பின்பற்றுபவர்கள்

26 ஜனவரி, 2010

நான் வித்யா - 'நான்' !

வலைப் பதிவில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தொடங்கிய பிறகு சமூகம் குறித்த பொதுப் புத்தி சிந்தனைகள் எனக்கு வெகுவாக மாறி இருக்கின்றன என்பதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. அதற்கும் முன்பு இதே போன்ற புரிதலில் இல்லை என்பது என் ஒப்புதல் வாக்குமூலம் தான், அரசியல், மதம், சமூகம் ஆகிய மக்கள் அமைப்புகளில் தனிமனித மனம் முடிந்த அளவுக்கு சார்பு நிலையில் இயங்குவது தவறு என்கிற புரிதல் வலைப்பதிவு வாசிப்புகளால் ஏற்பட்டது, அதன் தாக்கமே எனது எழுத்துகளில் பல்வேறு வாசிப்பு துய்ப்பு தாக்கங்களினால் ஏற்பட்டு இருக்கிறது.

என்னுடைய அடையாளமான பால், தாய் மொழி, சமயம், சாதி, இவற்றில் பால் அடையாளம் நம்மைக் கேட்டு அமைவது இல்லை, தாய் மொழியும் தன்னால் அமைவது தான், ஆனால் சமயம், சாதி ஆகியவை தேவை என்றால் மாற்றிக் கொள்ள, துறக்க முடியும் என்பதால் சமயம் சாதி ஆகியவற்றில் எனக்கு பெரிதாக பற்றுதல் இல்லை. பால், தாய் மொழி ஆகியவை எனக்கு கிடைத்தது என்பதாக நான் நினைக்க முடியும் என்பதால் அதன் மேல் பற்றுதல் என்பதைத் தவிர்த்து இரண்டையும் தன்மை(சுயம்) சார்ந்த ஒரு இயற்கை அடையாளமாக கொள்கிறேன்.

திருநங்கைகள் எனப்படும் இருபால் தன்மை கொண்டோர்கள் பற்றி முன்பே அவர்கள் நடவெடிக்கைகளை அறிந்திருந்தாலும் அவர்களைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. லிவிங் ஸ்மைல் வித்யா வலைப்பக்கம் துவங்கி தன்னைப் பற்றியும், திருநங்கைகள் குறித்தும் எழுதியவற்றைப் பற்றி படித்த பிறகே திருநங்கைகள் குறித்த பரவலான புரிதல் எனக்கும் பல்வேறு வாசிப்பாளர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன்.

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது உயிர்மெய் குறித்த தொல்காப்பியமோ நன்னூலோ எதோ ஒன்றில் இருக்கும் இலக்கணக் குறிப்பு. சொல்லின் இறுதியின் மெய் எழுத்தும் அடுத்த சொல்லின் உயிரெழுத்து துவக்கமும் ஒன்றிணைந்துவிடும், ( தமிழ் + ஆதவன் > தமிழாதவன் என்பது போல்). இந்த இயல்பான இலக்கணக் குறிப்பும் கூட பிழையாகிப் போன பிறவிகளாக அமைந்திருப்பவர்கள் தாம் திருநங்கைகள். ஆண் உடலில் பெண் உயிர்(மனது) அமைந்துவிடுவதால் அவர்களின் உடலும் உயிரும் ஒன்று படமால் போய்விடுகிறது. தாம் ஆண் உடலில் இருக்கும் பெண் என்கிற எண்ணம் ஏற்பட்டு அவர்கள் தங்கள் நடவெடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் போது அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஏற்கனவே இருக்கும் திருநங்கைகள் குறித்த பொதுப் புத்திப் புரிதலால் இல்லதினரால் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டு, வீட்டை விட்டு ஓடினால் தான் தொடந்து வாழமுடியும் என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இவர்கள் மீதான இயற்கைச் சிக்கலை புரிந்து கொள்ளாத சமூகமும் அதை அவர்களின் தனிமனித செயலாக நினைத்து அவர்களை முரண்பட்டவர்களாக சித்தரித்து புறக்கணிப்பதும், அவர்களை இழிவு படுத்துவதுமாகவும் அவர்களை ஒரு தனிக் குழுவாக சேர்ந்துவிடச் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. இல்லை என்றால் இந்தியாவிலும் திருநங்கைகள் பிற ஐரோப்பிய நாடுகளைப் போல் அனைத்து சமூகத்திலும் ஒன்றிணைந்தவர்களாகவே தொடர்ந்திருப்பர். மதரீதியில் இந்து மதத்தில் அரவாணிகள் சமூகத்தில் ஒன்றாக இருந்தவர்களாக இதிகாசங்களில் காட்டப்பட்டுள்ளது, பிற மதங்களில் அவர்களை மத ரீதியாக எந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை. அவர்களுக்கான பிற நாடுகளின் அங்கீகாரம் என்பது சமூக ரீதியானது. மதரீதியானது அல்ல. மத ரீதியான அங்கீகாரம் கொடுக்கும் இந்திய சமயங்களோ அவர்களை சமூக ரீதியாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத ரீதியான அங்கீகரங்களை விட சமூக ரீதியான அங்கீகாரங்களே அவர்களுக்கு வாழ்வியலில் பயன்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. மதத்தையும் சமூக வாழ்வியலையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இன்னும் இந்தியர்களுக்கு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

