பின்பற்றுபவர்கள்

10 அக்டோபர், 2008

தர்பூசனி சாப்பிட்டால் பாவம் !

"கடவுளே நான் நாத்திகர்களைப் பற்றிக் கூட கவலைப்படல, தயவு செய்து கோவி.கண்ணனுக்கு உன் இருப்பை புரியவைத்துவிட்டால் போதும்", "இவனுக்கு என்ன ஆச்சு, நாமெல்லாம் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லைன்னு சொல்றோம்...இவன் அடிக்கடி பெரியார் பெயரைச் சொல்லுகிறான்...ஆத்திகவாதிகளிடம் தொடர்பு வச்சிருக்கான்....லூசாப்பா நீய்யி..." என் எழுத்துக்களைப் படிப்பவர்கள் இருவகையாக நினைக்கக் கூடும். :) ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை உண்டு... அப்படி இருந்தால் தான் ஆறு. படகுக்கு நட்டாற்றில் செல்ல நடுக்கம் இருக்குமா ?

******

எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் குடும்பமாக போன மிக தொலைவிலான கோவில் திருப்பதி தான். அப்பா ரயிலில் அனைவரையும் அழைத்துச் சென்றார், எனக்கு அப்போது 7 வயது ஆகி இருந்தது. போகும் வழியில் திருவண்ணாமலைக்குச் அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு போகவில்லை, இன்னும் கூட திருவண்ணாமலையில் தோற்றம் நினைவுக்கு இருக்கிறது, அங்கு வாங்கி வந்த அண்ணாமலையார் படமும் நாகையில் பூசை அறையில் ( அதை நாங்கள் சாமி அறை என்போம்... சாமிக்காக எங்க அப்பா இரண்டு கதவுடன் கூடிய ஓரளவு பெரிய அறையே கட்டி வைத்திருக்கிறார்) அந்த படத்தில் இன்னும் கூட வண்ணம் அவ்வளவாக மங்காமல் இருக்கிறது.

திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி சென்றோம், அப்பவும் திருப்பதி கூட்டம் தான் ஆனால் தற்போது இருக்கும் அளவுக்குக் கிடையாது, பெரிய கூண்டு போன்ற காற்றுவசதி இல்லா அறையில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு அறையாக திறந்துவிடுவார்கள். அப்போ பார்த்த சாமியெல்லாம் நினைவு இல்லை. கிழே இறங்கி காளஹஸ்தி, அலமேலு அம்மாள் கோவிலுக்கெல்லாம் கூட்டிச் சென்றார், இடையில் என் 4 1/2 வயது தம்பி தொலைந்து போய் களேபரம் ஆகி ஒருவழியாக கிடைத்துவிட்டான். வீட்டுக்கு வந்துவிட்டோம்.

அன்றிலிருந்து எங்க வீட்டில் சனிக்கிழமை மட்டும் அசைவம் சாப்பிடுவதை விட்டார்கள். கூடவே தர்பூசனி பழம் சாப்பிடுவதையும் விட்டுவிட்டார்கள், எங்கள் தோட்டத்தில் அதுவாகவே படந்து வளரும் தர்பூசனியை யாரும் சீந்துவதே இல்லை. யாராவது கேட்டால் பறித்துக் கொண்டு போகச் சொல்லுவோம். ஏன் தர்பூசனி நாம சாப்பிடுவதில்லை என்று அப்பாவிடம் கேட்டால், 'திருப்பதிப் போனால் எதையாவது விட்டு வரவேண்டுமாம், பலரிடம் கேட்டேன், பாவக்காய், தர்பூசனி இதுபோல் எதாவது ஒன்றை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும் என்றார்கள். நம்ம வீட்டில் இனிமேல் யாரும் தர்பூசனி (நாங்க கொம்பட்டி பழம் என்போம்) சாப்பிடமாட்டோம்' என்றார். திருப்பதி போய் வந்த பிறகு அனைவருக்கும் சனிக்கிழமை எப்போதும் சைவ உணவு தான். நான் ஏற்கனவே முழுநேர சைவமாக மாறி இருந்திருந்த்தால், சனிக்கிழமை எனக்கு பிடித்த கிழமையாக ஆகி இருந்தது. என்றாவது சனிக்கிழமை என்பதை மறந்து எங்காவது அசைவம் சாப்பிட்டு வந்திருந்தால் அன்று முழுவதும் புலம்புவார்.

எனக்கு 21 வயது இருக்கும் போதே அப்பா மறைந்துவிட்டார், 25 வயது வரை தர்பூசனியை முகர்ந்தே பார்தது இல்லை, அதன் பிறகு ஆசைப்பட்டு சாப்பிடவில்லை என்றாலும் அதை சாப்பிட ஆரம்பித்தேன்.

********

கோவிலுக்குச் சென்றால் எதையாவது விட்டு வருவது என்பதில் இதுபோன்ற தவறான வற்றையே சொல்லி வைப்பதால் பலரும் தனக்கு எது பிடிக்காதோ அதை விட்டுவிடுவார்கள். திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலின் குளத்தில் டன் கணக்கில் பழைய துணிகளை பக்தர்கள் விட்டுச் செல்கிறார்கள்.

கோவிலுக்குச் சென்றால் மன அமைதி கிடைக்குது ரொம்ப சரி, ஆனால் பிரார்தனைகள் எவ்வாறு இருக்கிறது ?

1. அடுத்த ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டனும் அதுக்கு நீ தான் அருள் புரிய வேண்டும்
2. என்னோட மகளுக்கு நல்ல வரனாக அமையனும்
3. எதிர்பார்கும் பதிவி உயர்வு கிடைத்தால் பாதயாத்திரை செய்கிறேன்
4. என் மேல பொறாமை படுகிற பக்கத்து வீட்டுக்காரன் ஒண்ணும் இல்லாமல் மண்ணாக போகனும்
5. கோர்டில் நடக்கும் கேஸ் என் பக்கம் சாதகமாக முடியனும்...

