பின்பற்றுபவர்கள்

பூனையார் தத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூனையார் தத்துவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 செப்டம்பர், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 7 !


பூனையாரை கண்டு கொண்டு மாதங்கள் கடந்துவிட்டன, பூனையார் அமைதியானவர் கோபப்படமாட்டார் என்று அலட்சியம் செய்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன், பூனையாரின் பரம விசிறிகள் பூனையாரின் தத்துவ மொழிகளைக் கேட்காமல் எங்களுக்கு வாழ்க்கை வரண்டுவிட்டது என்று கதறிக் கதறி என்னிடம் கேட்டதால், பூனையாரை நினைத்து கண்ணை மூடி அமர்ந்தேன், சில நிமிடங்களில் பூனையார் கண் முன் தோன்றினார்.

'அன்பரே என்ன வரம் வேண்டும், எதற்கான என்னை நினைத்தாய்' என்று அமைதியே வடிவாகக் கேட்டார்.

'எகிப்திய தெய்வமே ஏகாதிபத்திய இறைவா, தங்களை இதுகாறும் நினைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்' என்றேன்.

'நீ என்னை நினைப்பதாலோ, நினைக்காமல் இருப்பதாலோ எனக்கு நட்டம் எதுவுமில்லை எனவே மன்னிக்க ஒன்றும் இல்லை அன்பரே' என்றார் பூனையார்

'பூனையாரே எனக்கு சில ஐயங்களை அதனை கேட்டுத் தெளிவுறலாம் என்றே தாங்களை நினைத்தேன், மேலும் பூனையார் பக்தர்களுக்கும் அதே ஐயங்கள் இருக்கின்றன' பூனையாரை கூர்ந்து நோக்கிக் கூச்சத்துடன் கேட்டேன்

'நீ எதற்கு கூச்சப்படுகிறாய், என்னிடம் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் கூச்சங்கள் தேவையற்றது எதுவேண்டுமானாலும் தயங்காமல் கேள்' என்றார்

'பூனையாரே... மேதகு கடவுளே தாங்கள் தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி நமது மார்க்கத்திற்கு மார்க்க நூலாக ஆக்கலாம் என்று பக்தர்கள் எல்லோரும் முடிவு செய்துள்ளோம், அதற்கு தங்கள் அனுமதி வேண்டி.....'என்று நோக்க,,,,,,,,பூனையார் சங்கடத்தால் நெளிந்தார், கோபம் வருவது போல் இருந்தது......ஆனால் அமைதியாக என்னை உற்று நோக்கினார், நான் நடுங்கியபடி

'நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உலக மதங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை தானே ?' என்றேன்

'அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், ஆனால் அது பல எதிர்கால சிக்கல்களை ஏற்படுத்தும்....'

'எதிர்காலத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாக்கி வைப்பது நமது மார்க்கத்திற்கு நல்லதல்லவா ?'

'இப்ப பிரச்சனையே மத நூல்கள் தான் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறாயே மானிடா ?'

'நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் நடைமுறைகளை மாற்றுவது நமக்கும் நல்லது இல்லையே ?'

'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....'

சொல்லுங்கள் சொல்லுங்கள்

'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.

'இந்த மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது மன்னியுங்கள் பூனையாரே,,,,,,,'என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன், அதான் பூனையாருக்கு மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் வழக்கமில்லையே.

'பூனையாரே இன்னொரு ஐயம்.......'

'சும்மா கேளு கேளு 'என்றார்

நமது மார்க்கத்திலேயே பிரிவுகள் தோன்றிவிட்டதாக வெளியுலகில் பேசிக் கொள்கிறார்களே

'உண்மை தான், நான் எகிப்தியர்களுக்கு சொன்ன சில வாக்கியங்கள் தத்துவங்களை மட்டுமே எடுத்து வைத்துக் கொன்டு சிலர் பிரிவாக ஆகிவிட்டனர்..,'

'யார் அவர்கள் ?'

'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........'

'என்ன பூனையாரே என்னென்னவோ புரியாதபடி சொல்கிறீர்கள்'

இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை,  தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...

'வேண்டாம்,,,,,,,,,வரகாப்பி இயக்கத்தினரின் பெயர் காரணம் பற்றிய தகவலே தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அதற்கு மேல் கேட்டால் எனக்கு இரத்த அழுத்தமே கூடிவிடும்.....நீங்கள் மலையேரலாம்' என்று கூறி கண்ணை மூடித் திறந்தேன்

பூனையாரை பிறகு காண முடியவில்லை

5 ஜூலை, 2012

'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் !


பூனையார் மதம் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பீர்கள், பூனையார் மதத்தின் அதிகாரபூர்வ தலைமை பூசாரி நான் தான், இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க, தமிழ் கூறும் நல்லுலகிற்கு பூனையாரை அறிமுகம் செய்தவன் என்கிற முறையில் 'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் மதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளது என்பதை எல்லா மதவாதிகளுக்கும் முன்பாக எடுத்துக் கூறுவதில் பெருமை அடைகிறேன், மத்த மதவாதிகள் 'ஹிக்ஸ் போஸானை' சொந்தக் கொண்டாடினால் செல்லாது, காப்பிக் கேட் என்று தூற்றப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன ? அணுக்களுக்கு எடை தரும் ஒரு துகள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்,  இதன் மூலம் போட்டான்(ஒளித் துகள்) தவிர்த்த அணுத்துகள் வடிவமும் எடையும் கொண்டிருப்பதற்கு ஹிக்ஸ் போஸானே காரணம் என்கிறார்கள், அணுக்கருவில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்குக் ஹிக்ஸ் போஸான் மூலம் கிடைக்கும் எடை ஆகியவற்றின் மூலம் தான் உலகில் உள்ள அண்டங்கள் முதல் அனைத்தும் எடைகளை பெருகின்றன. இதைப் பற்றி பூனையார் மார்க்கத்தில் ஏதேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க, பூனையாரை நாடினேன், பூனையார் ஒரே போடாக போட்டார்.

