பின்பற்றுபவர்கள்

தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஜூலை, 2013

'சாதி'க்கலாம் வாங்க !

எப்படி இருந்த தமிழ் மணம் எப்படி ஆகிவிட்டது ? சாதி / மதம் சார்ந்த பதிவுகளை எழுதுவது தமிழ்மணம் விதிகளுக்கு முரணானது......ஆனால்.....வஹாபிகள் தங்கள் இடுகைகளில் மதம்சார்ந்து 9ம், 10 ஆவது வேற எதாவது எழுதி விலக்கு பெற்றுவிட்டார்கள், நம்ம 'ப..சுமை பக்கம் அருளாரும் மாற்றி மாற்றி எழுதி நான் சாதி சார்ந்து (மட்டுமே) எழுதுவதில்லைன்னு சத்தியம் செய்துவிடுவார்.

ஆனால் பச்சையாகவே சாதிப் பெயர் தாங்கி பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்னியர்களின் சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள் !

இன்னும் ஒரு மாதம் சென்றால் இப்படியெல்லாம் வலைப் பதிவு தலைப்பு வைத்து பதிவு வருமோ ?
சாதிவெறி பார்பனர்களின் சாதிவெறிக்கு எதிரான நல்ல பார்பனர்கள் !
செட்டியாரின் சாதிவெறிக்கு எதிரான செட்டியார்கள் !
தேவர்களின் சாதிவெறிக்கு எதிராக தேவர்கள் !
கவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள் !
முதலியார்களின் சாதிவெறிக்கு எதிராக முதலியார்கள் !
சாதிவெறி பிள்ளைமார்களுக்கு எதிராக நல்ல பிள்ளைமார்கள் !
.
.
.
இந்துக்களின் மதவெறிக்கு எதிராக இந்துக்கள் !
இஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிராக இஸ்லாமியர்கள் !
கிறித்துவர்களின் மதவெறிக்கு எதிராக கிறித்துவர்கள் !

இதையெல்லாம் நாம படிச்சி, அதை சூடான இடுகையாகவும் ஆக்கி எவ்வளவு தமிழ் சேவை செய்கிறோம்..........!

சாதி சங்கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், முகநூல் இருக்கு, ஏன் வலைப்பதிவிலேயே கூட செய்யலாம், அதையெல்லாம் நூல்குறி (புக்மார்க்) செய்து விரும்பியவர்கள் படிக்கட்டும், ஆனால் பலரும் எட்டிப் பார்க்கும் திரட்டிகளில் இவை வருவது......எழுதும் ஆசையில் எழுதவருபவர்களுக்கு 'இதைத்தான் வலைப்பதிவில் எழுதுறானுங்களா ?' ன்னு நினைத்து தலை தெறிக்க ஓடமாட்டார்களா ?

21 ஜூலை, 2011

திரட்டிக்காக திரள்வோம் !

வலைப்பதிவில் எழுதுவதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அது போல் தொடர்ந்து எழுதாமல் இருக்கவும் காரணங்கள் இருக்கின்றன. முன்பு போன்று ஏன் மிகுதியாக எழுதுவதில்லை என்று கேட்பவர்களுக்கு இதைத்தான் சொல்லிவருகிறேன், போதக் குறைக்கு கூகுள் பஸ்ஸ், கூகுள் + அதன் பக்கம் கவனம் சென்றதால் பகிர்வதை நம் வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணம் ஒரு காரணம், என்ன இருந்தாலும் வலைப்பதிவு திரட்டிகள் வழியாக கிடைக்கும் இணைய நட்பின் ஈர்ப்புகள் பஸ்ஸ் உள்ளிட்ட பிற சமூகத் தளங்களில் இல்லை என்றே சொல்லுவேன். இது என் தனிப்பட்ட கருத்து தான்.

வலைப்பதிவே வைத்திருக்காதவர்கள் கூட வலைப்பதிவினருடன் நட்பில் இணைகிறார்கள், அதன் காரணம் ஒருவரது எண்ணங்கள் வலைப்பதிவின் வழியாக முழுமையாக உள்வாங்கப்பட்டு அதன் தொடர்பில் அவை ஏற்பட்டுவிடுகின்றன. பிற சமூக தளங்களில் ஒருவரது முழுமையான சிந்தனைகள் இவ்வாறென்பதை தெரிந்து கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது எனக்கு. மற்றபடி அவர்களுடன் அதே சமூகத் தளம் வழியாக மட்டுமே தொடர்பில் இருப்பது ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை, மேலும் அதன் எல்லை அதை தாண்டியும் வளர்வது சற்று கடினம் தான் என்றே நினைக்கிறேன். எழுத்துகளை வாசிப்பது, கருத்துரைப்பது என்பது தாண்டி நல்லதொரு தொடர்புகளை நட்புகளை உருவாக்கித் தருவதில் எனக்கு வலைப்பதிவுகளே முதன்மையாகத் தெரிகிறது. இருந்தாலும் துவக்கத்தில் சேர்ந்த நட்புக் கூட்ட எண்ணிக்கை ஆண்டுகள் செல்லச் செல்ல புதிய நட்புகளின் சேர்க்கை எண்ணிக்கை குறைவு தான். இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 பதிய நண்பர்கள் கிடைப்பது அரிது, அதுவும் அவர்களாக தொடர்பு கொண்டு கேட்கும் போது மட்டுமே கூடிவருகிறது. புதியவர்களின் நட்புகளைத் தேடிப் பெருவதில் இருக்கும் சிக்கல், ஏற்கனவே போதுமானதாக நட்பு வட்டம் பெருகியுள்ளதே காரணம் என்றே நினைக்கிறேன். மற்றபடி ஒரு புதிய வலைப்பதிவரை நட்பாக்கிக் கொள்ள சாதி மத மற்றும் பிற அரசியல் நிலைப்பாடுகள் அல்லது எழுத்து அனுபவம் என எதுவும் காரணமே இல்லை. இதுவும் என்னைப் பொருத்த அளவில் தான்.

இன்றைய தேதிக்கு தனித் தனி குழுமங்களாகவும் (பெரும்பாலும் வாழும் நாடு அல்லது நகரம், ஊர் பெயரில்), மொத்தமாகவும் தமிழ் பதிவர்களின் வட்டம் பெருகியுள்ளது. ஒரளவு நன்கு அறிமுகமான பதிவர் தனது இல்லவிழாவிற்கோ, திருமணம் ஆகாத பதிவர்கள் திருமணத்திற்கு அழைக்கும் பொழுது (குறிப்பாக சஞ்செய், ஆயில்யன் இன்னும் பிறர்) திரளாக வலைப்பதிவர்கள் தம் தம் வீட்டு விழாக்களைப் போல் சென்று வாழ்த்தி வருகிறார்கள், அதைத் தாண்டி ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும் உதவி வருகிறார்கள், அவர்களில் சிலர் தன்னலத்துடன் நடந்து கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக தமிழ் பதிவர் குழுமம் தமக்குள் நல்லொதொரு புரிந்துணர்வையும் நட்புணர்வையும் பெருக்கிக் கொண்டே வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் தமிழகம் சென்றால் நாம் போவதும் வருவதும் கூட உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து யாருக்கும் தெரியாது, இப்போதெல்லாம் சென்னை அல்லது திருச்சி, மதுரை வழியாக செல்லும் போது அந்த பகுதி வலைப்பதிவர்களை சந்திக்காமல் செல்ல முடிவதே இல்லை, அப்படியும் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் சென்று வந்தால் பின் தெரிந்ததும் அன்புடன் கடிந்து கொள்கிறார்கள், சென்னையில் எங்கு தங்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கெல்லாம் இல்லாமல் எங்களுடன் தங்குங்கள் என்று அழைப்பவர்கள் நிறைய பேர், எந்த ஒரு நகருக்குச் சென்றாலும் நமக்கு தெரிந்தவரில் ஒருவர் அங்கு உண்டு என்பதை வலைபதிவர் வட்டம் உறுதி செய்துவருகிறது, இதெல்லாம் நன்கு பிறருடன் பழக நினைப்பவர்களுக்கும் அவர்களுடன் பழகுபவர்களுக்கும் ஏற்படும் தனிப்பட்ட அனுபவம் ஆகும்.

