெருவதென்பது எழுதாதவிதி. காரணம் அரசு இயந்திரம் முழுமையாக ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் தான் இருக்கும், இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு மகிழ்ச்சியே அளிக்கிறது. வன்னிய சாதிப் பெரும்பாண்மையினால் ஒரு சட்டமன்ற தொகுதியை வெல்ல முடியும் என்கிற சாதி சார்ந்த, கட்டுமான நம்பிக்கைகள் உடைய வேண்டும் என்பதே விருப்பம். இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடை பெறும் வேளையில் அந்த இடைத் தேர்தல் தொகுதி மக்களுக்கு மட்டும் அதிஷ்ட தேவதை பண மழை பெய்திருக்கிறாள் என்பது தவிர்த்து இந்த தேர்தலால் என்ன நன்மையும் ஏற்படப் போவதில்லை


போலி மருந்து பிதா மகன்கள் : பிடிபட்டவன் / சரணடைந்தவன் குங்குமப் பொட்டுடன் சிரித்துக் கொண்டே வருகிறான். (எவனோ இன்னமும் சொல்கிறான்...கடவுள் நம்பிக்கை உள்ளவன் குற்றம் செய்ய அச்சப்படுவானாம்!)அரசியல் கைதிகள் போராட்டத்தின் போது தான் இவ்வாறு சிரித்துக் கொண்டே வருவார்கள். இப்போதெல்லாம் லஞ்சம் ஊழல், பொது சொத்தை கொள்ளை கொண்டவன் முதல் அனைத்து கயவாளிகளும் குற்றம் செய்திருக்கிறோம் அல்லது குறைந்த அளவாக குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறோம் என்கிற சிறு உறுத்தல் கூட முகத்தில் இல்லாதபடி சிரித்துக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது, அவர்கள் இந்திய அரசு சட்டங்களையும், நீதிகளையும் பார்த்து ஏளனம் செய்வது போலவே புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் காவல் விசாரணை, பிறகு பிணைய விடுப்பு, அப்பறம் கேஸ்....அதிலும் தண்டனை என்றால் மேல் நீதிமன்றத்தால் விடுதலை முடியும், இதற்கு இடையே எனக்கு தமிழ் தெரியாது, பெங்காலியில் மொழி பெயர்த்து தாருங்கள் என்பது போன்ற இழுத்தடிப்புகள் இன்னும் எவ்வளவோ இருக்கே......அதுக்குள்ள வயதும் 80 ஆகி இயற்கை மரணம் அடையாமல் போய்விடுவார்களா என்ன ? எல்லாம் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை தான். மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வதற்கு பல வழிகள் இருப்பது போலவே மாட்டிக் கொண்டால் தண்டனை அடையாமல் இருக்க ஆயிரம் வழிகள் உண்டு. மனிதச் சட்டத்தில் நிருபனம் செய்ய இயலாத குற்றங்கள் முகமூடிக் கொள்ளைக்காரர்களாலும், ஏலியன்களாலும் செய்யப்படுபவை என்பதாக மறுவிசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது............யப்பா....மதுரை தினகரன்......இன்னும் என்னன்வோ நினைவுக்கு வருது..........பெருமூச்சு தவிர்த்து வேறென்ன வரும்.

30 மார்ச், 2010

அங்காடித் தெரு - திரைபார்வை !

ஸ்டார் வேல்யூ, டைரக்டர் வேல்யூ என்ற பிரிவாக திரைப்படங்கள் பார்க்கப்படுவதும் விமர்சனம் செய்வதும் நடைமுறை, இந்த வகையில் ஒரே படத்திற்கு பல்வேறு பதிவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வரும். செல்வராகவன், கவுதம் மேனன் படங்களுக்கு மிகுதியான விமர்சனங்கள் வந்தது. அங்காடித் தெரு பற்றி கேபிள் சங்கர் பதிவைப் படித்ததும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். மற்றப் படங்களின் விமர்சனங்களை விட இந்தப் படம் பற்றி எழுதும் போது 'இவருமா ?' என்று சிலருக்கு சலிப்பு ஏற்படுத்தினாலும், மேலும் பார்க்காத ஒருவர் படம் பார்க்க விரும்புவார் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

விளிம்பு நிலைக்கும் நடுத்தரவர்கத்திற்கும் இடைப்பட்ட மக்களின் வாழ்க்கையின் போக்குகள் பற்றி நன்றாக சொல்லி இருக்கிறார்கள். ஐந்து மாடி ஜவுளிக்கடைகளின் கிழிந்த பக்கங்கள் படத்தில் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. கூலித் தொழிலாளிகளுக்கு முடிந்த அளவில் பிடித்தம் செய்து ஊதியம் வழங்கிவிட்டு கோடிகளில் லாபம் பெரும் நிறுவனங்கள் உபரிப் பணத்தை (விளம்பர) நடிகைகளின் படுக்கை அறையில் நிறைத்துவிடுகிறார்கள் என்பது நாம் அறிந்த தகவல் தான்.

கொத்தடிமை முறை தற்போது இல்லை என நினைக்கிறோம், ஆனால் அது வேறொரு வடிவமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் போதும், உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று ஒருசிலரை அடையாளம் காட்டி தன் முனைப்பு கட்டுரையாக எழுதுவதையெல்லாம் படித்த பிறகு, தான் கஷ்டப்பட்டு வந்ததை உணர்ந்த ஒருவன் அதே போல் கஷ்டப்படுபவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் முடிந்த அளவுக்கு அவர்களை பிழிந்தே, சுரண்டியே தான் மேலும் மேலும் வளர்கிறான் என்பது மென்று விழுங்கக் கூடிய உண்மையாக இருக்கிறது.

ஒருமுறை அசோக் நகர் சரவண பவனுக்குச் சென்றேன். அங்கு சப்ளையராக பல சிறுவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு 18 வயதிற்கும் குறைவாக இருக்கலாம் என்று நினைத்து ஒருவனிடம் கேட்டேன். 'தம்பி உனக்கு என்ன வயது ?' கொஞ்சம் யோசித்துவிட்டு 18 என்றான். 18 என்று சொல்ல அவ்வளவு யோசனையா ? என்று நினைக்கும் போதே அவன் பொய்தான் சொல்கிறான் என்று விளங்கியது.

பல ஐந்து மாடிகள் அண்ணாச்சி கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் 15 - 18 வயதிற்குள் இருப்பவர்களே மிகுதி என்று நினைக்கிறேன். 18 வயதிற்கும் மேல் அவனுக்கு விவரம் தெரிந்துவிடும், இது போன்ற கடைகள் பிழிந்து எடுக்கிறார்கள் என்று கண்டிபாக உணர்ந்தே ஓடிவிடுவார்கள்.

சிறுவர்களுக்கு வேலை கொடுப்பது சட்டபடி குற்றம் என்றாலும் அவர்களின் வயதைக் கூட்டிச் சொல்லச் சொல்லி எப்படியோ வேலையில் வைத்துக் கொள்கிறார்கள். சிறுவர்கள் வேலைக்கு வருவது வெறும் வறுமை தான் காரணம் என்பதைவிட சிறுவயதில் பீடி சுற்றி, வெடி சுற்றி அவர்கள் காசுகளைப் பார்ப்பதால் பிறகு படிப்பதற்கு அவர்களால் இயலாமல் போய் பதினைந்து வயதிலேயே ஐந்து மாடிக் கடைகளின் விறிந்த வலையில் விழுந்துவிடுகிறார்கள்.

திரைப் படம் என்பது நம் கண் முன் நடக்கும் காட்சியின் பதிப்பு என்பதாக அமைந்திருக்கும் மற்றொரு படமாக அங்காடித் தெரு மனதில் நிறந்திருக்கிறது. இது வெற்றிப்படமா தோல்வி படமா என்பதைவிட இது போன்ற படங்களின் மூலம் நடப்புகளை தமிழ் திரை பதிவு செய்துள்ளது என்று எதிர்காலத்தில் நினைவு கூறத்தக்கப்படம் என்று தான் சொல்லுவேன்.

திருநெல்வேலி வட்டார மொழியில் கைதேர்ந்தவர் என்பதால் ஜெயமோகனின் பேச்சுரை படத்திற்கு சிறப்பாகவே பொருந்துகின்றன. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னனி இசை அவ்வளவு சிறப்பாக இல்லை.

வசந்தபாலன் மற்றொரு பாலா என்று தினமலரில் யாரோ ஒருவர் பின்னூட்டங்களில் குறிப்பிட்டு இருந்தார். எனக்கும் சரி என்றே தோன்றுகிறது.

வாழ்க்கைச் சூழலில் ஒன்றாக இருக்கும் நம்மில் ஒருவன் தான் நமக்கான படைப்பை உருவாக்க முடியும் என்பதை நிருபனம் செய்யும் மற்றும் ஒரு இயக்குனர் வசந்த பாலன்.

படத்தின் இயல்பான முடிவு, வாழ்ந்து காட்டுகிறேன் என்கிற நாயகனின் அறைகூவல்.....மற்ற படங்களில் என்றால் ஐந்து மாடி முதலாளிக்கு பதிலாக பத்து மாடிக்கு முதலாளியாக நாயகன் உயர்ந்ததாக காட்டுவார்கள். இங்கு அந்த வாழ்ந்து காட்டுதல் என்பது இவனிடம் வேலையை விட்டா வழியே இல்லையா ? இருக்கே...வேறொரு வேலை என்பதாக முடிகிறது. மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்வது என்பது மட்டுமே வாழ்க்கை என்று நம்ப வைக்கப்படும் திரைச் சூழலில் இயல்பாக தொடர்வதும் கூட வாழுதல் தான் என்று சொல்லப்படுகிறது. குள்ளமனிதன் - விலைமகள் மனைவி, கண் தெரியதா பெரியவரின் கடை, கட்டண கழிப்பிடம் நடத்தும் மற்றொரு வேலை அற்ற இளைஞன் என அதற்கேற்றபடியே கதையில் வரும் பிற பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலும் கூட காட்டப்படுகிறது. நம்பிக்கையும், பொருளியல் சமூக உயர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல....பிரச்சனைகளில் இருந்து, விபத்திலிருந்து மீண்டு(ம்) தொடர்வது கூட வாழ்க்கை தான் எனச் சொல்லும் படத்தின் தகவல் (மெசேஜ்) ரொம்ப புடிச்சிருக்கு.

துவக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிறைக் கூடம் போன்ற உணவுக் கூட மற்றும் இரவு நேரக் காட்சிகள் படத்தில் பிற்பகுதியில் வேறு மாதிரி இயல்பாக காட்டப்படும் போது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படுத்தாதது திரைக்கதையின் சிறு தொய்வு.

கலைப்படம், கருத்துப் படம், சிறப்பான வசனங்கள் என்ற அளவில் அங்காடித் தெரு பல்பொருள் அங்காடி.

29 மார்ச், 2010

கால் கழுவும் கலாச்சாரம் !

பண்பாடு என்ற அளவில் அன்றாட செயல்களில் சிலவற்றை நேரிடையாக சொல்வது நாகரீகமின்மையாக கருதப்பட்டு அவை மறை பொருளாகச் சொல்லப்படும், அதுவே இடக்கரடக்கல் என்னும் இலக்கணச் சொல், சளி சிந்துதல் என்று சொல்லாமல் மூக்கு சிந்துதல் என்பார்கள், குண்டி / சூத்து கழுவுதலை கால்கழுவுதல் என்பார்கள். இடக்கரடக்கல், குழூக்கூறி ஆகியவை மறை பொருளாகச் சொல்லப்படும் செயல் குறித்த சொற்களின் மறுவடிவம் அல்லது குறியீடு. இருந்தாலும் இங்கே கால் கழுவுவது என்றால் நான் இடக்கரடக்கலான குண்டி கழுவுவது பற்றிச் சொல்லவில்லை.

*****

ஒருவரின் இழிவுகளை சுமப்பதன் மூலம் நாம் அவரைப் போற்றுகிறோம் என்பது பண்பாடாம். இப்படித்தான் இராமன் என்னும் அண்ணனை உயர்வு படுத்த தம்பி பரதன் அவனது செருப்பை வைத்து நாடாண்டான் என்பது இராமாயணக் கதை. உன் கால் செருப்பு கூட எனக்கு உயர்வு தான் என்று சொல்வதாகப் பொருள். பிறரை எதை வைத்து 'செருப்பால் அடிப்பேன்' என்று கேவலப்படுத்துகிறோமோ, மற்றவருக்கு 'செருப்பாக இருப்பேன்' என்று உயர்வாகச் சொல்வது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் காலந்தோறும் இருந்தே வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் இது தேவையில்லாத உணர்ச்சி மிகுதலின் வெளிப்பாடுகள், ஒருவரின் காலில் விழுதலும் மற்றவரை காலை வாரிவிடுவதும் கிட்ட தட்ட ஒன்று தான். ஒன்றின் பெயர் பணிவாம் மற்றொன்று துணிவாம்.

திருமணச் சடங்கின் போது பெற்றோர்களுக்கு பாத பூசை செய்வது பார்பனிய வழி இந்து திருமண முறையில் ஒரு சடங்கு. பெற்றோர்களின் காலில் பூசை செய்வதை பிள்ளைகள் விரும்பியே செய்கின்றனர் என்றாலும் இது பெற்றோர்களுக்கு பேரனந்ததை தந்துவிடுமா ? அப்படியே என்றாலும் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு விதவை தாய்க்கும் அந்த தகுதி கொடுக்கப்படுவதில்லை. விதவை தாயின் மக்களின் திருமணத்தின் போது வேறொரு மூத்த பெரியப்பா, சித்தப்பா தம்பதிகளுக்கு அந்த பாத பூசை நடக்கும், அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்பார்கள். பாத பூசை என்பது பெற்றோர்களுக்கு மதிப்பதற்கு செய்யும் ஒரு சடங்கு என்றாலும் இரு பெற்றொரும் இருந்தால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

கால்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தவிர்த்து கால் உட்பட பிற(ர்) உடல் உறுப்புகளுக்களை ஒருவர் மதிக்க வேண்டியது இல்லை. ஒருவரின் மீதான மரியாதை என்பது அவருடைய முழுவுருவத்திற்கும் அன்றி தனித்தனியாக கால், கை, தலை முதலியவற்றிற்கானது அல்ல. சாமியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் புனித பிம்பங்கள் முற்றையும் துறந்ததாகச் சொல்லிக் கொண்டு பக்தர்கள் கால் கழுவி, பாத பூசை செய்யச் சொல்வதைவிட சக மனிதனை இழிவு படித்தும் நிகழ்வு எதுவும் இல்லை. அப்படியே செய்ய அது என்ன கழிவரைக்கே செல்லாத காலா என்ன ? இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும். மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? இது போன்ற இழிவுகளையும் ஒரு மனிதன் தன்னைத் தாழ்த்திக் செய்வதையெல்லாம் இறைப் பணி என்று உளறவும் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனம் உவந்து செய்யும் இந்த செயல்களையெல்லாம் கூட வயது வந்த பெற்றொர்களுக்கு பிள்ளைகள் செய்யாமல் வேலைக்காரர்களை வைத்து செய்யும் நிலையில் ஒரு சாமியாரின் கழிவுகளுக்கான பணிவிடைகளில் என்ன புனித தன்மை இருந்துவிடப் போகிறது.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளும் சாமியார்கள், சாமியாரிணிகள் பலரும் பக்தர்கள் பாத பூசை செய்வதை அனுமதிப்பதும் இல்லாமல் அதற்கு கட்டணம் வேறு வைத்து வசூலிக்கிறார்கள். இந்த நாற்றம் பிடித்த சாமியார்களின் செயல்களை இந்து மத இடிதாங்கிகள் கண்டித்ததே இல்லை. பாத பூசை செய்வதில் பக்தனுக்கு பலன் உண்டு என்றால் அதே சாமியார்களுக்கு குண்டி கழுவி விடுவது பன்மடங்கு பலன் தரும் என்று சொல்லிவிட முடியுமா ? அந்த அளவுக்கு இன்னும் செல்லாதது ஓரளவு ஆறுதலே அளிக்கிறது, அதுவும் ஒரு புனித சேவை என்று எதோ ஒரு பக்தி இலக்கியத்தில் கோடிட்டு இருந்தால் சாமியார்களுக்கு குண்டி கழிவி விட டெண்டர் விட்டு வசூல் நடத்தினாலும் நடத்திவிடுவார்கள்.

