பல பதிவர்களும் இதுபற்றி எழுதி இருக்கிறார்கள், சில கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டிய அளவில் இருக்கிறது. தமிழில் தொழில் கல்வி படித்த நான், அதுபற்றிய எனது கருத்துக்களை, அறிந்தவன் என்ற வகையில் எழுதினால் இன்னும் கூட அந்த கருத்துக்கு வலுசேர்க்கலாம் என்பதால் இதை எழுதுகிறேன். தமிழில் தொழில் கல்வி என்பதை நான் கல்லூரியில் படிக்கவில்லை. மேனிலை பள்ளியில் அதாவது +1, +2 வில் நான் எடுத்தது, நாலாவது பிரிவு அதாவது தொழிற்கல்வி பிரிவுதான். அதில் இயந்திரவியல் ( Vocational Group, Machinist) பாடத்தை சிறப்புப்பாடமாக எடுத்துப்படித்தேன். அப்பொழுது அதே அடைப்படையில் மின்னியல் பாடமாக மோட்டார் ரீவைண்டிங் (மின் சுற்று) என்ற மின்னியல் பாடத்திட்டம் என இரு பாடப்பிரிவுகளில் தொழிற்கல்வி பிரிவுகள் இருந்தது. தற்பொழுதும் நடப்பில் உள்ளது. நான் படித்த வருடம் 1984ல் தான் முதன் முதலில் தொழிற்கல்வி பிரிவில் இயந்திரவியல் பாடத்திட்டத்தை +2 வில் தொடங்கினார்கள். அதற்கு முன்பு தொழிற்கல்வி பிரிவில் மோட்டார் ரீவைண்டிங்க் எனப்படும் பாடத்திட்டம் மட்டும் தான் இருந்தது. ஆனால் தொழிற்கல்வி பிரிவுகள் பள்ளிகளில் நடத்தப்படாமல் ITI எனப்படும் தொழிற்பள்ளிக் கூடங்களில் தனித்தனிபிரிவாக மோல்டர்(உறுக்கி ஊற்றுபவர்), பிட்டர் (பொருத்துவர்) மற்றும் டர்னர் (கடைசல் பொறியளர்) மேலும் பல பிரிவு பாடத்திட்டங்கள் ஒன்று அல்லது இரண்டு வருட படிப்பாக இருந்தது, தற்பொழுதும் நடப்பில் உள்ளது. அதைத்தவிர்த்து, ஜூனியர் டெக்னிக்கல் காலேஜ் என்ற ஒரு பாடத்திட்டமும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களக்கான இரண்டாண்டு தொழிற்படிப்பாக இருந்தது. ஜூனியர் டெக்னிக்கல் காலேஜ் ( JTC) முடித்தவர்களும், மூன்று ஆண்டு டிப்ளமோ எனப்படும் பட்டய வகுப்பில் இரண்டாம் ஆண்டு நேரடியாக சேரலாம். தொழிற்கல்வி மேநிலையில் ( +2) சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூனியர் டெக்னிக்கல் காலேஜ் பாடத்திட்டங்களை அரசு கைவிட்டு, முழுவதுமாக மூடிவிட்டது.
நான் +2 பாடத்திட்டத்தில் படித்த தொழிற்கல்வியில், 75 விழுக்காட்டு தொழிற்கல்வியை தமிழில் தான் சொல்லிக் கொடுத்தார்கள். கடைசல் பொறி என்றால் உங்களுக்கு பலருக்கு தெரியாது லேத் (lathe) எனப்படும் இயந்திர (Turning Machine) பொறியே கடைசல் பொறி என்று தமிழில் சொல்லுவார்கள், அதில் உருளை, கூம்பு வடிவ உலோக பாகங்களை தயாரிக்க முடியும் அதாவது கடைந்து எடுக்க முடியும், மேலும் மரையிடுதல் (thread cutting) செய்யமுடியும். பாடத்திட்டத்தில் தமிழில் அழகாக மரையிடுதல் என்று தலைப்பிட்டு Thread Cutting என்பதை அடைப்புக் குறிக்குள் போட்டு இருப்பார்கள், அது போன்று டிரில்லிங் இயந்திரத்தை துளையெடும் இயந்திரம், போஃரிங் செய்வதை துளையை பெரிதாக்குதல் என்று தான் சொல்வார்கள்.
