பின்பற்றுபவர்கள்

திரை உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் !

செத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழுது தான் நாமும் அதுபற்றி பேசமுடியும். பாலு மகேந்திரா மறைவை ஒட்டி அவரது அருமை பெருமைகளை கூறி, கூடவே பாலா போன்ற சிறந்த இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் எவரும் பாலுமகேந்திராவின் பெண்கள் மீதான பித்தை இலைமறை காய்மறையாக மட்டுமே கூறிவிட்டு வானளவில் புகழ்கிறார்கள். 

சமுக இணைய தளங்கள் இல்லாத பொழுது பொது மக்களின் கருத்து இவை என்று அரசியல்வாதிகளையோ, திரைகலைஞர்களையோ, சாமியார்களையோ, மதவாதிகளையோ, சாதிவெறியர்களையோ போய் சேராது. ஊடகங்கள் பெரிதாக எதையும் கண்டிக்காது, தகவல் என்ற அடிப்படையில் தான் எதையும் அவர்களால் எழுத முடியும். ஆனால் தற்பொழுது நிலைமையே மாறிவிட்டது, இணையத்தை / சமூக இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள் சில விழுக்காட்டினர்கள் என்றாலும் அவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்களிடமும் அவர்களால் ஒன்றை விவாதம் செய்து பொதுவான பார்வையை மாற்றிவிட முடிகிறது. ஒரு எழுத்தாளரின் கருத்து கதைவழியாக பல வாசகர்களை அடைவதைப் போல் சமூக இணையத் தளங்களில் எழுதுபவர்கள் வெளியில் பலரிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எனவே சமூக இணையதளங்கள் என்பவை சக்திமிக்க ஊடகங்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து தான் அரசியல்வாதிகள் உள்ளிட்ட போலி சாமியார் உள்பட அனைவரும் அதன் வழியாகவும் கடைவிரித்திருக்கிறார்கள். 

பாலுமகேந்திரா என்கிற தனிப்பட்ட மனிதன் எப்படி திரைக்கு வெளியே நடந்து கொண்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை, அவரது படைப்புகளை தான் நான் ரசிக்கிறேன், புகழ்கிறேன் என்று உங்களால் ஒதுங்க முடிந்தால் தனது படைப்புகளின் மூலம் கிடைத்த புகழ் செல்வாக்கு ஆகியவற்றை பெண்கள் மீது வீசும் வலையாகப் பயன்படுத்தி கொண்டதற்கு நீங்களும் தான் பொறுப்பாகிறீர்கள். நிறை குறை அற்றவர் யார் ? குறைகளைப் பேசவேண்டாமே ? என்று எல்லோரும் மவுனித்தால் பிறகு செத்தால் கூட நம்மை தூற்ற ஆட்கள் உண்டு என்று தவறு செய்யும் முன் எவரும் உணரவே மாட்டார்கள்,

ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

பாலுமகேந்திராவால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள்  'என்மகள் ஷோபா' என்று தொடராக ராணி வார இதழில் ஒரு கண்ணீர் காவியமாகவே அதனை எழுதி, சில ஆண்டுகளில் சோகம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டார் ஷோபாவின் தாயார். ஷோபாவின் மறைவிற்கு பிறகும் பல நடிகைகளின் தொடர்புகள் இருப்பதையும் செய்தி இதழ்கள் எழுதிவந்தன. நடிக்க வரும் பெண்களின் இயலாமையை படுக்கைக்கு பகடையாக பயன்படுத்திக் கொண்டதை அவருடைய தொழில் திறமைகள் அனைத்திற்குமான சன்மானமாக எடுத்து கொண்டு போற்றப்படவேண்டும் ?

தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று இவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஒருவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, ஆனால் ஏமாற்றி, இயலாமையைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கையையே கெடுத்தவர் என்ற முறையில் நம்மால் விமர்சனம் செய்யாமல் தூற்றாமல் இருக்க முடியவில்லை. இந்த துறையில் இவரைப் பொன்ற தவறான நபர்களிடம் திறமை இருக்கும் பொழுது பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.  நாலு இயக்குனர்களை உருவாக்கியது சாதனை என்றால், நான்கு நடிகைகளிடம் நடந்து கொண்டவிததை தூற்றவும் தான் வேண்டும். இவரிடம் வாய்ப்பு கேட்க வந்து எத்தனை பெண்கள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் பெண்மையையும் இழந்து சென்றார்களோ.

திறமையாளனின் பொறுக்கித்தனங்கள் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற பொதுப் புத்தியில் எனக்கு உடன்பாடு இல்லை.

சிறுவயதில் 'என்மகள் ஷோபா' தொடரை படித்தவன் என்ற முறையில் பாலுமகேந்திராவின் மரணம் என்னைப் பொருத்த அளவில் இன்னும் சில மவுனிகாக்கள் வலையில் வீழும் முன் 'ஒழிஞ்சான்'

மேலும் துப்பியவர்களின் இணைப்பு :
சோபாவை கொன்றது ஏன்? ஒலகப் படைப்பாளி பாலு சேர். 

