இராமனுஜரையும், அவரைப் பின்பற்றியவர்களையும் சைவ சமயத்தினர் துன்புறுத்தியதாகத்தான் வரலாற்றில் சொல்லப்படுகிறது. தசவதாரம் படத்திலும் அப்படி ஒரு காட்சி இருக்கும். இராமனுஜரை கொலை செய்ய முயன்றவர்கள் பலர், அதில் கிருமி கண்ட சோழனும் ஒருவன், அந்த நிகழ்வில் இருந்து அவரை தப்பிக்க வைக்க அவருக்கு பதிலாக அவர் பெயரில் சென்றவர் தான் கூரத்தாழ்வார் என்கிறார்கள். கூரத்தாழ்வர் இராமானுஜர் அல்ல என்று ஒற்றர்கள் மூலமாக தகவல் பெற்ற சோழன் கூரத்தாழ்வாரின் கண்களைப் பிடிங்கிவிடுவாரென்றும் அல்லது ஆழ்வாரே பிடிங்கிக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இராமனுஜரின் காலமும் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீக சைவமும் ஒரே காலத்தில் தான் தோன்றி வளர்ந்திருக்கின்றன. சைவம் ஆதிசங்கரரின் அத்வைதத்துடன் இணைந்த வைதீக சைவமாக வளர்ந்து வந்தது, இதற்கு உரமிட்டவர்கள் மூவர் தேவரம் பாடியதாகச் சொல்லப்பட்ட அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர். இதில் அப்பர் தவிர்த்து மற்ற இருவரும் பார்பனர்கள். இராமனுஜரும் பார்பனரே. முழுமுதல் கடவுள் யார் என்பதை முன்னிறுத்துவதில் தான் சைவத்திற்கும் வைணவத்திற்கும் போட்டியே, இரண்டுமே வேத சார்ப்புடையது வேதங்களில் தங்கள் தெய்வத்தைதான் போற்றி இருப்பதாக இருவரது வாதமும். ஆனால் வேதம் சிவனையோ, கிருஷ்ணனையோ போற்றி இருக்கிறது என்றால் உண்மையில் அவ்வாறு இல்லை, வேதங்களில் பிந்தைய மண்டலங்களில் தான் இருவரும் அறிமுகம் ஆகின்றனர். ரிக்வேதத்தின் முக்கிய இறைவணக்கமே இந்திரனுக்கு உரியதுதான். வேதம் பாஷ்யங்கள் (விளக்கம்) மற்றும் உபநிஷத்துகள் (வேத சாரம் என்பார்கள்) ஆக வளர்ச்சி பெற்றபோது சிவனும் விஷ்ணுவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஜைனமும், பவுத்தமும் நன்கு வளர்ந்திருந்தது, வேத விளக்கங்களுக்கு இந்திரன் தவிர்த்து ஆரியர் அல்லாதவர்களின் நடைமுறையில் இருக்கும் தெய்வங்களை இணைத்துக் கொண்டால் தான் வேதங்களைப் பரவலாக்கம் செய்ய முடியும் என்பதால் சிவன், விஷ்ணு, வினாயகர் போன்ற வணக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
அவ்வாறு இணைக்கும் போது கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம் போன்ற கதைகளை எழுதி சேர்ப்பதன் மூலம் இந்த தெய்வங்களுக்கு வேத தெய்வங்கள் என்கிற தகுதியும் கொடுக்கப்பட்டது, வழக்கமாக கதையின் அரசியல் (அதை வேண்டுமானால் தத்துவம் என்பதாக கொள்க) என்ன வென்று தெரியாமல் கதையை மட்டும் உண்மை என்று நம்பும் வழக்கத்தால் இந்த தெய்வங்கள் முன்னிலைக்குச் சென்று, மூல வேதத்தில் போற்றப்பட்ட இந்திரன் காணாமல் போனான். மேலும் மிகுதியாக வைதீகமயமாக்கியதில் தம்மையும் மறந்து இந்திரன் குறித்து மிகவும் ஆபாசமான கதைகளை புனைந்து இந்திரன் என்பவன் ஒரு காமவெறியன் என்ற அளவுக்கு கதையை கேட்பவர்கள் நினைக்க இந்திரனின் சிறப்புகள் எனக் கூறப்பட்டவை அனைத்தும் மறைந்து, நாட்டார், தொல்திராவிட தெய்வங்கள் வேதமயமாயின. மாயோன் (கிருஷ்ணன்), சேயோன்(முருகன்), துர்கை, சிவன் ஆகியவை வேதம் போற்றாத காலத்தில் பார்பனர்கள் அல்லாதவர்கள் வணங்கி வந்தவையே. கருப்பு நிறந்தில் இருந்த கிருஷ்ணன், முருகன் போன்ற தெய்வங்கள் இப்பொழுது பலிங்கு வெண்மைக்கு மாறி பூணூலுடன் வைதீக தெய்வமாக மாறிக் கொண்டன.
