'இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்' கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண மனிதனாக மாற்றிக் கொண்டு கீழே வருகிறார். அருகில் இருக்கும் ஆலயத்தின் மணி ஓசைக் கேட்க, தன்னை அழைப்பதை உணர்கிறார். உள்ளே நுழைகிறார், பக்தர்களுடன் வரிசையில் நிற்கிறார், அர்சகர் இவருடைய அருகில் செல்லும் போது
இறைவன் : நான் பகவான் வந்திருக்கேன்
அர்சகர் : நட்சத்திரம் சொல்லுங்கோ
இறைவன் : நட்சத்திரமா ? எனக்கு பிறப்பே இல்லை
அர்சகர் : லோகத்துல பிறப்பு இல்லாதவர் இருப்பாரா ? அநாதையா ? பரவாயில்லை...பகவான் பேருக்கு அர்சனைப் பண்ணிடுறேன்... அப்பறம் ஷேமமாக இருப்பேள். போய் அர்சனை தட்டும் சீட்டும் வாங்கி வாங்கோ
*******
இறைவன் வந்த வழியாக திரும்பி நடக்கிறார், அருகே வாசலில் செருப்பு பாதுகாப்பாளரிடம் செல்கிறார்
பாதுகாப்பாளர் : சாமி இன்னா வோணும்,
இறைவன் : நான் தான் சாமி
பாதுகாப்பாளர் : உன் பேரு சாமியா, ரொம்ப களைச்சு போய் இருக்கே...தண்ணி குடிக்கிறியா ?
இறைவன் : அதெல்லாம் வேண்டாம்
பாதுகாப்பாளர் : வேற இன்னா வோணும் ? வீட்டாண்ட போன பையனைக் காணும், சித்த இப்பிடி குந்திகினு இரு யாராவது செருப்புப் போட்டால் வாங்கி வையி, வயித்த கலக்குது போய்டு வந்துடுறேன் என்று சொல்லி கள்ளாவைப் பூட்ட சாவியைத் தேடுகிறார்
இறைவன் எதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்
பாதுகாப்பளர் : ஐயே...இது பூட்ட கேசு
*******
அங்கே அருகில் இருந்த க்ளினிக்கைப் பார்க்கிறார், டாக்டர் பத்மனாபன் என்று போட்டிருந்தது,
மூடப் போகிற நேரம் யாரும் பேசண்ட் இல்லை, இறைவன் டாக்டரைப் பார்க்கனும் என்றதும் ஒரு அம்மா உள்ளே போகச் சொல்லுது. டாக்டர் பக்தி பழமாக இருந்ததுடன், அன்று பிஸ்னஸ் முடியும் நேரம் என்பதால் சாமி படத்திற்கு கற்பூரம் காட்ட ஆயத்தமாகும் வேளையில், இறைவனைப் பார்த்துவிடுகிறார்
டாக்டர் : உட்காருங்க... உங்க பேரு
இறைவன் : நான் தான் இறைவன்
டாக்டர் ; நல்ல பெயர், இறையன்பு, இறையடியான் போல உங்க பேரு இறைவனா ?
இறைவன் : ஆமாம்
டாக்டர் : உங்களுக்கு என்ன செய்து
இறைவன் : எனக்கு ஒண்ணும் செய்யல, நான் தான் எல்லோருக்கும் இறைவன்
டாக்டர் இறைவனின் கையை நீட்டச் சொல்லி நாடியைப் பார்க்கிறார், மனதுக்குள் 'எல்லாம் சரியாகத் தானே இருக்கு...பின்னே... யோசித்தவாறு'
டாக்டர் : நீங்க தப்பான டாக்டரிடம் வந்திருக்கிங்க, பக்கத்து தெருவுல பரந்தாமன் என்று ஒருவர் இருக்கிறார், எனக்கு நண்பர் தான் போன் போட்டுச் சொல்கிறேன், மன நல சிகிச்சை யெல்லாம் அவர் தான் கொடுப்பார்
*******
இறைவன் ஏமாற்றமாக அங்கிருந்து கிளம்ப.....அருகில் "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர சுவாமிஜி சரணாகதி ஆஸ்ரமம்" என்ற பெயர் முகப்பில் தாங்கி இருந்த ஒரு ஆசிரமம் போன்ற இடம், பஜனைப் பாடல்கள் ஒலிக்க பத்தி மணம் கமழந்தது....அந்த வீட்டிற்குள் நுழைகிறார்..."