இன்னும் பல பல

தன்னிடம் இருக்கும் குறைகளாக பலரும் நினைப்பது இதுபோன்ற தேவைகளைத்தான்.

ரொம்ப நல்லவராக நினைத்துக் கொள்பவர் கொஞ்சம் பெரும் தன்மையாக

"எல்லோரும் நல்லா இருக்கனும்" என்று வேண்டிக் கொள்வதுடன், 'நான் எப்போதும் எல்லோரூம் நல்லா இருக்கனும்னு தான் வேண்டிக் கொள்வேன்...பகவானுக்குத் தெரியாதா யாருக்கு என்ன கொடுக்கனும் என்று...' கேட்காமலேயே குட்டி பிரசங்கம் செய்துவிடுவார்

தன்னிடம் இருக்கும் குறை உண்மையிலேயே அது தானா ?

"எனக்கு சட்டுன்னு கோபம் வந்துடும், அப்படி வந்தால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...அது என் சுபாவம்" தான் முன்கோபி, விலங்கைவிட கேவலமானவன் என்பது கூட தெரியாமல் தனக்கு இருக்கும் கோபத்தைக் கூட பெருமையாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

"என்னை யாரும் சந்தேகப்பட்டுவிட்டால்...ஜென்மத்துக்கும் அவங்க முகத்தில் முழிக்க மாட்டேன்" அதாவது இவன் தான் பரிசுத்தமானவன் என்று சொல்லவருகிறான். ஆனால் இவன் தான் வெறுப்பின் மொத்த உருவம் என்பதை தன்வாயால் சொல்கிறோம் என்பது கூட அவனுக்கு தெரியாமலே சொல்கிறான்.

பலகுடும்பங்களில் இல்ல உறுப்பினர்கள் கூட ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் ஆண்டுகணக்கில் ஒரே வீட்டுக்குள் தனக்குத் தானே சிறை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

கோவிலுக்குச் செல்பவர்களில் எத்தனை பேர் கீழ்க்கண்டவாறு வேண்டிக் கொள்கிறார்கள் ?,

1. எனது கோபங்கள் முற்றிலும் நீங்க வேண்டும்
2. என்னை அறிந்தவர்கள் அத்தனை பேரிடமும் அன்பு செலுத்த வேண்டும்
3. என்னை அறியாமல் வெறுப்பவர்களையும் நேசிக்கும் சக்தியை எனக்குக் கொடு
4. என்னிடம் இருக்கும் செல்வங்களை நல்ல வழியில் பலருக்கும் உதவி செய்யும் வழியை நீ தான் காட்டவேண்டும், எனக்கு சேரும் பொருள் நல்ல வழியிலேயே சேரவேண்டும்.
5. ஒருவர் மீதும் எனக்கு சிறிதளவேனும் பொறாமை ஏற்பட்டுவிடக் கூடாது

உண்மையில் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்றால் விட்டு வரவேண்டியது நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களையும், பெற்று வரவேண்டியது நல்ல குணங்களையும் தான்.

எந்த கோவிலிலும் இதுபோன்ற வேண்டுதல்களை நான் பார்தது இல்லை. பொருள் வேண்டி, மற்ற வெளிப்படையான குறைகளை நீக்கச் சொல்லி வேண்டி பிச்சைக்காரர்களாகவே அங்கு வருபவர்களில் பெரும்பாலோர் நடந்து கொள்கிறார்கள், இத்தகைய மோசமான சுயநலம் சார்ந்த அதிர்வுகள் மொத்தமாக குவியும் இடமே கோவில் தான். அங்கு எனக்கு அமைதி கிடைக்கிறது' என்று சிலர் சொல்வது கூட எனக்கு வியப்பாகவே இருக்கிறது. இதே நிலைமை அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தளங்களிலும் இருக்கிறது. அன்பு கூர்ந்து நான் எதோ இந்து மதத்தை மட்டும் சொல்கிறேன் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

36 கருத்துகள்:

Natty சொன்னது…

மீ த பர்ஸ்ட்டு ;)

என்னுடைய தந்தையார் கோயிலுக்கு செல்லும் போது, கொடிமரத்தை உயர்ந்து பார்த்து, வானத்தின் விரிந்தளவை கண்டு, நமது அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்; பலி பீடத்தில் மும்மலத்தை விட்டொழிக்க வேண்டும். நந்தி உயிரை குறிக்கும், உயிர் எப்போதும், உயர்வானவற்றை கருத வேண்டும் என்றெல்லாம் கூறிக்கொண்டேதான் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்...

சமைவிப்பது - பக்குவப்படுத்துவது - சமயம் - கடந்து உள் நிற்பவன் கடவுள் - மேலும் ஒவ்வொரு புராண கதைகளுக்கும் - உள்முறையாக ஒரு நன்னெறி செய்து இருக்கும் - எடுத்துக்காட்டாக - வேல் கொண்டு சூர வதம் - வேல் - அறிவு - அகன்றது, ஆழ்ந்தது, கூர்மையானது - அதை கொண்டு - ஆணவ உருவான சூரனை வதம் செய்து - ஞானமான மெய்ப்பொருளை அடைய - அதன் பிறகே... வீட்டு தோரணங்களில் மாவிலை தலைகீழாக இருக்கும் போது .. புதிய வகை புரிதல் இருக்கும்... இதை போன்றே நம்பிக்கைக்கு உள்ளே இருக்கும் சிந்தனைகளை அறியபெற்ற ஒரு நிலை கிடைத்தது...


கடந்த பல ஆண்டுகளாக சமய சடங்குகளாக எந்த ஒன்றையும் நான் செய்யவில்லை என்றாலும் சமயத்தின் அடிப்படையான அன்பும், நம்பிக்கையும் வாழ்க்கையை சிரமம் தெரிவிக்காமல் கொண்டு செல்கிறது என்பது உண்மை...