*****

சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவருமே நம்மைப் போல் எலும்பும் சதையும், கழிவு உறுப்புகளும் உள்ள மனிதர்கள் தாம், அவர்கள் உடலில் இருந்து வியர்வை, சீழ், மலம், சிறுநீர், விந்து, கண்ணீர் ஆகிய அனைத்து கழிவுகளும் வெளியேறும். இன்னும் சொல்லப் போனால் நம்மைப் போலவே பெற்றோர்களின் உடல் உறவின் மூலம், கழிவு உறுப்பின் வழியாக பிறந்தவர்கள் தான் அனைத்து மத சாமியார்கள் மற்றும் மத போதகர்கள் அனைவருமே. அவர்களது தனித்தன்மை என்பது அவர்கள் நடவடிக்கை மட்டுமே அன்றி உடல் அல்ல. சாமியார்களுக்கு கால்கழுவுதல், இலை போடுதல் போன்றவற்றிற்கு பதிலாக முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது.






எந்த ஒரு சாமியார் பாத பூசையால் மகிழ்கிறானோ, அவ்வாறு செய்ய அனுமதிக்கிறானோ, பணிவிக்கிறானோ அவன் போலி சாமியாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் மக்களை இழிவு படுத்திப் பார்பவன் ஒரு உண்மையான துறவியாக இருப்பதற்கு வாய்பே இல்லை. தன்னை அவதாரம் மற்றும் கடவுள் என்று விளம்பரம் செய்ய இவ்வாறு செய்கிறார்கள்.

26 மார்ச், 2010

இவர்களுக்கு ஏன் துணிவு, துப்பு இல்லை !

தன்னாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்ததற்காக அமெரிக்க இருநாடுகளின் ஆட்சியாளர்களை அழித்தது மற்றும் அந்நாட்டை அரசியல் ரீதியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனை எதிர்த்தவர்களுக்கு அமெரிக்கா கூரிய சமாதானம், 'எங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமையை வேறு யாரும் முடிவு செய்துவிட முடியாது, பாதிக்கப்பட்ட நாங்கள் எந்த நடவெடிக்கையும் எடுப்போம், இதை யாரும் தடுப்பதற்கு அருகதை இல்லை என்ற ரேஞ்சில் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு விளக்கம் கொடுத்தது, இதற்கு அமெரிக்காவால் இயக்கப்படும் ஐநாவும் உடந்தை அல்லது பேசா மடமையாக நடந்து கொண்டது.

*******

இந்தியாவிலும் இதே சூழல் தான், பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் முகாம்களில் இருந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் அவ்வப்போது பாராளுமன்ற தக்குதல், மும்பை தாக்குதல், தொடர் வெடிகுண்டுகள் என அனைத்து நிகழ்வுகளும் முன்றாண்டு இடைவெளிக்கும் ஒன்றோ அல்லது சில முறையேனும் நிகழ்ந்துவிடுகிறது. அமெரிக்காவிற்கு பிர நாட்டின் மீது போர் தொடுக்க என்ன என்ன காரணம் இருந்ததோ அதைவிட கூடுதலாகவே இந்தியாவிற்கு இருக்கிறது.

இதை ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு பார்த்தாலும் 'ஒலக தீவிரவாதத்தை ஒட்டுமொத்தமாக வேரறுபோம்...!' என வெற்று கோஷமிடும் அமெரிக்கா - பிரட்டனுக்கு பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குவதே தெரியாதா என்ன ? பின்லேடனைத் தேடுகிறோம் என்பதாக பாகிஸ்தான் ஆப்கான் நாடுகளை இன்ஞ் பை இன்ஞ் ஆக சாட்டிலைட் உதவியுடன் சல்லடை போடும் அமெரிக்காவிற்கு ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம்கள் இருப்பது தெரியாதா என்ன ?

தெரிந்தும், தான் பாதிக்கப்படாதவரையில் தான் அதில் தலையிடக் கூடாது என்று நினைப்பதைவிட பாகிஸ்தான் - இந்திய அரசியல் உறவுகளுக்குள் எப்போதும் பதட்டம் நிலவினால் தான் அவர்கள் தன்னிடமிருந்து ஆயுதம் வாங்குவார்கள் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்க வேண்டும். எனவே இது குறித்து அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இந்தியாவிற்கு எந்த விதத்திலும் உதவுவார்கள் என்று நினைப்பதைவிட அவர்கள் அம்முகாம்களுக்கு மறைமுக உதவி செய்யக் கூடாது என்பதே இந்தியாவின் அவர்களிடையே ஆன வேண்டுதலாக இருக்க முடியுமே தவிர்த்து, அவர்கள் முகாம்களை அழிக்க உதவுவார்கள் என்பது வெறும் மனப்பால் குடிக்கும் முயற்சியே.

தீவிரவாதிகளிடம் எப்போதும் பேரம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும், தன் நாட்டைத் தாக்காதே பிற நாட்டை அல்லது நான் சொல்லும் நாட்டை தாக்கு என்பதே அந்த பேரம் இதற்கு எல்லா விதத்தில் பல்வேறு நாடுகள் அவர்களுக்கு தொடர்ந்து உதவுவதால் தான் அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. இதெல்லாம் (பாதிக்கப்படும்) நாடுகளுக்கு தெரியாதது இல்லை. இருந்தாலும் மக்களை ஏமாற்ற நாங்கள் தீவிரவாதிகளை தீவிரமாக எதிர்க்கிறோம் என்று கோஷம் இடுவார்கள். இதே போன்று வெற்று கோஷமும் புளுகும் தான், 'பைட் அகய்ன்ஸ்ட் டெரரிசம்' என்கிற அமெரிக்காவின் வெற்று கோசமும். வெறும் ஏமாற்றுகள். அவர்களது தீர்மானம் உண்மையாக உணர்வுடன் எடுக்கப்பட்டது என்றால் இன்னேரம் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் எந்த ஒரு தீவிரவாத பயிற்சி இயக்கமோ, தீவிரவாதிகளோ இருந்துவிட முடியாது.

ஆனால் அமெரிக்க இரட்டை கட்டிட தாக்குதலுக்கு பிறகு இந்தியா ஆதாரபூர்வமாக பாகிஸ்தானில் தீவிரவாத முகாம் இயங்குவது பற்றி வீடியோக்களுடன் கொடுத்த தகவல்களின் படிதான் அமெரிக்காவின் பார்வை ஆப்கான் பக்கம் திரும்பி அங்கிருந்த தலிபான்களை விரட்டி அடித்துவிட்டு பின்லேடனை இன்னும் தேடிவருவதாகச் சொல்லுகிறார்கள்.

நேற்று பிரிட்டன் சென்றிருந்த ப.சிதம்பரம்..... "பாக்., பயங்கரவாத முகாம்களை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன் உதவ கோரிக்கை " - விடுத்துள்ளார். இதைப் படித்துவிட்டு......பிற நாட்டின் போர் தொடுக்க அமெரிக்காவிற்கு இருக்கும் அதே காரணம் ஏன் இந்தியாவிற்கு இல்லை ? என்று நினைத்தால் ப.சி யின் கோரிக்கை வெறுப்பையும், ஏமாற்றத்தையுமே வரவழைக்கிறது. ஒரு (திருடன்... இன்னொரு) திருடனிடம் சென்று மற்றொரு திருடனைக் காட்டிக் கொடுக்கச் சொன்னால் எதுவும் நடக்குமா ?

ஏன் தான் இவனுங்க எல்லோருக்கும் நன்கு தெரிந்த தீவிரவாத முகாம் இருக்கும் இடங்கள் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்காமல் வெறும் ஒத்திகையும், நாடகமுமாக மக்களிடம் நடித்துக்காட்டுகிறார்களோ !

இந்தியாவிற்கு அமெரிக்காவைப் போல் துணிவும் இல்லை துப்பும் இல்லை. இது காங்கிரசு அரசாக இருந்தாலும் சரி, அதற்கு முன்பு இருந்த இந்து அரசியல் நடத்திய பிஜெபி அரசாக இருந்தாலும் சரி...இவை பற்றிப் பேசுவது வெறும் கண் துடைப்பு மட்டுமே.......அதையும் யாருக்காக செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இன்ஷா அல்லா....!

24 மார்ச், 2010

திருமணத்துக்கு முன் பாலுறவு - குஷ்பு கருத்துக்கு தீர்ப்பு வந்தாச்சு !

திருமணத்திற்கு முன்பான வயதுவந்தவரிடையேயான பாலியல் உறவு குறித்து குஷ்பு சொன்னக் கருத்துகள் சர்சையை ஏற்படுத்தியதும், அவருக்கெதிரான பொது நல வழக்கு தொடர்ந்ததும், அதை அவர் தள்ளுபடி செய்யக் கோரிய மனு கீழ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, பின்னர் மேல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில்,

"தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. குஷ்பு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தனது தனிப்பட்ட சொந்த கருத்துக்கள். எந்தவகையில் அது கலாசாரத்தை சீரழிப்பதாக கருதமுடியும்? எத்தனை வீடுகள் இந்த பேட்டியால் பாதிக்கப்பட்டுள்ளன? இவ்வாறு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்."

- என்பதாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுகிறது.

*****

பிரச்சனை வயது வந்தவர்கள் திருமணம் ஆகுமுன் பாலியல் உறவு கொள்ளலாமா இல்லையா என்பதைப் பற்றியது அல்ல, அதை ஊக்குவிக்கலாமா என்பது பற்றியே. குஷ்பு சொன்னது பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதன் மூலம் பாலியல் நோய்களையும், வேண்டாத கற்பத்தையும் தடுக்கலாம் என்பது தான்.

பாலியல் வேட்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆனால் திருமணம் இல்லாமல் தீர்த்துக் கொள்ளப்படுவதில் பாதிக்கப்படுவது எப்போதும் பெண் தான். ஆசைக்காட்டி மோசம் என்பார்கள் பெண்களுக்கு அப்படியான பாதிப்புகள் உண்டு. தான் சுவைத்தது போதாது என்பதுடன் மட்டுமில்லாமல் தொடர் இச்சைக்கு ஆளாகாத பெண்களை ஊருக்கும் காட்டிக் கொடுப்பது தவறான ஆண்களின் தவறான நடைமுறையாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது குஷ்பு சொன்ன 'பாதுகாப்பு' சாதனம் குறித்த எச்சரிக்கை தேவையே என்றாலும்.
என்னதான் பாதுகாப்புடன் உறவு கொண்டாலும் ஏமாற்றும் மனநிலையில் இருப்பவன் அந்தப் பெண்ணை விளம்பரப்படுத்திவிடுவான். தேவையற்ற கற்பம் என்கிற பெரிய பாதிப்பில் இருந்து 'லோலாயி' என்கிற சிறிய பாதிப்புடன் பெண் மீண்டுவிடுவாள் என்பது குஷ்புவின் நம்பிக்கை என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் எதற்கும் துணிந்தவளாக ஒரு பெண் பெற்றோர் சம்மதம் எதுவுமின்றி ஒரு ஆணை திருமணத்திற்கு முன்பே நாடினாள் அவனை எதிர்கொள்ளும் பக்குவம் அவளுக்கு இருந்தே ஆகவேண்டும் என்பதாகத்தான் சமூகம் கருதுகிறது என்று நினைக்கிறேன். அப்படித் துணிந்தவளுக்கு கற்பத்தைக் கலைத்துக் கொள்ள காலம் எடுக்காது என்பதும் உண்மையே. உண்மையான காதல் என்று டயாலாக் பேசி வேண்டாத வாரிசை வயிற்றில் சுமப்பவர்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும். 'ஏண்டி அவனிடம் போனது தான் போனே.......பாதுகாப்பாக இருந்து கொள்ளக் கூடாதா ?' என்று கேட்டு பெண்ணை அரவணைத்துக் கொள்ளும் பெற்றோர்கள் நாட்டில் இருந்தால் குஷ்பு சொல்வது சரியாகக் கூட இருக்கும், அல்லது குஷ்பு சொல்வது தேவையற்றதாகக் கூட இருக்கும்.

மேல் தட்டு மக்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் திருமணத்திற்கு முன்பான உடலுறவுகள் பொதுவானது என்றாலும் அனைவரிடத்திலும் அந்த பழக்கம் இல்லை, அப்படியாக இருப்பவர்களுக்கு குஷ்புவின் யோசனை பயனும் அளிக்காது, அதையெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தது மற்றும் அதிலிருந்து மீளவும் தெரிந்திருப்பார்கள். நான் மேல் தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் பண்பாடு அற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, ஆனாலும் நடுத்தர வசதி பெரும்பான்மையினரைப் போன்று மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே சொல்லவருவது.

திருமணத்திற்கு முன்பு பாலியல் வேண்டுமா வேண்டாமா என்பதில் முடிந்த அளவுக்கு திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர்களிடத்தில் நம்பிக்கை வைத்து நல்வாழ்க்கை அமையும் என நினைக்கும் பெண்கள் இதில் சோதனை அளவுக்குக் கூட ஈடுபடக்கூடாது, பண்பாட்டிற்கும் நல்லது அல்ல என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம். ஆனால் குஷ்புவின் கருத்து அதை ஊக்கப்படுத்துவது போல் அமைந்தது என்பதாக எல்லோரும் புரிந்து கொண்டார்களா ? அல்லது குஷ்புவே அப்படித்தான் சொன்னாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

திருமணம் என்கிற அமைப்பு சமூகத்தில் இருக்கிறது, அதற்கு மையமாக இருப்பது பாலியல் உறவு, திருமணத்திற்குள் செல்லமாட்டேன் எனக்கு நம்பிக்கை இல்லை என்பவர்கள் எப்படியான உறவு வைத்திருந்தாலும் அது தவறு என்று யாருமே கூறிவிட முடியாது, ஆனால் பிரச்சனையின் மையம் 'திருமணம்' என்ற சொல்லையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு வருவது தான்.

திருமணத்திற்கு முன்பான மற்றும் பின்பான பிறநபர்களுடன் ஆன பாலியல் உறவு நம்பிக்கைத் தூரோகமே, உடல் மற்றும் மன ரீதியாக ஆண்கள், திருமணத்திற்கு முன்பான உறவுகள் தெரிந்தாலும் சமூகத்தால் மன்னிக்கப்படுகிறார்கள். பெண்ணையும் அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் சமூகத்தில் ஏற்படாத போது, இதில் பாதுகாப்பு சாதனம் என்பது அதன் பக்கவிளைவுகளை மட்டும் தான் காக்கும். நம்பிக்கை துரோகம் பரவாயில்லை என்போர்களுக்கு பாதுகாப்பு சாதனம் இருப்பதும் இல்லாததும் வெறும் உடல் நலம் தொடர்புடைய பிரச்சனை மட்டுமே.

ஐரோப்பியர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் ஆனால் ஐரோப்பிய ஆண்கள் எத்தனை முறை விவாகரத்து ஆகி இருந்தாலும், அவள் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவு கொண்டவள் என்று தெரிந்திருந்தாலும், நீலப்பட நாயகி என்றாலும் அந்த பெண்ணைப் பிடித்து இருந்தால் மணந்து கொள்வார்கள். நாம் ? நாம் ஏன் ஐரோப்பிய பண்பாட்டை பின்பற்றி நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ?

குஷ்பு சொல்வதைக் கேட்டு எந்த ஒரு பெற்றோரும் தங்கள் வயது வந்த மகள் அல்லது மகனுக்கு 'காண்டம் மணி'யும் சேர்த்து வைத்துக் கொள் என்று கொடுத்து அனுப்பும் மனநிலைக்கு மாறிவிடுவார்களா என்ன ?

ஆனாலும் அப்படி பெற்றோர்கள் இருப்பதில் தவறே இல்லை என்பது சிலரின் வாதமாக இருக்கிறது. குஷ்பு சொன்னது தனிமனித கருத்து என்றாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகி என்கிற அளவில் அவரது கருத்து பரவலாக சென்று சேருகிறது அதனால் அதைப் பலர் எதிர்த்தனர். குப்பனையும் சுப்பனையும் விளம்பரத்தில் போட்டால் ஒரு பொருள் விற்குமா ? பொருளின் மதிப்பு அதை விளம்பரப்படுத்துவர்களால் தானே பலரை அடைகிறது. நான் சொன்னது தனிப்பட்ட கருத்து என்பதை முன்பே குஷ்பு சொல்லி இருந்தால் இவ்வளவு கலேபரம் நடந்திருக்காது. அனுபவபட்டவர் போல சொல்கிறார் என்று விட்டு இருப்பார்கள்.