எல்லோரும் பக்தி பெருக்குடன் மெய் மறந்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டு பாடிக் கொண்டு இருக்கின்றனர்
ஆஸ்ரம ஸ்வாமிஜி , எல்லோரையும் சகஜ நிலைக்குத் திரும்பச் சொல்கிறார். வாசலில் நிற்கும் இறைவனை சைகையால் அங்கே ஓரமாக அமரச் சொல்லிவிட்டு பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்.....'காமமே கடவுள்....காமத்தை முறையாக பெறுபவனும்...தருபவனும் இறைவனை தரிசிக்கிறான்...இல்லை இல்லை...இறைவனே அவன் தான்...இறைவனாகவே ஆகுகிறான்' ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது,
அருகில் இருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார் இறைவன்
பக்தர் : புதுசா வந்திருக்கிங்களா ?
இறைவன் : ஆமாம்
பக்தர் : யார் தேடினாலும் கிடைக்காத இறைவனின் அவதாரம் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர ஸ்வாமிகள்... இன்று இவர் இங்கே ரகசியமாகத்தான் வந்திருக்கிறார்...சொல்லிவிட்டு வந்தால் பக்தர் கூட்டம் கட்டுப்படுத்த முடியாது...குறிப்பாக பெண்களின் கூட்டம்....பகவான் அல்லவா ?
இறைவன் : நான் கூட இறைவன் தான்
பக்தர் : எங்க வந்து என்ன சொல்றிங்க..,பாபம் பண்ணிடாதிங்க...நாமெல்லாம் மனிதர்கள்...அவர் ஒருவர் தான் பகவான்... அவர் தேஜஸ் மின்னுவதைப் பாருங்கள்
இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது
சாமியாரின் அருளுரையை கேட்டு பரவசமடைந்தவர்கள்
"சர்வேஸ்வர பகவானே....நாங்கள் ஜென்மம் தொலைத்தோம்...புண்ணியம் பெற்றோம்" என்கிறார்கள்
நல்ல வேளை ஒரு 'பெண்' வேடம் எடுத்து நான் வரவில்லை...தப்பினேன் அங்கிருந்து மெதுவாக வெளியேறினார்.... இறைவன்
*******
அருகில் இருந்த இறைமறுப்பாளர்களின் தலைவரின் பெரிய பங்களா போன்ற இல்லத்துக்குள் அனுமதி கேட்டு காத்திருந்து உள்ளே செல்கிறார்
இறைமறுப்பாளர் : என்ன விசயமாக வந்திருக்கிங்க
இறைவன் : இறைவன் உண்டு, நான் தான் இறைவன்
இறைமறுப்பாளர் : முதலில் நீங்கள் சொல்வது பொய், அப்படி ஒன்று இல்லவே இல்லை
இறைவன் : நான் தான் உங்கள் எதிரில் இருக்கிறேனே, நான் உண்மை
இறைமறுப்பாளர் : அப்படியென்றால் ஒன்று கேட்கிறேன்..... ஒருபக்கம் பணக்காரர்கள் இருக்கிறார்கள், ஏழைகள் இருக்கிறார்கள் ஏற்றத் தாழ்வு ஏன் ? ஏழைகள் வஞ்சிக்கப்பாடுவது ஏன் ?
இறைவன் : உங்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு 500 கோடி...நீங்கள் நினைத்தால் ஒரு லட்சம் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம், 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறீர்கள், இன்றைய தேதியில் எதிர்காலத்தில் உங்கள் பேரனுக்கு வாரிசு இருக்குமா இல்லையா என்றே உங்களுக்கு தெரியாது...உங்கள் சொத்துக்களெல்லாம் 4 ஆவது தலைமுறையால் தின்றே அழிக்கப்படுமா என்று கூட உங்களுக்கு தெரியாது, இருந்தாலும் பேராசையால் சொத்துக்களை குவித்தே வருகிறீர்கள், நீங்கள் மனது வைத்தால் ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்....பணக்காரர்களின் சுரண்டலால் தானே ஏழை பரம ஏழை ஆகிறான்
இறைமறுப்பாளர் : இன்கெம்டாக்ஸ் ஆலுவலத்திலிருந்து வந்திருக்கிங்களா ? சொத்துவிபரமெல்லாம் சரியாகச் சொல்றிங்க...நாளைக்கு ஆடிட்டரிடம் பேசுங்க...இப்ப கிளம்புங்க
*******
அங்கிருந்து கிளம்புகிறார்... அருகே ரயில் தண்டவாளம்
ஒருவர் பரபரப்புடன் ரயிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்... ரயில் நெருங்கவும் தண்டாவளத்தில் பாய முயன்றவரை இழுத்துவிட்டு.... தனது சக்தியால் அவரை சாந்தமடைய வைத்துவிட்டு
இறைவன் : நான் இறைவன் சொல்லுங்க உங்களுக்கு என்ன கஷ்டம்...
