பின்பற்றுபவர்கள்

செய்தி விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 நவம்பர், 2013

சந்தானம் நடிக்கும் படங்களில் 'சரக்கு' இருக்கு !

இன்னிக்கு (தட்ஸ் தமிழ்) செய்திகளில் "ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்" என்ற செய்தியும் இடம் பெற்றிருந்தது.

அதைப் படித்துக் கொண்டு வரும் பொழுது வாசகர் 'கருத்தில்' படுமோசமாக ராதிகாவின் திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி விமர்சித்திருந்தனர். ஒரு பெண் திருமணம் ஆகாமலேயே இருந்தால் அவளையும் சமூகம் நல்ல பார்வையில் / விமர்சனத்தில் வைப்பதில்லை, விதவைகளையும் நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, மறுமணம் செய்துக் கொள்பவர்களையும் பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருப்பதில்லை. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தால் அவளுடைய தொழிலைவிட கேவலமாக அவளை சொல்லித் தூற்ற ஏதேனும் உண்டா என்று ஆராய்ச்சி நடத்தும் நம் சமுகம். ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை (ஆண்) சமூகம் முடிவு செய்வதும், தீர்ப்பு சொல்வதுமாக இருக்கும் வரை பெண் விடுதலை பெற்றுவிற்றாள் என்று சொல்ல எதுவும் இல்லை. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது கூட சமூக இழிவு என்பது போல் சித்தரிக்கும் கும்பல் செய்தி ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் எழுதுவது இன்றைய அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் 21ஆம் நூற்றாண்டின் இழிந்த நிலை என்று தான் சொல்ல முடியும்.

சரி ராதிகா சொன்ன கருத்திற்கு வருகிறேன், ராதிகா எந்த நடிகர் குறித்து அந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை, அவரது ஆஸ்தான திமுக இளைஞர் அணி தலைவர் முக.ஸ்டாலின் அவருடைய புதல்வர் நடித்த ஒ.க.ஒ.க படத்திலும் கூட மேற்கண்ட காட்சிகள் உண்டு, எனவே பொதுவாக இப்போது வரும் படங்களில் 'சரக்கு' இல்லாத படங்கள் வெகு அரிது.






குறிப்பாக சந்தானம் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளில் பாரும் (குடியகம்), பீரும் இல்லாத படங்களே சொற்பம் தான். செண்டி'மண்டுகள்' நிறைந்த  திரை உலகில் சந்தானம் ஹீரோவுடன் தண்ணி அடிக்கும் காட்சி வைத்தால் படம் 'சூப்பர் ஹிட்' என்கிற நம்பிக்கை உலவும் போல, தொடர்ந்து அவர் நடித்து வெளி வந்த படங்களில் 'தண்ணி அடிக்கும்' காட்சிகள் இடம் பெற்றே வருகின்றன.

மக்களுக்கு கட்டுபாடுகள் இல்லாத நாடுகளில் சட்டம் போட்டு தான் கட்டுப்படுத்துவார்கள். புகைப்பிடிப்பதை காட்சியாக வைக்கும் பொழுது தன்னை மானசீக தலைவனாக நினைக்கும் ரசிகர்கள் அதே பாதையில் சென்றுவிடுவார்கள் / பொது இடத்தில் புகைப்பதை பற்றி சற்றும் கவலைப்படமாட்டார்கள் என்பதை நடிகர் ஒப்புக் கொள்வதில்லை, அரசு தடைகாரணமாக இப்பொழுது (ஸ்டைலாக) புகைப்பிடிக்கும் காட்சிகள் படங்களில் வருவதில்லை, அதனால் தான் அடுத்தவங்க மூக்கில் நேராக புகையை விட்டு முகம் சுளிக்க வைக்கும் பொது இடப் புகைப்பழக்கம் குறைந்தும் வருகிறது.

திரையுலகின் ஓவ்வொரு அசைவும் சமூகத்தில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்ததான் செய்கின்றன, இல்லை என்றால் நமக்கு திரையுலகை சார்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகுவதற்கான வாய்ப்பே இல்லை. 

அந்த பொறுப்பை உணர்ந்தால் இயக்குனர்கள் மக்களை தவறான பாதைக்கு திருப்ப மாட்டார்கள், நடிகர்களும் தம்மை வைத்து இத்தகைய காட்சி வேண்டாம் என்று கூறுவார்கள். 

ரசிகர்கள் பார்வைக்கு பாரில் வைக்கும் காட்சிகளைப் பற்றி சந்தானம் போன்ற வளரும் நடிகர்கள் சிந்திக்க வேண்டும். ராதிகா சொல்வதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

14 நவம்பர், 2011

சங்கராமன் கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை ?

சங்கராமன் கொலை நிகழ்வை யாரும் மறந்துவிட முடியாது, தாம் அன்றாடம் கணக்கெழுதும் கோவிலுனுள்ளே நரசிம்ம அவதாரத்தால் கொலை செய்யப்பட்ட ஹிரன்யகசிபு போன்று கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை நடந்து 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, இதனிடையே தமிழக அரசு விசாரித்தால் தங்களுக்கு ஞாயம் கிடைக்காது என்று கூறி வேறு மாநிலமான பாண்டிச்சேரிக்கு வழக்கு இழுத்தடிப்பட்டுவிட்டது. இடை இடையே நீதிபதிகளிடம் பேரம் பேசியதாக ஆடியோக்கள் வெளியாகி பரப்பரப்பானது தான் மிச்சம், கொலையாளிகளுக்கு தண்டனை இன்னும் கிடைத்தபாடு இல்லை.

மறுபடியும் தலைப்பைப் பாருங்க, அப்படியெல்லாம் நடக்கும் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடலாம் என்று நானும் பார்க்கிறேன், மன நலம் குன்றியவன் ஒருவன் செய்த கொலைக்காக தூக்கில் போடுகிறார்களாம், அதனை எதிர்க்க துப்பு இல்லையா என்று கேட்கிறது தினமலர்

சோத்துக்கு தண்டம் பூமிக்குபாரம் மட்டுமில்லாது பிற உயிருக்கும் ஆபத்து என்று இருப்பவனை தூக்கில் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன ? ஆனா சத்தியமாக சங்கராமன் கொலை வழக்கில் ஒரு வேளை பெரியவாளுக்கு தூக்கு தண்டனைக் கிடைத்தால் கண்டிப்பாகப் போராடுவோம். மரண தண்டனைக் கொடுமையானது, அதுவும் பலரும் கடவுளாக நினைப்பவருக்கு மரண தண்டனை கடவுளுக்கே கொடுக்கும் தண்டனையாகும்.

உயிர் கொலைக்காக இன்னோர் உயிரை கொன்று பழிதீர்ப்பது அரசு செய்யும் கொலையே என்று சொல்வதில் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.

*******

எதற்காக இந்தப்பதிவு ?

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

என்ற பெயரில் ஒரு கேவலமான கட்டுரையை வெளி இட்டிருக்கிறது தினமலர், அதில்

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!

-நமது சிறப்பு நிருபர்-

*******

செந்தமிழர்கள் மீது இந்த வந்தே.......







மாதிர தேசியவியாதிகளுக்கு என்ன கோவமோ ?

12 நவம்பர், 2011

தினமலர் வேறு தொழில் செய்யலாமே !

தினமலரின் திரித்தல் தெரிந்தும் பலர் படிப்பதற்குக் காரணமே அது எந்த அளவுக்கு கேவலாக செய்திகளை வெளியிடுகிறது, பொய் பரப்புகிறது, இட்டுக்கட்டி எழுதுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதலடிக் கொடுப்பதற்குத்தான், வெகுஜன ஊடகம் என்று கடைவிரித்திருக்கும் தினமலருக்கு இதைச் செய்யாவிட்டால் அவை வழக்கமான வாசக மந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும், பொதுப் புத்திகளை வாசகர்களிடையே உருவாக்குவதில் தினமலருக்கு நிகர் வேறு எந்த நாளிதழும் இல்லை, மற்ற நாளிதழ்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு நிலையிலேயே நீடிக்கும் ஆளும் கட்சிக்கு அடிவருடுதல் என்ற நிலை அவர்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, ஆனால் தினமலர் அப்படிப்பட்டது அல்ல, அவர்கள் அடிவருடும் அரசியல் கட்சி எப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியாகத்தான் இருக்கும், சென்ற திமுக ஆட்சியின் போது ஓயாமல் ஜால்ரா அடித்து செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு பகுதியே ஒதுக்கி இருந்தது தினமலர், கருணாநிதியின் அரசியலை மறைமுகமாக எதிர்த்தாலும் விளம்பர லாபம் கருதி திமுக ஆளும் கட்சியாக இருந்த போது எப்போதும் ஜால்ரா அடித்தும், சிலவற்றை விமர்சிக்காமல் அடக்கியும் வாசித்தது. இருந்தாலும் கருணாநிதியின் ஆட்சி நீடிப்பதை தினமலர் விரும்பி இருக்கும் என்பது ஐயமே.