"உலகில் உள்ளது அனைத்தையும் படைத்தது பூனையார்" என்று சொல்லிய பூனையார், அனைத்தும் என்றால் அதில் ஹிக்ஸ் போஸானும் தானே உள்ளது, இதை ஏன் உறுதி செய்யும் மனப்பான்மையுடன் மடத்தனமான கேள்வி எழுப்பினாய் என்று கேட்க. 'அட ஆமாம்லே' என்று வியப்படைந்தேன்.

மேலும் பூனையார், "சிக்ஸ் பேக்குக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் உள்ள தொடர்ப்பு தெரியுமா ?" என்று கேட்டார். "அதிகமாக அதிகமாக உடற்பயிற்சி செய்ய உடலின் அணுத்துகள்கள் இறுக சிக்ஸ் பேக் கிடைக்கிறது, உடற்பயிற்சியின் ஆற்றலின் போது உண்டாகும் ஹிக்ஸ் போஸானின் சக்தி சிக்ஸ் பேக்காக மாறுகிறது" என்றார்

ஹிக்ஸ் போஸான் மற்றும் பூனையார் கடவுளுக்குமான தொடர்பின் இணைப்புகள்.


ஹிக்ஸ் போஸான் பற்றி வேறென்ன சொல்கிறீர்கள் பூனையாரே ?

நான் என்னத்தச் சொல்வது, வைரமுத்து முதல் கார்கி வரை 'ஹிக்ஸ் போஸானை' திரைப்பட பாடல் வரிகளாக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள், உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டமா ?

"என் இதயத்தில் மையம் கொண்டு வெடித்த பெருவெடிப்பு நீ தானோ ?"
"என் இமைகளுக்கு எடை தந்த ஹிக்ஸ் போஸான் நீ தானோ நீ தானோ"

- கவிஞர் கரடி வாயன்

"என் மனதில் உன் அழுத்தம் எப்பொழுது வெடிக்குமோ பெருவெடிப்பாக"
"உன் இல்லாத இடைக்கு எடையாக நான் இருப்பேன் ஹிக்ஸ் போஸானாக"

- கவிஞர் சொந்த குமார்

"என் காதல் போஸாக்கே"
"உன் மோதல் போஸானே"

- கவிஞர் குணேகன்


ஸ்ப்பா முடியல, அறிவியல் அவியல்களை தனதாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்கள் மதவாதிகளா ? கவிஞர்களான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.

எது எப்படியோ, ஹிக்ஸ் போஸான் பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பூனையார் சொல்லிவிட்டார், பூனையார் சொல்லிவிட்டார்...............பூனையார் சொல்லிவிட்டார்.


பின்குறிப்பு : 2 வாரமாக வலைப்பதிவு எழுதாமல் காத்துவாங்குது, காலாட்டிக் கொண்டு இருந்தால் தானே இருப்பு தெரியும், அதற்கு உதவிய பூனையாருக்கு நன்றி

5 ஏப்ரல், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 !


ரொம்பவும் வேலையாக இருந்ததால் சரியாத் தூங்கவில்லை, அப்பறம் எப்படி பூனையார் கனவில் வருவார்,  நேற்று கொஞ்சம் அசந்து தூங்கினேன், காத்திருந்தது போல் பூனையார் கனவில் வந்துவிட்டார், "உன்னைப் போல் பொறுப்பற்றவர்களால் தான் பூனையார் மதம் அழிந்தது" என்று கோபமாகக் கூறினார், ஏன் பூனையாரே என்றேன், "பின்னே தொடர்ந்து அதுபற்றி பேசிக் கொண்டு இருந்தால் தானே பூனையார் மார்க்கம் பரவும்" என்று எடுத்துக் கூறினார், தப்புதான், சரி இப்போ நிறைய அன்பர்கள் பூனையார் மார்க்கத்தில் இணைந்துள்ளனர், அவர்களுக்கும் தங்கள் நல்லருள் தந்து அவர்களுடைய கனவிலும் ஊடுறுவி பூனையார் மர்கம் பற்றி எழுத வையுங்களேன் என்று கூறினேன், பார்க்கலாம் என்றார்.

"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் " - இதுல ஒரு உலக வரலாறே அடங்கி இருக்கிறது என்றார் பூனையார், எப்படி பூனையாரே ஒரே வரியில் கமண்டலத்திற்கு காவேரியை அடக்கியது போல் சொல்கிறீர்கள், புரிய வில்லை என்றேன். இன்னிக்கு தேதிக்கு உலக மதங்களெல்லாம் மதயானை போல் மதவெறியுடன் அலைகின்றன, அவற்றிற்கான காலம் இது, மக்கள் விழிப்படைந்துள்ளதால் மதவாதிகள் கட்டுப்பட்டுள்ளனர், பூனையார் மார்க்கம் இனி பரவும் என்பதைத் தான் அது விளக்குகிறது என்று கூறி, மதங்கள் எப்படி உருவாகி ஒன்றை ஒன்று அழித்து வளர்ந்தன என்று பெரிய பிரசங்கம் கொடுத்தார், "ஓ இது தான் உலக வரலாறோ" என்று கேட்டுக் கொண்டேன்.

