பின்பற்றுபவர்கள்

26 டிசம்பர், 2007

இன்று சுனாமி நினைவு நாள்

மறக்க வேண்டிய நிகழ்வாக இருக்க வேண்டியது, எழுதவேண்டாம் என்று தான் நினைத்தேன், நேற்று சன் செய்தியில் சுனாமி அழிவு காட்சிகள் சிலவற்றைக் காட்டினார்கள், தமிழ் மணம் பரணில் சில இடுகைகள் சுனாமி பற்றியதாக வலப்பக்கம் இருக்கிறது.

சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரம் நாகப்பட்டினம் சொந்த ஊர் என்பதால் சுனாமியின் தாக்கம் இன்றும் கூட இதயத்தில் இருக்கிறது. சென்றவாரம் ஒரு நண்பரை சந்தித்தபோது அவர்,

"கிறிஸ்துமஸ் பொருட்டு வேளாங்கன்னிக்கு கைக்குழந்தையுடன் சென்றோம், காலை எட்டுமணி வாக்கில் வேளாங்கன்னி கடற்கரையில் நிகழ்ந்த கோர நிகழ்வும், கைக்குழந்தையுடன் அலறி அடித்து தப்பி ஓடிவந்த அந்த காட்சியை நினைத்தால் இன்னும் கூட படபடக்கிறது" என்று சொன்னார்,

கிரேன் எந்திரம் மூலம் பெரிய குழியை வெட்டி அடையாளம் காணமுடியாமல் குவியலாக பிணங்களை புதைத்தக் அவலம் சுனாமி சோகங்களில் மிகப் பெரியது. கடற்கரை அருகில் குடி இருந்தவர்கள், நடை பயிற்சிக்கு சென்றவர்கள், கடற்கரையில் கிரிக்கெட் ஆடிய மாணவர்கள் என குடும்பத்துக்கு ஒருவர் என்று அலைகளால் அடித்து கொல்லப்பட்டவர்கள் கதையை நாகை குடும்பங்களின் சோகக் கதையாக இருந்தது.

இந்திய மைந்தர் அனைவரும் கைகோர்த்து உதவி சுனாமியில் இழந்தோர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தந்தது நெகிழ்வான விசயம். தொண்டுள்ளங்கள், நல்லுள்ளங்கள் இருப்பதை இது போன்ற சோக நிகழ்வுகளின் பிறகே புரிந்து கொள்ள முடியும் என்ற ஒரே ஆறுதல் மட்டுமே கிடைத்து.

மதம், சாதி, ஏழை, பணக்காரன் எவரையும் சமமாக பார்பது இறைவனுக்கு மட்டுமல்ல, இயற்கைச் சீற்றங்களும் பொருந்தும். இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு நிதானித்து செயல்படும் முன்பே நமது காலமும் முடிந்து போகிறது.

சுனாமியில் இறந்த அனைவருக்கும் அஞ்சலிகள், அவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல்கள் கூறிக் கொள்கிறேன்.

சுழலும் நினைவு(அலை)கள் !
(முதலாண்டு நினைவஞ்சலிக்கு எழுதியது)

கடந்த ஆண்டின் கறுப்பு ஞாயிற்றில்,
காலணைக்கும் நீலக் கடல் அலை,
காலனை அணைத்து அழைத்து வந்து,
கயமையுடன் கழுத்துகளை அமிழ்த்தி நெறித்தது !

குற்ற நிமிடத்தின் பெரிய அவலமாக,
பெற்றோரை இழந்த பச்சிளம் சிறுவர்கள்,
பெற்ற பிள்ளையை இழந்த பெற்றோர்கள்,
உற்ற துணையை இழந்த கனவன்,

பற்றிய மஞ்சள் கயிறையிழந்த மனைவி,
சுற்றம் உறவுகளை தொலைத்த சொந்தங்கள்,
வெற்றாய் உணவற்று, உறங்கவும் இடமில்லாமல்
குற்றவாளிபோல் ஊரைவிட்டு ஓடிய மக்கள் !

உலகையே திரும்பி பார்க்க வைத்த
நிலையற்ற சோக சின்னங்களாக மக்கள்,
அலைகடலை கலக்கிய மீன்பிடிப் படகுகள்
விலைபோகமல் உடைத்த விறகாக இன்று !

விழிக்க மறுத்த கண்களை நினைத்து
அழுகையுடன் தூங்க மறுத்த கண்களுடன்,
ஆழியின் அடிவயிற்றை வெறித்து, வெறித்து,
நாழிகள் கடந்து ஆண்டு ஒன்றாகிவிட்டது !

கலங்கரை விளக்காய் தேசங்களின் நேசக்கரங்கள்
கலங்கிய இதயத்தின் உதிரம் துடைக்க,
காலன் அழித்ததை, காலம் மறக்கவைத்து,
துலங்கிய புதுவாழ்வில் புத்தொளி பிறந்தது !

வயிற்றுப்பாட்டுக்கு மீண்டும் கடலில் மீனவர்கள்,
பெயர்ந்து சிதைந்த குடில்களுக்கு மாற்றாக,
உயர்ந்த பகுதியில் மின்விளக்கு வீடுகள்,
பயம்தொழைந்து பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் !

காயங்கள் ஆறியது, கண்ணுறக்கமும் வந்தது,
மாயங்கள் செய்த தழும்புகளாக இன்னும்
தாயெங்கள் கடற்கரையின் இறைச்சலில், அவள்
சேய்களின் மரணஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது !

6 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ம்ம்ம்ம்...
:(

Unknown சொன்னது…

மனத்தை நெகிழ வைக்கும் பதிவு. ஆனால் ஒன்று..இன்று மீண்டும் சுனாமி வந்தால், சேதம் 2004 ஐ விட குறைவாக இருக்கும் என தோன்றவில்லை. பாதிப்பு ஏற்பட்டவுடன் உதவுவதிலும், இறங்கர்பா எழுதுவதிலும் முன்னே நிற்கும் நாம் முன்னெச்சரிக்கையில் கோட்டை விட்டு விடுகிறோம் என்பதே உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//

ஜெகதீசன் said...
ம்ம்ம்ம்...
:(
//

ம் மனசை எப்பவோ தேத்தியாச்சு.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//nandan said...
மனத்தை நெகிழ வைக்கும் பதிவு. ஆனால் ஒன்று..இன்று மீண்டும் சுனாமி வந்தால், சேதம் 2004 ஐ விட குறைவாக இருக்கும் என தோன்றவில்லை. பாதிப்பு ஏற்பட்டவுடன் உதவுவதிலும், இறங்கர்பா எழுதுவதிலும் முன்னே நிற்கும் நாம் முன்னெச்சரிக்கையில் கோட்டை விட்டு விடுகிறோம் என்பதே உண்மை.
//

நீங்கள் சொல்வது உண்மைதான். கடற்கரை ஓர மீனவர்களுக்கும், வலையை உளர்த்த, கடற்கரையை விட்டால் வேறு வழி இல்லை, குடும்பங்களுடன் கடற்கரை அருகே குடிசையில் தான் இன்னமும் வசிக்கின்றனர்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

மறக்க முடியாத ,மறக்க நினைக்கும்
நாள்.

۞உழவன்۞ சொன்னது…

சுனாமி எனும் பெயரால் ஆழிப் பேரலை ஆடிய கோரத்தாண்டவத்தின் நினைவு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்