சகோதரி லிவிங் ஸ்மைல் வித்யாவை சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பின் போது நேரடியாக பார்த்து பேசி இருக்கிறேன். நமக்கு தெரிந்து தன்வரலாறு எனப்படும் ஆட்டோபயகரபிகளை படித்து இருக்கிறோம். நமக்கு தெரிந்தவர் தம்மைப் பற்றிய வரலாறுகளை எழுதும் போது அதை நாம் படிக்கும் துய்ப்புகள் பிறர் எழுதும் தன்வரலாறுகளைப் படிக்கும் போது ஏற்படுவதில்லை என்பது லிவிங் ஸ்மைல் வித்யாவின் நூலின் உள்ளடக்கம் தாண்டி ஏற்பட்ட உணர்வு. அதில் இடம் பெறும் ஒவ்வொரு வரியும் அவர் எதிரே அமர்ந்து நமக்கு சொல்லிக் கொண்டு வருவது போன்ற உணர்வு படிக்கும் போது ஏற்பட்டது.

வித்யா 30 வயதிற்கும் குறைந்தவர் என்றே நினைக்கிறேன். இந்த வயதிற்குள் தன்வரலாறு எழுதுபவர்கள் பெரும்பாலும் வேதனையைத்தான் எழுத முடியும் என்பதாக விளங்கிக் கொண்டேன். ஏனெனில் சாதனையாளர்கள் அல்லது அவர்களைப் பற்றி இறுதியில் தான் வரலாறு எழுதுவார்கள். வாழ்வின் தொடங்கள் வேதனையாகவே தொடங்குவதும் கூட வரலாறுகளாக, இலக்கியமாக மாறிப் போகிறது என்பது வித்யாவின் நூலில் இருந்து நமக்கு தெரியும் மற்றொரு பாடம்.

நூலைப்பற்றி, நூலில் அவர் சொல்லி இருக்கும் பல்வேறு அவமானங்கள் திருநங்கைகள் அனைவருக்கும் பொது என்றாலும், நன்கு படித்த ஒருவர் (மொழியியல் முதுநிலை) கற்றறிந்த மனநிலையில் அத்தகைய அவமானங்களை சந்திப்பது மனரீதியில் பன்மடங்காகவே இருக்கும், இத்தகைய அவமானங்கள் அம்பேத்கார் போன்ற மேதைகளுக்கு சாதி ரீதியில் ஏற்பட்டது என்பதை நினைவு கூரலாம். அவர் எல்லா அவமானங்களையும் எதற்காக தாங்கிக் கொண்டார் என்றால் தன்னை முழுப் பெண்ணாக வடிவமைத்துக் கொள்வதற்கு தாம் சென்ற வழி அத்தகையதாக இருந்ததை அவர் உணர்ந்திருந்தார் என்பதால் தாங்கிக் கொள்ள நேரிட்டதாம். திருநங்கைகள் குறித்த சமூக புரிதல்களை நன்கு விளங்கியவர் என்பதால் அவருடைய கோபங்கள் தனிமனிதர்கள் மீது எதிரொலிக்காமல் பார்த்துக் கொள்கிறார். நிர்வாணம் எனப்படும் ஆணுறுப்பு அறுப்பு சடங்கு தன்னை மறுபிறவி எடுக்க வைத்து தன்னை உணரவைத்தாக சொல்கிறார். மற்றபடி அவருக்கு உதவிய பல்வேறு தரப்பினரையில் காட்சி மாந்தர்களாக நூல் முழுவதும் வருகிறார்கள்.