10 நவம்பர், 2013

சந்தானம் நடிக்கும் படங்களில் 'சரக்கு' இருக்கு !

இன்னிக்கு (தட்ஸ் தமிழ்) செய்திகளில் "ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்" என்ற செய்தியும் இடம் பெற்றிருந்தது.

அதைப் படித்துக் கொண்டு வரும் பொழுது வாசகர் 'கருத்தில்' படுமோசமாக ராதிகாவின் திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி விமர்சித்திருந்தனர். ஒரு பெண் திருமணம் ஆகாமலேயே இருந்தால் அவளையும் சமூகம் நல்ல பார்வையில் / விமர்சனத்தில் வைப்பதில்லை, விதவைகளையும் நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, மறுமணம் செய்துக் கொள்பவர்களையும் பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருப்பதில்லை. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தால் அவளுடைய தொழிலைவிட கேவலமாக அவளை சொல்லித் தூற்ற ஏதேனும் உண்டா என்று ஆராய்ச்சி நடத்தும் நம் சமுகம். ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை (ஆண்) சமூகம் முடிவு செய்வதும், தீர்ப்பு சொல்வதுமாக இருக்கும் வரை பெண் விடுதலை பெற்றுவிற்றாள் என்று சொல்ல எதுவும் இல்லை. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது கூட சமூக இழிவு என்பது போல் சித்தரிக்கும் கும்பல் செய்தி ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் எழுதுவது இன்றைய அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் 21ஆம் நூற்றாண்டின் இழிந்த நிலை என்று தான் சொல்ல முடியும்.

சரி ராதிகா சொன்ன கருத்திற்கு வருகிறேன், ராதிகா எந்த நடிகர் குறித்து அந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை, அவரது ஆஸ்தான திமுக இளைஞர் அணி தலைவர் முக.ஸ்டாலின் அவருடைய புதல்வர் நடித்த ஒ.க.ஒ.க படத்திலும் கூட மேற்கண்ட காட்சிகள் உண்டு, எனவே பொதுவாக இப்போது வரும் படங்களில் 'சரக்கு' இல்லாத படங்கள் வெகு அரிது.






குறிப்பாக சந்தானம் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளில் பாரும் (குடியகம்), பீரும் இல்லாத படங்களே சொற்பம் தான். செண்டி'மண்டுகள்' நிறைந்த  திரை உலகில் சந்தானம் ஹீரோவுடன் தண்ணி அடிக்கும் காட்சி வைத்தால் படம் 'சூப்பர் ஹிட்' என்கிற நம்பிக்கை உலவும் போல, தொடர்ந்து அவர் நடித்து வெளி வந்த படங்களில் 'தண்ணி அடிக்கும்' காட்சிகள் இடம் பெற்றே வருகின்றன.

மக்களுக்கு கட்டுபாடுகள் இல்லாத நாடுகளில் சட்டம் போட்டு தான் கட்டுப்படுத்துவார்கள். புகைப்பிடிப்பதை காட்சியாக வைக்கும் பொழுது தன்னை மானசீக தலைவனாக நினைக்கும் ரசிகர்கள் அதே பாதையில் சென்றுவிடுவார்கள் / பொது இடத்தில் புகைப்பதை பற்றி சற்றும் கவலைப்படமாட்டார்கள் என்பதை நடிகர் ஒப்புக் கொள்வதில்லை, அரசு தடைகாரணமாக இப்பொழுது (ஸ்டைலாக) புகைப்பிடிக்கும் காட்சிகள் படங்களில் வருவதில்லை, அதனால் தான் அடுத்தவங்க மூக்கில் நேராக புகையை விட்டு முகம் சுளிக்க வைக்கும் பொது இடப் புகைப்பழக்கம் குறைந்தும் வருகிறது.

திரையுலகின் ஓவ்வொரு அசைவும் சமூகத்தில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்ததான் செய்கின்றன, இல்லை என்றால் நமக்கு திரையுலகை சார்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகுவதற்கான வாய்ப்பே இல்லை. 

அந்த பொறுப்பை உணர்ந்தால் இயக்குனர்கள் மக்களை தவறான பாதைக்கு திருப்ப மாட்டார்கள், நடிகர்களும் தம்மை வைத்து இத்தகைய காட்சி வேண்டாம் என்று கூறுவார்கள். 

ரசிகர்கள் பார்வைக்கு பாரில் வைக்கும் காட்சிகளைப் பற்றி சந்தானம் போன்ற வளரும் நடிகர்கள் சிந்திக்க வேண்டும். ராதிகா சொல்வதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

21 செப்டம்பர், 2011

பக்திப்பட இயக்குனர் ஏபி நாகராஜன் !

