பின்பற்றுபவர்கள்

நாகப்பட்டினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகப்பட்டினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜனவரி, 2012

நாகைக்கும் காரைக்கும் காதம் !

இன்றைக்கு நாம் மெட்ரிக் அளவுகளுக்கு மாறிவிட்டோம், ஆனாலும் நீளம் அகலம் எடை குறித்த அளவி (அளவு) சொற்கள் தமிழில் ஏராளமாக இருந்தன, வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு இவை முற்றிலும் வழக்கு இழந்து போயின, 35 ஆண்டுகளுக்கு முன்பு கூட 'வீசம்' என்ற நிறுத்தல் அளவீடுகளில் எடைகள் நிறுத்து கொடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சியின் கீழ் வந்த காமென் வெல்த் நாடுகளில் அளவைகள் இங்கிலாந்தைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் சாலைகளின் அளவீடுகள் கிமீ சொல்லப்படுவதில்லை, மைல் கணக்கில் தான் விரைவு தொலைவு உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்கள்.

*****

நாகைக்கும் காரைக்கும் காதம்
காரைக்கும் கடையூருக்கும் காதம்
கடையூருக்கும் யாழிக்கும் காதம்
யாழிக்கும் தில்லைக்கும் காதம்.

இது எந்த வகைப்பாடல், யார் எழுதியது என்று எனக்கு தெரியாது, சிறு வயதில் அம்மா வாய்பாடு போல் சொல்லக் கேள்விப்ப்ட்டிருக்கிறேன், இதன் பொருள்

நாகைக்கும் காரைக்காலுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் அது போன்று
காரைக்காலுக்கு திருக்கடையூருக்கும் இடைபட்ட தொலைவு ஒரு காதம்,
திருக்கடையூருக்கும் சீர்காழிக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் மற்றும்
சீர்காழிக்கும் (தில்லை) சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் என்பதாகும்

அதாவது நாகையிலிருந்து சிதம்பரம் நான்கு காதம் தொலைவில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். காதம் என்ற தொலைவு எவ்வளவு ?


வெட்டவெளியில் இருகை சேர்த்து ஒருமுறை பலத்த ஓசையுடன் கைதட்டினால் அல்லது இரவில் தீப்பந்தம் அல்லது விளக்கைக் காட்டி அது எவ்வளவு தொலைவில் உள்ளவரை ( தீப்பந்ததால் ஆட்டி சைகை செய்து) கூப்பிட வைக்க முடியும் என்பதே கூப்பீடு அளவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், தமிழில் பெரும்பாலும் சொல்லுக்கு நேரடியான பொருள் உண்டு என்பதால் அவ்விதம் நினைக்கிறேன். அதாவது கண்ணுக்கும் காதுக்கும் எட்டிய தொலைவு 'கூப்பிடு' என்ற நீளம் குறித்த நீட்டல் அளவையாக இருக்கிறது. அது போன்ற நான்கு அளவுகளான கூப்பிடும் தொலைவு ஒரு காத தொலைவு எனப்படுகிறது. இந்த ஊர்களின் இன்றைய தொலைவு ஒவ்வொன்றிற்கும் இடைப்பட்டு சுமார் 20 கி மீட்டர்கள், தமிழார்வளர்கள் காதம் என்பதற்கு வடபுல தென்புல வாய்ப்பாடு என்ற அளவில் இரு அளவீடுகளைத் தருகிறார்கள், ஒரு காதம் எனப்படுவது 6.7 கிமீ தென்புல அளவீடாகவும், அதில் அரை அளவான 3.35 கிமி அளவு ஒரு காதம் என வடபுல அளவீடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை இரண்டும் கூட மேல் குறிப்பிட்ட வாய்பாட்டு பாடலில் குறிப்பிடும் தொலைவான ஒரு காதம் = 20 கிமீ அளவுடன் முரண்படுகிறது. திரு இராமகி ஐயா அவர்களின் ஆய்வு கூற்றுபடி காதம் = 3.35 என்று வைத்துக் கொண்டால், மேற்கண்ட பாடலில் ஆறு என்ற எண் அளவு விடுபட்டு இருக்க வேண்டும்,



அதாவது

நாகைக்கும் காரைக்கும் ஆறு காதம்
காரைக்கும் கடையூருக்கும் ஆறு காதம்
கடையூருக்கும் யாழிக்கும் ஆறு காதம்
யாழிக்கும் தில்லைக்கும் ஆறு காதம்.

என்பதில் இருந்த 'ஆறு' காலப்போக்கில் வாய்பாட்டுப் பாடலில் இருந்து எதுகை மோனை மயக்கத்தில் விடுபட்டி இருக்க வேண்டும், அதாவது காதம் என்ற அளவுச் சொல் பயன்பாடு குறைந்த பிறகு முழுப்பாடலின் மையப் பொருளான தொலைவு வாய்ப்பாட்டின் பலன் தேவையற்றதாகி வெறும் தொலைவு சார்ந்த சந்தப் பாடலாக திரிந்திருகிறது.

