பின்பற்றுபவர்கள்

தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 ஜூலை, 2009

கலவை !

இந்த முறை சென்னை சென்று திரும்பும் போது இந்திய விமான சேவையின் இன்ப அதிர்ச்சி, விமானம் கிளம்பிய 29 ஆவது நிமிடம். விமானி அறையில் இருந்து அறிவிப்பு முதலில் ஆங்கிலத்தில் பிறகு தமிழில், கேப்டன் பெயர் சொன்னார்

'........பேசுகிறேன்...நாம் இப்போது 29 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறோம். வழக்கமாக 39 ஆயிரம் பறப்போம், குறும்தொலைவு விமானங்களுக்கு உயரக்கட்டுபாடு வைத்திருக்கிறார்கள், வழக்கமாக உயரமாக பறப்போம் நெடுந்தொலைவு விமானங்களுக்கு மட்டும் 39 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் , விமானத்துக்கு வெளியே -15 டிகிரி தட்ப வெப்பம் நிலவுகிறது, உள்ளே உங்கள் வசதிக்காக 25 டிகிரி வைத்திருக்கிறோம். நாம் சென்னை ஓடு தளத்தில் சுமார் நான்கு நிமிடம் பயணப்பட்டு, பிறகு சென்னையை கடக்கும் வரை புறப்பட்டதில் இருந்து 8 நிமிடங்கள் ஆகியது, இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்தமான் அழகிய தீவுகளைக் கடப்போம், இரவு நேரமாக இருப்பதால் உங்களால் அந்த காட்சியைக் காண முடியாது, பிறகு 2 மணி நேரத்தில் மலேசியா கோலாலம்பூர் மேலே பறப்போம், பிறகு அங்கிருந்து நேராக சிங்கப்பூரை சிங்கப்பூர் நேரப்படி காலை 7 1/2 மணிக்கு அடைவோம். சிங்கையின் தற்போதைய தட்பவெப்பம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அங்கு சுமாராக 25 டிகிரி இரவு நேர வெப்பம் நிலவுகிறது. எங்களது விமானப் பணிப்பெண் குமாரி ...... மிகவும் திறமையானவர், அவரது தலைமையில் செயல்படும் பணியாளர்கள் உங்களையெல்லாம் அன்பாக கவனித்துக் கொள்ள உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமையும். எங்களது விமான சேவையை தேர்ந்தெடுத்தத உங்களுக்கு எங்களது நன்றி. ஜெய் ஹிந்த்"

வழக்கமாக இந்தியில் / ஆங்கிலத்தில் கேட்கும் விமான குரல்கள் இந்த முறை தமிழிலும் கேட்ட போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த விமானிக்கு பாராட்டுகள்.

அது மட்டுமல்ல உற்சாக பானம் சாப்பிடுபவர்கள் 'பியர்' கேட்கும் போது திறந்து தான் தருவார்கள், திறக்க வேண்டாம் கொடுங்கள் என்றால் தரமாட்டார்கள், சிலர் பயணம் முடிந்து பிறகு தனக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று 'பியர்' டின் திறக்காமல் கேட்டு வாங்கி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை பயணத்தின் போது திறக்காமல் கேட்டவர்களுக்கு அப்படியே தந்தார்கள். இந்தியன் வான்வழி விமான சேவை தரம் மேம்பட்டு இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. முன்பெல்லாம் அதிகாலை தரை இறங்கினால் வாழை இலையில் சுற்றிக் கட்டிய மல்லிகைப் பூவை விருப்பப்படும் பெண்களுக்கு கொடுப்பார்கள், தற்போது இல்லை. மேலும் மிதமான சூடுநீரில் நனைத்து பிழியப்பட்ட துண்டு துணியை முகம் துடைத்துக் கொள்ளக் கொடுப்பார்கள் அதுவும் நடப்பில் இல்லை. பயன்படுத்திய போர்வைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். விமான ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தி ஊதியம் கொடுக்கிறார்களாம், பயணிகளுக்கான சிறப்பு சேவை குறைந்து போனதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சிங்கைக்கு வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் உள்நாட்டு விமானம் தான், வரிசைக்கு ஆறு என 3 - 3 இருக்கைகள் நெருக்கமாகவும் நடுவில் சென்று வரும் வழியும் இருக்கும். படக்காட்சிகள் காட்டும் வசதி இந்த விமானங்களில் இல்லை. நேரத்திற்கு கிளப்பிவிடுகிறார்கள் அதுவே பெரும் சாதனைதான்.