பாடத்திட்டத்தின் அரசு தேர்வின் கேள்விகளிலும்,
துளையிடும் கருவியின் மூலம் 50 மிமி தடிமன் உள்ள ஓர் வட்ட உலோகத்தின் 5 மி.மி துளையை 10 மி.மி அளவுக்கு பெரிதாக்குவது பற்றி விளக்குக ? என்று கேட்பார்கள்,
முதலில் 5.மி.மி துளையிள்ள, வட்ட உலோகத்தை நன்றாக நான்கு பக்கமும் இறுக்கிப் பிடிக்குமாறு மரையாணியை ( nut and bolt ) திருகி நன்கு முடுக்க வேண்டும், அதன் பிறகு துளையிடும் துண்டிற்கு (drill bit) நேராக 5 மி.மி துளை வருமாறு சரிசெய்து (alignment) கொண்டு, முதலில் 7 மி.மி துளைத் துண்டு கொண்டு துளையிட்டுவிட்டு, பிறகு 10 மி.மி துளைத்துண்டைக் கொண்டு 10 மிமி துளையிட்டு பணியை நிறைவு செய்யலாம், சிறிய துளையின் மேல், பெரிய துளையிடும் முன் துளையின் முனைப் பெரிதாக்குதல் (counter boring) செய்துவிட்டால், பெரிய துளைகளை எளிதாக இடமுடியும்.
இப்படித்தான் பதில் எழுதுவோம், பாடத்திட்டத்தில் அனைத்து இயந்திரங்கள், பாகங்கள் ஆகியவற்றிற்கு தமிழில் பெயர் வைத்திருந்தார்கள், படிப்பது ஒன்றும் கடினமாக தெரியவில்லை. என்னுடன் படித்த, உயர்நிலைவரை ஆங்கில வழி பயின்ற சக மாணவர்களில் சிலர் ஆங்கிலத்திலும் பதில்களை எழுதினார்கள்.
*******
இயந்திரவியல் பாடத்திட்டத்தில், இயந்திரத்தை கையாளுவது (operator) என்ற அடிப்படையில் இவை தமிழில் இருப்பதால் பெரிதாக ஒன்றும் நட்டமில்லை. ஏனென்றால் அதனை உற்பத்திக்கு (PRODUCTION) அல்லது சீர்செய்தல் (SERVICE AND REPAIR) செய்வதற்கு ஓரளவு அவற்றைப்பற்றி அறிந்தும், நேரடி பயிற்சியும் ( PRACTICLE) இருந்தாலே போதும். ஆனால் அதனை படித்தவர்கள் வெளிமாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ சென்றால் அந்தந்த இயந்திரங்களின், பாகங்களின், தமிழ் பெயருக்கு மாற்றான ஆங்கில பெயர் தெரியவில்லை என்றால் திண்டாட்டம் தான்.
முழுவதும் தமிழில் பட்டயம் (DIPLOMA) அல்லது பட்டப்படிப்பை (BACHELOR OF ENGINEERING) ஏற்படுத்தினால் மாணவர்களுக்கு பெரும் திண்டாட்டமே, ஏனென்றால் இங்கு உற்பத்தி என்பதற்கோ அல்லது சீர்செய்தல் ஆகியவற்றிற்கோ மாணவர்கள் படிப்பதில்லை அதனையும் தாண்டி வடிவமைப்பு (DESIGNING), ஆராய்ச்சி (RESEARCH), திட்டமிடுதல் (PROJECT) ஆகியவற்றில் மாணவர்கள் கவனம் செலுத்துவர், அவற்றிற்கான நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. தமிழில் அவற்றையெல்லாம் தமிழ்படுத்தி மொழி பெயர்க்க வேண்டுமானால் இன்னும் ஒரு நூற்றாண்டு கூட போதாது, அதற்குள் வேறு சில புதிய துறைகளே பொறியியலில் வந்துவிடும். அப்படியும் ஒருவேளை தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் தமிழில் அமைத்துவிட்டால் அதனை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற நினைக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டிற்குள்ளேயே வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான வாய்ப்பு இல்லை. பட்டயம் அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களில் வேலை வெறும் உடல் உழைப்பு வேலை (OPERATOR) அல்ல. அந்த துறையில் ஒருவர் மேலே வரவேண்டுமென்றால் அதில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும், பல்வேறு தொழில் நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் இவையெல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. மேலும் தமிழில் ஒருவர் தொழிற்கல்வி பயின்றால் வெளிநாட்டில் அவரால் பணிபுரிவதற்கான வாய்ப்பு என்பது அவர் ஆங்கிலத்திலும் நன்கு வளமிக்கவராக இருந்தால் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.