எண்கள், பின்னங்கள் - வகுத்தல், நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவீடுகள் ஏராளமானவை தமிழில் இருந்தது, தற்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளாதது நமக்கு மட்டுமல்ல உலகத்தினருக்கே இழப்பு தான். ஒரு மொழியில் ஒரு கலைச் சொல் அழியும் போது அவற்றின் பயன்பாடுகள் அழியும், அவை கொண்டுள்ள அறிவின் பொருளும் அழியும், ஒரு வேளை இந்தச் அளவைகளைப் பயன்படுத்தினால் அளவீடுகளை பயன்படுத்தித் தீர்வு காணும் இன்றைய சிக்கலான கணக்குகள் கூட எளிமையான வடிவில் தீர்க்க முடியும். எடுத்துக்காட்டிற்கு போதையனார் பாடல் ஒன்று.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.



இவற்றின் பொருள் செங்கோண முக்கோன நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ண நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

30 டிசம்பர், 2011

நாகை புயல் பற்றிய அனுபவம் !

1952, 1977 நாகை வாசிகளால் மறக்க முடியாத இரு ஆண்டுகள், ஆம் இந்த இரு ஆண்டுகளில் நாகையை பலத்த சூறைகாற்றுடன் புயல்கள் தாக்கின. இரண்டு முறை தான் புயல் நாகையை தாக்கியுள்ளது என்றாலும் நாகையும் புயலும் தமிழக மக்களால் ஒன்றை ஒன்று நினைவு படுத்துகையில் தொடர்பாக வரும் பெயர்கள், 'நாகை என்றாலே புயல் அடிக்கும் ஊர்' என்ற எண்ணத்தை உறுவாக்கியது. 1952 ஆம் ஆண்டு புயலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அப்போது பிறந்திருக்கவில்லை. அம்மா அப்பாதான் அதுபற்றிக் கூறி இருக்கிறார்கள். ஆனால் 1977 ஆம் ஆண்டு புயலை நேரில் உணர்ந்திருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் அது என்று நினைக்கிறேன்.

அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், நாகையில் தீபாவளிக்கு பிந்தைய ஐப்பசி - கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்புகள் எப்போதுமே இருக்கும், நாகையை அடுத்து வேதாரண்யம் கோடியக்கரையில் நில அமைப்பும், கடல் கடற்கரை அமைப்புகளும் புவியல் ரீதியாக மாறுவதால் புயல் பெரும்பாலும் கரையைக் கடக்க அந்த இடத்தையே தேர்ந்தெடுக்கிறது, அது போல் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாக அந்தப்பகுதி கடலின் கிழக்கை தேர்ந்தெடுக்கிறது என்று ஊகிக்கிறேன்.

1977 க்கு முன் பெரியவர்கள் புயல் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அதை 1977 ல் நேரடியாக அனுபவிக்கும் போது தான் அவற்றின் தாக்கம் உணர்ந்தேன். பொதுவாகவே இந்திய புயல்கள் மழையோடு தான் வருகின்றன, புயல்வரும் முன்பே அதன் காற்றழுத்த மண்டலங்கள் மேகங்களை கூட்டி இருக்கும், மழை பெய்து கொண்டிருக்கும் போது புயலும் கரை கடந்துவிடும். பலத்த காற்றுடன் கூடிய மழையாகத்தாக பிற இடங்களில் நடக்கும் நிகழ்வு புயல்காற்றுடன் மழையாக புயல் அடிக்கும் இடங்களில் இருக்கும்.

நான் அறிந்த 1977 புயல் சரியாக பின்னிரவில் துவங்கி விடியற்காலை 5.30 மணிக்கு ஓய்ந்தது, அப்போது எங்கள் தெருவில் எங்கள் வீடு தவிர்த்து 10 குடும்பங்கள் உண்டு, அதில் எங்கள் வீடு தான் சிமென்டினால் கட்டப்பட்ட வீடு, நள்ளிரவுக்கு புயல் துவங்கியதுமே சன்னல் கதவுகள் அனைத்தையும் பெற்றோர்கள் சாத்திவிட்டு எங்களையெல்லாம் ஓரமாக உட்காரவைத்தார்கள், வீடு தலையில் இடிந்துவிழுமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தாலும் எங்களிடம் அதையெல்லாம் சொல்லவில்லை, திடிரென்று தெருவிளக்குகள், வீட்டில் உள்ள மின்சாரமும் தடைபட்டது, சிம்னி விளக்கை கொளுத்தி வைத்தால் அதுவும் வெளியே அடிக்கும் காற்று சந்து பொந்துகளில் புறப்பட்டு வந்து விளக்குகளை அனைத்தது. ஆனாலும் அவ்வப்போது அடிக்கும் மின்னல் வெளியே பெரும்காற்று வீசுவதில் அசையும் மரங்களை படம்பிடித்துக் காட்டின.

