பின்பற்றுபவர்கள்

நாட்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஆகஸ்ட், 2011

அண்மைய நாட் குறிப்புகள் !

சென்ற ஞாயிறு (07 - 14 ஆகஸ்ட்) முதல் நேற்றைய ஞாயிறு வரை தமிழகத்தில் இருந்தேன், மிக மிக தனிப்பட்ட பயணம் என்பதால் நண்பர்கள் யாருக்கும் முன்கூட்டித் தகவல் அளிக்கவில்லை, யாரையும் சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. எதிர்பாராமால ஏற்பட்ட சந்திப்புகளில் என்னுடன் முன்பு வேலைப்பார்த்தவர்கள், படித்தவர்கள் என 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு விட்டு இருந்தவர்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினேன்.

நாம பார்த்து 10 ஆண்டு ஆச்சு, நாம பார்த்து 23 ஆண்டுகள் ஆயிற்று என்று அவர்கள் குறிப்பிடும் முன்பே அவர்களுடைய தோற்றங்கள் அது உண்மை தான் என்றது. பேச்சிலர்களாக இருந்தவர்களுக்கு மகனோ மகளோ படித்துக் கொண்டிருந்தார்கள், சைக்கிள் வைத்திருந்தவர்கள் மோட்டார் வாகனங்களுக்கும், பைக் வைத்திருந்தவர்கள் கார்களுக்கும் மாறி இருந்தார்கள், வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள், வங்கிக் கடன்களையெல்லாம் மீறி சொந்தவீட்டில் இருக்கும் அவர்களது முகத்தில் தெளிவு இருந்தது, பேச்சிலர் வாழ்கை , இல்ல வாழ்க்கையென மாறி இருந்தாலும் வரட்டு வேதந்தமாக அப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக யாரும் குறிப்பிடத் தவறவில்லை. இவர்களில் தற்போது 38 முதல் 48 வயதினரும் அடக்கம், சிலருக்கு முன் தலை வழுக்கையும், சிலரது மிகவும் கருமையான தலைமுடி அது 'டை' என்றே சொல்லியது. நான் 'டை' அடிப்பதில்லை என்றாலும் சொன்னால் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. தலைமுடி தனிமனித தோற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டேன்.

என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்தவர்களில் ஐவரை ஒன்றாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஒருவர் சிங்கப்பூரில் குடிமகனாகவும் மற்ற ஒருவர் வளைகுடாவில் தற்காலிகப் பணியிலும் இருப்பவர், மற்ற மூவரில் ஒருவர் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர், இன்னொருவர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும் நகரினுள் குடிபெயர்ந்து படகு கட்டித்தந்து பெரும் பொருளீட்டி வருகிறார், மற்றொருவர் பத்தாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை தொடர பொருளியல் வசதி இன்மையால் கட்டிட நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் கம்பி கட்டி வேலை பார்த்துவருகிறார், இவர்களில் ஒருவரை அவ்வப்போதும் மற்றவர்களில் சிலரை எப்போதாவது வாய்பில் சந்திப்பதும், கட்டிட வேலை பார்த்து வருபவரை 23 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்க நேரிட்டது, அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பெயர் சொல்லி அழைத்தார், எனக்கு அவரை அடையாளம் தெரிந்தாலும் பெயரை நினைவு கூறத் திணறினேன், பின்னர் அவரே தெளிவு படுத்தினார், இது ஒருவகையான மூளைச் சிக்கல், பெயரும் உருவமும் மூளையில் தனித்தனியாக சேமிக்கப்படுமாம், நாட்கள் கடந்துவிட்டால் ஒன்று சேர்ந்து சட்டென நினைவுக்கு வராது, சிறிது நினைவூட்டல் தேவை என்று எங்கோ படித்தது அறிவியல் / உயிரியல் உண்மை ஒன்றை தெளிவு படுத்தியது. இரவு 7 மணிக்கு பிறகு நாகை கடற்கரையில் அமர்ந்தும்,





