அண்மையில் (2 ஜென 2010) சிங்கையில் ஓர் நிகழ்வில் சொல்வேந்தர் சுகி.சிவத்தின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கற்பு நிலை பற்றிப் பேச்சினிடையே பேசினார். 'பத்தினியை பகவதியாக்கியது, பரத்தையை பத்தினி ஆக்கியது - சிலப்பதிகாரம்' என்கிற ஒற்றைவரி விளக்கம் கொடுத்தார். சுகி.சிவத்தின் ஆன்மிகப் பேச்சுகள் மற்றவர்களைப் போலவே வேதம் சார்ந்த வழ வழ கொழ கொழ ரகம் என்றாலும் அவரது சமூக இலக்கிய பேச்சுகள் என்னை ஈர்க்கும். பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்படி என்பதாக ஒரு நிகழ்வைக் கூறினார். 85 வயதில் பாட்டி ஒன்று செத்துப் போக தூக்கம் விசாரிக்க வந்தவர்கள், எப்படி இறந்தார் என்று கேட்க, பதிலைக் கேட்டுக் கொண்டு அப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் இப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பதாக வந்தவர்கள் அனைவருமே அறிவுரை மழை பொழிய கடுப்பான மகன் அடுத்து 'பாட்டி எப்படி இறந்தார்கள் ?' என்று கேட்க, 'விதி போய் சேர்ந்துட்டாங்க' என்று சொன்னதும் மறு பேச்சே எழவில்லையாம்.
எந்த ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை 'விதி' யாக பார்ப்பதன் மூலம் எளிதாக அதிலிருந்து விலகிவிடலாம், மறந்துவிடலாம், அதைவிடுத்து அடுத்து நடக்கப் போவதில் கவனம் கொள்ளலாம் என்பதாக சொல்லி முடித்தார்.
விதி பற்றிய சித்தாந்தங்களுக்கான (சுகியின்) விளக்கம் அப்படியாக இருக்கும் போது கேட்பதற்கும் நன்றாகவே இருக்கிறது. கண்ணுக்கு முன் நடக்கும் கெடுதல்களை தவிர்க்க அல்லது தொடர்ந்து செய்ய அவற்றை விதியென்று காரணம் காட்டி விலகுதலும், அங்கெல்லாம் விதியைப் பயன்படுத்தி தப்பிக்க நினைப்பதும் கோழைத்தனம் தான். விதி பற்றிய எனக்கு பல்வேறு எண்ணங்கள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.
விதி என்று உண்மையிலே எதுவும் உள்ளதா என்று பார்த்தால், மனிதனின் எண்ணங்களுக்கும் அவனது செயல்களுக்கும் எந்த ஒரு விதித்தடையும் இல்லை, 'உனக்கு இது தான் விதி என்று அவரது இழிநிலை / தாழ்வு நிலை தொடர எவரும் ஆசிர்(?) வதித்தால் அவை புறம்தள்ளக் கூடியதே. பிறப்பு அடிப்படை உயர்வுகளை கற்பித்துக் கொள்வோர் இது போன்று விதியை காரணமாக வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். ஆனால் அவர்களை பிறர் தூற்றும் போது அதை 'சாதி துவேசம், காழ்புணர்வு' என்றெல்லாம் திரிப்பர். அனைத்தும் விதி என்றால் ஒரு சமூகத்தின் தாழ்வு விதி என்று சொல்லப் படுவது போலவே ஒரு சமூகத்தைத் தூற்றுவதாக சென்றுக் கொண்டிருக்கும் சமூக நிலையும் விதியென்று ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா ? அவ்வாறு ஒப்புக் கொள்ளாதவர்கள் விதி பற்றிப் பேசவும், விதியின் புகழ்பாடவும் எதாவது தகுதி இருக்கிறதா ? என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் சுட்டுப் போட்டாலும் படிப்பு வராத மாணவன் வருத்தமுறும் போது உனக்கு படிப்பு ஏறவே ஏறாது என்று அவனை மட்டம் தட்டுவதைவிட 'விடு வேறேதாவது தொழிலை செய்து முன்னேற முயற்சி செய்' என்று சொல்வது விதியை மறைமுகமாக புரிய வைப்பதற்கான வழி. 'படித்தவன் ஆசிரியர் ஆகிறான், படிக்காதவன் கல்லூரி நிறுவனர் ஆகிறான்' என்று படிப்பு வராத மாணவனிடம் சொன்னாராம் சுகி.சிவம்.
விதிகள் உண்மையா பொய்யா என்கிற ஆராய்ச்சிகளை விட 'விதி' என்ற சொல்லை எப்பொழுது பயன்படுத்தலாம் என்பதே முதன்மையானது. வருத்தம், துயரம், ஆற்றாமை ஆகியவற்றை முற்றுப் புள்ளி வைத்து அவற்றையெல்லாம் மறந்து மனதை புத்துணர்ச்சி அடைய வைக்க 'விதி' பயன்படுத்துவது தனி மனிதனுக்கு நன்மையே அளிக்கும். எந்த ஒரு குழுவையோ, இனத்தின் வீழ்ச்சியையோ விதி என்று சொல்லுவது அவர்களின் மீதான காழ்புணர்வே அன்றி வேறொன்றும் இல்லை.