இணைப்பு : சுட்டி

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை மற்றும் பக்தி வளர்ச்சி !

'கோவில்கள் கூடாது என்றோம் ஏனெனில் அவை கொடியவர்களின் கூடாரம் ஆகிப் போனதால்' என்று திரைவசனங்கள் வந்த போது தற்போதைய நவீன கேமராக்கள் இல்லாததால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் அந்த வரிகளின் மீது மனவருத்தம் உண்டு, 'கோவில்' என்பதற்கு பதிலாக 'வழிபாட்டுத் தலங்கள்' என்று சொல்லி இருந்தால் இன்னும் பொருத்தமாகவும் மதச் சார்பற்ற சமூக சிந்தனைத் தொடராக அமைந்திருக்குமே என்கிற மனவருத்தம் தான். ஏனெனில் வழிபாட்டுத் தலங்கள் தான் சமூக எதிரிகளின் புகலி(ழி)டமாக இருக்கின்றன என்பதை பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வநிருபனம் செய்துவருகின்றன

*****

மூட நம்பிக்கைக்கும், இறை நம்பிக்கைக்கும், ஆன்மிகத்திற்கும், பகுத்தறிவிற்கும் விளக்கம் தெரியாத ஆத்திக, நாத்திக தரப்புகளின் கேள்விகளும் பதில்களும் என்னாளும் கேட்கப்பட்டுவருபவையே. நிறுவன மயமான ஆன்மிக வியாபரங்களைக் கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் தனிமனித இறை நம்பிக்கையை கேலிசெய்யும் நாத்திகர்களின் பொதுவான கேள்வி, "கடவுள் என்று இல்லாத ஒன்றை கற்பனையாக படைத்துக் கொண்டு வழிபடுவது மூடத்தனம் தானே ?" இதற்கு பதிலாக ஆத்திகர்கள் என்ற பெயரில் பலர் சொல்லும் ஒரே விடை, "கற்பனையானது என்றால், நாள் தோறும் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது, எனவே கடவுள் நம்பிக்கை எப்படி வெறும் கற்பனையாகும் ?"

என்னைப் பொருத்தவரை தனிமனிதனின் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி எழுப்புவதும் தவறு, அதற்கு பதிலாக ஒரு சமூகத்தின் செயலை விடையாக கூறுவதும் தவறு, அது சரியானவிடை என்பதைவிட அதில் சப்பைக் கட்டுதல் அல்லது கட்டுமானம் மட்டும் தான் இருக்கிறது என்பதாக எனது புரிதல். நமக்கு பிடிக்காத உணவு மற்றவருக்கு பிடித்த உணவாகக் கூட இருக்கும், இங்கு உணவின் சுவை என்பது மாறுபடாது, பிடித்தது பிடிக்காதது என்பது இருவரின் வேறு வேறு உணர்வுகள் மட்டுமே. இதில் எந்த ஒருவர் உணவைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும் ? பிறரை எந்தவிதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காத தனிமனித உணர்வுகள், விருப்புகள் அவரவருடைய தனிப்பட்ட முடிவு, இதை விமர்சனம் செய்வது அறிவுடைமை அல்ல. இது தனிமனிதனின் இறை நம்பிக்கைக்கும் பொருந்தும். என்னைப் பொருத்த அளவில் தனிமனித இறை நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

வழிபாட்டுத்தலங்களின் எண்ணிக்கை ? என்பது நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்த தேவையா அல்லது நம்பிக்கையாளர்களின் பக்தி உணர்வுகள் மிகுந்ததன் அடையாளமா ?

30 ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்களின் எண்ணிக்கை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், ஆனால் தற்போது உணவகங்களின் எண்ணிக்கை தெருக்களின் எண்ணிக்கையை விட மிகுதி, இதை வைத்து மக்கள் ஓட்டல் உணவுகளை மிகுதியாக நாடுகிறார்கள் என்று சொல்ல முடியும், காரணம் சமையல் என்பதே ஒரு சுமையான வேலையாக போய்விட்டது, வீட்டில் சமைப்பதற்கு ஆயத்தம் செய்வதும், அதன் பிறகு பாத்திரங்களை கழுவி வைப்பதும் பெரிய வேலையாகிவிட்டது, ஆண் பெண் இருவரும் வேலை செய்வதால் சமையல் என்பது சுமையாகிவிட்டது எனலாம். ஓட்டல்களின் எண்ணிக்கையும் மிகுந்ததற்குக் காரணம் வீட்டில் சமைக்கும் வேளைகளின் எண்ணிக்கை குறைந்ததுவும் ஒரு காரணம். இந்த காரணங்களை வைத்து ஓட்டல்களில் தரமான உணவைத் தான் தருகிறார்கள் அதனால் தான் ஓட்டல்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது, மக்களுக்கும் ஓட்டல்கள் என்றென்றும் தேவையாக இருக்கிறது என்று தீர்ப்பு எழுதிவிட முடியமா ?

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு மக்கள் தொகை உயர்ந்ததும், நகரங்கள் பெருகியதும், புதிய புற நகரங்கள் தோன்றியதும் காரணம், அந்தந்த பகுதிகளில் ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுத் தலம் என்பது மறுக்க முடியாத தேவை ஆகி இருக்கிறது என்பது காரணம் அன்றி, அது வழிபடுபவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறது, தீர்த்து வைக்கிறது, மக்களுக்கு இறை நம்பிக்கைக் கூடி இருக்கிறது என்பதற்கான அடையாளம் இல்லை. வழிபாட்டுத் தலங்களினால் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்தது என்பது உண்மையானால் அவற்றின் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்காது என்பதே உண்மை. ஒரு வழிபாட்டுத் தலத்தினால் பிரச்சனைகள் தீர்ந்தவர்கள் அந்த வழிபாட்டுத் தலத்தையே அவர்களது சந்ததிகளுக்கும் பரிந்துரைப்பார்கள் புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களின் தேவைக்கு வாய்ப்பே இருந்திருக்காது.

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ, அளவுகோலோ இல்லை.

100 ஆண்டுகளுக்கு முன் வெளி நாடுகளில் இந்து கோவில்கள் குறைவு, தற்பொழுது 100க் கணக்கில். அந்நாட்டு மக்கள் இந்துக்களாக மாறிவிட்டார்கள் என்று இதற்கு விடை சொல்ல முடியுமா ? மாறாக இந்துக்கள் அந்த நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளார்கள் என்பது மட்டும் தானே விடை.

****

நித்யானந்தம் போன்ற போலி சாமியார்களின் ஆன்மிக ஆதிக்கத்தால் பணக்காரர்களிடமிருந்து பெரிய அளவில் வருமானம் குன்றிய கோவில்களில் தற்போது உண்டியல் வசூல் மிகுந்து இருக்கிறதாம், இதை வைத்து மக்களுக்கு ஆன்மிக உணர்வும் இறை நம்பிக்கையும் வளர்ந்ததாகச் சொல்ல முடியுமா ? போலி சாமியாருக்கு போடும் பணத்தை பணக்காரர்கள் கோவில் உண்டியலில் போடுகிறார்கள் அவ்வளவு தானே.

19 மார்ச், 2010

எம் எப் ஹுசைன் பாகிஸ்தானுக்கு போய் இருக்கலாம் !

தென்னிந்தியாவை விட மத உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருப்பது என்றுமே வட இந்தியாதான். மதக்கலவரங்களுக்கு வட இந்தியா பெயர் பெற்றது. அதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு, இஸ்லாமிய படையெடுப்புகளால் மிகுதியாக பாதிப்புக்கு உள்ளாகியதும், வட இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என மத அடிப்படைவாதத்தால் பிரிந்து போனதும் வட இந்தியர்களின் எண்ணத்தில் என்றுமே வடுவாக இருப்பவை.

****

எம் எம் ஊசேனின் ஓவியங்கள் புகழ்பெற்றவை, ஒரு ஓவியக் கலைஞன் என்ற வகையில் அவரின் திறமைகள் போற்றப்பட வேண்டியவையே, எந்த ஒரு கலைஞனும் தனது திறமையை அரசியல் சமூக உள்நோக்கில் நுழைத்தால் அதன் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும். ஒரு மத நம்பிக்கையாளன் இன்னொரு மத நம்பிக்கையாளனை மதரீதியாக தீண்டுவது என்றுமே சர்சைக்கு உரியது தான். காரணம் நம்பிக்கைகளை விமர்சனம் செய்வதை எந்த ஒரு சமூகத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, ஏனினெல் நம்பிக்கைகள் தான் அந்த சமூகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன. எப் எம் உசேன் என்றோ சரஸ்வதியை இந்து வழிபாட்டு உருவங்களை வரைந்த காலகட்டத்தில் சர்சை ஏற்படவில்லை, ஆனால் அவர் ஹிட்லரை அவமானப்படுத்ததான் நிர்வாணமாக வரைந்தேன் என்று சொன்ன பிறகே சர்சைகள் வெடித்தது. ஆக உசேன் மனதில் எதை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைப்பு இருக்கிறதோ அதுவே நிர்வாண ஓவியமாக ஆகிறது என்பதை உளறிக் கொட்டிவிட்டார். அதன் பிறகே இந்துத்துவ வாதிகளால் அவரது ஓவியக்கூடம் தீக்கிரையாக்கப்பட்டதும், கொலை மிரட்டல் போன்ற சம்பவங்களும் நடைபெற்றுவிட்டன.

உசேனுக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்தது போல் தெரியவில்லை, இந்த கலவரங்களெல்லாம் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை, ஆனால் திடிரென்று உசேன் இந்தியாவை விட்டு வெளியேறுவதை 'இந்தியாவில் வாழ்வாதே கேள்விக்குரியது என்கிற ஒரு கட்டமைப்பை உலக நாடுகளுக்குச் சொல்லிச் செல்வது போல் இந்திய கடவுச் சீட்டை ஒப்படைத்துவிட்டு 'நான் இந்தியாவை இன்னமும் நேசிக்கிறேன்' என்று சொல்லுகிறார். வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிவதான மனவருத்தம் என்பது தவிர்த்து இந்தியாவை அவர் நேசிப்பது போல் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தியா என்பது ஒரு சிறிய நாடு இல்லை இங்கே பலமாநிலங்கள் இருக்கின்றன, மத உணர்வு குறைந்த மாநிலங்கள் உள்ளன, உசேன் இந்தியாவை நேசிப்பது உண்மையானால் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவில் எதோ ஒரு மாநிலத்தில் வாழ்ந்து வந்திருக்க முடியும், ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்திலும் இருக்கும் அவரை இஸ்லாமிய சமூக, அரசியல் அமைப்புகள் போதிய பாதுகாப்புகளுடன் தென்னிந்தியாவிலேயே தங்க வைத்திருக்க முடியும். கேரள மதானிக்கு இல்லாத பாதுகாப்பு இன்மையா ஊசேனுக்கு தென்னிந்தியாவில் இருந்துவிடப் போகிறது. எல்லா மதத்தைச் சார்ந்த மத உணர்வை தூண்டுபவர்களும், தலைமைகளும் பாதுகாப்பாக உலாவும் தென்னிந்திய நகரங்கள் ஒன்றில் உசேனால் இருந்துவிட முடியாதா ?

உசேன் மனநிலையை வைத்துப் பார்க்கும் போது வெறும் அச்சுறுத்தல்களை காரணமாக கருத முடியவில்லை, அதையும் தாண்டி இந்தியா ஒரு இந்துநாடு என்கிற அங்கீகாரம் அவரே கொடுத்து இருப்பார் போல, அதனால் வெறுத்துப் போய் இஸ்லாமிய நாடு ஒன்றிற்கு இடம் பெயர்ந்திருக்கிறார். இதை தஞ்சம் புகுதல் அல்லது நாடுகடந்து சென்ற மனநிலை என்று என்னால் கருத முடியவில்லை.

உசேனின் பிடிவாதம் அப்படி தான் நிர்வாணமாக வரைந்த இந்து வழிபாட்டு உருவங்களை அழிக்காததும், அதற்காக மன்னிப்பு கேட்காததும் தொடர்ந்த நிலையில் அவருடைய முடிவு அவரே விரும்பி எடுத்துக் கொண்ட ஒன்று தான்.

இவ்வளவு பிடிவாதம், ஆணவம் உள்ள ஒருவர் நல்ல கலைஞராக இருந்து யாருக்கு பயன், கலைஞர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, அப்படியே பட்டாலும் ஒரு மதத்தின் சார்பில் இருந்து கொண்டு இன்னொரு மதத்தை அதில் பழிப்பு காட்டுவது சிக்கலில் தான் முடியும். முகமதுவை ஓவியமாக வரைந்துவிட்டார்கள் என்று டென்மார்க் செய்திபத்திரிக்கை மீதும், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும், அதை மறுபதிவு செய்த தினமலர் இணைய தளத்தை அரபியாவில் தடை செய்தததற்கு முயற்சித்து வெற்றிபெற்ற இஸ்லாமிய அமைப்புகள் கார்டூன் குறித்து ஆவேசப்பட எவ்வளவு உரிமை இருக்கிறது என்று நம்புகிறோமோ அதே உரிமையை ஒரு இந்துவுக்கும் கொடுத்துப் பார்த்தால் உசேன் செய்தது கடைந்தெடுத்த அயோக்கிய தனம் என்பது வெட்ட வெளிச்சம்.

உசேன் இந்திய பாஸ்போர்டை ஒப்படைத்து கண்ணீர் விட்டார் என்ற தகவலைப் படித்ததும் மனது துணுக்குற்றது, ஊசேன் செயல் குறித்து நினைத்துப் பார்த்தால் அவர் மீது வெறுப்பாகத்தான் இருக்கிறது. அவருக்கு வட இந்தியா, தென்னிந்தியா பிடிக்கவில்லை என்றால் பழைய இந்தியாவின் பகுதியாக இருந்த பாகிஸ்தானுக்கு சென்றிருக்கலாம்

இந்த கட்டுரையில் சொல்ல வந்தது.....'ஒரு மத நம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மற்றொரு மதநம்பிக்கையை தூண்டிப் பார்பது விஷ(ம)த்தனம்' ஒரு திறமைவாய்ந்த கலைஞனாக இருந்து கொண்டு தனது கலையை தனது தனிமனித உணர்ச்சிக்கு பலியாக்கி இருக்கிறார் உசேன். இதில் மதப்பற்றறவர்கள் வருத்தப்படுவதில் ஞாயமே இல்லை. மததிற்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள் என்கிற சொல்லுக்கும் உசேன் பொருத்தமானவராக நடந்து கொள்ளவில்லை, அவர் அனைத்து மதங்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்திருந்தால் நாம் அவர் குறித்து வருத்தப்பட ஞாயம் உண்டு, அவர் விரும்பியே வேறு நாடு சென்றதற்கு அவர் தஞ்சம் புகுந்தார், நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தார் என்ற கற்பிதத்தமாக நாம் வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது.

16 மார்ச், 2010

அரசு ஊழியன் என்னும் கிங்கரகர்கள் !

அப்பாவிகளிடம் 'ரூல்ஸ்' பேசுவதில் அரசு ஊழியகர்கள் காட்டும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை, ஆனால் அவன் தனக்கு மேல் இருக்கும் உயர் அலுவர்களிடம் கூழைக் கும்பிடு போடும் போது கடமையும், தன் மானத்தை இழக்கிறோம் என்பதை துளியும் நினைப்பதில்லை, காரணம் தன்னலம், எப்படியாவது பதவி உயர்வு பெறுவதற்கு உயர் அலுவலர்களின் கழிவறையைக் கூட நாக்கால் தூய்மை செய்ய முயற்சிப்பார்கள்.

