பின்பற்றுபவர்கள்

பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 பிப்ரவரி, 2011

சிங்கையில் திருமதி துளசி கோபால் !


நான்கு நாள் பயணமாக துளசி அம்மா என்கிற திருமதி துளசிகோபால் சிங்கைக்கு வந்துள்ளார், சிங்கைப் பதிவர்கள் சார்பில் நாளை துளசி அம்மாவுடன் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது

இடம் : எக்ஸ்பளனேட் பார்க் (Connaught Dr)

நாள் நாளை (ஞாயிறு 20 /பிப்/2011)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை.

தொடர்பு கொள்ள : 98 767 586 (கோவி.கண்ணன்)


(அங்கு அருகில் இருக்கும் மெரினா பே - வில் மாலை 7 மணிக்கு லேசர் மற்றும் பிற ஒளிக்கற்றை காட்சிகள் நடைபெறுவதை இல்லத்தினரோடு வருபவர்கள் பார்த்து மகிழமுடியும்)

சிங்கைப்பதிவர்களும் வலைப்பதிவு வாசகர்களும் மற்றும் தமிழார்வளர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

*****

திருமதி துளசி கோபால் 8 ஆண்டுகளாக துளசி தளம் என்கிற தன்னுடைய வலைப்பதிவிலும், 10 ஆண்டுக்கு மேலாக பல்வேறு இணையத்தளங்களில் எழுதிவருபவர், பயணக்கட்டுரைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் குறித்த நூல்களை எழுதியும், தொடர்ந்தும் எழுதிவரும் எழுத்தாளர். நியூசிலாந்து இடம் பெயர்ந்தவர் அவ்வப்போது சிங்கை, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு கணவர் திரு கோபாலுடன் வந்து செல்வார்.

சிங்கையில் திருமதி துளசிகோபால் தொடர்பு எண் : 84 373 242

15 மார்ச், 2010

அப்போது நான் சமாதி நிலையில் இருந்தேன் !

கடந்த வெள்ளி மாலை 7 மணிக்கு ஸ்வாமி ஓம்காரின் 'தினம் தினம் திருமந்திரம்' சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி நேரடியாக மின் அஞ்சல் வழியான தகவல் மட்டுமே என்பதால் பொதுமக்களில் அன்று கோவிலுக்குள் வந்திருந்தவர்கள் மற்றும் மின் அஞ்சல் கிடைக்கப் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் வந்திருந்தனர்.

ஸ்வாமி ஓம்கார் வழக்கம் போல் கலக்கினார், நகைச்சுவையாக பேசினார், கேள்வி பதில்களுக்கு சிறப்பாக பதில் சொன்னார், 1:30 மணி நேரம் சொற்பொழிவாற்றினார் என்றெல்லாம் வந்தவர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது, நான் சமாதி நிலையில் இருந்தேன். சொற்பொழிவு நிறைவில், அரங்க மின் விசிறியை நிறுத்திவிட்டு எல்லோரும் சுண்டல் சாப்பிடப் போவது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது விழிப்படைந்தேன். நிகழ்வைப் பற்றி பதிவர் கிரி எழுதினால் சிறப்பாக இருக்கும், ஸ்வாமி ஓம்கார் கோவை திரும்பிய பிறகு நிகழ்வுகளைப் பற்றி எழுதுவார் என நினைக்கிறேன்.




********

மறுநாள் (சனி கிழமை) கேபிள் சங்கர் மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் பதிவர் சந்திப்பு, 15க்கும் மேற்பட்ட பதிவர்களுடன் சிறப்பாக நடந்தேறியது, லேசான மழை மாலை வெயிலை தனித்திருந்தது, கேபிளுடன் மதியம் உண்டுவிட்டு, ஸ்வாமி ஓம்காரின் யோக வகுப்புகள் முடிந்து வரும் வரை அவருக்காக காத்திருந்தோம், பின்னர் அவரையும் அழைத்துக் கொண்டு சந்திப்பு நடைபெறும் இடம் சென்றோம், அனைவரும் வந்து சேர மாலை 5 ஆகி இருந்தது, சினிமா தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி, தனது துய்புகளை கேபிள் பகிர்ந்து கொண்டார். ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் தொடர்புடைய கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை தெரிவித்தார், சில பர்சனல் கேள்விகள் வெகு பர்சனல் என்பதால் அவற்றை தவிர்த்தார். ராஜேஷ் அண்ணன் கொண்டுவந்த மிளகாய் பஜ்ஜி மற்றும் பச்சை பட்டானி சுண்டலுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
(பிரபாகர், சுதாகர்(பித்தனின் வாக்கு), மகேந்திரன் (முரு நண்பர்), ஜோ மில்டன், கேபிள் சங்கர் (விஐபி 1), வெற்றிக்கதிரவன், முகவை இராம்குமார், ஜோசப் பால்ராஜ், ஸ்வாமி ஓம்கார் (விஐபி 2) முரு என்கிற அப்பாவி முரு, சரவணன் - வேடிக்கை மனிதன், கோவி, ஜெகதீசன், புகைப்படம் எடுத்தது அறிவிலி இராஜேஷ்
********

மறுநாள் (நேற்று) கேபிளுடன் செந்தோசா உல்லாச தளத்தில் சுற்றினோம், அங்கே புதிதாக வரவிருக்கும் யுனிவர்சல் ஸ்டுடியோவின் முகப்பை பார்வை இட்டுவிட்டு, சூதாடும் தளத்திற்கு வந்தோம், வெளிநாட்டு சுற்றுலா வாசிகளுக்கு இலவச நுழைவு என்றாலும் ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை தகுதி பார்க்கிறார்கள். கேபிள் அரை ட்ராயர் அணிந்திருந்ததால் நுழைவுக்கு 'நோ' சொல்லிவிட்டார்கள். மாலை மணி 3 இருக்கும், ஸ்வாமி ஓம்காரும் அந்நேரம் அன்றைய யோகா வகுப்புகளை முடித்திருந்ததால் அவரையும் செந்தோசாவிற்கு வெற்றிகதிரவனுடன் வரச் சொன்னோம், கேபிள் 'அண்டர் வாட்டர் வேர்ல்ட்' எனப்படும் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தை கண்டபின்னர். ஓம்காரும் அங்கு வந்து சேர்ந்தார், பிறகு வெற்றிக் கதிரவனுடன் அருங்காட்சியகத்தையும், பின்னர் மூவரும் டால்பின் விளையாட்டு காட்சிகளையும் கண்டபின்னர், வெளியே வந்தார்கள். இடையே ஜெகதீசன் கானா பிரபாவிற்கு தகவல் சொல்ல, ஞானசேகரை நான் வரச் சொல்லி இருந்தேன், அவரும் வந்து சேர பின்னர் டொன்லீயுடன் அங்கு வந்து சேர்ந்தார் கானா. மாலை 6 ஐத் தாண்டி இருந்தது, அப்படியே நடையாக லேசர் ஒளிக்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்து அங்கே 7:45 காட்சிக்கு அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நான் திரும்பி விட்டேன்.