தெருவில் வசித்தவர்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு வீடே சரிய ஒவ்வொரு குடும்பமாக எங்கள் வீட்டை நோக்கி தடுமாறி மிகுந்த போராட்டங்களுடன் காற்றை எதிர்த்து எங்கள் வீட்டுக்குள் வந்தனர், எங்கள் பெற்றோர்கள் அனைவரையும் உள்ளே வரவழைத்தனர், அன்றைக்கு புயலுக்கு ஒதுங்க எங்கள் வீட்டிற்கு வந்தது சுமார் 50 பேர்களாகவது இருக்கும், அவ்வளவு பேரைத் தாங்கும் அளவுக்கு வீடு இல்லாவிட்டாலும், வேற வழியே இல்லை என்ற நிலையில் உட்காரவாவது பாதுகாப்பான இடம் கிடைக்கட்டம் என்று வெளியே சென்று என் அப்பா வாசலுக்கு வருபவர்களை உள்ளே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். வீடு இழந்தவர்கள் எல்லாம் போச்சே என்று அழுது கொண்டிருந்தனர், எங்கள் வீட்டிற்குள் பெரியோர்களையும், சிறுவர்களையும் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர், மொத்தமே 200 மீட்டர் தொலைவிற்குள் இருந்த குடும்பங்கள் தான் என்றாலும் 160 கிமி வேகத்தில் வீசும் காற்று அடுத்த அடி வைக்கவிடாது தள்ளிவிடும் ஆற்றல் பெற்றது கூடவே மழை, கடும் இருட்டு, கண்ணை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாலே மரங்களில் இருந்து காற்றினால் பிய்த்து எரியப்படும் இலைகள் கண்ணை பழுதாக்கும் அளவுக்கு வந்து விழும், தெருவில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வேறு இடத்தை அடைய முடியும், பக்கத்தில் பள்ளிக்கூடம் இருந்தாலும் பூட்டப்பட்டு இருக்கும் என்பதால் தெருவில் இருந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் நாடினர்.

புயல் முடிந்த காலை வெளியே வந்து பார்த்தால் எந்த ஒரு மின் விளக்கு மரமும் நின்ற இடத்தில் இல்லை, ஒன்று படுத்து கிடந்தது, அல்லது வளைந்து பக்கத்தில் எதன் மீதாவது சாய்ந்து கிடந்தது, பிள்ளையார் கோயிலுக்கு எதிரே இருந்த மிகப் பெரிய ஆரசமரம் சாய்ந்து கிடந்தது, சிறுவயதில் பொழுது போக்காக அதனடியில் கூடிக் களித்திருந்தோம், மாங்காய் சீசன் வேறு என்பதால்மா மரங்கள் இருந்த இடங்களில் தரையெங்கும் மாங்காய்கள், அவற்றை மூடி சாய்ந்து கிடந்த மாமரங்கள், பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்த தென்னைமரங்களில் பலவற்றை காணமுடியவில்லை, எல்லாம் சாய்ந்துவிட்டது, ஊரில் 60 விழுக்காட்டு மரங்கள் அனைத்துமே சாய்ந்துவிட்டன, சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது, பறவைகள், கோழிகள் செத்துக் கிடந்தன, கால்நடைகள் (வயிறு உப்ப) செத்துக் கிடந்தன, சுவர் இடிந்துவிழுந்து, மரம் விழுந்து சிலர் செத்துப் போய் இருந்தார்கள், ஊரே பதட்டத்துடன், பயத்துடன் இருந்தது.



புயல் முடிந்தாலும் அவர்கள் எங்கு செல்வார்கள், ஏற்கனவே வீடுகள் இருந்த களைக்கப்பட்டு குட்டிச் சுவர் போன்று நின்றன, அவர்களுக்கும் உடனடி போக்கிடம் இல்லை, புயல் முடிந்த நாள் முதல் அடுத்த பதினைந்து நாளைக்கு சாப்பாடு, சமையல் எல்லாம் பொதுவாகவே நடந்தது. சிலர் பள்ளுக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்குச் சென்று தங்கினர்