ஒரு கோடி அரசு திட்டம் அறிவித்துவிட்டு அதற்கு இரண்டு கோடியில் பாராட்டு விழா நடத்துவதையெல்லாம் எந்த அரசு ஊழியனும் மக்களின் வரிப்பணத்தில் நடை பெறும் முறைகேடு என்று வாய்திறந்து பேசமாட்டான், அங்கெல்லாம் கடமை என்று எதையும் நினைக்காமல் சலாம் போடுவது முதல் விழா முடியும் வரை நன்றி உள்ள நான்கு கால் விலங்கைவிட கூடுதலாகவே நன்றி வெளிப்படையாக தெரியும் படி நடந்து கொள்வான். இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால்,

8 ஆம் வகுப்பு மாணவ சிறுமி இலவச பேருந்து பயண அட்டையை மறதியாக வைத்துவிட்டு வந்துவிட்டாள் என்பதற்காக பேருந்து சோதனையாளர்களால் கடுமையாக பேசப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு அவளுக்கு 100 ரூபாய் வரை தண்டத் தொகை ரசீது கொடுக்கப்பட்டதாம். பொதுமக்களின் எதிர்ப்பிற்கு பிறகு 50 ரூபாய் குறைக்கப்பட்டு, அதையும் பொதுமக்கள் செலுத்திய பிறகே அம்மாணவியை பேருந்துனுள் அனுமதித்திருக்கிறார்கள். மாணவி செய்தது தவறு தான் என்றாலும் சீருடையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் 'பஸ் பாஸ்' எனப்படும் அடையாள அட்டைச் சோதனை கூட தேவையற்றது தான். பள்ளி நாட்கள் தவிர்த்து மற்ற நாட்கள் என்றால் கூட சோதனையாளர்களின் செயலை சரி என்று சொல்லலாம். ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச கல்வி, இலவச பேருந்து சேவைகளை தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகள் கோரிக்கையுடன் தான் இலவச திட்டங்களே நடைபெறுகின்றன. பள்ளிக்க்குச் செல்லும் ஒரு மாணவியிடம் 'ரூல்ஸ்' பேசுபவர்கள் ஏழை எளியவர்களின் நலன்களின் ஏதும் அக்கரை அற்றவர்கள் என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. ஒரு சோதனையாளர் மாணவியை அனுமதித்திருந்தால் அதை வேறொரு சோதனையாளர் அதே தடத்தில் கண்டுபிடிக்க ஏதுவும் வாய்ப்பு கிடையாது, இருந்தும் அவர்களை தடுப்பது யார் ?

ரூல்ஸ் பேசும் சோதனையாளர்கள் என்றாவது நடத்துனரின் பணப் பையை இதுவரை சோதனை போட்டு பொதுமக்களிடம் சில்லரை இல்லை என்று கூறி உபரியாக நிரப்பிக் கொண்டதைப் பற்றி அறிவித்திருக்கிறார்களா ? அது எங்கள் வேலை இல்லை என்று மறுபடியும் தங்களுக்கு சாதகமான ரூல்ஸ் பேசுவார்கள்.

வசதி குறைந்த மாணவர்கள் பள்ளி தொலைவில் இருந்தால் பேருந்தில் பயணிக்க அரசு இலவச பாஸ்களை வழங்குகிறது, ஆனால் சோதனைகள் என்ற பெயரில் சீருடை போட்டிருக்கும் மாணவர்களையும் இறக்கிவிடுவது அல்லது அபராதம் போடுவது எந்த விதத்திலும் ஞாயமே இல்லை. ஒரு ஊரில் ஒரு மாணவி தவறுதலாக மறந்து வந்திருந்தால் அரசு பேருந்து நட்டத்தில் இயங்கிவிடுமா ? அப்படி என்றால் இவர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் அவ்வப்போது வேலை நிறுத்தம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்காமல் இருப்பதால் நட்டம் அடைவது யார் ? அதை ஈடுகட்ட இவர்களின் ஊதியத்தைக் கொடுக்கிறார்களா ? இவர்களைப் பற்றி நினைத்தாலே டென்சன் தான் ஆகுது.

எனக்கு 15 வயது இருக்கும் போது 10 வயது தம்பியை அழைத்துக் கொண்டு வேளாங்கன்னி வரை உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பேருந்து பயணச் சீட்டு முறைகள் பற்றி அவ்வளவாக விபரம் தெரியாது, தம்பியின் வயதை வைத்து எனக்கு முழு டிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து ஒரு டிக்கெட்டும், தம்பிக்கு அரைடிக்கெட்டுகான பணத்தைக் கொடுத்து (2ரூபாய் டிக்கெட் ஒண்ணு , 1 ரூபாய் டிக்கெட் ஒண்ணு வாங்கியது போக என்னிடம் இருந்தது மீதம் 1 ரூபாய் ) இன்னொரு டிக்கெட்டும் வாங்கி பேருந்துனுள் பயணம் செய்தேன், பேருந்து பாதி தொலைவு சென்றவுடன் நடத்துனர் ஒவ்வொரு பயணியிடமும் பயணச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார், இரண்டையும் கொடுத்தேன், 'என்னது 1 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு இவ்வளவு தூரம் வருகிறே ?' என்று கூறி, வேறு காசு இருக்கா என்று கேட்டார், இல்லை என்றேன், இறங்கிப் போ.....என்றார், எனக்கு ஒண்ணும் புரியல, தம்பி சின்னப் பையன் 10 வயது தான் ஆகுது அதனால் அவனுக்கு அரை டிக்கெட் தான் எடுத்தேன், இப்ப இறங்க சொல்றிங்களே' என்றேன். 'இது டவுன் பஸ்.....இதுல அரை டிக்கெட்டெல்லாம் கிடையாது, காசு இல்லாவிட்டால் இறங்கிப் போ' என்றார். என்னிடம் மீதம் இருந்த காசுக்கு அங்கிருந்து இன்னொரு முழு டிக்கெட் வாங்க முடியாது.....கையில் இருந்ததைக் காட்டினேன். இரண்டு பேரும் இறங்குங்க என்று கடுமையாகவே சொன்னார். வேறு வழியே இல்லாமல் தம்பியை மட்டும் பத்திரமாக சரியான இடத்தில் இறங்கச் சொல்லிவிட்டு, நான் பேருந்தைவிட்டு பாப்பா கோவில் என்னும் இடத்தில் இருந்து இறங்கி, கடுமையான வெயிலில் 5 கிலோ மீட்டர் நடந்தே வீட்டுக்கு வந்து மறுபடியும் பணம் எடுத்துக் கொண்டு வேறொரு பேருந்தில் சென்றேன். இதில் என்னுடைய தவறு டவுன் பஸ்ஸுக்கு அரை டிக்கெட் இல்லை என்று தெரியாதது மட்டுமே.

எவ்வளவோ உறவினர்களை, நண்பர்களை வித் அவுட்டில் அழைத்துச் செல்லும் நடத்துனர்கள், ஒரு 15 வயது பையனை நடுக்காட்டில் இறக்கிவிட்டு செல்வது என்பதை இப்போது நினைத்தாலும் வெறுப்பாகத்தான் இருக்கிறது.

அரசு ஊழியகர்கள் பொதுமக்களை மதிக்காவிட்டால் அல்லது கண்டிபான விதிமுறை பேசும் போது அவர்களை பொதுமக்களும் உதாசீனப்படுத்தனும், அவனும் சம்பளத்துக்கு வேலைப் பார்க்கும் ஒரு ஊழியன் தான் அதைவிட அவனுக்கு தனிப்பட்ட மரியாதைகள், 'சார்....சார்' என்ற விழிப்பு என்னைப் பொருத்த அளவில் தேவை அற்றது.

விதிமுறைகள் என்பது ஒழுங்குக்கான பரிந்துரைகள் மட்டுமே, மனிதாபிமானத்திற்கு முன்பு விதிமுறை பேசினால் மனிதனுக்கு சொல்லித்தரும் படி இயங்கும் இயந்திரங்களும் வேறுபாடுகள் இல்லை. பயண அனுமதிச் சீட்டை வைத்துவிட்டு வந்து சோதனையாளர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவி அப்போது எவ்வளவு கதறி இருப்பாள், அவமானம் அடைந்திருப்பாள் என்று நினைத்தால் ஏற்கனவே அவமானம் அடைந்த அனுபவம் இருப்பதால் எனக்கு மனது பதைக்கிறது.

பாஸ்போர்ட் அலுவலக அலட்சியம்!

15 மார்ச், 2010

அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !

கடந்த வெள்ளி மாலை 7 மணிக்கு ஸ்வாமி ஓம்காரின் 'தினம் தினம் திருமந்திரம்' சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி நேரடியாக மின் அஞ்சல் வழியான தகவல் மட்டுமே என்பதால் பொதுமக்களில் அன்று கோவிலுக்குள் வந்திருந்தவர்கள் மற்றும் மின் அஞ்சல் கிடைக்கப் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் வந்திருந்தனர்.

ஸ்வாமி ஓம்கார் வழக்கம் போல் கலக்கினார், நகைச்சுவையாக பேசினார், கேள்வி பதில்களுக்கு சிறப்பாக பதில் சொன்னார், 1:30 மணி நேரம் சொற்பொழிவாற்றினார் என்றெல்லாம் வந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது, நான் சமாதி நிலையில் இருந்தேன். சொற்பொழிவு நிறைவில், அரங்க மின் விசிறியை நிறுத்திவிட்டு எல்லோரும் சுண்டல் சாப்பிடப் போவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது விழிப்படைந்தேன். நிகழ்வைப் பற்றி பதிவர் கிரி எழுதினால் சிறப்பாக இருக்கும், ஸ்வாமி ஓம்கார் கோவை திரும்பிய பிறகு நிகழ்வுகளைப் பற்றி எழுதுவார் என நினைக்கிறேன்.




********

மறுநாள் (சனி கிழமை) கேபிள் சங்கர் மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் பதிவர் சந்திப்பு, 15க்கும் மேற்பட்ட பதிவர்களுடன் சிறப்பாக நடந்தேறியது, லேசான மழை மாலை வெயிலை தனித்திருந்தது, கேபிளுடன் மதியம் உண்டுவிட்டு, ஸ்வாமி ஓம்காரின் யோக வகுப்புகள் முடிந்து வரும் வரை அவருக்காக காத்திருந்தோம், பின்னர் அவரையும் அழைத்துக் கொண்டு சந்திப்பு நடைபெறும் இடம் சென்றோம், அனைவரும் வந்து சேர மாலை 5 ஆகி இருந்தது, சினிமா தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி, தனது துய்புகளை கேபிள் பகிர்ந்து கொண்டார். ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் தொடர்புடைய கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை தெரிவித்தார், சில பர்சனல் கேள்விகள் வெகு பர்சனல் என்பதால் அவற்றை தவிர்த்தார். ராஜேஷ் அண்ணன் கொண்டுவந்த மிளகாய் பஜ்ஜி மற்றும் பச்சை பட்டானி சுண்டலுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
(பிரபாகர், சுதாகர்(பித்தனின் வாக்கு), மகேந்திரன் (முரு நண்பர்), ஜோ மில்டன், கேபிள் சங்கர் (விஐபி 1), வெற்றிக்கதிரவன், முகவை இராம்குமார், ஜோசப் பால்ராஜ், ஸ்வாமி ஓம்கார் (விஐபி 2) முரு என்கிற அப்பாவி முரு, சரவணன் - வேடிக்கை மனிதன், கோவி, ஜெகதீசன், புகைப்படம் எடுத்தது அறிவிலி இராஜேஷ்
********

மறுநாள் (நேற்று) கேபிளுடன் செந்தோசா உல்லாச தளத்தில் சுற்றினோம், அங்கே புதிதாக வரவிருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோவின் முகப்பை பார்வை இட்டுவிட்டு, சூதாடும் தளத்திற்கு வந்தோம், வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு இலவச நுழைவு என்றாலும் ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை தகுதி பார்க்கிறார்கள். கேபிள் அரை ட்ராயர் அணிந்திருந்ததால் நுழைவுக்கு 'நோ' சொல்லிவிட்டார்கள். மாலை மணி 3 இருக்கும், ஸ்வாமி ஓம்காரும் அந்நேரம் அன்றைய யோகா வகுப்புகளை முடித்திருந்ததால் அவரையும் செந்தோசாவிற்கு வெற்றிகதிரவனுடன் வரச் சொன்னோம், கேபிள் 'அண்டர் வாட்டர் வேர்ல்ட்' எனப்படும் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை கண்டபின்னர். ஓம்காரும் அங்கு வந்து சேர்ந்தார், பிறகு வெற்றிக் கதிரவனுடன் அருங்காட்சியகத்தையும், பின்னர் மூவரும் டால்பின் விளையாட்டு காட்சிகளையும் கண்டபின்னர், வெளியே வந்தார்கள். இடையே ஜெகதீசன் கானா பிரபாவிற்கு தகவல் சொல்ல, ஞானசேகரை நான் வரச் சொல்லி இருந்தேன், அவரும் வந்து சேர பின்னர் டொன்லீயுடன் அங்கு வந்து சேர்ந்தார் கானா. மாலை 6 ஐத் தாண்டி இருந்தது, அப்படியே நடையாக லேசர் ஒளிக்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து அங்கே 7:45 காட்சிக்கு அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நான் திரும்பி விட்டேன்.

எதிர்பாராமல் ஒன்றன் பின் ஒருவராக செந்தோசாவில் ஆஸ்திரேலியா, சிங்கை, இந்திய பதிவர்கள் மொத்தம் 8 பேர் சந்தித்த நிகழ்வாக அமைந்தது.

12 மார்ச், 2010

பெரியாரிஸ்டுகளை வெறுக்கிறேன் !

அண்மையில் சாருவின் நித்யானந்தம் பற்றிய பேட்டியை ஜூவி வெளி இட்டிருந்தது, அதில் சாரு என்ன உளறினார் என்பது நமக்கு தேவையற்றது. இருந்தாலும் அந்த பேட்டியின் தொடக்கத்தில் சாருவை 'பெரியாரிஸ்ட்' என்பதாக முன்மொழிந்து பேட்டியை தொடங்கி இருந்தார்கள்.

செய்தி இதழ்கள் பெரியாரிஸ்ட் என்று அறிமுகப்படுத்துவது சாரு போன்றவர்களைத் தான். இந்த செய்தி இதழ்கள் பெரியார் பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது. இதே போல் ஒருமுறை ஜெயமோகன் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று குறிப்பிட்டு பலரிடம் கண்டனங்களைப் பெற்றார். குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் இல்லை, தமிழ்தேசியவாதி என்று கூறிக் கொள்பவர் என்றாலும் அண்ணா போன்றவர்களின் தமிழ்தேசிய எண்ணமும் குமரிமைந்தனின் தமிழ் தேசியமும் வேறு வேறானவை. 'ஹீலிங்' பயிற்சிக்கு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தனும், நான் இஸ்லாம் பாரம்பரியத்தில் வந்தவன், அதனால் என்னால் அசைவம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் நான் நித்தியின் ஆசிரமத்தில் ஹீலிங் செய்யும் பயிற்சி எடுக்கவில்லை. நித்தி நோய்களை குணப்படுத்துகிறார் என்று நான் எழுதியது முற்றிலும் உண்மை நான் தவறாக எதையும் எழுதிவில்லை என்று குறிப்பிடாமல் 'ஹீலிங், அசைவம்' என சப்பைக் கட்டி இருந்தார் சாரு. எந்த ஒரு இஸ்லாமிய பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களும் ஒரு மனிதனை தெய்வம் ஆக்கி, கடவுளுக்கு இணையானவராக வைத்துப் பார்த்ததில்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் கொண்டவரும் இல்லை, பெரியாரிஸ்டும் இல்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் என்று அவர் பிரியாணி சாப்பிடுவதைத்தான் சொல்கிறார் என்றால் அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம், பிரியாணி விரும்பி சாப்பிடும் நான் ஹீலிங் பயிற்சிக்காக சைவம் சாப்பிட விரும்பவில்லை என.

"நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது." - சாரு

பிரியாணி, மாமிசம் சாப்பிடுவது மட்டும் தான் இஸ்லாமிய பின்னனியா ? இஸ்லாமிய பின்னனியாளர்கள் சாமியார்களுக்கு சாமரம் வீசியது, காலில் விழுந்து கிடந்தது கிடையாதே.

"உங்களையெல்லாம் 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்தமுடியாது" என்று கூறிய விவேக், உயர்வர்க்க மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு படிக்காத பாமரர்களின் மூட நம்பிக்கைகளை முற்போக்கு என்ற பெயரில் நகைச்சுவையாக்கி கல்லா பார்த்தவர் தான் நடிகர் விவேக், இவருக்கும் பெரியாருக்கும் எள்ளளவும் தொடர்பே இல்லை, அப்படி இருந்திருந்தால் இவரால் திருப்பதி, பழனி மொட்டைகளையோ (அதையும் ஏழைகள் மட்டுமே போடுகிறார்கள்) , ஐயப்பனின் பெண்கள் மீதான தீட்டுகளையோ சாடி இருக்க முடியும். விவேக் புரட்சி செய்கிறார், புண்ணாக்கு செய்கிறார், சின்னக் கலைவாணர் என்றெல்லாம் புகழ அவரும் கலைமாமனி, பத்ம பூசன் போன்ற விருதுகளை 'திரையில் மூட நம்பிக்கை விழிப்புணர்வு' ஊட்டி பெற்றுக் கொண்டார்.