எம்மைப் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அடிப்படைக்காரணம் உண்டு, திமுக கருணாநிதியின் வாரிசுகளால் ஆக்கரமிக்கப்பட்ட பிறகு அது தன் அரசியல் பாதையில் இருந்தும் கொள்கைகளிலிருந்தும் முற்றிலுமாக விலகி, ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவைகளிலும், மதுரை தினகரன் உள்ளிட்டவைகளில் கொலையானவர்கள் குறித்து அனுதாபமே இல்லாமல் குடும்பமாகக் கூடிக் கொண்டது மேலும் குறிப்பாக இலங்கைப் போராட்டத்தின் போது காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டார்கள் என்பதே. ஆனால் இவை போன்று கொள்கை ரீதியாக கருணாநிதி பற்றிய விமர்சனம் செய்யாத தினமலர் வழக்கமான திராவிட அரசியல் காழ்புணர்வு மற்றும் கருணாநிதி பற்றிய தீவிர வெறுப்பு என்ற நிலையிலேயெ உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகிறது, அரசியல் மட்டுமல்ல திரைத்துறையைச் சார்ந்த நடிகைகளை விபச்சாரிகள் என்று கூறி அவர்களை அடையாளப்படுத்துவதாக படங்களை வெளியிட்டு திரைத்துறையினரிடம் செருப்படிப் படாத குறையாக கண்டனங்களைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டது

******

எந்த ஒரு குற்ற (கிரிமினல்) வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நீதிபதிகளே குறிப்பிடுவது கிடையாது, காரணம் குற்றம் சுமத்தப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்பது தெளிவு, விசாரணைகள், சாட்சிகள் அடிப்படையில் தான் ஒருவர் குற்றவாளி, குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது, மற்றபடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படுவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் (accused) என்றே அழைக்கப்படுகிறார்கள். வழக்கு முடியும் வரை குற்றத் தொடர்புடையவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்றே அழைக்கபடுவர், ஒருவர் குற்றமற்றவரா என்று தெரியாமல் அவரை குற்றவாளி என்று தொடர்ந்து அழைப்பது தான் குற்றம். 30 ஆண்டுகளாக நாளிதழ் நடத்திவரும் தினமலருக்கு இது தெரியாதா ? இவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால் 'பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சங்கராமன் கொலைக் குற்றவாளி ஜெயந்திர சரஸ்வதி ஆஜரானார்' என்று செய்திகள் போட்டு இருக்கலாமே இவர்கள், பிறகு ஏன் ?


இது போன்ற கேவலாமான காழ்புணர்வு தலைப்புகளை இட்டு செய்தி வெளியிட்டு வாசகர்களின் பொது அறிவையும் பாழ்படுத்தும் தினமலரின் செயல் கண்டிக்கத்தக்கது, திமுகவினர் நினைத்தால் மேற்கண்ட இழிவிற்கு மான இழப்பு வழக்கே தொடுக்கலாம், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறதோ தினமலர், நான் கனிமொழி இராசா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று சொல்லவரவில்லை, அவற்றை முடிவு செய்வது நீதிமன்றம் தானே. இப்படிப்பட்ட இழிதொழிலாக்கி நாளிதழ் நடத்துவதற்கு ஆளும் அரசியல்வாதிகளுக்கு குண்டி கழுவி விட்டு சேவை செய்து துட்டுப்பார்க்கலாம், துய்மை செய்யும் தூய பணி. செய்வார்களா ?

12 மார்ச், 2010

பெரியாரிஸ்டுகளை வெறுக்கிறேன் !

அண்மையில் சாருவின் நித்யானந்தம் பற்றிய பேட்டியை ஜூவி வெளி இட்டிருந்தது, அதில் சாரு என்ன உளறினார் என்பது நமக்கு தேவையற்றது. இருந்தாலும் அந்த பேட்டியின் தொடக்கத்தில் சாருவை 'பெரியாரிஸ்ட்' என்பதாக முன்மொழிந்து பேட்டியை தொடங்கி இருந்தார்கள்.

செய்தி இதழ்கள் பெரியாரிஸ்ட் என்று அறிமுகப்படுத்துவது சாரு போன்றவர்களைத் தான். இந்த செய்தி இதழ்கள் பெரியார் பெயரை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது. இதே போல் ஒருமுறை ஜெயமோகன் குமரி மைந்தனை பெரியாரிஸ்ட் என்று குறிப்பிட்டு பலரிடம் கண்டனங்களைப் பெற்றார். குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் இல்லை, தமிழ்தேசியவாதி என்று கூறிக் கொள்பவர் என்றாலும் அண்ணா போன்றவர்களின் தமிழ்தேசிய எண்ணமும் குமரிமைந்தனின் தமிழ் தேசியமும் வேறு வேறானவை. 'ஹீலிங்' பயிற்சிக்கு அசைவம் சாப்பிடுவதை நிறுத்தனும், நான் இஸ்லாம் பாரம்பரியத்தில் வந்தவன், அதனால் என்னால் அசைவம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் நான் நித்தியின் ஆசிரமத்தில் ஹீலிங் செய்யும் பயிற்சி எடுக்கவில்லை. நித்தி நோய்களை குணப்படுத்துகிறார் என்று நான் எழுதியது முற்றிலும் உண்மை நான் தவறாக எதையும் எழுதிவில்லை என்று குறிப்பிடாமல் 'ஹீலிங், அசைவம்' என சப்பைக் கட்டி இருந்தார் சாரு. எந்த ஒரு இஸ்லாமிய பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களும் ஒரு மனிதனை தெய்வம் ஆக்கி, கடவுளுக்கு இணையானவராக வைத்துப் பார்த்ததில்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் கொண்டவரும் இல்லை, பெரியாரிஸ்டும் இல்லை. சாரு இஸ்லாமிய பாரம்பரியம் என்று அவர் பிரியாணி சாப்பிடுவதைத்தான் சொல்கிறார் என்றால் அதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம், பிரியாணி விரும்பி சாப்பிடும் நான் ஹீலிங் பயிற்சிக்காக சைவம் சாப்பிட விரும்பவில்லை என.

"நித்யானந்தரின் வழிமுறையில் ‘சொஸ்தப்படுத்துபவர்கள்’ என்று ஒரு பிரிவு உண்டு. அந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் எடுத்து ஹீலராக ஆகி விடலாம். நித்யானந்தரின் மேல் மிகுந்த பற்றுக் கொண்ட என்னையும் ஹீலராக ஆகச் சொல்லி பலரும் கேட்டனர். நிர்மலாவும் (முன்னாள் ராக சுதா) பலமுறை என்னிடம் இதுபற்றிக் கேட்டார். அதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்தப் பயிற்சியை எடுத்தால் நீங்கள் சைவ உணவுக்காரராக மாற வேண்டும். மது அருந்தக் கூடாது. அப்போது நான் நிர்மலாவிடம் சொன்னேன்: நான் கலாச்சார ரீதியாக இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டவன். என்னால் மாமிசம் உண்ணாமல் இருக்க முடியாது." - சாரு

பிரியாணி, மாமிசம் சாப்பிடுவது மட்டும் தான் இஸ்லாமிய பின்னனியா ? இஸ்லாமிய பின்னனியாளர்கள் சாமியார்களுக்கு சாமரம் வீசியது, காலில் விழுந்து கிடந்தது கிடையாதே.

"உங்களையெல்லாம் 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்தமுடியாது" என்று கூறிய விவேக், உயர்வர்க்க மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டு படிக்காத பாமரர்களின் மூட நம்பிக்கைகளை முற்போக்கு என்ற பெயரில் நகைச்சுவையாக்கி கல்லா பார்த்தவர் தான் நடிகர் விவேக், இவருக்கும் பெரியாருக்கும் எள்ளளவும் தொடர்பே இல்லை, அப்படி இருந்திருந்தால் இவரால் திருப்பதி, பழனி மொட்டைகளையோ (அதையும் ஏழைகள் மட்டுமே போடுகிறார்கள்) , ஐயப்பனின் பெண்கள் மீதான தீட்டுகளையோ சாடி இருக்க முடியும். விவேக் புரட்சி செய்கிறார், புண்ணாக்கு செய்கிறார், சின்னக் கலைவாணர் என்றெல்லாம் புகழ அவரும் கலைமாமனி, பத்ம பூசன் போன்ற விருதுகளை 'திரையில் மூட நம்பிக்கை விழிப்புணர்வு' ஊட்டி பெற்றுக் கொண்டார்.

விவேக்கின் பெரியார் கருத்துகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு, கீழ்கண்ட வீடியோவே சான்று.





எந்த ஒரு பெரியாரிஸ்டும் ஆசாமிகளை சாமி என்று புகழ்ந்தது கிடையாது, சாரு பெரியாரிஸ்டாம், விவேக் பெரியாரைப் பரப்புகிறாராம்.

20 ஜனவரி, 2010

பெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...

Joseph Paulraj
to me

அன்புள்ள பெரியவா,
உங்கள் பதிவை வாசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ஒருவர் எனக்கு இந்த ஃபைலை அனுப்பி உங்களுக்கு அனுப்ப சொன்னார்.

படிக்கவும்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ் (தென்கலை ஐயங்கார்)






சிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு ! - என்ற பதிவுக்காக இந்த மின் அஞ்சல் வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அந்த வாசகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதனை பதிவில் வெளி இட்டு இருக்கிறேன். அந்த வாசகிக்கு நன்றி !

*****

இது போன்ற பாம்பு தேவநாதன் புகழ் மச்சேஸ்வரர் கோவிலினுள்ளும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஒரு நாத்திகனின் பார்வையிலும் வைணவம் மற்றும் மாற்றுக் (மத) இறைக் கொள்கையாளர்கள் பார்வையிலும் ஆட்டுக்கார அலமேலு ஆட்டைவிட இந்த பாம்பு நன்றாகவே செய்கிறது.

29 நவம்பர், 2009

அவன் அவர் அது !

செய்தி ஊடகங்கள் நான்காம் தூண், சமூதாயத்தை, சமுதாய எண்ணங்களைக் கட்டமைப்பதில் அவையே முதல் தூண். அவர்கள் வெளியிடும் தகவல் மக்கள் வெறும் தகவலாக எடுத்துக் கொள்வது இல்லை என்பது ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஒரு முறை அமெரிக்காவில் வெள்ளத்தினால் உணவு திண்டாட்டம் ஏற்பட்ட போது அமெரிக்க கடைகள் பல சூறையாடப்பட்டன, பொருள்களை அள்ளிச் சென்றவர்கள் பற்றிய பல்வேறு ஊடக செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தனவாம், அதில் வெள்ளையர்கள் அள்ளிச் சென்றதைப் பற்றிய செய்திகளில் "உணவுக்காக பொருள்களை எடுத்துச் சென்றனர்" என்றும் கருப்பர்கள் அள்ளிச் சென்றது பற்றிய படச் செய்திகளில் "உணவுக்காக பொருள்களைச் திருடிச் சென்றனர்" என்றும் வெளியாகி இருந்தனவாம்.

