* சாதிக் கொடுமையை பார்பனர்கள் செய்கிறார்களா ?
* சாதிக்கலவரங்களில் பார்பனர்கள் ஈடுபடுகிறார்களா ?
* இரட்டை தம்ளருக்கும் 'பிராமணர்களுக்கும்' ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?
பிறகு ஏன் சாதிக் கொடுமைகள் குறித்து சாடுதலில் பார்பனர்களை இழுக்கிறீர்கள் என்று.
பொதுச் சமூகத்தில் சாதிக் கொடுமை என்பது சிறுபான்மை பெரும்பான்மை என்ற அளவில் நடக்கிறது. பிற்பட்ட சாதியினர்கள் நிறைந்துள்ள கிராமங்களில் தலித்துகளைத் தள்ளி வைப்பது பெரும்பான்மை எனும் பெயரில் பிற்பட்ட சாதியினர் செய்யும் வன்கொடுமை. சிறு நகரங்களில் தீண்டாமைச் சுவர், இரட்டை தம்ளர் முறைகளை வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமை பெரும்பாலும் அந்த கிராமத்தினரின் பெரும்பான்மையினர் சாதியினரால் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து சாதிக்காரர்களுமே அடக்கம். இதையெல்லாம் பாப்பான் செய்கிறானா ? அவனை ஏன் இதில் தேவை இன்றி இழுக்கிறீர்கள் என்பதாக பொதுப் புத்திக் குற்றச் சாட்டு எழு(து)வது வாடிக்கை தான். நினைத்துப் பார்த்தால் சொல்வது ஞாயம் தானே... !. பார்பனர்கள் எல்லோருமே படித்துவிட்டு நகரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள், 'அவாள் உண்டு, அவா வேலை உண்டுன்னு இருக்கா' அவாளை ஏன் இழுக்கிறேள்...?', என்று நினைக்கத் தோன்றும்.
கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு பார்பனர்கள் காரணமில்லை, அவர்கள் என்றோ அங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டார்கள். 'பெருங்காயம் இருந்த டப்பா வாசனைப் போகாது' என்பது போல், பார்பனர்கள் உயரடுக்கில் அமர்ந்து கொண்ட வருண அடுக்கு முற்றிலும் சரிய இன்னும் கூட ஒரு நூற்றாண்டு பிடிக்கும், ஆனால் சாதி எதிர்ப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் 50 ஆண்டுகளிலும் கூட சாதிப் பகைமைகள் ஒழியலாம். பிறப்பு வழியாகப் புகுத்தப்பட்ட ஒன்றை மனிதர்கள் அனைவருக்குமே ஞாபகமறதி என்ற நோய் தாக்கி தாம் எந்த சாதி என்பது கூட மறந்துவிட்டது என்பது ஏற்பட்டால் சாதி உணர்வு முற்றிலும் மறையலாம்.
இன்றைய தேதிக்கு மது, மாமிசம், மீன், முட்டை தொடாத பார்பனர்கள் மிக மிகக் குறைவு, உணவு வாழ்க்கை முறை அனைத்திலும் பார்பனர்களுக்கும் பிற சாதிமதத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை வெளிப்படையானது, ஆனால் பெருநகரங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் பார்பனர்களில் பலர் 'பிராமணர்களுக்கு மட்டும்' என்று விளம்பரம் செய்வது நன்கொடுமையா ? வீடு வாடகைக்கு எடுக்கிறவன் வாடகைக் கொடுககப் போகிறான். அது எவனாக இருந்தால் என்ன ? முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. அவன் வீடு அவன் வாடகைக்கு விடுகிறான் என்றாலும் கூட இதுவும் மறைமுகமாக பிற சாதியினரிடம் எந்த விதத்திலும் கலந்துவிடக் கூடாது என்பதான நவீனத் தீண்டாமை தான், இரட்டை தம்ளர் வன்கொடுமைகளுக்கு முற்றிலும் மாற்றான நகரத் தீண்டாமை இது. இரட்டை டம்ளர் கடை நடத்துபவனும் யாரும் என் கடைக்கு வா... என்று அழைக்காமல் தான் அந்த இழிவை வருகிறர்களுக்கு நடத்துகிறார்கள். பார்பனர்கள் முடிந்த அளவு தீண்டாமை கடைபிடித்து தான் வருகிறார்கள். எக்சப்சன் உண்டு, அது அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட சிறப்பு குணம். அதை சாதியின் பெருந்தன்மை என்று கொள்ள முடியாது.
பார்பனர்கள் மிகப் பெரிய அளவிலான தீண்டாமைகளில் தொடர்பில்லாமல் இருக்க அவர்களின் அங்குள்ள எண்ணிக்கை தான் அடிப்படையே அன்றி பிற சாதியினரைப் போல் குழுவாக வாழும் இடத்தில் எல்லாக் கொடுமையையையும் பிறரைப் போல் செய்தே வருகிறார்கள் என்பது பிராமணாள் ஒன்லி டூ லெட் போர்டுகளே சாட்சி. எனக்கு தெரிந்து சென்னை வாடகை வீடு விளம்பரங்களில் செட்டியார் ஒன்லி, நாடார் ஒன்லி, முதலியார் ஒன்லி என்று நான் பார்த்தது கிடையாது.
பாப்பான் தீண்டாமையை விட்டுவிட்டான், பார்பனர்கள் செய்வது இல்லை, பிராமணர் தீண்டாமையோ, வன்கொடுமையோ செய்வதில்லை போன்றவை பொது புத்தி சார்ந்த புரிதல்கள் மற்றும் பரப்புதல்களே. தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாக ஒரு சாரரை ஒதுக்குவதைப் போலவே, ஒட்டுமொத்தமாக பார்பனர் அல்லாத அனைத்து சாதியினரையும் புறக்கணிப்பதன் பெயர் என்ன ?
தாயாரின் சாதிய மனநிலையால் பார்பனர்களுக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு விட்ட பார்பனரின் மோசமான அனுபவம் ஆங்கிலத்தில் To-Let:Brahmins Only « Maami's Weblog