தமிழில் அனைத்தும் மாற்றம் செய்வது தேவைதான், ஆனால் அதற்கு முன்பு நாம் அவற்றில் எல்லாம் வளர்ந்து தன்னிறைவு அடைந்திருக்க வேண்டும் அதன் பிறகே 'ஜாப்பானை பார், ரஷ்யாவைப் பார்' என்று சொல்ல முடியும். மிகவும் சிக்கலான பொருள் பெயர்களை (பெயர் சொல்களை) தமிழில் மாற்றுவதன் தேவை இல்லை என்றே சொல்வேன், ஊர், பொருள்பெயர்கள் எல்லாம் தமிழில் மாற்றம் செய்வதற்கு முன் அதற்கு மிகச்சரியான பொருள் தரும் வேர்சொற்கள் இருந்தால் மட்டுமே மாற்றினால் சரியாக இருக்கும் உதாரணத்திற்கு பேருந்து, மிதிவண்டி என்பவை சரிதான். மற்றபடி அம்பாசிடர், பியட் இதெல்லாம் மொழிபெயர்க்க முடியுமா ? இவையெல்லாம் (பெயர்சொல்) பெயர்கள் தான். இவற்றை மொழிப்பெயர்க்கவே முடியாது, இவை எல்லா மொழிகளிலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
மிதிவண்டி சரி ! மிதிவண்டியின் உதிரி பாகங்களுக்கு தமிழ் பெயர் வைக்க முடியுமா ? என்று ஒருமுறை சட்டசபையில் 'கெக்கேபிக்கே' வென சிரித்தனர். அறிவு சீவித்தனமாக கேள்விகளை எழுப்புவதாக நினைப்புதான். எப்போதுமே பயன்பாட்டில் உள்ளவை, புழக்கத்தில் இருப்பவைகளுக்குத்தான் மொழிப் பெயர் சூட்டவென்றும் என்ற எழுதப்படாத விதியை அனைத்து மொழிகளும் நடைமுறையில் வைத்திருக்கின்றன. அதாவது பொதுவில் பேச்சுவழக்கில், எழுத்தில் புழங்கும் பெயர்களுக்குத்தான் மாற்றுப் பெயர்கள் வேண்டுமே தவிர அவற்றில் உள்ள எல்லாவற்றிற்க்குமே அல்லது உதிரி பாகங்களுக்கு மாற்றுபெயர் வைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. Fever என்பதை காய்சல் என்கிறோம் பலருக்கும் வருவது, AIDS என்பதை உயிற்கொல்லி நோய் என்கிறோம் பலரால் பேசப்படுவது, அதுபோல் மாரடைப்பு, நீரிழிவு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் அவற்றிற்கு தரப்படும் மருந்துகளின் பெயர்கள் பொதுவாக எல்லோருமே அறிந்திருக்க வேண்டியதில்லை மருத்துவர்கள் அறிந்திருந்தாலே போதும், அவற்றையெல்லாம் தமிழ்படுத்துவதற்கான தேவை என்பது இல்லை. இதே போன்று தான் மிதிவண்டி மற்றும் தானூர்திகளின் ( ஆட்டோ) உதிரி பாகங்ளின் பெயர்களை அவற்றை சரிசெய்பவர்கள் (TECHNICIAN) ஆங்கிலப் பெயர்களை அறிந்திருந்தால் போதும், பாகங்களின் பெயர்கள் பொதுமக்கள் இடையே புழக்கத்தில் வராது, உதிரிபாகங்களுக்கான, தமிழ்பெயருக்கு தேவை என்பதே பொதுவில் இல்லை. எனவே அவை மொழிப்பெயர்க்கத் தேவையும் இல்லை.
COMPUTER பொது பயன்பாட்டிற்கு வந்துவிட்டது, அன்றாடம் பலரும் பயன்படுத்துகிறோம், அதுபற்றி பொதுவில் பேசுகிறோம், அதனால் COMPUTER என்பது தமிழில் பொருத்தமாக பெயர் வைக்கப்பட்டு 'கணனி' என்கிறோம், அனைவரும் சொல்கிறார்கள் தற்பொழுது எழுத்தில் சொல்வதில் 'கணனி' எளிதாகிவிட்டது, ஆனால் அதில் உள்ளே உள்ள மற்ற பாகங்களையும் (உதாரணம் CPU) மொழிபெயர்கவேண்டிய தேவை, அதாவது அது பொதுமக்களுக்கான தேவையாக இல்லை, அது செய்தியாகவோ, பேச்சாகவோ பயன்பாட்டில் இல்லை. எனவே அவை ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ்மொழிக்கு பாதிப்பு இல்லை. தமிழர்களிடையே பேச்சு அல்லது எழுத்து வழக்கில் வினைச் சொற்கள் (verb) கண்டிப்பாக தமிழில் தான் இருக்க வேண்டும், வினைச்சொற்களுக்கு தமிழில் பஞ்சமே இல்லை. அதைத் தவிர்த்தால் 'வெட்டி எடு' என்பதற்கு 'கட் பண்ணி எடு' என்று தமிழில் பண்ணி நுழைந்து தமிழ் கெடும்.