வலைப்பதிவில் எழுதுவதன் மூலம் இவை வாய்ப்பாக அமைந்தது என்றாலும் அந்த வலைப்பதிவுகளின், வலைப்பதிவர்களின் முகவரிகளை நமக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்தததில் முதன்மைத் திரட்டியாக நான் நினைப்பது தமிழ்மணம் தான். எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் திரட்டி சேவையை வழங்கி வந்தவர்கள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை மற்றும் பிற மேம்பட்ட வசதிகளை சேர்த்துக் கொள்ள ஆகிய பொருள் செலவை ஈடுகட்ட விளம்பர பதிவுகளை இணைத்துக் கொண்டுள்ளனர், தற்பொழுது வலைப்பதிவர்களின் எண்ணிக்கை உயர உயர திரட்டி சேவை திணறி வருகிறது, இதனை சரி செய்ய இணையத் தளத்தை முற்றிலும் மாற்றி வேறொரு இணைய வழங்கியாளர் (வெப் ஹோஸ்டிங்) வழியாக செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கான செலவுகளை கருத்தில் கொண்டு வலைப்பதிவர்கள் இயன்றவரை பொருளுதவி செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். துவக்க காலம் முதலே வலைப்பதிவர்களிடம் நெருக்கமான உறவு கொண்டு இருந்தாலும் தமிழ்மண நிர்வாகம் இது போன்று வெளிப்படையாக உதவி கோரியதில்லை என்பதை நாம் கருத்தில் கொண்டு இயன்றவரை உதவுவோம். இது ஹிந்திகாரர்களுக்கோ, கன்னட, தெலுங்குகாரர்களோகோ நடத்தப்படும் திரட்டியல்ல, முழுக்க முழுக்க நமக்காக நடத்தபடும் திரட்டி. நான் பிர திரட்டிகளை இங்கு ஒப்பிடவில்லை, சொல்லவருவது முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சியாக தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை தமிழர்கள் பார்க்காவிட்டால் வீணாகிவிடும் அல்லவா அது போன்றதே.

நாங்கள் அதாவது சிங்கைப் பதிவர்கள் ஒவ்வொரும் இயன்றத் தொகையை சேர்த்து சிங்கைப் பதிவர் குழுமமாக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு அனுப்ப உள்ளோம், அதே போன்று உங்கள் பகுதிகளில் 'பொறுப்பான' ஒருவர் மூலம் சேகரித்து அனுப்பலாம் அல்லது தனித்தனியாகக் கூட அனுப்பலாம். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கேட்டுப் பெரும் நிலையில் இருக்கும் சங்கடங்களைப் போன்று தான் தமிழ்மணத்தின் அறிவிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டுள்ளேன்.

இதை ஏன் நான் எழுதுகிறேன் என்றால் தமிழ்மணம் திரட்டியின் வழியாக அறிமுகமான நட்புகளின் மூலம் பயனும் மகிழ்ச்சியும் அடைந்தேன் என்கிற முறையில் இதை நான் ஒரு கடமையாகவே நினைக்கிறேன். தமிழ்மணம் நன்கொடை தொடர்பாக நண்பர் ஜாக்கி சேகர் கூட இதுபற்றி எழுதியுள்ளார். எதிர்காலத்தில் நல்ல சேவைகளைத் தொடரும் பிற திரட்டிகளையும் கவனத்தில் கொள்ளுவோம் அவர்களும் உதவி தேவை என அறிவிக்கும் போது.

18 ஜனவரி, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010 - சில எண்ணங்கள் !

முதலில் நடந்து முடிந்த தமிழ்மணம் விருதுகள் 2010 வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துகள். சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகுதியான பதிவர்கள் போட்டிக்கு இடுகையை முன்மொழிந்துள்ளார்கள். இதற்கு பதிவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது முதன்மையான காரணம் என்றே நினைக்கிறேன். மொத்தம் 1511க்கு மேற்பட்ட இடுகைகள் போட்டியில் பங்கு பெற்றன. முதல்கட்ட வாக்கெடுப்பில் இத்தனை இடுகைகளையும் போதிய நேரமின்மையால் அனைத்து பதிவர்களும், வாசகர்களும் படித்து வாக்களித்திருப்பார்களா என்பது ஐயமே. ஏற்கனவே படித்த இடுகைகளைக் கருத்தில் கொண்டும், அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் போட்டி இடுகிறார்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் அமைந்தன. முதல் கட்ட பொதுவாக்கெடுப்பில் 1551 இடுகைகளில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு இடுகைகள் தேர்வாகிய போது போட்டிப் பட்டியல் எண்ணிக்கையை 200 ஆகக் குறைந்தது என்றாலும் போட்டியிடத் தகுதியான கட்டுரைகள் பல ஆதரவாளர்கள் இன்மையால் வாக்குகள் இல்லாமல் இரண்டாம் கட்டப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் உண்மைதான். நான் அறிந்தவகையில் சில பிரிவின் போட்டி இடுகைகள் உள்ளடக்கத் தரத்திற்காக வெற்றிப் பெறவேண்டும் என்று வாக்களித்திருந்ததாலும் அவை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்குள் நுழையவே இல்லை, பலர் வாசித்திருக்காமல் விடுபட்டதால் போதிய வாக்கின்மையால் தகுதி இழந்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிவு நிலையும் இதே தான் என்றாலும் போட்டி இடும் இடுகைகள் எண்ணிக்கை 200 என்பதால், முதல்கட்ட வாக்கெடுப்பில் வாக்களித்தவர்கள் பலர் அனைத்தையும் படித்துப் பார்த்து வாக்களித்திருப்பர். இரண்டாம் கட்ட முடிவில் 80 விழுக்காட்டுக் கட்டுரைகள் போட்டியிடும் தன்மையில் இருந்தது. 20 பிரிவுகளில் பிரிவுக்கு ஐந்தாக இரண்டாம்கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பதிவர்களால் ஏற்படுத்தப்பட்ட நடுவர் குழுவிற்கு தமிழ்மணம் அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு நடுவருக்கும் இருபிரிவுகள் என 40 நடுவர்களுக்கு அனுப்பப் பட்டிருந்தது, அதில் எனக்கு இருபிரிவிற்கான நடுவராக இருக்கும் வாய்பு கிடைத்தது. எனக்கு அனுப்பட்ட அதே இருபிரிவுகள் வேறொரு நடுவருக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். நான் நடுவராக இருந்த இரு பிரிவுகளில் ஒன்றில் இரு இடுகைகளை முதல் பரிசுக்கு பரிந்துரைத்திருந்தேன். இரண்டாம் பரிசுக்கு ஒரு இடுகையும் பரிந்துரைத்திருந்தேன். ஆனால் வெற்றி அறிவிப்பில் முதலிடம் பெற்ற இருவரில் ஒருவர் முதலிடம் பெற்றதாகவும் மற்றவர் இரண்டாம் இடத்திற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. அதே பிரிவின் மற்றொரு நடுவர் பார்வையின் மதிப்பீட்டையும் ஒப்பிட்டு அவ்வாறு முடிவுகள் அமைந்திருக்கும் என்றே நினைக்கிறேன், ஆனால் மற்றொரு பிரிவில் நான் தேர்வு செய்தபடியே முடிவுகள் அமைந்திருந்தன, அதே முடிவை மற்றொரு நடுவரும் வழங்கி இருப்பார் என்றே நினைக்கிறேன்.

இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் இதில் எனது அரசியல் நோக்கமோ, குழப்படி செய்யும் நோக்கமோ ஒன்றும் இல்லை. சொல்ல வருவது இது தான், போட்டியில் கடைசிவரை ஒரு சில நல்ல இடுகைகள் செல்ல முடியாமல், முதல்கட்டத்திலேயே பட்டியலில் இடம்பிடிக்காமல் போனதற்கு போட்டி எண்ணிக்கை மிகுந்திருந்ததே ஆகும். இரண்டாம் இடம் கிடைத்த பலரில் சிலருக்கு முதலிடம் கிடைக்கமல் போனதற்கு நடுவர்களின் மதிப்பீடும் காரணம். உங்கள் கட்டுரை தரமானதாக இருந்து போட்டியில் விருது வெல்லவில்லை, அல்லது முதலிடம் கிடைக்கவில்லை என்று வருந்தினால் மேற்கண்டதை கவனத்தில் கொள்ளுங்கள். போட்டியில் வெற்றி பெற முடியாமல் போவதற்கு சில சமயம் உழைப்பு என்பதைத் தாண்டி இது போன்ற காரணங்களும் அமைந்துவிடும் என்பது மிகவும் வருத்தத்துக்குரிய நடைமுறை உண்மை. தெரிந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையை மாற்றிக் கொண்டால் இந்த வருத்தம் ஏற்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதை வாக்களிப்பவர்கள் மட்டுமின்றி தெரிந்தவர்களின் வாக்கு பலம் இருக்கிறது என்பதற்காக தன்னுடைய எழுத்து மற்றும் இடுகை பற்றி நன்கு அறிந்தவர்களும் கவனத்தில் கொண்டால் மேலும் குறையும். போட்டிக்கு இடுகையை அனுப்பும் முன் தன்னுடைய எழுத்தின் தன்மையை மேம்படுத்திக் கொண்டு போட்டியிடுவதும் மிகவும் தேவையான ஒன்று என்பதை போட்டியாளர்கள் கவனத்தில் கொள்வது இன்னும் சிறப்பு. எல்லோருக்கும் போட்டியிட உரிமை உள்ளது, அதே வேளை தெரிந்தவர் வாக்கு பலம் அந்த உரிமையை வெற்றியாக்கிக் காட்டும் என்று நினைப்பது கடைசி கட்டம் வரை நிலைப்பது இல்லை. போட்டியின் இறுதி முடிவை கவனத்தில் கொண்டு, வரும் காலத்தில் எழுத்தின் தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே எதிர்வரும் போட்டியில் வெற்றி ஈட்டித்தரும் சிறந்த வழியாக அமையும், இவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வெற்றிபெற்ற இடுகைகளை வாசித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்று.

இது போன்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் போட்டியில் இதே போன்று நடைமுறைச் சிக்கல்கள் நடைமுறைதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தமிழ்மணம் நிர்வாகத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும். இதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும் தன்னார்வத்தால், தமிழார்வத்தால் ஏற்படுவது மட்டுமே. வெற்றி என்பது மகுடம், நன்றாக எழுதியும் சிலருக்கு அது கைகூடாமல் போனதற்கு மேற்சொன்ன நடைமுறைக் காரணிகளும் உள்ளன. என்னைப் பொருத்த அளவில் வெற்றி வாய்ப்பு பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன், அதே போன்று மருத்துவர் புருனோ மற்றும் வினவு, மேலும் வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளாத சிலர் இந்த முறை போட்டியில் பங்குபெறவில்லை. ஏற்கனவே தகுதியடைந்தவர்கள் வழிவிட்டால் தான் மேலும் தகுதியானவர்களை அடையாளம் காணமுடியும், இது என்னுடைய நம்பிக்கை.

தமிழ்மணம் விருதுகள் 2010 வெற்றியாளர்கள் மட்டும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள், என்னை நடுவரில் ஒருவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணம் விருது குழுவினருக்கு நன்றி.

18 ஜூன், 2010

'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது !

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்' என்பது தவிர்த்து தமிழ் வாசனைகள் நிகழ்ச்சியில் குறைவு.

நிகழ்ச்சியில் நடுவர்களாக நிகழ்ச்சி முழுவதும் பங்காற்றியவர்களில் பாடகர் மனோ, சுபா ஆகியோர் தெலுங்கு தேசத்தைச் சார்ந்தவர்கள் (எனக்கு அவர்களின் குரல்களைப் பிடிக்கும்), நிகழ்ச்சி தொகுப்பாளினி மலையாளி. இசைக்கு மொழி கிடையாது....... இவன் என்ன கிளப்புகிறான் ? என்றால் நிகழ்ச்சிக்கு 'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்றே சொல்லி இருக்க வேண்டியது இல்லை என்பது எனது கருத்து. முதல் பரிசாக 25 லட்சம் பெருமான முள்ள வீட்டைப் பெற்றதாகச் சொல்லும் சிறுமி அல்கா அஜித் கேரளாவில் இருந்து வந்து பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். இவருக்காக தமிழகத்தின் பொதுமக்கள் பெருவாரியான வாக்குகளைத் தந்து இருக்கிறார்கள், தமிழனுக்கு பெரிய மனசுதான். குழந்தை , குரல் இனிமையெல்லாம் பார்த்து அது மட்டுமே போதும் என்பதாக அவர் எங்கிருந்து வந்தவர் என்கிற ஆராய்ச்சி எதுவுமே செய்யாமல் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, பெரும் தன்மையானது என்றாலும், இது போன்ற மனநிலைகள் அண்டை மாநில மக்களுக்கு இல்லாத நிலையில் தொடர்ந்து தமிழர்களையும் தமிழையும் இழிவு படுத்திவரும் வேலையில், இங்கே தமிழகத்தின் குழந்தைகளுக்காக படைக்கப்பட்ட தொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவர்களுக்கான பொன்னான வாய்ப்பை பறித்துச் சென்றதை வெறும் திறமை, குரல் வளம் என்ற சொல்லாடலில் மறைத்து பாராட்டும் பெரிய மனது சத்தியமாக எனக்கு இல்லை.

இங்கு சிங்கப்பூரில் கூட அதே போன்ற கூத்துகளை பலமுறை பார்த்து இருக்கிறேன். ஆண்டு ஆண்டுகளாக சமூக மன்றத்தில் சேவை செய்துவருவர்களும், ஆண்டுகணக்கில் இங்கே வசிப்பவரும் சேர்ந்து சில சமயம் இது போன்ற பாட்டுப் போட்டி நடத்தும் போது அண்மையில் தமிழகத்தில் இருந்து வந்து பாட்டு வாத்தியாரிடம் பாட்டு பயிற்சி பெற்ற ஒரு குழந்தை தலையை நன்றாக ஆட்டி குரல் எடுத்துப் பாடி பரிசைப் பெற்றுச் சென்றுவிடும், அதன் பிறகு அதன் பெற்றோர்களோ அல்லது அந்த குழந்தையையோ அந்த மேடைகளில், அந்தப் பகுதியின் பொதுச் சேவை நிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியாது. போட்டியில் பங்கெடுத்த சேவையாளர்களின் குழந்தைகளெல்லாம் என்றோ ஒரு நாள் கிடைக்கும் பொன்னான வாய்ப்பும் பறிபோனது கூடத்தெரியாமல் பரிசு பெற்றவருக்காக கைதட்டி மகிழ்வார்கள்.

சிங்களர்களை நல்லவனாகவும் ஈழமக்களுக்காக போராடியவர்களை கெட்டவர்களாகவும் காட்டும் படத்தை ஒரு மலையாளி தான் எடுத்திருக்கிறான். நல்லவேளை அது தமிழகத்தில் தடைசெய்யப்பட்டு இருக்கிறது, இல்லை என்றால் நம் இனம் கேவலாமானது என்று ஒரு மலையாளி எடுத்தப் படத்தை நாமே காசு கொடுத்துப் பார்த்து அவன் கல்லாவை நிறப்பு அனுப்பி இருப்போம்.