எதிர்பாராமல் ஒன்றன் பின் ஒருவராக செந்தோசாவில் ஆஸ்திரேலியா, சிங்கை, இந்திய பதிவர்கள் மொத்தம் 8 பேர் சந்தித்த நிகழ்வாக அமைந்தது.

11 மார்ச், 2010

சீடர்கள் தப்பி ஓட்டம் !

இவர்கள் இருவரை பார்த்ததும் சென்னை விமான நிலையத்தில் "சீடர்கள் தப்பி ஓடுகிறார்களோ !?" என்று நினைத்திருப்பார்கள். நல்லவேளை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் யாரும் இல்லை, இருந்திருந்தால் தற்போதைய பரபரப்பில் ஊகமாக இருவரின் படங்களைப் போட்டு எதோ ஒரு நாளிதழில் பரபரப்பு செய்தி வெளி இட்டு இருப்பார்கள்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் உலக பதிவர் கேபிள் சங்கர் (உண்மை தாங்க, என்னிடம் வலைப்பதிவு சாராத பல நண்பர்கள் கேபிளாரின் பதிவுகளை விரும்பிப் படிப்பதாக சொல்வதுண்டு) இருவர் வரவிருந்த புலி விமானம் சென்னையிலேயே 2:30 மணி நேரம் காலந்தாழ்த்தி புறப்பட குறித்த மாலை 8:30 மணிக்கு பதிலாக 10:30 மணிக்கு தரையிரங்கி, குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு 11:00 மணிக்கு வெளியே வந்தார்கள்.
வெற்றிக் கதிரவன், நான்

வெற்றி கதிரவன் கேபிளாருக்கு சிறப்பு வரவேற்பு அட்டையை பிடித்திருந்தார். துக்கள் மகேஷ் முன்பே வந்துவிட்டார் ஜோசப் பால்ராஜ் தனது சொந்தக்காரை எடுத்துவந்து இருவரையும் வரவேற்க்க நின்றார். விஜய் ஆனந்த் தனது குட்டி பையனுடன் வந்திருந்தார், ஜெகதீசன், ரோஸ்விக் மற்றும் பிரபாகர் ஆகியோரும், ஓம்காரின் யோகா மாணவர் திரு வைரவன் வந்திருந்தார். வந்தவுடன் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்த பிரபாகர், 'கோவியார் வரவில்லையா ? என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். என்னைய ரொம்ப 'பெருசா'(!) நினைத்திருப்பார் போல :). நாங்களெல்லாம் காத்திருந்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியே வந்தார்கள். பெட்டியை அடையாளம் கண்டு எடுத்துவர நேரம் விரைந்துவிட்டதாம். "இமிக்ரேசன் பிரச்சனை ஒண்ணும் இல்லையே ?" ஓம்காரிடம் கேட்டேன். "நீளமான தலைமுடி வைத்திருந்தால் ஒருவேளை கேள்விகள் கேட்பாங்க போல, என்கிட்ட ஒண்ணும் கேட்கவில்லை" நகைச்சுவையாக சொன்னார்.
கேபிள் சங்கர், ஸ்வாமி ஓம்கார்

கேபிளாரிடம் நீங்கள் பரத்தை வைத்து இரண்டாம் பாகமாக இயக்கப் போகும் "தம்பிக்கு இந்த ஊரு" படத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளை, போஸ்ட் மேன், பொட்டிக்கடை வைத்திருப்பவர் இப்படி சின்ன ரோலே இருந்தால் என்னை போட்டுவிடுங்க, என்னை வச்சு கதாநாயகனாக அடுத்தப்படம் எடுக்கும் போது சொல்லுங்க அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டு கால்சீட் தருகிறேன் என்று சோசப்பு லொள்ளினார். அவ்வ்வ்

"கேபிள் அங்கிள்" ன்னு சொன்னதால் எனக்கு அவமானமாகிப் போச்சு, நான் இப்படியே திரும்பிப் போகிறேன் என்று கேபிள் முரண்டு பிடிக்க அவரை சமாதானம் செய்து வெளியே கூட்டிவருவதற்கு 1000 முறை "சாரி அங்கிள்" சொல்லிவிட்டார் வெற்றிக்கதிரவன்.
மகேஷ், பிராபகர், கேபிள் சங்கர் மற்றும் ஜோசப்

ஜோசப், விஜய் ஆனந்த மகன், விஜய் ஆனந்த்

எல்லோரையும் அவரவர் இருப்பிடம் நோக்கி அனுப்ப மணி இரவு 11:45 ஆகி இருந்தது.

கேபிளார் ஒருவாரம் வரையில் இருப்பார், ஸ்வாமி ஓம்காரின் யோகா நிகழ்ச்சிகள் 10 நாள்கள் வரையில் நடக்கின்றது. இருவரின் தொடர்புகளுக்கான அலைபேசி எண்களை பிறகு இங்கு வெளி இடுகிறேன். (கேபிள் லொகேசன் பார்ப்பதிலும் கதாநாயகி தேர்விலும் பிசியாக இருந்தால் அலைபேசியை எடுக்க மாட்டார்)
:)

கேபிள் சங்கரின் அலைபேசி எண் (0065) 91010419

ஸ்வாமி ஓம்காரின் நிகழ்ச்சிகள் :



25 ஜனவரி, 2010

இராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு !

பெரியவர் தமிழ் பதிவுலகின் முன்னோடி, தமிழ் பதிவு கூறும் நல்லுலகிற்கு பல புதிய (வலைப்பக்கம், பின்னூட்டம், இடுகை என பல) கலைச் சொற்களை ஆக்கித் தந்தவர் வளவு இராமகி ஐயாவை நேற்று பதிவர்களுடன் சந்தித்தோம். நான் ஏற்கனவே அவரை சென்னையில் சந்தித்திருந்தாலும் அருகாமையில் எதெரெதிரே அமர்ந்து அளவளாவும் அறிய வாய்ப்பு நேற்று தான் கிட்டியது. குறித்த நேரத்தில் அங்மோகியோ நூலகம் அருகில் வந்துவிட்டார். மேலும் சில பதிவர்களுடன் நூலகத்தின் பின் பகுதியில் அமர்ந்தோம்.
இராமகி ஐயா மற்றும் இராம் குமார்
இராமகி ஐயா மற்றும் இராம் குமார்