அவன்:

வடசென்னை பகுதியில், பகல் நேரத்தில் பூட்டப்பட் டிருந்த வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெரம்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவன் சுந்தர் (25). இவன் 2006ம் ஆண்டு செம்பியம் மற்றும் பெரவள்ளூர் பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

இவன் மீது 12க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த சுந்தர், மளிகைக் கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தான். கடைக்கு வரவேண்டிய பணத்தை, சென்னையில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று காசோலைகளாக பெற்றான். அதை வங்கியில் செலுத்தி, பணமாக மாற்றி கடைக்கு கொண்டு வந்து சேர்த்து வந்தான். பூக்கடை, யானைக்கவுனி, ஏழு கிணறு, கொத்தவால் சாவடி, எஸ்பிளனேடு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிக் கிடக்கும் வீடுகளில் பகல் நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.

அவர்:

காஞ்சிபுரம்:அர்ச்சகர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கோவில் நிர்வாகிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் மச்சேஸ்வரர் கோவில் உள்ளது. தனியார் கோவில். இக்கோவிலில் பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன்(35) அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார்.


இவர் கோவிலுக்கு வந்த பெண்களிடம் கோவில் உள்ளே உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளார். புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தேவநாதன் தலைமறைவானார். முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கடந்த 16ம் தேதி காஞ்சிபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரணடைந்தார். அவரை, ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். நீதிபதி இரண்டு நாட்கள் அனுமதி அளித்தார்.


அது :

இந்த இரு (அவன், அவர்) செய்திக்குரிய அது.... தமிழில் நெ.1 (என்று சொல்லிக் கொள்ளும்) நாளிதழான தினமலர் (தமிழர்கள் தினமலரை காசு கொடுத்து வாங்கிப் படிப்பது சொந்த செலவில் சூனியம்)

*****

பார்பனீயம் என்றால் என்ன ? புரியல தயவு செய்து விளக்கவும்.

18 நவம்பர், 2009

என்ன ஒரு வில்லத்தனம் !

இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது குறித்து பல்வேறு ஊகங்கள், தகவல்கள் இந்திய ஊடகங்களில் பரப்பப்படுகிறது. உலகப் பகுதிகளில் பொதுவாக வட இந்தியர்களுக்கு எதாவது இடர்கள் என்றால் அதை இந்திய அளவு தேசிய பொது சிக்கலாக காட்டுவதே வடஇந்திய ஊடகங்களின் வேலை. அதுமட்டுமல்ல மைய அரசும் வட இந்தியர்கள் பிரச்சனை என்றால் உடனே நடவெடிக்கை எடுப்பார்கள், அண்மையில் பிரான்சோ இத்தாலியோ எங்கோ ஒரு நாட்டில் சிங்குகளுக்கு முண்டாசு தடை விதிக்கப்பட்ட போது பிரதமர் மன்மோகன் சிங் மீசை துடித்தது, உடனே பேச்சு வார்த்தை நடத்தி பாரம்பரியம் பழக்கவழக்கம் இதிலெல்லாம் எவரும் தலையிட முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து பிற நாடுகளுக்கு குடியேரியவர்கள் குறிப்பாக மலேசியாவில் சென்ற ஆண்டு நடந்த பெரும் கலவரங்களில் இந்திய அரசு முதலில் அது மலேசிய நாட்டின் பிரச்சனை என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார்கள். எங்கேயும் போகவேண்டாம் இங்கே தமிழ்நாட்டில் இராமேஷ்வரம் பகுதியில் ஆண்டுக்கு 50 மீனவர்களுக்கும் மேல் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுகின்றனர், அவர்கள் பிடித்த மீன்கள், படகுகள் வரை அனைத்தும் பிடுங்கப்பட்டு அவர்களை அம்மண சித்திரவதை செய்து குத்துயிரும் குலை உயிருமாக திருப்பி துரத்திவிடுவது வாடிக்கையாகவே நடக்கிறது, இதைப் பற்றி இந்திய அரசு அலட்டிக் கொண்டதே குறைவு, அப்படியே அலட்டிக் கொண்டாலும் அது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு... கூட்டணி பாதிப்பு என்கிற ரீதியில் கண்தொடைப்பாக விமானம் விடுகிறோம், கப்பல் விடுகிறோம், ஹெலிக்காப்டரில் ரோந்துவருகிறோம், நிலைமையை அணுக்கமாக கண்காணித்து அறிக்கை விடுகிறோம் என்பதாக பேட்டி அளிப்பதுடன் சரி.
மீனவர்கள் தாக்கப்படுவது மாதந்திர வாடிக்கைப் போல் தொடர்ந்து நடந்தேறிவரும்.

இந்திய நிலப்பரப்பில் தென்மாநிலங்களை இணைத்துக் கொள்வதுடன் தென்மாநில வாக்காளரின் வாக்குகள் என்பதைத் தவிர்த்து தென்னக மக்களின் நலன் குறிப்பாக தமிழக மக்களின் நலன் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள், அதே சமயத்தில் ஏஆர்ரஹ்மான் போன்றோர் சொந்த முயற்சியில் புகழடைந்தால் அவர்களை தமிழர் என்று குறுக்காதீர்கள் இந்தியர் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை கூறுவார்கள். வட இந்தியர்கள் தேசியவாதம் தென் இந்திய மக்களின் நலன் குறித்ததே அல்ல, கர்நாடகாவும், தமிழகமும், பிற தென் இந்திய மாநிலங்களும் தண்ணீர் பிரச்சனையில், தெலுங்கானா உட்பட மாநில உரிமை குறித்து உழன்று கொண்டிருந்தால் அவையெல்லாம் மாநிலப் பிரச்சனை என்று கூறி தேசியவாதத்தை தற்காலிகமாக கக்கத்திற்குள் ஒளித்துக் கொள்வார்கள்

ஆஸ்திரேலியாவில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு காரணமாக அவர்களுக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதாக தனது கண்டிபிடிப்பில் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர். இதே தினமலர் நேற்று இந்தி எதிர்பாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி அளிக்கிறார்கள் அவர்கள் தேசவிரோதிகள் போல் காட்டி (தேசத்தின் மொழியைப் புறக்கணிக்கிறவர்கள் தேசவிரோதிகள் தான் என்பது அவர்கள் சித்தாந்தம்) ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறது.

இவர்கள் ஆங்கிலக் கல்வியை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதை தெளிவுபடுத்தாமல் குழப்பி அதில் இந்திய தேசியம் என்கிற கருத்து திணிப்பை வைப்பதுடன் அதை வழக்கமான கோணங்கித்தன எழுத்து இட்டுக்கட்டு மூலம் பரப்பிவருகிறார்கள். தேசிய அடையாளம் என்பதே பல்வேறு மொழிகளுக்கான (மொழியால் பழக்கவழங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட) உரிமை என்பதே, அதை ஒரு மொழியைத் திணித்து ஏற்படுத்திவிட முடியாது என்கிற புரிதல் இருந்தும், பெரும்பாண்மை ஆளவேண்டும் என்கிற சிந்தாந்தாத்தில் தேசிய பொது மொழி என்ற சொல்லில் ஹிந்தி வலியுறுத்துபர்களிடம் பேசுபவர்களிடம் நடுநிலைமையோ, நேர்மையான கருத்துகளையோ பெற்றுவிட முடியுமா ?

இந்தியர்கள் வெளி நாடுகளில் அடிவாங்குவது அனைவருக்குமே வருத்தமளிப்பது உண்மைதான் என்றாலும் அது அனைத்து மாநில, இந்திய இன மக்கள் அப்படி அடிவாங்கும் போது இருக்க வேண்டும். முதலை வடிக்கும் கண்ணீருக்கும் இவர்கள் கண்ணீருக்கும் ஒரே வேறுபாடுகளே கிடையாது. 'வட இந்தியர் உயிர்தான் உயிர் தென்னிந்தியர் உயிரெல்லாம் மயிர்' என்பது வட மாநில மக்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் இருக்கிறதென்றால் தினமலரும் அதையே பின்பற்றகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்? - இன்றைய தினமலர்

மராத்தி கோஷம் மற்றவர்களுக்கு தான் : அவங்க பிள்ளைகளோ இங்கிலீஷ் மீடியம்

(வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன் வலைப் பக்கத்தில்

டெல்லியில் நீங்கள் இருந்திருந்தால் வட இந்தியர்கள், சீக்கியர்கள் குறிப்பாக, நடந்துகொள்ளும் முறையை அறிந்து மனம் கசந்திருப்பீர்கள். குறிப்பாக தென்னிந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். அவர்களுக்கு விசித்திரமான ஒரு உயர்வு மனப்பான்மை. பெரும்பாலான உயர்வு மனப்பான்மைகள் ஆழமான தாழ்வு மனப்பான்மையில் இருந்து செயற்கையாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவை. தென்னிந்தியர்களை மூளைக்காரர்கள் என்று அவர்கள் சரியாகவோ தப்பாகவோ எண்ணிக்கொண்டு வரும் உயர்வு மனப்பான்மையா இது?
மேலும் வாசிக்க...

30 செப்டம்பர், 2009

நாய்களின் எல்லைக் கோடுகள் !

தன் இனத்தைச் சேர்ந்தவர்களை வெறுப்புடன் பார்க்கும் குணம் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் தான் இருக்கின்றன. தெரு நாய்களை நன்கு கவனித்தால் அது மற்றொரு தெருநாயை அல்லது அடுத்தத் தெரு நாயை தன்னுடைய தெருவிற்குள் நுழைய அனுமதிக்காது.

பக்தி என்றப் பெயரில் பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இத்தகையது தான். வழிபாட்டுத் தளங்கள் பக்தியை வளர்க்கின்றன. அது ஒரு நம்பிக்கை என்பதைத் தாண்டி மதவெறியர்களின் எல்லைக் கோடுகள் ஆகிப் போனதைத் தான் இன்றைய காலத்தில் பார்க்கிறோம். பொது இடங்களில் வழிபாட்டுத் தளங்கள் இருக்கும் போது பிற மதத்தினர் அந்த வழியாக தங்கள் மத ஊர்வலங்களை நடத்தும் போது அந்த இடங்கள் கலவர பூமியாகிறது. 100 பேர் வரை காயமடையவும் சிலரின் இறப்புகளுக்கு காரணமாகவும் எதாவது ஒரு பொது இட வழிப்பாட்டுத் தளங்கள் ஆண்டு தோறும் ஒரு கெட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துவிடுகிறது. குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் இதை பார்க்கலாம்.