புரிதல் இல்லாமையால், நம்பிக்கைகள் மூடநம்பிக்கையாவது வருத்தத்தற்குரியதே! நல்ல பதிவு...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
நீங்கள் ஆத்திக வாதியோ இல்லை நாத்திக வாதியோ அல்ல!
நீங்கள் ஆநாத்திக வாதி.(எழுத்துப் பிழை அல்ல, சும்மா அப்படியே வாசிக்கலாம், கோவியாரை பூவையர்கள் கோவிக்க மாட்டார்கள்)
தர்பூசணிக் கீற்றும் ஒன்றுதான் ஆட்டுக்கறியும் ஒன்றுதான்!
ஒரு பாட்டுக்கே, இசைக்கே உயிர் இருக்கும்போது மேலே குறிப்பிடப்பட்ட இரண்டுக்கும் நிச்சயம் உயிர் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Natty said...
மீ த பர்ஸ்ட்டு ;)

என்னுடைய தந்தையார் கோயிலுக்கு செல்லும் போது, கொடிமரத்தை உயர்ந்து பார்த்து, வானத்தின் விரிந்தளவை கண்டு, நமது அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்; பலி பீடத்தில் மும்மலத்தை விட்டொழிக்க வேண்டும். நந்தி உயிரை குறிக்கும், உயிர் எப்போதும், உயர்வானவற்றை கருத வேண்டும் என்றெல்லாம் கூறிக்கொண்டேதான் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்... //

Natty,

மிகச் சரியாகவே உங்கள் தந்தை சொல்லித் தந்திருக்கிறார். பாராட்டுக்கள். நந்தி என்பது ஆன்மா, இறைவனை நோக்கி ஆன்மாக்கள் விடுதலைக்காக வேண்டி நிற்பதன் அடையாளம் தான் நந்தி, உயிர் என்று சொன்னாலும் சரிதான்.

//சமைவிப்பது - பக்குவப்படுத்துவது - சமயம் - கடந்து உள் நிற்பவன் கடவுள் - மேலும் ஒவ்வொரு புராண கதைகளுக்கும் - உள்முறையாக ஒரு நன்னெறி செய்து இருக்கும் - எடுத்துக்காட்டாக - வேல் கொண்டு சூர வதம் - வேல் - அறிவு - அகன்றது, ஆழ்ந்தது, கூர்மையானது - அதை கொண்டு - ஆணவ உருவான சூரனை வதம் செய்து - ஞானமான மெய்ப்பொருளை அடைய - அதன் பிறகே... வீட்டு தோரணங்களில் மாவிலை தலைகீழாக இருக்கும் போது .. புதிய வகை புரிதல் இருக்கும்... இதை போன்றே நம்பிக்கைக்கு உள்ளே இருக்கும் சிந்தனைகளை அறியபெற்ற ஒரு நிலை கிடைத்தது... //

சமயத்திற்கு தருமம் என்ற பெயரும் உண்டு, பின்னால் அவைகள் மதங்கள் என கோட்பாடுகளாக மாறிவிட்டது. சூரர்கள், அசுரர்கள் என சித்தரிக்கப் படுவதெல்லாம் தீய குணங்களைத் தான். அதனை தெய்வீக சக்தி பெற்று வெல்ல வேண்டும் என்று என்பதற்காகச் சொல்லப்பட்டவைதான் அந்த அந்த கதைகள். இடத்துக்கு ஏற்றவாறு சொல்லப்பட்டுள்ளதால் அதில் பலவகை கதைகள் உண்டு. கதையை மட்டுமே தெரிந்து கொண்டு அந்த கதையைப் பற்றி பெருமை பேசுவதால் பிற மதநம்பிக்கையாளர்களினால் தூற்றப்படுகிறது. மிகச் சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.


//கடந்த பல ஆண்டுகளாக சமய சடங்குகளாக எந்த ஒன்றையும் நான் செய்யவில்லை என்றாலும் சமயத்தின் அடிப்படையான அன்பும், நம்பிக்கையும் வாழ்க்கையை சிரமம் தெரிவிக்காமல் கொண்டு செல்கிறது என்பது உண்மை... //

சடங்குகள் எல்லாம் வெறும் சடங்குகள் தான் என்று நன்கு உணர்ந்த பின் அதைச் செய்ய ஈடுபாடும் இருக்காது. நீங்கள் சொல்வது போல் பிறர் மீதான அன்பும். நம்பிக்கையும் இருந்தால் எவருக்குமே வாழ்கை கசக்காது.

//புரிதல் இல்லாமையால், நம்பிக்கைகள் மூடநம்பிக்கையாவது வருத்தத்தற்குரியதே! நல்ல பதிவு...
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...
கோவியாரே!
நீங்கள் ஆத்திக வாதியோ இல்லை நாத்திக வாதியோ அல்ல!
நீங்கள் ஆநாத்திக வாதி.(எழுத்துப் பிழை அல்ல, சும்மா அப்படியே வாசிக்கலாம், கோவியாரை பூவையர்கள் கோவிக்க மாட்டார்கள்)
தர்பூசணிக் கீற்றும் ஒன்றுதான் ஆட்டுக்கறியும் ஒன்றுதான்!
ஒரு பாட்டுக்கே, இசைக்கே உயிர் இருக்கும்போது மேலே குறிப்பிடப்பட்ட இரண்டுக்கும் நிச்சயம் உயிர் இருக்கும்.
//

ஜோதி,

ஆனாதிக்க வாதியா ? :)

தர்பூசனிக்கும் உயிர் இல்லை ஆட்டுக்கறிக்கும் உயிர் இல்லை.

தர்பூசனி விதைக்குத்தான் உயிர் இருக்கிறது, ஆட்டிற்குத்தான் உயிர் இருக்கிறது.

