பின்பற்றுபவர்கள்

5 நவம்பர், 2008

சகிப்புத்தன்மை !

விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவையெல்லாம் தனக்கு ஒவ்வாத மாறுபட்ட ஒன்றை பிறருக்காக மனம் உவந்து செய்யப்படும் செயல்கள். விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை என்றே சொல்லுவார்கள். ஒரு சின்ன மனத்தாங்கலிள் கூட உணர்வுகளை ஈகோவுக்கு இரையாக்கிவிட்டு, 'தான் மிகவும் கோவக்காரன்' என்று சொல்வதெல்லாம் பெருமையா ? பத்து ஆண்டுகள் பழகியவராக இருந்தாலும் 10 நிமிடத்தில் இருவருக்கும் ஏற்படும் சினம் எல்லாவற்றையும் கெடுத்துவிடும். 'என்னை' எப்படி சொல்லலாம் என்ற தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய பெருமதிப்பில் ஆண்டுக்கணக்கில் ஒருவரை ஒருவர் எதிரே சந்தித்தாலும் வெப்பமூச்சையோ, பெருமூச்சையோ வெளி இட்டுச் செல்வார்கள், சண்டைப் போடுவதற்காகக் கூட பேசுவோம் என்று இருவருமே நினைக்க மாட்டார்கள். ஒருவர் நல்லமனதுக்காரராக இருந்துவிட்டால் நிலைமைகள் சரியாகும்.

பொதுவாக சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி அந்த நிமிடத்தின் நிகழ்வுகளை மட்டுமே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கும், அந்த கெட்ட நிகழ்வுக்கு முன்பு வரை இருவரும் ஒரே தட்டில் உண்டவர்களாகவோ, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கியவர்களாகவோ, ஒருவரின் அன்பில் மற்றவர்கள் உருகிய எண்ணற்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம், அதையெல்லாம் ஈகோ நினைத்துப் பார்க்க வழிவிட்டுவிடவே விடாது. 'ச்சே.....அவனும் நானும் எப்படி எல்லாம் இருந்திருக்கிறோம்...' என்று நினைக்கும் அதே நொடியில் 'நான் ஒன்னும் அவனைக்காட்டிலும் எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை' என்ற மற்றொரு நினைப்பு பழைய நிகழ்வின் நினைவுத் தொடர்ச்சியை உடனடியாக துண்டித்துவிடும். இன்னும் கொஞ்சம் இளாகிய மனதுகாரராக இருந்தால், 'நாம அப்படி நினைக்கிறோம்...அவர் அப்படி நினைக்கணுமே...நம்ம நல்ல மனது அவனுக்கு வராது...நினைச்சுப் பார்ப்பதே வேஸ்ட்' என்று ஈகோவை மீறிய சிந்தனையை மீண்டும் ஈகோவில் மெல்லப் புதைப்பார்கள். மிகச் சிலர் மட்டுமே... 'தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை...எதிரே வரும் போது கண்டிப்பாக பேசி தம்மீது தவறே இல்லை என்றாலும் புரிந்துணர்வின் மலர்ச்சிக்காக மன்னிப்புக் கேட்கலாம்...ஏற்றால் பார்ப்போம்' என்று நல்ல பொழுதிற்காக காத்திருப்பார்கள்.

வாழ்க்கை முழுவதுமே எதோ ஒரு மேலான உணர்ச்சிக்கு தன்னை அடகு வைத்து அதனால் கிடைக்கும் சொற்ப சுகத்திற்கு ஈடாக மகிழ்வையெல்லாம் வட்டியாக செலுத்தி வாழ்ந்து வருவதே பெரும்பாலான மனிதருக்கு இனிப்பாக இருக்கிறது. உடல சதையாலும் இரத்தத்தாலும் இருப்பது உண்மை. மனதை அப்படி வரையறுத்துவிட முடியாது. ஆனால் அதில் வரையறை செய்து கட்டுபோட்டு வைப்பது, நல்ல எண்ணங்களை சிறைவைப்பது இவையெல்லாம் ஈகோவால் நடப்பவை.

தன்னைப் பற்றிய பிறரின் புகழ்ச்சிக்கு ஏங்குபவர்கள் பலரும் கூட அதற்கு தங்களின் பங்காக எதையும் செய்வதில்லை என்பதே உண்மை, விதை விதைக்காமலே அறுவடை நடந்துவிடுமா ? தத்துவங்கள், பேருண்மைகள் வாழ்க்கைக்கு உதவாது என்று இயல்பில் இருந்து விலகி வாழ்வை தள்ளி வைத்துக் கொள்பவர்களே மிகுதி. இரு கைகளின் விரல்கள் வேறு வேறு திசை நோக்கி இருந்தாலும் இருகைகளும் ஒன்றை ஒன்று தழுவும் போதும் திசை வேறாக இருந்தாலும் ஒன்றை ஒன்று பார்க்கும் என்பது புரிந்து கொள்ளப் படுவதே இல்லை.

550 கோடி மக்கள் வாழும் உலகில் நம்மை அறிந்தவர்கள் என இருப்பவர்கள் மிகக் குறைவே. நம்மை அறிந்தவர்கள் நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள், இவர்களைத் தவிர்த்து நாம் யாரைப் போற்றப் போகிறோம் ? அதனால் பயன் தான் என்ன ? நமக்கு தொடர்பே இல்லாத நடிகனையும், தலைவர்களின் மீது பற்று வைத்துப் போற்றுபவர்கள், தனக்கு நன்கு தெரிந்தவர்களின் மீது சின்ன சின்ன கருத்துவேறுபாட்டிற்காக விலகி இருப்பதென்பது நமக்கு தெரிந்தவர்களில், நாம் நேசிக்கக் கூடியவர்களில் ஒருவரை (மனப் படுகொலையால்) இழப்பதும் கொடுமையான ஒன்றே. சேர்த்து வைத்தப் பணத்தில் 10 ரூபாய் காணாமல் போனால் கூட கலங்கும் மனது பிரிவிற்காக கலங்கவேண்டும் அல்லவா ? நாம் சேர்த்துவைத்ததில் நண்பர்களும் உறவுகளும் அடங்கும் அல்லவா ?