திரைப்படங்கள் பொழுது போக்குத் தொழில் என்றாலும் பண்டைய இயல் இசை நாடகக் கலைகளின் தொகுப்பான / நீட்சியான இன்றைய வடிவம் தான் திரைப்படங்கள் என்பதால் அவை வெறும் பொழுது போக்குச் சார்ந்தவை என்று ஒதுக்கிவிட முடியாது. வாழ்வியல், இசை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை மக்களிடம் கற்று அதைத் தொகுத்து மக்களுக்கே அளித்துவருபவை தான் அவை. எல்லாவற்றையும் வியாபாரப் பொருள்களாக ஆக்கிப் பார்க்கும் இன்றைய உலகில் சிக்கிச் சீரழிந்து வருபவைகளில் இந்தப் பொழுது போக்கு கலையுலகும் ஒன்றாகும். எளிதில் மக்களைச் சென்று அடையும் வியாபாரப் பொருள் மற்றும் அதில் அறிமுகம் ஆகுபவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர் ஆகிறார்கள் என்பதால் புகழும் பணமும் ஒரு சேர நாடுவோருக்கு திறமையின் அடிப்படையில் அவற்றை வாரி வழங்குவது திரைப்படத் தொழிலின் சிறப்பாகும். அதில் கிடைக்கும் பேரும் புகழும் அரசியல் நாற்காலியை அசைத்துப் பார்க்கும் அல்லது கைப்பெற்றும் என்பதால் திரையுலகம் மக்கள் வாழ்வியலை, ஆட்சி அதிகாரத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்றால் அதில் மறுக்க எதுவும் இல்லை. திரைப்படங்கள் மூலம் நல்ல தமிழை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நல்ல உரையாடல்களை எழுதியவர்கள் மிகச் சிலரே, அதில் குறிப்பிடத்தக்கவர் ஏபி நாகராஜன்.

*****

இன்றைய காலகட்டத்தில் படங்களில் உரையாடல்கள் குறைவு காட்சியும் மக்களின் புரிந்துணர்வும் உரையாடல்களின் தேவைகளைக் குறைத்துவிட்டன, தற்போதைய படங்கலில் நீள உரையாடல்கள் வந்தால் மக்கள் விரும்புவதில்லை, 30 ஆண்டுகளுக்கு முன்புவரை உரையாடல்களுக்காகவே பார்க்கப்பட்டவை ஏபி நாகராஜனின் படங்கள். இன்றைக்கும் எப்போதும் பலமுறைப் பார்க்கத் தக்கப் படங்களாகவே ஏபி நாகராஜனின் சரஸ்வதி சபதம், திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகனாம்பாள் படங்கள் உள்ளன. அருவெறுப்பற்ற நகைச்சுவை, செந்தமிழ் கலந்த சொற்கள் இட்டு நிரப்படுவதுடன் காட்சிக்கு ஏற்ற உரையாடல்களை எழுதுவதில் வல்லவராகவே திகழ்ந்தார் ஏபி நாகராஜன்.

நான் இதுவரைப் பார்த்தப்படங்களில் என்றைக்கும் நினைவில் வருபவையும் பார்க்கப் பார்க்க சலிக்காத படங்களில் ஏபி நாகராஜனின் திருவிளையாடல் மற்றும் தில்லானா மோகானாம்பாள், தில்லானா மோகானம்பாள் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவை இல்லை, தமிழ் திரையில் வரலாறு படைத்த படங்களில் அது முதன்மையானது, நாட்டுப்புறக் கலைஞர்களின் (தமிழ் நாட்டின் தனிப்பெரும் கலையை நாட்டுப்புறக் கலை என்று ஒதுக்கி வைத்துப் பார்க்கும் கேவலமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்) உணர்வுகளை படம் பிடித்ததுடன் தமிழ்நாட்டில் சிலப்பதிகாரத்திற்கு முன்பிருந்தே வாழும் நடனக்கலையான சதிராட்டம் (பரதம்) படத்தின் மையமாக இருந்தது, நடித்தவர்களும் அதில் வாழ்பவர்களாகவே நடித்திருந்தனர்.

பட்டிதொட்டி எங்கும் வசன நடைகளுக்காக பாராட்டுபெற்று இன்றும் அதன் வசனங்கள் 'மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததோ ?' என்று பலரும் பேசும் புகழ்பெற்ற வசனங்கள் இடம் பெற்றத் திரைப்படம், 'அம்மையப்பன் சொல்லுக்கே செவி சாய்க்காத நான், உன் பேச்சைக் கேட்க சற்று நிற்கிறேன் என்றால் அது நீ பேசும் தமிழுக்காகத் தான்' என்று கோவித்துக் கொள்ளும் முருகன் ஒளவைப்பாட்டியிடம் சொல்வதாக கடவுளுக்கும் மேலாக தமிழை பெருமைபடுத்தி இருப்பார் தன் உரையாடல்கள் எனும் பேனா வீச்சால், அதுமட்டுமா தமிழில் இலக்கண இலக்கிய பொருள் பிழைகள் அது கடவுளே செய்தாலும் மன்னிக்க இயலாத ஒன்று என்று நக்கீரன் வழியாக 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கி இருப்பார் ஏபி நாகராஜன்.