பொது இடங்களின் வழிபாட்டுத் தளங்களின் விழாக்களின் போது பல்வேறு தரப்பினர் தொல்லைக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ஒலி அளவு மிகுந்த ஒலிப் பெருக்கிகளை வைப்பதால் அங்கு படிக்கும் மாணவர்கள் முதல் பிறந்த குழந்தைகளின் தூக்கம் கெடுகிறது. அதிகாலை வழிபாடு/தொழுகை என்ற பெயரில் ஓலமிடும் ஒலிப்பெருக்கிகள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இன்றைக்கு பலரும் இரவு வேலை பார்த்துவிட்டு அதிகாலைத் திரும்புவர்களாகவும், விடியற்காலை தூங்கச் செல்பவர்களாகவும் கூட இருக்கிறார்கள். அவர்களின் தூக்கத்தை இத்தகைய வழிபாடுகள் கெடுக்கிறது என்பது உண்மை. மேலும் மதவழி வழிபாட்டு நம்பிக்கையை அந்தந்த மதத்தினர் மட்டுமே சகித்துக் கொள்வர் என்பது கண்கூடு.

புதிதாக சாலை விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளும் ஒப்புதல் அளித்தாலும் கடைசியில் ஒரு முட்டுக்கட்டையாகவே பொது இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தளங்கள் அமைந்துவிடுகின்றன. அதை அகற்றி திட்டம் நிறைவேறுவதற்குள் பல்வேறு எதிர்புகளையும் நீதிமன்றங்களின் தடை ஆணையையும் சந்திக்க நேரிட்டு மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளின் காலம் தாழ்கிறது.

வீட்டிற்குள் வழிபாடுகளை யாரும் தடை செய்யப் போவதில்லை. ஏற்கனவே இருக்கும் லட்சக்கணக்கான வழிபாடுத்தளங்களில் 50 விழுக்காடு வரை பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது, புதிதாகக் கட்டுவதற்கான தேவை என்றால் புதியதொரு குடி இருப்புப் பகுதி ஏற்பட்டு அது வழிபாடுத்தளங்களுக்கு தொலைவில் அமைந்திருந்தால் தான் அங்கு தேவைப்படும். மற்றபடி ஏற்கனவே அமைந்த குடி இருப்புப் பகுதிகளில் புதிய வழிபாட்டுத் தளங்களை அதுவும் பலமதத்தினருக்கும் பொதுவான ஒரு இடத்தில் அமைப்பதால் சமூக அமைதி கெடுகிறது என்பதுடன் மேற்கண்ட பல தொல்லைகளும் ஏற்படுகின்றன. இவை முற்றிலும் தவிர்க்கப் படவேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் வழிபாடுத்தளங்களை அகற்ற அந்தந்த மத நலவிரும்பிகள் முன்வருவதே மத நல்லிணக்கத்திற்கு நல்லது.

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் - என்கிற தீர்ப்பையும் வழிகாட்டுதல்களையும் வரவேற்கிறேன்.

"உள்ளமே கோவில் ஊனுடம்பே ஆலயம்" - இரண்டையும் நன்கு உணர்ந்து கொண்டால் புறவழிபாட்டுத் தளங்கள் அதுவும் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கும் வழிபாட்டுத் தளங்கள் தேவைப் படாது.


அப்படியும் பொது வழிபாட்டுத் தளம் வேண்டும் என்போர் பூசலார் முறையைப் பின்பற்றிக் கட்டலாம், அது அனைத்து மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத் தலங்களை விருப்பம் போல் அமைத்துக் கொள்ள ஏற்றதொரு நல்வழிதான்

27 செப்டம்பர், 2009

அந்தக் குருக்கள் - இந்து சமயத்தின் அழுக்கு ?

காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் குருக்கள் ஒருவர் கருவறையில் சிவனை சாட்சியாக வைத்துக் கொண்டு கசமுசா செய்த விவரம் ஜூவியில் படத்துடன் வெளி ஆகி இருக்கிறது.

கோவில், பக்தி, நம்பிக்கையுடன் பக்தர்கள் வரும் இடம், புனிதம், நாத்திகர்கள் விரும்பிவராவிட்டாலும் மரியாதைக்கு உரிய இடமாக கருதும் ஒரு தலம், தெய்வீகப் பணியில் இடம் பெரும் ஒருவர் இத்தகைய தகாத செயலைச் செய்யலாமா ? - என்கிற பொதுப் புத்திக் கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால் இது வெறும் சாதாரண நிகழ்வு, கட்டற்ற காம வயப்படும் ஒருவன், அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத ஒரு காமுகன் பொது இடம் என்றும் பார்க்காமல் நடந்து கொண்ட ஒரு நிகழ்வு. இது போன்ற வக்ரம் பிடித்த மனிதர்கள் சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களில் ஒருவராகக் கூட இருப்பர், உயிரைக் காப்பாற்றும் தொழில் இருக்கும் மருத்துவர்களில் ஒருவராகக் கூட இருப்பர்.

இது போன்ற மனிதர்களை ஒரு குழுவுக்குள் அடக்கி குழுவை நோக்கிய கேள்விகளாக, அந்தக் குழுவின் ஒழுக்கம் குறித்தக் கேலியாக இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பொது புத்தி சார்ந்த ஒரு அறிவீன சிந்தனைத் தாக்கமாகத்தான் தெரிகிறது.

அந்த நிகழ்வைக் குறித்தக் ஜூவிக் கட்டுரையில் நான் படித்த அபத்த பொதுப் புத்திச் கருத்துகள்

* இந்து மதத்தில் நடந்த ஒன்றை வெளிச்சம் போட்டுக்காட்டுவதைப் போல் பிற மதத்தினரின் ஒழுங்கீனங்களையும் ஜூவி வெளி இடுமா ? - நடராஜா.

- இது எவ்வளவு அபத்தமான கேள்வி பாருங்கள், யாருமே யோக்கியமில்லை என்று சொல்வதுடன், அதை ஞாயப்படுத்துவதும் போலவும், ஒரு தனிமனிதனின் தவறுகளை தன் மதத்து தவறு போன்ற ஒப்புதல் வாக்குமூலமும் அந்தக் கேள்வியில் அடங்கி இருக்கிறது

******

மக்களிடம் நேரடியாக சேவை அல்லது பணி ஆற்றக் கூடியவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் என்பது வரையறைச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் வழியுறுத்தல்கள் கிடையாது, அப்படிப் பட்ட தொழில்களில் சேவைகளில் ஒழுக்கம் கெட்டவர்கள் இருக்கும் போது அந்த சேவையில் தற்காலிகத் தடை ஏற்படுவதுடன், அதே தொழிலைப் பணியைச் செய்பவர்களையும் சந்தேகத்துடன் பார்க்கக் கூடிய சூழலை பொதுச் சமூகம் கட்டமைத்துக் கொள்கிறது.

என்னைக் கேட்டால் அந்தக் குருக்களில் செயல் ஒரு தனிமனித அபிலாசை, அதைப் பொது இடத்தில் செயல்படுத்து படம் பிடித்துக் கொண்டது தனிமனித வக்ரம். இதை இந்து மதத்துடனோ, புனிதத் தன்மையுடனோ பார்பதிலோ, பார்பன சமூகத்துச் செயலாகவோ கட்டமைக்கச் செய்யும் முயற்சியில் ஏற்புடையவன் அல்ல. கோவிலில் பணி புரியும் பார்பனர்களில் 95 விழுக்காட்டிற்கும் மேலானோர், கோவில் தங்களுக்கு வாழ்வியல் ஆதாரம் என்பதால் அதை நேர்த்தியுடனும், மரியாதையுடனும் தான் செய்துவருகிறார்கள். ஒரு சில தனிமனிதர்களின் கீழான நடவடிக்கையை அந்த சமூகத்தின் பொதுக் குற்றம் போல் கட்டமைக்கப்படுவது பார்பன சமூகத்திற்கு எதிரான பொதுபுத்தியின் வன் செயலாகப் பார்க்கிறேன்.

ஒரு ஆசிரியர் தனது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டால் அது ஆசிரியர்களின் மீதான ஒட்டுமொத்த குற்றம் ஆகாது. ஒரே ஒரு மருத்துவர் பிரகாஷ் பெண்களை வைத்து நீலப்படம் எடுத்தால் மருத்துவர்கள் அனைவருமே அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று பார்பது எப்படி சரியோ, அது போல் தவறு இழைத்த ஒரு குருக்களின் செயலை பார்பன சமூகத்துச் செயல் போல் எழுதப்பட்டால் அதுவும் கண்டிக்கத் தக்கதே.

அந்த குருக்களின் செயல் குற்றமா இல்லையா என்பதைவிட அந்தச் செயல் புனிதத் தன்மை என்கிற கட்டமைப்பின் மீது விழும் எச்சிலாக அந்தப் புனிதத் தன்மை மீது சிறுதும் நம்பிக்கையற்ற ஒருவன் தான் விரும்பியே மீறி அதன் மீது துப்பும் எச்சிலாகத்தான் நான் பார்க்கிறேன்.

*****

திருப்புகழ் எழுதிய அருணகிரி நாதர் பல விலைமகளிருடன் சல்லாபித்ததை திருப்புகழில் எழுதி இருக்கிறார், அருணகிரிநாதரின் திருப்புகழ் சைவத் தமிழ்பாடல்களில் சிறந்ததில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஆனால் அவையாவும் அவர் இறை நம்பிக்கைக் கொள்ளும் முன் நடந்தவை என்பதை அவைப் பாடல்களில் வருவதைப் பக்திப் பெருக்குடன் முருக பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

எல்லையற்ற காமம் யாருக்கும் துன்பம் தரவில்லை என்றால் அதை அடையும் முறை கூட தவறல்ல என்பதை சமூகம் மறைமுகமாக ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறது, ஆனால் அதே சமூகம் தங்களால் கட்டமைப்பட்டுள்ள புனிதத் தன்மைமீது எச்சில் விழும் போது தான் கோபம் கொள்கிறது. இந்தக் கோபம் ஞாயமானதா ? என்னைப் பொருத்து அந்தக் குருக்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர் இல்லை என்பதைத் தவிர்த்து, மக்கள் புனிதமாகக் கருத்தும் இடத்தை தனது செயலுக்கு பயன்படுத்திக் கொண்டான் என்பதைத் தவிர்த்து இதை நான் மாபெரும் குற்றமாகக் கருதவில்லை.