தற்கொலை ஆசாமி : நகை பணமெல்லாம் சூதாட்டத்தில் போய்விட்டது கடன் தொல்லை அதனால் தான் தற்கொலை செய்ய வந்தேன்...நீங்கள் இறைவன் என்றால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுங்கள்...இல்லை என்றால் என்னை சாகவிடுங்கள்.
இறைவன் : நீங்கள் புத்திக் கெட்டுப் போய் செய்த பிழையெல்லாம் என்னால் எப்படி சரிசெய்ய முடியும்... அப்படியே செய்தாலும் மீண்டும் சூதாட்டத்தில் இறங்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் ?
தற்கொலை ஆசாமி : உதவ முடிந்தால் இருங்கள்...இல்லை என்றால் போய்விடுங்கள்... எனக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை... என்னைப் பொறுத்து இறைவனே இல்லை என்று முடிவு செய்து கொள்கிறேன்
*******
அங்கிருந்து கிளம்ப
தூயத் தமிழில் ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடந்து செல்ல அவரின் அருகில் சென்று இறைவன்
இறைவன் : நானே இறைவன் அனைத்தையும் ரட்சிப்பவன்
செந்தமிழர் : ரட்சிப்பவன் என்பது வடசொல், காப்பவன் என்று சொல்லி இருக்க வேண்டும், செந்தமிழ் பேசாத நீங்கள் இறைவனாக இருக்க முடியாது.
திடுக்கிட்ட கடவுள்... சொல்லிக் கொள்ளமால்
*******
அங்கே, அருகில் ஒரு ஜோதிடரின் வீட்டை அடைகிறார்
இறைவன் : நான் இறைவன் வந்திருக்கிறேன், உண்மையான இறைவன்
ஜோதிடர் : எனக்கு சனி திசையின் ஆரம்ப நாட்கள் நடக்கிறது, இப்போது இறைவன் எனக்கு முன்பு வரும் கிரக அமைப்பு கொஞ்சம் கூட இல்லை. பைத்தியகாரனுக்கு நான் ஜோதிடம் பார்ப்பது இல்லை...கிளம்புங்க
கிளம்பினார்,
*********
வழியில்,
ஒரு தாயின் இடுப்பில் இருந்த குழந்தை இறைவனைப் பார்த்து முகம் மலர... மிக்க மகிழ்ச்சியுடன் டாட்டா சொல்லியது
"சும்மா இரு.... உங்க அப்பாவுக்கு காட்டச் சொன்னால் காட்ட மாட்டே.....கண்டவங்களுக்கும் டாட்டா காட்டனுமா ?" அந்த தாய் அதனை அதட்டினாள்....இறைவன் அதைக் கேட்டதைத் தெரிந்து சிறிது சங்கடமாக நெளிந்தாள் அந்த தாய்
குழந்தையின் முகத்தில் இருந்த புன்னகையில் கிடைத்த திருப்தியுடன் இறைவன் மறைந்துவிட்டார்.
**********
இறைவனைத் தேடுகிறவர்கள் அனைவருமே....ஓவியத்திலும் கல்லிலும் வடித்திருப்பது போன்று இறைவன் இருப்பான் என்றே நினைக்கிறார்கள்.
சாதரண மனிதனாக வெறும் கையோடு வந்தால் எவரும் உணரக்கூடிய நிலையில் கூட இல்லை. அப்படியே முருகனாகவோ வேறு எதோ ஒரு கடவுளாக முன் தோன்றினாலும் போட்டிருக்கும் நகையெல்லாம் ஒரிஜினலா என்று அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்டுவர், இவர்கள் துயரப்படும் போது சரியான நேரத்தில் உதவி வரவில்லை என்றால் இறைவன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே என்பர்.