பேச்சு சங்க இலக்கியம், தமிழக பண்டைய அரசர்கள், அசோகர் குறிப்புகள் என இலக்கிய காலம் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கிய காலம் அல்லது வரலாற்றின் காலம் வரையறுத்தலில் பயன்படுத்தும் Absolute Marker எனப்படும் குறிப்பு முறைகளைப் பற்றி சொல்லத் தெரிந்து கொண்டோம். வரலாற்றின் காலம் கிறித்துவ ஆண்டின் அடிப்படையில் ரோமப் பேரரசுகளின் குறிப்புகளை ஒட்டி அவற்றுடன் தொடர்புடைய தகவல்களால் வரலாற்றின் காலம் வரையறுக்கப்படுகிறது. இதன் படி சங்க இலக்கியத்தின் காலம் கிமு 1000 வரையில் கூட இருக்கவும், சிலம்புவின் காலம் கிமு வுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பதாக தெரிவித்தார். நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார். தமிழர்களின் தொல் சமயம் ஆசிவகம் எனப்படும் சமண வகையைச் சார்ந்ததாக இருப்பதற்கான கூறுகளாக சங்க இலக்கியத்தில் எண்ணற்றக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன என்றார். ஆசிவகம், பெளத்தம், திருத்தங்கர்களைப் பின்பற்றும் ஜைன சமயம் ஆகியவை சமணம் என்பதாகக் குறிப்பிட்டார். சமணம் என்கிற சொல் தனிப்பட்ட சமயம் சார்ந்ததல்ல அது ஒரு குறியீட்டுப் பெயர் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது சம்மணர் அதுவே சமணர் என்பதாகியது அந்த வகையில் புத்தர், மகாவீரர், ஆசிவகர் ஆகியோர் சமணர் எனப்பட்டனர் என்பதாக கூறினார்.

கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குமான உரையாடலில் தமிழ் தொடர்புடைய பல தகவல்களை தெரிந்து கொண்டோம். பேச்சு எழுத்து சீர்த்திருத்தம் தொடர்பாகவும் சென்றது. தற்போது இருக்கும் எழுத்து அமைப்பு போதுமானதாகவே உள்ளது, எழுத்துச் சீர்திருத்தம், மாற்றம் தேவை என்பதாக நடைபெறவிருக்கும் இணைய தமிழ் சொம்மொழி மாநாட்டில் தேவையற்றது என்பதாக குறிப்பிட்டார். அச்சுத் தமிழில் இருந்த எழுத்து எண்ணிகையின் அடிப்படையில் சேர்க்கப்படும் அச்சுக் கோர்ப்புகள் குறைபாட்டிற்கு பெரியார் பரிந்துரை மாற்றாக இருந்தது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் பெரிய அளவு மாற்றமாக இகர, உகர மெய்யெழுத்துச் சீர்த்திருத்தம் தேவை அற்றது, இந்த சீர்த்திருத்தப் பரிந்துரையின் படி இகர வரிசையிலான 'கு முதல் னு' மற்றும் 'கூ முதல் னூ' வரையிலான தனி எழுத்துக்குப் பதில் 'க்+உ,ஊ -> கு,கூ என்பதற்கு பதில் ஜு, ஜூ க்கு இருக்கும் மேற் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்பது போன்ற பரிந்துரையாம், இதன் மூலம் இகர உகர வரிசை எண்ணிக்கையிலான நெடுங்கணக்கு குறியீடுகள் வெகுவாக குறைக்கப்படும், எனவே கற்றுக் கொள்ள எழுது என்பதாக பரிந்துரைச் செய்ய இருக்கிறார்கள் இன்றும் இது தமிழுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தும் என்றார். அவருடைய பதைபதைப்புக் காரணமாக,

இந்த மாற்றம் சிறிய மாற்றம் அல்ல, வீரமாமுனிவர் செய்தது 3 விழுக்காடு, பெரியார் செயத்து 2 விழுக்காடு, ஒப்பீட்டு அளவில் புதியவகை மாற்றம் எழுத்து அமைப்பில் பெரும் சிதைவை ஏற்படுத்தும், ஏற்கனவே இருக்கும் இலட்சக்கணக்கான நூற்களை புதியவகை எழுத்துக்கு மாற்றி மீள் பதிப்பு செய்யப் போகிறவர் யார் ? அப்படிச் செய்யவில்லை என்றால் அவை பயன்படாமல் அழிந்துவிடவோ, வாசிக்க முடியாத ஒன்றாகவே ஆகி இலக்கிய பயன்பாட்டில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு.

எழுதும் முறைகள் கற்கள், துணி, ஓலைசுவடி, தாள், கணி(னி) என்று வளர்ந்து வந்திருக்கிறது, கணி(னி)யில் தட்டச்சு செய்வதற்கும் சேமிப்பதற்கும் தற்போதைய நடைமுறை எழுத்துக்களால் எந்த ஒரு தடையும் இல்லை, மேலும் எளிதாக மாற்றினாலும் தற்போதைய கணிணி நுட்பத்தினால் பெரும் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அந்த மாற்றம் பயனளிக்காது என்றார். அச்சுக் கோர்க்கும் காலத்தில் தேவை என்பதற்கு இருந்த எழுத்துச் சீர்திருத்தமும், தற்போதைக்கு வலிந்து வழியுறுத்தப் போகும் எழுத்துச் சீர்த்திருத்தமும் ஒன்று அல்ல, அது தேவையற்றதுமாகும் என்றார். உண்மையில் சொல்லப் போனால் ஆங்கில பெரிய சிறிய எழுத்துக்களின் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் தற்போது நாம் படுத்தும் தமிழ் தட்டச்சு எழுத்துகள் எண்ணிக்கையில் குறைவே. உயிர், மெய், உயிர்மெய் என்ற எண்ணிக்கையில் நெடுங்கணக்கு குறியீடுகள் 247 எழுத்து என்றாலும் நம் பயன்படுத்தும் தட்டச்சு எண்ணிக்கைக் குறிய எழுத்துகள் 48க்கும் குறைவே, பெரும்பாலும் உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் + மெய் எழுத்துகளை சேர்த்து தட்டச்சும் போது நமக்கு கிடைக்கும் படி மென் பொருள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதால் மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் இருப்பது உண்மை என்றாலும் அவற்றை மொத்தம் 46க்கும் குறைவான தட்டச்சு விசை பொத்தான்களினுள்ளேயே அமைப்பட்டு இருக்கிறது. தங்கிலீஸ் முறையில் அல்லாமல் தமிழ் 99 முறையில் நாம் தட்டச்சு செய்யும் போது அந்த எண்ணிக்கை இன்னும் குறைவே. எனவே 247 எழுத்துகள் தனித் தனிக் குறியீடாக நம் விசைப்பலகையில் இல்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

என்னிடம்(கோவி) தமிழில் எத்தனை எழுத்துகள் என்று பிறமொழி பேசுவோரிடம், நான் 247 என்று சொல்வது இல்லை, பெரிய சிறிய என மொத்தம் ஆங்கிலத்தில் இருக்கும் 48 எழுத்துகளைவிட தமிழ் குறியீட்டுச் சொற்கள் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வதுண்டு.