இந்தக் குருக்களை இந்துமதத்தின் அவமான சின்னமாக கருதி இந்து சமயம் இப்படித்தான் என்பது போன்ற மறைமுக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதையும், அந்த ஒருவனின் செயலை பார்பனச் செயலாகப் பார்ப்பதெல்லாம் பொதுப் புத்திச் சார்ந்த அரைகுறை சமூகப் புரிதலாகப் பார்க்கிறேன்.

22 செப்டம்பர், 2009

(அ)தாங்க முடியல !

எத்தனை விமர்சனங்கள் எத்தனை ஆராய்ச்சிகள் ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் பதிவுலகம் அல்லோகலப்படுகிறது.

உன்னைப் போல் ஒருவன் - படத்துல எதும் மேசேஜ் இருக்கிறதா ? என்று பார்த்தால் எனக்கு தெரிந்த மெசேஜ், இந்தியில் வெற்றிபெற்ற முன்னா பாய் எம்பிபிஸ் போல் தமிழ் சூழலில் கமல் நடிக்க வசூல்ராஜா என்ற பெயரில் வெளியான படம் போல் தான் 'வெட்னெஸ்டே' என்ற படம் 'உன்னைப் போல் ஒருவன்' ஆனதும். முழுக்க முழுக்க பொழுது போக்கு திரைத் துறைச் சார்ந்த வியாபார நோக்கம். வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் கதையை எடுத்து கையை சுட்டுக் கொள்ளாத தமிழ் பதிப்பு.

கமல் ஒரு நடிகர் என்பது போல் அவர் ஒரு தயாரிப்பாளர் வெற்றிபெற்ற படங்களை தமிழில் எடுத்து இருக்கிறார். இதில் யாரும் நட்டப்படவில்லை என்றால் கமல் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல வியாபாரி என்று நினைப்பதே சரி என்பதாக நான் கருதுகிறேன்.

இன்றைய தொழில் நுட்பங்களையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் திரைக்கதைக்குள் கொண்டுவந்து ஒரு திரைப்படமாக ஆக்கி இருக்கிறார்கள், படம் தொய்வின்றி செல்கிறது என்பதைத் தவிர்த்து வேறு கோணங்களில் என்னால் இந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை.

படத்தில் ஏன் மதத்தீவிரவாதிகளைக் மையப்படுத்தனும் ? சிறையில் இருந்த / இருக்கும் மஃபியா கும்பல்களை, கபிலன், ஆசைத் தம்பி, வெள்ளை ரவி, வெல்டிங் குமார் போன்ற ரவுடிகளை ஏன் அதற்குப் பதிலாகப் பயன்படுத்தி இருக்கக் கூடாது என்றெல்லாம் கூட யோசித்துப் பார்க்கும் போது. அது போன்ற ரவுடிகளை காவல் துறையினரே என் கவுண்டர் செய்துவிடுவதால் அவர்களைப் பயன்படுத்துவது கதைக்குப்பொருந்தாது என்று நினைத்திருக்கலாம், அதனால் இந்தி பதிப்பில் உள்ளதை அப்படியே தான் செய்திருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு வலைப்பதிவுகளில் சிலர் எழுத்துக்களில் விமர்சனமாக வரும் மதவெறுப்பு சாயம் பூசுவது பொருந்திவரவில்லை.

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அது பற்றி பொதுவில் பேசனும், பேசப்படனும். முன்பெல்லாம் படங்களில் 'பாகிஸ்தான்' என்ற சொல் இடம் பெற்றாலே அதைத் தனிக்கை செய்து அந்த நாட்டைப் பற்றிப் பேசுவது தவறு என்பது போல் நல்லெண்ண(ஐ) நடவடிக்கையாக இந்திய அரசு திரைப்படத்திற்கு சில தனிக்கைகள் வைத்திருந்தன. பின்னர் விஜய்காந்து படங்களில் தீவிரமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பந்தாடினார் தனிக்கைக் குழுக்களும் கண்டு கொள்ளவில்லை.

இந்தப் படத்தில் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதத்தை நேரடியாகத் தூண்டிவிடுவதாக பலகாட்சிகளில் சொல்லபடுகிறது. குறிப்பாக பொம்மை முசாரப் (முஷ்) மற்றும் பொம்மை புஷ் இடம்பெறும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. பாகிஸ்தானைப் பற்றி நல்லெண்ணம் தொடர்ந்து ஏற்படுத்துவதால் நாம் அடையப் போவது ஒன்றுமே இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படையாக உணர்ந்து இருப்பதால் திரைப்படங்களில் அது பற்றிய அடிக்கோடுகள் வரும் போது தனிக்கை குழுக்களால் கண்டு கொள்ளமால் விடப்படுகிறது என்பதே உண்மை. முன்பு நல்லெண்ண(ஐ) அடிப்படையில் 'பாகிஸ்தான்' பெயர் வரும் போது தனிக்கை செய்தார்கள் ஆனால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை மாறாக மும்பை ஓட்டல்கள் நம் கண் முன்னே தாக்குதலுக்கு ஆளானது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் லஷ்கர் ஈ தொய்பா, அல்லும்மா போன்ற பெயர்களை படத்தில் நேரடியாகப் பயன்படுத்தி இருப்பதால் படத்தயாரிப்பாளரான கமல் தான் இந்தக் குழுக்களால் ஒரு வேளை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றெல்லாம் எண்ணி திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்க வேண்டும், மாறாக உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்து மோடி முதல் தீவிரவாதக் குழுக்கள் பெயர்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் துணிவுள்ளோர்கள் அனைவரும் பாராட்டலாம். அதைவிடுத்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்திவிட்டார்கள், சங்கர்பரிவாரம், பார்பனக் கமல் இதெல்லாம் டூ........மச்.

இந்திய அளவில் இந்துக்கள் இந்துத்தீவிரவாதிகளைக் கண்டித்து வருவது போலவே ( அவர்களுக்கு ஆதரவென்றால் காங்கிரசு ஆட்சியில் அமர்ந்திருக்காது) இஸ்லாமியர்கள் இஸ்லாம் பெயரில் நடந்துவரும் தீவிரவாதக் கும்பல்களை கண்டிப்பதற்கு முன்வரவேண்டும் (மிகச் சிலரே அவ்வாறு செய்கிறார்கள்). மற்றவர்கள் இஸ்லாம் தீவிரவாதிகள் என்று குறிப்பிடும் போது இஸ்லாமியர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது, ஆனால் அந்த வருத்தம் மட்டுமே இஸ்லாம் பெயரில் இருக்கும் தீவிரவாதங்களை அப்புறப்படுத்துவிடாது.

அணு ஆயுத வல்லரசுகள் தங்கள் செயலை மறைக்க உலக அளவில் உருவாகி இருப்பதாகக் காட்டுவது தான் 'இஸ்லாம் தீவிரவாதம்' - இதை இஸ்லாமியர்களும் ஏனையோர்களும் புரிந்து கொண்டு களைய முன்வருவது நல்லது

நானும் இரண்டாவது முறை உ.போ.ஒ எழுதிட்டேன் :)

25 ஆகஸ்ட், 2009

கலாச்சாரக் காவலர்கள் கட்டமைக்கும் பெண்ணியம் !

பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் ஆகிய சொல்லாடல்களில் பலருக்கும் பல கருத்துகள் இருக்கிறது. ஊருக்கு அறிவுரைக் கூறும் ஆண் சமூகம் வீட்டுப் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் கொடுக்கிறதா என்பதே கேள்விக்குறி. தொடர்ந்து அழும் தொலைக்காட்சித் தொடர்கள் இன்னும் என்ன என்னவோ அத்தனை ஊடகங்களும் திடீர் பெண்ணிய வியாதிகளாகி பெண்கள் எதையெல்லாம் செய்யலாம் என்பதாக அவர்கள் எதோ நல்லது செய்வது போல் பெண் சமூகங்களை கீழறுத்ததே நடந்தேறிவருகிறது. இன்னும் ஒரு சிலர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறே அல்ல என்றெல்லாம் வழியுறுத்துகின்றனர். மேம்போக்காக பார்த்தால் அது சரிதான் என்பது போல் தெரியும், ஆனால் நல்லதொரு ஆணின் மனைவி கேடுகெட்ட ஆண்களின் வலையில் வீழ்வதற்கு இது போன்ற கருத்து வாதிகள் மறைமுகமாக குழிபறிக்கிறார்கள் என்பதே உண்மை.

பெண்கள் மதுக்குடிப்பதும் குடிக்காமல் இருப்பதற்கும் வளர்ப்பு, குடும்ப சூழலே காரணம், அது அவர்களது மிக மிக தனிப்பட்ட செயல் இதில் கருத்து சொல்ல எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து சித்தாள் வேலை, சாலைத் தொழிலாளிகள், கூலித் தொழிலாளி பெண்கள் பலருக்கு குடிக்கும் வழக்கம் இருக்கிறது, உடம்பு அசதியை மறந்து தூங்கினால் தான் அடுத்த நாள் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற காரணம் சொல்லுவார்கள், அது சரியான காரணமா ? இல்லையா ? என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அவை பொதுச் சமூக ஒழுக்கத்தை நலிவுறச் செய்வது போலவும், பெண் உரிமையுடன் தொடர்புடைய ஒன்று போலவும் ஊடகங்கள் கட்டமைப்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

கூலித் தொழிலாளி ஒருவர் மதுக்கடை முன்பு நின்று மதுக்குடிப்பதை படமெடுத்துப் போட்டு 'அன்றாடம் காய்சிகளின் பெண்ணொழுக்கம் பாரீர்'
என்பதை மறைமுகக் கருத்தாக திணிப்பது போல் மேல் தட்டு, நடுத்தர குடும்பங்களின் பெண்கள் நட்சத்திர மதுக்கூடங்களில்
ஆண்களுடன், அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்து மது அருந்துவதைப் படம் எடுத்துப் போட்டு கருத்து தெரிவிக்குமா ? அல்லது அப்படி எதுவுமே நடைபெறுவதில்லையா ?