திருவிளையாடல் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்தும் கவியரசர் கண்ணதாசன் வரிகளில் தெவிட்டாத இசையமுதம இசையில் என்றும் கேட்கவல்லவை. காட்சி அமைப்பு, பாடல்கள்,இசை அனைத்தும் ஒன்றே பொருந்தி பார்பவரை மூன்று மணி நேரம் கட்டிப்போட வைத்திருக்கும் அப்படம், சிவாஜியின் மிகையற்ற நடிப்பு படத்திற்கு மேலும் மெருகு. ஆணவம் மிக்க கர்நாடக சங்கீதப் பாடகராக (ஹேமநாத பாகவதர்) வரும் டிஎஸ் பாலையா மிகச் சிறந்ததொரு நடிப்பை வழங்கி இருப்பார். 'இன்றொரு நாள் போதுமா ?' பாலமுரளியின் இளம் வயதுக் குரல் என்றென்றும் கேட்க இனிமைதான். அதையும் வீழ்த்த அடுத்து டி எம் எஸ் ஆல் பாடப்படும் 'பாட்டும் நானே பாவமும் நானே', இத்தனையும் கோர்த்து நல்லொதொரு சமூகம், பக்தி மற்றும் பொழுது போக்குப்படமாகவே இயக்கி இருந்தார் ஏபி நாகராஜன்.

அக்கம்மாப்பேட்டை பரமசிவன் நாகராஜன் என்ற முழுதான அவர் பெயரின் சுருக்கமே ஏபி நாகராஜன். சிவாஜி கனேசன், எம்ஜிஆர், ஜெமினிகனேசன், சாவித்திரி, பத்மினி மற்றும் ஜெயலலிதா, உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் /நடிகைகளை வைத்து பலப் படங்களையும் இயக்கியும், சில தெலுங்கு படங்களின் கதை / திரைகதை அமைத்துள்ளார்

வடிவுக்கு வலைகாப்பு என்ற 1962ல் தொடங்கிய அவரது இயக்குனர் பயணம் எம்ஜிஆர் நடித்த நவரத்தினம் 1977 வரை நீடித்தது, கிட்டதட்ட 15 ஆண்டுகள் 26 படங்கள் வரை இயக்கியுள்ளார், அவர் இயக்கியவைகளுள் இன்றும் பேசப்படுபவை, பார்க்கப்படுவை அவற்றில் சில

திருவிளையாடல், தில்லானாமோகனாம்பாள், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை ஆகியவை, மேலும் ராஜ ராஜ சோழன், காரைக்கால் அம்மையார், திருமால் பெருமை, திருவருட் செல்வர் உள்ளிட்டவை பக்தி மற்றும் வரலாற்றுப் படங்களாகும், பெரியார் முழுக்கம் தமிழ்நாட்டில் பெரியத்தாக்கம் இருந்தும் ஏபி நாகராஜனின் பக்திப்படங்கள் மிகவும் விரும்பிப்பார்க்கப்பட்டன என்பது இங்கு குறிப்ப்டத் தக்கது, இன்னும் சொல்லப் போனால் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரங்களையும் அதனால் ஏற்பட்ட மக்கள் உணர்வு அலைகளையும் மறைமுகமாக கட்டுப்படுத்தும் வேலையை இவரது வசனங்கள் செய்தன என்றால் அது மிகையல்ல.

பக்திப்படங்கள் மட்டுமல்லாது நவராத்ரி, மேல்நாட்டு மருமகள், குமாஸ்தாவின் மகள் மற்றும் சில சமூகப்படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகனேசனின் முழுமையான நடிப்பாற்றலை வெளிப்பட வைத்த இயக்குனர்களில் இவரே முதன்மையானவராக நினைக்க முடிகிறது.

தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திகாட்டி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கும் பங்காற்றிய ஏபி நாகராஜன் இந்திய அரசால் இன்னும் கவுரவிக்கப்படவில்லை என்பதை பலர் வருத்ததுடன் சொல்கிறார்கள்.
ஏபிநாகராஜனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு அவர் தமிழனாகவும் பிற்பட்டவராகவும் பிறந்தது தான் காரணம் என்றே எண்ண வேண்டியுள்ளது.

தமிழ் கூறும் நல் உலகிலும் ஏபி நாகராஜன் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை, அவரது பிறந்தத் தேதி வயது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை. அவரைப்பற்றி எழுதப்பட்டுள்ள விக்கிப்பீடியா ஆங்கிலக் கட்டுரையில் அவரது படம் கூட இடம் பெறவில்லை, வரலாறுகள் எழுதப்படாமல் தொலைக்கப்படுவதற்கு நம் அலட்சியமும் காரணம், ஏபி நாகராஜன் பற்றி முழுமையான தொகுப்பை எழுத முடியவில்லை, எதிர்காலத்தில் தகவல்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகவல் தெரிந்தவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். பின்னர் அவற்றை இடுகையில் சேர்க்கிறேன்.

(From the Web) A. P. Nagarajan is a veteran Tamil film director, who set a trend in film making in Tamil cinema in 1960s. He started his film career as a dialogue writer for Nalvar (1953), in which he also acted. He founded a production with actor V.K. Ramasamy and made Nalla Idathu Sambandham in 1958. When he started directing, his first few films were based on contemporary themes like the one on a boy guide working in Mahabalipuram (Vaa Raja Vaa). In the mid sixties he directed a series of films on religious subjects like Sarasvathi Sabatham (1966), thereby starting a trend in Tamil film making.