இசைக்கு மொழி கிடையாது, சாதி கிடையாது, இனம் கிடையாது என்று பேசுவது பெருந்தன்மையானது தான், ஆதான் அதில் டாமினேட் செய்பவர்களெல்லோருமே அதைச் சார்ந்து தான் செய்கிறார்கள் என்பதை பெருந்தன்மை பேசுபவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் வின்னர்-அல்கா அஜீத் ற்கு என்னால் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை, நம்ம தமிழ்நாட்டின் செல்லக் குரலுக்கான குழந்தை ஒருவரின் வாய்ப்பைப் பறித்தக் குழந்தையாகத் தான் பார்க்கிறேன். இதற்குகாரணமான நிக்ழ்ச்சி நடத்துபவர்கள் மீது தான் எரிச்சல் ஆகிறது. நம்மூர் குழந்தைகளுக்கு அந்த தகுதி இல்லை என்பதை தமிழ் நிகழ்ச்சி என்பதாகக் காட்டி அதையும் நம்மை வைத்தே கைத்தட்டி, நம்மை வைத்தே தேர்ந்தெடுக்க வைத்தது மிகப் பெரிய மோசடி.

:(

ஒரு தமிழனின் பார்வையில் தமிழ்பாடல் நிகழ்ச்சியில் திறமையின் அடிப்படையில் ஒரு மலையாளிக்கு பரிசு தந்தது பெரும்தன்மையாக இருக்கலாம். ஆனால் மலையாளிக்களின் பார்வையில் தமிழ்நாட்டில் நம்மைவிட திறமையுள்ளவர்கள் இல்லை என்கிற ஏளனம் இருக்குமா இருக்காதா ?

டிஸ்கி : தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் தமிழகத்தில் வாழும் எந்த ஒரு மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் கலந்து கொண்டு பரிசு பெற்றிருந்தால் நான் இந்த நிகழ்ச்சியை வரவேற்றிருப்பேன். தமிழ்பாட்டை யார் வேண்டுமானாலும் பாடாலாம் என்ற போட்டியில் தமிழகதின் செல்லக் குரலுக்கான தேடல் என்கிற தலைப்புக் கொடுத்திருக்கத் தேவை இல்லை என்பது எனது கருத்து

17 ஜூன், 2010

அருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா ?

தமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்துவர் புருனோ வெளி இட்டு இருந்தார். அதில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களில் யாருமே பார்பனர்கள் இல்லை. ஆனால் ஒரே ஒருவர் பெயர் 'செல்வ மலை முத்துக்குமரன்' என்ற பெயரைத் தவிர்த்து அனைவரின் பெயர்களும் தமிழ் பெயரே இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குழந்தைகளின் பெயர்களுடன் இல்லப் பெயராகச் சூட்டுவது உலக வழக்கு, இந்தியாவில் இந்த நிலை தொடராமல் போனதற்குக் காரணம் இல்லப் பெயர்கள் என்பவை சாதிப் பெயர்களாகப் போனதால் அது சரியான நடைமுறை இல்லை என்பால் தமிழ்நாட்டு அளவில் மாற்றிக் கொள்ளப்பட்டது. அப்படியும் நரேஷ் ஐய்யர், அனுசா ஐய்யர் போன்ற பெயர்கள் அண்மைகாலமாக தலைதூக்குகின்றன என்பவை கவலைக்கிடமான ஒன்று. சாதிப் பெயர்களை அடைமொழியாகக் கூப்பிட்ட வழக்கம் படிப்படியாக குறைந்துவரும் வேளையில் இவை போன்ற (சாதிய மன நிலையின் தவறான)முன்னெடுப்புகள் பட்டுப் போகும் நிலையில் இருக்கும் சாதிய வேர்களுக்கு வலிந்து சேவை செய்வதாகும். சாதிப் பெயர்கள் என்பது தவிர்த்து குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பெயர்களை, குல தெய்வப் பெயர்களை சூட்டுவது வழக்கமாக இருந்தது, எண்கணித சோதிடம், மற்றும் சோதிடர்களின் பரிந்துரை என்ற பெயரில் தனக்கும், இல்லத்திற்கும் முற்றிலும் தொடர்பில்லாத பெயர்களை பல்வேறு தமிழர்கள் சூட்டுகிறார்கள், அவை பெரும்பாலும் வடமொழிப்பெயர்களாகவே இருக்கின்றன, நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டும் வழக்கம் ஏறக்குறைய நின்றுவிட்டது என்பதைத்தான் அந்த பட்டியல் உறுதிபடுத்தி இருக்கிறது. பார்பனர்கள் தமிழ் சமூகத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்று குற்றச் சாட்டுகளை தொடர்ந்து பலரும் கூறிக் கொண்டு இருந்துவரும் வேளையில் அந்த இடத்தில் பல்வேறு சாதியினர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையை பெயர்களே பறைசாற்றுகின்றன.

எனக்கு தெரிந்து நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டிம் பார்பனர்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ்வழித் தகவலாக தெரிந்தது, சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெற்றோர் வைத்தப் இயற்பெயரையே மாற்றிக் கொண்டு 'பரிதிமாற் கலைஞர்' ஆனவரும் ஒரு பார்பனர் தான். பார்பனர்கள் அல்லாதவர்களும் பார்பனர்களாக வேடம் போட்டு மாறிக் கொண்டு வருகிறார்கள். பார்பனியத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு இருப்பவர்களின் பார்வைகள் இந்த நவீன பார்பனர்களின் மீது திரும்புவது எப்போது ?

அண்மையில் ஒரு நண்பர் ஒருவர் இல்லவிழாவிற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், மகன் பெயர் மணீஷ் என்றார்கள், அங்கே இன்னொருவர் 'என் மகன் பெயரைப் பார்த்து தானே நீங்களும் அந்தப் பெயர் வைத்தீர்கள் ?' என்று கூறியதுடன், அவர் தன் மகனுக்கு மணீஷ் என்ற பெயர் வைத்திருப்பது எவ்வளவு பரவலாக எல்லோராலும் பின்பற்றப்படுகிறது என்பதாக பெருமைக் கூறினார். இவர்களெல்லாம் தாத்தாப் பாட்டிகளை முற்றிலும் மறந்து போனது வியப்பே.

தேவநேய பாவாணரின் பற்றாளரான தமிழ் சான்றோர் ஒருவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கோபால கிருஷ்ணன் என்ற தனது இயற்பெயரை வெ.கரு.கோவலங்கண்ணன் என்று மாற்றிக் கொண்டார்.
திரு வெ.கரு.கோவலங்கண்ணன்


குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர்களில் தமிழ் பெயர்கள் இல்லாவிட்டாலும் மூதாதையர்களை நினைவு கூறும் வண்ணம் அவர்களின் பெயர்களையோ அல்லது பெயரின் பகுதியையோ,குல தெய்வப் பெயரையோ வைப்பது நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடன் அதையெல்லாம் விட்டுவிட்டு விளங்காத சோதிடன் உங்க மகன் நாடாள்வான் என்று எதையோ கிளப்பிவிட வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் பெயராக வைத்து அழைப்பது வாழும் சமூகத்தை முற்றிலும் மறந்துவிடும், அவமதிக்கும் செயலாகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

தமிழர் பெயர்கள் (எழுதியவர் ரவிசங்கர்)

அபித குஜலாம்பாள் !

24 மே, 2010

பொட்டிக்கடைகாரர்கள் மூலம் செம்மொழி வளர்க்கும் அரசு !

எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மொழிகளில் பெயர்பலகைகள் இடம் பெற்றிருக்கிறது, ஒருங்கிணைந்த இந்தியா என்று காட்டுவதற்கு நடுவன் அரசின் அனைத்து அலுவலங்களிலும் இந்தி பெயர் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் என்றுமே தொடரும் பிறமொழிவிருப்பத்தால் ஆங்கிலப் பெயர் பலகைகளும், பிறமாநில பெயர் பலகைகளும் இடம் பெற்றிருக்கிறது, தமிழக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் போது அங்குள்ள கழிவரைகளில் கூட மலையாள எழுத்துக்களைப் பார்க்கலாம், ஆனால் கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கூட தமிழில் பெயர் பலகைகள் பார்பது அரிது. தமிழர்களிடம் இருக்கும் பெரிய குறைபாடே தமிழை முன்னிறுத்த வேண்டுமென்பதில் காட்டும் மந்த போக்கு (அலட்சியம்). இவை சரி செய்யப்பட வேண்டும், தமிழர்களுக்கு தம் மொழியும் பெருமைக்குரியதே என்று காட்ட சிறுகடைகள், பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனை நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைப்பது வரவேற்கத்தக்கது.

சென்றவாரம் ஒரு நாள் தமிழ் உணவகம் ஒன்றில் 'தென்னிந்திய சாப்பாடு ஒண்ணு கொடுங்க' என்று நான் தூய தமிழில் கேட்டு கல்லாவில் இருந்தவரை விழிக்க வைத்தேன். அதன் பிறகு 'சவுத் இந்தியன் மீல்ஸ்' என்றதும் அவருக்கு புரிந்தது. 'ச்சே என்னது தமிழனுக்கு தமிழ் புரியவில்லையே....என்று ஒரு நொடி மனம் வருந்தினாலும்....... நாம தமிழை எதிர்பார்க்கும் இடம்... குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் ஒரு பணியாளர் ...அவருக்கு தூய தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பே அன்றி அவருடைய குறையோ, குற்றமோ இல்லை என்று தேற்றிக் கொண்டேன். மற்றபடி தூய தமிழ் தெரிந்தவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைவான ஊதியத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்ணுற்று இருக்கிறேன். நன்கு தமிழ் தெரிந்தவன், படித்தவனே ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கும் போது நாள் தோறும் பலவகையான வாடிக்கையாளர்களை எதிர்நோக்கும் ஒரு பணியாளருக்கு நடைமுறை பேச்சு தவிர்த்து தூய தமிழ் தெரிந்திருக்கும் என்று நினைப்பது என்னுடைய அறிவு குறைபாடு (அறிவீனம்) என்பதாக நினைத்துக் கொண்டேன். .

மலேசியாவில் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துவங்கினாலும் தனியார் நிறுவனம், பொது நிறுவனம் என்று காட்டக் கூடிய 'Sendirian Berhad' என்ற மலாய் சொல்லுடன் எழுதும் படி மலேசிய அரசால் பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி மைக்ரோ சாப்ட் நிறுவனம், Microsoft Malaysia Sdn Bhd என்றே பெயர் எழுதப்பட்டு வருகிறது, இதன் பொருள் ஆங்கிலத்தில் Microsoft Malaysia pte ltd. ஆனால் அதே மைக்ரோ சாப்ட் மற்ற நாடுகளில் மொழிகளில் எதிர்ப்பு இல்லை என்றால் Microsoft pte ltd அல்லது Microsoft pvt ltd அல்லது Microsoft ltd என்றே எழுதும். அதாவது அரசு ஆணையில் கண்டிப்புடன் இப்படியாகத்தான் பெயர் பலகை எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட எந்த ஒரு பெரிய நிறுவனமும் மீறுவதில்லை. மற்றபடி பன்னாட்டு நிறுவனங்கள் வட்டார மொழியை மதிக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை.

தமது மொழியின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய அரசு உறுதியாக உள்ளது, அதே போன்று இந்திய நடுவன் அரசும் (ஆளுகைக்கு உட்பட்ட) அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியிலும் பெயர் பலகை வைப்பதைவிட இந்தியில் வைப்பதை விரும்புகிறது. பெங்களூருவில் இந்திய நிறுவனங்களான வங்கிகளின் பெயர் பலகை மருந்துக்கு கூட கன்னடத்தில் வைக்கவில்லை என்பதற்கு வாட்டாள் கும்பல் ஆ(ர்பா)ட்டம் காட்டிய பிறகு மாற்றிக் கொண்டார்கள்.

பொட்டிக்கடைக்கரார்களும், அரசு உதவியில் செருப்புக் கடை வைத்திருக்கிறவர்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதில் செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழக அரசு முனைப்பு காட்டுவது வரவேற்கத்தக்கது என்றாலும், திடிரென்று கால கெடு (அவகாசம்) கொடுத்து பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது (நிர்பந்தம்) சரி அல்ல. ஒரு நாளைக்கு 200 ரூபாய் மட்டுமே விற்பனையில் பெறும் சிறுகடைகாரர்கள் உடனடியாக பெயர் பலகை வைக்க 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்த திடீர் செலவை அவர்கள் எவ்வாறு ஈடுகட்டுவார்கள் ? இவர்களுக்கு அரசே இலவசமாக பெயர் பலகை செய்து கொடுக்கலாமே.

ஊருக்கெல்லாம் தமிழில் பெயர் பலகை வைக்கச் சொல்லவும், தமிழ் பெயர்களை பரிந்துரை செய்யும் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் தம் "தமிழ்" திரைப்பட நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்'. எண்ணிக்கை அளவில் 18 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துவரும் கருணாநிதிக்கு மேற்சொன்னது போல் செருப்பு தைக்கும் சிறு கடை வைத்திருப்பவர்களும், பொட்டிக்கடைகாரர்களும் தான் தமிழை வளர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது போலும்.

17 ஜனவரி, 2010

தம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி !

தமிழ்மணம் விருதுகள் 2009 போட்டியில் பிரிவு 5ல் எனது பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் பெற்று தந்து வெற்றி பெற வைத்த பதிவர் நண்பர்களுக்கு நன்றி.

போட்டிக்காக என்று எதையும் எழுதாவிட்டாலும் போட்டி நடைபெறும் பொழுது போட்டிக்காக எதை அனுப்பலாம் என்பதில் பெரும் மனக் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. போட்டிகளுக்கு அனுப்பப்படும் கட்டுரைகள் என்பதில் ஒரளவு தரமும் உண்மைத் தகவல்களும் இடம் பெற வேண்டும் என்பதால் அதற்குரிய தகுதி இருப்பதாக எனது இரு தொடர் கட்டுரைகளைத் தான் அனுப்பினேன். இரண்டுமே முதல் சுற்றில் வாக்குகளைப் பெற்று தேர்வாகி இருந்தது. இரண்டாம் சுற்றிலும் வெற்றிபெறுமா என்பது ஐயமாகவே இருந்தது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்று போட்டி முடியும் வரை யாரிடமும் தனிப்பட்ட அளவில் கேட்டுக் கொண்டதில்லை. அவ்வாறு கேட்டு வாங்கி வெற்றிபெறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. போட்டிகளை கொடுக்கல் வாங்கலாக கொச்சைப் படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன். நான் போட்டிக்கு அனுப்பிய பிரிவுகளில் மிகவும் ஆக்கபூர்வமாகவும் வாசகர்கள் மிகுதியாக உடையவர்களும் போட்டி இட்டு இருந்தனர் என்பதால் இரண்டாம் சுற்றில் எனது கட்டுரைகளில் எதாவது ஒன்றாவது வெற்றிபெருமா என்கிற ஐயமும் இருந்தது. நல்ல கட்டுரைகள் வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் நாம் எழுதுவதும் நல்ல கட்டுரை என்கிற தீர்ப்பு வரவேண்டும் என்கிற விருப்பம் இருந்ததை இல்லை என்று சொல்வதற்கில்லை. போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அதன் பிறகு முதல் சுற்றில் தேர்வானதும் கூடுதல் மகிழ்ச்சி, இறுதி சுற்றில் பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.