இராமகி ஐயா சொல்வது போல் தமிழில் மேலும் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது என்பதுடன் அவர் சொன்னது போல், அத்தகைய பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் அது தமிழ் வளர்ச்சி என்னும் தொடர்ச்சியில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு பழந்தமிழுக்கும் தற்காலத்திற்கும் இடையே பெரிய தடையாகிவிடும் வாய்ப்பு மிகுதியாவே இருக்கிறது. எப்போதுமே வளர்ச்சி என்பதில் பழமைக்கும் புதுமைக்கும் நுட்பமான தொடர்பு இருக்கும் அந்த தொடர்பே வளர்ச்சியின் அளவீடாகவும் அமையும் அப்படியே அமையும் வளர்ச்சி மிக மிக மெதுவானதாகவும் தேவையானதாகவும் அமையும் போது அதனால் மொழிக்கு பயனுண்டு ஆனால் புகுத்தப்படும் பெரும் வளர்ச்சிகளினால் மொழி முற்றிலும் சிதையும் பேருங்கேடு உள்ளது. இதன் காட்டிற்காக பல்வேறு மொழிகளில் புகுத்தப்பட்ட நடைமுறைகளையும் அவை சிதைந்து போனதையும் குறிப்பிட்டார்.

இராமகி ஐயாவின் வேண்டுகோள், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் என்ன எழுதினாலும் கூடவே அவ்வப்போது துறை சார்ந்த ஆக்கங்களை ஒன்றிரண்டாவது எழுதினால் நன்றாக இருக்கும், துறைச் சார்ந்த இடுகைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

நேற்றைய மாலை மாலை 6.30 வரை நடந்த சந்திப்பு சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இராமகி ஐயாவுக்கு மிக்க நன்றி.

இராமகி ஐயாவுடனான சந்திப்புக்கு வந்திருந்தவர்கள் ஜோசப் பால்ராஜ், இராம் குமார், ஜெகதீசன், விஜய் ஆனந்த், வெற்றிக் கதிரவன்(விஜய்), பிரியமுடன் பிரபு, ஜோ மில்டன் மற்றும் நான்.

*******

இணைப்பு: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது எனக்கோரும் மலேசிய பதிவர் திரு சுப.நற்குணன் அவர்கள் தனது திருத்தமிழ் பதிவில் எழுதிய இரு இடுகைகள் மற்றும் கருத்துரைகள்.
1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)

29 ஜூன், 2009

தொப்பைக்கு பேராபத்து நேரலாம் !

குறும் பயணமாக சென்னைச் செல்ல நேர்ந்தது, சென்றவாரம் சென்னையில் பதிவர் சந்திப்பு என்று படித்திருந்தேன், தேதியைச் சரியாகப் பார்க்காமல் சனிக்கிழமை நடப்பதாகவே நினைத்திருந்தேன், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த, எனக்கு நெருக்கமான பதிவர் வீஎஸ்கேவை தொடர்பு கொண்டு, 'வாங்க இருவரும் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுக்கலாம், 4 மணிக்கு சந்திப்பாம் வந்துவிடுங்கள் என்று அன்று(சனிக்கிழமை) காலை அவரை நேரடியாக சந்தித்து சொல்லி இருந்தேன். சரி என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். அப்பறம் துளசி அம்மாவை தொலைபேசியில் அழைத்து 'மாலை பதிவர் சந்திப்புக்கு வர்றீங்களா' என்று கேட்டேன், அதிர்ச்சியுடன், 'என்ன கண்ணன் நாளை ஞாயிறு தானே சந்திப்பு ?' என்று எதிர்கேள்வி கேட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வீஎஸ்கேவை தொடர்பு கொள்ள முடியவில்லை. 'ஐயோ அவரை சந்திப்புக்கு வரச் சொல்லிட்டோமே' என்ன செய்வது ?, அதிஷாவை தொலைபேசியில் அழைத்தேன். 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை' என்றது. அப்பறம் எப்எம் அப்துல்லாவிற்கு அழைத்தேன், 'தற்சமயம் ஸ்வ்ட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது' என்று வந்தது. 'தம்பி நல்லா தூங்குடா' ன்னு வாழ்த்திட்டு,

நம்ம லக்கி லுக் யுவ கிருஷ்ணாவை அழைத்தேன். 'சொல்லுங்கண்ணே' என்றார். அப்பறம் பதிவர் சந்திப்பு இன்னிக்கு என்று நினைத்தேன், அவரையும் வரச் சொல்லிட்டேன், அதோடு மட்டுமல்ல, இன்று இரவே இரண்டு பேரும் கிளம்புறோம், நாளை சென்னையில் இருக்க மாட்டோம் என்றேன். நான் ஒரு அறிவிப்பு போடுகிறேன், இன்னிக்கு சந்திக்க முடிந்தவர்களை சந்திப்போம் என்று 'திடீர்' பதிவர் சந்திப்பை அறிவித்திருந்தார்'



அறிவிப்பு படி 6 மணிக்கெல்லாம் துளசி அம்மா தம்பதிகளாக நடேசன் பூங்காவிற்கு சென்றதும் அழைத்து உறுதிபடுத்திவிட்டார்கள், அங்கே மங்கள இசை கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு முன்பே விஎஸ்கேவை தொடர்பு கொண்ட பொது அவர் செல்பேசியை நண்பரிடம் கொடுத்துவிட்டுச் சென்றவர் எங்கு சென்றார் என்று தகவலைச் சொல்லாமல் சென்றார் என்று தகவல் நான் அவரது செல்பேசியை அழைத்த போது வீஎஸ்கேவின் நண்பர் சொன்னார். 'போச்சுடா சாமி, இவரை நம்பி திடிர் பதிவர் சந்திப்பை அறிவித்து, மானம் போச்சு' என்று நினைத்தபடி, அவர் என்னிடம் ஏற்கனவே கொடுத்திருந்த மற்றொரு எண்ணில் அவரது அக்காவிற்கு தொலைபேசினேன், 'தம்பி இங்கே வரவில்லை' என்றார், 'சரி பரவாயில்லை, அவரு எங்கெல்லாம் போவாரோ அவங்க நம்பரைக் கொடுங்க, நான் முயற்சி செய்கிறேன்', என்று கேட்டு வீஎஸ்கேவின் அண்ணன் நம்பரை வாங்கினேன். 10 முறை அழைத்தும் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்குள் மணி மாலை 6.30 ஆகவே, பூங்காவினுள் நுழைந்தேன், திரும்பவும் முயற்சிகலாம் என்று அவரது அண்ணனை தொடர்பு கொள்ள இந்த முறை மணி அடித்தது, அப்பறம் 'இங்கேயும் வரவில்லை' என்றார், அவரிடம் விவரம் சொல்லி, அவர் அங்கு வந்தாரென்றால் உடனடியாக நடேசன் பார்க்குக்கு துறத்துங்கள், அவருக்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்துவிட்டு காதிருக்கிறோம் என்றேன்.