பள்ளிகளெல்லாம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டு இருந்தது, பல்வேறு நல அமைப்புகள் மற்றும் அரசு உதவிகளாக உணவுப் பொருள்கள் துணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தன. இப்போது நினைத்தாலும் புயலுக்கு முன் இருந்த மரங்கள், அருகில் இருந்த (பழைய) கூரை வீடுகள் நிழலாக தெரியத்தான் செய்கிறது. இன்னும் கூட தெருவில் வசித்தவர்களில் மீதம் இருப்போர் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் வந்ததை நினைவு வைத்திருக்கின்றனர், அப்போது சிறியவர்களாக இருந்தவர்களுக்கு தற்போது 35 - 40 வயதாகிவிட்டது, இளைஞர்களாக இருந்தவர்கள் முதுமை அடைந்துவிட்டார்கள், முதியவர்களாக இருந்தவர்கள் ம்ரணித்துவிட்டார்கள்

18 ஜூன், 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 2

முதல் பகுதியின் தொடுப்பு
இறை நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்கள் பற்றிய உளவியல் என்று பார்த்தால், தனக்கு அருளிக் கொண்டிருப்பதாக நம்பப்படும் தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் தன்னால் முடிந்த அளவுக்கு உடலை வருத்திக்கொள்ளுதல் தான். காலம் காலமாக பல மதங்களிலும் உடலை வருத்திக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதில் எளிய வருத்திக் கொள்ளுதலான நடைப் பயணமும், அலகு குத்துதல், சிறிய அளவிலான வெட்டுக் கருவிகள் மூலம் உதிரம் சொட்டச் சொட்ட உடலைக் கீறி வருத்திக் கொள்ளுதல், தீ மிதி வரை அனைத்தும் உண்டு. மிகுந்த மனநிலை கெட்டவர்கள் கண்களை பிடிங்கி, விரல்களை வெட்டிக் காணிக்கை செலுத்துவதும், தன்னளவில் எந்த வருத்துதலையும் ஏற்படுத்திக் கொள்ளாதவர் உயிர் பலி இட்டு வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்வதும் அனைத்து மதங்களிலும் உள்ள வழக்கம், முறைகள் மட்டுமே வேறுபடுகிறது, மன நிலை கெட்டு உடல் உறுப்பை வெட்டிக் காணிக்கை ஆக்குவது தவிர்த்து மற்றதெல்லாம் கிட்ட தட்ட ஒரே வகைதான் அதில் எது மடத்தனம் என்று வரையறை செய்ய இயலாது.

***

அலகுக் குத்திக் கொள்ள மனம் வருமா ? உளவியலே காரணம், 'என்னால் முடியும், எனக்கு தெய்வம் துணை இருக்கிறது' என்று ஆழமாக நம்புவர்கள் உன்னத செயல் போல் எண்ணி அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வர். எனக்கு வயது 5 ஆக இருக்கும் பொழுதிலிருந்து எனது தந்தை அலகு காவடி எடுப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதற்கான தேவை என்ன வென்று சரியாகத் தெரியாவிட்டாலும், அவருடைய சிறுவயதில் அவருடைய உறவினர்கள், முதிர்ந்த நண்பர்கள் அதுபோல் அலகு காவடி எடுப்பதையும், அதற்கு இவர் துணையாகவும் இருந்திருக்கிறார் என்பது தெரியும், அவர்களைப் போல் தானும் குறிப்பிட்ட வயதில் அலகு காவடி எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். மேலும் அதை கூடவே இருந்து கவணித்து வந்ததால் அச்சம் எதுவுமின்றி அலகுக் காவடி எடுக்க முடிவு செய்து எடுக்கத் தொடங்கி இருக்கலாம். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது 30 வயதில் இருந்து தனது 51 ஆவது வயதில் மறைந்த ஆண்டு வரை அவ்வாறு அலகு காவடி எடுத்தார். அப்பாவின் மறைவிற்குப் பிறகு அதைத் தொடர எங்களில் யாருக்குமே விருப்பம் இல்லை. கிட்டதட்ட அதே 30 வயதில் இருந்து தற்பொழுது வரை எனது தம்பி அப்பா விட்டுச் சென்ற அலகு காவடியைத் ஆறு ஆண்டுகளாக தொடர்கிறான்.

***

எங்கள் வீட்டு அருகே இருக்கும் ஏழைப் பிள்ளையயார கோவில் இருந்து தான் எங்கள் வீட்டுக் காவடியை கிளப்புவோம்.