நாம் வெற்றிபெருவதைவிட வெற்றிபெறுவது அனைத்தும் நல்லக் கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்று எல்லோரைப் போல் நானும் விரும்புகிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே போட்டியில் பங்கு பெறுவது என்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துவிடுகிறார்கள். மற்ற முடிவுகள் எல்லாம் ஒரு அங்கீகாரம் என்ற அளவில் தான் கொள்ளப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றி மேலும் விழிப்புணர்வுகள் வளரவேண்டும் என்கிற சமூகப் புரிதலில் சகோதரி லிவிங் ஸ்மைல் வித்தியாவின் 'திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்' என்ற கட்டுரை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் இரு சுற்றுகளிலும் அவருக்காக வாக்களித்தேன். நினைத்தபடி வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கையின் எழுத்து என்கிற பொது புத்தி சாயம் கூட அவரது எழுத்துக்கு தேவையற்ற ஒன்று. தேர்ந்த எழுத்தாளரின் எழுத்துக் கூறுகள் அவரது எழுத்துகளில் உண்டு என்பதை அவர் பலமுறை நிருபணம் செய்திருக்கிறார். வெற்றி பெற்ற 'லிவிங் ஸ்மைல் - வித்யா' விற்கு நல்வாழ்த்துகள்.

மருத்துவர் புரூனோ, வினவு மற்றும் தமிழ் சசி ஆகியோர் இரு பிரிவுகளில் போட்டி இட்டு இரு பிரிவுகளில் வெற்றிகளும் பெற்றிருக்கிறார்கள். புதிய பதிவர்கள் நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். போட்டி நடத்திய தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்

25 ஆகஸ்ட், 2009

நட்சத்திர கேள்விகளுக்கு நச் பதில்கள் !

தமிழ்மணம் காசி அண்ணாச்சியின் நட்சத்திர கேள்விகளுக்கு என் பதில்,

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

கணிணியில் தமிழைப் பார்பவர்களில் துள்ளிக் குதிப்பவர்களும் இருக்கிறார்கள், முகம் சுளிப்பவர்களும் இருக்கிறார்கள். பதிவுலகம் சாராத பலருக்கு மின் அஞ்சல் அனுப்பும் போது மிகச் சிலர் தான், தமிழில் தட்டச்சு செய்வது எப்படின்னு கொஞ்சம் விவரமாக சொல்லித்தாங்க என்பார்கள், பலர் அதற்கு ஆங்கிலத்தில் கூட பதில் மின் அஞ்சல் அனுப்புவதில்லை. காரணம் மொழி என்பது தகவல் பரிமாற்றும் கருவிதான், அதை இணையம், வின்களம் அளவுக்கு எடுத்துப் போகத்தேவை இல்லை என்றும், அப்படி முனைபவர்களை மொழி வெறியர்கள் என்பதாகவே நினைக்கிறார்கள். பிற(ர்) மொழியை தொடர்ப்புக்கும், தொழிலுக்கும் பயன்படுத்தலாம், தாய்மொழி ஒன்றுதான் அந்த இனத்தின் அடையாளம் என்பதை பலர் உணருவதில்லை. ஒரு இனம் கேலி செய்யப்படுவது அடையாளங்களை மறுக்கிற போது தான் என்பதும், இன அடையாளங்களை அழிப்பது தான் பிற இனங்களின் செயல், அவை காலந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், வளர்ச்சியடைந்த மொழிகள் எப்படி ஒரு இனத்தால் முனைந்து கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் பலர் புரிந்து கொண்டப்பாடில்லை. தாய் மொழிப்பற்றிய புரிந்துணர்வு, தேவை பற்றியக் கட்டுரைகள் இன்னும் மிகுதியாக ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழி பெயர்பும் சேர்ந்து எழுதப்பட்டு படித்தார்கள் என்றால் ஒருவேளை தாய்மொழியின் தேவை உணர்வார்கள் என்று கருதுகிறேன். நீரிழிவுக்கு உறவுக்காரர்களான் இந்தியர்கள், தமிழர்கள் இனிப்பைக் கூட மருந்து தடவிக் கொடுத்தால் தான் ஒருவேளை ஏற்பார்கள்

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

பேருந்து முன்பதிவு, தொடர்வண்டி முன்பதிவுகள் எல்லாம் இணையத்தின் மூலம் செய்யும் படி தற்போழுது தனியார் நிறுவனங்களும், அரசுகளும் ஏற்பாடு செய்திருக்கின்றன, நன்கு படித்தவர்களிலே கூட அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை செய்பவர்கள், நிறுவன உரிமையாளர்கள் என கடன் அட்டை வைத்திருப்பவர்கள் தவிர்த்து இத்தகைய வாய்ப்புகளை நம்பிப் பயன்படுத்துபவர்கள் குறைவு, காரணம் கடன் அட்டை மோசடிகள் நடப்பதால், இணையம் பயன்படுத்தி நடக்கின்ற பரிமாற்றங்கள் (Transaction) மூலமாக கடன் அட்டை எண் திருடப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாகக் கூட இருக்கும். சிங்கையில் பணத்தை நேரடியாக கணக்கில் சேர்க்கும் மின்னியல் எந்திரங்கள் இருந்தாலும் சிலர் அவற்றை நம்பாமல் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று கணக்கில் சேர்த்துவிட்டு வருகிறார்கள், வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்படி என்றால் இந்தியாவில் கணிணி வழியாக நடைபெறும் சேவைகளை முழுவதும் பலர் பயன்படுத்த ஒரு 10 ஆண்டுகளாக ஆகும். அதுவும் கூட நடுத்தர மக்களிடம் மட்டும் தான். கடவுச் சீட்டு புதுப்பித்தல், பெறுதலுக்கான ON-LINE படிவம் இந்திய தூதரக இணையப்பக்கத்தில் கிடைக்கிறது, ஆனால் அதை அச்சு எடுத்து பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் என்கிற நிலையில் தான் அந்த இணைய தளம் இயங்குகிறது. மற்ற நாடுகளில் இருப்பது போல் முழுவதும் இணையம் வழியான சேவையாக நடைபெறுவதில்லை. இந்தியாவின் மக்கள் தொகையையும் பொருளியல் ஏற்றத்தாழ்வு சிக்கல்களையும் கருத்தில் கொண்டால் வளர்ந்த
நாடுகளின் கணிணி செயல்பாடுகளை ஒப்பிட்டு பேசுவதும் தவறாகப் படுகிறது. எல்லாம் நடக்கும், நடக்கும் நாள் பிடிக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி இணைய இதழ்கள், இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் இணையத்தில் இந்தியப் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழில் சிறப்பாக நடைபெறுகிறது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விக்கிப்பீடியா போன்றவற்றிற்கு தன்னார்வளர்கள் மிகுதியாக செய்திருந்தாலும் அதனை விரைவு படுத்த தன்னார்வளர்கள் குழுக்களாக அமைக்கப்பட்டால், சேர்ந்து கொண்டால் இலக்கு, காலம் ஆகிவற்றை வரையறுத்து சிறப்பாக செயல்பட முடியும், உதாரணத்திற்கு ஒருவர் சிலப்பதிகாரம் பற்றி எழுதத் தொடங்கினால் முடிக்கவே முடியாது, ஆனால் ஒரு குழுவாக செயல்பட்டு எழுதினால் ஆளுக்கொரு பகுதியாக எடுத்துக் கொண்டு சில மாதங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி சேர்த்துவிட முடியும். தன்னார்வளர்களின் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், விக்கிப்பீடியா தகவல்கள் நம்பகத்தன்மையாக்க அவை தனிமனித செயல்பாடுகளைச் சாராமல் எழுதப்பட்டு இருந்தால் அவை வருங்காலத்தினருக்கு சிறந்த ஆவணமாக இருக்கும். நம்பகத்தன்மைகளை சீர்படுத்த சார்பற்ற குழுக்களாக செயல்பாடுகள் அமைந்து, ஒப்புதல்களுடன் கட்டுரைகள் வெளி இடப்படவேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு தமிழை இணையத்தில் பயன்படுத்தும் சமூக பண்பாடு மற்றும் தமிழக / தமிழருக்கு நடத்தப்படும் சேவை, வணிக நிறுவனங்களுக்கு வரிவிலக்கு சலுகைகள் போல் அளிக்கலாம், பயனீட்டாளர்களுக்கு சேவை வரி குறைக்க முயற்சிப்பேன்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