இறைவன் இல்லை என்போரும்....தெரிந்தே செய்யும் தங்களின் அடாத செயல் எவருக்கும் தெரியாமல் இருந்தால் தங்களுக்கு தண்டனை இல்லை...இன்று வரை நன்றாகத் தானே வாழ்கிறோம்... நம்மை யார் தடுக்கிறார்கள் ? ஒருவரும் இல்லையே ! என்ற சுய கேள்வி / பதிலில் இறைவனின் இருப்பை பலமாகவே மறுக்கிறார்கள்
இணைப்பு : நான் கடவுள் - ஸ்வாமி ஓம்கார்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
35 கருத்துகள்:
சுவாமி கோவியானந்தாவிற்கு சிலாங்கு நல்லாத்தான் வருது சாமியோ!
பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது அங்கே இறைவன் வருகிறார்.
எல்லோரும்: வாங்க வாங்க.மகிழ்ச்சி. உங்க பதிவு பெயர் என்ன?
இறைவன்: நான் இறைவன்.
எல்லோரும்: அட! நான் இறைவன்? சூப்பரா இருக்கு. இறை மறுப்பு எழுதுறீங்களா இல்லை ஆன்மீகமா எழுதறீங்களா?
இறைவன்: நான் எழுதறேந்தான். ஆனா பதிவெல்லாம் எழுதறதில்லை.
எல்லோரும்: அப்ப நீங்க பத்திரிக்கையில் எழுதறீங்களா? எதெதுலேன்னு சொல்லுங்க.
இறைவன்: அங்கேயும் இல்லை. மக்கள் தலையிலே எழுதிக்கிட்டு இருக்கேன்.
எல்லோரும்: மக்கள் தலைன்னு புதுசாச் சிற்றிதழ் வருதா?
அடடா...தெரியாமப்போச்சே. நீங்க பேசாம அந்த இதழை இணைய இதழா மாத்திருங்க. நாங்களும் படிச்சுப் பார்த்துப் பின்னூட்டம் போடுவோம். அப்படியே ஒரு பதிவையும் ஆரம்பிச்சுருங்க. இலவசம்தான். உங்களுக்கு என்னென்ன தோணுதோ அத்தனையும் எழுதலாம். இடப்பிரச்சனை, எடிட்டர் பிரச்சனைன்னு ஒன்னும் கிடையாது. அப்படியே உங்க இணைய இதழையும் கட்டணம் இல்லாம இலவசமா வச்சீங்கன்னா ஹிட் கவுண்ட்டர் மாசம் ரெண்டு லட்சம் காமிக்க நாங்க கேரண்டி.
இறைவன் நொந்தபதிவராக ஓடி மறைகிறார்:-)
Kovi and teacher- superb...
K0vi-Hatsoff!
நல்லாயிருக்கு!
நல்ல கற்பனை!
//இறைவன் இல்லை என்போரும்....தெரிந்தே செய்யும் தங்களின் அடாத செயல் எவருக்கும் தெரியாமல் இருந்தால் தங்களுக்கு தண்டனை இல்லை...இன்று வரை நன்றாகத் தானே வாழ்கிறோம்... நம்மை யார் தடுக்கிறார்கள் ? ஒருவரும் இல்லையே ! என்ற சுய கேள்வி / பதிலில் இறைவனின் இருப்பை பலமாகவே மறுக்கிறார்கள்// - அருமையான கருத்து. இறைவன் உண்டு என்று நம்பினால் தவறு செய்யும்போது மனது உறுத்தும். இன்று இல்லாவிட்டாலும் நாளை நாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும். இறைவன் இல்லை என்று நினைத்துவிட்டால் பிரச்சனயே இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். இப்படிப்பட்ட மனப்பான்மை தற்போது அதிகரித்து வருகிறது.
// இவர்கள் துயரப்படும் போது சரியான நேரத்தில் உதவி வரவில்லை என்றால் இறைவன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே என்பர்.//
இறைவன் எல்லா நேரத்திலும் உதவி செய்வதில்லை. பல நேரங்களில் நாம் வேண்டினாலும் ஒன்றும் கிடைப்பதில்லை. இறைவன் அவர் விருப்பப்படி சிலருக்கு கேட்பதெல்லாம் கொடுப்பார், சிலருக்கு கொடுக்க மாட்டார். கேட்பதெல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் நமக்கு மூளை, கை, கால்கள் எல்லாம் எதற்கு.