Salahuddin சொன்னது…

நாம் இறைவனிடம் வேண்டும் விஷயங்கள் உண்மையில் நமக்கு நன்மை அளிக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை நாம் அறிய மாட்டோம். எல்லாம் அறிந்த இறைவனே அதனையும் அறிந்தவன். நமக்கு தீங்கு விளைவிக்காத நற்பாக்கியங்களை மட்டும் வேண்டுவதற்கு குர்ஆன் வசனம் ஒன்று சொல்லித்தருகிறது:

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

நபிகள் நாயகம் கற்றுத் தந்த பிரார்த்தனை ஒன்று: "இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்."

புதுகை.அப்துல்லா சொன்னது…

அந்த படத்தில் இன்னும் கூட வண்ணம் அவ்வளவாக மங்காமல் இருக்கிறது.

//

தெரியாமலா பெருசுங்க "இன் நைன்டீன் பிப்டி சிக்ஸ்ல வாங்குன லோட்டா இப்ப கூட பாருங்க எப்படி இருக்குனுன்னு" பேசுதுங்க
:)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//சலாஹுத்தீன் said...
நாம் இறைவனிடம் வேண்டும் விஷயங்கள் உண்மையில் நமக்கு நன்மை அளிக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை நாம் அறிய மாட்டோம். எல்லாம் அறிந்த இறைவனே அதனையும் அறிந்தவன். நமக்கு தீங்கு விளைவிக்காத நற்பாக்கியங்களை மட்டும் வேண்டுவதற்கு குர்ஆன் வசனம் ஒன்று சொல்லித்தருகிறது:

...........
//

சலாஹுத்தீன்,

குரான் வழி நற்கருத்துக்களைச் சொல்லிய தங்களுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...


தெரியாமலா பெருசுங்க "இன் நைன்டீன் பிப்டி சிக்ஸ்ல வாங்குன லோட்டா இப்ப கூட பாருங்க எப்படி இருக்குனுன்னு" பேசுதுங்க
:)))))
//

அப்துல்லா,
உங்களுக்கு இந்த பதிவில் கவர்ந்தது பழமை மட்டும் தானா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜோதி,

ஆனாதிக்க வாதியா ? :)

தர்பூசனிக்கும் உயிர் இல்லை ஆட்டுக்கறிக்கும் உயிர் இல்லை.

தர்பூசனி விதைக்குத்தான் உயிர் இருக்கிறது, ஆட்டிற்குத்தான் உயிர் இருக்கிறது.//

பறக்க பறக்க பஜ்ஜி சுட்டுக் கொண்டு வந்த
உங்களைப் போய் ஆணாதிக்கவாதி என்று சொல்வேனா?
ஆநாத்திக வாதி என்பதுதான் பொருத்தமானது.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
ஒப்பனைத் தமிழர்களுக்கிடையில்
நீங்கள் தனித்து நிற்பது
மிகப்பெரிய சத்திய சோதனை
என்றே கருதுகிறேன்.
நீங்கள் வசை பட்டாலும்
பசையுடன் உள்ளவர்(பசையுள்ள கய்யி, சரக்கு இருக்குன்றேன்)
டி.ஏ.பி(Di Ammoniam Pospate), Birla Cement -ளையும் உயிர் இருக்குங்க(அப்படிதான் சொல்றாங்க)

கிருஷ்ணா சொன்னது…

//1. எனது கோபங்கள் முற்றிலும் நீங்க வேண்டும்
2. என்னை அறிந்தவர்கள் அத்தனை பேரிடமும் அன்பு செலுத்த வேண்டும்
3. என்னை அறியாமல் வெறுப்பவர்களையும் நேசிக்கும் சக்தியை எனக்குக் கொடு
4. என்னிடம் இருக்கும் செல்வங்களை நல்ல வழியில் பலருக்கும் உதவி செய்யும் வழியை நீ தான் காட்டவேண்டும், எனக்கு சேறும் பொருள் நல்ல வழியிலேயே சேரவேண்டும்.
5. ஒருவர் மீதும் எனக்கு சிறிதளவேனும் பொறாமை ஏற்பட்டுவிடக் கூடாது
//

Fine

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இயேசு போதிச்சுக்கிட்டு இருக்கப்ப ஒருத்தன் அவர்கிட்ட போயி, கடவுளின் கட்டளைகளிலேயே எது மிக உயர்வானதுனு கேட்பான் அதுக்கு அவரு "நீ உன்னையே நேசிப்பதுபோல் உன் அயலானையும் நேசி" அப்டின்னு சொல்லுவாரு. இது ஒன்னுதான் நான் கடைபிடிக்க முயற்சிக்கும் ஒரே கட்டளை. இதுக்குள்ளயே எல்லாமும் அடங்கிடும்ல.
நான் 100% கடைபிடிக்கிறேன்னு சொல்ல முடியாது. எனக்கும் சில சமயங்கள்ல கோவம் வந்துடுது, ஏமாற்றங்கள , துரோகங்கள தாங்கிக்க முடியாம சில கோபங்கள் வருவதை தடுக்க முடிவதில்லை. ஆன விடாம முயற்சிக்கிறேன்.

மற்ற மத வழிபாட்டுச் சடங்குகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. என்னால சர்சலயும் சாமி கும்புட முடியும், கோயில்லயும் கும்பிட முடியும், மசூதியிலயும் கும்பிட முடியும். மனசு தான் காரணம்.

எனக்கு சாப்பாட்டுல எல்லாம் எந்த கொள்கையும் இல்லீங்கோ. நமக்கு எல்லா சாப்பாடும் ஒன்னுதேன்.


நீங்களும் அதே போல மத வழிபாடுகள்ல நம்பிக்கையில்லாம , மனித மேம்பாட்டுல நம்பிக்கை வைச்சிருக்கது பெருமையா இருக்கு.