எனக்கு நூலைப் படித்ததும் ஒரே ஒரு கேள்வி இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது, தன்னை நன்கு அறிந்த படித்தவர்கள் பலர் நண்பர்களாக பெற்ற அவர் அவர்களிடம் எநத உதவியும் கேட்காமல் புனே சென்று பிச்சை எடுத்து 'நிர்வாணத்திற்காக' அனைத்து அவமானங்களையும் சந்தித்து, அவர் மிகவும் அவசரப்பட்டுவிட்டாரோ என்று நினைக்கவே வைக்கிறது. ஏனெனில் நிர்வானத்துக்கு அவருக்கு பிச்சை வழி கிடைத்து தாம் அறுவை சிகிச்சை உட்பட செய்த செலவுகளாக சுமார் 20,000 ரூபாய். இதை ஈட்டுவதற்கு பொருமையோ, நண்பர்கள் உதவியோ நாடாமல் மிகவும் அவசரப்பட்டது ஏன் என்றும் புரியவில்லை. எப்போதாவது விளக்குவார் என்று நினைக்கிறேன்.

*****

நான் யார் ? எந்த கேள்வியிலேயே அட்டைப் படத்தில் துவங்கும் வித்யாவின் நூல் அவரின் மூன்றாண்டுக்கு முந்தையவரை நடப்புகள் அனைத்தையும் சுறுக்கமாக முடித்திருக்கிறார்.

'இந்த நான் யார் ?' கேள்வியைத்தான் ஆன்மிகவாதிகளும் கேட்டுவருகிறார்கள். 'நான்' உடலல்ல..........'நான்' உடலல்ல............'நான்' உயிர்....உடலை இயக்கும்....'நான்' ஆன்மா...இந்த உடல் கருவியே அன்றி இதில் பெருமை பட சிறுமை பட ஒன்றும் இல்லை....இந்த புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் போது ஆண் / பெண் உடல் பேதங்களும், அதன் மீதான உளவியல்/உணர்வு ரீதியில் ஏற்படும் வெறுப்புகளும், ஈர்ப்புகளும், உறுப்பு அறுப்புகளும் கூட தேவையற்றதாகிவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து. பால் சார்ந்த பிறப்பு உறுப்புகளைத் தவிர்த்து உடல் சார்ந்த மன உணர்வுகள், வேறுபாடுகள் சமூக கட்டமைப்பின், சமூகக் கூறுகளின் தாக்கம் என்பது என் எண்னம்.

உடல் ரீதியான சமூக கட்டுமானங்களும் எண்ணங்களுமே ஒரு திருநங்கையை தனக்கு பெண் உடல் இருப்பதே சிறப்பு, இயற்கையானது என்பதாக நினைக்க வைத்து பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று தூண்டுதலுக்கு இட்டுச் சென்று தற்கொலைக்கு ஒப்பான 'நிர்வாண' அறுவை சிகிச்சை வரை இட்டுச் சென்றுவிடுகிறது.

நாயகி பாவம் என்று பக்தி இலக்கியத்தில் ஒரு ஆண் தன்னை பெண்ணாக நினைத்துக் கொண்டு கடவுளின் மனைவி என்பதாக உருவகித்துப் பாடுவதை பெருமை பொங்க பக்தி கூட்டங்களில் மெய்சிலிர்த்து பேசுகிறோம். திருநங்கைகளை என்றும் நாயகி பாவம் கொண்டவர்களாக அங்கீகரித்துவிட்டால் இவர்கள் ஏன் கொடுமையான அறுவை சிகிச்சைகளை செய்துக் கொள்ளப் போகிறார்கள் ? திருநங்கைகள் பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்வது தற்காலிக தீர்வு தான், திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் அதைச் செய்வது நிரந்தர தீர்வு ஆகாது. நிரந்தரத் தீர்வு என்பது மன ரீதியிலான சமூக மாற்றம் அதை அவர்களும், அனைத்து சமூகங்களும் ஏற்படுத்திக் கொண்டால் அறுவை சிகிச்சைகள் தேவையற்றது ஆகிவிடும். 'நான்' என்பது உடலல்ல......மனம். அதற்கு பால் பேதம் இல்லை, உடல் கூறுகள் பொருட்டு அல்ல.