(நண்பர்கள் இரவி, ஆறுமுகம், சக்திவேல், இராமனாதன் (எ) இராமு மற்றும் நான்)


பின்னர் பேருந்து நிலையத்திலும் பேசிக் கொண்டிருந்தோம், அவர்களிடையே இயல்பாகவே 'நீ வா.....போ' தொடர்ந்தது, எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம்மைப் எப்போது பார்த்தாலும் மகிழ்பவர்கள் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியும். ஓரிரு நாட்கள் மட்டுமே தங்கி இருந்ததால் அவர்களின் இல்லம் வரையிலெல்லாம் சென்று வர இயல வில்லை. 10 ஆம் வகுப்பில் படித்த பலரை மற்றும் வகுப்பாசிரியர்கள் பலரை நினைவு கூர்ந்தார்கள். இரை தேடிய பறவைகளாக அவர்களெல்லாம் எங்கெங்கோ இருப்பதாக அறிய நேரிட்டது. எங்களுடைய ஆசிரியர்கள் அனைவருமே பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்றும் தெரிந்தது. காலம் நம்மை கடந்து வேகமாக செல்வது நமக்கு தண்டனையா ? நல் மகிழ்ச்சியா ? அவையெல்லாம் தற்போதைய நிலையைப் பொருத்ததே. நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகள், சொந்த வீடு பிற வசதிகள் என்பது காலம் நமக்கு கொடுத்த நற்கொடையாகத் தானே கொள்ள முடியும்.

அதற்கு முன்பே சென்ற ஞாயிற்றில் சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் வேலைப் பார்த்தவர்களில் இருவரை சந்தித்தேன். நேற்று அலுவலகத்தில் எப்படிப் பேசிக் கொண்டு இருந்தார்களோ அதே போல் தான் இன்றும் பேசுகிறார்கள் என்று நினைக்க வைத்தது, அவர்களுடைய இன்றைய குடும்ப பொறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் 14 ஆண்டுகள் கடந்தது கூட நேற்று என்ற அளவில் தான் அவர்களிடையே இருந்தது. 'தண்ணி அடிக்காதவன், தம் அடிக்காதவன் நீ, உனக்கு என்ன குடும்பத்தில் பெரிய பிரச்சனை இருக்கப் போகிறது, தங்கம் தங்கம்னு தாங்குவாங்களே மனைவி' ன்னு நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

(நண்பர்கள் திருச்செல்வன் மற்றும் தமிழ்செல்வன்)

'குடும்பத்தில் தாங்குறாங்களா இல்லையாங்கிறதெல்லாம் வேற விசயம், ஆனா தண்ணி அடிக்காதவன், தம் அடிக்காதவன் நல்லவனாக இருப்பான் என்று யார் சொன்னது, தண்ணி அடிக்கமாட்டேன், தம் அடிக்கமாட்டேன், ஆனா நல்லவன் என்று நினைக்க ஒன்றும் இல்லை, தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிய உதவிகளெல்லாம் செய்வதில்லை, எதை வச்சு என்னை நல்லவன் என்று சொல்கிறீர்கள் ?' என்றார் நண்பர் தமிழ்செல்வன். பொதுப்புத்தி பற்றி பாடம் படித்த நமக்கு அவர் சொன்னது 'பொளேர் என்று அறைபட்ட உணர்வை ஏற்படுத்தியது ?' நாம தனிமனித ஒழுக்கத்தை குடி, பீடி களில் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறோம். அதை தொடர்பவர்களில் நல்லவர்களும் உண்டு அதைத் தொடராதவர்கள், தொடாதவர்களை ஒழுக்கமானவர்களின் சான்றிதழகாகவும் கொள்ளத் தேவை இல்லை, இவை முதலில் உடல் நலத்தையும் பிறகு குடும்ப நலத்தையும் சார்ந்து பிறகு மிதமிஞ்சிப் போனால் மட்டுமே ஒழுங்கீனத்திற்குள் வரும் என்று அவர் சொல்லியதில் இருந்து அறிந்து கொண்டேன்.