பாபு சொன்னது…

//1. எனது கோபங்கள் முற்றிலும் நீங்க வேண்டும்
2. என்னை அறிந்தவர்கள் அத்தனை பேரிடமும் அன்பு செலுத்த வேண்டும்
3. என்னை அறியாமல் வெறுப்பவர்களையும் நேசிக்கும் சக்தியை எனக்குக் கொடு
4. என்னிடம் இருக்கும் செல்வங்களை நல்ல வழியில் பலருக்கும் உதவி செய்யும் வழியை நீ தான் காட்டவேண்டும், எனக்கு சேறும் பொருள் நல்ல வழியிலேயே சேரவேண்டும்.
5. ஒருவர் மீதும் எனக்கு சிறிதளவேனும் பொறாமை ஏற்பட்டுவிடக் கூடாது
//
இது போல் எல்லோரும் நினைக்க ஆரம்பித்தால் கோவில்களே தேவை இருக்காது இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...
பறக்க பறக்க பஜ்ஜி சுட்டுக் கொண்டு வந்த
உங்களைப் போய் ஆணாதிக்கவாதி என்று சொல்வேனா?
ஆநாத்திக வாதி என்பதுதான் பொருத்தமானது.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
ஒப்பனைத் தமிழர்களுக்கிடையில்
நீங்கள் தனித்து நிற்பது
மிகப்பெரிய சத்திய சோதனை
என்றே கருதுகிறேன்.
நீங்கள் வசை பட்டாலும்
பசையுடன் உள்ளவர்(பசையுள்ள கய்யி, சரக்கு இருக்குன்றேன்)
டி.ஏ.பி(Di Ammoniam Pospate), Birla Cement -ளையும் உயிர் இருக்குங்க(அப்படிதான் சொல்றாங்க)
//

ஜோதி,

:)
ஒருவரை ஓவராக புகழும் போது, அவர் அந்த அதற்கு தகுதியானவர் இல்லை என்று தெரிய வரும் போது வருத்தமே வரும். 'இவனையா இப்படியெல்லாம் சொன்னோம்...?' என்றெல்லாம் நினைக்க வேண்டி இருக்கும்.
எப்போதும் ஒருவரை இகழும் போதும், புகழும் போதும் கொஞ்சம் யோசித்தெ செய்ய வேண்டும். ஒருவரின் நிலை தாழ்வதற்கு காரணமே ஒவராக கிடைக்கும் புகழ்ச்சியினால் தன்னிலை மறந்து ஆணவம் தலைக்கேறும். நான் சொல்லவில்லை பெரியவர்கள் சொல்றாங்க.

உங்கள் அன்புக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...


Fine

12:16 PM
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
இயேசு போதிச்சுக்கிட்டு இருக்கப்ப ஒருத்தன் அவர்கிட்ட போயி, கடவுளின் கட்டளைகளிலேயே எது மிக உயர்வானதுனு கேட்பான் அதுக்கு அவரு "நீ உன்னையே நேசிப்பதுபோல் உன் அயலானையும் நேசி" அப்டின்னு சொல்லுவாரு. இது ஒன்னுதான் நான் கடைபிடிக்க முயற்சிக்கும் ஒரே கட்டளை. //

பால்ராஜ், எடுத்துச் சொல்வதற்கு மிக்க நன்றி, ஏசுபிரானின் போதனைகளில் உண்மையும் எளிமையும் இல்லை எனில் உலகம் முழுவதும் இவ்வளவு அடியார்களைப் பெற்றிருக்க மாட்டார் என்பது சத்தியமான உண்மை. நான் எப்போதும் மதங்களைத் தோற்றுவித்தவர்களை குறைச் சொல்வதில்லை. அதன் பெயரில் நடக்கும் களேபரங்களைத் தான் சுட்டிக் காட்டுகிறேன்

//இதுக்குள்ளயே எல்லாமும் அடங்கிடும்ல.
நான் 100% கடைபிடிக்கிறேன்னு சொல்ல முடியாது. எனக்கும் சில சமயங்கள்ல கோவம் வந்துடுது, ஏமாற்றங்கள , துரோகங்கள தாங்கிக்க முடியாம சில கோபங்கள் வருவதை தடுக்க முடிவதில்லை. ஆன விடாம முயற்சிக்கிறேன். //

நல்ல பழக்கம், விடாமல் கடைபிடிக்க வாழ்த்துகள்.

//நீங்களும் அதே போல மத வழிபாடுகள்ல நம்பிக்கையில்லாம , மனித மேம்பாட்டுல நம்பிக்கை வைச்சிருக்கது பெருமையா இருக்கு.

12:25 PM, October 10, 2008//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பாபு said...
இது போல் எல்லோரும் நினைக்க ஆரம்பித்தால் கோவில்களே தேவை இருக்காது இல்லையா?

1:01 PM, October 10, 2008
//

பாபு,
மக்களை ஒன்றிணைப்பதற்கு வழிபாட்டுத்தளங்கள் தேவைதான். வேண்டுதல்களில் இருக்கும் எண்ணங்கள் மேம்பாடாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

நல்ல விதயங்களாக சொல்லி இருக்கீங்க.

திருமூலன்னு ஒரு ஆளு,சொல்லியிருக்காப்புல..

உள்ளப் பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயம்;
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்;
தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்;
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே..

அப்படின்னு.

மாணிக்க வாசகர் உடல் வளர்த்தேன்;உயிர் வளர்த்தேனே'

அப்படின்னார்.

மனதை மீறிய கோவில் வழிபாடு எதையும் பெரிதாக தந்து விடப் போவது இல்லை.

மனத்துக்கண் மாசு இலனா இருந்தாப் போதும்!

கோவில் என்பது சமூக,பண்பாட்டுக் கூடமாகவும்,ஆபத்துக் காலங்களில் புகலிடமாகவும் தான் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று வரலாறு கூறுகிறது.

பின்னால் பல ஏமாற்றுக் காரியங்களையும்,ஏற்றத்தாழ்வுகளையும் பலரும் கொண்டுவந்துட்டாங்க!

நையாண்டி நைனா சொன்னது…

இப்படியே போய் கொண்டிருந்தால், பகவானே நேரில் வந்து
"ஆத்திகர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள், நாத்திகர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லும் அளவிற்கு போய் விடும் போல் உள்ளது....