விவேக்கின் பெரியார் கருத்துகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, கீழ்கண்ட வீடியோவே சான்று.





எந்த ஒரு பெரியாரிஸ்டும் ஆசாமிகளை சாமி என்று புகழ்ந்தது கிடையாது, சாரு பெரியாரிஸ்டாம், விவேக் பெரியாரைப் பரப்புகிறாராம்.

11 மார்ச், 2010

சீடர்கள் தப்பி ஓட்டம் !

இவர்கள் இருவரை பார்த்ததும் சென்னை விமான நிலையத்தில் "சீடர்கள் தப்பி ஓடுகிறார்களோ !?" என்று நினைத்திருப்பார்கள். நல்லவேளை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் யாரும் இல்லை, இருந்திருந்தால் தற்போதைய பரபரப்பில் ஊகமாக இருவரின் படங்களைப் போட்டு எதோ ஒரு நாளிதழில் பரபரப்பு செய்தி வெளி இட்டு இருப்பார்கள்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் உலக பதிவர் கேபிள் சங்கர் (உண்மை தாங்க, என்னிடம் வலைப்பதிவு சாராத பல நண்பர்கள் கேபிளாரின் பதிவுகளை விரும்பிப் படிப்பதாக சொல்வதுண்டு) இருவர் வரவிருந்த புலி விமானம் சென்னையிலேயே 2:30 மணி நேரம் காலந்தாழ்த்தி புறப்பட குறித்த மாலை 8:30 மணிக்கு பதிலாக 10:30 மணிக்கு தரையிரங்கி, குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு 11:00 மணிக்கு வெளியே வந்தார்கள்.
வெற்றிக் கதிரவன், நான்

வெற்றி கதிரவன் கேபிளாருக்கு சிறப்பு வரவேற்பு அட்டையை பிடித்திருந்தார். துக்கள் மகேஷ் முன்பே வந்துவிட்டார் ஜோசப் பால்ராஜ் தனது சொந்தக்காரை எடுத்துவந்து இருவரையும் வரவேற்க்க நின்றார். விஜய் ஆனந்த் தனது குட்டி பையனுடன் வந்திருந்தார், ஜெகதீசன், ரோஸ்விக் மற்றும் பிரபாகர் ஆகியோரும், ஓம்காரின் யோகா மாணவர் திரு வைரவன் வந்திருந்தார். வந்தவுடன் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்த பிரபாகர், 'கோவியார் வரவில்லையா ? என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். என்னைய ரொம்ப 'பெருசா'(!) நினைத்திருப்பார் போல :). நாங்களெல்லாம் காத்திருந்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியே வந்தார்கள். பெட்டியை அடையாளம் கண்டு எடுத்துவர நேரம் விரைந்துவிட்டதாம். "இமிக்ரேசன் பிரச்சனை ஒண்ணும் இல்லையே ?" ஓம்காரிடம் கேட்டேன். "நீளமான தலைமுடி வைத்திருந்தால் ஒருவேளை கேள்விகள் கேட்பாங்க போல, என்கிட்ட ஒண்ணும் கேட்கவில்லை" நகைச்சுவையாக சொன்னார்.
கேபிள் சங்கர், ஸ்வாமி ஓம்கார்

கேபிளாரிடம் நீங்கள் பரத்தை வைத்து இரண்டாம் பாகமாக இயக்கப் போகும் "தம்பிக்கு இந்த ஊரு" படத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை, போஸ்ட் மேன், பொட்டிக்கடை வைத்திருப்பவர் இப்படி சின்ன ரோலே இருந்தால் என்னை போட்டுவிடுங்க, என்னை வச்சு கதாநாயகனாக அடுத்தப்படம் எடுக்கும் போது சொல்லுங்க அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டு கால்சீட் தருகிறேன் என்று சோசப்பு லொள்ளினார். அவ்வ்வ்

"கேபிள் அங்கிள்" ன்னு சொன்னதால் எனக்கு அவமானமாகிப் போச்சு, நான் இப்படியே திரும்பிப் போகிறேன் என்று கேபிள் முரண்டு பிடிக்க அவரை சமாதானம் செய்து வெளியே கூட்டிவருவதற்கு 1000 முறை "சாரி அங்கிள்" சொல்லிவிட்டார் வெற்றிக்கதிரவன்.
மகேஷ், பிராபகர், கேபிள் சங்கர் மற்றும் ஜோசப்

ஜோசப், விஜய் ஆனந்த மகன், விஜய் ஆனந்த்

எல்லோரையும் அவரவர் இருப்பிடம் நோக்கி அனுப்ப மணி இரவு 11:45 ஆகி இருந்தது.

கேபிளார் ஒருவாரம் வரையில் இருப்பார், ஸ்வாமி ஓம்காரின் யோகா நிகழ்ச்சிகள் 10 நாள்கள் வரையில் நடக்கின்றது. இருவரின் தொடர்புகளுக்கான அலைபேசி எண்களை பிறகு இங்கு வெளி இடுகிறேன். (கேபிள் லொகேசன் பார்ப்பதிலும் கதாநாயகி தேர்விலும் பிசியாக இருந்தால் அலைபேசியை எடுக்க மாட்டார்)
:)

கேபிள் சங்கரின் அலைபேசி எண் (0065) 91010419

ஸ்வாமி ஓம்காரின் நிகழ்ச்சிகள் :



10 மார்ச், 2010

தினமலர் பரிந்துரை செய்த ஆன்மிக சிந்தனையாளர் நித்தி !

நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் நித்தி பற்றிய எதிர்கருத்துகளைத் திரட்டி எழுதிவருகிறார்கள், நித்தியின் விடியோவைப் போட்டு காசு பார்த்தாலும் நக்கீரன் சென்ற ஆண்டே நித்தி ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கு கட்டுபிடி சிகிச்சை செய்து கசமுசா செய்தார் என்று வெளி இட்டிருந்தது. நக்கீரன் குழுமம் நடத்தும் ஆன்மிக இதழ் மற்றும் தினகரனில் நித்தி கட்டுரைகள் வந்ததா என்று சரியாக தெரியவில்லை. குமுதம் நித்திக்காக கதவை திறந்து வைத்திருந்தது. தினமலர் நித்தியை சிறந்த ஆன்மிகவாதிகளுல் ஒருவர் பட்டியலில் இணைத்து அவரின் அருளுரைகளை வெளி இட்டுவந்தது. இவை எல்லாம் நித்தி வீடியோவில் சிக்கும் முன்பு தான். தினமலர் தற்போது நித்தியை ஆன்மிக அருளாளர்கள் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டிருந்தது.

தற்போது இருக்கும் பட்டியலில் நித்திபெயர் இல்லை. தினமலர் முன்பே நித்தியை நம்பவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கும் கூகுள் கேச் வழியாகத் தலைப்பைத் தேடலாம் என்று பார்த்தால் நித்தி அம்பலப்படும் முன் தினமலர் நித்தியையும் ஆன்மிகவாதிகளின் பட்டியலில் இணைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

நித்தி சிக்கிய பிறகு


நித்தி சிக்குவதற்கு முன்
****

லோக குரு, ஜெகத் குரு, அவதாரம் இவை எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு செய்தி இதழ்கள் சூட்டும் வெறும் புகழ்ச்சி மகுடம், வேடம் களையும் போது செய்தி இதழ்களே தொடர்புடைய அந்த நபருக்கு செருப்பு மாலை போடுகிறார்கள். இவர்கள் ஆன்மிகவாதிகள் என்று அறிமுகப்படுத்தும் நபர்களே இப்படி என்றால் 'வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிட்டுக்குருவி லேகியம், சித்தவைத்திய விளம்பரம், அவர்களாகவே இட்டுக்கட்டி எழுதிக் கொள்ளும் திரைச் செய்திகள் இவை எல்லாம் அப்பாவிகளை ஏமாற்ற செய்தி இதழ்கள் தரும் தரமற்ற சேவை விளம்பரங்களின்றி வேறென்ன ?

9 மார்ச், 2010

கலவை 09/மார்ச்/2010 !

மகான் மீண்டும் மனிதன் :

நித்யானந்தம் என்கிற இராஜசேகரை நடமாடும் தெய்வம் என்று புகழ்ந்தவர்களுல் பலர் நடிகர்கள் உள்ளனர். நமக்கு தெரிந்து சாரு நிவேதிதான் நித்யா புகழ் நித்தமும் பாடினார். நித்தி அம்பலப்பட்ட பிறகு தாம் நித்தியை சந்தேகக் கண் கொண்டு பார்த்தேன் என்ற ரீதியில் எழுதுவதுடன், நித்திக்கு குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை தான் என்றும் எழுதிவருகிறார். இது இப்படியே இருக்க நித்தி பற்றிய "நித்யானந்தா பற்றிய என் தொடர்(பு?) கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வர இருக்கிறது. " என்று அறிவிப்பு வெளி இட்டு அது வலைவாசகர்களுக்கு இலவசமாகக் கிடைக்காது என்றும், ரிப்போர்டரிலேயே வாசித்துக் கொள்ளுங்கள் என்று ரிப்போட்டர் விற்பனைக்கு தனது வலை பக்கத்தில் விளம்பரம் வைத்திருக்கிறார். எல்லாம் தொழில் மயம் ! இவர்களெல்லாம் நினைத்தால் ஒருவனை மகான் ஆக்குவார்கள், மீண்டும் மனிதன் ஆக்குவார்கள். வாழ்க பத்திரிகா தர்மம்.

விண்ணைத்தாண்டி கிழிவாயா ?

கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி...கார்த்திக் ஜெஸ்ஸி.......ங்கொய்யால...என்னடா குடிச்சிட்டு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க என்று என்னை அடிக்க வராதீர்கள்...படம் முழுக்க வருவது இது தான்......எண்ணிப் பார்த்தால் மூன்று மணி நேர படத்தில் ஐம்பது லட்சம் கார்த்திக்கும், நாற்பது லட்சம் ஜெஸ்ஸியும் இருக்கலாம்...கரண்ட் வேலியில் மாட்டிக் கொண்ட காட்டுப் பன்றி போல...மீண்டும் மீண்டும் அதே தான்....எழுத்து இயக்கம் கவுதம் வாசுதேவ் மேனன்!

கதை...நடிப்பு...இசை...சரி இதெல்லாம் தான் நித்யானந்தானோட ஆன்மீகம் மாதிர் டவுசர் கிழிஞ்சி தொங்குதுன்னா....படத்துல சென்னை பசங்களோட லைஃப் ஸ்டைல காட்டியிருக்காங்கன்னு ஏதோ ஒர் பதிவில படிச்ச ஞாபகம்....எனக்கும் (கூட) சென்னை பத்தி கொஞ்சம் தெரியும்கிறதுனால சரி, அப்படி எதுனா காட்டினா நல்லாத் தான் இருக்கும்னு நானு வெய்ட் பண்ணேண்...அப்படி என்னத் தான் காட்றாய்ங்கன்னா...கே.எஃப்.சி...அப்புறம் ஒரு ஃபிகர் கூட ஒக்காந்து பேசுறான் பேசுறான் பேசுறான் பேசுறான்...பேசிக்கிட்டே இருக்கான்....ங்கொய்யால...இது தான் சென்னை பசங்க லைஃப் ஸ்டைல்னா, அந்த கருமாந்திர சென்னைல பொறந்து வளராததுக்கு பழனி முருகனுக்கு நான் பத்து ஜென்மத்துக்கு காவடி தூக்கணும்!

- இதை கண்டிப்பாக நான் எழுதவில்லை. இன்னும் இருக்கு அது சரி... பதிவில் தான்

பழம் பெரும் நடிகை :

காஞ்சனா என்றாலே வாயைப் பிளக்கும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெருசுகளுக்குத்தான் தெரியும் நடிகை கனவுக் கன்னி காஞ்சனா பற்றிய பெருமை(!). பெங்களூருவின் புறநகர் பகுதியான எலகங்காவில் உள்ள கணேசா கோயிலுக்கு அருகில் வசித்து வரும் அவர் கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். மஞ்சள் நிற பழைய நூல் புடவை, கிழிந்த ஜாக்கெட்டுடன் அந்த பகுதியை வலம் வரும் காஞ்சனா - என்று அந்த பழம் பெரும் நடிகையின் தற்போதைய நிலை பற்றி வருத்தப்பட்டு ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது தினமலர்.


குட் பை தாத்தா எம்.எப்.ஹூசேன் :

95 வயதில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒருவர் மனநிலை மாறுவதற்கு அவர் எவ்வளவு தூரம் அவமானப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. மத சகிப்புத்தன்மை எங்கள் நாட்டில் தான் இருக்கிறது என்று கூறுபவர்கள் வெட்கபபட வேண்டிய தகவலாக அவரது இடப் பெயர்வு நடந்திருக்கிறது. எவ்வளவோ இஸ்லாமியக் கலைஞர் இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை படைக்கிறார்கள். ஒரு ஓவியர் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிட்டார் என்பதற்காக அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வேறு நாட்டிற்கு செல்ல முடிவெடுத்தது மன வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. 'மூடிக் கொண்டு இரு' என்பவர்கள் கைகள் வலுப் பெற்றுவிட்டது, மெல்ல மெல்ல மதவாதத்தின் பிடியில் சிக்கி வருகிறோம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல. 'ஹிந்துக்கள்' பாபர் முதல் ஒளரங்கசீப் வரை முகமதிய ஆட்சியாளர்களுக்கெல்லாம் சாமரம் வீசி, மந்திரியாக இருந்த போதெல்லாம் அவமானப்படாத இந்துமதம் ஒரு ஓவியனால் அவமானப் பட்டதாம்.

தினகரன் செய்தி:
துபாய்: இந்தியக் குடிமகன் என்பதற்கான அங்கீகாரமான பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் திருப்பிக் கொடுத்து விட்டார் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன். இந்துப் பெண் கடவுகள்களை நிர்வாண கோலத்தில் படம் வரைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியவர் ஹூசேன். இதையடுத்து அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன, வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறினார் ஹூசேன். சமீபத்தில் அவருக்கு கத்தார் நாடு, குடியுரிமை வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியக் குடியுரிமையை கைவிட தீர்மானித்தார் ஹூசேன். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது இந்திய பாஸ்போர்ட்டை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்து விட்டார் ஹூசேன். 95 வயதாகும் ஹூசேன், இந்திய ஓவியப் பிரியர்களால் இந்தியாவின் பிகாசோ என அழைக்கப்பட்டவர். நேற்று டோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற ஹூசேன், தனது பாஸ்போர்ட்டை அங்கு ஒப்படைத்தார்.

********

ஒருவர் : என்னங்க இந்த சாமியாரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கு ஆனால் ஆனால் இவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லையே.

மற்றொருவர் : இவன் தான் முன்பு கச்சிதானந்த சாமிகள் என்ற பெயரில் செல்வாக்கு பெற்று நடிகையின் அரவணைப்பில் மார்கெட் இழந்தான், இப்போது மார்கெட் இல்லாத நடிகைகளைப் பின்பற்றி பெயரை மாற்றி 'எச்சிதானந்த' ஸ்வாமிகளாகி வாய்ப்பு தேடிவருகிறான் எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்

8 மார்ச், 2010

சிங்கையில் ஸ்வாமி ஓம்காரின் திருமந்திரம் சொற்பொழிவு !

வரும் வெள்ளி அன்று மாலை மணி 7:00 - 9.00 மணி வரை, பிரபல வலைப்பதிவர் மற்றும் ஆன்மிக அடியார் திரு ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சொற்பொழிவு நடை பெற இருக்கிறது.

இடம் : வடபத்திர காளியம்மன் கோவில்
நாள் : 12 மார்ச் 2010, வெள்ளிக்கிழமை; நேரம் மாலை 7:00 - 9:00

அனைவரும் வருக அனுமதி இலவசம். சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

நாத்திகம் பேசும் நீ ஏன் ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வைத்திருக்கிறாய் என்று பல நண்பர்கள் வியப்புடன் கேள்வியாகவே கேட்கிறார்கள். நான் என்னவோ ஆன்மிக எதிரி என்றும் தீவிர பகுத்தறிவாளன் பெரியார் தொண்டன் என்கிற பிம்பத்தை படிப்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். மூடநம்பிக்கையையும், மதவெறி, சாதிவெறியையும் எதிர்ப்பவன் இறை நம்பிக்கையற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆன்மிக மற்றும் நாத்திக நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது. இது மிகவும் தவறு. மக்களுக்கு பயனிளிக்க வேண்டிய ஒன்று எந்த பெயரில் இயங்கினால் என்ன என்பதை நினைக்க மறந்துவிடுகிறார்கள்.

