நம்பிக்கை என்ற பெயரில் நம்புவர்களை கடவுள் கைவிடுவதில்லை என்பது போல் தான் ஏறக்குறைய எல்லா நம்பிக்கை சார் கதைகளுமே இருக்கிறது. இல்லை என்றால் கொஞ்சம் பயமுறுத்தல் அதாவது 100 பிட் நோட்டீஸ் அடித்து பலருக்கும் அனுப்பவில்லை என்றால் உன் வீட்டில் துக்கம் நடக்கும், நடந்தது என்ற ரீதியில் எழுதி இருப்பார்கள். 24 x 7 ஆண்டவனுக்கு இவர்களை கண்காணித்துக் கொண்டே நல்லது செய்வதுதான் தொழில் என்றும், தன்னை தூற்றுபவர்களுக்கு தண்டனைத் தருபவராகவும் தான் இறைவனின் திருவுளம் இருக்கிறது என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். இதுபோல் இறைசக்தியை திரித்து கூறுவது தவறு என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. பக்தியின் பெயரால் எதைச் செய்தாலும் புனிதம் தான். இதனாலேயே பக்திசார் கதைகள், அனுபவங்கள் இதையெல்லாம் செவிமடுப்பதோ, கண்ணிடுவதோ இல்லை.
நண்பர் குமரன் 'புல்லாகி பூண்டாகி' என்ற தொடர் எழுதிவருவதாகவும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முதல் அத்யாயம் முடிந்ததும் மின் அஞ்சல் வழி தகவல்

அனுப்பினார். 'நான் இதுபோன்ற கதைகளை படிப்பதில்லை, அப்படி படித்தாலும் நான் செய்யும் விமர்சனம் உங்களை புண்படுத்துவதாக அமையும்', என்று சொன்னேன். பதிலுக்கு 'பரவாயில்லை. நீங்கள் சொல்வதும் சரிதான் உங்களுக்கு கிண்டுவதற்காக சிலவிசயங்கள் இருக்கும், முடிந்தால் கருத்து கூறுங்கள் வற்புறுத்தவில்லை' என்றார். ஒருவாரம் சென்று என்ன தான் எழுதி இருக்கிறார் என்று முதல் அத்யாயத்தை திறந்து பார்த்தேன். அண்ணாமலையாரின் கோவில் படம், நான் சிறுவயதில் அப்பா அம்மாவுடன் சென்றதாக நினைவு, தொடர்ந்து படித்தேன். மேல் பூச்சு இல்லாமல் இயல்பான எழுத்து நடையில் எழுதி இருந்தார். கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேரடியாக அவர்காட்டிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவது போன்று படிக்கும் போது உணர்வூட்டியது.
அவர் அங்கெல்லாம் சென்ற போது, பின்னாளில் எழுதவேண்டும் என்று அப்போது நினைத்தாரா தெரியவில்லை. நேற்று சென்று வந்த இடம் போல் மிகத் தெளிவாக, கோவில் அமைப்பு, அதில் உள்ள தெய்வங்கள், அதற்கான சிறப்புக்கள்,வழிபாடுகள் மற்றும் திருவண்ணாமலையில் மலை வலம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எழுதி இருந்தார். சொந்த கற்பனையில் எழுத்துக்கள் மட்டும் இருந்தது அதில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வருபவை என்பதால் இவராக எதையும் இடைச் சொருக வில்லை என்பது புரிந்தது.
வைணவராக இருப்பவர் ஒரு சிவ தலத்தைப் பற்றி சிறப்பாக எழுதுவது பாராட்டத்தக்கது, கூடவே எங்கெல்லாம் கண்ணன் புகழ் பாடமுடியுமோ அதையெல்லாம் சரியாக கையாண்டு இருக்கிறார் :). போகர், நவபாஷன பழனியாண்டவர் சிலை, பழனி மலை, இராமகிருஷ்ணர், தக்ஷிணேஷ்வரம், சாரதா தேவி, காளி மாதா, கருடன் கதை , மகாபாரததில் சில பகுதிகள், அருணகிரி நாதர் என்று சிறு சிறு கதைகளை சேர்ந்திருக்கிறார். இவருடைய தொடரில் பொருத்தமான படங்களை அங்கங்கே சேர்த்திருப்பது தொடருக்கு கூடுதல் சிறப்பு. ஸ்லோகங்களை தேவையான இடத்தில் இட்டு அதற்கான பொருளுரையும் எழுதி இருப்பதால் கதையோடு சேர்த்து படிக்கும் போது, ஸ்லோகங்களும் கவனம் பெறுகிறது.
முதல் முயற்சி என்பதாக தெரியவில்லை, வளமான கற்பனையும், அனுபவத்தை அதில் சேர்த்து எழுதுவது என்பதை சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளி, மறுபிறவி பற்றிய சிந்தனைகள், அதன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை விமர்சனம் செய்யவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால இதுபோன்ற மறுபிறவி கற்பனைகள் பலர் கொண்டிருப்பதால் அதை விமர்சனம் செய்வது, விவாதிப்பது வீண் என்றே நினைக்கிறேன். மற்ற விமர்சனங்களை அவருடைய பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால், அதன் தொடர்பில் எழுதும் போது எழு(த்)தும், கருத்தும் இயல்பாக வெளிப்படும். அது இவரது தொடரில் நிறையவே இருக்கிறது. அடுத்த தொடராக 'ஊனாகி உயிராகி' விரைவில் எழுத வாழ்த்துகள். :)