குறிப்பாக காலம் அல்லது நேரம் இவை. காலம் அல்லது நேரம் இவை உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்த்தால், அப்படி எதுவும் அறுதி இட்டு சொல்ல முடியாது. நமது நேரம் மற்றும் கால கணக்கிடின் அடிப்படை முதலில் புவியின் இயக்கம் அதாவது பகல் இரவு, அதில் காலை, நண்பகல், மாலை, இரவு என்னும் பகுப்பாக அறியப்பட்டு, பின்னர் அந்தப் பகுப்பின் சுழற்சியை மணித்துளிகள், நொடித்துளிகள் என்பதாக மாற்றி நேரக்கணக்கிடுகளின் அடிப்படையும், திங்கள் வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதாக திங்கள் (மாதக்) கணக்கும், பிறகு பருவ காலங்களின் அடிப்படையில் ஆண்டு அடிப்படைகளும், பிறகு புவியின் சுழற்சியை துள்ளியமாக அறிந்த பிறகு லீப் ஆண்டு கணக்குகளும் ஏற்பட்டன. ஒட்டுமொத்த பரவெளி, பால்வெளி இயக்கத்தின் கணக்குகளும் தற்பொழுது புவி சுழற்சியின் அடிப்படையிலான மணித் துளிகள், ஆண்டுகள், (தொலைவுகள் ) ஒளி ஆண்டுகள் என்பதாக கணக்கிடப்படுகிறது.
நாம் இருப்பதாக நம்பும் கால நேரங்கள் உண்மையிலேயே எப்போதும் இருந்ததே இல்லை அல்லது எப்போதுமே இருக்கிறது. இவை பற்றிய பகுப்புகள் வரலாறுகள் அடிப்படையில் நம்மால் நம் வசதிக்கேற்ப முன்னோர்கள் அமைத்துக் கொண்ட ஒன்றே. சமூகம் என்பதை மனிதன் ஏற்படுத்திக் கொண்டது போலவே, தனக்கான கால நேரங்களை ஒரு ஒழுங்கு முறைக் கணக்குக்குள் மனிதன் அமைத்துக் கொண்டான். காலம் இருக்கிறது என்பது தற்போது ஆத்திகர் நாத்திகர் அல்லாது பொதுவாக மனித குல நம்பிக்கை ஆகிவிட்டிருக்கிறது. நாம் பகுத்து அறிந்து கொண்ட காலங்கள் எதுவும் பிற உயிரினங்களுக்கு தாவிர வகைக்களுக்கு நம்பிக்கை என்ற அளவில் கூட கிடையாது. நாம் தற்போது நடைமுறையில் வைத்திருக்கும் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்கள் என்பது கூட முன்பு இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 60 நாழிகைகள் என்பதாக கணக்குகளாக இருந்தன. 24 மணி நேரம், 365 நாட்கள் இப்படியாக நாம் அமைத்துக் கொண்டவற்றிலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையே. இந்த கற்பனைகள் இல்லாவிட்டாலும் கூட நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.
நம்பிக்கைகள் கடவுள் என்றால், நாத்திகரும் நம்பும் கடவுள் நேரம் (Time), ஆனால் அவை இருக்கிறது என்றும் இல்லை என்றும் நினைப்பது யாவும் நம் நம்பிக்கையே. பரவெளி இயக்கம் என்னும் பேரியக்கச் செயலை நம் அறிவின் நுகர்சியால் உணரக்கூடிய, மிக குறுகிய கால எல்லைக்குட்பட்ட,பகல் இரவு புவி இயக்கத்தின் ஊடாக அளக்க முயற்சிக்கிறோம். அதை முற்றிலும் அளக்க முடியாத சூழலில் பரவெளி இயங்குகிறது என்பதாக நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். பெருவெடிப்பு நிகழ்ந்தகாக பில்லியன், ட்ரில்லியன் (அதற்குமேல் எண்ணியலை மனிதனால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை) களில் ஆண்டுகணக்கைச் சொல்லுகிறார்கள். பெருங்கடலை அளவிட இன்னும் பீப்பாய்கள் தவிர்த்து பெரிய களன் அளவைகள் கிடையாது. வேண்டுமானால் பெருங்கடளின் கொள்ளளவு பல கடல்களை உள்ளடக்கியது என்று மட்டுமே தோராயமாகச் சொல்ல முடியும். குழப்ப(ம்) ஒன்றும் இல்லை :), நம்மால் கற்பனை செய்ய முடியாதவற்றின் அளவுகளை நம் கற்பனைக்குள் உள்ள அளவிடுகளை வைத்து அளக்க முயற்சிக்கிறோம் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.கற்பனைக்கு அப்பாற்பட்டவற்றை கற்பனைக் கட்டுக்குள் கொண்டுவர எளிதான வழி நம்பிக்கை. பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கால நம்பிக்கை. இரண்டிம் கற்பனைகளுக்கு ஒழுங்குவடிவம் கொடுத்திருந்தாலும், ஓரளவுக்கு ஒழுங்கான வடிவமாக இருப்பது காலம் தான். அதுவும் புவி தன் வட்டப்பாதையை மாற்றிக் கொள்ளாதவரை, சுழற்சியில் சோர்ந்து போகதவரை மட்டுமே.
பயன் கருதி அமைத்துக் கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளது காலம், பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. காலம் அல்லது நேரம் ஆத்திக நாத்திகருக்கான பொது நம்பிக்கை என்றாலும் காலத்தை அனைவருமே வணங்குவதில்லை. காலக் கற்பனையின் எல்லைக்குட்பட்ட உருவ(க)ம் மணியாரம்(கடிகாரம்).
நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)