நம்மால் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் வரும்போது இறைவனிடம் கேட்ட்பதை தவிர வேறு வழியில்லை. இறைவன் பார்த்துக்கொள்வான் என்று நினைப்பதே ஒரு தன்னம்பிக்கையையும் ஆறுதலையும் தரும் விஷயம்.
அருமை.. அருமை.. மிக அருமை.. அனைத்தும் உண்மையே..
//
இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது
//
ஹா ஹா ஹா ஹா..
//ஜோதிபாரதி said...
சுவாமி கோவியானந்தாவிற்கு சிலாங்கு நல்லாத்தான் வருது சாமியோ!
//
ஜோதிபாரதி,
பின்னே பலவூர் தண்ணி குடிச்சிருக்கோம்ல :)
//துளசி கோபால் said...
பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போது அங்கே இறைவன் வருகிறார்.
எல்லோரும்: வாங்க வாங்க.மகிழ்ச்சி. உங்க பதிவு பெயர் என்ன?
.
.
.
//
துளசி அம்மா, பதிவர் சந்திப்பில் கடவுள் உங்கள் கற்பனையும் அருமை.
'மக்கள் தலை' இதழின் இணைய முகவரி கிடைக்குமா ?
:)
// ILA said...
Kovi and teacher- superb...
K0vi-Hatsoff!
11:20 AM, October
//
இளா,
இந்தவார தமிழ்மண நட்சத்திர பதிவராகிய உங்களிடம் கிடைத்தப் பாராட்டுக்கு மிக்க நன்றி !
//ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கு!
//
இறைவனை வெறுமையான மனதோடு அனுப்ப முடியவில்லை, கடைசியில் ஒரு குழந்தையைச் சேர்த்து இருக்கிறேன்
நான் தான் கடவுள் வந்திருக்கேன்.
பின்னூட்டம் போடுறேன்...
நம்புங்க கோவியாரே....
//சலாஹுத்தீன் said...
நல்ல கற்பனை!
//
பாராட்டுக்கு மிக்க நன்றி !
// Robin said...
அருமையான கருத்து. இறைவன் உண்டு என்று நம்பினால் தவறு செய்யும்போது மனது உறுத்தும். இன்று இல்லாவிட்டாலும் நாளை நாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் இருக்கும்.//
அது வெறும் பயம் தான், ஆனால் யாரும் அந்த பயத்தை வைத்துக் கொண்டுதிருந்துவதில்லை. கடவுளை எப்படியாவது சரிகட்டி தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்றே சாகும் வரையில் நினைப்பார்கள். :)
//இறைவன் இல்லை என்று நினைத்துவிட்டால் பிரச்சனயே இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். இப்படிப்பட்ட மனப்பான்மை தற்போது அதிகரித்து வருகிறது.
11:49 AM, October 17, 2008//
சரிதான். பலர் தங்கள் செய்யும் தவறுகளுக்கு ஞாயம் கற்பிப்பதற்கே இல்லை என்று சொல்லத் துணிந்துவிட்டார்கள்
//Robin said...
இறைவன் எல்லா நேரத்திலும் உதவி செய்வதில்லை. பல நேரங்களில் நாம் வேண்டினாலும் ஒன்றும் கிடைப்பதில்லை. இறைவன் அவர் விருப்பப்படி சிலருக்கு கேட்பதெல்லாம் கொடுப்பார், சிலருக்கு கொடுக்க மாட்டார். கேட்பதெல்லாம் இறைவன் கொடுத்துவிட்டால் நமக்கு மூளை, கை, கால்கள் எல்லாம் எதற்கு.
11:55 AM, October 17, 2008
//
எல்லாம் இருந்தும் தரும சிந்தனை உள்ளவர்கள் குறைவே, இவர்கள் பொன் பொருளுக்காக வேண்டாவிட்டாலும் இருப்பது போய்விடக் கூடாது என்று வேண்டிக்கொள்வர்.
//Robin said...
நம்மால் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் வரும்போது இறைவனிடம் கேட்ட்பதை தவிர வேறு வழியில்லை. இறைவன் பார்த்துக்கொள்வான் என்று நினைப்பதே ஒரு தன்னம்பிக்கையையும் ஆறுதலையும் தரும் விஷயம்.