பழம் இந்தியா முழுவதிலும் கிருஷ்ணனை வழிபட்டவர்கள், சிவனை வழிபட்டவர்கள் என்பதாகத்தான் தனித்தனி நம்பிகையுடன் இருந்தனர். வேத சார்பில் இவ்விரு தெய்வங்களையும் வேதமயமாக்கியவுடன் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் ஏன் பெரும் குழப்பம் ஏற்பட்டது என்றால் இத்தெய்வங்களை வழிபடுபவர்களிடம் ஆளுமை செலுத்த இரண்டையும் ஒன்றாக்குவதும், ஒன்றை மட்டும் உயர்த்துவது என்பது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. வழி வழி வந்த வழிபாடுகளை விட்டுவிட எவரும் துணியாததால். வைதீக மயமாக்கப்பட்ட கிருஷ்ணன் மற்றும் சிவ வழிபாடுகள் முறையே வைதீக வைணவம், மற்றும் வைதீக சைவம் என்று இரண்டுமே பார்பனத் தலைமையால் பிரிந்தன.
சைவ(பக்தி இயக்க) சமண சண்டையைப் போல், வைண சைவ சண்டை பெரிதாக நடக்கவில்லை, காரணம் இரண்டுமே வேத சார்ப்புடையது என்பதால் தான். மற்றபடி இரண்டிற்கும் ஏற்பட்ட சிறு பூசல்கள் அரச ஆதரவு பெறுவது யார் என்பதில் ஏற்பட்ட பிணக்குகளே. வைணவ பெற்றோர்களுக்கு பிறந்த இராமனுஜர் முறைப்படி வேத கல்வி பெற அத்வைத குரு யாதவ பிரகாசரிடம் சென்றார், அவர் கொடுத்த விளக்கங்களில் இராமனுஜர் மனநிறைவு அடையவில்லை.
'தஸ்ய யாதகப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி' இந்த வேத மந்திரத்திற்கு அத்வைத குரு கொடுத்த விளக்கம் 'பிரம்மனின் கண்கள் குரங்கின் பின்புறம் போல் சிவந்து இருந்தது' இதைக் கேட்ட இராமனுஜர் அதிர்ச்சியுற்றார், ஏனெனில் இராமனுஜருக்கு அத்வைதம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் வடமொழி புலமை பெற்றவர், புண்டரீகம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு, குருவின் விளக்கத்திற்கு மாற்றாக 'பிரம்மனின் கண்கள் (செந்)தாமரை போன்று சிவந்திருந்தது' என்று சொல்கிறது என்றார். குரு அதிர்ச்சியுற்றாலும், இராமனுஜர் தன்னை மறுக்கிறார் என்று நினைத்து சினம் அடைந்தார் என்றும், மேலும் குரு சொல்லிக் கொடுக்கும் 'நான் கடவுள்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தை பலமாக மறுத்து வந்தவர் என்பதாலும் அத்வைததிற்கு ஆபத்து என்று அலறிய யாதவ பிரகாசர், இராமனுஜரை தீர்த்துக்கட்ட முயன்றார், இராமனுஜரை கங்கைக்கு பயணப்பட வைத்து அங்கு மற்ற மாணக்கரில் ஒருவர் மூலமாக கங்கை ஆற்றில் இராமனுஜரை தள்ளிக் கொல்லும் திட்டம், இராமனுஜர் உறவினர் ஒருவர் உதவியால் தப்பித்து வந்துவிடுவார், அன்றிலிருந்து குருவும், இவரும் பிரிந்துவிடுவார்கள். இது தான் இராமனுஜரை கொலை செய்ய முயற்சிக்கும் முதல் நிகழ்வு, அதன் பிறகு சோழன், அதன் பிறகு திருவரங்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மற்ற பார்பனர்கள், இராமனுஜர் பிச்சை ஏற்கும் போது பிச்சையிடும் ஒருவரின் உணவில் விசம் வைத்துக் கொள்ள முயன்றதாகவும் அதிலும் இராமனுஜர் பிச்சையிட்டவரின் அப்போதைய முகபாவம் வைத்து தெரிந்து கொண்டு தப்பினார் என்கிறது இராமனுஜர் பற்றிய (இந்திரா பார்த்தசாரதியின் இராமனுஜர்பற்றி நூல்)