காவடி எடுக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு காவடி எடுக்கப் போகும் கோவிலுக்குச் சென்று திருக்காப்பு அணிந்து வரவேண்டும், திருக்காப்பு எனப்படுவது சிறிய கைக்குட்டைப் போன்ற மஞ்சள் துணியில் சுற்றப்பட்ட 50 பைசா நாணயம், அதை கையில் கைகடிகாரம் போல் காவடி முடியும் வரை அணிந்து இருப்பார்கள். காவடி எடுக்கும் அன்று தண்ணீர் தவிர்த்து உண்ணா நோண்பு (விரதம்). மிகவும் களைப்புடன் இருந்தால் வேக வைத்த பச்சைப் பயிறு கஞ்சியில் வெல்லம் போட்டு கொடுப்பார்கள். காவடியின் முதல் நாள் இரவே காவடிக்கு தேவையான பூசைப் பெருள்களை வாங்கி ஆயத்தமாக வைத்திருப்பார்கள். காவடி அன்று பால் காவடி என்றால் அன்று கறந்த பால், மற்றபடி சந்தனம், திருநீறு, பன்னீர் காவடி என்றால் தேவைக்கேற்ப முதல் நாளே வாங்கி வைத்துவிடுவார்கள்.

எங்கள் வீட்டுக் காவடி எப்போதும் பால்காவடிதான், இப்பொழுது உடன்பிறந்தோரின் பிள்ளைகளும் நானும் காவடி எடுக்கிறேன் என்று கிளம்பிவிட்டதால் சந்தனம், திருநீறு, பன்னீர் குடங்களை அவர்களின் தலையில் ஏற்றுகிறோம்.

எனக்கும் என் அண்ணனுக்கும், தம்பி அலகு குத்தும் காவடி எடுப்பதில் விருப்பம் இல்லை, ஆனாலும் அண்ணன் முன்னின்று காவடிக்குத் தேவையான அனைத்து பூசைகளையும் செய்து தருவார்.

காவடி எடுக்கும் அன்று சிறிய குடங்களை வைத்து பூசைப் பொருள்களுடன் தீபம் காட்டி, குடத்தினுள் சாம்பிராணி புகையைக் காட்டி பாலை குடம் நிறைந்து வழியும் வரை ஊற்றப்படும்.

பிறகு காய்ந்த வாழையிலையால் குடத்தை மூடி, சணலால் இறுகக் கட்டிவிட்டு, அந்த குடத்திற்கு திருநீறு சந்தன குங்குமம் சாற்றி, மாலையிட்டு தலையில் தூக்கிய பிறகு எடுக்கும் இடத்தில் இருக்கும் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு முன்று சுற்று சுற்றி பால் முழுக்கு செய்யப் போகும் கோயிலுக்குச் நடை பயணமாகச் செல்வார்கள்.

தம்பி அலகு காவடி எடுப்பதால் பால் குடங்கள் ஆயத்தம் ஆனவுடன் அலகு குத்துதல் நடைபெறும். தூண்டில் முள் போன்று வளைந்து இருக்கும் ஊசியை இடுப்பைச் சுற்றிய தசையில் சொருகுவார்கள், உதிரம் வந்தால் திருநீற்றை வைத்து அதன் மீது பூசுவார்கள்.

அலகு குத்தும் போது சுற்றி நிற்கும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பார்கள், ஆட்டம் போட வைக்கும் மேளதாள நாதசுவரம் ஒருபக்கம் காதைப் பிளக்கும், அம்மன் பாடல்கள் பாடப்படும், அலகு குத்த குத்த உடலில் வியர்த்துக் கொட்டும், விசிறியை வீசி ஆசுவாசப்படுத்துவார்கள். குத்திக் கொள்ளும் அன்பர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராக இருந்தால் மயக்கமடைந்துவிடுவார் (சாமி வந்துவிட்டது என்று சொல்லுவார்கள்)


அந்த நேரத்தில் அனைத்து அலகுகளையும் குத்திவிட்டுவிடுவார்கள், மயக்கம் வராவிட்டால் தாங்கிக் கொள்வார்கள், கடவுளின் பெயரால் செய்வதால் வலிக்கிறது என்று நினைப்பது தனது பக்தியின் குறைபாடு என்று நினைக்கக் கூடும் என்பதால் வலியைத் தாங்கிக் கொள்வார்கள் அல்லது அந்த நேரத்தில் இறை உணர்வில் இருப்பதால் வலியை பொருட்படுத்துவதில்லை என்பதாக நான் கொள்கிறேன்.

நெற்றியில் சிறிய அளவிலான வேல்கள், இடுப்பைச் சுற்றிய அலகுகள் போடப்பட்டதும், இறுதியாக கன்னத்தைத் துளைத்து மறுகன்னத்தின் வழியாக ஒரு சிறிய வேலைச் சொருகி அந்த வேலில் பிடிப்பில் வாயை மறைக்கும் படியான வெள்ளி அணியை முடுக்கியதும் அலகு குத்துவது முடிந்துவிடும்,


பிறகு பால் குடத்தை தலையில் வைத்து கோயிலைச் சுற்றிவந்ததும் அலங்காரக் காவடியில் அந்த குடத்தை வைத்து கட்டிவிட்டு, காவடியை தோலில் தூக்கி வைத்துக் கொண்டு பிறகு, நீண்ட வேல்களை இடுப்பில் குத்தி இருகும் அலகுடன் இணைத்துவிட காவடியுடன் நடை பயணம் தொடங்கிவிடும்.