நம்ம பூனையார் மார்க்கத்தில் உலகம் உருண்டை என்று 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்று நான் எப்படி பிறரை நம்ம வைப்பது என்று கேட்டேன், உலக அறிவியல் அனைத்தும் பூனையாரின் புனுகு போன்று பூனையாரின் மார்க்கத்தில் இருந்து எடுத்த அமுத வாக்கியங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டவை, ஆய்வு செய்யப்படாத நிலையில் நிறைய அமுத வாக்குகள் உண்டு, அவற்றையெல்லாம் ஆய்ந்தால் உலகம் அறிவியல் உச்சம் அடைந்துவிடும் என்றார், அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் இப்ப பூமி உருண்டையாக இருந்தது பூனையார் மார்க்கத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டது என்று வாசிப்பவர்களுக்கு சொல்ல வேண்டும் அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் பூனையாரே என்று கேட்டேன். உனது ஆவலை மெச்சுகிறேன், பூனையார் மார்க்கத்தில் பூசைகள் துவங்க நாள் வந்துவிட்டது, இப்போது உலக உருண்டை பற்றி விளக்கம் சொல்கிறேன் கேள். என்று கூறி

"பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும்" என்கிற அமுத மொழி உனக்குத் தெரியும் தானே, என்று கேட்டார், நானும் ஆமாம் சாமி இது பற்றி தான் ஏற்கனவே விளக்கம் பிரபஞ்சத் தோற்றம் குறித்து எழுதிவிட்டோமே என்றேன், ஆம் உண்மை தான் ஆனாலும் அதன் தொடர்பில் இரண்டாவது அமுத மொழி உண்டு, அது மிகவும் ரகசியமானது வியப்பானது என்றார். சொல்லுங்களேன் என்றேன்

"பூனைக் கண்ணை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்" இப்போது படித்துப் பார் லோகம் கோளம் ஆகி இருக்கிறது, ஆம் என்றேன், கோளம் என்றால் என்ன ? என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் "உருண்டை" என்றார், இப்பொழுது புரிகிறதா ? பூகோளம் அதாவது பூமி உருண்டை வடிவம், இதை நான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன், அதைத்தான் இன்று தமிழ் சமூகத்திலும் கூட பழமொழியாக்கி வைத்து பூகோளம் இருண்டது என்கிறார்கள் சிலர் திரித்து பூலோகம் என்கிறார்கள். பூனையாரின் பூகோள விளக்கம் என்னை சிலிர்க்க வைத்தது"


இதோ பூனையாரின் பூதை மொழி,

"பூமியை உருண்டையாகவும், சந்திரன் சூரியனை (ஒளிதரும் உருண்டையாகவும்) நாமே படைத்தோம், நாம் (பூனையார்) கண்களை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்"(பூ.த.மொ 215)


பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !
பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !
பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

21 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 4 !

வழக்கம் போல் நேற்று கனவில் வந்த பூனையாருக்கு நான் சுண்டக் காய்ச்சி ஏலக்காய் போட்டப் பாலை எடுத்து வைத்தேன், 'பூனைச் சாமி நான் சைவம் என்கிட்ட மீன்களை எதிர்பார்க்காதே' என்று கூறிவிட்டேன், 'ஆன்றோர் சான்றோர் அன்பர்கள் அன்போடு எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், ஆனால் பூண்டு மட்டுமே ஆகாது' என்று குறிபிட்டார். 'பூனையாரே உங்கள் மார்க்கம் உண்மையானது தானா ? என்று பல்வேறு தரப்பினர் எப்போதும் என்னை கேட்டுவருகின்றனர்' என்றேன், 'பொய்களையும் திரித்தலையும் கேட்டுப் பழக்கப் பட்டவர்கள் ஐயுறுவது இயல்பு தானே' என்று சொல்லிவிட்டு, 'என் மார்க்கத்தினரடிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலை உனக்குச் சொல்லுகிறேன்' என்று கூறிவிட்டு கேள்வியும் பதிலுமாக அவரே சொன்னார்.

"பூனையார் உண்மையான கடவுளா ?"

"அதில் எங்களுக்கு ஐயம் என்பதே கிடையா ?"

"பூனை எப்படிக் கடவுளாகும் ?"

"எவ்வளவோ மக்கள் பூனையாரை விட்டுவிட்டு எதை எதையோ, சனிமூலை, தெற்கு வடக்கு , வடமேற்கு என்று திசைகளையெல்லாம் புனிதம் என்று வணங்குவதும், திசை வணங்கியாக இருப்பது எங்களுக்கும் கூட அருவெறுப்பாகத்தான் இருக்கிறது"

"ம் வேலிட் பாயிண்ட், உங்கள் வழிபாடு சாத்தானுக்கு செய்யும் வழிபாடு போன்றதன் வேற பெயரா ?"