இந்த பொது புத்திப் புரிதலில் கொள்கை ரீதியான தவறுகள் பெரும்பாலும் மறைக்க அல்லது மன்னிக்கப் படுகிறது. நிறுவனம் அல்லது வணிக மயமாகி இருக்கும் கொள்கைகள் என்ற அளவில் (நாள்பட்ட) தலைமையில் கீழ் இயங்கும் பகுத்தறிவு வாதமோ, ஆன்மிகமோ எல்லாம் ஒன்று தான். எந்த ஒரு கொள்கையும் தலைமையை வைத்து அளவிட செய்ப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொள்கைக்கான தொண்டன் என்ற பெயரில் தலைமை முறைகேடுகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்று எழுதாத விதியாக எல்லாவித அமைப்புகளிலும் உண்டு.

எனது நிலைப்பாடுகள் என்ற அளவில் பலமுறை நான் எழுதி இருப்பவை, சாதி எதிர்ப்பு அல்லது சாதிச் சம உரிமை. மதவாத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, தாய் மொழி உணர்வு இதன் அடிப்படையில் தான் நான் எழுதிவருகிறேன். பிறரைத் தாழ்த்தாத வீழ்த்தாத நம்பிக்கைகள் எதையும் நான் குறை சொன்னது கிடையாது. ஓப்பீட்டு அளவில் எங்கள் மதத்தில் தான் அனைவரும் உய்வு அடைகிறார்கள் போன்ற மதபற்று போலி ஆன்மிகத்தை கடுமையாகவே சாடி இருக்கிறேன். பார்பனியம் என்கிற தளத்தில் உயர்வர்க்க, ஆளுமைகளைச் செய்யும் பார்பனர்களையும் பிற சாதியினரையும் கடுமையாகவே சாடி இருக்கிறேன். மற்றபடி பல்வேறு மதம், சமூகம் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் எனக்கு உண்டு. கொள்கை அளவிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் போது அங்கே நட்பையோ, தனிப்பட்ட குணநலன்களையும் நான் கருத்தில் கொள்வது இல்லை. எனக்கு பல தரப்பு நண்பர்கள் உண்டு, அதிலும் ஆன்மிகம் பேசுபவர்கள், ஆன்மிக வாதிகள் நிறையவே உண்டு. நான் கண்ணை மூடிக் கொண்டு நாதிகன் பேசுபவனும் அல்ல கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் என்ற பெயரில் அடவாடிகள் செய்யும் மதவாதிகளை ஆதரிப்பவனும் அல்ல. நான் பெரியார் மற்றும் வள்ளலார் ஆகியோரை சமமாகவே போற்றுகிறேன் என்பது என் வலைப்பதிவில் அவர்கள் இணைந்திருக்கும் படமே தரவு.

*****

ஸ்வாமி ஓம்கார் பதிவுகள் தமிழ் மணத்தில் புதிதாக இணைந்த போது அவருக்கு பின்னூட்டம் இட்டவர்கள் மிகக் குறைவு, ஏனெனின்றால் இந்து ஆன்மிகம் என்ற பெயரில் பார்பனிய மேலாண்மை போற்றும் கருத்துகளே வெளிவருகிறது என்பதால் ஸ்வாமி ஓம்கார் எழுத வந்த போது, இவரும் ஒரு இந்துத்துவவாதியோ என்று நினைக்க வைத்திருக்கும். நான் அவரது தொடக்க கால 'குரு கீதை' பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட போது கூட அப்படியாக நினைத்தேன். ஆனால் அவரது மறுமொழிகள் இந்துமதத்தை தாங்கிப் பிடிப்பதாக இல்லாமல் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. மேலும் புனிதம், புனிதத்துவம் என்ற இனிப்பு தடவி எதையும் எழுதாமல் எதார்த்தமாக எழுதிவந்தார். பிறகு அவருடன் மின் அஞ்சல் தொடர்பு என நட்பாக தொடர்ந்தது அவரது அறிமுகம். தமிழகம் சென்றிருந்த போது கோவையில் நேரடியாக சந்தித்தேன். ஆசிவாங்கவோ, ஜோதிடம் பார்க்கவோ செல்லவில்லை. இணையத்தின் வழியாக அறிமுகம் ஆன நண்பர் என்ற அளவில் தான் எங்கள் சந்திப்பு அமைந்தது. இன்றளவிலும் அப்படித்தான். ஸ்வாமி ஓம்கார் மற்றவர்களுக்கு சாமியார், ஸ்வாமிஜி. வால்பையன் , கல்வெட்டு போன்றவர்கள் பார்வையில் மற்றொரு போலி சாமியார். எப்படியோ....என்னைப் பொருத்த அளவில் மனம் விட்டுப் பேசக் கூடிய நல்ல நண்பர்.

சிங்கையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். எனக்கு தெரிந்தது சோதிடம் மற்றும் ஆன்மிகம், ஆன்மிக நிகழ்ச்சி நடத்தலாம், என்னுடைய மாணக்கர் ஒருவர் இருக்கிறார். அவரும் கூட சிங்கையில் நிகழ்ச்சி நடத்தக் கேட்டுக் கொண்டார் என்று ஸ்வாமி ஓம்கார் என்னிடம் குறிப்பிட்டார். அவரது தினம் தினம் திருமந்திர நூல் வெளியான பிறகு, ஏற்பாடு செய்யுங்கள் திருமந்திரம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறேன் என்றார். அவரது மாணக்கருடன் கலந்து பேசினேன். அவருக்கு தேவை ஸ்வாமி ஓம்கார் நடத்தும் யோகா வகுப்புகள் தான். ஏனெனின்றால் அவரால் 10 - 15 நாட்களுக்கு இந்தியாவில் தங்கி ஸ்வாமி ஓம்காருடன் யோகா கற்றுக் கொள்ள நேரம் வாய்கவில்லை. கூடவே அவரது நண்பர்கள் பலருக்கும் யோக கற்றுக் கொள்ள ஆவல் (யோகாவும் இந்திய ஆன்மிகம் ஒன்றுக் கொண்டு தொடர்புள்ளது என்றாலும், இப்பொழுதெல்லாம் எளிமை படுத்தி ஆன்மிகம் கலக்காமல் பலர் மதச் சார்பற்ற யோகா நடத்துகிறார்கள்)
எனவே திருமந்திரம் சொற்பொழிவுடன் யோகா வகுப்புகளும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு, ஸ்வாமி ஓம்காருக்கு தேதிகளைக் குறிப்பிட்டு, தங்கும் இடம் முதல் அனைத்தும் ஏற்பாடுகளையும் ஸ்வாமியின் மாணக்கர் மற்றும் நான் இணைந்து செய்தோம்.

ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சியினூடே சனி அல்லது ஞாயிறு பதிவர் சந்திப்புகள் உண்டு. தேதி முடிவு செய்யவில்லை. பின்னர் சிங்கைப் பதிவர்களுடன் கலந்து பேசிவிட்டு எழுதுகிறேன்.

இசை, இயல் தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பு வாய்ந்தது, அதனை ஸ்வாமி ஓம்கார் எளிய விளக்கங்கள் மூலம் திருக்குறள் போல் எளிமை படுத்தி பக்தியாளர்களுக்கு பயனளிக்கும் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு அவரது நூல்கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பொருத்த அளவில் ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் சார்ந்த ஒரு இலக்கிய பேச்சாளர் என்பதாகத்தான் நான் அவரை வரவேற்க மற்றும் முன்மொழிய முடிவு செய்தேன்.

நித்யானந்தன் அம்பலப்பட்டு கிடக்கும் இந்த வேளையிலும் ஒப்புக் கொண்டுள்ளபடி நிகழ்ச்சி நடத்த துணியும் ஸ்வாமி ஓம்காரை மனதாரப் பாராட்டுகிறேன்.

சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிங்கைப் பதிவர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் தெரிவித்து அழைக்க வேண்டுகிறேன். யோக வகுப்புகளுக்கு பதிவு செய்வோர் என்னையோ அல்லது ஸ்வாமி ஓம்காரின் மாணாக்கர் திரு வைரவன் (9750 4503) அவர்களையோ அழைத்து பதிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகள் இலவசம்.



பதிவர்கள் அனைவரின் வருகையால் ஆதரவால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும். நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக !

6 மார்ச், 2010

நித்தியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

ஞாயமாக இந்த தலைப்பில் கிழக்கு வெளியிடுகள் தான் சூட்டோடு சூடாக 100 ரூபாய் புத்தகம் வெளி இட்டிருக்கனும். அச்சில் இருக்கிறதோ அல்லது பா.ரா பிசியோ என்னவோ :)

90களின் இறுதியில் நித்தியின் புகைப்படங்கள் கட்டுரைகள் குமுதம் போன்ற நாளிதழ்களில் வெளியான காலகட்டங்களில், 'இவன் என் பிரண்ட் அரவிந்த் க்ளாஸ்மெட்' என்று ஒரு வாரப்பத்திரிக்கையில் அவன் படத்தைப் பார்த்த என் தம்பி எனக்கு சொன்னான். என் தம்பியின் நண்பன் டிப்ளமோ படித்தவர். நித்தியும் டிப்ளமா தான். அப்போதெல்லாம் நித்தியின் புகைப்படங்கள் விவேகநந்தர் பாணியில் காவி உடையில் தலையில் முண்டாசுடன் 21 ஆம் நூற்றாண்டு புதிய விவேகநந்தர் போன்ற போஸுடன் காணப்படும். பெயரும் விவேகநந்தர் மற்றும் இராமகிருஷ்ண மடங்களின் சந்நியாசிகளுக்கு கொடுப்பது போலவே 'ஆனந்தா' வில் முடியும் பெயருடன் இருந்தார். நித்தியின் ஆசிரமத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எல்லாம் ஆனந்தாவில் முடியும் பெயர்கள் தான் சூட்டப்பட்டு இருப்பதாக தற்போதைய செய்திகள் வாயிலாக அறிகிறேன்.

விவேகநந்தர் வேடத்திற்கு பிறகு நித்தி புத்தர் போஸ்கள் கொடுக்கத் தொடங்கினார். புத்தரைப் போன்ற வெள்ளை உடை, ஆலமரம் அடியில் தியானம் செய்வது போன்ற போஸ். இந்தகாலகட்டத்தில் நித்தி தன்னை கார்ப்ரேட் அந்தஸ்திற்கு உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு, பணக்காரர்களின் பொருள் உதவி என வேகமாக வளர்ந்திருக்கிறார். சாய்பாபாவைப் போன்ற அவதாரம் தேவைப்பட முண்டாசைக் கழட்டிவிட்டு பம்பல் முடி வளர்க்க முயற்சித்த் அவரது முடியால் முடியாமல் போக அது குறும் கூந்தல் வளர்க்கத் தொடங்கி இருக்க வேண்டும். பொதுவாக கார்ப்ரேட் சாமியார்கள் அனைவருமே கடவுள் படத்தை தூக்கிப் போட்டுவிட்டு நான் தான் சிவன் அவதாரம் என்பார்கள். சாய்பாபா விஷ்ணு அவதாரமாம், போட்டி வேண்டாமே என்று நினைத்த நித்தி சிவன் அவதாரம் ஆகிவிட்டார். சிவலிங்கத்திற்கு முண்டாசு கட்டிவிட்டு பூசைக்காக பெயரளவில் வைத்துவிட்டு, இவர் படத்தையே இவரது அடியார்கள் வணங்கும் படி வைத்தார். சாய்பாபா செய்துவருவதும் அப்படியே. சாய்பாபா சமீதிகளில் அவரது படமும், ஒரு நாற்காலியும் இருக்கும், இதன் பொருள் சாய்பாபா அங்கே அமர்ந்திருப்பதாக உணரனுமாம், சிலருக்கு அப்படியே தோன்றுமாம் (மன பிராந்தி, விஸ்கி என்று இதைத்தான் சொல்லுவார்கள்), அதே பாணியில் நித்தியும் நித்தியின் படங்களை முன்னிறுத்தி சீடர்களையும், நம்பிக்கையாளர்களையும் வணங்கச் செய்தார். படத்தை வணங்கச் சொல்லுவது பங்காரு அடிகளாரும் என்றாலும் சாய்பாபா தான் நித்திக்கு முன்னோடி.

கார்ப்ரேட்டுகளாக வளர்ந்த பிறகு உலக அளவில் பரவவேண்டுமென்றால் 'அடியார்கள் அருள் பெற்ற' கதைகள் எழுதவேண்டும். படத்திலிருந்து விபூதி கொட்டியது, 'மெடிக்கல் மிராக்கல்' என்று மருத்துவர்களே வியப்படையும் படி நோயாளிகள் குணமடைந்தார்கள் போன்ற பல கதைகள் உலவ விடப்படவேண்டும். இந்த வேலையை சாரு போன்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதி நித்திக்கு பெரும் புகழ் சேர்த்தனர். கார்ப்ரேட் சாமியார்களின் பக்தர்கள் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பிறகு வெளி நாடுகளில் மடம் திறக்க அது பெரியவழியாக அமையும். அவர்களின் முன்னேற்பாடுகளில் கிளை கிளையாக தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் நித்தியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். 1000 என்ற எண்ணிக்கையில் ஆசிரமங்கள், யோக நிலையங்கள், தனிப்பட்ட கோவில்கள் என நித்திக்கு உலக அளவில் செல்வாக்கு உயர்ந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் நித்தி வளர்ந்த அசுர வளர்ச்சி 32 வயதிற்குள் 1000 கணக்கில் யோகா நிலையங்கள், 1000 ஏக்கர் கணக்கில் ஆஸ்ரம நிர்வகத்திற்கு பல்வேறு நாடுகளில் சொத்துகள், மில்லியனில் பணம் இவையெல்லாம் நித்தியின் தனிப்பட்ட சாதனைதான், இந்த வயதில் இவ்வளவு வளர்ந்தவர்கள் தொழில் துறையிலும் பன்னாட்டு நிறுவனம் என்ற அளவில் கூட குறைவே.

சாய்பாபா போன்றே பெரிய பெரிய ஆசனங்களில் அமர்ந்து பேசினார். தன்னை சிவனவதாரம், ஜீவன் முக்தி அடைந்தவன் (வாழ்வில் முக்தி அல்லது வாழும் போதே மோட்சம் பெற்றவன் என்று பொருள், அதனால் தான் அவர் பெயர் நித்திய ஆனந்தா)

நித்தி போன்றவர்கள் போதிப்பதே உண்மையான ஆன்மிகம் என்று ஆன்மிக நாட்டம் உடையவர் நம்பிவிட்டால், மகுடிக்கு மயங்கிய பாம்பு போல மயக்கம் அடைந்துவிடுவார்கள், அதன் பிறகு சரணாகதி அடைந்தவர்களாக அந்த அப்பாவிகள் 'ஜீவன் முக்தி' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்களைத் துறந்து, இல் வாழ்க்கையை துறந்து நித்தி போன்றவர்களின் ஆஸ்ரமங்களில் சேவைக்கு சரணாகதி அடைந்துவிடுவார்கள், நித்தி போன்றவர்கள் போலி என்று அடையாளம் காணும் போது ஆசிரமத்தில் சரண் அடைந்த ஆண்கள் பரவாயில்லை, இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று அதனை விட்டு 'மனப்'பூர்வமாக விடுதலை அடைய முடியும். பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறி, 'இவளும் அங்கே படுக்கையை பகிர்ந்திருப்பாளோ' என்று உறவினர்களாலேயே கேவலமாகப் பேசப்பட்டு அந்த பெண் வாழ்நாள் முழுவதும் ஒடுங்கியே இருக்க வேண்டியதான். நித்தியின் ஆசிரமத்தில் சரணடைந்த பெண்களின் எண்ணிக்கை 600க்கும் மேலாம், இதில் இந்தியாவில் தான் உண்மையான ஆன்மிகம் என்று விரும்பி வந்த வெளிநாட்டினர்களும் உண்டு. நித்தியின் கார்பரேட் கட்டுமானத்தில் வெற்றிகரமாக ஆசிரமம் நடத்தியவர்களின் அனைத்து அம்சங்களும் உண்டு.