படம் நன்றி : தினமலர்

9 ஆகஸ்ட், 2009

எனக்கும் வருத்தமே ! - உரையாடல் சிறுகதைப் போட்டி !

உரையாடல் சிறுகதைப் போட்டியில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் கலந்து கொண்டு 20 தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. முடிவுகளைப் பார்த்துவிட்டு புகைச்சல், , நமைச்சல், குடைச்சல் எல்லா 'சல்'லும் ஏற்பட்டு இருக்கிறது. போட்டிகளின் முடிவின் போது விமர்சனங்கள் எழும் என்றாலும் இந்த முறை பலரும் அது பற்றிப் பேசுகிறார்கள்.

"நாம எழுதுகிற எழுத்து நமக்கு உயர்வாக தெரிவது போலவே எல்லோருக்கும் தெரியவேண்டும்" என்கிற மனநிலையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் இவ்விமர்சனங்களின் ஒரு பகுதியைப் பார்க்கிறேன்.

போட்டியின் விதிமுறைகளை ஏற்று போட்டிகளில் பங்கு பெறும் பொழுது, போட்டி முடிவை விமர்சிக்கலாம் ஆனால் கடுமையான விமர்சனங்கள் தேவையற்றதாகத்தான் கருதுகிறேன். போட்டியின் நடுவர்களுக்கென்றே தனிப்பார்வை உண்டு. அவர்களது தனிப்பட்ட முடிவில் எது சிறந்த கதை என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை போட்டி நடத்துபவர்கள் அவர்களுக்கு அளிக்கிறார்கள். சில போட்டிகளில் நடுவர்களால் முடிவு செய்ய முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும் பொழுது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல்பரிசுகள் கொடுப்பதையெல்லாம் பார்த்து இருக்கிறோம்.
ஒரு சிலர் மட்டும் போட்டியில் கலந்து கொள்பவர்களின் சாதி, மதம் என்னவென்றெல்லாம் பார்த்து வெற்றியாளர்களை அறிவிக்கும் போது நடுநிலைமை தவறி நடந்து கொள்வார்கள், தொலைகாட்சி போன்ற நிகழ்ச்சிகளில் இது போன்ற கூத்துகள் நிறைய நடைபெறும் என்பதால், பல போட்டி நிகழ்ச்சிகளில் தொலைக் காட்சிகளில் குறிப்பாக இசை போட்டிகளில் வெற்றி பெறுபவர்களைப் பற்றி நிறைய திறமை உடையவர்கள் என்று நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால் பதிவர்களால் நடத்தபெற்ற உரையாடல் சிறுகதைப் போட்டியில் அப்படிப் பட்ட ஒரு நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கதைகளில் மொக்கைக் கதைகள் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை. அதில் வெற்றி பெற்ற சிலகதைகளை நானும் படித்திருக்கிறேன் என்பதால் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும், போட்டிக் குழுவினரான ஜ்யோராம் சுந்தரும், பைத்தியக்காரனும் தரமற்ற கதைகளை தேர்ந்தெடுத்திருப்பது போல் தெரியவில்லை. வெற்றிப் பெற்ற சிறுகதைகளில் நம் கதை இல்லை என்பதற்காக விமர்சனம் செய்பவர்கள் நல்லக் கதையாக எழுதி இருந்ததாக நினைத்தால் சிறு இதழ்களுக்கும், வார இதழ்களுக்கும் அனுப்பலாம்,

நீங்களும் ஒரு நான்கு பேர் கொண்ட போட்டி முடிவு செய்யும் நடுவர் குழுவில் இருந்தால் உங்களைப் போலத்தான் மற்ற மூவரும் முடிவு செய்வார்கள் என்று நினைப்பது தசரியாகுமா? அனைவரும் ஒன்று போல் சிந்திக்கக் கூடியவர்கள் என்றால் ஒரு போட்டிக்கு நடுவராக நான்கு பேர் தேவை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் தேவையற்ற சல சலப்புகள் குறையும்.

போட்டிகளுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொள்வது என்பது வேடிக்கைப் பார்ப்பதைவிட சிறப்பானது, அதில் பரிசு பெற்றால் மகிழ்ச்சி அடையளாம், இல்லை என்றால் கலந்து கொண்டோம் என்று மன நிறைவு அடையலாம்.
பெரும்பாலும் போட்டிகளில் ஜாம்பவான்கள் கலந்து கொள்வதில்லை ஏனெனில் கலந்து கொண்டு பரிசு கிடைக்காவிடில் எழுத்து ஏளனமாகப் பார்க்கப் படுமோ என்ற அச்சம், தாழ்வுணர்வு ஏற்படும். நமக்கெல்லாம் அப்படிப்பட்ட மனக்குறை இல்லை :)

வெற்றிக்கும் தோல்விக்கும் பொதுவானது ஆடுகளம். வெளியில் நின்று வேடிக்கைப் பார்க்காமல் அதில் போட்டியில் கலந்து கொண்டு களத்தில் நின்றோம் என்பதும் பெருமை தானே !

உரையாடல் சிறுகதைப் போட்டி நடத்தியவர்கள், மற்றும் போட்டியில் வென்றவர்கள், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

7 ஆகஸ்ட், 2009

மீன்கொத்தி (சிறுகதை) !

"டாக்டர்.... மேடம்... சொன்ன இடத்தில் கையெழுத்துப் போடுங்க..." சுகாதரத்துறை இயக்குனரான பெண் மருத்துவரிடம் மிரட்டுவது போன்று சொல்லிக் கொண்டு இருந்தார் அமைச்சரின் பிஏ.

"சார்...நீங்க மிரட்டினாலும்.....எங்களுக்குன்னு சில புரோசீஜர்ஸ் இருக்கு, முறைப்படி டெண்டர் விட்டு தான் நாங்க மருந்து வாங்குறோம்..."

"இருக்கட்டம் மேடம்...இப்ப உங்களுக்கு வந்திருக்கிற டெண்டர் எல்லாமே அமைச்சரின் வெவ்வேறு மருந்து கம்பெணிகளின் கொட்டேசன்கள் தான் என்று உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுல ஒரு கம்பெணிக்கு கொடுத்து இருக்கலாம், வந்திருப்பதில் ஒண்ணே ஒண்ணு புதுசா ஒரு கம்பெணி அனுப்பி இருப்பது, இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும், புதுக்கம்பெணி அமைச்சருக்கு போட்டியாக ஒருவன் ஆரம்பிச்சிருக்கான்.....அவனால அமைச்சருக்கு ஏற்கனவே 20 கோடி நட்டம்....அவனுக்கு கொடுத்தீர்கள் என்றால் அமைச்சர் கடுப்பாகிவிடுவார்"

"சார்.....உங்க கம்பெணிகளைவிட அந்த கம்பெணி குறைவாக கோட் பண்ணி இருக்காங்க...அவங்க மருந்துகளும் தரமானது......"

"மேடம் நீங்க தரத்தை பற்றியெல்லாம் பேசி தேவை இல்லாது ரிஸ்க் எடுக்கிறிங்க.....அமைச்சரை பகைச்சிக்காதிங்க.....அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

"சார்....எங்களுக்குத் தேவை நல்ல மருந்து......நான் உங்க கம்பெணிக்கு கொடுத்தால்....விவரம் தெரிந்து அந்தக் கம்பெனிக்காரங்க கோர்டுக்குப் போனாலும் எனக்கு பிரச்சனை தான்......என்னால உங்களுக்கு ஒத்துழைக்க முடியாது"

"மேடம் என்ன செய்விங்களோ......எனக்கு தெரியாது....நாளைக்கு டெண்டர் எங்களுக்கு கிடைச்சாகனும்"

"சாரி...மிஸ்டர்.....அடுத்த அடுத்த டெண்டர்களில் பார்க்கலாம்....."

"10 கோடி காண்ட்ரேக்ட்....அமைச்சர் எப்படியாவது அவருக்கு கிடைக்கனும் என்று சொல்லிவிட்டார்"

"திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காதிங்க.......எடத்தைக் காலிப்பண்ணுங்க .....இல்லாட்டி...."

அமைச்சரின் பிஏ.......அந்த மருத்துவ இயக்குனரை ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார்

***

மறுநாளுக்கு மறுநாள் அங்கே அமைச்சர் வீட்டில், பி.ஏ அமைச்சரிடம்,

"ஐயா.......நான் எவ்வளவோ சொல்லிவிட்டேன்......அவ.... அந்த அம்மா பயப்படுவது போல் தெரியல.... நமக்கு ஆர்டர் கிடைக்கல.....அந்த புதுக்கம்பெணிக்கு கிடைத்துவிட்டது... இனிமே ஒண்ணும் பண்ண முடியாது"

"எப்ப்டிய்யய எப்பிடிய்யா.....எம்மேல பயமில்லாமல் போச்சு...இரு அவளுக்கு ஆப்பு வைக்கிறேன்......நீ என்ன பண்ணுகிறே....அடுத்த டெண்டர் பிரிக்கும் போது நம்ம ஆளுங்களிடம் ஒரு 8 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து......அந்த அம்மாவைப் பார்க்கப் போகச் சொல்லு... மற்றதையெல்லாம் நான் விஜிலென்ஸ் ஆபிசர்களிடம் சொல்லி பார்த்துக் கொள்கிறேன்"

"அந்த அம்மா லஞ்சம் வாங்குமான்னு தெரியாது.......பின்னே எப்படி......?"

"அதையும் நான் பார்த்துக் கொள்கிறேன் ... வாங்கியதாக விஜிலென்ஸ் அலுவலர்கள் பத்திரிகையாளர்களிடம் சொல்லுவாங்க...."