***

காவடி எடுப்பது மட்டும் போதாது காவடியுடன் எதாவது புத்துணர்வு உந்துதல் தொடர்ந்து இருந்தால் நடைபயணமும், காவடி கூட்டமும் பலரைக் கவரும், பார்வையாளர்கள் நின்று பார்த்துச் செல்வார்கள். அதற்காக காவடியுடன் ஆடுவதற்கு ஆட்டக்காவடி எனப்படும் இரதக் காவடியை ஏற்பாடு செய்து கொள்வதுண்டு, அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் அத்தகைய ஆட்டக்காவடிகளை வைத்திருப்பர்கள், ஒரு காவடியைத் தூக்கி மாற்றி மாற்று 10 பேர் வரை சலங்கை கட்டி ஆடுவார்கள். ஒற்றையடி மேளத்துடன் ஆட்டக்காவடி ஆடும் போது பக்கத்தில் நின்று பார்த்தால் நமது கால்களும் ஆடுவதற்கு ஆயத்தமாகும் உணர்வு இருக்கும்.
எட்டுக்குடி முருகன் கோவிலின் சிறப்பே இந்த ஆட்டக்காவடிகள் தான் ( அது பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்) காவடி எடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் ஆட்டக்காவடியையும் எனது தம்பி ஏற்பாடு செய்து கொள்வான்.
ஆட்டக்காவடியின் எடை 30 கிலோ முதல் 40 கிலோ வரை இருக்கும், பழக்கம் இல்லாதவர்கள் அதைத் தூக்கவோ, சாயாமல் தோலில் வைக்கவோ முடியாது,
ஆனால் அந்த காவடியை எளிதாக தூக்கி அந்த இளைஞர்கள் சுழன்று சுழன்று ஆடுவார்கள். அவர்கள் மட்டுமா ? கூட்டத்தோடு கூட்டமாக நானும் தூக்கி ஆடினேன். ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம். 10 நிமிடம் ஆடியதற்கே 3 நாள்கள் வரை தோ(ள்)ல் வலி இருந்தது














கோயில் தொலைவு சுமார் 4 கிலோமீட்டர், அங்கங்கே நின்று நின்று ஆடிவிட்டு செல்லச் செல்ல, அலகுகாவடி, பால்குடம் வைத்திருப்பவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி விழுந்து வணங்குவார்கள், சிலர் தேங்காய் பழங்களுடன் தீப வழிபாடு செய்வதும் உண்டு,

அவர்களுக்கு எனது தம்பி அவர்களுக்கு திருநீறு கொடுப்பான், இப்படியாக நின்று நின்று நடந்து நடந்து கோயிலுக்குச் செல்ல சுமார் 4 மணி நேரமாகும்,

கோயிலின் பெரிய தெருவைச் சுற்றி வந்ததும் கோயிலுக்குள் சென்று மூன்று சுற்று சுற்றிவிட்டு, காவடியில் இருந்து பால் குடத்தை எடுத்துக் கொண்டு சாமி சிலைக்க்கு முழுக்கு செய்யச் செல்வார்கள், கோயிலினுள் நிற்க இடம் இல்லாத படி எங்கும் கூட்டம், சாமியைப் பார்க்க நீண்ட வரிசை. ஆனாலும் அலகு குத்தி இருப்பதால் உடனடியாக உள்ளே அனுமதித்துவிடுவார்கள்,
முழுக்கும் வழிபாடும் முடிந்ததும் குத்திய அலகுகளை ஒவ்வென்றாக கழட்டி விட்டு, முழுக்கில் வழியும் போது பிடித்த பாலை அனைவருக்கும் திருவமுதாக(பிரசாதம்) கொடுக்கப்படும், பிறகு வீட்டுக்குத் திரும்பிவிடுவோம்.

***




அலகு குத்தி காவடி எடுப்பதில் எங்கள் வீட்டில் யாருக்கும் உடன்பாடு இல்லை, ஆனால் அப்படி எடுத்துச் செல்வதைப் பார்க்க வரும் உறவினர்கள், 'உங்கள் அப்பாவை மீண்டும் பார்ப்பது போல் உள்ளது' என்று சொல்வதைக் கேட்க மனதுக்கு நிறைவாகவும், நெகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர முடிவதால்... எங்கள் அனைவருக்கும் அப்பாவின் நினைவை ஏற்படுத்தும் இந்த அலகு காவடியை தம்பி தொடர்வதை தடுக்கும் எண்ணம் ஏற்படுவதில்லை.


தொடரும்...