***

சென்னையில் ஊர்திகள் மிகுந்துவிட்டதால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கம் ஏற்படுகிறது. நானோ (nano) சிற்றுந்துகள் வந்துவிட்டால் போக்குவரத்து நெருக்கம் இன்னும் மிகுதி ஆகும். சிற்றுந்து வைத்திருக்கும் நடுத்தர வாழ்வாளர்கள் எண்ணிக்கை மிகுந்திருக்கிறது. பெருநகரத்திற்கு வெளியே கூடுவாஞ்சேரி, மறைமலை நகரில் பணி செய்பவர்கள் கூட சென்னைக்குள் குடி இருப்பதே காரணம், அதைத் தவிர்க்கவும் முடியாது, சென்னை புறநகரில் நல்ல வேலை, ஊதியம் கிடைக்கும், குழந்தைகளுக்கான படிப்பு ? அதற்காகத்தான் புறநகர் சென்றுவரும் தொல்லைகளை பொருத்துக் கொண்டு இருக்க வேண்டி இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புறநகருக்கு வேலைக்கு சென்று வரக் கழிக்கிறார்கள், காலை 7 மணிக்கு சென்றால் திரும்பி வர மாலை 9 மணி ஆகிறதாம். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ஆனால் ஞாயமான ஆசை. பெரும் நிறுவனங்கள் குளிரூட்டிய பேருந்தில் அழைத்துச் செல்வதால் சுற்றுச் சூழல், புகை இவற்றில் உடல் நிலை தாக்கம் ஏற்படுவது குறைந்திருக்கிறது. இல்லை என்றால் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரப்பயணம் வாழ்நாட்களை அரை(குறை)த்து விடும்.

***

ஏதும் நோய்வந்ததும், மருத்துவர் பரிந்துரையினால் உடற்பயிற்சி நடைபெயற்சி செய்யும் வழக்கம் மிகுந்திருக்கிறது, வரும் முன் உடற்பயிற்சி செய்தால் என்ன ? சென்னை ஜீவா பூங்காவில் நடுவயதைக் கடந்த ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி செய்கிறார்கள். கூட்டம் மிகுதியால் அனைவரும் எதோ ஊர்வலம் செல்வது போன்று இருந்தது. இந்த இடத்தில ஒரு ஆன்மிகச் செய்தியைச் சொல்லிவிடுகிறேன். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் குறைந்த அளவாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பெரிய கோவில்களும், பெரிய மதில்களுடன் நீளமான சுற்றுகள் (பிரகாரம்) வைத்திருந்தது, நம்ம ஆட்களுக்கு நடைபயிற்சி செய்யத் தான். குறைந்தது மூன்று முறை வலம் வரும் போது உடல் நிலை சீர்படுவதற்கு உதவுகிறது. நீங்கள் நாத்திகன் ஆனாலும், பெரிய பெரிய கோவிலுக்கு போங்க, வலமாக சுற்ற விருப்பம் இல்லை என்றால் இடமாக சுற்றுங்கள், உடல் நலத்துக்கு நல்லது தான். அதுக்காக கிரிவலம் சென்று 'திருடர்களிம்' சிக்கிக் கொள்ளாதீர்கள்

10 ஜூன், 2009

கலவை !

சென்ற திங்கள் (8/வெள்ளி/2009) பதிவானந்தமயி துளசி அம்மா சிங்கைக்கு திடீர் விஜயம் புரிந்தார். தம்பதி சகிதமாக கோவியார் குடும்பத்துக்கு மட்டும் தனிப்பட்ட காட்சி தந்தார்.

அதுவும் பெருமாள் கோவிலில் துளசி என்ன பொருத்தமான இடம் !!! அங்கே சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன வீணை இசை, கருநாடக இசையில் வைணவ தமிழ்பாடல்கள், சதிராட்டம் (பரதம்) நடந்தது. 5 - 6 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கைப் பெருமாள் கோவிலுக்கு துளசி அம்மாவின் அழைப்பின் பேரில் சென்றுவந்தேன்.
துளசி அம்மா ஜிகேவை இழந்து உடைந்து போய் இருக்கிறார். சும்மா நாமெல்லாம் ஒரு விலங்கு (பூனை) மீது இவ்வளவு பாசமாக இருக்க முடியுமான்னு நினைக்கிறோம். ஒரு உயிருடன் பாசத்துடன் பழகிவிட்டால் அந்த உயிர் மனுசனாலும், விலங்கானலும் ஒண்ணுதான். உடல் அமைப்பு தானே வேறுபடுகிறது. துளசி அம்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை. ஆனால் சோகங்கள் பகிர்ந்து கொண்டால் பாதியாகும் என்பது ஆன்றோர் வாக்கு. போகும் இடங்களுக்கு இப்போதும் ஜிகேவுடன் தான் செல்கிறார். ஆமாம் 'கிரிமேசன் செய்து அஸ்தி வாங்கி என்னுடனே எடுத்துச் செல்கிறேன்' என்றார். :((