"பூனையார் சாத்தான் அல்ல, பூனையார் வழிபாட்டினருக்கு மற்ற கடவுள்களும் சாத்தான் இல்லை, எங்களுக்கு எங்கள் வழி"

"நீங்கள் பூனையார் பெயரில் ஒரு சிலை வணங்கி தானே ?"

"பூனையாரின் உருவத்தை நாங்கள் வணங்குவதில்லை, உருவத்தினுள் இருக்கும் பூனையாரைத் தான் வணங்குகிறோம், ஓவியங்களின் உயிர் அது வரையப்படும் ஊடகத்தின் மீது, வண்ணத்தின் மீது இல்லை, பார்பவரின், வரைபவரின் கண்களில் தான் உள்ளது, பூனையாரின் சிலை எங்களுக்கு ஒரு ஊடகம் போன்றதே, பூனையாரின் கோவிலின் மேல் கூரையைப் பார்த்து தான் நாங்கள் வழிபடுவோம், பூனையார் சிலை இருக்குமிடம் எங்கள் வழிபாட்டிற்காக கூடும் இடம் மட்டுமே, கடவுள் பூனை வடிவானவர் என்பதை நாங்கள் நினைத்துக் கொள்ள அந்த சிலைகள், மற்றபடி பூனையார் வடிவ சிலையை நாங்கள் வணங்குவது கிடையாது, அலங்கரிப்பது மட்டுமே, எங்களைப் பொருத்த அளவில் சிலையை வணங்குவது தவறும் இல்லை, வணக்கம் செலுத்தப்படுவதற்கான நோக்கத்தைவிட மனத் தூய்மை மிக மிக அவசியமானது என்று நினைக்கிறோம், நீங்கள் ஒரு சிலை வணங்கியாக இல்லாமல் இருந்து உங்கள் மனம் குப்பையாக இருந்தால் உங்கள் வழிபாட்டினால் பயன் ஏதும் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் சரிதானே ?"

"உங்கள் பூனையார் மார்கததை நீங்கள் களைத்துவிட்டு அல்லாவையோ, ஏசுவையோ வழிபடுவதுதான் உங்களை சொர்க வாசலில் நுழையச் செய்வதற்கான வழி என்று தெரிந்துள்ளீர்களா ?"

"சுத்த பேத்தல், அவர்களை வழிபட்டவர்கள் சொர்கம் தான் சென்றார்கள், செல்லுவார்கள் என்பதற்கான ஆதரங்கள் இதுவரை எதுவும் இல்லாத போது அதுவும் வெறும் நம்பிக்கை தானே ?, பூனையாரை வழிபட்ட போது தங்கம், வைரம் என்று எகிப்து நகரமே செல்வசெழிப்பாக சொர்கமாகவே காணப்படது, பின்னர் படையெடுப்பளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, ஆராய்ச்சி என்ற பெயரில் எஞ்சி அனைத்தையும் தற்காலத்தில் கூட கொள்ளையடித்தே வருகின்றனர், எங்கள் பூனையார் மார்க்கத்தான் எங்களுக்கு சொர்கம், பூனையாரை வழிபட்டவர்கள் மண்ணுலகில் கூட சொர்கவாசியாகத்தான் இருந்தனர்"

"உங்கள் பூனையார் மார்க்கத்தின் தனித்துவம் என்ன ?"

"உலகில் தற்பொழுது கோலொச்சும் அனைத்து மதங்களுமே, ஒவ்வொரு வகையில் 'காபி கேட்' மதங்கள், அதாவது அவற்றிக்கு பொதுத் தன்மை உண்டு, தவிர அவை ஒன்றில் இருந்து ஒன்று காபி அடிக்கப்பட்டவையே, ஒரிஜினல் கேட் எங்கள் பூனையார் மார்க்கம் தான் இவற்றிற்கான மூலம் அல்லது துவக்கமே, புதிய மதங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள பூனையார் சிலைகளை அழித்துவிட்டனர், உலகின் முதல் மதம் என்று வரலாற்றில் பதிவு செய்திருப்பவையே எங்களது ஆதி மதம் பூனையார் மார்க்கமே"

"கடைசியாக, பூனைகள் பேசாது என்பது பொது உண்மை, பிறகு எப்படி உங்கள் கடவுள் பேசும் ?"

"உலகில் இன்றைக்கு இருக்கும் மதங்களின் கடவுள்கள் பேசும் என்பது நம்பிக்கை, ஆனால் எத்தனை பேரிடம் அது நேரிடையாகப் பேசியுள்ளது என்கிற பட்டியல் இருக்கிறதா ? இதுவரை யாரிடமும் பேசாத கடவுள் பேசக் கூடியது என்கிற நம்பிக்கை இருக்கும் போது, கேட்க மற்றும் 'மியாவ்' ஒலி எழுப்பும் வல்லமை உள்ள பூனை வடிவ எங்கள் கடவுள் பேசாது என்பது உங்களின் எந்த வகை நம்பிக்கை ?, நாங்கள் வழிபாட்டின் போது பூனையாரிடம் பேசுகிறோம், பூனையார் பேசுவது எங்களுக்கு திரும்பக் கேட்கும் காலம் வரும் என்று காத்திருக்கிறோம், எங்கள் பூனையார் வழிபாட்டை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை"