13 செப்டம்பர், 2010

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா !

ஒருவார இடைவெளியில் திரையுலக நட்சத்திரங்களான நடிகர் முரளியும், பாடகி ஸ்வர்ணலதாவும் திரையுலகையும் திரை இசை இரசிகர்களையும் விட்டு மறைந்துவிட்டனர்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் மிகவும் இனிமையான பாடல் ஒன்று 'வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா' என்ற பாடல், இந்த பாடல் காட்சி படி கவுசல்யா ஒரு திருமணத்திற்கு வருவார் என்று நண்பர்கள் சொல்ல, அந்த திருமண ஊர்வலத்தில் பாடகராகச் சென்றால் கவுசல்யாவை பார்க்க முடியும் என்பதால் முரளி ஒத்துக் கொண்டு பாடச் செல்லுவார்.

கவுசல்யாவின் குரலை மட்டும் அறிந்தவராக படத்தின் இறுதிவரை காட்சிகளை அமைத்திருப்பார்கள். படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சான். தங்கர்பச்சான் முரளி மீது மிகவும் அன்பு கொண்டவர், முரளியின் இறுதி சடங்குகளின் போது துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தாராம்.

மெற்கண்ட பாடலைப் பாடியவர்கள் ஆண் குரலுக்காக எஸ்பிபியும் பெண் குரலுக்கு ஸ்வர்ணலதாவும் மிக நன்றாகப் பாடி இருப்பார்கள். தேவாவின் இசையில் பாடல் நன்றாகவே அமைந்திருந்தது. கிளாரிநெட், ட்ரம்ஸ் என ஊர்வலப் பாடல்களின் இசையில் கேட்க சலிக்காத பாடல், படம் வெளியான பிறகு மூன்று ஆண்டுகள் வரையிலும் கூட அந்தப் பாடல்களை ஊர்வல இசைகளில் அடிக்கடி கேட்க முடிந்தது.

பாடல் காட்சியின் போது பாடகியாக நடிப்பவர் இடையில் தாகத்திற்காக சோடக் குடிப்பதாகவும் உடனேயே பெண் குரலில் தொடரவேண்டிய நிலையில் முரளியே குரலை மாற்றிப் பெண் குரலில் பாடுவதாக அமைந்தப் பாடல். சொர்ணலாதாவின் உருவத்தை ஒத்த ஒரு துணை நடிகை படத்தில் பாடலை பாடிவருவார். முரளி பெண் குரலில் பாடுவதாக அமைந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல். பாடியது ஸ்வர்ணலதாவாக இருந்தாலும் முரளியின் அந்த நொடி நடிப்பு அவரே அதைப் பாடுவதாக ரசிகர்களை உணரவைத்தது.

'ஆட்டமா தேரோட்டமா ?' சொர்ணலாதாவை அடையாளப்படுத்தியதைப் போன்றே ரம்யா கிருஷ்ணனின் இடைகால மீள் வரவையும் அந்தப் பாடல் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சித்ராவின் பாடல்கள் வெளிவந்த காலங்களில் சொர்ணலதாவின் குரல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களும் இனிமையாக அமைய எல்லா முன்னனி இசை அமைப்பாளர்களிடம் ஸ்வர்ணலதா பாடி வந்தார்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போன்ற சோகப்பாடல் மட்டுமில்லாது மிகவும் விரைவான 'மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாயா' போன்ற பாடல்களிலும் தனி முத்திரையை பதித்தார்.

பூந்தோட்டத்தில் எந்தப் பூ அழகு என்று இனம் காண முடியாதது போலவே பாடகியில் இவர் இனிமையான குரலுக்கு சொந்தமானவர் என்பதாக நான் பாடல்களை ரசிப்பதில்லை, என்பதால் எல்லாப் பாடகிகளைப் போலவே ஸ்வர்ணலதாவும் இனிமையான குரலுக்குச் சொந்தகாரராகவே எனக்கு பட்டார். எந்த ஒரு தென்னிந்திய பாடகியும் தமிழில் பாடுவதன் மூலமே பெரும் புகழடைகிறார்கள் என்பதை ஸ்வர்ணலதாவும் நிருபணம் செய்துவிட்டார். மலையாளி என்றாலும் கூட ஒரு தமிழ் பாடகியாக தமிழ் மண்ணில் சென்னையில் இறுதி மூச்சை விட்டு தமிழ் பாடகியாக மறைந்திருக்கிறார் என்பதால் தமிழ் திரை இசை இருக்கும் காலம் வரை ஸ்வர்ணலாதாவும் போற்றப் பட வேண்டிய ஒருவர்.

ஸ்வர்ணலாதவின் குரலில் இனி புதிய பாடல்கள் கிடைக்காது என்று நினைக்கையில் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. திரை இசை நுகர்வாளன் என்ற முறையில் ஸ்வர்ணலாதாவின் மறைவில் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.

முரளியும் ஸ்வர்ணலாதவும் முத்திரை பதித்து விட்டுச் சென்ற பாடல், யூடியுபில் கேட்டு பாருங்கள்.