படித்து வேலைக்குச் சென்றதும் தமிழ் வாசிப்பு என்பது வார இதழ்களுடனும், தொலைக்காட்சியுடனுமே முடிந்து விடக் கூடியதாக இருந்தது, ஆனால் இன்றைக்கு தமிழில் சரளமாக எழுதுவதும், இலக்கிய ஆக்கங்கள் படைக்க பலர் முயற்சிப்பதற்கும் வலைப்பதிவுகளை எழுதுவதும், வாசிப்பதும் கை கொடுக்கிறது. புதிதாக வலைப்பதிக்க வருபவர்கள் மனத்தடை இல்லாது, ஆபாசம் தவிர்த்து எதைப் பற்றியும் எழுதலாம் என்கிற எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டால், முதலில் எழுதப் பழகி பிறகு அவர்களே அவர்களுக்கான தனித்தன்மையையும் அவர்கள் கலக்கப் போகும் களம் எது என்பதை அவர்களாகவே முடிவு செய்து கொள்வார்கள்.

6.தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணம் 5 ஆண்டு சேவை - அது பற்றி தனிப்பதிவு போட்டு இருக்கிறேன். தமிழ்மணம் முன்பு போல் தமிழுக்கு ஒரே திரட்டி கிடையாது, தமிழ் பதிவுகளுக்காக இயங்கும் பல திரட்டிகளில் தமிழ்மணமும் ஒன்று. அதனால் திரட்டிகளில் முன்னோடியாக சேவைகளை மேம்படுத்தித் தொடர வேண்டும் என்பதே தற்போதைய விருப்பம்.

இது தொடர்பதிவு, இதே கேள்விகளுக்கு பதில் எழுதி, கேள்விகளை கை மாற்றிவிட மாதவிப் பந்தலார், கேஆர்எஸ் என்றழைக்கப்படும் பதிவர் நண்பர், ஆன்மிகச் செம்மல், திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களை அழைக்கிறேன்.

24 ஆகஸ்ட், 2009

தமிழ்மணம் - வலைப் பதிவுலகத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு !

ஐந்தாண்டுக்களுக்கு முன்பே தமிழ் வலைப்பதிவுகள் துவங்கப்பட்டு இருந்தாலும், முதன் முதலாக வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து பதிவுலகின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்மணம் திரட்டியையே சாரும். மாறுபட்ட சிந்தனையில், சேவை மனப்பாண்மையில் தமிழ் திரட்டி ஒன்றை இணையத்தில் தமிழ் கூறும் நல்லுலக்க்கு அறிமுகப் படுத்திய திரு காசி ஆறுமுகம் அவர்களையும் அவர்களுக்கு உதவியாக இருந்த அனைத்து பதிவர் நண்பர்களையும், தற்போதைய தமிழ்மணம் நிர்வாகக் குழுவினரையும், த்மிழ்மணம் திரட்டி சேவை ஐந்தாம் ஆண்டு நிறைவில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இப்பொழுது தான் RSS Feeder (செய்தி ஓடை) தொழில்நுட்பங்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கின்றன, திரட்டிகளுக்குச் செல்லாமலேயே கூகுள் ரீடரில் பதிவுகளை தொகுத்துப் படிக்க முடிக்கிறது, ஆனால் அவை இல்லாத காலகட்டங்களில் பதிவுத் தொகுப்புகளுக்கு தமிழ்மணம் திரட்டியின் சேவை மிகப் பெரியதாக இருந்தது, வெறும் பதிவுத் தொகுப்பு சார்ந்த சேவை மட்டுமின்றி, அதில் இணைபவர்களை வெளிச்சமிடும் வகையில் வாரம் ஒரு நட்சத்திரப் பதிவர் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது.


தொடக்கத்தில் நட்சத்திர வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்க இணைந்திருந்த பதிவர்கள் எண்ணிக்கையும் காரணம், பிறகு எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக வாய்ப்புகள் கிடைக்க ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் உள்ளனர். நட்சத்திர வாய்ப்பு கிடைக்காதவர்களில் 3 - 4 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வருவோரும் உண்டு. தற்போது நட்சத்திர பதிவர் வாய்ப்புகள் எப்படி வழங்கப்படுகிறது என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. தொடர்ந்து நல்ல முறையில் எழுதி வருபவர்களுக்கு வாய்ப்பு(கள்) கிடைக்கிறது என்பதாக புரிந்து கொள்கிறேன். மற்றபடி அதில் வேறேதும் முறைகள் வைத்திருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. நீண்ட நாளாக எழுதிவந்தும் எனக்கெல்லாம் வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று சிலர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரைகள் நல்ல நோக்கத்திற்கு என்றாலும் அது சிலரால் தவறாக பயன்படுவதாக பலர் சொல்லிய குற்றச் சாட்டுகளை தமிழ்மணம் செவிமடுக்க வேண்டும், பொறுப்புகள் என்பதை 'அனைவருக்கும் பொது''வாக்கும் போது சிக்கல்களும் முறைகேடுகளும் நடப்பது இயல்பு. எல்லோருமே பொறுப்பானவர்கள் என்று நினைக்க முடியும், நடப்பில் கூறு அற்றவையாக மாறும் போது, வழிமுறைகளை மாற்றி அமைக்கலாம், அதை அப்படியே விட்டுவிடுவதும் சரி அல்ல, நோக்கம் மிகச் சில பதிவர்களால் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை திரட்டி நிர்வாகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்மணம் விளம்பரங்கள் அற்ற திரட்டியாகவும், முற்றிலும் இலவசத் திரட்டி சேவையாகவே தொடர்வதும் சாதனைதான். இணையப் பெருவெளியில் தமிழ் பதிவர்களின் தமிழ் (எழுத்து) சேவை அளப்பெரியது, அதற்கு வழி அமைத்துக் கொடுத்தும், பதிவர்களைத் தொடர்ந்து பல்வேறு வகைகளில் ஊக்குவித்தும் வரும் தமிழ் மணம் திரட்டி மற்றும் திரட்டி நிர்வாகத்தைப் பாராட்டி மகிழ்கிறேன். ஐந்தாம் ஆண்டு நிறைவு என்பது தமிழ்மணத்திற்கு உரிய பெருமை... கூடவே தமிழ் பதிவுலகும் தமிழ்மணம் மூலமாக ஐந்தாண்டுகளாக வளர்ந்து வந்திருக்கிறது என்கிற பெருமையும் அதில் அடங்கும். எனவே ஐந்தாண்டுகள் நிறைவு தமிழ்மணம் மற்றும் தமிழ் பதிவுலக்கிற்கான பெருமை என்பதை புதியவலைப்பதிவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற திரட்டிகளை நடத்திவரும் பதிவர் அன்பர்களும், 'தமிழ்மணம் நம்முடைய திரட்டி' என்ற எண்ணங்களையே கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை தொடரவும் மேலும் சிறக்கவும் வேண்டும், மீண்டும் வாழ்த்திக் கொள்கிறேன்.

31 டிசம்பர், 2008

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள் !

"வேண்டுகோள் வைக்கும் வாரம் முடியறத்துக்குள்ளே... நீங்க ஒரு பதிவைப் போட்டு வேண்டுகோள் வைங்கண்ணே..."