*****


பூனையாரே கேட்க நன்றாக இருக்கிறது, பூனையார் மார்க்கத்தில் அபயச் சொல், அச்சம் தவிர்க்கும் மந்திரச் சொல்கள் இல்லையா ? என்றேன். ஏன் இல்லை 'மியாவ் மியாவ்......(சற்று இடைவெளி இட்டு) மியாவ் மியாவ்) என்று நான்கு முறைச் சொன்னால் நான்கு திசைகளில் இருந்து வரும் பயம் அனைத்தும் போகும் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக பூதை மொழி ஒன்றைச் சொன்னார்

"நாத்திகர்களுக்கு (நான் ஒன்று) கூறிக் கொள்கிறேன், நீங்கள் (எந்த) தெய்வ வணக்கத்தில் இல்லாத போதும், ஒருவேளை (என்றாவது) உங்களுக்கு கடவுள் நம்பிக்கைத் தேவைப்படும் போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள், நான் (உங்களின்) நம்பிக்கை நாயகனாக இருப்பேன், நானே அனைவரும் (நாத்திகன் உள்ளிட்டோர்) விரும்பக் கூடிய இறைவன், மறந்தும் நீங்கள் பிற மதங்களை (காபி கேட் மதங்களை) பின்பற்றும் மதவாதி ஆகிவிடாதீர்கள் (பூ.த.மொ 51)

பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !

பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !

பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

பூனையாரின் பூதைகள் இணைப்பு
இணைப்பு : http://catreligion.org/faqs/

14 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 3 !

வாரா வாரம் வரம் போல் என் கனவில் வருவதாக ஒப்புக் கொண்ட பூனையார் நேற்றும் சொன்னபடி வந்தார், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் உருவாக்கிய மதம் எப்படி அழிந்தது என்று புலம்பினார், புலம்பி ஆவது ஒன்றும் இல்லை, கால ஓட்டத்தில் எதுவும் தப்புவதில்லை, 'இன்றைய மதம் நாளைக்கு அழியும் என்பது தானே உண்மை' என்று தேற்றிவிட்டு எருக்களில் இருந்து முளைக்கும் விதைகள் போல் மதங்கள் மறுபிறவி எடுக்கத்தான் செய்கின்றன, பூனையார் மதம் கூட மறுவளர்ச்சி அடையலாம், நானே அதற்கு உதவுகிறேன் என்று கூறினேன். மிகவும் மகிழ்சி அடைந்தார் பூனையார். பூனையார் எப்படி எகிப்திய கடவுள் ஆனார் ? என்பதைக் கேட்டு வைத்தேன், எகிப்தியர்களும் துவக்கத்தில் மத நம்பிக்கையற்ற சமூகமாகத்தான் இருந்தார்களாம், ஊருக்குள் எலிகள் பெருகி சேமித்த உணவுப் பொருள்கள் சேதமடைய, நோய் தொற்ற மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர், அப்போது பூனைகள் தான் எலிகளை கட்டுப்படுத்தி அவர்களை காத்தது, பூனைகள் எகிப்தியர்களைக் காத்த கடவுள்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று தம் கடவுள் ஆகிய கதையை சுருக்கமாகத் தெரிவித்தார், பின்னர் இணையத்தில் தேட பூனையார் குறிப்பிட்டவை சரிதான் என்று உறுதியும் படுத்திக் கொண்டேன்.

The Egyptians worshiped cats because they found that they were catching mice and rodents that caused disease and ate their grains. After a while, they domesticated cats to keep them in their home to fend off the rodents. Eventually, the Egyptians worshiped cats such as Mafdet, Bastet, Sekhmet, and the Sphinx (which was more of a demigod or a mythological creature.
http://wiki.answers.com/Q/Why_did_Egyptians_worship_cats

இந்த முறை பூனையாரிடம் அந்த முக்கிய கேள்வியை கேட்டுவிடுவது என்று நினைத்து சற்று தயக்கத்துடனேயே கேட்டேன், 'கடவுள் மனிதனின் சாயல், ஈஸ்வர் மனுஷ்ய ரூப் என்றெல்லாம் கடவுள் வடிவம் குறித்துச் சொல்லும் போது கடவுள் மனித சாயல் என்று சொல்லுகிறார்களே, பூனை வடிவத்தை எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் ?' என்று கேட்டேன். 'இவையெல்லாம் கடவுளை கண்டதாகக் கூறியவர்களின் பிதற்றல் தான், யாரும் கடவுளைக் காணாத பொழுது கடவுள் மனுச உருவம் என்று எப்படி ஒப்புக் கொள்கிறோர்களோ ? அனைத்து வல்லமைகளையும் உள்ளக் கடவுள் பூனை வடிவமாக இருந்தால் கடவுள் தன்மை போய்விடுமா ? கடவுளின் தன்மையை உருவம் கட்டுப்படுத்துமா ? வெளிக்காட்ட வெறும் தோற்றம் தானே அது பூனையாகவோ, நாயாகவோ ஏன் ஒரு கடல் நண்டாகவோ இருந்தால் என்ன ? நம்பிக்கை உடையவர்களுக்கு பசுஞ்சாணிக் கூட பிள்ளையார் என்று வணங்குவது போன்றது தான், எனது பல வடிவங்களில் பூனையும் ஒன்று, மனித முகங்களைவிட பூனையின் முகம் எனக்கு பொருத்தமானதே'என்ற நீண்ட பிரசங்கத்தில் என்னை ஒருவாறு தலையாட்ட வைத்தார். கடவுள் உருவம் பூனை என்று நம்பாதவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு எழுப்பப்பட மாட்டார்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

என்னது மீண்டும் மீண்டும் பிறப்பது தண்டனையா ? என்று கேட்டேன், பிறவியில் தனக்கு மகிழ்ச்சிக் கிடைத்தால் பிறவி நல்லது என்கிறார்கள், துன்பப்பட்டால் பிறவி இழிவு என்கிறார், பிறவியில் நிலைத்தன்மை கிடையாது என்பதால் அது துன்பமே என்று தனது கருத்தைக் கூறினார் பூனையார். கடவுள் பூனை வடிவமானவர் என்று ஒப்புக் கொள்ளும் வரை மனிதன் பிறப்பெடுப்பான் என்று கூறி தனது மதத்தின் முக்கிய கொள்கையில் ஒன்றை எடுத்துக் கூறினார்.