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவன்#11802717200764379909 said...

நல்ல விதயங்களாக சொல்லி இருக்கீங்க.//

அறிவன் சார், பாராட்டுக்கு நன்றி !

//திருமூலன்னு ஒரு ஆளு,சொல்லியிருக்காப்புல..

உள்ளப் பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயம்;
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்;
தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்;
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே..

அப்படின்னு.

மாணிக்க வாசகர் உடல் வளர்த்தேன்;உயிர் வளர்த்தேனே'

அப்படின்னார்.

மனதை மீறிய கோவில் வழிபாடு எதையும் பெரிதாக தந்து விடப் போவது இல்லை.

மனத்துக்கண் மாசு இலனா இருந்தாப் போதும்!//

சரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்,
சைவ சித்தாந்தங்களில் ஒன்றாக மேற்கண்டவற்றையும் விளக்கங்களையும் படித்து இருக்கிறேன்.

//கோவில் என்பது சமூக,பண்பாட்டுக் கூடமாகவும்,ஆபத்துக் காலங்களில் புகலிடமாகவும் தான் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று வரலாறு கூறுகிறது.//

தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி கோட்டை மதில்களெல்லாம் பாதுகாப்பு வழங்கும் இடமாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் சொல்வது சரிதான். உணவு தானிய சேமிப்பு கிடங்காவும் கோவில்கள் இருந்துவந்தன.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
இப்படியே போய் கொண்டிருந்தால், பகவானே நேரில் வந்து
"ஆத்திகர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள், நாத்திகர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லும் அளவிற்கு போய் விடும் போல் உள்ளது....

2:53 PM, October 10, 2008
//

நைனா,

போலி ஆத்திகர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆத்திகர்களில் முற்போக்கானவர்கள் நிறைய பேர் உண்டு.

கிருஷ்ணா சொன்னது…

//மக்களை ஒன்றிணைப்பதற்கு வழிபாட்டுத்தளங்கள் தேவைதான். வேண்டுதல்களில் இருக்கும் எண்ணங்கள் மேம்பாடாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.//

Super.

KARMA சொன்னது…

மிக நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன். வழிபாடு என்பது too personal, A thing that happens only btw a person and GOD.

இதில் யாரும் தலையிடுவது அநாகரிகமே என்பது என்கருத்து.

எதுமாதிரியான வேண்டுதல்கள் உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று சொல்ல யாருக்கு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது? அல்லது யார் தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்?

இது என்னுடைய opinion, சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும் கூட, பிறருடைய அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் விட்டுவிடுவதே நல்லது.

சிறு வயதில் பல பயனற்ற/தகுதியற்ற வேண்டுதல்களை முன்வைத்து மஞ்சனத்தி விநாயகரை சுற்றியிருக்கிறேன். கால ஓட்டத்தில் மெதுவாக, தேவையான transformation அதுவாகவே என்னில் நிகழ்ந்ததாகவே உணர்கிறேன்.

மகாத்மாகாந்தி கூறியதைப்போல வழிபாட்டின் தொடக்க காலங்களில் கட்டாயத்தினாலோ அல்லது வேறு பொருளற்ற மற்றும் சிறுமைத்தனமான வேண்டுத்தல்களாலோ தொடங்கப்பட்ட வழிபாடுதான் என்றாலும் தொடர்ந்து வழிபாடு செய்துவரும்போது அதனுடைய உன்னதம் அதுவாகவே வெளிப்படும். அதுதான் உண்மையான மாற்றத்தை (fundamental change in your being)ஏற்படுத்த முடியும்.

கால காலமாக நீதி போதனைகள் செய்யப்பட்டுதான் வருகிறது.

உங்களுக்கு எவ்வளவு உண்மைகள் தெரிந்திருந்தாலும்/ எவ்வளவு வாக்கு சாதுர்யம் இருந்தாலும் யாருடைய நம்பிக்கையயும் விளையாட்டுக்குகூட அசைத்துவிடாதீர்கள். யாருடைய வழிபாட்டு முறைகளையோ, வேண்டிதல்களை பற்றியோ விமர்சனம் செய்யாதீர்கள்.... we could be damaging a huge possibility by doing this.

We don't know yet what is best for us and how do we know what is best for others?

only enlightened masters has the right and capacity to suggest corrections.

திருமூலர் சொல்வதை கவனியுங்கள்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே."


Enlightment ஆகாமல் நாம் பிறர்க்கு வழிகாட்டுதல் என்பது ஒரு குருடு, இன்னொரு குருடுக்கு வழிகாண்பிப்பது (இரண்டும் குழியில் விழுவது) போன்றதாகும்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நீ கடவுளை நம்புகிறாயா? கோவிலுக்குப் போகிறாயா? போ..
ஆனால் எனக்கு இதைக் கொடு..அதைக்கொடு என கேட்காதே..
நீ நம்பும் கடவுளுக்கு ..எந்த சமயத்தில்..உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
மிக நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
//

KARMA,

பாராட்டுக்கு நன்றி !

//இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன். வழிபாடு என்பது too personal, A thing that happens only btw a person and GOD.

இதில் யாரும் தலையிடுவது அநாகரிகமே என்பது என்கருத்து.//

சரிதான். பிச்சைகாரர்கள் கோவிலுக்கு வெளியே உள்ளே இருந்தாலும் அதுபற்றி தவறாகச் சொல்லக் கூடாது, இல்லாதவங்க தானே கேட்கிறார்கள்.

//எதுமாதிரியான வேண்டுதல்கள் உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று சொல்ல யாருக்கு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது? அல்லது யார் தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்?