அடுத்த பகுதி எட்டுக்குடி முருகன் கோயில் சித்திரை திருவிழா

17 ஜூன், 2009

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1

எழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நடப்புகளை எழுதுவதும், அதை மட்டுமே விரும்பிப் படிப்பதும் எனக்கும் பலருக்கும் விரும்பமான ஒன்று என்பதால் பொதுவானவற்றை எழுதுவதற்கு சற்று சுனக்கம் தான். யார் இதெல்லாம் கேட்டது ? இனி இடுகைக்கு போவோம்.

***

மார்கழிப் பனியை விரட்டி அலுப்பு நீங்கி சுறுசுறுப்பாக அதிகாலை எழும் பழக்கம் ஏற்படுத்த தமிழகத்தின் மார்கழிக் அதிகாலைகள் கோயில் பாட்டுக்களால் புலரும், அழகான வண்ணங் கோலங்கள் இட்டு அதன் மையத்தில் சாணத்தில் பரங்கிப் பூக்களை வைத்து, தெருவையே பளப்பளப்பாகவும், மணமாகவும் வைத்திருப்பார்கள். அது போல் சித்திரை கத்திரி வையிலில் இருந்து மீட்டுக் கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் குறிப்பாக சித்திரா பவுர்ணமி எனப்படும் முழுநிலா நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். எங்கள் ஊரிலும், அதைச் சுற்றியுள்ள முருகன் கோவில்கள், அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடப்பது உண்டு. நாகை காயரோகனம் சுவாமி - நீலாயதாட்சி அம்மன் கோவிலில் முன்பு ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும், இப்பொழுதெல்லாம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுவதில்லை நாகப்பட்டினத்தைப் (நாகை) பொறுத்த அளவில் மிகப் பெரிய சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள் இருந்தாலும் நாகை நெல்லுகடை மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை திங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை திருவிழா நடைபெறும். திருவிழாவில் அன்பர்கள் (பக்தர்கள்) வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். வேண்டுதல்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என்றால் வேப்பில்லைக் காவடி, மலர் அலங்கார காவடி எடுத்தல், குழந்தைகளை செடில் என்னும் கழுமரத்தில் ஏறி சுற்றிவருதல், பெண்கள் தனிப்பட்ட வேண்டுதல்களாக மாவிளக்கு ஏற்றுதல் ஆகியவை ஆகும்.

திருவிழாவுக்கு 10 நாட்களுக்கு முன் முறைப்படி கொடி ஏற்றப்படும், திருவிழாவுக்கு முதல் நாள் இரவே கோவில் வெளிச் சுற்றுகள் (பிரகாரம்) கடைகளால் களைகட்டிவிடும், பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டு கோவிலுக்குச் செல்லும் அன்பர்கள் மட்டுமே கோயிலை நோக்கிய சாலைகளில் அனுமதிக்கப் படுவர். திருவிழாவுக்கு முதல் நாள் மாலை விழாவின் தொடக்கச் சிறப்பு நிகழ்வாக (உற்சவம்) சிங்க வாகனத்தில் பணிப்பெண்ணுடன் காளி உருவ மாரியம்மன் புறப்பாடு, நடை பெறும்.

அந்த புறப்பாடு பெரிய தெருக்களை (இராச வீதி) சுற்றி வந்ததும், கைலாச வாகனத்தில் மீண்டும் உலாவரும். கைலாசா வாகனப் புறப்பாட்டிற்கு எல்லா ஏற்பாடுகளையும் எங்க அப்பா காலத்தில் இருந்து எங்கள் இல்லத்தினர் செய்து வருவது வழக்கம், அந்த நிகழ்வில் எங்கள் இல்லத்தினர் அனைவரும் கலந்து கொள்வோம்,

மறுநாள் என் தம்பி காவடி எடுக்கும் நிகழ்வு இருப்பதால் கைலாச வாகனம் புறப்படும் முன் காத்தவராயன் பூசை நடைபெறும், காத்தவராயன் காவல் தெய்வ வகையைச் சேர்ந்தவர் என்பதால் சுருட்டு, சாராயம், ரொட்டித் துண்டு இவற்றையெல்லாம் பூசையில் வைப்பது வழக்கம். காத்தவராயன் பூசை ஒரு 10 - 15 நிமிடத்தில் முடிந்துவிடும்,

அதன் பிறகு கைலாச வாகனம் கிளம்ப மணி இரவு 11க்கு மேல் ஆகிவிடும். அப்போதே கோயிலில் அன்பர்கள் கூட்டம் மிகுதியாகி இருக்கும், பகலில் வேண்டுதல்களை நிறைவேற்றுவதைவிட இரவில் வந்து செல்வதால் கூட்டம் குறைவு என்று பலரும் கோயிலுக்கு வரத் தொடங்கி இருப்பார்கள். கையில் வேப்பில்லையுடன் கோயில் உட்சுற்றில் உருளுதல் (அங்கபிரதட்சனம்), மண்டியிட்டு வணங்கி வணங்கிச் செல்லுதல் (கும்பிடு தண்டம் என்பார்கள்) ஆகியவை நடக்கத் தொடங்கிவிடும். வேண்டுதல் நிறைவேற்றும் அன்பர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிந்து, ஆடையுடன் குளித்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்வார்கள்.