"நான் (உங்கள் எல்லோருக்கும்) கூறுகிறேன், நீங்கள் கடவுளுக்கு (எந்த வகையான) வடிவமும் இருக்காது என்று நம்புகிறீர்கள். கடவுள் (தனக்கு) பிடித்த வடிவாமாக தேர்ந்தெடுப்பது பூனை வடிவம் தான், அதை (பூனை வடிவத்தை) ஒப்புக் கொள்ளுவோருக்கு சொர்கம், மற்றவர்களுக்கு (ஒப்புக்குக் கூட ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு) பிறவி பெரும்பிணி" - (பூ.த.மொ 50)

பூனையார் ( எந்த மதில்மேல் இருந்தாலும், எந்தப் பக்கம் பாய்வது என்பதை) நன்கு அறிந்தவர்

பூனையார் வாழ்க, பூனையாரின் மதம் வளர்க !

பூனையார் (என்னை கனவில்) தேடினால் தொடரும்...

6 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 2 !

அது என்ன 'பூதை' ? போதை என்பதைத்தான் எழுத்துப் பிழையாக தட்டச்சுவிட்டேனோ ? என்று நீங்கள் நினைக்கக் கூடும், பூனையாரின் பாதை என்பதைச் சுருக்கமாக 'பூதை' என்று (முன்பும்) எழுதியுள்ளேன், அதை நீங்கள் 'கீதை' போன்றோரு பாதை என்றும் கொள்ளலாம், பூனையாருக்கு ஒன்றும் நட்டமில்லை. நேற்று கனவில் வந்த பூனையார் மனிதரின் பழக்க வழக்கங்கள் குறித்து மிகவும் கவலைப்பட்டார். இப்போதெல்லாம் 'கழுவ' தண்ணீரையும் அல்லது துடைக்க பேப்பரையும் பயண்படுத்துகிறார்கள் அது எவ்வளவு சுற்றுச் சூழலுக்கு கெடுதல் தெரியுமா ? என்று கேட்டார் பூனையார். வேற என்ன தான் செய்வது ? தூய்மை முக்கியமில்லையா ? என்று கேட்டேன், பூமியில் மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று எதிர்காலம் குறித்து பேசிய பூனையார், தண்ணீரை அளவாகப் பயன்படுத்தலாம், பக்கெட் பக்கெட்டாக கழுவ பயன்படுத்துவது, ஆற்று குளத்து நீரை அசிங்கப்படுத்துவதெல்லாம் தண்ணீர் கேடுகள் தானே, என்றவர், தாளைப் பயன்படுத்துவதால் மரங்கள் வெட்டப்படுகிறது, இயற்கைச் சூழலுக்கும் மழை வற்றுவதற்கும் இது தான் காரணம் என்று கூறியவர் போகட்டம், ஆனால் கழுவுவதைவிட கழிவை அகற்றுவதில் இக்கால மக்கள் கவலைப்படுவதே இல்லை, தண்ணீரைத் திறந்துவிட்டு மொத்தமாக அப்படியே கூவம் போன்ற ஆற்றிலோ, கடலிலோ கலக்கச் செய்துவிட்டு ஒட்டு மொத்த நீர் ஆதரத்தையும் கெடுத்துவிடுகிறார்களே என்று கவலை தெரிவித்தார். பிறகு என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள் பூனையாரே என்று கேட்டேன்.

பூனையார் சொன்னார், நீர் பூனைகள் கழிப்பதைப் பார்த்திருக்கிறீரா ? மணலை நோண்டி குழிபறித்துவிட்டு கழித்துவிட்டு பின்னர் குழியை மூடிவிடும், இதனால் கழிவு நாற்றம், ஈ மொய்தல் அதிலிருந்து நோய் தொற்றல் மற்றும் பிற சுகாதாரக் கேட்டுத் தொல்லைகள் இன்றி, கழிவு மக்கி அடி உரம் ஆகிவிடுகிறது, கழிவு மறுபயனீட்டு உரமாக ஆக்கப்படுகிறது, இதை ஏன் மனிதர்கள் பின்பற்றக் கூடாது, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூனையாரைப் பின்பற்றுபவர்கள் கழிப்பின் பிறகு மண்ணைத் தான் பயன்படுத்துகிறார்கள், கழிவை கையாளுவதில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுப்புற நன்மைகளை இன்றைய அறிவியலாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்று கூறி திடுக்கிட வைத்து சிந்தனையைத் தூண்டினார் பூனையார், இருந்தாலும் ஒண்டு குடித்தனாமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் குழி தோண்டி 'இருக்க' மண் எங்கே கிடைக்கும் ? என்று கேட்டேன், அது உங்கள் வாழ்க்கை முறை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றிவிட்டதால் உங்களால் மண்ணைப் பயன்படுத்த முடியவில்லை, மற்றபடி பூனையார் கழிவு இருத்தல் மூடுதல் செயல்முறைகள் எக்காலத்திற்கும் ஏற்றதே. இன்றும் கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது, உங்கள் வாழ்க்கை முறையின் மனிதத் தவறுகள் எப்படி பூனையாரின் கொள்கைத் தவறாகும் என்று கேட்டு மடக்கினார். சரி தானே என்று நினைத்தேன். 5000 ஆண்டு காலப் பழமையான தன் பூதைத் தத்துவத்தில் ஒன்றை பூனையார் குறிப்பிட்டார்.