மொழிகள் அனைத்துமே ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பு பெற்றவைகள், ஒப்பிட்டுப்பார்த்து அதில் உள்ளது இதில் இல்லை. இதில் உள்ளது அதில் இல்லை என்பது சரியான ஒப்பீடே அல்ல, இல்லாதவைகள் எனக்காட்டப்படும் அனைத்துமே அவற்றிற்கான பொதுப்படையான தேவை என்பது அம்மொழிகளில் இன்றியமையாதது அல்ல என்பதே சரி. உதாரணம் ஜ, ஷ , ஸ் போன்ற எழுத்துக்கள் தூய தமிழுக்கு தேவை இல்லை, ஆனால் வடசொற்களை, பிறமொழி பெயர் சொற்களை விளிப்பில் கொண்டுவருவதற்கு தேவையாக அது அமைக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் அதை தமிழுக்கு இன்றியமையாதவை ( very important) என்று கொள்ள முடியாது.
தமிழுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதில் மொழிப்பற்றாளர்களில் சிலர் குழம்பிப் போய் எல்லாமும் தமிழில் மாற்றவேண்டும் அதுதான் தமிழுக்கு சிறப்பு என்ற நிலை கொண்டிருப்பதும், தமிழுக்கே தேவை இல்லாத ஒன்று, தமிழில் இல்லை என்று அரிய கண்டுபிடிப்பை சொல்லும் தமிழ் தூற்றிகளின் செயலும் தமிழ்வளர்ச்சிக்கு பெரும் தடையே, முன்னதில் நடைமுறைப்படுத்துவதில் குழப்பமும், பின்னதில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியும் தான் நடக்கிறது.
என்னைப் பொருத்து, நான் அறிந்தவரையில் உயர்நிலை தொழிற்கல்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது, அதைபடிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படித்து தேர்சிபெற்றிருப்பது மிகவும் தேவையானது.
--
அன்புடன்,
கோவி.கண்ணன்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
17 கருத்துகள்:
எல்லோருக்கும் முதலில் தாங்கள் எழுதி இருக்க வேண்டும். நாங்கள், இப்படிக் கஷ்டங்கள் ஏற்படலாம் என்று அனுமானத்தில் எழுதியதற்கும் தாங்கள் சொந்த அனுபவ அடிப்படையில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுவும் கண்ணதாசன் ஆன்மீகம் எழுதியது போல், தாங்கள் தமிழில் வேர் பிடித்து, சென்னை ஆங்கிலத்தில் கிளை பரப்பி இன்று சிங்கப்பூரில் விழுது விட்டிருப்பவர். அந்தத் தகுதியின் சிறப்புக்காகச் சொன்னேன்.
நல்ல பதிவு. ஆனால், திடீரென்று கடைசி ரீல் காணாமல் போன சினிமா போல் இருந்தது. இரண்டாம் பகுதியை இன்னும் தெளிவாக நீட்டி இருக்கலாம், அனுபவங்களின் அடிப்படையில்.
TEST !
நடுநிலையான அலசல் !!!
//ஆனால் அவற்றிற்கு தரப்படும் மருந்துகளின் பெயர்கள் பொதுவாக எல்லோருமே அறிந்திருக்க வேண்டியதில்லை மருத்துவர்கள் அறிந்திருந்தாலே போதும், அவற்றையெல்லாம் தமிழ்படுத்துவதற்கான தேவை என்பது இல்லை.//
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில்
"அடுத்த முறை திங்கள் கிழமை அறை எண் 115 வரவும்" என்பதும் தமிழில் எழுதுகிறோம்
அது போல்
த்ரப்படும் மருந்துக்களின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும். (தமிழ் படுத்தப்பட்டு அல்ல).
உதாரணம் : Tetracyclin : டெட்ராசைக்ளின்
இது நல்ல திட்டம்.
இதை நான்கு மிதிவண்டி / நான்கு சுற்று என்று யாரும் இது வரை எழுதவில்லை :) :) :)
கோவி,
சரியான பதில். இதைத்தான் நானும் பல இடத்திலும் சொல்லிவிட்டேன்!
//என்னைப் பொருத்து, நான் அறிந்தவரையில் உயர்நிலை தொழிற்கல்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது, அதைபடிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படித்து தேர்சிபெற்றிருப்பது மிகவும் தேவையானது.//
பொறியியல் படிப்பதே வேலை வாய்ப்பிற்காக தான் என்பது உண்மை,இல்லை தமிழ் தான் வேண்டும் என்றால் தமிழ் இலக்கியம் படிக்கலாம்ல(அப்புறம் கற்றது தமிழ் கதாநாயகன் கதி தான்) அப்படி இருக்கும் போது தமிழ் நாட்டில் வேலை கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை!