இதற்கு இடையே பூங்காவினுள் நுழைந்ததும் தம்பி வினோத் தண்ணீர் ஊற்றருகே உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே நாமக்கல் சிபி பதிவு வாசகர் முத்தமிழ் செல்வன் (எ) பெருசுவுடன் வந்தார். பிறகு நால்வரும் எனது நண்பரும் சேர்ந்து சேர்ந்து துளசி அம்மாவையும் அவரது கணவர் திரு கோபாலையும் அழைத்துக் கொண்டு புல் வெளியில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம், யுவ கிருஷ்ணா வந்தார். அவர்களிடம் வீஎஸ்கே எஸ்கேப் ஆன கதையைக் கூறி, 7:30 வரை பார்ப்போம் அப்பறம் கிளம்பிடலாம் என்றேன். துளசி அம்மா & கோபால் தம்பதிகள் 'வீஎஸ்கேவைப் பார்க்கலாம் என்று தான் வந்தோம' என்றார்கள். அதற்குள் வீஎஸ்கேவிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது, 'உடனடியாக சந்திப்பு நடக்கும் இடத்துக்கு வருகிறேன்' என்றார்,


அவர் வரும் அரை மணி நேரத்திற்குள், நாங்களெல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தோம், உங்க விஜயகாந்து புத்தகம் கடையில் பார்த்தேன், நல்லா இருந்தது 75 ரூபாய் மிக அதிகம், அதனால் இவரு வாங்கவில்லை என்று துளசி அம்மா, திரு கோபாலைக் குறிப்பிட்டு லக்கியிடம் சொல்ல கலகலப்பானது. விஜயகாந்து படம் ஓசியில் கூட பார்க்கத் தயங்குவார்கள், வி.காந்து புத்தகத்துக்கு 75 ரூபாய் மிக அதிகம் தான் :) எல்லோரும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே.... பைத்தியக்காரன் பதிவின் அனல்பறக்கும் விவாதம் பற்றி அதிஷா குறிப்பிட்டார். அப்பறம் சிபியைக் கொஞ்சம் கலாய்த்துக் கொண்டிருந்த போது வீஎஸ்கே வந்து சேர்ந்தார்.

வீஎஸ்கேவிடம் 'நீங்க மருத்துவராக இருக்கிங்க, அது பற்றி தொடர் எழுதலாமே என்று கேட்டார் கோபால்'. ஏற்கனவே பாலியல் பற்றி எழுதி இருக்கிறேன். நாராயண ரெட்டிக்கு வரும் கேள்விகள் போல் அடிக்கடி 'சின்ன' 'சின்ன'தைப் பற்றி மாற்றுவது 'குறி'த்து பெரிய கேள்விகள் வருது. ஆனால் வெளி இடவேண்டாம் என்கிறார்கள். என்றார் வீஎஸ்கே. பிறகு கோபால், '30 வயசுக்கு மேல் ஆண்களுக்கு வரும் தொப்பை' குறித்து எழுதலாம். பெண்களுக்கு போட்டியாக முப்பது வயதில் ஆண்கள் சுமப்பது அழகாக இல்லை என்றார். தொப்பை வருவது ஏன் என்பது பற்றி சில தகவல்களைச் செல்லிவிட்டு அது பற்றி பதிவில் எழுதுகிறேன் என்று உறுதி அளித்தார். நாமக்கல் சிபி அப்போதே அடிவயிறு கலங்குவதாகச் சொன்னார். அபிஅப்பா போன்ற தொப்பை பிரியர்கள் வீஎஸ்கே பதிவைத் தவிர்க்கலாம். :)

நேரம் செல்லச் செல்ல அனைவருக்கும் கிளம்பவேண்டிய உந்துதல், போதாக் குறைக்கு அங்கு பூங்காவில் நடைப் பெற்றுக் கொண்டிருந்த கிராமிய தப்பாட்டம், அந்த பக்கமாக அனைவரையும் அழைத்தது.

அப்படியே அங்கு சென்றுவிட்டு, விடைபெற்று களைய ஆயத்தமானோம், மருத்துவர் புரூனோ வந்தார். அவருடன் கைகுலுக்கிவிட்டு, பேசுவதற்கு நேரமில்லை மன்னிக்கவும், வருகைக்கு மகிழ்ச்சி, நான் ஒன்பது மணி அளவில் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்று விடைபெற்றேன். எல்லோரும் விடைபெற்றோம்.

காலை 12 மணி வாக்கில் அறிவிப்பு வெளி இட்டு 8 பேர் வரை கூடியது வியப்பாக இருக்கிறது, அன்று சனிக்கிழமை ஆகையால் பலருக்கு வேலை நாள், இல்லை என்றால் மேலும் சிலர் வந்திருக்கக் கூடும். உடனடி பதிவர் சந்திப்பு வெளி இட்ட லக்கி லுக் யுவ கிருஷ்ணாவுக்கும், வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

அதிஷா, லக்கி லுக்(யுவகிருஷ்ணா), வீஎஸ்கே(சங்கர் குமார்), நாமக்கல் சிபி




வீஎஸ்கே, கோவியார்

7 ஜூன், 2009

இனிப்பு பதிவருடன் இனிய சந்திப்பு !

2004ல் இருந்து எழுதுபவர், நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் ஊக்குவித்தவர், என்றாவது ஒரு நாள் இவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பதிவர், ஆன்மீகவாதி, முத்தமிழ் வித்தகர், கடலுணவு விருப்பர், சிங்கை வந்திருந்தார். அவர் ஜிரா என்று அழைக்கப்படும் ஜி.ராகவன் தான் அந்தப்பதிவர். ஜிரா...ஜீரா -ன்னா இனிப்பு தான். அதோடு மட்டுமில்லாமல் மகரந்தம் என்று தனது வலைப்பதிவுக்கு பெயர் வைத்து எழுதிவருகிறார். இனிப்பு இருக்கும் இடத்தில் தான் மகரந்தம் இருக்கும். பழகுவதற்கும் இனிப்பானவர்.

ஜிரா ஒருவாரக் கால தன் விருப்பப் பயணம் மற்றும் அலுவலகப் பயணமாக சிங்கை வந்திருந்தார். சென்ற செவ்வாய் கிழமை மதுரை இராம், ஆமத்தூர் செகதீசன், பின்னூட்ட புயல் வெற்றி மகிழ்வன் (விஜய் ஆனந்த்) ஆகிய நால்வர் சந்தித்தோம்.






அதன் பிறகு குட்டிப் பதிவர் சந்திப்பு நடத்துவதாக முடிவு செய்து மின் அஞ்சல் வழி தகவல்களை அனுப்பிவிட்டு இன்று மாலை 3 - 5 வரை சந்தித்தோம்.

குறித்த நேரத்திற்கு சற்று நேரம் கடந்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்தார் ஜிரா. வரும் போது ஆங்கிலத்தில் எழுதும் பதிவர் ஒருவரையும் அழைத்து வந்தார். அதற்கு முன்பே நான், முகவை இராம், அறிமுகப் பதிவர் பித்தன், வெளிச்சப் பதிவர் ஜோதி பாரதி, அகரம் அமுதா ஆகியோர் ஒரு இடத்தில் கூடி இருந்தோம். பின்னர் அறுவராக தொகுப்பு உணவுக் கூடம் ஒன்றில் சென்று அமர்ந்தோம், பின்னர் ஜோ, சரவணன், கடைசியாக ஜெகதீசன் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.

பொதுவாக ஒருவருக்கொருவர் அறிமுகம், வலை நடப்புகள், அரசியல் நடப்புகள் பற்றி கதைத்தோம். 2:30 மணி நேரம் சென்றதே தெரியவில்லை.