அன்பர்கள் கூட்டம் கூடக் கூட கோயிலின் உற்சுற்று வேப்பில்லைகளுடன் சொத சொதவென்று ஈரம் கூட தொடங்கும், உருளுபவர்களுக்கு பக்கத் துணையாக அவர்களின் உறவினர்கள் திருப்பங்களில் உடலை திருப்பிவிட உதவி செய்வார்கள்.


பாடைக் காவடி எனப்படும் வேண்டுதல்கள் உண்டு. பாடைக் காவடி எடுப்பவர்கள் பச்சை பனை ஓலை மட்டையில் பிணம் போல் வாயைக் கட்டிக் கொண்டு கண்ணை மூடிப் படுத்துக் கொள்ள அவர்களது உறவினர்கள் அந்த ஓலையிடன் சேர்த்து வேண்டுதல் அன்பர்களை கோயில் சுற்றைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி வேண்டுதல்களை முடித்துக் கொள்வார்கள்,

முன்பெல்லாம் தொலைவில் இருந்தே பிணம் எடுத்துவருவது போல் பிண ஊர்த்தி செய்து அதில் வேண்டுதல் அன்பரை வைத்து மேளத்துடன் கோயிலுக்கு வருவதுண்டு. காலப் போக்கில் அவை பிற்போக்கான எண்ணமும் அருவெறுப்பானதால் கோயிலுனுள் சிறிய அளவில் பாடை காவடி எடுப்பதுடன் சரி.

பெண்களின் வேண்டுதல்கள் என மாவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெறும், பச்சை அரிசியை ஊரவைத்து நன்றாக இடித்துவிட்டு, அல்லது கல் இயந்திரத்தில் அரைத்து மாவை ஆயத்தம் செய்து ஒரு சிரிய எவர்சில்வர் சட்டியில் வைத்து வெள்ளை அல்லது மஞ்சள் துணியால் சுற்றி கோவிலுக்கு எடுத்துவருவார்கள்.

அங்கே கோவில் சுற்றில் அமர்ந்து பொடித்த வெல்லம் சேர்த்து தேங்காய் நீர் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கையளவு மூன்று அல்லது ஐந்து அல்லது ஒரே பெரிய உருண்டையாக பிடித்து, மாவு உருண்டையின் மேல் பகுதியில் சிறிய பள்ளம் ஏற்படுத்து அதில் நெய்யை இட்டு, திரி சேர்த்து விளக்கு ஏற்றுவார்கள், பிறகு அதற்கு தேங்காய் உடைத்து, வாழைப்பழத்துடன் கற்பூரம் காட்டி, வணங்கிவிட்டு கோயிலைச் சுற்றி வருவார்கள்.

கோயிலின் கொடி மரத்தருகே பூசாரி இருப்பார், அவர் அனைவருக்கும் திருநீறு கொடுப்பார், அத்துடன் கோயிலுனுள் நுழைந்து அம்மனை வணங்கிவிட்டு வீட்டுக்கு திரும்புவார்கள். மாவிளக்கு மாவு தேங்காய் துண்டங்களுடன் சேர்த்து உண்ண, அதில் நெய் மணம் சேர்ந்திருப்பதாலும் தனிச் சுவையாக இருக்கும், முன்பெல்லாம் ஒரு உருண்டையை முழுதாக உண்ணுவேன், இப்பொழுதெல்லாம் சுவைக்காக சிறுது திண்பதுடன் சரி. அந்த மாவிளக்கு உருண்டை மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கைலாச வாகனம் சுற்றி வந்ததும் கோயில் தேர் புறப்பாடு நடைபெறும், கோயிலின் சுற்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு தெருக்களை சுற்றிவருவதாக இருக்கும்.

தேர் புறப்ட்டதும் வீட்டுக்குச் சென்று மறுநாள் காவடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை ஆயத்தம் செய்துவிட்டு உறங்கப் போக பின்னிரவு மணி இரண்டு ஆகி இருக்கும்.

கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதால் தனிப்பட்ட பயணமாக சென்ற மே மாதம் சென்றுவந்தேன். மறுநாள் காவடி ... ஒரே அளப்பரை தான் !

தொடரும்...

(மேலும் பலர் படிக்க...பிடித்து இருந்தால் வாக்களியுங்கள், )

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்