ஒரு வேலை தமிழில் பொறியியல் படிப்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை தரும் எனில் , கேள்வியே இல்லை!
அப்படி இருக்கும் இன்றைய சூழலில் நாம் அன்னிய மண்ணைத்தான் நம்பி இருக்க வேண்டி உள்ளது, தமிழில் படித்தால் என்னாவது!
மேலும் தமிழ் வழி மாணவர்களின் குறைப்பாட்டை நீக்க , அவர்களுக்கு பள்ளியிலே "spoken english" சொல்லித்தரலாம்!
யார் என்ன படித்தாலும் தமிழ் வாழவைக்க நாம் வீட்டிலும் வெளியிலும் நல்ல தமிழில் பேசுவோம். அது தான் இப்போதைய தேவை.
//தமிழ் வழி தொழில்நுட்ப பட்டப்படிப்பு தேவையா ?//
வேலைக்கு ஆகாத மேட்டருங்கண்ணா!
நான் என் பிரெண்ட் படிச்ச புத்தகத்த பார்த்திருக்கேன் மேனுபாக்சரிங் புராசஸ் (manufacturing Process )
:(((
அருமையான கருத்துக்கள் கோவியாரே.நல்ல பதிவு.
//RATHNESH said...
எல்லோருக்கும் முதலில் தாங்கள் எழுதி இருக்க வேண்டும். நாங்கள், இப்படிக் கஷ்டங்கள் ஏற்படலாம் என்று அனுமானத்தில் எழுதியதற்கும் தாங்கள் சொந்த அனுபவ அடிப்படையில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுவும் கண்ணதாசன் ஆன்மீகம் எழுதியது போல், தாங்கள் தமிழில் வேர் பிடித்து, சென்னை ஆங்கிலத்தில் கிளை பரப்பி இன்று சிங்கப்பூரில் விழுது விட்டிருப்பவர். அந்தத் தகுதியின் சிறப்புக்காகச் சொன்னேன்.
நல்ல பதிவு. ஆனால், திடீரென்று கடைசி ரீல் காணாமல் போன சினிமா போல் இருந்தது. இரண்டாம் பகுதியை இன்னும் தெளிவாக நீட்டி இருக்கலாம், அனுபவங்களின் அடிப்படையில்.
//
பாராட்டுக்கு நன்றி நண்பரே,
ஒப்பீடு ஒரு பேச்சுக்கு என்றாலும் கண்ணதாசன் கடல், அவருடன் ஒப்பிட அதில் விழுந்து கலக்கும் சிறு மழைத்துளி கூட இல்லை நான்.
காணமல் போன கடைசி ரீலா, அதையெல்லாம் தாங்களும், வவ்வால் ஐயாவும் ஓட்டிவிட்டீர்கள், நானும் ஓட்டினால் எழுந்து ஓடிவிடுவாங்க. கடைசியில் இரு பத்திகளை சேர்த்துள்ளேன்.
ஜப்பான் காரனுக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது, அவர்கள் மொழியில் எல்லாமும் இருக்கிறது என்பதெல்லாம் கப்சாதான், ஜப்பான் மொழியில் புதிய கண்டுபிடிப்பிற்கான ஆங்கில சொற்களை இருக்கும் ஒலி எழுத்துக்களை வைத்து அப்படியே தான் ஜப்பான் எழுத்தில் எழுதி படிக்கிறார்கள். மொழிப்பெயர்பெல்லாம் கிடையாது.
நமது தமிழர்களுக்கு ஆங்கிலம் நன்கு வரும் பின்பு ஏன் நாமும் ஜப்பானியர்கள் போல் கொலைசெய்து மொழிமாற்றிக் கொள்ள வேண்டும் ? தேவை இல்லை. சொற்விளிப்பை அப்படியே 'அனாசின், குரோசின்' என்று எழுதினால் போதும். மொழிமாற்றினால் தான் படிக்க முடியும் என்ற நிலை தமிழர்களின் அறிவுத்திறனுக்கும், உள்வாங்குதலுக்கும் இல்லை. முழுவதையும் மொழிமாற்றுவதும், நடைமுறை படுத்தவேண்டும் என்று சொல்வது தமிழன் தன்னைத்தானே இரும்புத்திரையால் மூடிக் கொள்வது போன்றதுதான், வெளி உலகுடன் தொடர்பு கொள்ள ஜப்பானியர்களைப் போல் மொழிமாற்றியாளர்களை நம்பிக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ் பேச்சுமொழி, ஆங்கிலம் அலுவலக மொழி என்பதை தீவிர தமிழ்பற்றாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
//செல்வம் said...