என்றார் பதிவுலகின் ஒரு சின்னத் தம்பி (ஜெகதீசனோ, விஜய் ஆனந்தோ, விக்னேஷ்வரனோ இல்லை)

திடீர் என்று கேட்டால் என்ன வேண்டு கோள்வைப்பது ? ஆங்.....ஒண்ணே ஒண்ணு இருக்கு...நானும் ரொம்ப நாளாகவே வேண்டுகோள் வைக்கனும் என்று நினைத்து இருந்தேன்.

என்னோட வேண்டுகோள் யாருக்கு ? தலைப்பிலேயே இருக்கு !

எதுக்கு வேண்டுகோள் ?

Classic தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர பக்கம் கிளிக்கினால் நட்சத்திர பக்கம் காட்டும் (இந்த வாரம் நம்ம லதாநந்த் அங்கிள்... கோவை கிரைம் நாவல் எழுத்தாளர் இராஜேஸ் குமார் மாதிரியே போஸ் கொடுப்பார் பாருங்க)

நட்சத்திர பக்கத்தில் இருந்து தமிழ்மணம் முகப்புக்குச் செல்ல 'கிளிக்' செய்தால்



Not Found
The requested document was not found on this server.
--------------------------------------------------------------------------------
Web Server at thamizmanam.com

வெள்ளை அறிக்கை காட்டுது, அதாவது அந்த வலைப்பக்கம் சர்வரில் இல்லையாம்,


இது எதுனால வருது என்றால், புதிய தமிழ்மண முகப்பு அமைப்பின் போது எல்லா கோப்புகளையும் PHP Script க்கு மாற்றி இருக்கிறார்கள், ஆனால் இந்த
பக்கத்தில் இருக்கும் தமிழ்மண முகப்பிற்கான இணைப்பு மட்டும் இன்னும் html ஆகவே (http://www.thamizmanam.com/index.html) இருக்கிறது அந்த கோப்பும் சர்வரில் இல்லை (Dead Link), இதை சரி செய்ய அங்கு இணைப்பாக PHP (http://www.thamizmanam.com/index_classic.php) இணைப்பு தான் வரவேண்டும்.


இந்த கவனமின்மை தமிழ்மணத்தில் புதிய தமிழ்மணம் வடிவமைத்த போதிலிருந்தே இருக்கிறது.

வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்.

பதிவர்கள், வாசிப்பவர்கள், வெறும் புரொபைல் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் 2009 ஆம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !

17 ஜூலை, 2008

இனி தமிழ்மணம் செய்ய வேண்டியது என்ன ?

மூன்று நாளாக மேட்டர் ஓடுது, ஏங்க நீங்களும் ஒரு மூத்த பதிவர் தானே ? ( மூத்த பதிவர் என்று இவனுங்களாக நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ?) உங்கள் கருத்து என்ன ? என்ன ? ஜிமெயில் சாட்டில் ஒரே நச்சரிப்பு, ஒரு பத்து நாளைக்கு ஜிமெயிலையே திறக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.

தலைப்பைப் பார்த்தீர்கள் தானே ?

இன்னும் ஒருவாரத்திற்கு தமிழ்மணத்தில் வரக்கூடிய பல்வேறு பதிவர்களின் பதிவுகளின் தலைப்புகள் இவைதான்

தமிழ்மணம் ஒரு பாசிச திரட்டி
தமிழ்மணம் நடுநிலையான திரட்டி
தமிழ்மணம் வெறும் திரட்டிதானே ?
தமிழ்மணத்தை இனி நம்பலமா ?
தமிழ்மணத்துக்கு 10 யோசனைகள்
**** பதிவரின் பிடியில் தமிழ்மணம்
காமக் கதைகள் ஆபசமானதா ? (101 ஆவது விளக்கமாக பதிவர் குசும்பன்),
தமிழ்மணம் ஒரு பாயாச திரட்டி,
தமிழ்மணம் ஒரு ஆயாச திரட்டி,
தமிழ்மணத்தினால் பயன் என்ன ?,
தமிழ்மணத்திற்கு இறங்கு முகம்,
தமிழ்மணத்திற்கு வரப்போகும் பொற்காலம் - ஜோதிட ரத்னா சுப்பையா வாத்தியார்,
தமிழ்மணத்தினால் பயனடைந்தேன் - டோண்டு ராகவன் (108 ஆவதுமுறையாக)
தமிழ்மணம் பதிவர் நலனில் அக்கரை காட்டுகிறதா ?
தமிழ்மண வளர்ச்சியில் பதிவர்களின் பங்கிடு
தமிழ்மணத்தால் பாதிப்படைந்தேன்
தமிழ்மணத்தால் கொதிப்படைந்தேன்
காமத்துப்பாலில் வரும் காமம் ஆபாசமானதா ? (50 ஆவது விளக்கம்)

இன்னும் எதும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க சேர்ப்போம் :)
**********

தமிழ்மணத்தில் எழுதாமல் வேறெங்காவது எழுதி இருந்தால் இன்னேரம் தேசிய அளவில் பேசப்படும் இலக்கியம் எழுதி, எழுதி... சாகித்திய அகாடமி விருது வாங்கி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து இருப்பேன் இருப்பேன். என்னுடைய நேரம் நான் இங்கே வந்து சிக்கிவிட்டேன். என்னுடைய வளர்ச்சியை கெடுத்துவிட்டது தமிழ்மணம் :) ஹிஹி

*********

யப்பா.....யாராவது எதாவது எழுதிட்டு போங்க, எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.

தமிழ்மணத்தில் எழுதி இருக்காவிடில் பதிவர் நண்பர்கள் வட்டம் கிடைத்திருக்காது. நான் தமிழ்மணத்தை வெறும் திரட்டிதானே என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பந்தய குதிரை எல்லாமே குதிரைதான். பலம் உள்ளது மட்டுமே முதலில் வருகிறது. அதன் மீதுதான் பணமும் கட்டுகிறார்கள். பலனடைந்தவர்கள் எல்லா குதிரையும் குதிரைதான் என்று சொல்ல முயல்வார்களா ?
அம்புட்டுதான் நம்ம கருத்து !

பின்குறிப்பு : சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால் பிரச்சனையை 'காம'டியாக்கிவிடனும் :) இந்த பதிவிற்கு நல் ஓசனை வழங்கிய பதிவர் பெருந்தகை குசும்பன் வாழ்க.

23 மே, 2007

பரண் 2004 - மேல் மாடி காலி


தமிழ் மணத்தில் பரண் இருக்கிறது. அதில் 2005, 2004 ல் என இரண்டு அடுக்குகள் இருக்கிறது. ரொம்ப பழைய பரண் (2004ல்) அதில் 'பொருள்'கள் இல்லை.

2005ல் மூத்த பதிவர்கள் (வயதில் மட்டும் அல்ல) எழுதிய இன்றைய நாளில் எழுதிய இடுகைகள் தொகுக்கப்பட்டு இருக்கிறது. 2004ல் எதுவும் காணப்படவில்லை என செய்தி வருகிறது. இதில் என்ன சிறப்பு என்றால் விலகிய மற்றும் விலக்கப்பட்ட பதிவகளின் 2005ஆம் ஆண்டு இடுகைகளும் வருகிறது. மகிழ்வான விடயம் தான்.

பழைய பரணில் எதுவும் இல்லை என்றால் சமீபத்திய புதிய பரணில் (2006) இருக்கும் தட்டுமுட்டு சாமாண்களைக் காட்டலாமே. அதாவது 2005 மற்றும் 2006 பிரிவுகளாக அந்த ஆண்டுக்குள் இருக்கும் இடுகைகளை காட்டலாமே.

தமிழ்மணம் கவனிக்குமா ?

நாமக்கல்லார் கண்டுபிடித்து (மொக்கை) பதிவு போடுவதற்குள் என் கண்ணில் சிக்கிடுச்சு.
:))
என்னுடைய பழைய பொருள்களைப் (2006) பார்கலாமே என்ற நப்பாசை தான் ! :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்