9 செப்டம்பர், 2010

காலத்தை வென்ற முரளி !

ஒரு நடிகர் / நடிகை மக்கள் மனதில் நிற்பவரா இல்லையா என்பதை அவருடைய இழப்பு நிருபனம் செய்துவிடும் என்பது முரளி மறைவால் உண்மையாகி இருக்கிறது. சிலுக்கு ஸ்மிதா மறைந்த போது தான் அவருடைய ரசிகர்கள் அவருடைய கவர்சியை மட்டுமே ரசிக்கவில்லை என்பது உண்மையானது. நேற்று நக்கீரன் இணைய பக்கத்தின் தலைப்பில் முரளிப் படத்தைப் போட்டு நடிகர் முரளி மாரடைப்பால் மரணம் என்று வெளி இட்டு இருந்த செய்தியைப் படித்தவுடன் அந்த ஒரு சில நொடிகள் அதிர்ச்சி கொடுத்தன. நடிகர் என்பதால் அவருடைய இழப்பு நம் கவனம் ஈர்க்கிறதா ? என்று பார்த்தாலும் அதையும் தாண்டி நம்மை அறியாமலேயே நம்முடைய மனதில் இடம்பிடித்த நடிப்புக்குச் உடைமையானவர் என்பதை தொடர்ச்சியான அவர் நடித்தப் படங்களின் காட்சிகள் மனக்கண்ணுக்குள் ஓடி உண்மையாக்கியது. முரளி நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்காவிட்டாலும் அவருடைய வெற்றிப் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் குறிப்பிடத்தகுந்தது புதுவசந்தம் மற்றும் இதயம். நடிகன் என்றாலும் கூட நம்மைச் சுற்றிலும் இருக்கும் கருப்புநிற மனிதர்களில் ஒன்றாக வரும் பாத்திரங்களை படைத்தவர் என்பதால் முரளி நம்மை அறியாமலேயே நமக்குள் சென்றிருக்கிறார்.

தொடர்ந்து நாயகனாக நடித்தாலும் விஜயகாந்த், சரத்குமார், மம்முட்டி போன்ற பெரும் நடிகர்களின் தம்பியாக, துணைப்பாத்திரமாக நடிக்க தயங்கமால அந்தப் பாத்திரங்களை நிறைவாக செய்தவர். கேஎஸ்ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சமுத்திரம் படத்தில் சரத்துக்கு தம்பியாகவும் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு அண்ணனாகவும் , ரம்பாவுக்கு கணவனாகவும் சிறப்பாக நடித்திருப்பார், அந்தப் படத்தில் சரத்குமாரைவிட சிறப்பாக செய்தவர் முரளி தான். அதே போன்று லிங்குசாமியின் ஆனந்தம் படத்தில் 'வான்மதி சோப்' விளம்பர பணியனைப் போட்டுக் கொண்டு மம்முட்டிக்கு தம்பியாக அண்ணன் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவராகவே நடிப்பில் பின்னி இருப்பார். சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான என் ஆசை மச்சான் படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக என இவர் தம்பியாக நடித்தப் படங்களில் தம்பி பாத்திரத்திற்கு நல்லதொரு இலக்கணம் என்று சொல்லக் கூடிய நடிப்பை வழங்கி இருப்பார்.

புதுவசந்தம், காலமெல்லாம் காதல் வாழ்க, இதயம் ஆகிய படங்களில் மேடையில் மைக் பிடித்து பாடிய இவரது பாட்டுக்கள் என்றும் இனிமையாகக் கேட்கக் கூடியவை. பெரும்பாலும் குறைவான செலவில் படமெடுக்கவும், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆன முகம் என்பதால் புதிய இயக்குனர்கள் எப்போதும் நாடிய நடிகர் முரளி. கஸ்தூரி ராஜாவின் என் ஆசை ராசாவே படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு மகனாகவும் நடனக் கலைஞராகவும் நடித்தார். 90களின் முன்னனி நடிகைகள் ரோஜா, மீனா உட்பட நேற்றைய முன்னனி நாயகி சிம்ரன் வரை பல முன்னனி நடிகைகளுடன் 90க்கும் மிகுதியான படங்களில் நடித்துள்ளார்

முரளியின் படங்களையும் சிறப்பான பாத்திரங்களையும் பதிவர் முரளி கண்ணன் தொகுத்து வெளி இடுவார் என்று நினைக்கிறேன்.

நடிகனுக்காக / நடிகைக்காக வருந்துவதா என்று கேட்டால் மறைமுகமாக அந்த நடிகனின் நடிப்பு நம் மனதில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நடிகர்கள் பிழைப்புக்காக புகழுக்காக நடிக்கிறார்கள் என்றாலும் அதைத்தாண்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற அவர்களின் நடிப்பின் ஈடுபாடு நம்மை எப்படியும் அடைந்துவிடுகிறது, அப்படியானவர்களுக்கு உருகுவதில் தவறு இல்லை. நடிகர்கள் மட்டும் இல்லை, எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது நலவாதிகள் இவர்கள் தம்முடைய பிழைப்பு வாதம் என்பதைத் தவிர்த்து அவர்களின் உழைப்பு, ஈடுபாடு, அர்பணிப்பு ஆகியவற்றினால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் போது அவர்களுக்காக உருகுவதில் தவறே இல்லை. அது தான் நாம் அவர்களின் பொது நலத்தை, அர்பணிப்பை அங்கீகரித்ததாக நாம் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் ஆகும்.