இராமனுஜரின் விஷ்டாத்வைததில் இருந்து பிரித்ததே மத்வரின் த்வைதம், இராமனுஜர் போற்றிய அனைத்து சாதிகளையும் அடக்கிய வைணவம் 18 ஆம் நூற்றாண்டில் தான் யார் காஞ்சியா ?, திருவரங்கமா ? யார் ஆளுமை செலுத்துவது என்கிற போட்டியில் மனவாள மாமுனிகள் (தென்கலை, லட்சுமி வணக்கம், சாதிவேறுபாடு கூடாது என்பவர்) மற்றும் வேதாந்த தேசிகர் (வடகலை பார்பனர் தலைமையே சிறப்பு என்பவர்)ஆகியோர்களை பின்பற்றிவோர் களுக்கிடையேயான போட்டியாக வடகலை (வட மொழி வேதம் போற்றுபவர்கள்), தென்கலையாக (நாலாயிரம் திவ்ய பிரபந்தம் போற்றுபவர்கள்) பிரிந்தது என்கிறது இராமனுஜர் பற்றிய தொடர்புடைய தகவல்கள்.
மற்றபடி சைவ சித்தர்கள் 18, நாயன்மார்கள் கதைகளுக்கும், வைணவ 12 ஆழ்வார்கள் கதைகளுக்கும் பூச்சுற்றல் அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை, சமயம் வாய்க்கும் போது ஆழ்வார்கள் பற்றி எழுதுகிறேன்.
இன்றைக்கு பலரை போலி சாமியார்கள் என்கிறோம், காரணம் தோற்றம் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கும், பொதுவாக வைதீக சமயங்களில் சமயத்தலைவர்கள் முற்றிலும் மழித்துக் கொள்வது வழக்கத்தில் இருந்தது இல்லை. சிறிய உச்சிக் குடுமி உண்டு. பழைய புராணங்களில் இருக்கும் அனைத்து ரிஷிகளும், குருமார்களும் சடைமுடி வைத்திருப்பதாகத்தான் காட்டினார்கள். இராமனுஜரும் சரி, ஆதிசங்கரரும் சரி அப்போது முழுதாக மொட்டை அடித்துக் கொள்ளும் சமண, பெளத்தர்களைப் போல் தாங்களும் முழுதாக மழித்துக் கொண்டார்கள், இவர்கள் பரப்பியது இவர்களது வேதமே என்றாலும் கூட அவர்களின் கோலங்கள் பெளத்தசாமியார்களைப் போன்றே இருந்தது, இதில் ஆதிசங்கரர் பெளத்தர்களின் மாயவாதத்தை புதிய ஞானமாக திரித்து அதை அத்வைதம் என்றார். அத்வைதம் முழுமுதற்கடவுள் என்று எதையும் காட்டவில்லை என்பதால் அத்வைதத்தை 'பிரசன்ன பவுத்தம்' அதாவது போலி பவுத்தவாதம் என்று பழித்தவர்களில் இராமனுஜரும் ஒருவர்.

துறவிகள் போலி வேசம் போடுவது புதியதும் அல்ல, இந்தியாவுக்கு பிரச்சாரத்திற்கு வந்த கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்துசாமியர்களைப் போல் தான் உடை அணிந்திருந்தார்கள். மக்கள் எதை சிறப்பாக கருதுகிறாகளோ அந்த வேடத்தைத்தான் துறவிகள் போட்டுக் கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களது அடையாளமாகவே போய்விடுகிறது. எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால் நீண்ட காது மற்றும் மொட்டையுடன் சமண மற்றும் பவுத்த துறவி போன்றே தெரிகிறார். பெளத்த, சமண புலால் மறுத்தலை உயர்வாக இராமனுஜர் மற்றும் சங்கரர் பின்பற்றி வரித்துக் கொள்ள பிறகே தென்னிந்திய பார்பனர்கள் சைவ உணவுக்கு மாறினார்கள்.