(நண்பர் ஜெ.கண்ணன் மற்றும் அவருடன் சுரபி - Surabi நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்)

நேற்றைக்கு முந்தைய நாள், நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை வர்தக மையம் (சென்னை டிரேட் செண்டர்) நண்பர் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன், அவரும் அங்கு காட்சிக் கடை (ஸ்டால்) வைத்திருந்தார். சென்னை பல துறைகளில் நன்கு வளர்ந்துள்ளது, சர்வதேசத் தரத்துடன் காட்சிக் கூடம் அமைந்திருந்தது, கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கி இருந்தது, மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய காட்சிகள் என்பதால் பல்வேறு நிறுவனங்கள் ஏறத்தாழ 200 ஸ்டால்கள் வரை அமைத்திருந்தார்கள்.





மிகவும் புதிய (அதி நவீன) உத்திகளில் அமைந்த மின்னனு சாதனங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள், நான் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களில் ஒன்று மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்வது, அதில் எனக்கு உயர் மேலாளராக பணி புரிந்தவர் பின்னர் தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பில் இல்லை. எனது நண்பரிடம் குறிப்பிட்டு கேட்டேன் 'எங்க சார் ஸ்டால் போட்டிருக்கிறாரா ?' நண்பரும் அதே துறை சார்ந்தவர் என்பதால் அவர் உடனேயே சொன்னார். 'அவரை நன்கு தெரியும் ஸ்டால் எண் இது' என்றார். உடனேயே சென்று பார்த்தேன். 'வாங்க கண்ணன்...' என்று உற்சாகமாக அழைத்து சிறிது நேரம் பேசி பின்னர் அவருடைய அலுவகலத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி 'ஹி ஈஸ் மிஸ்டர் கண்ணன், வெர்ரி ஹார்ட் ஒர்கிங்க் பர்சன்' (அதெல்லாம் அந்த காலம் சார், இப்போதெல்லாம் வேலை பார்ப்பதே இல்லை.......என்று சொல்ல நினைத்தேன்), கிளம்பும் முன் இனிப்புகளை கொடுத்தார் வாங்கி வந்தேன்.






(எனது முன்னாள் மேலாளர் திரு எல் நாரயணன் மற்றும் அவரது சிலிகான் லேப்ஸ் காட்சி)


நான் இதுவரை 9 நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன், அதில் ஓராண்டுக்கு கீழ் மற்றும் மிகுதியாக 3 ஆண்டுகள் வரை வேலை பார்த்த நிறுவனங்கள் உண்டு, அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களில் பலர் இன்றும் அன்போடுதான் பழகுகிறார்கள், நம் நிறுவனத்தை விட்டுச் சென்றவன் என்று நினைப்பது கிடையாது. இதில் சிங்கப்பூர் சீன நிறுவன உரிமையாளர்களும் கூட உண்டு. ஊதியத்திற்கான வேலை செய்வதைத் தாண்டி ஏதோ கொஞ்சமேனும் அவர்களை நாம் நினைவு கூற வைக்கும் படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்க எனக்கும் என் நடவடிக்கைகள் பெருமையைத் தருகின்றன.