11:57 AM, October 17, 2008
//
இப்படி நினைப்பதைவிட தனக்கு பிடிக்காதவர்களுக்கு எதும் விபரீதமாக நேர்ந்துவிட்டால் அது கடவுள் கொடுத்த தண்டனை என்று வெளிப்படையாகவே சொல்லுவார்கள். பார்த்தியா கடவுள் இருக்கான்னு சொன்னேனே...என்பார்கள் !
:)
//பூச்சாண்டியார் said...
அருமை.. அருமை.. மிக அருமை.. அனைத்தும் உண்மையே..
//
இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது
//
ஹா ஹா ஹா ஹா..//
பூச்சாண்டியார்,
பாராட்டுக்கு மிக்க நன்றி !
//VIKNESHWARAN said...
நான் தான் கடவுள் வந்திருக்கேன்.
பின்னூட்டம் போடுறேன்...
நம்புங்க கோவியாரே....
12:26 PM, October 17, 2008
//
VIKNESHWARAN,
நீ தான் கடவுள் ! நான் ஒப்புக் கொள்கிறென். ஆனால் காணிக்கை எதும் கேட்கப்படாது ! :)
Excellent..
உங்கள மனசுல நெனச்சு எடுத்த வெளம்பரம்
http://surveysan.blogspot.com/2008/10/blog-post_14.html
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,
அருமையான பதிவு.
இதை கற்பனை என சொல்ல முடியாது.எனக்கு நடந்த அனுபவத்தின் சிறு பகுதியையே புனைவாக குருகதையில் வெளிபடுத்தினேன்.
ஆகவே உண்மை சில நேரத்தில் கற்பனையாக தெரிவதுண்டு.
உங்கள் பதிவுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு.
உங்கள் பதிவில் குருகதைக்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.
ஒரு சின்ன திருத்தம் : அதிகமான இந்தியர்கள் வைத்திருக்கும் கருத்தை போல உங்கள் கருத்திலும் “ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது“ என கூறி இருந்தீர்கள்.
சனாதன தர்ம வழியில் இல்லை என்றாலும் ஓஷோ எனும் அந்த ”மனிதர்”(பகவான் அல்ல) சில நற்செயல்களை செய்துள்ளார்.
அதற்காக அனைத்தையும் அவரிடத்தில் ஏற்றுகொள்ளவேண்டும் என சொல்லவில்லை. அவரின் கருத்தை படித்து பின்பு விமர்சிக்கும் படி கோரிக்கை வைக்கிறேன்.
காமத்தை வெளிப்படையாக பேசுவது என்பது இன்று வரை ஆன்மீகவாதிகளுக்கு தடைசெய்ய பட்ட விஷயமாகவே இருக்கிறது.
ஆன்மீக உயர்நிலையில் இருக்கும் பொழுது காம உணர்வுகள் பற்றி அனுபவம் ஏற்படும். அது சாதாரண இரு உடல்கள் சேர்வதை போன்றதில்லை. அதை வெளிப்படுத்தியவர்கள் குறைவே. வாத்சாயனார் என்பவர் எழுதிய நூல் என்ன என்பது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு பிரம்மச்சாரி என்பதும் ஆன்மீக பரம்பரையை சேர்ந்தவர் என்பதும் பலருக்கு தெரியாது. அந்த நூல் வெளியிடப்பட்டதும் அவர் எரித்து கொல்லப்பட்டார். இன்று அவர் நூல் வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் குறிப்பிட்டதை போன்ற நபர்கள் திருச்சியில் இருந்ததாகத்தான் வரலாறு சொல்கிறது. இன்றும் அவர்கள் தங்கள் பணியை முன்பு செய்ததை விட செம்மையாகவே செய்கிறார்கள்.
//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,
அருமையான பதிவு.
//
ஸ்வாமி ஓம்கார்,
நன்றி !
//இதை கற்பனை என சொல்ல முடியாது.எனக்கு நடந்த அனுபவத்தின் சிறு பகுதியையே புனைவாக குருகதையில் வெளிபடுத்தினேன்.
ஆகவே உண்மை சில நேரத்தில் கற்பனையாக தெரிவதுண்டு./
மறுப்பதற்கில்லை !
//உங்கள் பதிவுகூட நடந்திருக்க வாய்ப்புண்டு.
//
நான் எழுதியது போல் இறைவன் எத்தனை முறை வந்து பார்த்து திரும்பினாரோ !
:))))
//உங்கள் பதிவில் குருகதைக்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.//
உங்கள் கதைக்கு எதிராக எழுதவில்லை என்று நினைத்துக் கொள்ளாதவரை மிக்க மகிழ்ச்சி !