அருமையான கருத்துக்கள் கோவியாரே.நல்ல பதிவு.
//
செல்வம் ஐயா,
மிக்க நன்றி !
//புருனோ Bruno said...
நடுநிலையான அலசல் !!!
//ஆனால் அவற்றிற்கு தரப்படும் மருந்துகளின் பெயர்கள் பொதுவாக எல்லோருமே அறிந்திருக்க வேண்டியதில்லை மருத்துவர்கள் அறிந்திருந்தாலே போதும், அவற்றையெல்லாம் தமிழ்படுத்துவதற்கான தேவை என்பது இல்லை.//
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில்
"அடுத்த முறை திங்கள் கிழமை அறை எண் 115 வரவும்" என்பதும் தமிழில் எழுதுகிறோம்
அது போல்
த்ரப்படும் மருந்துக்களின் பெயர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும். (தமிழ் படுத்தப்பட்டு அல்ல).
உதாரணம் : Tetracyclin : டெட்ராசைக்ளின்
இது நல்ல திட்டம்.
இதை நான்கு மிதிவண்டி / நான்கு சுற்று என்று யாரும் இது வரை எழுதவில்லை :) :) :)
11:53 PM, December 05, 2007
//
புருனோ / Bruno ஐயா,
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கள், பாராட்டுக்கு நன்றிகள்.
ஆங்கிலத்தில் உள்ளவற்றை சரியான பொருள் தெரியாதபோது தமிழில் எழுதுவது தவறே இல்லை. ஆங்கிலம் தெரியாதவர்கள் அந்த மருந்தின் ஆங்கிலப் பெயர் என்ன என்பதை தெரிந்து கொள்ள வழிவகுக்கும்.
//இதை நான்கு மிதிவண்டி / நான்கு சுற்று என்று யாரும் இது வரை எழுதவில்லை //
:))
//வவ்வால் said...
கோவி,
சரியான பதில். இதைத்தான் நானும் பல இடத்திலும் சொல்லிவிட்டேன்!
//என்னைப் பொருத்து, நான் அறிந்தவரையில் உயர்நிலை தொழிற்கல்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது, அதைபடிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படித்து தேர்சிபெற்றிருப்பது மிகவும் தேவையானது.//
பொறியியல் படிப்பதே வேலை வாய்ப்பிற்காக தான் என்பது உண்மை,இல்லை தமிழ் தான் வேண்டும் என்றால் தமிழ் இலக்கியம் படிக்கலாம்ல(அப்புறம் கற்றது தமிழ் கதாநாயகன் கதி தான்) அப்படி இருக்கும் போது தமிழ் நாட்டில் வேலை கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை!
ஒரு வேலை தமிழில் பொறியியல் படிப்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை தரும் எனில் , கேள்வியே இல்லை!
அப்படி இருக்கும் இன்றைய சூழலில் நாம் அன்னிய மண்ணைத்தான் நம்பி இருக்க வேண்டி உள்ளது, தமிழில் படித்தால் என்னாவது!
மேலும் தமிழ் வழி மாணவர்களின் குறைப்பாட்டை நீக்க , அவர்களுக்கு பள்ளியிலே "spoken english" சொல்லித்தரலாம்!
யார் என்ன படித்தாலும் தமிழ் வாழவைக்க நாம் வீட்டிலும் வெளியிலும் நல்ல தமிழில் பேசுவோம். அது தான் இப்போதைய தேவை.
//
வவ்வால் ஐயா,
நீங்கள் எடுத்துவைக்கும் கருத்துக்கள் எப்போதும் மறுக்க வேண்டும் என்ற சூழல் இருந்தால் அதை மறுக்க முடியாத அளவுக்கு திணற அடித்துவிடுவீர்கள். இங்கு ஒத்தக் கருத்தை எழுதி இருப்பதற்கு பாராட்டுக்களைத் சொல்வதைத் தவிர்த்து ஒன்றும் செய்ய இயலைவில்லை.
:)
நீங்கள் சொல்லும் 'பேச்சு வழக்கிற்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பது' வரவேற்கத்தகுந்த கருத்து, பெற்றோர்களாவது இதை செய்வது தேவைமிக்கது.
தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயற்சியை நன்கு கொடுத்தாலின்றி அவர்கள் தொழில்பட்டப்படிப்பில் நுழையும் போது மழைப்பும், சிறிது திணரலும் இருக்கும். நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.
கோ.க,
சிந்திக்க வைத்த நல்ல பதிவு ! நல்லா யோசிச்சு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி வடிவம் கொடுத்திருக்கீங்க :)
எ.அ.பாலா
//enRenRum-anbudan.BALA said...