" உங்களுக்கு பூனையார் அறிவுறுத்துகிறேன், நீங்கள் திறந்த வெளியில் (மலம்) கழிக்காதீர்கள், சுகாதார கேடுகளை (தண்ணீர் வீணாகுதல் , மற்றும் நோய் பரவல்) கருத்தில் கொண்டு மண் குழிகளை பயன்படுத்துங்கள், நீங்கள் எத்தனை (முறை) குழிப் பறித்தீர்கள் என்பதை பூனையார் அறிவார், ஏனெனில் பூனையார் அறிவானவர், அன்பானவர் (மதில்) மேலானவர் " (பூ.த.மொ 99)

அடுத்ததாக பூனையார் "சந்திரன் பூமியை ஏன் சுற்றுகிறது என்று தெரியுமா ?" என்று கேட்டு என் பதிலுக்காக என்னை நோக்கினார்.

என்னது 'பூதை அறிவியலா ? இன்னொரு நாளைக்கு பார்க்கலாம், தவிர அவுங்க அளவுக்கு உன்னால் அறிவியலை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொடுக்கும் திறமை இருக்கிறதா ? என்று தெரியவில்லை, என்றேன். ஒரு முறை முறைத்துவிட்டு கனவில் இருந்து காணாமல் போனார், இன்னொரு நாளைக்கு கனவில் வரும் போது பால் வைத்து, மன்றாடித் தான் பூனையாரின் பூதைகளைப் பெற வேண்டும் போல

பூதையார் பூனையார் வாழ்க !

பின்குறிப்பு 1 : பூனையாரின் பூதை மார்கத்தில் சேர்ந்து கொண்டால் உங்கள் முன் ஜென்மப் பாவங்களில் 85 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும், முன்பிறவி நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை, இப்பிறவியின் பாவங்களை 90 விழுக்காடு பூனையார் எடுத்துக் கொண்டு நற்கதிக் கொடுக்கத் தயாராக உள்ளார், உடனே முந்துங்கள் (நன்றி பூனையார் பூதை மார்க்கத்து தலைமை பூசாரி திரு தருமி ஐயா)

பின்குறிப்பு 2 : இந்த இடுகையை 2 - 3 ஆண்டோ அதற்கு பிறகோ படிப்பவர்கள், கோவியாருக்கு இடைப்பட்ட (இந்த காலத்தில்) என்ன ஆயிற்று, பூனையார் பூதையார் என்றெல்லாம் எழுதியுள்ளாரே என்று நினைக்கக் கூடும், குறிப்பிட்ட (இந்த காலத்தில்) பதிவுலகில் மதப் பிரச்சார நெடிகள் மூக்கைத் துளைத்ததால், மதச் சுதந்திரம் மற்றும் மதப் பிரச்சார சுதந்திரம் என்ற அடிப்படையில் கோவியார் மற்றும் பூனையாரின் பூதை மார்கத்தினரால் 'கடவுள் பூனையார் ' அதில் இறக்கிவிடப்பட்டுள்ளார் என்பதை தகவலாகப் பெற்றுக் கொள்ளவும்.

இணைப்புகள் :
பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் (எளிய அறிமுகம்)
முக நூல் : Cat Worship

27 பிப்ரவரி, 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் !

எம்மதமும் சம்மதம் ஆனால் பூனை மதமே என் மதம், இன்றைய உலக மதங்களுக்கு முன்னோடியானது பூனை மதமே, ஆம் ! பிரமீடு கால எகிப்தில் பூனையே கடவுளாக கொண்டாடப்பட்டது. பூனை மதத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் ? உலகில் உள்ள மதங்களில் யாவும் போலி சாமியார்களும், மதவாதிகளும் ஆகிரமித்து அதை மாற்றிவிட்டதால் நான் ஆதி மதமான பூனை மதத்தை உயிர்பித்து அதில் சேர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.

பூனைக்கு கடவுள் தகுதி இருக்கிறதா ? ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற மூன்று நிலைகளில் பூனை இருப்பதால் அதற்கு முழுமையான தகுதி உண்டு. ஏராளமான குட்டிகளை ஈன்று ஆக்குகிறது, அவைகளில் பலவற்றை கவ்விச் சென்று காக்கிறது, நம்மை ஏமாற்றும் எலிகளை அழித்து நம்மைக் காக்கிறது, இவற்றையெல்லாம் வெறெந்த தெய்வமாவது செய்கிறதா ? இவற்றையெல்லாம் நாய் செய்கிறதே அதுவும் கடவுள் இல்லையா ? நாய் ஏற்கனவே பைரவராக தத்தெடுக்கப்பட்டு உப தெய்வமாக தன்னை மாற்றிக் கொண்டதால் முழுத் தெய்வ தகுதியை அது இழந்துவிட்டது.