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற செயல்களில் வழி நிமிட நேரத்தில் தீர்ந்துவிடும் பகையெல்லாம் ஈகோவின் கட்டுப்பாட்டில் மரணம் வரையில் கூட நீடித்துவிடும். ஈகோவுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவை நான்குமே ஒருவர் ஈகோ வசப்படும் போது அப்படி நடந்து கொள்வது கோழைத்தனம் என்றே புரியவைக்கப்பட்டு ஒட்டாமல் ஆயுள் சிறை வைத்துவிடும்.

சேரத்துடிக்கும் கரங்களை பூட்டி இருக்கும் ஈகோ என்னும் மாய விலங்கு உடை(க்கப்)பட வேண்டும்.

மற்றொரு நற்சிந்தனையில் தொடர்வோம்.

11 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

அருமையான பதிவு..

நையாண்டி நைனா சொன்னது…

உள்ளேன் அய்யா...

வால்பையன் சொன்னது…

//சேரத்துடிக்கும் கரங்களை பூட்டி இருக்கும் ஈகோ என்னும் மாய விலங்கு உடை(க்கப்)பட வேண்டும்.//

இந்த பதிவுலகிலேயே என் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன்.

நவநீதன் சொன்னது…

சில சமயம் மிக அதிக அன்பும் பிரிவுக்கு காரணமாகி விடும்.
பேசிக்கொண்டே இருந்தால் தான் கருத்து வேறுபாடு வருகிறது என்று கொஞ்சம் விலகி இருந்தால், அது கூட நட்பை இழப்பதற்கு காரணமாகி விடும்.
இவை எல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. (என்ன கூட வயசானவங்க மாதிரி பேச வச்சுட்டீங்களே...)

இப்படி மிக சிறிய விசயங்களை கூட ரொம்ப துல்லியமாக பதிவாக்குகிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
அருமையான பதிவு..
//

கிருஷ்ணா,
தவறாமல் வந்து பாராட்டிச் செல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
உள்ளேன் அய்யா...
//

:) வாத்தியார் பதிவுக்கு போய்விட்டு அப்படியே இங்கே வந்துவிட்டீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//சேரத்துடிக்கும் கரங்களை பூட்டி இருக்கும் ஈகோ என்னும் மாய விலங்கு உடை(க்கப்)பட வேண்டும்.//

இந்த பதிவுலகிலேயே என் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன்.
//
வால்பையன்,
கருத்துக்கு நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல பதிவாக அமைந்து விட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் said...
சில சமயம் மிக அதிக அன்பும் பிரிவுக்கு காரணமாகி விடும்.
பேசிக்கொண்டே இருந்தால் தான் கருத்து வேறுபாடு வருகிறது என்று கொஞ்சம் விலகி இருந்தால், அது கூட நட்பை இழப்பதற்கு காரணமாகி விடும்.
இவை எல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை.



நவநீதன்,

நீங்கள் சொல்வது சரிதான். மிகுந்த அன்பு பற்றுதலை ஏற்படுத்துவிடும். அப்பறம் சின்ன சின்னவற்றிற்கெல்லாம் 'என்னை...கடிந்து கொண்டாரே' என்று நினைக்கவைத்துவிடும் ஆபத்து அது.

அன்பு வைப்பது தவறல்ல, அதிக அன்பு நிபந்தனைகளை ஏற்படுத்து சுயத்தை அடகு வைத்துவிட்டு மீட்க வழி தெரியாமல் திணறும்.

//(என்ன கூட வயசானவங்க மாதிரி பேச வச்சுட்டீங்களே...)//

வயசுக்கு கருத்துக்கும் தொடர்பில்லை. 4 வயதில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர் 10 வயதில் 60 வயது அனுபவம் பெற்றிருப்பார். எண்ணங்கள் அனைத்தும் அனுபவங்களால் ஏற்படுபவை, வயதிற்கும் அதற்கும் தொடர்பில்லை.

//இப்படி மிக சிறிய விசயங்களை கூட ரொம்ப துல்லியமாக பதிவாக்குகிறீர்கள்.
//

சிறுகதையாகக் கூட எழுதலாம் ஆனால் சிறுகதைப் படிப்பவர்கள் மிகக் குறைவே. பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
நல்ல பதிவாக அமைந்து விட்டது.
//

பாரதி,

இன்னிக்கு கணனிக்கு விடுமுறை கொடுத்துட்டிங்களோன்னு நினைத்தேன். வந்துட்டிங்க. மிக்க மகிழ்ச்சி ! பாராட்டுக்கு நன்றி !

Vetirmagal சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு.
படித்தவுடன் , இனி நான் யார் யாருடன் நட்பின் கரத்தை நீட்டவேண்டும் என்று பட்டியல் போட வைத்தது.

பின் பற்றுவது எளிமை தான். ஆனால் முதலடி தான் கடினம்.

உங்கள் பதிவின் உயர்ந்த கருத்தகள் என்னை பாதித்தது.

நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்