விதியை மதியால் வெல்வதென்பது நடந்து முடிந்த ஒன்றில் இருந்து விரைவாக மீள அதற்கு 'விதி நடந்துவிட்டது' என்று முற்றுப் புள்ளி வைப்பதேயாகும். மற்றபடி விதியை உண்டாக்கியது யார், விதியில் இருந்து மீள பரிகாரம் செய்ய முடியுமா ? என்பதெல்லாம் (போலி)சாமியார்களின், (போலி)சோதிடர்களின் பிழைப்பு வாதம். விதி உண்மையானால் அதைத் தடுப்பதும் இயலாத ஒன்றே அதை பரிகாரம் செய்து தவிர்க்க முடியும் என்பதோ, முன்கூட்டி தெரிந்து கொண்டோ எதுவும் ஆகப் போவதுமில்லை. விதி என்ற சொல்/செயல் முற்றிலும் உண்மை என்றால் 'முயற்சி' என்ற செயல் முற்றிலும் தோல்வி அடைந்துவிடும்.
விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.
எந்த விதியும் காலத்திற்குள் அடக்கம் விதிகள் காலத்தாலும் மாறும். விதி என்ற சொல் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும் போது மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டிய சொல், அடுத்தவரின் இழிநிலையை விதியாக சுட்டும் உரிமையும், தகுதியையும் யாருக்கும் இல்லை.
'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்றுக்கு பயன்படுத்துவது தவறு. அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவது ஆன்மிகமோ, மெய்ஞானமோ இல்லை, முறைகேடாக விதியைக் காரணம் சொல்வது பிழைப்பு வாதம், காழ்ப்பு மற்றும் அறிவீனம் எனப்படும். விதி பயன்படுத்தப் பட வேண்டிய இடம் கடந்த கால நிகழ்விற்கு மட்டுமே, நிகழ்காலம் ? எதிர்காலம் ? அவை அவரவரின் கைகளில் நல்ல முயற்சி என்னும் மற்றொரு விதிக் காரணியால் மாற்றி அமைக்கப்(படும்)படலாம்.
12 கருத்துகள்:
நல்ல பகிர்வு.
குறிப்பாக பாட்டி கதை அருமை.
ம்ம்ம்
உள்ளேன் அய்யா
எந்த ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை 'விதி' யாக பார்ப்பதன் மூலம் எளிதாக அதிலிருந்து விலகிவிடலாம், மறந்துவிடலாம், அதைவிடுத்து அடுத்து நடக்கப் போவதில் கவனம் கொள்ளலாம்
////
மிக சரி
'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்றுக்கு பயன்படுத்துவது தவறு.
///
இதுவும் சரி
நல்ல கட்டுரை!
\\விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.\\
சில சமயங்களில் மிகத் தெளிவாக, ஆணித்தரமாகவும், மிகச் சரியாகவும் (முயற்சி செய்து) எழுதும் கட்டுரைகளை மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துகள்
//விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.//
என்னைப் பொறுத்தவரை நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணங்கள் இருக்கும். காரனமின்றி காரியமில்லை என்று நம்புபவன் நான். காரணங்களை அறிய முடியாதவற்றுக்கெல்லாம் விதி என்று நம்புவது அறிவீனம் தான். விதியை நம்பும் பொழுது அதை எழுதியது கடவுள் என்று நம்ப வேண்டிவரும். பிறகு நடப்பவை எல்லாம் விதிப்பயன் என்றால் ஒருவர் விடாமுயற்சியில் ஒன்றை கண்டுபிடிக்கும் பொழுதும் அதை விதி என்று சொல்வது அவரது விடா முயற்சியை இழிவு படுத்துவதேயாகும்.
விதி பற்றி சிறப்பான பதிவு
வாழ்த்துகள் அண்ணா
நல்லதொரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம்.
விதி பற்றி அழகிய எண்ணங்கள்.
விதியை மதியால் வெல்லலாமா...
வெல்லலாம்...
விதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருந்தால்...!
நல்ல அலசல் கோவிஜி.
மிகச்சிறந்த கட்டுரை.
விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே]]
சிறப்பு.
நான் என்நண்பனிடம் ஒரு பொருளை ஏமாற்றிப் பறித்துவிட்டு (நம்புபவனைத்தானே
ஏமாற்ற்முடியும் நம்பாதவனை எப்படி ஏமாற்றலாம் ? ) உனது விதி பொருளை இழந்துவிட்டாய் என்று கூறுவதை என்னென்பது .
கருத்துரையிடுக