ஆன்மிகத்தில் மாயை என்று சொல்லுவார்கள், கண்ணில் தெரியும் காட்சி உண்மை அல்ல என்பது இதன் பொருளாம். அபிரதமான வளர்ச்சி அடைவது அது பணமாக இருந்தாலும் புகழாக இருந்தாலும் அது மாயைதான். ஏனெனின்றால் அது இயல்பான வளர்ச்சியே அன்று. குதிரை பந்தயம், பெரும் திருட்டு, ஏமாற்றுதல் இதன்வழியாக பெரிய பணம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால், அது விட்டுப் போக வெகு குறைவான நாட்களே எடுத்துக் கொள்ளும், நித்தியின் கட்டுபாடற்ற வளர்ச்சியும் கூட அப்படித்தான், சீட்டுகட்டு மாளிகைப் போல் ஒரே நாளில் தரைமட்டமானது.

நித்தி விவேகநந்தாராக, புத்தராக, சிவ அவதாரமாகி கடைசியில் மன்மதன் அவதாரம் எடுத்த போது வீழ்ந்துவிட்டார். :)

மக்களும் எந்த அவதாரத்தையும் போற்றி வணங்குகிறார்கள், லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி பாத பூசைகூட செய்கிறார்கள் மன்மத அவதாரம் என்றால் பொங்கிவிடுகிறார்கள். :)

கடவுள்களுக்கு ஏற்கபட்டும் மன்மத அவதாரம், சாமியார்களும் எடுக்கும் போது ஏற்றுக் கொள்ளாதது மக்களின் ஓரவஞ்சனை. ஆக மக்கள் மனதில் எந்த ஒரு சாமியாரையும் கடவுள் அல்ல அவன் மனிதன் தான் என்று புரிந்து கொள்ள சூழல் தான் தேவைப்படுகிறது. மற்றபடி மக்கள் முட்டாள்களே அல்ல.






5 மார்ச், 2010

நித்யானந்தா VS பெரியவா !

இந்த கன்றாவிகளைப் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் செய்திகளைப் பற்றி படிக்கும் போது எழுதினால் என்ன என்று நினைக்கத் தோன்றுகிறது.

நித்தியானந்தா மீதான திடீர் புகார் - முழுமையாக விசாரிக்க வேண்டும் - ராம கோபாலன்

இது போன்று முறைகேடுகள், விதவைகள் மீது பாலியல் தொந்தரவு (அணுராதா ரமணன் உட்பட), நம்பிக்கை மோசடி கூடுதலாக கொலை ஆகியவற்றுடன், ஆபாச வீடியோ வெளியீடுகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் பெரியவாவை உள்ளே வைத்து விசாரணை நடத்திய போது அரசுக்கு எதிராக போராடியவர்கள் தான் இராம கோபாலன் தலைமையிலான இந்து அமைப்புகள்.

நித்யானந்தா மேட்டரில் விசாரனை நடை பெற வேண்டும் என்று உடனடியாக கேட்பதில் இருந்து இந்த அமைப்புகளின் உள்நோக்கம் பற்றி நினைக்க வேண்டி இருக்கிறது.

பெரியவா சின்னவாக்களின் மீது விசாரணையே கூடாது, அவர் தவறு செய்யக் கூடியவர் அல்ல என்று வரிந்து கட்டிய இந்த அமைப்பினர் நித்யானந்ததின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதின் பற்றி நினைத்தால் வெறும் பார்பனர் / பார்பனர் அல்லாதவர் என்கிற வருண சாதி அரசியலே காரணம். மற்றபடி இந்து மதத்தை இவர்கள் துய்மை படுத்த நடவெடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள் என்று நினைக்க முடியவில்லை. பார்பான் சதுர்வேதி மற்றும் பார்பான் தேவநாதன் விடியோவும் போஸுமாக சிக்கிய பின்பு இந்த அமைப்பினர் அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு இப்படியான உடனடி ஆதரவு கொடுத்தாகக் கூட நான் படித்ததில்லை. அப்படி இருந்தால் யாராவது இணைப்பை கொடுங்கள்.

பெரியாவா மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்றாலும் குறைந்த பட்சமாக விசாரணை நடை பெற்றால் உண்மை தெரியும், எனவே இது பற்றி நாங்கள் மவுனம் சாதிக்கிறோம் என்றாவது கூறி இருக்கலாம், ஆனால் சு.சாமி மற்றும் ஏவி எம் நிறுவன உரிமையாளர்களுடன் சென்று விசாரணைக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்து காஞ்சியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் தான் இந்த இந்து அமைப்புகள்.

ஒருவரை நீதிமன்றம் சாட்சிகளின் வழியாக குற்றவாளி என்றால் மட்டுமே ஒருவர் குற்றவாளி என்பது நடைமுறை ஆனால் ஒருவர் மீது குற்ற அடிப்படைகளை வைத்து குற்றம் சுமத்தி விசாரணைக் கோருவது தவறே இல்லை. அப்படி பட்ட குற்றச் சாட்டுகள் பெரியவாளுக்கு எதிராக பதிய வைத்தற்குக் கூட எதிர்ப்பு காட்டிய இந்து அமைப்புகள் நித்யானந்ததிற்கு மட்டும் உடனடியாக விசாரணைக் கோருவது ஏன் ?

காரணம் மிக எளிது, நித்யானந்தம் ஒரு சூத்திரன், மேலும் (வீடியோவில் பார்த்ததில்) மிகவும் கருப்பாகவே இருக்கிறான், அவனிடம் பார்பன லட்சணம் என்று கூறிக் கொள்ளும் ஒரு அடையாளமும் இல்லை. போட்டிக்கு கல்லா கட்டியவன் என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் தெரியவில்லை.

******

இராம கோபாலன் மற்று இந்து மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லுபவர்களும், சில இந்து அமைப்புகளும் பார்பனிய / வருணாசிரம நலம் காப்பவர்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகவே உள்ளது.

நித்யாநந்தம் யோக்கிய சிகாமணி பார்பனரல்லாதவர்கள் அவனைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்வதற்காக நான் இதைச் சொல்லவில்லை. ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் அரசியல் நடத்துபவர்கள், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவு பெற வேண்டும் என்று நினைக்கும் இந்து அமைப்புகள் எப்படி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற அமைப்புகளால் இந்து மதம் மெய்யாலுமே காக்கப்படுமா ? ஆனால் இதே அமைப்புகள் மார்ச் 2 முன்பு, நித்யானந்ததின் செல்வாக்கு, வளர்ச்சி, உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து நித்யானந்தம் இந்து மதத்தின் புதிய சூரியன், நவீன விவேகாநந்தர் என்று புகழ்ந்தவைகள் தாம். ஒரு பார்பன சாமியார் சிக்கினால் அவர் தப்பே செய்யாதவர் என்றும், அதுவே ஒரு சூத்திர சாமியார் சிக்கினால் நடவெடிக்கை கோருவதென்றால் அதில் உள்நோக்கம் இன்றி வேறென்ன, இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், இந்து அமைப்பு என்ற போர்வைகள் யாரைக் காப்பதற்கு என்று, இவர்கள் ஒட்டு மொத்த இந்துக்களின் நலனையும் இந்து மதத்தின் நலனையோ, இந்து தெய்வங்களின் நலனையோ காக்கிறார்கள் என்று நினைப்பவர்கள் தான் யோசிக்க வேண்டும். இது போன்ற பக்க சார்பு அமைப்புகளை நம்பும் நம்மால் இந்துகளுக்குள் ஒற்றுமையாவது வளர்க்க முடியுமா ?

இன்னும் ஒரு இடத்தில் சந்தடி சாக்கில் ஒரு இஸ்லாமியர் 'எங்க மதத்தில் துறவரம் கிடையாது....இது போன்று நடப்பதில்லை' என்கிறார். எல்லோரும் இஸ்லாமியராக மாறுங்கள் உண்மையான இறைவனை அடையுங்கள் என்கிறாரா தெரியவில்லை. நிரந்தர சொற்கம், நீளக் கண்கள் பெண்கள் கிடைக்கும் என அப்பாவிகளை ஆசைக்காட்டி, தீவிரவாதிகளாக்கி, தற்கொலை படைகளாக மாற்றி இறக்குவதைவிட சாமியார்களின் செக்ஸ் லீலைகள் எனக்கு பெரியதாகவே தெரியவில்லை. எல்லா மதத்திலும் எல்லா கன்றாவிகளும் இருக்கு. அதனால் கைகொட்டி சிரிப்பவர்களும், உள்ளுற புழுக்கம் அடைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை சாட்சியாக பார்த்துக் கொண்டு முடிந்தால் எதிர்ப்புகளை அங்கங்கே தெரிவிக்கலாம்.

படம் : நன்றி வினவு

4 மார்ச், 2010

ஞான மரபும், வெளிநாட்டு சதியும் !

நேற்றுவரை இந்து மதத்தை உய்விக்க மறு அவதாரம் எடுத்த விவேகநந்தர் என புனித பிம்பம் ஆக்கி புகழ்ந்த இந்து அமைப்புகள் அது கிழிந்த மூத்திரப் பை என்று தெரிந்ததும், சத்யானந்தனின் ஆசிரம அமைப்புகளை அடித்து நொறுக்கி இருக்கிறதாம். வேடம் களைந்ததால் இவர்கள் உருவாக்கிய புது விவேகநந்தனை இவர்களே காலி செய்கிறார்கள். சத்யாநந்தனனுக்கு இவர்கள் செய்த விளம்பரம், அவனுடைய அசுர வளர்ச்சியும் துபாய் வேல்ர்ட் கட்டிடம் போல் வெகுவாக உயர்ந்து ஒரே நாள் நில அதிர்வில் தரைமட்டம் ஆனது போல் ஆகிவிட்டது.

சந்தடி சாக்கில் 'கிந்து' லேகியம் விற்கும் 'வெற்றி' எழுத்தாளர் குழுமம், சத்யானந்தரின் அம்பலத்தால் கிந்து ஞானமரபுக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று கேள்வி எழுப்பி விடையும் சொல்கிறார்கள். தலித்தை கோவிலுனுள் சேர்க்காததற்கும், அனைத்து மதத்தினர் அர்சகர் ஆகும் திட்டத்திற்கு தடைவாங்கியும், தமிழ் வழிபாட்டு முறை என்றால் முகம் சுளிக்கும் இந்தக் கூட்டத்தை வைத்துக் கொண்டு 'ஞான மரபு' பற்றி வெற்றி எழுத்தாளர் மிகவும் கவலைப்படுகிறார். எங்க கிந்து மதத்தில் பிரம்மாச்சாரியம் எல்லாம் கிடையவே கிடையாது பெளத்த மதத்தின் 'சன்னியாசம், பிரம்மச்சாரியம்' என வேண்டாத ஒன்றை கிந்து மதம் எடுத்துக் கொண்டுதால் இது போன்ற அவமானங்களை சந்திக்க நேர்ந்துவிட்டது என்று முத்து உதிர்கிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக சத்யானநந்ததிற்காக மீடியா கிடைத்த போதெல்லாம் கூவிய சேறு எழுத்தாளர், சத்யானந்தன் ஸ்திரீ லோலன் தான் ஆனாலும் அவனிடம் நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பது உண்மை, நேரில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவரே தான் உடல் நலம் இல்லாமல் படுத்திருந்த போது சத்யானந்ததின் ஆசி பழிக்கவில்லை, கஞ்சு பாத்திரத்தைக் கூட திறக்க தெம்பு இல்லாமல் இருந்ததாகவும் யாரோ ஒரு வாசகர் உதவியால் மருத்துவமனை சென்றதாகவும் அதே கட்டுரையில் சத்யானந்ததின் சக்தி பற்றி முன்னுக்கு பின் உளரலாகவே எழுதி இருக்கிறார். தான் விளம்பரம் செய்தது தவறு அல்ல, சத்யானந்தம் மோசமானவன் தான் என்பதை இப்படியாக உணர்த்துகிறாராம். அவரை படிப்பவர்கள் ஐயோ.....முட்டிக் கொள்ளுங்க.

நவீன வீவேகந்தர் நாறிப் போய்விட்டார், கிந்து மததிற்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது என்று அலறும் கூட்டங்கள், கிந்து மதம் மேன்மை அடைய என்ன செயதது என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் போலி சாமியார்களை அடையாளம் காட்டும் வேலையாவது செய்தார்களா ? தெரியவில்லை, மாட்டிக் கொண்டால் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை உடனடியாக சொல்லி மாட்டிக் கொண்ட அமைப்பை தாக்குவதின் மூலம் கிந்து மதம் காக்கப்படும் வருணாசிரமம் காக்கப்படும் என்று நம்புகிறார்கள்.

இதைவிடப் பெரிய காமடி சத்யானந்தம் சிக்கிக் கொண்டது நல்லது தான் என்று எதுவுமே சொல்லாமல், இது கிந்து எதிரிகளின் சூழ்ச்சி, வெளிநாட்டு மதமாற்றுக் கும்பலின் சதி என்றால் உளறிக் கொட்டுவதற்கு 'வெற்றி' எழுத்தாளர் ஆமாம் போடுகிறார். வெளி நாட்டுக்காரன் ஒரு வேளை சதி செய்கிறான் என்றே வைத்துக் கொண்டாலும் சத்யானந்தம் போன்ற கார்பரேட் சாமியார்களுக்கு 200 ஏக்கர் பரப்பில் அமைந்த ஆசிரமங்கள், 1000 கிளைகள், உலகம் தழுவிய 1000 கோடி டாலர் ஆசிரம சொத்துகள், யாரால் வந்தது ? வெளி நாட்டுக்காரன் பணம் தானே ? பாதிக்கபடுபவன் வெளிநாட்டுக்காரனாக இருக்கும் போது அதை அவன் தான் அம்பலப்படுத்தி இருந்தாலும் அதில் தவறு ஏது ?

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளை காமசூத்திர,தாந்திரீக யோக குண்டலினி, என்ற பெயர்களில் போலி கிந்து அமைப்புகள் கூடாரம் அடித்து தாக்கி வருகின்றனர். கிந்து மதத்தில் தான் உண்மையான ஆன்மீகம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கையில் வாரிசு அற்ற தங்கள் சொத்துகளை வெளி நாட்டினர்கள் முழுவதுமாக அளிக்கிறார்கள், பில்கேட்ஸ் 10000 தொழிலாளர்களை, 1000 அலுவலங்களை வைத்து செய்யும் ஒரு தொழிலில் கிடைக்கும் வருவாய் போல 1000 ஆசிரமக் கிளைகள் தொடங்கி கிந்து சாமியார்கள் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டு அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். வெளிநாட்டுக்காரனுக்கு கோபம் வருமா வராதா ?

கிந்து சேவை அமைப்புகள் சாமியார்களின் அளவுக்கு மிஞ்சிய அசுரவளர்ச்சி, அவர்களின் சொத்து குவிப்பு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளமல் இருந்துவிட்டு, அவர்கள் மாட்டிக் கொண்டால் கைகழுவதும் இல்லாமல் அவர்களின் அமைப்பில் எதுவுமே தெரியாமல் எதோ தேடல் என்று சென்று அங்கே சேர்ந்து அங்கேயே தங்கி இருக்கும் அப்பாவிகளையெல்லாம் தாக்குகிறார்கள். சத்யானந்ததிற்கு பேராதரவு கொடுத்து கட்டுரைகள், அருளுரைகள் வெளி இட்ட செய்தி இதழ்கள் தற்போது சூடான விற்பனைக்கு சத்யானந்த சம்போகம் வெளி இடுகிறார்கள். இவர்களையாவது கிந்து அமைப்புகள் கண்டித்ததா ?

கிந்து மதம், ஞான மரபு என்ற சப்பைக் கட்டும் 'வெற்றி' எழுத்தாளர் இதை வைத்து நித்யபுரம் என்னும் நாவல் எழுதினால் நன்கு விற்கும்.

கிந்து மதத்தை எவனும் காத்துவரவில்லை, அதுவாகவே அவ்வப்போது போலிகளை அம்பலப்படுத்தி காத்துக் கொண்டு தான் வருகிறது. சத்யானந்தம் சிக்கியதற்கு உணர்ச்சி வசப்படும், ஆவேசப்படும் இந்துக்கள் சத்தியானந்தம் வெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் இந்து மதத்தின் கற்பக விருச்சம் என்ற பெயரில் அசுர வளர்ச்சி பெற்ற ஒரு எட்டி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு சாய்க்கப்பட்டுவிட்டதாக நினைத்து மகிழலாம்.