இது என்னுடைய opinion, சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும் கூட, பிறருடைய அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் விட்டுவிடுவதே நல்லது.//

இந்த இடத்தில குண்டு வைக்கப் போறேன், இந்த கோவில் உண்டியலை உடைக்கப் போகிறேன் அவை நல்ல முறையில் நடக்க அருள் புரிவாய் என்று நாம் காதுபட வேண்டிக் கொண்டாலும் அது பற்றி நாம் முகம் சுளித்தால் அநாகரிகம் தான். :)


//சிறு வயதில் பல பயனற்ற/தகுதியற்ற வேண்டுதல்களை முன்வைத்து மஞ்சனத்தி விநாயகரை சுற்றியிருக்கிறேன். கால ஓட்டத்தில் மெதுவாக, தேவையான transformation அதுவாகவே என்னில் நிகழ்ந்ததாகவே உணர்கிறேன். //

நாளாக நாளாக நம்மால் முடிந்தவற்றை பிறரிடம் கேட்டால் அது இழுக்குதானே என்று மாற்றிக் கொள்வோம். சரியா ?

//மகாத்மாகாந்தி கூறியதைப்போல வழிபாட்டின் தொடக்க காலங்களில் கட்டாயத்தினாலோ அல்லது வேறு பொருளற்ற மற்றும் சிறுமைத்தனமான வேண்டுத்தல்களாலோ தொடங்கப்பட்ட வழிபாடுதான் என்றாலும் தொடர்ந்து வழிபாடு செய்துவரும்போது அதனுடைய உன்னதம் அதுவாகவே வெளிப்படும். அதுதான் உண்மையான மாற்றத்தை (fundamental change in your being)ஏற்படுத்த முடியும்.//

வழிபாடு வேறு வேண்டுதல் வேறு. வழிபாட்டு தனக்கு கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லுவது, வேண்டுவது வேண்டுதல், எதாவது கிடைக்க வேண்டும் என்று வேண்டுவது. நீங்கள் சொல்லும் வழிபாடும் வேண்டுதலும் ஒன்று அல்ல. ஆன்மிகவாதிகளும் பக்தர்களும் வழிபாடுவார்கள், அதில் பக்தர் மட்டும் தான் வேண்டிக் கொள்வார். சரியா ?

//கால காலமாக நீதி போதனைகள் செய்யப்பட்டுதான் வருகிறது.

உங்களுக்கு எவ்வளவு உண்மைகள் தெரிந்திருந்தாலும்/ எவ்வளவு வாக்கு சாதுர்யம் இருந்தாலும் யாருடைய நம்பிக்கையயும் விளையாட்டுக்குகூட அசைத்துவிடாதீர்கள். யாருடைய வழிபாட்டு முறைகளையோ, வேண்டிதல்களை பற்றியோ விமர்சனம் செய்யாதீர்கள்.... we could be damaging a huge possibility by doing this.

We don't know yet what is best for us and how do we know what is best for others?

only enlightened masters has the right and capacity to suggest corrections.

திருமூலர் சொல்வதை கவனியுங்கள்.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே."
//

வள்ளலார் சொல்லிப் பார்த்து அலுத்து போய், 'கடைவிரித்தேன் கொள்வாரில்லை' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அவரால் அசைக்க முடியாத ஒன்றை நாம் அசைத்துவிட முடியுமா ? :)

//Enlightment ஆகாமல் நாம் பிறர்க்கு வழிகாட்டுதல் என்பது ஒரு குருடு, இன்னொரு குருடுக்கு வழிகாண்பிப்பது (இரண்டும் குழியில் விழுவது) போன்றதாகும். //

ஓரளவு சரிதான். இந்த செய்தியை வச்சு தான் 'ஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்' என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan 8:43 PM, October 10, 2008
நீ கடவுளை நம்புகிறாயா? கோவிலுக்குப் போகிறாயா? போ..
ஆனால் எனக்கு இதைக் கொடு..அதைக்கொடு என கேட்காதே..
நீ நம்பும் கடவுளுக்கு ..எந்த சமயத்தில்..உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரியும்.
//
ஐயா,
கலந்து கொண்டு கருத்துரைத்தற்கு மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

தின வாழ்வில் நான் செய்யும் தவறுகள் (கோபத்திலோ அல்லது அவசரத்திலோ) குறித்து இறைவனிடம் மன்னிப்பு கேட்பதுதான் நான் கோவிலுக்குப் போகும் காரணம்.

இதன் மூலம் கோபமும் அவசரமும் முன்பிருந்ததை விடக் குறைந்திருப்பதாக உணர்கிறேன்.

குடுகுடுப்பை சொன்னது…

கோவிலுக்கு சென்றால் மன நிறைவு ஏற்படுவது உண்மை. மனிதன் புலம்ப திருப்பி பேசாத ஒருவர் வேண்டும் அவர்தான் கடவுள் என நினைக்கிறேன்.
எதையாவது வேண்டிக்கொள்ளட்டும்.

ஆன்மீகத்தில் அரசியல் கலக்காமல் இருந்தால் போதும்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

அப்துல்லா,
உங்களுக்கு இந்த பதிவில் கவர்ந்தது பழமை மட்டும் தானா ?
//

இல்லை அண்ணா எல்லாமும் கவர்ந்தது. நம்ம ஓரு மொக்கச்சாமின்னு தெரியாதா உங்களுக்கு?
ஹி..ஹி...ஹி..

RATHNESH சொன்னது…

1.கோபத்தின் மீது உங்களுக்கு ஏன் இத்தனை கோபம்? அது பாட்டுக்கு இருந்திட்டுப் போகுது - அளவோடு.

2. திருப்பதி போய் விட்டு வந்தால் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். (சிவாஜி கணேசன்). நாமே எதையாவது நீக்க வேண்டுமா? நான் அங்கே செல்வதையே நீக்கி விட்டோனோ என்று தெரியவில்லை.

3. என்னுடைய வேண்டுதல் எல்லாம் ஒன்று தான் என்பார் என் நண்பர்: உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும்; என் கண்களில் படாதவர்களாக அவர்கள் இருந்தால் நல்லது.