கோ.க,
சிந்திக்க வைத்த நல்ல பதிவு ! நல்லா யோசிச்சு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி வடிவம் கொடுத்திருக்கீங்க :)
எ.அ.பாலா
//
எ.அ.பாலா அவர்களே,
நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் பொழுது, இங்கேயும் திரும்பிப் பார்த்து பாராட்டுவது மகிழ்வளிக்கிறது.
மிக்க நன்றி !
//ஆனால் அவற்றிற்கு தரப்படும் மருந்துகளின் பெயர்கள் பொதுவாக எல்லோருமே அறிந்திருக்க வேண்டியதில்லை மருத்துவர்கள் அறிந்திருந்தாலே போதும், அவற்றையெல்லாம் தமிழ்படுத்துவதற்கான தேவை என்பது இல்லை.//
இந்த முறைதான் யாழ்ப்பானத்தில் இருப்பது பிளஸ்ரூ வரை தமிழ்கல்வி, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலக்கல்வி. முதலில் ஆங்கிலத்துக்காகவே அரை வருடங்களை செலவு செய்கிறார்கள்.
//தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயற்சியை நன்கு கொடுத்தாலின்றி அவர்கள் தொழில்பட்டப்படிப்பில் நுழையும் போது மழைப்பும், சிறிது திணரலும் இருக்கும். நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.//
இந்த அனுபவம் எனக்கும் உண்டு நான் இலங்கையில் பிளஸ்ரூ வரை தமிழில் படித்தேன் பின்னர் சென்னை வந்துவிட்டேன், சென்னையில் கணனி பட்டப்படிப்பு படித்தேன் தியறி எல்லாம் ஆங்கிலத்தில் தந்தார்கள் கரும்பலகையை பார்த்து எழுதினேன், ஆசிரியர் தமிழர் என்பதால் சந்தேகங்களை தமிழிலும் சொல்லிதந்தார், பரீட்சைதாழ்களை ஆங்கிலத்தில் மட்டும்தந்தார்கள், கஸ்ரகால்த்திலும் ஒரு நல்லவிடயம் இருந்தது, எட்டு வினாவில் விரும்பிய ஜந்தை செய்யவும் என வரும், தியரியை விட்டு விட்டு புறோக்கிறாம் கேள்விகளை மட்டும் செய்வேன், தியறி எவ்வளவு இலகுவாக வந்தாலும் செய்ய மாட்டேன் செய்ய தெரியாது. எப்படி செய்தாலும் வகுப்பில் முதலாவதாக வந்தேன். பலநாள் கள்வன் ஒரு நாள் பிடிபட்டான். புறோக்கிறாம் மட்டும்செய்யும் விடத்தை ஆசிரியர் கண்டு விட்டார் எனது குட்டு உடைந்து விட்டது, அவர்சொன்னார் ஆங்கிலம் சர்வதேச மொழி எங்கு சென்றாலும் பயன்படும் இப்போது படிக்காது எப்போது படிக்கபோகிறாய் ஆகவே அங்கில வகுப்புக்கு போ என்று, ஒரு வழியாக ஆங்கிலம் படித்து, படித்தபோதும் பயத்தில் தியறி செய்யாது பட்டப்படிபை முடித்தேன்.
பின்னர் ஜேர்மனிவந்து விட்டேன் பிராங்க்போட் ஏர்போட்டுடன் ஆங்கிலம்முடிந்து விட்டது, தெரிந்தாலும் எவனும் பேச மாட்டான், முதலில் இருந்து டொச் படித்தேன், இடையில் ஒரு வருடம் பிரன்ஸ்போய் வாழ்ந்தேன் ஆங்கிலமும் இல்லை டொச்சும் இல்லை, பிரண்ச் படித்தேன் மீண்டும் இங்கு வந்துவிட்டேன். எந்த மொழியில் படித்தாலும் பட்டம் பட்டம் பெற்றாலு சரியான இடத்துக்கு போய் சேர வேணும் இல்லாவிட்டால் ரெம்ப கஸ்டம் அண்ணா:-((((((((((((((((((((((((
//என்னைப் பொருத்து, நான் அறிந்தவரையில் உயர்நிலை தொழிற்கல்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதே நல்லது, அதைபடிக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படித்து தேர்சிபெற்றிருப்பது மிகவும் தேவையானது.//
இந்த முறைதான் யாழ்ப்பானத்தில் இருப்பது பிளஸ்ரூ வரை தமிழ்கல்வி, பல்கலைக்கழகத்தில் ஆங்கிலக்கல்வி. முதலில் ஆங்கிலத்துக்காகவே அரை வருடங்களை செலவு செய்கிறார்கள்.
