ஆனால் அந்த இடுகையை எழுதிய நண்பர், "இது மட்டுமன்றி முஸ்லீம் பெண்ணை இந்து மற்றும் கிறிஸ்தவ ஆண்களோடு காதல் வயப்படுவதாக தொடர்ந்து காட்டுவது; இவ்வாறு சினிமாவிற்கு சம்மந்தமில்லாத முஸ்லிம்களை சினிமாவில் இழிவு படுத்துவதே தலையாய பணியாக ஒரு கூட்டம் செய்து வருகிறது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திரையில் தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடந்தக் கதையை திரித்து அவ்வாறு காட்டவில்லை. புனைவுக்காக அது போன்ற கதைகளைக் காட்டுகிறார்கள், எனினும் உண்மையகாவே இஸ்லாமியராக பிறந்த பெண்களை இந்து ஆண் காதலித்து திருமணம் செய்து கொள்வது போலவே, இஸ்லாமிய ஆண் இந்துப் பெண்ணை மணந்து கொள்வது நடந்தே வருகிறது. இந்து ஆண் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணின் பெயரை மாற்றுவதோ, மதம் மறுவதற்கோ வற்புறுத்துவதில்லை. ஆனால் இந்துப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய ஆண் அவளை கட்டாயமாக மதம் மாறச் சொல்கிறான். எனது நண்பரின் தங்கைக்கே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. பிரச்சனை அதுவல்ல. மதம் மாறி காதலிப்பது குற்றமா ? அதைப் படத்தில் புனைவாகச் சொல்வது குற்றமா ? பாத்திமா (பாபு), நதியா போன்ற இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களை மணந்து கொண்டு வாழ்கிறார்கள் அது உண்மை இல்லையா ?
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் ஆண் பெண் மனது, அவர்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு, இதில் மதம் எங்கிருந்து வந்தது ? பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மத அடையாளம் இருக்கிறது என்று எவரேனும் நிரூபனம் செய்தால் நான் எழுதியது அனைத்தையும் அழித்துவிடுகிறேன். மதம் என்பது நாம விரும்பாமலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று, இதில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை, உலகத்தினரோடு நம் ஒட்டிவாழாமல் இருக்க நம்மீது மதம் என்கிற பெயரில் திணிக்கப்படும் அசிங்கத்தை நினைத்து உண்மையிலேயே ஒவ்வொருவரும் வருத்தம் தான் அடைய வேண்டும். அண்மையில் இஸ்லாமிய சகோதரிக்கும் இந்து சகோதரிக்கும் பிறந்த குழந்தை யாருடையது என்பதில் பெரிய சர்சையே ஏற்பட்டு முடிவில் மரபு பரிசோதனை மூலம் இஸ்லாமிய சகோதரியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, பிறக்கும் எவருக்கேனும் ஆணுறுப்பு அல்லது பெண்ணுறுப்பு, பெற்றோர்களைப் போன்ற உடலியல் தவிர்த்து மத அடையாளம் என்று எதையாவது சொல்ல முடியுமா ? ஆடையில்லாமல் தான் பிறக்கிறோம் அப்படியே இருந்துவிடுகிறோமா அது நம்மீது திணிக்கப்படுவதில்லையா என்று எதிர்த்து குதர்கமாக கேட்கத் துடிக்கும் மதவாதிகளுக்கு நான் சொல்லும் பதில் நம் குடும்பத்தினர் முன் நம்மால் அப்படி நிற்க முடிந்தால் அது தேவை இல்லை என்றே சொல்வேன். ஒருவாராலும் முடியாது. எனவே ஆடையையும் மதத்தையும் தொடர்பு படுத்தாதீர்கள். சட்டையை கழட்டிப் போட முடியும் வேறு அணிந்து கொள்ளமுடியும், விரும்பி அணியும் மத அடையாளங்கள் என்றாவது களையப்படுகிறதா ?
பம்பாய், ராமன் அப்துல்லா போன்ற படங்களில் முஸ்லிம் பெண்ணை இந்து ஆண் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள் அது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகச் சொல்கிறார். கள்ளழகர் என்ற படத்தில் இஸ்லாமியராக நடிக்கும் விஜயகாந்த் கதைபடி கடைசியாக தான் இஸ்லாமியர் என்று சொல்லுவார். அதற்கு முன்பே இந்துப் பெண்ணை காதலிப்பார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இந்துக்கள் கொதித்தி எழுந்து போஸ்டரை கிழிக்கச் சென்றதாகத் தெரியவில்லை.
அதைவிடப் பெரிய காமடி, 'ஈசா' என்ற பெயரில் வரப் போகும் ஒரு படம் இஸ்லாமியர்கள் இழிவுப் படுத்துகிறதாம். தெளிவாக அச்சிட்டிருக்கும் 'ஈசா' இவருக்கு 'ஈஸா'வாக தெரிவது யாருடைய குறை ?, ஈஸா என்பது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் ஒருவரின் பெயர், அதைப் பயன்படுத்தி இருப்பது இஸ்லாமியர்களை புண்படுத்துகிறது என்கிறார். இஸ்லாமிய நம்பிக்கைப் படி கிறித்துவர்களின் ஏசு(ஜீஸஸ்) தான் இஸ்லாமியர்களுக்கு ஈஸா. ஈஸா இஸ்லாமிய இறைத் தூதர் என்று இஸ்லாமியர்கள் சொல்வதை இதுவரை எந்த ஒரு கிறித்துவரும் ஏற்றுக் கொண்டது இல்லை. மாறாக இஸ்லாம் கிறித்துவ மதத்தின் கிளை என்று மட்டுமே ஒப்புக் கொள்வார்கள். அதனால் தான் இரு மதங்களும் சேர்த்து ஆப்ரகாமிய மதங்கள் அதாவது ஆப்ரகாம் மற்றும் ஆதாம் தொடர்புடன் வரும் மதங்கள் மேல்நாட்டு முற்போக்குவாதிகளால் அழைக்கப்படுகிறது. "கிறித்துவர்கள் அனைவருமே முகமது நபியை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர்கள் ஏனெனில் ஈஸா இஸ்லாமிய இறைத் தூதர்" என்று கிறித்துவர்கள் ஒப்புக் கொள்ளாத ஒரு கருத்தை அவர்கள் மீது தொடர்ந்து திணிக்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் என்றாவது எண்ணிப் பார்த்தது உண்டா ? அதைவிடுகிறேன், அது தேவையற்றதும் கூட

இஸ்லாமியர்கள், 'தனது மதத்தை பழிக்கிறார்கள்' என்று கண்டு ஆவேசம் அடைய வேண்டியது முதலில் யாரிடம் என்றால் இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாத கும்பல்களை நோக்கித்தான். இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது போல் இஸ்லாமிய சமூதாயம் தங்களுக்குள் களையெடுக்க முன்வருவதும் மிக மிகத் தேவை.