4. MOST PEOPLE DO NOT KNOW HOW TO PRAY. THEY ONLY BEG என்று படித்த பிறகு கோவிலுக்குப் போனால் கை கூப்பி வேடிக்கை பார்த்ததைத் தவிர வேறு எண்ணமே எழுந்ததில்லை.

5. பலசமயங்களில் நன்றி சொல்லி இருக்கிறேன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

உங்கள் பதிவு சிறப்பனதாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்

வேளராசி சொன்னது…

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும் பாடல் கேள்விப்பட்டுள்ளீர்களா? நீங்கள் கடைசியில் கூறியதைப் போன்றே இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் 11:08 PM, October 10, 2008
தின வாழ்வில் நான் செய்யும் தவறுகள் (கோபத்திலோ அல்லது அவசரத்திலோ) குறித்து இறைவனிடம் மன்னிப்பு கேட்பதுதான் நான் கோவிலுக்குப் போகும் காரணம்.

இதன் மூலம் கோபமும் அவசரமும் முன்பிருந்ததை விடக் குறைந்திருப்பதாக உணர்கிறேன்.
//

வடகரை வேலன் அண்ணாச்சி, நன்று சொன்னீர்கள், தனக்கு கோபம் வருவதையும், அதன் விளைவுகளையும் உணர்பவர்கள் கண்டிப்பாக அதனைக் குறைத்துக் கொள்வார்கள், கோவிலில் அது பற்றி நினைக்கும் போதும், மன்னிப்புக் கேட்கும் போது அதில் ஒரு உறுதி கிடைத்து கோபங்கள் குறைவதற்கு வழிவகுக்கும்.

நீங்கள் அதனை உணர்ந்தே இங்குச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// புதுகை.அப்துல்லா said...
அப்துல்லா,
உங்களுக்கு இந்த பதிவில் கவர்ந்தது பழமை மட்டும் தானா ?
//

இல்லை அண்ணா எல்லாமும் கவர்ந்தது. நம்ம ஓரு மொக்கச்சாமின்னு தெரியாதா உங்களுக்கு?
ஹி..ஹி...ஹி..
//

அப்துல்லா, அது தெரியும், உங்களை இன்னும் ஒருமுறை அழைக்கவே அப்படி கேட்டு இருந்தேன். இதெல்லாம் டெக்கு நிக்கு ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
1.கோபத்தின் மீது உங்களுக்கு ஏன் இத்தனை கோபம்? அது பாட்டுக்கு இருந்திட்டுப் போகுது - அளவோடு.//

ஐயன் திருவள்ளுவரின் சினம் கொள்ளாமை அதிகாரத்தில் உங்களுக்கு பிடிக்காத குறள்களும் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

//2. திருப்பதி போய் விட்டு வந்தால் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். (சிவாஜி கணேசன்). நாமே எதையாவது நீக்க வேண்டுமா? நான் அங்கே செல்வதையே நீக்கி விட்டோனோ என்று தெரியவில்லை.//

'ஆன் த வே' கோவிலாக இருப்பதால், அவ்வளவு ஈடுபாடு இல்லாதவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துச் செல்வதாற்கான வாய்ப்பும் குறைவுதான்.

//3. என்னுடைய வேண்டுதல் எல்லாம் ஒன்று தான் என்பார் என் நண்பர்: உலகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும்; என் கண்களில் படாதவர்களாக அவர்கள் இருந்தால் நல்லது.//

உங்களை சந்திக்க நினைப்பதை பரிசீலனை செய்யனும் என்று சொல்கிறீர்களா ? :)))))


//4. MOST PEOPLE DO NOT KNOW HOW TO PRAY. THEY ONLY BEG என்று படித்த பிறகு கோவிலுக்குப் போனால் கை கூப்பி வேடிக்கை பார்த்ததைத் தவிர வேறு எண்ணமே எழுந்ததில்லை.//

உண்மைதான். நான் செல்லும் போது பலதரப்பட்ட மனிதர்களின் அவர்களின் ஏக்கங்களையும் முகங்களில் பார்க்க முடிகிறது. யாராவது அழைத்தால் அவர்களுடன் செல்வேன். வழிபாடுகள் செய்வது இல்லை. சாமிக்கு மேலும் மேலும் சுமையைக் கொடுக்க விரும்புவதில்லை :)

//5. பலசமயங்களில் நன்றி சொல்லி இருக்கிறேன்.//

ஒருமுறை நானும் எனது நெருங்கிய நண்பரும் அவன் வெளிநாடு செல்லும் முன், ஒரு நினைவாக இருக்கட்டுமே என்று சென்னையிலிருந்து திருத்தனிக்கு ஒரு குட்டி டூர் போலச் சென்றோம், அப்போதெல்லாம் சாமி கும்பிடும் பழக்கம் இருந்தது,

'என்ன வேண்டிக் கொண்டாய் ?' - என்று கேட்டான்,

'நீ வேண்டியதைத் தான் நானும் வேண்டினேன்' என்றேன்

'நான் என்ன வேண்டினேன் என்று உனக்கு எப்படி தெரியும் ?'

'நீ வேண்டிக் கொள்வதெல்லாம் நிறைவேற வேண்டும் என்று நான் வேண்டினேன்' என்றேன்

பத்து செகண்ட் என்னை இமைக்காமல் என்னைப் பார்த்தது, பிறகு கைகளை இறுகப் பற்றிக் கொண்டு

"தாங்க்ஸ் டா" என்றான்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
உங்கள் பதிவு சிறப்பனதாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்
//

ஸ்வாமி ஓம்கார்,

உங்கள் வாழ்த்துகள் மேலும் எனக்கு நற்சிந்தனைகளைப் பெற்றுத் தரும்.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வேளராசி said...
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும் பாடல் கேள்விப்பட்டுள்ளீர்களா? நீங்கள் கடைசியில் கூறியதைப் போன்றே இருக்கும்.
//

வேளரசி,

கேள்விப்பட்டது இல்லை. எடுத்துக் கூறி சிறப்பு சேர்பதற்கு நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்