//ஒரு சின்ன திருத்தம் : அதிகமான இந்தியர்கள் வைத்திருக்கும் கருத்தை போல உங்கள் கருத்திலும் “ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது“ என கூறி இருந்தீர்கள்.//
ஸ்வாமிஜி, மன்னிக்கவும், ஓசோ பற்றி ஓரளவுக்கு அறிந்தவன் தான் நான். சுகிசிவம் கூட அடிக்கடி ஓசோ பற்றி வருத்தப்பட்டு குறிப்பிடுவார், "செக்ஸ் சாமியார் என்று முத்திரை குத்தி ஓசோவின் கருத்துக்களை படிப்பதை பலர் புறக்கணித்துவிட்டார்கள், அது தவறு, மனிதனுக்கு எதில் நாட்டம் இருக்கிறதோ அதையும் சேர்த்து சொல்வதில் தான் ஒரு ஆன்மிகவாதியின் வெற்றி இருக்கிறது... பலர் நினைப்பது போல் ஓஷோ தவறான மனிதர் இல்லை" என்று சொல்லிவருகிறார். அதில் எனக்கு மறுப்பும் இல்லை.
நான் இங்கே ரஜினிஸ் ரேஞ்சில் என்று குறிப்பிட்டதற்குக் காரணம், பலரின் ஆசிரமங்கள் ஆன்மிகம் என்ற போர்வையில் காமக் கூடங்களாகவே இருக்கிறது என்பதும் உண்மை.
//சனாதன தர்ம வழியில் இல்லை என்றாலும் ஓஷோ எனும் அந்த ”மனிதர்”(பகவான் அல்ல) சில நற்செயல்களை செய்துள்ளார்.
அதற்காக அனைத்தையும் அவரிடத்தில் ஏற்றுகொள்ளவேண்டும் என சொல்லவில்லை. அவரின் கருத்தை படித்து பின்பு விமர்சிக்கும் படி கோரிக்கை வைக்கிறேன்.//
நான் ஓஷோ பற்றி மேலே சொன்ன விளக்கம் போதுமானதா ?
//காமத்தை வெளிப்படையாக பேசுவது என்பது இன்று வரை ஆன்மீகவாதிகளுக்கு தடைசெய்ய பட்ட விஷயமாகவே இருக்கிறது.//
காமம் துறந்தால் கடவுளை அறியலாம் என்ற ஒரு கூற்றும் இருக்கிறது, அதாவது சிற்றின்ப நுகர்ச்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுதல்... அதாவது மற்றொரு உடலால் வசீகரிக்கப்படாதவர்கள் அனைத்தில் இருந்தும் விலகுதல் எளிது என்கிறார்கள். இதுபற்றி என்ன சொல்லுகிறீர்கள் ?
//ஆன்மீக உயர்நிலையில் இருக்கும் பொழுது காம உணர்வுகள் பற்றி அனுபவம் ஏற்படும். அது சாதாரண இரு உடல்கள் சேர்வதை போன்றதில்லை. அதை வெளிப்படுத்தியவர்கள் குறைவே. //
பேரின்பம் ? ஆழ்ந்த அமைதியில் இருக்கும் போது கிடைப்பது பேரானந்தம் என்றே சொல்கிறார்கள். அதை காமம் துய்தலுடன் ஒப்பிட முடியாது என்றே நினைக்கிறேன்.
//வாத்சாயனார் என்பவர் எழுதிய நூல் என்ன என்பது உங்களுக்கு தெரியும். அவர் ஒரு பிரம்மச்சாரி என்பதும் ஆன்மீக பரம்பரையை சேர்ந்தவர் என்பதும் பலருக்கு தெரியாது. அந்த நூல் வெளியிடப்பட்டதும் அவர் எரித்து கொல்லப்பட்டார். இன்று அவர் நூல் வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது.//
வாத்ஸ்யாயனர் பிரம்மச்சாரி என்பது தெரியும். சங்கரர் பிரம்மசாரி என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழு உண்மையல்ல, அவரும் கூடுவிட்டு கூடு பாய்ய்ந்து ஒரு அரசனின் மனைவியை அனுபவித்து வந்து காமம் பற்றிய வாதத்தில் வென்றாராம்.