(இரண்டு படங்களுக்கும் 33 வேறுபாடுகள், என்னன்னு கண்டு பிடியுங்கள்)

களையும் முன் நிழல்படம் எடுக்க ஆயத்தம் ஆனோம், "நிழல்படத்தில் நிற்க வாங்க 'ஜோ' " ன்னு முகவை இராம் அழைக்க. கிட்டதட்ட இரண்டு மணி நேரம் எதிரே எதிரே அமர்ந்து பேசியப் பிறகு,

"அட ட....நீங்க தான் ஜோ வா?" என்று ஜோவைப் பார்த்து இராகவன் கேட்க,

ஜோ மயக்கமானார்.


ஜிரா: "உங்களைக் கும்பிட்டுக் கேட்கிறேன் இந்த மேட்டரை வெளியே சொல்லிடாதிங்க...ப்ளீஸ்"



அதன் பிறகு வேறொரு வேலை காரணமாக நேரம் கருதி இராகவன் விடைபெற, மற்றவர்களுடனான மொக்கை 1 மணி நேரம் தொடர்ந்தது, பின் ஒருவராக ஒருவராக கலைந்தோம்

இருவாரங்களுக்கு முன்பு பதிவர் சந்திப்பு நடந்தேறியதால், ஜிராவுடனான சந்திப்பு பற்றி வலைப்பதிவில் முன்னறிவிக்கவில்லை.





அகரம் அமுதா, முகவை இராம், பின்னூட்ட புயல் (மீசை எடுத்ததால் இந்திரன்), வெளிச்ச பதிவர், பித்தன், சரவணன், ஜிரா, கோவியார்(ஹிஹி), 'கடற்புறத்தான்' ஜோ. (படத்தை 'கிளிக்'கி முழுதாகப் பார்க்கவும்)

கடைசி நான்கு படங்கள் எடுத்தவர்:

9 மார்ச், 2009

நியூசி - சிங்கை பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு !

வருகிற ஞாயிற்றுக் கிழமை (15-Mar-2009) நமது அன்புக்குரியவரும், டீச்சர், ரீச்சர், துளசி அக்கா, துளசி அம்மா, பதிவானந்தமயி என்று பல்வேறு விளிப்புகளில் அழைக்கபபடுகின்ற ஒரே பதிவருமான துளசி தளம் - துளசி கோபல் அவர்களின் சிங்கை வருகையை முன்னிட்டு பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. துளசி அம்மா அவரது கணவர் திரு கோபால் ஐயாவுடன் சந்திப்புக்கு வருகிறார்.




பதிவுலகில் நீண்டகாலமாக எழுதிவரும் துளசி கோபால் அவர்களைப் பற்றி தனியாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை, ஏனெனில் பழம்பெரும் பதிவர் முதல் புதிதாக எழுதவந்தவர்கள் என அனைவருக்குமே முதன் முதல் பின்னூட்டமிட்டு அறிமுகமானவர் தான் துளசி அம்மா. சென்ற மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று பதிவர்களை சந்தித்துவிட்டு சிங்கை இந்த மாதம் 15 ஆம் தேதி வருகிறார்.

அனைவரும் வருக ! அம்மாவின் ஆசியைப் பெருக ! :)

நாள் மற்றும் நேரம் : 15 மார்ச் 2009, மாலை 4 மணி முதல் மாலை 7
இடம் : ராபிள் ப்ளேஸ் எம் ஆர் டி நிலையம் அமைந்திருக்கும் இடம்




நிகழ்ச்சி நிரல் :

மாலை 4 மணி : சிங்கை நாதன் கொண்டு வரும் பாதாம் அல்வா பரிமாறுதல் மற்றும் தண்ணீர் வழங்கல்

மாலை 5 மணி : பதிவர்களின் அரட்டைகள்.
சிங்கப்பூரின் பொருளியலை மீட்சி செய்வது பற்றி முகவை இராம் தூயதமிழில் சிறப்புரை ஆற்றுவார்.

மாலை 6 மணி துளசி அம்மாவின் அருளுரை

மாலை 6:30 மணி : சிங்கை நாதன் கொண்டு வரும் கேரட் அல்வா பரிமாறுதல் மற்றும் குளிர்பானம் வழங்கல்

மாலை 7 மணி : புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல்

நிகழ்ச்சி தொகுப்பு : டொன்லீ

நிகழ்ச்சி படத்தொகுப்பு : ஜெகதீசன்

மேற்பார்வை (அல்லவா சரியாக கொடுக்கப்பட்டதா ?) : விஜய் ஆனந்த்

மற்றவர்கள் (தங்களுக்கு) ஏற்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

(துளசி அம்மாவும் சிங்கை நாதனும் நீண்டகால பதிவர் நண்பர்கள் ஆதலால் சிங்கை நாதன் கொண்டுவரப் போகும் அல்வாக்களில் வெரைட்டி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், வழக்கமாக கொடுக்கும் சாதரண அல்வாவை எடுத்துவரமாட்டார்)

*****

இந்த முறை பதிவர் சந்திப்பை சிங்கப்பூர் ஆற்றில் கடல் சிங்கம் இருக்கும் இடத்தில் நடத்தலாம் என்று கலந்தாலோசித்தோம், சென்றவாரம் அந்த இடத்தில் பெரிய இடி விழுந்து கடல் சிங்கம் சிறிது உடைந்துவிட்டதாம்,அந்த இடம் திறந்த வெளியாக இருப்பதால் ஆபத்தான இடம் என்று சிங்கை நாதன் சொல்ல இடம் கைவிடப்பட்டு ராபிள்ப்ளேஸ் எம்ஆர்டி நிலையம் அருகில் சந்திப்பு முடிவு செய்யப்பட்டது.

- சிங்கை பதிவர் நண்பர்கள்

31 அக்டோபர், 2008

மீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து கொள்ளும் சிங்கை பதிவர் சந்திப்பு !

அறிவிப்பு : சிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு !

திண்டுக்கல் சர்த்தார் என்ற புனைப்பெயரில் எழுதுபவரும், பதிவர்களின் மனதில் வாழும் பதிவர் அனுராதா அம்மா அவர்களின் அன்புக் கணவருமான எஸ்கே சுப்ரமணியம் ஐயாவும் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக உறுதிக் கூறி இருக்கிறார். சந்திப்பின் போது அனுராதா அம்மா அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

மேலும் தமிழ் பதிவர்களால் விக்கி என்று அன்புடன் அழைக்கப்படும் மலேசிய பதிவர், அன்புத் தம்பி விக்னேஷ்வரனின் சிங்கை வருகையை முன்னிட்டும், சிறப்பான பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

நாள் : நவம்பர் 1, 2008
இடம் : செந்தோசா சுற்றுலாத்தலம் டால்பின் லகூன் கடற்கரை அருகில்
நேரம் : மாலை 4 - 8


வருகை தரும் பதிவர்களுக்கு வழிகாட்டுபவர் ஜோசப் பால்ராஜ்
வருகை தரும் பதிவர்களை கவனித்துக் (உபசரிப்பு) கொள்பவர் விஜய் ஆனந்த்
வருகை தரும் பதிவர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவில் போடுபவ்ர் கோவி.கண்ணன்
வருகை தரும் பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்க இருப்பவர் விக்னேஷ்வரன்
வருகை தரும் பதிவர்களுடன் பேருரை ஆற்ற இருப்பவர்கள் ஜோ மற்றும் முகவை இராம்
வருகை தரும் பதிவர்களை புன்னகையால் வரவேற்பவர் பெங்களூர் இராம்
வருகை தரும் பதிவர்களுக்கு அல்வா கொடுப்பவர் சிங்கை நாதன்

ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் எம் ஆர் டி நிலையத்திற்கு வந்து அங்கே விவோ சிட்டி (VIVO City) யின் மேல் தளத்தில் இருந்து செந்தோசாவிற்குச் செல்லும் இலகு ரயில் (மூன்று வெள்ளி டிக்கெட் செந்தோச நுழைவுக் கட்டணத்துடன்) எடுத்து உள்ளே வந்துவிடலாம். மெர்லயன் எனப்படும் கடல் சிங்க பெரும் சிலைக்கு அருகே இறங்கி, அங்கிருந்து டால்பின் லகூனுக்கு (செந்தோச இலவச உள் சேவை) பேருந்தை எடுத்து வந்துவிடலாம்.




நல்ல அருமையான, அமைதியான, துய காற்று வீசும் இடம். அமர்ந்து பேச வசதியான இடம்.




சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வருக !

பதிவர் சந்திப்பு முடிந்ததும், சுமார் இரவு 9 மணிக்கு மேல் லிட்டில் இந்தியாவில் இட்லி கடையில் (சகுந்தலா கார்டன்) இரவு உணவிற்கும் தேனீர் பார்டிக்கும் (தேனீர் தான்) செல்வதாகவும் பலர் திட்டம் வைத்திருக்கிறார்கள்.


தொடர்பு கொள்ள :

ஜோசப் பால்ராஜ் : 93372775
விஜய் ஆனந்த் : 97798649
கோவி.கண்ணன் : 98767586

2 அக்டோபர், 2008

சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து...

ஒரு சிங்கம், சிங்கப்பூருக்கு சிங்கிளாக வரப் போவதாக கடந்த திங்கள் அன்று மின் அஞ்சல் வழி தெரிவித்திருந்தது.

அப்படியா ரொம்ப மகழ்ச்சி வந்து இறங்கியவுடன் போனைப் போடுங்க என்று தொலைபேசி எண்ணை தெரிவித்து இருந்தேன்.

வந்தவுடன் தொலைபேசியில் அலைத்தது. சிங்கத்தை தனியாளாக சந்திப்பதைவிட கூட்டமாக சென்று சந்திக்கலாம் என்று சிறு படையுடன் 'திடீர் சமையல் புகழ் ஜெகதீசன், ஜோசப் பால்ராஜ், விஜய் ஆனந்த், பாஸ்கர், புதுகை அப்துல்லாவின் உறவினர் ஆகியோ சென்றோம்.

சிங்கம் வேறு யாருமில்ல வவாசங்கத்துக்கு நீண்ட நாளைய சிங்கம் 'இராம்/Raam'



இராம் இளமைதுள்ளலோடு இருக்கிறார், கொஞ்சம் இயக்குநர் / ந்டிகர் சேரன் சாயல், 'மாப்பிள்ளை சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருக்கார்' என்று மதுரை திருமண தரகர்கர்கள் இவர் புகைப்படத்தை கையில் வைத்திருக்கக் கூடும். வேற ஒண்ணும் இல்லை, சிங்கத்துக்கு இன்னும் 6 மாதத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு நடக்குதாம், பொருத்தமான வரன் இருந்தால் சொல்லுங்கள்.

பேகேஜில் ஒன்று கைமாறிவிட்டதாம், இன்னிக்கு அதற்கு கொஞ்சம் அலைவார் என்று நினைக்கிறேன். யாரோ இந்திக்காரருடைய பேக்கேஜ் இவரிடம் வந்திருக்கிறது. இவரிடம் வந்தததில் குடமிளகாய் மாங்காய் இஞ்சி இன்னும் சில பொருள்கள் அந்த பையில் இருந்தது, இவருடையது பழைய துணிகள் உள்ள பையாம்.


பாஸ்கர்,விஜய் ஆனந்த், பால்ராஜ், ஜெகதீசன், இராம்


பால்ராஜ் மற்றும் தம்பி புதுகை அப்துல்லாவின்ன் உறவினர்


நானும் ஜெகதீசனும் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு மாலை 5 மணி அளவில் சென்றோம், பிறர் 6 மணி வாக்கில் வந்தனர். அப்பறம் 8 மணி வரை மொக்கை.

மற்றதையெல்லாம் இராம் அவர் பதிவில் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுவார்.

*****

சிங்கைக்கு வேலைக்கு வந்து சிங்கை பதிவர்கள் ஜோதியில் கலந்த புதிய சிங்கப்பூர் சிங்கம் இராமுக்கு சிங்கை பதிவர் நண்பர்கள் சார்பில் உற்சாமாக வாழ்த்துகிறேன்.

21 செப்டம்பர், 2008

வரலாறு காணாத சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு !

சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சந்திப்பு என்று அறிவித்தபடி, அந்த சந்திப்பைப் பற்றிய அறிப்பாளராகவும், பதிவர்களில் முதல் ஆளாகவும், ஒருங்கிணைப்பாளராகவும், ஜோசப் பால்ராஜ் முதல் ஆளாக 2:45 மணிக்கே சென்றுவிட்டார், அதன் பிறகு இளம் சிங்கம் ஜெகதீசன், இளம் புயல் விஜய் ஆனந்த் ஆகியோர் 3 மணிக்கு கூடிவிட்டனர். வழக்கமாக சந்திப்பு என்றால் 2 மணி நேரம் கழித்துக் கூட வருவார்கள், நான் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பஜ்ஜி, வடை(போல் சுவை) செய்யும் வேலையில் சிக்கிவிட்டேன், ஒருவழியாக செய்து முடித்துவிட்டு கிளம்பினால் வரிசையாக தொலைபேசி அழைப்புகள், 'இங்கே' வந்து கொண்டு இருக்கிறேன் என்று வர்ணனை செய்து கொண்டே சந்திப்பு நடக்கப் போகும் இடத்தின் இரயில் நிலையத்தை அடையும் போது சரியாக மாலை 4 மணி ஆகி இருந்தது. போனதுமே உண்மையில்யே பெரிய அதிர்ச்சி மொத்தம் 15 பதிவர்கள் இரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார்கள், தாமதமாக சென்றதால் வெட்கமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்துவிட்டு சந்திக்கும் இடத்தை நோக்கி நடந்தோம். 4 - 8 பேர்தான் வருவார்கள், மீதமாகிற பஜ்ஜி தான் இரவு உணவு என்று நினைத்தேன்.