நான் இங்கு கடைசியாக எழுதியவை அபத்தமாக தெரிந்தாலும் ஆண்/பெண் 'உடல்' குறித்த குழப்பங்களுக்கு ஆன்மிக ரீதியான நல்லதொரு சமுக புரிதல் தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்ற நப்பாசை தான்.

23 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

லிவிங் ஸ்மைல் வித்யா வலைப்பக்கம் துவங்கி தன்னைப் பற்றியும், திருநங்கைகள் குறித்தும் எழுதியவற்றைப் பற்றி படித்த பிறகே திருநங்கைகள் குறித்த பரவலான புரிதல் எனக்கும் பல்வேறு வாசிப்பாளர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன்.]]

ஒப்புதல்.

நட்புடன் ஜமால் சொன்னது…

புதிதாய் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது எனக்கு சில வருடங்களாகவே.

ஆணாக பிறந்த விருப்பத்தோடு பெண்ணாக மாறி திரு நங்கைகள் என்று பலரை கண்டிருப்போம் - படித்திருப்போம்.

பெண்ணாக பிறந்து ஆணாக விருப்பப்பட்டு - இப்படி யார்ன்னா இருக்காங்களா உலகத்தில்


-------------
திருநங்கைகளாக மாறுவதை உளவியில் ரீதீயாக சிறு வயதிலேயே சரி செய்துவிடலாம் என்றே தோன்றுகிறது - ஆய்வுகள் எதுவும் படித்ததில்லை, எதுனா தெரிஞ்சா சொல்லுங்க யார்ன்னா ...

Sangkavi சொன்னது…

நல்ல அறிமுகம்...

திருநங்கைகளைப்பற்றியும், வித்யாவைப்பற்றியும் நான் அதிகம் அறியவில்லை உங்கள் பதிவை படித்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது...

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//நான் இங்கு கடைசியாக எழுதியவை அபத்தமாக தெரிந்தாலும்//

உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி :)

சன்யாசிகளில் பலர் திருநங்கைகள் உண்டு. மராட்டிய மாநிலம் தவிர வடபகுதியில் திருநங்கைகள் நாம் நினைப்பது போல செயல்படுவதில்லை.

பிருந்தாவனம், மதுரா போன்ற ஊர்களில் அவர்கள் தான் முக்கிய பக்தி மார்க்க தூண்டுதலாக இருக்கிறார்கள்.

தான் திருநங்கை என்ற புரிதல் ஏற்பட்டதும், சமூக புறக்கணிப்பும் இவர்களை தடுமாறச்செய்கிறது.
வெளிநாட்டிலும் இது நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. அங்கும் ஒதுக்கப்படுகிறார்கள்.

தங்கள் நிலைப்பாட்டை உணர்ந்த திருநங்கைகள் பலர் மேம்பட்டு இருக்கிறார்கள். இவர்களை தனித்துவமாக காண்பது கூட இவர்களுக்கு நாம் செய்யும் இம்சைதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...

புதிதாய் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது எனக்கு சில வருடங்களாகவே.

ஆணாக பிறந்த விருப்பத்தோடு பெண்ணாக மாறி திரு நங்கைகள் என்று பலரை கண்டிருப்போம் - படித்திருப்போம்.

பெண்ணாக பிறந்து ஆணாக விருப்பப்பட்டு - இப்படி யார்ன்னா இருக்காங்களா உலகத்தில்//
//

அண்மையில் ஒரு ஆண் குழந்தை பெற்றார் என்று படித்ததில்லையா ?
அவரும் பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர்.