இந்த சூழலில் உடனடித் தேவை மற்றும் சேவை எதுவென்றால் சத்யானந்தனின் ஆசிரமத்தில் அற்பணித்துக் கொண்டவர்களை மீட்டு அவர்களின் இல்லங்களில் ஒப்படைத்து அவர்களுக்கு உளவியல் மருத்துவரை வைத்து பயிற்சி கொடுத்து, மன அழுத்ததில் இருக்கும் அவர்களின் தற்கொலைகளைத் தடுக்கலாம். தாம் தவறு செய்துவிட்டோம், வாழ்க்கையை வீண் அடித்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வுகளில் இருந்து மீட்டு, அவர்களை குத்திக் காட்டாமல் அவர்களுக்கு நல்வாழ்வு அமைய ஏற்பாடு செய்வது தான் ஹிந்து மததிற்கு செய்யும் உண்மையான சேவை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

3 மார்ச், 2010

சத்யானந்தம், சேரு, அதிரச லீலா !

சத்யானந்தத்தின் படுக்கை அறையைக் காட்சிகளை பன் தொலைக்காட்சி காட்டியுள்ளது. பன் தொலைகாட்சி இதற்கு முதன்மைத்துவம் கொடுத்து, தலைப்புச் செய்தியாகக் காட்டி நீலப்படம் போல் காட்சிகளை ஓடவிடுவதன் பின்புலம், பேரம் தெரியவில்லை, இருந்தாலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு அந்த (காமக்) காட்சிகளைப் பார்ப்பதை பெற்றோர்கள் தவிர்பது நல்லது. பன் தொலைகாட்சியின் இந்த திடீர் சேவை திராவிடத்தை தாங்கிப் பிடிக்க, பகுத்தறிவை வளர்க்க எடுக்கும் நடவடிக்கை என்று என்னால் நினைக்க முடியவில்லை.

சத்தியானந்தம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை பேசக் கூடியவர், சமுக மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் பெரியாருடன் ஒப்பிட்டு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவாக அண்மையில் தான் எழுத்தாளர் சேறு, அஜய் தொலைகாட்சியில் விளம்பரம் (போல்) பேசி இருந்தார். சத்யானந்ததின் இருட்டு அறையில் பன் தொலைகாட்சி வெளிச்சம் போடுவதற்கு முன்பே சேறுவின் பக்கத்தில் சத்யானந்தம் பற்றிய விளம்பரங்களையும், புகழுரைகளை, பரப்புரைகள் மாயமாக மறைந்துவிட்டு இருக்கிறது.

பொறுப்பான எழுத்தாளர்கள் சத்யானந்தம் போன்ற சாமியார்களை அவதாரங்கள் என்பது போல் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வாசகர்களை பலியாக்கும் முன், தான் தெளிதல் நல்லது. சத்யானந்தம் லீலைகள் குறித்து மற்றபடி பெரிய கருத்து ஒன்றும் இல்லை. இன்று ஒருவர் நாளை வேறொருவர் என்பதாக சந்தியானந்ததின் முறை இன்று வந்திருக்கிறது அவ்வளவு தான். முன்பே 'நான் குறிப்பிட்ட பெண்ணுடன் தொடர்பு உள்ளவன்' அல்லது அவரைத்தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றெல்லாம் அறிவித்துவிட்டு பல்கி சாமியார் போல் தம்பதி சகிதமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தால் சத்யானந்ததின் லீலைகள் பெரிய விசயமாகவே ஆகி இருக்காது. காவி உடையும், கலியுக கண்ணனைப் போன்று அருள் கைகளும், கோல்கேட் விளம்பரம் போல் பளீர் சிரிப்புமாக 'வளமாக' வ(ளர்)ந்த சாமியார் தாம் ஒரு பிரம்மச்சாரி என்பதாக நம்ப வைத்தார், மற்றபடி அவர் தாம் பிரம்மச்சாரி என்று வெளியே சொன்னாரா என்பது தெரியவில்லை.

பொதுவாக இந்துக்களின் நம்பிக்கை காவி உடை உடுத்துபவர் காமத்தை கட்டுப் படுத்திக் கொண்டவர் என்பது, அந்த உடையை சத்யானந்தம் அணிந்து கொண்டு சாமியார் பிஸ்னஸ் செய்ததால்தான் பெண்ணுடன் ஆன லீலை பெரிய விசயமாக்கப்படுகிறது, இல்லை என்றால் 'என் படுக்கை அறையைப் படம் பிடித்தார்கள்' என்று சாமியார் மான நஷ்ட ஈடு வழக்கை தொடர்புள்ள தொலைக்காட்சியின் மீது போட்டிருக்கக் கூடும். சாம்பார் லீலை புத்தகத்தின் அடுத்த பகுதியாக அதிரச லீலையை எழுத உட்கார்ந்துவிடுவார் சேறு. மற்றபடி சதியானந்ததை உண்மையான ஞானி, அவதாரம் என்று நம்பிய அப்பாவி பக்தர்களுக்குத்தான் பெருத்த அவமானம்.

சத்யானந்தம்' இந்த படக்காட்சி கணிணி வரைகலை மூலம் உருவாக்கப்பட்டது போலியானது, என் புகழுக்கும் வளர்ச்சிக்கும் களங்கம் கற்பிக்க நினைப்பவர்களின் சதி, இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்' என்றோ 'கதவை திறந்தால் காற்றுவருவதைப் போல் அவர்களை திறந்த மனதுடன் மன்னிக்கிறேன்' என்றோ ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு புதிய கிளையை திறக்கப் புறப்படுவார்.

இதற்க்காக அனைத்து சாமியார்களும் சத்யானந்தம் போல் தான் என்று நினைப்பவர்களும் உண்டு, எனக்கு தெரிந்து கேள்வி பட்ட வரையில் பல சாமியார்கள் அப்படித்தான், ஆனால் விதி விலக்குகள் உண்டு. திருமணமானப் பெண் காதலுடன் ஓடிப் போய்விட்டாள் என்பதற்காக திருமணமாகப் போகும் பெண்கள் எல்லோருமே அப்படித்தான் என்று முத்திரை குத்த நினைப்பதும் கூட பொது புத்திதான். சத்யானந்தம் செய்தது சாதாரண செயல் ஆனால் காவி உடை போட்டுக் கொண்டு, தத்துவம் பேசிக் கொண்டு இதைச் செய்வது நம்பிக்கை துரோகம்.

போலி சாமியார்கள் அம்பலப்பட வேண்டும், அசிங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கு இல்லை.

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

2 மார்ச், 2010

வரப் போகும் மெகா தொடர்கள் !

சில சமயம் மெகாதொடர்களுக்கு வரும் சுண்டி இழுக்கும் விளம்பரங்கள், பார்வையாளர்களை மணிக்கு தொலைகாட்சிக்கு முன்பு அழைக்கிறது. குறிப்பாக விஜய் தொலைகாட்சியின் 'ரோஜா கூட்டம்'. இனி எதோ ஒரு தொலைகாட்சியில் வரப் போகும் மொகாதொடர்கள் பற்றிய சிறு சிறு அறிமுகங்கள்

*********


கணவன் கண்டதெல்லாம்

மனைவியின் அனைத்து பக்கங்களையும் அறிந்த கணவன், கணவனின் வேறு பக்கங்களை அறியாத மனைவி இவர்களை வைத்து பக்கம் பக்கமாக வசனமே இல்லாமல் அவர்களின் உணர்ச்சிகள், வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டி புரட்டி எங்கெல்லாம் செல்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காணத்தவறாதீர்கள் 'கணவன் கண்டதெல்லாம்'

மாங்கல்ய தோரணம்
கவலையில்லாத கணவன், சீரியல்களின் கண்ணீருக்குக் கூட கலங்கும் மனைவி, இவர்களுடைய உலகம் மிகச் சிரியது, வீட்டில் இருவருமே சேர்ந்து இருக்கும் நேரம் வெறும் 2 மணி நேரம் தான், அப்பவும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளமாட்டார்கள், இவர்களுக்கு இடையே ஒரு பெண் நுழையும் போது இவர்கள் என்ன ஆனார்கள் ?

தேன்கூடு
மனைவி சரி இல்லை என்று நினைக்கும் கணவன், மாதச் சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கும் மனைவி, இவர்களுக்கு இரு குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் ஒரு புதிர்காலமா ?.


மல்லிகை தோட்டம்
ராஜு, தீபா இவங்க இரண்டு பேர் தான் இந்த கதையின் முக்கிய பாத்திரமென்றாலும் தட்டுமுட்டு சாமான்களாக நிறைய பாத்திரங்கள் இவங்க காதலுக்கு எதிர்பாக நிற்கிறார்கள், இடையில் ராஜுவின் மனம் சோபாவின் பக்கம் செல்கிறது, அவனை விடாமல் துறத்தும் தீபா.....இவங்க சேர்ந்தாங்களா ? பிரிந்தார்களா ?

சோபனா
சாப்ட்வேர் மனைவி, சாதாரண வேலை பார்க்கும் கணவன், மகிழ்ச்சியான இல்லம். இவை எல்லாம் சென்ற மாதம் வரை உண்மை. திடிரென்று வேலையை விடச் சொல்லும் கணவன், விவரம் தெரியாமல் துடிக்கும் மனைவி, இவர்களுக்கிடையே பிரச்சனை பெரிதாக இவன் தான் காரணமா ? திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு

வானம் வாழ்க்கைபடும்
இவங்க குடும்பம் ரொம்ப பெரியது, இவங்க போடும் சண்டையும் தான், இவங்க குடும்பத்தின் திடீர் குழப்பத்திற்குக் காரணம் அவங்க அப்பா, 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். அம்மாவின் சோகத்தில் பங்கெடுக்கும் வயது வந்த இரு பிள்ளைகள், இவர்களின் பல பக்கங்கள்.


யப்பா.........முடியல.

1 மார்ச், 2010

பொறியியல் பட்டப்படிப்பில் தமிழில் !

அண்மையில் தமிழக அமைச்சர் பொன்முடி தமிழ் வழிப் படிப்பாக பொறியியல் பட்டப்படிப்பு விரைவில் துவங்கும் என்று அறிவித்து இருந்தார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தும், அதனால் பெறப் போகும் பயன் நினைத்துப் பார்த்தால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடுகளில் குறிப்பாக சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் அந்த நாடுகளின் தாய்மொழி வழியாக அனைத்துக் கல்வியும் வழங்கப்படுகிறது. அந்த நாட்டு மக்கள் அம்மொழியிலேயே வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும் சூழலும் பெறுகிறார்கள்.

தாய் மொழி வழிக் கல்வி வழியாக வேலை வாய்ப்பு பெறும் சீன நாட்டைச் சேர்ந்த சீனர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட சீன மொழி பேசும் பெரும்பாண்மை மக்கள் வாழும் நாடுகளில் தான் வேலை கிடைக்கிறது. வேறு நாடுகளில் கிடைக்காது, கிடைத்தாலும் அவர்களால் செய்ய இயலாது.

தமிழக அரசு அலுவலகங்களிலும் அரசு ஆணைகளிலுமே தமிழ் முதன்மையாக இல்லாத பொழுது தொழிற்கல்வியை தமிழில் தருவதால் பயன் இருப்பது போல் தெரியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளின் வழியாக 80 விழுக்காட்டு ( சரியாகத் தெரியவில்லை) பொறியாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தாய்மொழிக் கல்வி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்குமா என்பதே தெரியாது. பன்னாட்டு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுகளும் எழுத்து தேர்வுகளும், கலந்துரையாடல் தேர்வுகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. தமிழ் வழி கல்வி பெற்றவர்களால் அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமென்றால் ஆங்கிலம் மிக சரளமாக தெரிந்திருந்தால் தான் போட்டி போட்டு தேர்வாகவே முடியும். நான் முதன் முதலில் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற எல் என் டி நிறுவனத்தில் குருப் டிஸ்கசன் எனப்படும் கலந்துரையாடலில் பேந்த பேந்த விழித்து வெளியேறினேன். அதன் பிறகு தட்டு தடுமாறி வேலைக்கு சேர்ந்து பேச்சு வழக்கு ஆங்கிலம் பிடிபடவே இரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியது. பின்னர் பொறியியல் படித்த பிறகே நல்ல ஆங்கில புழக்கம் ஏற்பட்டு வேலை வாய்ப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன்.

தமிழ் மொழி வேர்சொற்கள் நிறைந்த வளமையான மொழி, எந்த ஒரு பிற மொழிச் சொல்லையும் தமிழிலேயே உருவாக்கி பயன்படுத்த முடியும் அந்த வகையில் பொறியியல் கல்வியை தமிழ் படுத்துவதும், பாடத் திட்டம் கொண்டுவருவதும் எளிமையானதே. தற்போது தொழிற் பயிற்சி கல்விகள்(ITI), பட்டய படிப்புகள் (DIPLOMA) தமிழில் இருக்கின்றன. அதே போல் பொறியியலையும் கொண்டுவருவது எளிது தான். ஆனால் போட்டி தன்மை மிக்க இவ்வுலகில், உலகமயம் என்கிற சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளைப் பெற தமிழ் வழிக் கல்வி பயனளிக்காது. பயனளிக்கும் வகையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ் நாடு தொழில் துறையில் தன்னிறைவு அடையவும் இல்லை. அப்படி எல்லாம் ஆகவேண்டும் என்ற ஆசையை மட்டுமே வைத்துக் கொண்டு கல்வியில் மட்டுமே நடைமுறைக்குக் கொண்டு வருவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் இடற்பாடுகளை எதிர் நோக்குவார்கள்.

* குறிப்பிட்ட விழுக்காடு தமிழ் வழி கல்வி பெற்றவர்களுக்கு எங்கள் மானிலத்தில் இருக்கும் பன்னாட்டு, இந்திய அரசு நிறுவங்கள் வேலை வாய்ப்பு தரவேண்டும்
* எல்லா தமிழக அரசு சார்ந்த பொறியியல் நிறுவனங்களும் தமிழ் வழி கல்வி பயன்றவர்களுக்கு சம வாய்ப்பு அல்லது முன்னுரிமை வழங்க வேண்டும்
* தமிழ் வழி கல்வி பயின்றவர்களின் ஆங்கில மொழி அறிவை முதன்மை தகுதியாக வைக்கக் கூடாது

இதற்கெல்லாம் அரசு எதாவது நல்ல நடவெடிக்கை எடுத்துவிட்டு தமிழ் வழி பொறியியல் கல்வியை நடை முறை கொண்டு வந்தால் வரவேற்கலாம்.

உற்பத்தியிலும், பொருளியியலும் தமிழகம் சார்ந்த நிறுவனங்கள் வளர்ந்து வேலை வாய்ப்புக்கு பன்னாட்டு நிறுவனங்கள் சாராத ஒரு நிலையில் தமிழ் வழிக் கல்வியில் பொறியியல் பேச கேட்க, நடைமுறைக்கு நன்றாக இருக்கும்.

நடை முறையில் இருக்கும் இருமொழித் திட்டத்தில் தமிழ் வழி கல்வி பயலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாக பயிற்றுவித்தாலே போதும். ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒரு மாணவன்/மாணவி எந்த மொழியில் கல்வி கற்றாலும் அவன்/ள் மேலே வந்துவிடுவான்(ள்). ஆங்கில வழிக் கல்வியில் இருப்பது போன்றே ஆங்கில வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசிப் பழகவேண்டும் என்கிற விதிகளை வைத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுத்தால் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பழகிக் கொண்டு ஆங்கிலத்தில் நன்றாக பேச எழுதக் கற்றுக் கொள்வார்கள். இப்போது வேலை தேடும் தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் அரை கூவலாக இருக்கிறது. அதில் மின்னுபவர்கள் எளிதில் வேலை வாங்கிவிடுகிறார்கள். மற்றபடி ஒரு மனிதரின் தனித் திறமைக்கு முன்பு மொழி ஒரு தடையே இல்லை.

பொறியியல் கல்விக்கு தமிழ் வழியாகவும் வித்திடும் முன் அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மாணவர்களுக்கு சேர்ந்து படிக்கலாம், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிற தன்னம்பிக்கை ஏற்படும். இல்லாவிடில் தமிழை வாழவைக்கிறோம் என்கிற போர்வையில் ஏழை மாணவர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்துவிட, அது எவருக்கும் பயனில்லாத ஒரு திட்டமாக இருந்து தோல்வியில் முடியும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்