முரளியின் மறைவு பலராலும் பேசப்படுவதில் இருந்து அவர் அதிரடி நாயகனாக இல்லாவிட்டாலும் தமிழ் திரை ரசிகர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்த நடிகர் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது. முரளியின் மறைவால் அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

என்றும் மாறாத் தோற்றத்தில் இருக்கும் முரளி தன் திடிர் மறைவின் வழி தன் தோற்றத்தை காலத்தாலும் மாற்ற முடியாமல் செய்துவிட்டார்.

18 டிசம்பர், 2009

வேட்டைக்காரன்... அடேங்கப்பா !




படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.

7 அக்டோபர், 2009

திரைத் துறையினரின் கண்டனங்கள் மற்றொரு நடிப்பு !

நடிகைகளைப் பற்றி அவதூறுகளாக செய்தி வெளி இடுகிறார்கள் என்று கண்டனக்குரல் எழுப்பி இருக்கின்றனர் தென்னிந்திய திரைப்பட (நடிகர்) சங்கத்தைக் கூட்டிய நடிகர்கள். அவதூறுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதில் ஒன்றும் தவறு இல்லை. செய்தி ஊடகங்களும் திரைப்படத்துறையும் நகமும் சதையும் போன்றதே. ஒருவரை ஒருவர் சார்ந்தே மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். படப்படிப்பு தளங்களில் உச்ச நடிகர்கள் தும்முவது முதல் நடிகைகள் பித்த வாந்தி எடுப்பதுவரை செய்தியாக்குவது செய்தி ஊடகங்களின் மக்கள் சேவை என்றால் குப்பைப் படங்களை அதே செய்தி ஊடகங்களின் வழியாகத்தான் மிகவும் பிரமாண்ட விளம்பரங்களின் வழி பொதுமக்களின் சுறுக்குப் பையின் சில்லரைக்கு குறிவைத்து செயல்படுவது திரைத்துதுறை.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு என்கிற பெயரில் திரைத்துறையில் அலைக்கழிக்கப்பட்டு அன்றாடம் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனையோ பேர். அதில் ஒருசில பெண்கள் விதிவிலக்காக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நல்ல நடிகையாக வளர்பவர்கள் என அவர்களின் எண்ணிக்கைக் குறைவே. இதைத் திரைத்துறையில் இருப்பவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். திரைத்துறை என்பது முழுக்க முழுக்க ஆண்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழில் கூடம். நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் 'அலைக்கப்படும்' பெண்கள் அதை நம்பி சிக்கியபிறகு, நல்ல வாய்ப்புக் கிடைப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்துவிடுபட்டு பணம் புகழுக்காக அதைத் தொடர்வார்கள். அப்படி வாய்ப்பே கிடைக்காதவர்கள் பழகிக் கொண்டதன் காரணமாக, அதில் இருந்து விடுபட முடியாத சூழல்காரணமாக விலைமாதர்களாக்கப் படுகின்றனர்.

திரைத்துரையில் இருப்பவர்களும் கூட நடிகர்களை நாம் அவமானப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் நடிகர்கள் குறித்துப் பேசும் போது 'அவர்' என்கிற மரியாதை விகுதியைப் பயன்படுத்தியே நடிகர்கள் குறித்துப் பேசுவார்கள், ஆனால் நடிகைகளைக் குறிப்பிடும் போது அவ்வாறு சொல்வது இல்லை. அங்கே 'அவள்' வந்துவிடும். திரைத்துறைச் சார்ந்த ஒரு சில நண்பர்கள் நடிகர்கள் குறித்துப் பேசும் போது மரியாதை கலந்து பேசியபோது, நடிகைகளை ஏன் அவ்வாறு சொல்லமாட்டேன்கிறீர்கள் என்று கேட்டபோது நடிகைகளுக்கு என்ன மரியாதை, வாய்ப்புக்காக எதையும் செய்பவர்கள் தானே என்பது போல் பதில் அளித்தார். வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று கூறி எதையும் செய்யச் சொல்பவர்கள் பற்றிக் குறிப்பிட மறுக்கிறார்கள், மறக்கிறார்கள்.