//தமிழ்வழி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பயற்சியை நன்கு கொடுத்தாலின்றி அவர்கள் தொழில்பட்டப்படிப்பில் நுழையும் போது மழைப்பும், சிறிது திணரலும் இருக்கும். நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.//
இந்த அனுபவம் எனக்கும் உண்டு நான் இலங்கையில் பிளஸ்ரூ வரை தமிழில் படித்தேன் பின்னர் சென்னை வந்துவிட்டேன், சென்னையில் கணனி பட்டப்படிப்பு படித்தேன் தியறி எல்லாம் ஆங்கிலத்தில் தந்தார்கள் கரும்பலகையை பார்த்து எழுதினேன், ஆசிரியர் தமிழர் என்பதால் சந்தேகங்களை தமிழிலும் சொல்லிதந்தார், பரீட்சைதாழ்களை ஆங்கிலத்தில் மட்டும்தந்தார்கள், கஸ்ரகால்த்திலும் ஒரு நல்லவிடயம் இருந்தது, எட்டு வினாவில் விரும்பிய ஜந்தை செய்யவும் என வரும், தியரியை விட்டு விட்டு புறோக்கிறாம் கேள்விகளை மட்டும் செய்வேன், தியறி எவ்வளவு இலகுவாக வந்தாலும் செய்ய மாட்டேன் செய்ய தெரியாது. எப்படி செய்தாலும் வகுப்பில் முதலாவதாக வந்தேன். பலநாள் கள்வன் ஒரு நாள் பிடிபட்டான். புறோக்கிறாம் மட்டும்செய்யும் விடத்தை ஆசிரியர் கண்டு விட்டார் எனது குட்டு உடைந்து விட்டது, அவர்சொன்னார் ஆங்கிலம் சர்வதேச மொழி எங்கு சென்றாலும் பயன்படும் இப்போது படிக்காது எப்போது படிக்கபோகிறாய் ஆகவே அங்கில வகுப்புக்கு போ என்று, ஒரு வழியாக ஆங்கிலம் படித்து, படித்தபோதும் பயத்தில் தியறி செய்யாது பட்டப்படிபை முடித்தேன்.
பின்னர் ஜேர்மனிவந்து விட்டேன் பிராங்க்போட் ஏர்போட்டுடன் ஆங்கிலம்முடிந்து விட்டது, தெரிந்தாலும் எவனும் பேச மாட்டான், முதலில் இருந்து டொச் படித்தேன், இடையில் ஒரு வருடம் பிரன்ஸ்போய் வாழ்ந்தேன் ஆங்கிலமும் இல்லை டொச்சும் இல்லை, பிரண்ச் படித்தேன் மீண்டும் இங்கு வந்துவிட்டேன். எந்த மொழியில் படித்தாலும் பட்டம் பட்டம் பெற்றாலு சரியான இடத்துக்கு போய் சேர வேணும் இல்லாவிட்டால் ரெம்ப கஸ்டம் அண்ணா:-((((((((((((((((((((((((
மிகவும் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி.
கல்வியா தமிழா என்ற ஒரு தலைப்பில் விவாதம் நடப்பதால்
முத்தமிழ் குழுமத்தில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://groups.google.com/group/muththamiz
நன்றி.
வணக்கம் கோவி.கண்ணன்,
நானும் அதே கருத்தை உடையவன் என்கிற வகையில், சிலவற்றை கூற விரும்புகிறேன். தமிழ் பற்று வேறு, தமிழ் வழி தொழில்,மருத்துவ கல்வி வேறு என்பதை தெரியாமல் நம் அரசியல்வாதிகள் குழப்புகிறார்கள். Tamil Nadu Politician should not ask for these thing now. My question towards those Politicians, are,
1) Have you got the solutions for it right now?
2)Have you created the exposure for our tamil people. (You create the exposure and then you can ask the tamil people to go for it.)
3) Have you got any Vision and Mission(If they got, we can accept it)
One more thing, I want to highlight, some politicians are saying that the Japan,Europe,China,Russia and many other countries are learning in their own launguage and thy are devoloped. ( Ok. I accept it. But I ask you one question, Is Our Tamil Nadu, a Country? The places in their highlights are Countries, they have only one or two launguage in their countries, But in Here. Imagine...............) . For Everything we have to beg the Central Government which don't care much about Non-Hindi speaking state.(Tamil Nadu Only) HUH!!!
Whose Mistake??? Please feadback.
அன்புடன் ஜோதிபாரதி.
வணக்கம்
சரியாக சொன்னீர்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
கருத்துரையிடுக