நேற்றைய முந்தைய நாள் சனிக்கிழமை, பதிவர்களில் பதிவர் என்பதைத் தாண்டி தவிர்க்க முடியாதவர்களில் ஒருவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன், அவர் வேறு யாரும் இல்லை, நம்ம 'தமிழா தமிழா' டிவி இராதாகிருஷ்ணன் ஐயா தான். அவரது மனைவி காஞ்சனா அம்மாவும்வீட்டில் இருந்தார்கள், ஒருவேளை அவர்கள் இருவரையும் பார்க்காமல் திரும்பி இருந்தால் மிகவும் ஏமாற்றமாக அமைந்திருக்கும், குறிப்பாக டிவிஆர் ஐயா எனது அழைப்புக்காக காத்திருந்ததாகச் சொன்னார். நான் குறிப்பிட்ட நேரத்தில் வருவதாகச் சொல்லி இருந்தேன், மேல் தள வராண்டாவில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார், கிளம்பும் போதும் அப்படியே. என்ன ஒரு பந்தம் ? நினைத்தாலும் பிடிபடவில்லை. உணர்வுகளால் உள்ளத்தில் நுழைந்தவர்கள் எப்போதும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நண்பர் என்று சொல்லிக் கொள்ள ஆண்டுக்கணக்கில் அவரிடம் பழகி இருக்கவும் இல்லை, உறவுக்காரரும் இல்லை, இருந்தாலும் இவரைப் பார்க்க ஏதோ ஒரு ஈர்ப்பு தூண்டிக் கொண்டு தான் இருக்கிறது. நட்பு, உறவு இவற்றையெல்லாம் தாண்டி, நாம்/நம்மை விரும்புவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். அவற்றை என்னவென்று சொல்ல ? நம்பிக்கைகளைத் தாண்டிய 'முற்பிறவி தொடர்போ ?' இருக்கலாம். :)

அடுத்த பதிவில் நண்பர்கள் அல்லாத பிற தகவல்கள் எழுதுகிறேன்

3 ஜனவரி, 2011

காலம் மலையேறிவிட்டது !

மாறவே மாறாது என்று நினைத்தவை முற்றிலும் மாறிப் போய் இருப்பதைத்தான் காலம் மலை ஏறிவிட்டதாகச் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் மலை ஏறுவது என்பது அத்தனை கடினமான செயலாக இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் மலை ஏறுதல் மிக எளிதானது, எத்தகைய செங்குத்தான வழியே இல்லாத மலை என்றாலும் உச்சிக்கு ஹெலிக்காப்டரில் சென்று கயிறு கட்டி இறங்கி விட முடியும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மலை ஏற்றம் அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை. கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் திரும்பினார்கள் என்று தெரியாது. தென்னிந்தியர்களுக்கு பழக்கப்படாத கடுங்குளிர், பனி கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் மீண்டு இருப்பார்கள் ? அப்படியும் சென்று திரும்பியவர்கள் உள்ளனர், முடியாது என்று நினைத்தவை அதனை உடைத்துக் காட்டுவதை மலையேற்றத்துடன் தொடர்புபடுத்திப் பேச மலையேற்றம் மிகக் கடினமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் சாமானியர்களால் சாதிக்கப்பட்டுள்ளது என்பதனைச் சொல்ல மலையேறிவிட்டது என்கிற உவமையாக மலையேறிவிட்ட பழமொழி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த காலத்தில் இருக்கிங்க, நீங்க நினைப்பது எல்லாம் எப்போதே மலையேறிவிட்டது, மாற்றம் என்கிற ஒன்றைத் தவிர அனைத்தும் மாறக் கூடியது என்பதை இப்படியெல்லாம் கூடச் சொல்லி வைத்துள்ளார்கள்


ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது தான் அந்த ஆண்டு விரைவாகச் சென்றதாக நினைக்கிறோம். மற்றபடி எந்த ஒரு ஆண்டும் முன்னை விட விரைவாகச் சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை. கடந்தவை நினைவு என்பதாக சேமிக்கப்படுவதால் அதன் சுருக்கத்தை மட்டும் தான் நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். ஒராண்டுகளில் நடந்த நல்லது கெடுதல்களில் எவையெல்லாம் நமக்கு முதன்மையாகப் பட்டதோ அது மட்டுமே நினைவில் நிற்கும், அவற்றை நொடிகளில் நினைத்துப் பார்க்க முடியும். அதனால் தான் பின்னோக்கிய காலம் வெகு விரைவாக கடந்து சென்றதாக உணர்கிறோம். மற்றபடி சென்ற ஆண்டின் நாட்களைப் போன்று தான் இந்த ஆண்டின் (ஆங்கில) புத்தாண்டு பிறப்பும் வெகுவிரைவாக கரைந்தது. திருமணம் உறுதிப்பட்டோர்களுக்கு திருமண நாள் வரை வரப்போகும் காலம் மெதுவானது தான். உதவியாளர் தேதிப்படி செயல்படும் தொழில் நடத்துவோர்க்கு எந்த ஆண்டுமே (தனிப்பட்ட) நேரம் என்பதே இருக்காது. (சார் இன்னிக்கு உங்க ப்ரோக்ராம்...... இரவு 8 மணிக்கு பார்க் ஷர்டனில் உங்கள் மனைவி, குழந்தைகளோடு உங்களுக்கு டின்னர்), அன்றாடம் ஒன்று போல் வேலை செய்பவர்களுக்கு, (தன்னுடைய வயது, மனைவி வயது குழந்தைகளின் வயது என்பது தவிர்த்து) புத்தாண்டு என்ன மாற்றம் கொண்டுவரும் ? பொதுவாக நம் வாழ்க்கை முறையில் ஓர் ஆண்டுகான நிகழ்வுகள் இவை என்பதாகத் தான் பெரும்பாலோனர்களின் ஆண்டுகள் ஓடிப் போய்விடுகின்றன. பருவ சுழற்சி இல்லை என்றால் ஆண்டுகள் பற்றிய கணக்கே நாட்களின் தொகுப்பை அறிவிக்கும் ஒரு அளவீடு என்ற அளவில் தான் இருக்கும்.

நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது, வள்ளுவர் வாக்கின் படி ஒவ்வொரு நாளும் செல்லும் போது நம் வாழ்நாளின் ஒரு நாளும் கூடவே செல்கிறது, புதிதாக ஒரு ஆண்டில் நம் வாழ்நாளில் ஒரு ஆண்டு எண்ணிக்கையும் சேர்ந்தே செல்கிறது, இது பற்றி எண்ணம் சிறிதும் இன்றி புத்தாண்டுகளைக் கொண்டாடத்தான் செய்கிறோம். மலையேறுவது அவ்வளவு எளிதல்ல, அப்படி ஏறினாலும் எதுவும் திரும்பாத காலத்தில் காலம் மலையேறி விட்டது என்பதை உவமையாகக் சொன்னார்கள், அப்படித்தான் 2010 மலையேறிப் போய்விட்டது. 2010 மட்டுமல்ல 2009ம் எனக்கு இனிமையான ஆண்டாகவும் பல நல்வரவுகளை பெற்றுத் தந்த ஆண்டாகவும் இருந்தது, வரும் ஆண்டுகள் இந்த அளவுக்குச் சிறப்பாக இல்லாவிட்டாலும் கிடைத்தவை செழிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து புத்தாண்டில் வேறெதையும் நினைக்க வில்லை.

பிறந்த ஊருக்குச் சென்ற போது நான் சிறுவயதில் பார்த்த போது இளமை துடிப்புடன் வீறு நடை போட்டவர்கள், முதிய தோற்றத்தில் இருக்கிறார்கள். நண்பர்களின் தலையிலும் சிலரின் மீசையிலும் கரு...கரு..மை. மனித தோற்றத்தை ஜீன்களின் படி நிலை முடிவு செய்கின்றன.வாரிசுகளின் நிகழ்கால நிழலில் இளைப்பாறுவதால் நமது நிகழ்காலம் கண்டுகொள்ளப்படாமலேயே கடந்து செல்லுகிறது. கால சுழற்சியும் முதுமையும் மரணமும் இல்லை என்றால் புது உலகம் என்று எதையும் சொல்ல முடியாது, ஒவ்வொரு இழப்பிலும் உலகம் புதுப்பிக்கப்படுகிறது. காலம் மலையேறி முடித்துவிடவில்லை, மலையேறுதலில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்