//-------------
திருநங்கைகளாக மாறுவதை உளவியில் ரீதீயாக சிறு வயதிலேயே சரி செய்துவிடலாம் என்றே தோன்றுகிறது - ஆய்வுகள் எதுவும் படித்ததில்லை, எதுனா தெரிஞ்சா சொல்லுங்க யார்ன்னா ..//

இது மத ரீதியில் நம்பபடும் தவறான கருத்து, உங்களுக்கு இப்படி யாரேனும் சொல்லி இருப்பார்கள், இதில் உண்மை இல்லை. நம்பவேண்டாம் என்று தான் சொல்லுவேன் ஜமால்

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்களுக்கு இப்படி யாரேனும் சொல்லி இருப்பார்கள், இதில் உண்மை இல்லை. நம்பவேண்டாம் என்று தான் சொல்லுவேன் ஜமால்]]

நம்பவில்லை அண்ணா. யாரும் சொல்லவுமில்லை.

நானே யோசிச்சிக்கிவேன்

அவர்கள் நிலை சரியாகாதா என்ற ஆசையில் தான்.

--------------
அண்மையில் ஒரு ஆண் குழந்தை பெற்றார் என்று படித்ததில்லையா ?
அவரும் பெண்ணிலிருந்து ஆணாக மாறியவர்.]]

இது புதுசு எனக்கு.

மருத்துவ ரீதியாக

ஆணிலிருந்து மாறிய பெண் - ஆண் தன்மையை முழுதும் இழந்து விடுகிறார்

பெண்னிலிருந்து ஆணாக மாறியவர் எங்கனம் -

(கேள்வி அபத்தமோ ...)

கோவி.கண்ணன் சொன்னது…

//இது புதுசு எனக்கு.

மருத்துவ ரீதியாக

ஆணிலிருந்து மாறிய பெண் - ஆண் தன்மையை முழுதும் இழந்து விடுகிறார்

பெண்னிலிருந்து ஆணாக மாறியவர் எங்கனம் -

(கேள்வி அபத்தமோ ...)//

இதற்கெல்லாம் நெட்டுல ஏகப்பட்ட சுட்டி இருக்கு. தேடி படித்துக் கொள்ளுங்கள். :)

பெண்ணில் இருந்து ஆணாக மாறியவருக்கு கற்பப்பை இருக்கும் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற முடியும்

||| Romeo ||| சொன்னது…

தலைவரே உங்க அளவுக்கு என்னால் இந்த புத்தகத்தை விமர்சனம் பண்ண முடியாது. பெரியவங்க பெரியவங்க தான்.

ஏதோ என்னால முடிந்த அளவுக்கு இந்த புத்தகத்தை பற்றி எழுதி உள்ளேன். படித்து பார்த்து சொல்லவும்.

http://ennaduidu.blogspot.com/2009/10/blog-post_29.html

துளசி கோபால் சொன்னது…

திருநங்கைகளைப் பார்த்து முகம் சுழிக்காமல் சக உயிராகப்பார்ப்பதில் என்ன அவ்வளவு கஷ்டம்?

போனவாரம் பறக்கும் ரயில் அனுபவத்துக்காகப் பறந்தநாள், ரயிலில் ஒருத்தரைப் பார்த்தேன். மகளிர் பெட்டியில்தான். அவரோடு பேச்சுக் கொடுத்ததும் 'சட்'னு அந்த முகம் மலர்ந்ததைப் பார்க்கணும்.
பெயர் விஜயலக்ஷ்மி. வேலை? வீட்டுவேலை செய்யறாங்களாம்.
எந்த வேலையா இருந்தாலும், சின்னது பெருசுன்னு பார்க்காம உழைச்சுப் பிழைப்பது நல்லது. உங்களைப் பற்றிய விழிப்புணர்வு வந்துக்கிட்டு இருக்கு. விடாமல் போராடி உரிமைகளைப் பெறணுமுன்னு சொன்னேன்.

அவுங்களோடு நின்னு படமும் எடுத்துக்கிட்டேன். எல்லாம் அவுங்களுக்கு ஒரு மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தரட்டுமேன்னுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

ஸ்வாமி ஓம்கார்,

தங்கள் அளித்த தகவல்கள் புதிது. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ||| Romeo ||| said...

தலைவரே உங்க அளவுக்கு என்னால் இந்த புத்தகத்தை விமர்சனம் பண்ண முடியாது. பெரியவங்க பெரியவங்க தான்.