விடைபெறும் முன் கோவில் எதிரே ஒரு ஆந்திரா சைவ உணவகத்தில் துளசி அம்மாவின் கருணையால் உண்டு வந்தோம், அங்கே சுவற்றில் இருந்த சித்தி புத்தி விநாயகரின் திருமணக் கோலம். 'இதப் பாருங்க பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகி இருக்கு' என்று காட்டினார். அன்று இரவு சமையல் வேலையில் இருந்து மனைவி தப்பினார். துளசி அம்மாவின் அடுத்த விஜயம் சென்னை. துளசி அம்மா இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதால், பக்தர்கள் ஏமாந்துவிடக் கூடாதே என்பதற்காக, அறிவதற்கரிய மந்திரத்தை அறிந்துவந்த இராமானுஜர் கோபுரம் ஏறி பொதுமக்களுக்கு அறிவித்தது போல் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தகவல், எனவே ரகசியம் காக்க வேண்டுகிறேன். :)

*****

எச்1என்1 பன்றிக்காய்சல் வைரஸ் வெகு விரைவாக பரவி வருகிறது "ராகெட்டை தேடிக்கிட்டு மூக்குக்கு அடியில் வந்துட்டான்" விக்ரம் படத்தில் சுகிர்தராஜ சத்தியராஜ் பேசும் சுஜாதாவின் பேச்சுரை. அதுபோல் எச்1என்1 சிங்கை வரை வந்துவிட்டது. வெகுவிரைவாக பரவும் இந்த தொற்று நோய் குறித்து உலக நல நிலையம் (WHO) பெரிய அளவில் கவலை தெரிவித்து வருகிறது. சிங்கையில் நலிவடைந்தோர், தொற்றியோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. உலக அளவில் 25 ஆயிரத்திற்கும் மிகுதியானோருக்கு பரவி இருக்கிறது. 150க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். நோய்க்கு தடுப்பு கண்டுபிடிக்காவிடில் அணு ஆயுதத்தின் தேவை இல்லாமலேயே எல்லோரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவுதான்.


*****

அண்மையில் பார்த்த திரைப்படங்களில் 'பசங்க' மிகவும் நன்றாக இருந்தது, அஞ்சலிக் கதையில் அஞ்சலி மற்றும் மேல்தட்டு சிறுவர்கள், காதல் ஜோடி என கமர்சியல் இருந்தது. இது அஞ்சலி இல்லாமல் முழுக்க முழுக்க கிராமத்து சிறுவர்களின் பள்ளிக் குறும்புகள் நிறைந்த படம். வில்லச் சிறுவன் நடிப்பு அட்டகாசம். சிறுவர்களின் குறும்புத்தனங்களில் முகம் சுளிக்காதவற்றை படமாக்கி இருக்கிறார்கள். யதார்த்தம் என்றப் பெயரில் பள்ளிப்பசங்க சிகெரெட் குடிப்பதையெல்லாம் காட்டுகிறேன் என்று காட்டி இருந்தால் ரசிக்க முடியாமல் போய் இருக்கும். பசங்க இயக்குனருக்கும், பசங்களுக்கும், அவங்க பெற்றோர்களாக நடித்தவர்களுக்கும், அந்த காதல் ஜோடிகளுக்கும் பாராட்டுகள்.

*****

ஈழத்தமிழர் இன்னல் குறித்து எங்கோ யாருடைய பதிவிலோ படித்த பொன் மொழி ஒன்று

'கண்ணெதிரே நடக்கும் கொடுரங்களை கண்டும் காணோதர் மன நிலை பிறழ்ந்தோர். அவர்கள் ஒன்று மனநோயாளியாக இருக்க வேண்டும் அல்லது தன் நலம் ஓங்கியவராக இருக்க வேண்டும். சிந்திக்க தெரியாதவர்கள் மனநோயாளி என்றால் மறுப்பவர்களும் மனநோயாளிதானே ?'

*****

ஒருவர் : அந்த சாமியாருக்கு செல்வாக்கு எப்படி ?

மற்றொருவர் : அதான் பாக்குறிங்களே, கையில செல்போன் வச்சிருக்கிறார், அவரு பேரே 'செல்வாக்கு சாமியார்' தான். செல்போன் வழியாகத்தான் வாக்கு சொல்லுவாராம்.

- இது ஸ்வாமி ஓம்கார் குறித்த ஜோக் அல்ல :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்