பின்பற்றுபவர்கள்

15 ஜனவரி, 2008

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !

திருவள்ளுவர் ஆண்டாக மாற்றப்பட்ட தமிழர் நாட்காட்டி முறையின் படி 'தை' முதல் நாளே தமிழ் நாட்காட்டியின் முதல் நாள் அதாவது ஆண்டு பிறப்பு என்று தமிழறிஞர்களை கலந்தாய்ந்து அறிவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவிக்க இருப்பதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்கது.

தமிழர்களுக்கு கரும்பைப் போன்று இனிப்பான செய்தி தான் இது, அறிவிப்பை வெளியிட புரோகிதர்களிடம் நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்கச் சொல்லவோ, கலந்தாலோசிக்கவோ தேவியில்லை. தமிழக அரசு இதனை அரசாணையாக உடனடியாக வெளி இடவேண்டும் என்பதே என்போன்றோரின் விருப்பம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும். தமிழர் புத்தாண்டு எது என்பதை முடிவு செய்யும் உரிமை தமிழர்களுக்கே உண்டு இதில் தமிழறிஞர்களின் அறிவுரையும் வழிநடத்துதலுமே போதுமானது. மொழி பண்பாடு நாள்காட்டி முறை அனைத்திலும் தமிழன் தனித்தன்மையுடன் இருந்தால் நம் மீது ஏறி மிதிக்க தயங்குவர். தமிழர்களுக்கென்று தனி அடையாளம் இல்லை என்றால் அடிமையாக்கிவிடுவார்கள். உலகமயம் என்றெல்லாம் பேசுகிறோமே தனி அடையாளம் தேவையா ?என்று கேட்கலாம். உலகமயத்திலும் தாராளமயமாக்களிலும் தமிழனின் பங்கு ஏற்கப்படும் போது அவை சிந்திக்க கூடியவை தற்பொழுது அல்ல. சாதிய அடையாளம் ஒடுக்கி வைப்பதற்காக இருக்கும் வரை அதிலிருந்து மீள அதே அடையாளம் எவ்வளவு தேவையோ, அது போன்றதே தமிழன அடையாளமும் மொத்த தமிழனத்தின் விடுதலைக்கு தேவையான ஒன்று. இன்னும் தமிழன் முதுகில் ஏறி மிதிப்பவர்கள் இருக்கும் வரை அடையாளம் தேவை இல்லை என்றால் ஒட்டு மொத்த தமிழனமும் விடுதலை அடையமுடியாது.

தமிழன் என்றொரு இனமுன்று நாம் பாடினால் போதாது மற்றவர்களுக்கு அதை புரிய வைக்க வேண்டும். மொழிவெறியோ, இனவெறியோ தேவை இல்லை. மொழிப்பற்றும், இனப்பற்றும் போதுமானது. மொழிவெறியும் இனவெறியும் மாற்றான் மொழியை தூற்றுவதற்கும், மாற்றான் இனத்தை கீழறுப்பதற்குமே பயன்படும். மொழிப்பற்றும் இனப்பற்றும் தன்மொழியை தன் சமூகத்தை மேலே கொண்டுவர பயன்படும்.

இடைச்சொருகலாக ஆணுக்கும் (நாரதர்) ஆணுக்கும் (கிருஷ்ணன்) பிறந்த தமிழ் 60 ஆண்டுகளின் ஆபாச கதைகளையும், அவை தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் என்று சொல்வதையும் தமிழ் நாட்காட்டியில் இருந்து அகற்ற வேண்டும். தை திங்களை தமிழன் ஆண்டு பிறப்பாக அறிவிப்பதை எதிர்த்து வழக்கம் போல், 'வழி வழி வருவதை மாற்றத் தேவை இல்லை' என்று தவளைகள் சத்தமிடும், எப்போதும் நாம் சொல்வது அவைகளுக்கு கேட்காது என்பது போலவே அவறின் ஓலங்களை நாமும் பொருட்படுத்ததேவை இல்லை.

அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

15 கருத்துகள்:

TBCD சொன்னது…

தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்..!!

இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்..

( தவளைகள் இதுவரை கத்தியது போல் தெரியவில்லை. ஒரு வேளை இந்த நன்நாளில் திருந்திவிட்டார்களோ என்னமோ....)

cheena (சீனா) சொன்னது…

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்

கொண்டோடி சொன்னது…

தலைப்பைத் தமிழ்'ப்' புத்தாண்டு என்று எழுதினால் நன்றாயிருக்குமே?