ஏதோ என்னால முடிந்த அளவுக்கு இந்த புத்தகத்தை பற்றி எழுதி உள்ளேன். படித்து பார்த்து சொல்லவும்.

http://ennaduidu.blogspot.com/2009/10/blog-post_29.html//

இணைப்புச் சுட்டிக் கொடுத்ததற்கு பாராட்டுச் சொல்லுக்கும் மிக்க நன்றிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால்


திருநங்கைகளைப் பார்த்து முகம் சுழிக்காமல் சக உயிராகப்பார்ப்பதில் என்ன அவ்வளவு கஷ்டம்?//

பொதுவாக தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மாற்றிக் கொள்ள பிறரை அந்த நிலைக்கு மாற்றிப் பார்த்தால் அதிலிருந்து மீளலாம் என்று நினைக்கும் உளவியல் சிக்கலாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன். தன் செயலால் உயர்ந்தவர்கள் என்னும் நிலையை யாரும் முயற்சி செய்து அடைவது இல்லை. பிறரை இறக்கிப் பார்ப்பதன் மூலம் தனக்கு உயர்வு என்கிற மாயையில் இருப்பதால் அது போன்று பார்க்க மறுக்கிறார்கள்

//போனவாரம் பறக்கும் ரயில் அனுபவத்துக்காகப் பறந்தநாள், ரயிலில் ஒருத்தரைப் பார்த்தேன். மகளிர் பெட்டியில்தான். அவரோடு பேச்சுக் கொடுத்ததும் 'சட்'னு அந்த முகம் மலர்ந்ததைப் பார்க்கணும்.
பெயர் விஜயலக்ஷ்மி. வேலை? வீட்டுவேலை செய்யறாங்களாம்.
எந்த வேலையா இருந்தாலும், சின்னது பெருசுன்னு பார்க்காம உழைச்சுப் பிழைப்பது நல்லது. உங்களைப் பற்றிய விழிப்புணர்வு வந்துக்கிட்டு இருக்கு. விடாமல் போராடி உரிமைகளைப் பெறணுமுன்னு சொன்னேன்.

அவுங்களோடு நின்னு படமும் எடுத்துக்கிட்டேன். எல்லாம் அவுங்களுக்கு ஒரு மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தரட்டுமேன்னுதான்.//

//

தாங்கள் அந்த தகவலும் அவரின் நிழல் படமும் அனுப்பியது மகிழ்ச்சி. அவரும் பார்க்க கிராமத்து களையுடன் முழுப் பெண்ணாகவே இருக்கிறார்.

அவருடன் எளிதாக இயல்பாக பழகிய உங்கள் செயலும் பாராட்டத் தக்கது.

இளமுருகன் சொன்னது…

//திருநங்கைகள் பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்வது தற்காலிக தீர்வு தான், திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் அதைச் செய்வது நிரந்தர தீர்வு ஆகாது//
சரிதான்,சமூக மனமாற்றம்தான் தேவை.

TBCD சொன்னது…

நல்ல கோணம் தான் ! இன்று ஆண் உடையை பெண்கள் அணிவது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

பெண் உடையயை ஆண்கள் அணிவது ஏற்க்கப்பட்டால், நீங்கள் சொல்வது போல நடக்காமல் இருக்கும் !

இதை உடையளவில் குறுக்கவில்லை, ஆனால் அதுவும் பால் சார்ந்த ஒன்றாக இருப்பதை சொல்கின்றேன் !

நல்ல இடுகை !

அ.மு.செய்யது சொன்னது…

பாராட்டுகள் கோவி கண்ணன் அவர்களே !!!

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் எனக்கும் இப்படிப்பட்ட கலவையான உணர்வுகள் தோன்றின.
திருநங்கைகள் மீதிருந்த தவறான பெர்சப்ஷனை தூக்கி எறிய முடிந்தது.

ப‌ல‌நாள் நானும் இதைப்ப‌ற்றி எழுத‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.உங்க‌ளின் இக்க‌ட்டுரை அந்த‌ ஆசையை பூர்த்தி செய்து விட்ட‌து.