****

மூன்று மாதம் கழித்து,

ஒரு நாள் அந்த பெண் மருத்துவரை கைது செய்து அழைத்துச் சென்றதை பற்றிய முந்தைய நாள் தொலைக்காட்சிப் படத்துடன், லஞ்சம் வாங்கிய பெண் டாக்டர் சிக்கினார், மருந்து கொள்முதலில் ஊழல் என்ற செய்தி கொட்டை எழுத்துகளில் செய்தி தாள்களில் வெளியாகி இருந்தது.

படித்துவிட்டு கட்சிக்கார பெருசு...இன்னொரு பெருசிடம்,

"ஆட்சி நல்லா போயிட்டு இருக்குல்லே....மக்களை ஏமாத்துறவங்க ... ஊழல் செய்றவங்க இப்படி சிக்கனும்யா.....பொம்பளைன்னா மட்டும் தப்பு செய்யலாமா ?"

என்று தன் சார்ந்த கட்சியின் ஆட்சிப் பெருமையுடன், பத்திரிக்கையின் மற்ற செய்திகளையும் பற்றி தனது கருத்துகளை உதிர்த்துக் கொண்டு இருந்தார்

*****

பின்குறிப்பு: கதைக்கும் இணைப்பிற்கும் தொடர்பில்லை, உரையாடல் முழுவதும் புனைவுதான். அரசு எந்திரங்கள், எல்லாவற்றையும் வயிற்றுக்குள் அடக்கும் முதலைகளை விட்டுவிட்டு மீன் கொத்திகளைத் தான் எப்போதும் வேட்டை ஆடுகிறது.

28 ஜூலை, 2009

வீரமணி ஐயாவின் பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !

சென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது.

இதனால் எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் வீரமணி.


இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது:

கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் கூறியுளளார் நீதிபதி.

நன்றி: தட்ஸ் தமிழ்

***

பெரியாரின் தொண்டராக இல்லாமல் ஒரு நீதிமன்றத்தின் நீதியரசராக அமர்ந்திருக்கும் நீதியரசருக்கு பெரியாரின் கருத்துக்கள் முடக்கப்படாமல் அனைவரையும் சென்று சேர்வதின் தேவையும் பலனும் தெரிந்திருக்கிறது. பெரியாரின் இயக்கத்தை நடத்தி வரும் திரு வீரமணி ஐயாவுக்கு அது தெரியவில்லை. பெரியாரின் எழுத்துக்களை காப்புரிமை என்ற பெயரில் பூட்டி வைப்பதால் யாருக்கு பயன் ? பெரியார் திராவிடக் கழகத்தினர் பெரியாரை இழிவு படுத்துவதற்காக பெரியாரின் கருத்துகளை வெளி இடவில்லை. பிறகு ஏன் திரு வீரமணி ஐயா ஏகபோக உரிமை தமக்கே என்று கேட்க வேண்டும் ? பெரியாரின் எழுத்துகளை விற்பனை யாக்குவதைவிட, உரிமை கோருவதைவிட அதை பரவலாக்குவதன் தேவையை உணராமல் தடுக்கும் அவரது பகுத்தறிவு எத்தன்மையது ?

நீதிபதியின் தீர்ப்பை உண்மையான பெரியார் தொண்டர்கள் வரவேற்பார்கள்.

***

இதையெல்லாம் விட்டுவிட்டு எப்போதோ அறுந்து போன அனுமார் வாலையும், எங்கேயோ உள்ள செனகல் பற்றியும் எழுதும், தமிழ் ஓவியா ஐயா அவர்களுக்கு, 'தலைமையை கேள்வி கேட்காமல் தலைமைக்கு ஆதரவாகவே எப்போதும் இருப்பவர்களின் பெயர்கள் அன்புத் "தொண்டர்கள்" இல்லை, அடகு வைக்கப்பட்ட அடிமைகள். துடிப்பான உங்கள் பணியும், பெரியார் பற்றும் உங்களை பெரியார் தொண்டராக நினைக்கும் படி இருக்க வேண்டும் என்றே வாழ்த்துகிறேன்.

17 மே, 2009

விருந்தில் பாயாசம் வேண்டாம் !

இலங்கை மற்றும் இந்திய அரசியல் வெற்றியைத் தொடர்ந்து தங்களுக்கு கொடுக்கப்படும் விருந்தில் பாயாசம் வேண்டாம் என்று தமிழர் தலைவர்(!), இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணமாக ஏற்கனவே திகட்ட திகட்ட சாப்பிட்ட இனிப்புக்கு பிறகும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் இனிப்பை தவிர்க்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

இனிப்பைத் தவிர்த்த தங்கள் தலைவரின் பெரும் தன்மையைப் பாராட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தலைவருக்கு புகழாராம் தெரிவித்து அனுப்பிய தந்தி மலையில் இந்திய தபால் தந்தித்துறை விழிபிதுங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இழவு வீட்டில் கொட்டுச் சத்தமாம்,
எதிர்த்த வீட்டில் கெட்டி மேளமாம் !

- இந்த பதிவுக்கும் கீழே உள்ள கேஆர்எஸ் பதிவுக்கும் தொடர்பேதும் இல்லை.




"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!


"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!

"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது!

28 ஏப்ரல், 2009

கலைமாமணி விருதை வீசினார் கவிஞர் இன்குலாப் !

ஈழ விவாகரத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய கருத்தில் இஸ்லாமியர்களில் சிலர், விடுதலைப் புலிகளுக்கும் - இலங்கை இஸ்லாமியர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகளால், இலங்கை இஸ்லாமியர்கள் இடம் பெயர நேரிட்டதாகவும், இன்னல்கள் அடைந்ததாகவும் சொல்லி காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் இருந்தனர், அதாவது ஈழத்தமிழ்ர்கள் மீது இரக்கப்படுகிறோம், விடுதலைப் புலிகள் அழிவதைப் பற்றி கவலை இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இஸ்லாமியர்களான இயக்குனர் அமீர் போன்றவர்கள் மிகவும் உரக்க குரல் கொடுத்து சிறை வரை சென்றனர். மேலும் ஒரு இஸ்லாமியர், கவிஞர் திரு இன்குலாப் தனக்குக் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதை ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவான காங்கிரசையும் கூட்டணியில் இருந்து கொண்டே அதை தடுக்கும்படி வலியுறுத்தாமல் இருந்த திமுகவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் திருப்பி அனுப்பி இருக்கிறார்.

தமிழருவி மணியன் போன்ற தமிழுணர்வு மிக்கவர்கள் கட்சிக்காரன் என்கிற அடையாளத்தை விட எப்போதும் நிலையான தமிழன் / தமிழின உணர்வே மேலானது, உண்மையானது, உணர்வு பூர்வமானது என்று வெளிக்காட்டி தமிழின உணர்வாளர்களால் போற்றப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் கவிஞர் இன்குலாப் ஐயாவின் செயலும் மிகவும் போற்றத் தக்கது.

***
இனப் படுகொலை: கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்!

சென்னை: ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.

தகவல் : நன்றி தட்ஸ்தமிழ்

21 ஏப்ரல், 2009

11 ஆவது நாள் ஆனதும்...

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெண்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே. உண்ணாவிரத பெண்களுடம் அமர்ந்து கனிமொழி கண்ணீர் வடித்தாராம். தன் தந்தை தமிழர்களுக்காக வாழ்நாளை அற்பணித்து யோகியாகி அமர்ந்திருக்கிறார் என்று அந்த பெண்களிடம் தெரிவித்தாராம். அங்கே அந்த பெண்களைப் பார்த்து பேச வந்த காங்கிரசு சுதர்சனம் நாட்சியப்பன், இன்னும் மூன்று நாட்களுக்குள் உண்ணாவிரதம் பற்றி சோனியாவிடம் எடுத்து சொல்லப் போவதாக தெரிவித்தாராம். அன்னை சோனியா தற்பொழுது பிரச்சார பயணத்தில் இருப்பதால் அவரை தொடர்ப்பு கொள்வது கடினமாம். 8 நாள் தொடரும் உண்ணாவிரதம் 11 நாள் வரையில் சோனியாவிடம் எடுத்துரைப்பதற்காக நீடிக்கப்படுமா ? இல்லை அவர்களுக்கு பால் ஊற்றியதும் தான் சோனியாவின் காதுக்கு பெண்கள் இப்படி உண்ணாவிரதம் இருக்கும் செய்தி போய் சேருமா என்பது தெரியவில்லை :(

உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் இதை உடனடியாக கைவிடாவிட்டால் அவர்கள் நிலமை மோசமாகி எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி ஈழப் பிரச்சனை தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறிவருவது கவனிக்கத் தக்கது. இராமேஷ்வர மீனவன் குண்டடிப்பட்டு மாள்வதையே கண்டு கொள்ளாதவர்கள் ஈழத்தமிழர்களுக்காக மனம் இறங்குவார்கள் என்று நினைப்பது வீண் என்றே சமூக நோக்காளர்கள் கருதுகிறார்கள்

கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்.

4 ஜனவரி, 2009

ஈழமண்ணில் காங்கிரஸ் நடத்தும் போர் - வீரப்பமொய்லி ஒப்புதல் !

பிரபாகரனைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: காங்.ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4, 2009, 11:26 [IST]
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

****

ஈழவிடுதலைக்கு விடுதலைப் புலிகளையே நாங்கள் நம்புகிறோம் என்கிற ஈழத்தமிழ் மக்களின் பெருமித்த குரல் நன்கு தெரிந்தே, தமிழின இன ஒழிப்பை விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் நடத்தும் இலங்கை அரசுக்கு காங்கிரஸின் முழு ஆதரவு கொடுத்து இருப்பதாக காங்கிரசின் வீரப்ப மொய்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

காங்கிரசின் தமிழர் ஆதரவு நிலை(?) தெரிந்தது தான், நடைபெறும் போரில் கொல்லப்படுபவர்களும், அகதி ஆக்கப்படுபவர்களும் அப்பாவித் தமிழர்களே. இலங்கையில் தமிழன் ஒழிப்பிற்கு ஆதரவு கரம் கொடுப்பது காங்கிரஸ்.

போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்துவோம் என்று வாய்ச்சொல் பேசிய திமுக, பாமக கட்சியினர் (இறந்தவர்களை எண்ணி ?) மெளனம் மேற்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு முறையே தமிழின தலைவர், தமிழின காவலர் என்று பெயராம்.

ஈழத் தமிழர்களையெல்லாம் அழித்து இலங்கையில் (மயான) அமைதி ஏற்பட முயற்சிக்கும் காங்கிரஸுக்கும், அதற்கு ஆதரவான திமுக, பாமக கட்சிகளுக்கும் தான் உண்மையில் உலக சமாதான விரும்பிகள், தமிழர் நலன் விரும்பிகள்.

வாழ்க நிரந்தர தமிழின காதலர்கள் மற்றும் அவர்கள் தம் காங்கிரஸ் உறவும் !

22 டிசம்பர், 2008

சன் செய்தி வாசிப்பாளர்கள் நெற்றியில் ?

சன் டிவியில் நான் பார்க்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி சன் செய்திகள் தான். எப்போதாவது திரைப்படங்களைப் பார்ப்பேன். இங்கே சிங்கையில் தமிழ்நாட்டுச் செய்திகள் கேட்க ஒரே ஒரு ஒளி/ஒலி வழி என்றால் சன் டிவிதான். விஜய் டிவியும் வரும் அதில் செய்திகள் வாசிப்பது இல்லை. அதனால் வேறு வழியின்றி சன் செய்திகளை பார்க்கும் துர்பாக்கிய நிலையில் பலர் உண்டு.

நேற்று சன்னில் செய்தி வாசிக்கும் பொழுது செய்தியாக 'திண்டுக்கல் சாரதியையும்' சேர்த்தே வாசித்தார்கள், "தமிழ்நாடு திரையரங்கும் எங்கும் கட்டுக்கு அடங்காத கூட்டம், தாய்மார்கள் திரையரங்குக்கு படையெடுக்கின்றனர் என்று சொல்லிவிட்டு....திரையரங்கில் இருந்து வெளியே வருபவர்களின் புகழ்ச்சிகளைக் காட்டினார்கள். வழக்கமாக திரைவிமர்சனத்தில் தான் இதுபோன்று வரும், சன் செய்தியில் இதை விளம்பரமாகக் காட்டினாலும் பாரவாயில்லை, செய்திகளில் ஒரு செய்தியாக இந்த தகவலை, எதோ தமிழ்நாட்டின் மின்சார பற்றாக் குறை தீர்ந்து மக்கெளெல்லாம் ஒளிவெள்ளத்தில் மிதந்து மகிழ்ச்சியை தெர்விக்கும், எதோ ஒரு புரட்சி நடந்தது போல் திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானதைப் பற்றிய விளம்பரத் தகவலை செய்தியாக நுழைத்துவிட்டனர்.

எல்லோருமே காசு கொடுத்து தான் தொலைக்காட்சி இணைப்பு வாங்குகிறோம், இவர்கள் விளம்பரம் போடவேண்டுமென்றால் செய்திக்கு நடுவே விளம்பரமாகப் போட்டால் வேறு சேனலையாவது மாற்றிக் கொள்ளலாம், ஒரு செய்தியாகவே அதனைப் போட்டது, ஒருவகையான ஏமாற்று, காசு கொடுத்து தானே கனெக்சன் வாங்குறோம், எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான். எதோ செய்திவாசிக்கிறார்களே என்று பார்த்தால் அந்த நம்பிக்கையையும் மோசடி செய்து...இப்படியெல்லாம் மாறன் சகோதரர்கள் பிழைக்கும் அளவுக்கு முரசொலி மாறன் தன் குடும்பத்தை பிச்சை எடுக்கவச்சிட்டா போய் சேர்ந்தார் என்று நினைக்க வேண்டி இருக்கு.

கடந்த மூன்று மாதமாக முதலிடத்தில் இருக்கும் 'காதலில் விழுந்தேன்' இனி இரண்டாவது இடத்துக்கு போகுமா ? டாப் டென் மூவிஸ் பார்க்கிறவர்கள் சொல்லுங்க :) அப்ப அடுத்து எந்திரன் வரும் வரை முதலிடம் ? சந்தேகமே இல்லை, திண்டுக்கல் சாரதிக்குத்தான்.

எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.

குறிசொல் : சன் செய்தி விமர்சனம் !

17 டிசம்பர், 2008

சென்னை விமான நிலைய காமடி - மெய்ப்புலம் அறைகூவலர் !

சென்னை: சென்னை விமான நிலையத்தின் கழிவறைக்குச் செல்வோரை தலை சுற்றி கிறுகிறுக்க வைக்கும் வகையில் ஒரு தமிழ்ப் பலகையை வைத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்காகவே சிறப்பு கழிப்பறை ஒன்று உள்ளது. அதன் வெளிக் கதவின் மேல் வைக்கப்பட்டுள்ள பலகையில், மெய்ப்புலம் அறைகூவலர் என்று எழுதி வைத்துள்ளனர்.

இதைக் காணும் பலருக்கும் இதன் அர்த்தம் சுத்தமாக புரியாமல் குழம்பியபடியே உள்ளே சென்று திரும்புகின்றனர்.

மெய்ப்புலம் அறைகூவலர் என்றால் உடல் ஊனமுற்றோர்

பிசிகலி சேலஞ்ச்ட் என்று எழுதாமல் தமிழில் எழுத வேண்டியதுதான். உடல் ஊனமுற்றோர் என்றே எழுதி வைக்கலாம். அதை விடுத்து வள்ளுவர், கம்பர் போன்ற தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமே புரியும் வகையிலான படு சுத்தத் தமிழில் எழுதி வைத்தால் யாருக்காவது புரியுமா?

நல்ல வேளையாக மெய்ப்புலம் அறைகூவலர் என்ற வார்த்தைக்கு அருகில் உடல் ஊனமுற்றோருக்கான படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் இது ஏதோ தமிழ் சங்கத்தின் அலுவலகம் என்று நினைத்து யாரும் இப்பக்கமே வராமல் திரும்பிப் போகக் கூடும்.

தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?

- தட்ஸ் தமிழ்

************

இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.

இதுபோன்று ஆங்கிலத்தை தமிழ்படுத்தும் போது, சங்க(கால)ச் சொற்களுக்கு பதிலாக புழக்கத்தில் இருக்கும் சொற்களை பயன்படுத்துவதே நல்லது. இல்லாவிடில் விளங்காமல் போகும்.

சிங்கையில் உடல் ஊனம் பற்றிய சொற்களாக பயன்படுத்துவது

குருடர் - பார்வையற்றோர், பார்வையிழந்தோர், பார்வை குறைபாடு உடையோர்

"குருட்டுப்பயலா நீ" என்று பிறரை கேலி செய்ய "குருடு" என்பதன் பொருள் திரிக்கப்பட்டத்தால் பார்வை குறைபாடுகளை சொல்வதற்கு அந்த 'குருடு' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தற்போதைய பண்பாடு அல்ல. குரு என்ற சொல்லுக்கு ஒளி என்றே பொருள், ஒளியிலார், ஒளியிழந்தோர் என்ற பொருளில் தான் குருடர் என்ற தமிழ் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. குரு என்பது தமிழ்ச் சொல்லே, Kuru என்று எழுதாமல் Guru என்று ஆங்கிலத்தில் எழுதுப்படுவதால் நாம் அதை வடச்சொல் என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். குரு என்ற தமிழ் சொல்லுக்கு நேரடியான வடச் சொல் 'ஆச்சார்ய'

செவிடு - இதற்கு காது கேளாதவர், செவிக் குறையுடையோர், ஒலி கேளாதவர் என்று சொல்லலாம்

ஊமை - பேச இயலாதோர்,

இது போல் உடல் ஊனமுற்றோர் என்று எழுதினால் அந்த குறையுடையோரின் இதயத்தை காயப்படுத்துவதாகவே அந்தச் சொல்லின் பொருள் ஆகிவிட்டது. 'ஊனம்' என்பது குறை என்ற பொருளுடைய சொல். ஒருவரின் ஊனம் என்பது அவரே வாங்கி வந்த வரமல்ல, அவருடைய இயற்கை அமைப்பின் படி அப்படி அவர் இருக்கிறார்.

ஊடல் ஊனமுற்றோர் - "உடல் குறையுற்றோர்", "உடலியல் மாறுபட்டோர்" என்று சொல்லலாம், ஊனம் என்பதை விட குறை என்று எழுதினால் பொருள் மாறாது, சொல்லின் தாக்கமும் குறைவு

ஒரே சொல்லால் சொல்லப்படும் பண்பு பெயர்ச் சொற்களின் (Vocabulary) பொருள் எதிர்காலத்தில் திரிந்து போனால், இரு அல்லது மேற்பட்ட சொற்களில் (DECOMPOSE OR CONVERT IN TO MEANING) அந்த பொருளை எழுத முடியும் என்றால் எழுதலாம் தவறு அல்ல. அல்லது முற்றிலும் புதிய ஒற்றைச் சொல்லை உருவாக்கி பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் Latrine பின்னர் Toilet ஆகி அதன் பிறகு அந்த சொல்லின் பொருளும் அருவெறுப்பாய் ஆனதால் தானே Rest Room என்று மாற்றிக் கொண்டார்கள்.

கழிவறை என்று சொல்வதைத் தவிர்த்துவிட்டு தளர்வறை (கழிவு இறுக்கம் தளர்த்த...) அல்லது வேறு எதாவது புதிய சொற்களை பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்தில் இருந்து நேரடி மொழிப்பெயர்ப்பு எல்லா மொழிகளுக்கும் சிக்கலான ஒன்று தான். மொழிப்பெயர்ப்பு சொற்களை பொதுப்படுத்தும் முன் தமிழார்வளர்களிடமும், தமிழாராய்ச்சியாளர்களிடமும் கலந்து பேசி முடிவு செய்தால் நல்லது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்