எல்லோரும் உடனடியாக சந்திப்பு நடக்க குறித்த இடத்தை, ஜோ வழிகாட்ட அவரது பின்னால் தொடர்ந்தோம்.
ஜோசப் பால்ராஜ் (1) புகைப்படக் கருவியுடன் காட்சி அளித்தார், ஜோ (2), சிங்.ஜெயகுமார் (3), பதிவராகப் போகும் அவரது நண்பர் தெட்சினா மூர்த்தி(4), ஜெகதீசன்(5), பாஸ்கர் (6) (வலைப்பதிவு வாசிப்பாளர்) , அகரம்.அமுதன்(7), முகவை மைந்தன் இராம்(8), சிங்கை நாதன் செந்தில் (9), அழகர்சாமி(10), ஜோதி.பாரதி(11), விஜய்.ஆனந்த்(12), டொன்லி (தயாளன்) (13), கோவி.கண்ணன்(14),ரவிச்சந்திரன்(15)
அனுமதி இல்லாமல் செல்லும் ஒரு சிறு ஊர்வலம் போல அணிவகுத்து செல்ல, அந்தப் பகுதி மக்கள் வியப்போடு பார்த்தார்கள்.

சுமார் மாலை 4.10 மணி அளவில் அந்த இடத்தை அடைந்ததும் பெரும் வியப்பு, அவ்வளவு அமைதியான, இயற்கைச் சூழல் உள்ள இடத்தில் இதுவரை சந்திப்பு நடந்தது இல்லை. சிறிய ஏரியுடன் (குவாரி பள்ளம்) இணைந்த சிறிய மலை (உடைத்தது போதும் என்று அப்படியே இயற்கையாக விட்டுவிட்டார்கள், அந்த சூழலில், ஏரிக்கரையில் சற்று சரிவான பகுதியில் அமர்ந்தோம். ஒவ்வொருவராக அறிமுகத்துடன் பதிவர் சந்திப்பு தொடங்கியது,

'அ' வரிசையில் என்ற கணக்கில் அகரம்.அமுதா பேசினார், பெயர்காரணம், அவரது எழுத்துப் பணியின் நோக்கம் குறித்துச் சொன்னார், ஜோதிபாரதி - அத்திவெட்டி அலசலில் எழுதிவருகிறார், அண்மையில் தமிழ் பிராவகம் என்ற இணைய இதலின் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களைப் பற்றிய கட்டுரைக்கு முதல் பரிசுபெற்றதையும், கவிதைகள் மீதுள்ள ஈடுபாட்டை பகிர்ந்தார். அடுத்து சிங்.ஜெயக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி எழுதினாராம், தற்பொழுது நேரமின்மையால் வாசிப்புடன் வலையுலகில் எப்போது தொடர்பில் இருக்க்கிறார். அவரது நண்பர் தெட்சனாமூர்த்தி பதிவுகளை வாசித்து வருகிறார், 'மூர்த்தி' என்ற பெயரில் பதிவு ஆரம்பிக்க உள்ளேன் என்றார், பல பதிவர்கள் பொருளோடு சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்தார்கள் :). அடுத்து தம்பி ஜெகதீசனின் ஆமத்தூர் பற்றிய பகிர்தல், அதன் பிறகு அழகர்சாமி அவரைப் பற்றிய அறிமுகத்துடன் வலைப்பதிவில் வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்தார். வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் பாஸ்கர், இராம், ஆகியவர்கள் சற்று பெரிய உரைகளை ஆற்றினார்கள், டொன்லி தன்னைப் பற்றிய அறிமுகத்துடன், தாம் ஒரு ஈழத்தமிழர், சிங்கையில் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்றும் குறிப்பிட்டார். முதன் முதலாக ஒரு ஈழத்தமிழ் பதிவரை சந்தித்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி அடுத்து ரவிச்சந்திரன் தனது மரத்தடி எழுத்து (பொன்னி வளவன் ) அனுவங்களையும், கிராமங்களுக்கு கல்வி உதவி செய்யும் அமைப்பை (AIMS India) ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்துவருவதைக் குறிபிட்டார், கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. பிறகு நான், ஜோ, பால்ராஜ் மற்றும் சிங்கைநாதன் பற்றிய அறிமுகங்கள் முடிந்தது.

இடையில் சிங்.ஜெயகுமார், தட்சினாமூர்த்தி மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர்கள் சிற்றூண்டி உணவுகளை அனைவருக்கும் வழங்கும் பொறுப்பை அவர்களாக ஏற்றுக் கொண்டு, பேப்பர் தட்டுகளில் பண்டங்களை வழங்கி, அனைவரின் அன்பையும் பெற்றனர். பஜ்ஜி, வடை, இனிப்பு பூரி, சீனி உருண்டை, ஜோதிபாரதி கொண்டு வந்திருந்த கேசரி, மற்றும் கோக், மிராண்டா, செவன் அப் என பானங்களுடன் தேவையானவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது,

அறிமுகம் முடிந்ததும் மிகுந்து பேசப்பட்டவை தமிழ் மேம்பாடு குறித்தான விவாதங்கள் தான், அதுபற்றி பதிவர் இராம் எழுதுவார், இதில் விடுபட்ட தகவல்களை ஜோசப்பால்ராஜ் எழுதுவார்.

பிள்ளையாரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார். எப்படி ? பதிவர் சந்திப்பு நடந்த ஏரிக்கரையில் பிள்ளையார் சதுர்த்திக்கு பிறகு சிறிய பிள்ளையார் சிலையை கொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள், தண்ணீர் தெளிவாக இருந்ததால் பிள்ளையார் கிடப்பது தெரிந்தது. தண்ணீரில் இருந்து எடுத்துப் பார்த்தோம், வண்ணம் போய் இருந்தது.

சந்திப்பு மாலை 7 மணிக்கு முடிவுற்றது, அதன் பிறகு தேனீர் கடையில் தேனிர் வாங்கிக் கொண்டு சுமார் 8 பதிவர்களுடன் அருகில் இருந்த விளையாட்டு மைதனாத்தில் தொடந்தது, அதில் ஜோ, நான் மற்றும் விஜய் ஆனந்த் மதங்களின் உள்விவகாரங்கள் பற்றி முவருக்குள் பேசினோம். அங்கிருந்து சுமார் இரவு 9 மணிக்கு 5 பேராக டாக்சியில் குட்டி இந்தியாவை அடைந்து இரவு 10 மணி வரை பேசிக் கொண்டு இருந்து விடைபெற்றோம்.

மேலும் பதிவர்களின் பெயருடன் கூடிய படங்கள்


இந்த வரலாறு காணாத சிங்கைப் பதிவர் சந்திப்பை அருமையாக ஏற்பாடு செய்து வழி நடத்திய பதிவர் ஜோசப் பால்ராஜுக்கு கலந்து கொண்ட பதிவர்கள் சார்பில் நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்