ந‌ன்றி !!!!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//திருநங்கைகளாக மாறுவதை உளவியில் ரீதீயாக சிறு வயதிலேயே சரி செய்துவிடலாம் என்றே தோன்றுகிறது - //

திருநங்கைகளாக மாறுவதா?? யாரும் திருநங்கைகளாக மாறுவதில்லை. திருநங்கைகளாகவே பிறக்கின்றனர்.பிரச்சனையே இந்தப் புரிதல்தான் ஜமால். உன்னைப்போலவே பலரும் அவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையால் பெண்ணாக மாறுவதாக நினைக்கின்றனர். அவர்கள் கருவில் இருக்கும்பொழுதே அவர்களின் இந்தப் பாலினம் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. சிறு வயதல்ல..எந்த வயதிலும் இதை சரி செய்ய முடியாது. சரி செய்யவும் தேவை இல்லை. ஆம்பளை பொம்பளைமாதிரி வேஷம் போடுறாண்டா என்று நினைக்காமல் அவர்கள் முழுமையான பெண்கள் என்று நாம் நினைத்தாலே, அங்கீகரித்தாலே போதும். உறுப்பு மாற்றும் ஒரு சிறு அறுவை சிகிச்சைக்குப்பின் அவர்கள் முழுப் பெண்களாக வலம்வர முடியும். குழந்தைப்பேற்றைத் தவிர.

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல விளக்கம் மாப்ளே.

நிஜமாய் இது நாள் வரை தெரியாது என்பதே உண்மை.

--------------------------

[[ஆம்பளை பொம்பளைமாதிரி வேஷம் போடுறாண்டா என்று நினைக்காமல் ]]

இப்படி சிறு வயதில் நினைத்ததுண்டு

சமீபமாக சரியான புரிதலுக்குள்ளேயே இருக்கிறேன்.

சக உயிர் என்று.

SUFFIX சொன்னது…

அருமையான பதிவு, கேலியும், கிண்டலுமாகவே பார்க்கப்படுகிறது இந்த திரு நங்கை சமூகம், சமீப காலமாக பல்வேறு ஊடகங்களின் வழியாக இவர்களின் சாதணைகளை காணவும், படிக்கவும் நேரிடுகிறபொழுது, சமூகம் சற்றே மாறி இருக்கிறது என்றே கூறவேண்டும், இருந்தாலும் முற்றிலும் மாற வேண்டும். எமது ஆசையும் அதுவே.

S.A. நவாஸுதீன் சொன்னது…

நல்ல இடுகை அண்ணா.

திருநங்கைகளுக்கு சலுகைகள் வழங்கவேண்டும் என்ற கூற்றே தவறு. இந்திய குடிமக்களாக அவர்களுக்குறிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதுதான் சரி. அதற்கு அரசு செய்யும் முயற்சிகள் (குறிப்பாக அவர்களுக்கு வாரியம் அமைத்திருப்பது போன்ற) நல்ல விஷயங்களை ஆதரித்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் தெளிவு பிறக்கவேண்டும். இவர்களே போராடியோ, அரசே தானாகவோ அனைத்தும் வழங்கினாலும் சமூகத்தில் மக்கள் மனதார இவர்களை அங்கீகரிக்கும் வரையில் இவர்களின் மனதிற்கு நிம்மதி கிடைக்காது. அதற்கு நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஜெகநாதன் சொன்னது…

நல்லதொரு அறிமுகம்..!
இதைத்​தொட்டு எழுதுவது ​மேற்கொண்டு நகர்த்துவது ​போன்றவை வலைத்தளத்தையும் தாண்டிப் பரவினால் ஒடுக்கப்பட்ட(படும்) அவர்கள் நிலை மாறலாம்.

ஆழமான விமர்சனத்துக்குப் பாராட்டுகள்​​கோவி!

பிரியமுடன் பிரபு சொன்னது…

நல்ல பதிவு

சமிபத்தில் நானும் "அவன்+அவள்=அது' என்ற புத்தகம் படிதேன் ,அதுவும் திருநங்கை பற்றிய புத்தகம்
முடிந்தால படித்து பருங்கள்

வெ.இராதாகிருஷ்ணன் சொன்னது…

அபத்தமான எண்ணம் அல்ல, அழகிய எண்ணங்கள். மிகவும் அருமையாகவே எழுதி இருக்கிறீர்கள்.

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

See this

http://leonalo.wordpress.com/

From Leonard to Leona: A Singapore Transsexual’s Journey to Womanhood

Anputan
Singai nathan

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்