பூனையாரின் தத்துவங்கள் :



பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் - இதை நாம் பூனையார் கொடுத்த 'பகூத்' அறிவைக் கொண்டு சிந்துத்து ஆய்ந்து பார்த்தால் தான் இது எவ்வளவு பேருண்மைகளை அறிவியலைக் கொண்டுள்ளது என்றே நாம் உணருவோம், மேம்போக்காகப் பார்த்தால் இது வெறும் பழமொழிதான். அதாவது பூனைக் கண்ணைத் திறத்தல் மூடுதல் என்ற இரு நிகழ்வாக இந்த ஒரு பழமொழியை நாம் ஆய்(வு) செய்ய வேண்டும், இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் ? உலகம் பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்று தானே சொல்லுகிறார்கள், அதாவது பெருவெடிப்பின் துவக்கம் பூனை கண்ணைத் திறத்தல், பூனையின் கண் திறந்திருக்கும் வரையில் பிரபஞ்சத்தின் தோற்றம் அதைத் தொடர்ந்து கேலக்ஸிகள், சூரியன், இந்த பூமி மற்றும் நாம் எல்லோரும் இருப்போம், பூனை கண்ணை மூடத் துவங்கும் அந்த வினாடியில் பிரபஞ்சம் சுருங்கத் துவங்கி புள்ளி ஆகிவிடும், பிரபஞ்சம் சுருங்க ஆரம்பித்தால் பூமி இருக்குமா ? அதைத் தான் பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் அதாவது இருட்டு என்பது அழிவு, பூமி அழிந்துவிடும் என்கிறார்கள், இந்த எளிய தத்துவத்தில் பிரபஞ்ச பேருண்மையே அடங்கி இருப்பதை சிந்திக்கமாட்டீர்களா ? என்று பூனையார் அரைகூவல் விடுக்கிறார்,. இதை யாரோ எவரோ சொல்லி இருந்தால் இவ்வளவு தத்துவத்தையும் ஒன்றாகச் சொல்லி இருக்க முடியுமா ? இதைவிட இதன் சிறப்பு இந்த தத்துவம் எகிப்திய பிரமீடுகள் தோன்றிய போது அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பே இது சொல்லப்பட்டுவிட்டது தான்.

இரவு வணக்கத்திற்கு உரியவர் பூனையார் மட்டுமே : உங்களில் பலர் இரவு வணக்கம் சொல்லி வருகிறீர்கள், ஆனால் அதை யாருக்கு சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், தூங்கப் போகிறவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லுவதால் என்ன பயன் ? சிந்திக்க மாட்டீர்களா ? பூனையார் கடவுளாக இரவு முழுவதுமே விழித்திருப்பவர், உங்கள் (பால், மீன் தவிர்த்த) உணவு பொருட்களை எலிகளிடம் இருந்து காப்பவர். அவருக்குச் சொன்னால் உங்கள் வணக்கத்தை நினைவு வைத்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பார், அதைவிடுத்து வேறு யாருக்கும் சொன்னால் என்ன பயன் ஏற்படப் போகிறது. பூனையார் உங்களை எச்சரிக்கிறார்.

இரவு வணக்கத்திற்குரியவர் (வீட்டுப்) பூனையார் மட்டுமே காட்டுப் பூனையார் இல்லை:
. உஙகளில் பலர் பூனை என்றால் அனைத்துப் பூனையும் தானே என்றே நினைகின்றீர்கள், காட்டுப் பூனையும் வீட்டுப் பூனையும் ஒன்றா ? காட்டுப் பூனை கள்ளப் பூனை அது நீங்கள் தூங்கும் நேரங்களில் உங்கள் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்றுவிடும், ஆடுகளின் குரல்வளையைக் கடித்து இரத்தம் குடித்து கொன்றுவிடும். அதனால் உங்களுக்கு பொருள் நட்டமே, எனவே நீங்கள் இரவு வணக்கம் சொல்லும் போது எந்தப் பூனைக்குச் சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், குறிப்பாக பூனையாருக்கு இரவு வணக்கம் சொல்லும் போது காட்டுப் பூனையைப் பற்றி நினைக்கவே நினைக்காதீர்கள், காட்டுப் பூனை மனிதனுக்கு மாறும் ஊறும் செய்துவிட்டது அதை பூனையார் அவ்வாறு செய்யததற்காக சபித்தே விட்டார், அதனால அவை ஓடி ஒழிந்து இரவில் மட்டுமே வெளிவருகின்றன.

உங்களை (அவர்களை) நான் எச்சரிக்கிறேன் (காட்டுப் பூனைக்கு வணக்கம் சொல்லுபவர்களை), உங்களில் யார் இரவு வணக்கத்தை (இடைவிடாது) இரவு நேரங்களில் (எனக்கு மட்டும்) சொல்லுகிறீர்களோ, (அவர்களுக்கு) பிரமீடு தேசத்து அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)

பூனைகளில் நானே மிகப் பெரிய பூனை (பூ.த.மொ 142)

*********
எகிப்து நாடுடைய இறைவா போற்றி !

குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது..........போன்ற பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் பின்னர் ஆய்வு செய்யப்படும்

பூனையார் நாடினால் மேலும் (மேலும்) தொடரும்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்