திரைப்படங்கள் அனைத்துமே ஆண்களை மையமாகவும் பெண்களை அதில் கவர்சிக்காக சேர்ப்பது போலவே பெரும்பாண்மைப் படங்கள் அமைவது உண்டு, அதிலும் ஆண்களை 'ஹீரோ' ஆக்கி அந்த 'ஹீரோ'வின் பாத்திரம் நடிகர்களுக்கு பொருந்துவது போல் தான் அமைக்கிறார்கள். ஒருசில நல்லப்படங்கள், இயக்குனர்கள் இருந்தாலும் திரைத்துறை என்பது கலைச்சார்ந்த ஒன்று என்பதைவிட வணிகம் சார்ந்த ஒன்றாகிவிட்ட சூழலில் அந்த ஒருசிலரை வைத்து ஒட்டு மொத்த திரைத்துறையும் தூய்மையானது, மக்களுக்காக இயங்குகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட நல்ல மனிதர்களை, அவர்களின் போற்றப்படும் திறன்களை ஒரு குழுவிற்குள் சென்று ஒட்டவைப்பது, குழுவிற்கு அடையாளமாக்குவது அவர்களுக்கும் அவர்களின் செயலுக்கும் களங்கம் விளைவிப்பது போன்றதாகும் என்பதால் விதிவிலக்குகளை (எக்சப்சன்களை) கணக்கில் கொள்வது தவறு. ஹீரோக்களின் திரையில் காட்டும் ஹீரோ இசத்தை உயர்த்திக்காட்ட எத்தனையோ பஞ்ச் டயலாக்குகளை யோசிக்கும் அதே திரைத்துறையினர் நடிகைகளின் மார்ப்புக் கச்சைகளின் அளவை எவ்வளவு குறைத்துக் காட்டினால் 'U/A' முத்திரைகள் கிடைக்கும் / அல்லது தப்பிக்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். அதிலும் சிலர் படத்துக்கு 'A' முத்திரை கிடைத்தால் மகிழவும் செய்கிறார்கள்.

திரைத்துறைகளில் 'அட்ஜஸ்ட்மெண்ட்', 'டிஸ்கசன்' ஆகிய சொற்களில் நடிகைகளை சபலம் கொண்ட தயாரிப்பாளர், வெளியீட்டாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர்களுக்கு விருந்து வைப்பதே வழக்கம், இதைத் திரைத்துறைச் சார்ந்தவர்கள் மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். திரைத் தொழிற்கூடங்களில் திரைக்குப் பின்னால் நடக்கும் ஆடை அவிழ்புகள் எத்தனையோ, அதில் கழட்டிப் போடப்பட்டதில் ஒன்றிரண்டை போட்டு நடிகைகளைத் திரையில் காட்டுகிறார்கள். 'துணை நடிகை' என்றால் 'அவள் விபச்சாரி' என்பது போல் நினைக்கும் செய்தி இதழ் வாசகனுக்கும், திரைப்பட ரசிகனுக்கும் அப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்தியதின் பங்கு யாருக்கு ? திரைத்துறைக்கு ? செய்தி ஊடகங்களுக்கு ? இருவரும் சமமாகவே அதைச் செய்கிறார்கள்

செய்தி ஊடகங்கள் நடிகைகளை அவதூறு செய்துவிட்டார்கள் என்று கண்டனக் குரல் நடிகர்கள் எழுப்பினால் அதை வெளி இடுவதும் அதே அவதூறு செய்திவெளி இட்ட ஊடகங்கள் தான் என்பதை ரசிகர்களோ வாசகர்களோ புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதை செய்தி ஊடகமும் சரி, திரைத்துறையும் சரி நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன.

திரைத்துறைக் களங்கப்பட்டு உள்ளதால் தானே செய்தி இதழ்கள் அதை கிசுகிசுக்களாக வெளி இடுகின்றன ? கிசுகிசு தகவல்கள் கொடுப்பதும் திரைத்துறையினரே, பிறரை நொந்து கொள்வதில் பயன் ஏது ? அல்லது அறியாமல் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் முறைகேடுகள் நடக்கின்றனவா ? நடிகைகள் அனைவருமே மிகவும் ஒழுக்கமானவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் அவர்களில் பலர் ஒழுக்கம் கெட்டுப் போவது திரைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டப் பழக்கம் தான்.

நடிகர்கள் / நடிகைகளை அவதூறு செய்கிறார்கள் என்று கவலைப்படும் திரைத்துறையினர் (நான் அதைத் தவறு என்று சொல்லவரவில்லை), பெண்களை வைத்து, பெண்களுக்கு ஆசைகாட்டி, பலவந்தப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் கண்ணுக்கு முன்பே நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி நடிகர் சங்கங்களில் விவாதித்திருக்கிறார்களா ? அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா ? என்று எந்த ஒரு ரசிகனும் கேட்கமாட்டான். நடிகைகளின் தற்கொலைகளுக்கு திரை உலகம் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒரே முறை தற்கொலை செய்து கொள்ளும் நடிகைகள் பற்றி அலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன, அதுவும் நடிகைகள் மன அழுத்தத்திலிருந்து காத்துக் கொள்ள கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைதான், ஆனால் அதே கூட்டத்தில் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவோ, எட்டவோ இல்லை. இது போன்று கண்டனக் குரல்கள் யாருக்கான நாடகம் ? இதற்கு உடந்தையாக நடிகைகளையும் அழைத்துக் கொள்வதை நடிகைகளே புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது. நடிகைகளுக்குத்தான் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட சங்கத்தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப் பட்ட நடிகைகள் எத்தனை பேர் ?

பின்குறிப்பு : திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்