//நீங்கள் குறிப்பிட்டதை போன்ற நபர்கள் திருச்சியில் இருந்ததாகத்தான் வரலாறு சொல்கிறது. இன்றும் அவர்கள் தங்கள் பணியை முன்பு செய்ததை விட செம்மையாகவே செய்கிறார்கள்.
//
நான் மனதில் இருந்து தான் எழுதினேன். புனைவுதான். யாரையும் குறிப்பிட வில்லை.
//கிருஷ்ணா 1:12 PM, October 17, 2008
Excellent..
//
கிருஷ்ணா,
பாராட்டுக்கு நன்றி !
உங்களைப் பற்றி எந்த விபரமும் தெரிந்து கொள்ளாமல் வெறும் நன்றி சொல்ல மனது கொஞ்சம் கூசுகிறது. எனது பெரும்பாலன பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துரைக்கிறீர்கள். உங்களைப் பற்றி சிறிதேனும் அறிந்து கொள்ள ஆவல் தான்.
//SurveySan said...
உங்கள மனசுல நெனச்சு எடுத்த வெளம்பரம்
http://surveysan.blogspot.com/2008/10/blog-post_14.html
//
சர்வேசன்,
தங்களது பதிவைக் கண்டேன். பின்னூட்டமும் இட்டேன். இங்கு ஒரு பின்னூட்டம் போட்டு பின்னூட்ட உயர எல்லையை உயர்த்தியதற்கும் நன்றி !
பதிவைப் பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே ?
// ***கண்டவங்களுக்கும்*** டாட்டா காட்டனுமா ?" அந்த தாய் அதனை அதட்டினாள்....இறைவன் அதைக் கேட்டதைத் தெரிந்து சிறிது சங்கடமாக நெளிந்தாள் அந்த தாய்//
இறைவனைக் கண்டுகொள்பவர்கள் குழந்தைகள்தாம்.
//இறைவன் : நீங்கள் புத்திக் கெட்டுப் போய் செய்த பிழையெல்லாம் என்னால் எப்படி சரிசெய்ய முடியும்... அப்படியே செய்தாலும் மீண்டும் சூதாட்டத்தில் இறங்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் ?
தற்கொலை ஆசாமி : உதவ முடிந்தால் இருங்கள்...இல்லை என்றால் போய்விடுங்கள்... எனக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை... என்னைப் பொறுத்து இறைவனே இல்லை என்று முடிவு செய்து கொள்கிறேன்//
இரண்டு பக்க நியாயமும் சரியா இருக்கு, மிக தெளிவான சிந்தனை. நல்லா எழுதி இருக்கீங்க கோவி.
//பாலராஜன்கீதா said...
இறைவனைக் கண்டுகொள்பவர்கள் குழந்தைகள்தாம்.
//
தூய்மையான மனதுக்குத் தானே எல்லாம் தெரியும். குழந்தைகளிடம் அது இருக்கிறது.
பின்னூட்ட கருத்துக்கு மிக்க நன்றி ஐயா !
//Raj said...
இரண்டு பக்க நியாயமும் சரியா இருக்கு, மிக தெளிவான சிந்தனை. நல்லா எழுதி இருக்கீங்க கோவி.
7:10 PM, October 17, 2008
//
பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜ் !
மொழக்கிட்டீங்க .. போங்க.
மொழக்கிட்டீங்க .. போங்க. :-)
//குமரன் (Kumaran) said...
மொழக்கிட்டீங்க .. போங்க. :-)
//
குமரன்,
இதெல்லாம் அப்பவே படிச்சிட்டிங்க, வழக்கம் போல் ஒப்புதல் இல்லாததால் பின்னூட்டம் வரவில்லை என்று நினைத்தேன் ! :)
நன்றி !
வரிசையாகப் படித்துக் கொண்டு வருவதில்லை. மின்பிரதி எடுத்துக் கொண்டு பேருந்தில் வரும் போது மடிக்கணியில் படிப்பதால் முன்பின்னாகத் தான் படித்து வருகிறேன். அதனால் இனிமேல் அப்படி எண்ணாமல் 'கட்டாயம் பின்னூட்டம் வரும்' என்று 'நம்பிக்கை'யோடு இருங்கள். :-)
நல்லாயிருக்கு. உண்மையிலே இறைவன் நேரில் வந்தால் இந்த நிலைமைதான்
பதிவர் சந்திப்பில் இறைவன் காமெடியோ காமெடி.
கருத்துரையிடுக