கொண்டோடி சொன்னது…

தமிழில் தட்டச்சவென நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு தொழிற்படவில்லை. கவனிக்கவும்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும்//

நன்றாகச் சொன்னீர்கள்..வாழ்த்துகள்

நாகை சிவா சொன்னது…

தைத் திருநாள் வாழ்த்துக்கள் :)

தமிழ் புத்தாண்டுக்கும் என் வாழ்த்துக்கள் உண்டு

பிறைநதிபுரத்தான் சொன்னது…

சகோதரர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும்' மிகவும் அழகாக சொன்னீர்கள்.

மாடுகள் அழித்து மிச்ச மீதி இருப்பதை - 'கால் நடைகளை' ஓட்டிகொண்டு கைபர்-போலன் வழியாக வந்தார்களே அவர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் நமது கடமை.

தமிழ் சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கையேடு சொன்னது…

இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துக்கள்.

தங்கள் அனுமதி பெறாமலேயே உங்கள் பெயரை என் பதிவில் முன்மொழிந்த்துவிட்டேன் - மன்னிக்கவும்

Baby Pavan சொன்னது…

தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்..!!

இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்..

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைத் திருநாள் வாழ்த்துக்கள் கோவி அண்ணா!

//உலகமயம் என்றெல்லாம் பேசுகிறோமே தனி அடையாளம் தேவையா ?என்று கேட்கலாம்//

கேட்க முடியாது!
உலக மயமானாலும்,
ஒரே கரென்சி (நாணய முறை) வந்தாலும் நாடும் கொடியும் என்றுமே தனிச் சின்னங்கள் தாம்! அடிப்படை இழந்து, அகிலமயமாக்க எவரும் துணியவில்லை! துணியவும் மாட்டார்கள்! தமிழனும் துணிய வேண்டாம்!

மறைமலை அடிகள் காலம் தொட்டு, பின்னாளில் திரு.வி.க போன்ற மென்மனம் கொண்ட தமிழறிஞர்கள் வரை பல்வகையான ஆய்வுகள் மேற்கொண்டு புத்தாண்டினை வானியல் அடிப்படையிலும் தை முதல் நாளாக நிறுவி உள்ளார்கள்!

எப்படித் திருவள்ளுவராண்டு வழக்கில் வந்ததோ, அதே போல் இதுவும் வழக்கத்தில் வர வேண்டும்! தை முதல் மார்கழி வரை மாதங்கள் தமிழிலேயே இருக்கும் போது, ஆண்டுகள் இருக்கக் கூடாதா என்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இடைச்சொருகலாக ஆணுக்கும் (நாரதர்) ஆணுக்கும் (கிருஷ்ணன்) பிறந்த தமிழ் 60 ஆண்டுகளின் ஆபாச கதைகளையும், அவை தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் என்று சொல்வதையும் தமிழ் நாட்காட்டியில் இருந்து அகற்ற வேண்டும்//

இது தனிக் கதை! பதிவின் நோக்கம் பாழாகலாகாது! பின்னர் விரிவாக இடுகிறேன்!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த அறுபது ஆண்டுகள் என்பதெல்லாம் புருடா புராணம் தான்! வடமொழி வானியல் கணக்குகளில் கூட அதற்கு அடிப்படை இல்லை!
"சாதாரண", "ராட்சச" ன்னு எல்லாம் பசங்களுக்குப் பேர் வைக்க மாட்டாங்க! :-)

எதுவாயினும் வடமொழி வழி நாட்காட்டி முறை வேறு!
தமிழ் வழி நாட்காட்டி முறை வேறு!
முன்பே சொன்னது போல், மாதங்கள் அத்தனையும் இனிய தமிழில் இருக்கும் போது, ஆண்டுகளும் அப்படியே இருக்க வேண்டும்! இதில் அடிகளாரின் கருத்தே என் கருத்தும்!

ஆண்டாளும் நாச்சியார் திருமொழியைத் தைத் திங்களில் இருந்து தான் துவங்குகிறாள்!
//தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு வணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா//

ரூபஸ் சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

மங்களூர் சிவா சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்

இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்..

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பின்பு தனித்தனியாக மறுமொழி இடுகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்