பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2010

தற்பெருமை (க.அ.உ) !

சாயங்காலம் அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் நல்ல பசி, இடையில் பேருந்து மாற வேண்டி இருந்தது, நல்லவேளை அங்கு கோமளாஸ் உணவகம் இருந்தது, சாப்பிட சிற்றுண்டிகளை வாங்கிக் கொண்டு உணவு மேசையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தேன், கூட்டம் மிகுதியானதால் இருவர் அமரும் சிறிய மேசையே கிடைத்தது, எதிரில் இன்னொருவர் அமர்ந்து உண்ணலாம். எதிர்பார்க்காதபடி இன்னொரு இந்திய ஆடவர் 30 வயதிருக்கும் அவரும் எதோ ஒரு சிற்றுண்டியை வாங்கிக் கொண்டு வந்து எதிரில் வந்து, 'இங்கே உட்காரலாமா ?' என்று அனுமதி கேட்டு அமர்ந்தார்.

வழக்கமாக எதிரில் அமர்ந்திருபவர் முகம் பார்க்காது உண்ணுவது தான் எனது வழக்கம், அவராகவே...

'என்னங்க .......நீங்க இந்தியாவில் இருந்து வந்திருக்கிங்களா ?' என்று கேட்டார்

மனதுக்குள் 'பரவாயில்லையே.....நம்ம ஆட்கள் கூச்சப்படாமல் அறிமுகம் ஆகாதவர்களை விசாரிக்கிறார்கள், நாம முந்திக் கொண்டு கேட்டு இருக்கலாம்.....நமக்குத்தான் ஈகோவோ ?' என்றெல்லாம் நினைத்துக் கொண்டே,

'ஆமாங்க.....நான் இந்தியா...தமிழ்நாட்டில் இருந்து வந்தேன்.....வந்து பத்து ஆண்டுகள் ஆகிற்று' என்றேன்

நாம பத்து ஆண்டுகளாக இருக்கோம் என்று சொன்னால் நம்மை மேலும் மதிப்பார்கள் என்பதாக கேட்காமலேயே கூடுதல் தகவலாக சொல்லிக் கொண்டு இருந்தேன்

'எங்கே வேலை செய்றிங்க.....?' என்றார்

'நீங்க ஐட்டியில் வேலை செய்றிங்களா ?' கேட்டேன்

'எப்படி கரெக்டாக கேட்கிறிங்க ?' என்றார்

'முழுக்கை சட்டையோட்.....இன்சர்ட் செய்து.....மாலை நேரத்திலும் கசங்காத உடை......இதைப் பார்த்தாலே நீங்க ஐட்டின்னு தெரியுது' என்றேன் 'நாம அறிவாளி என்பதை நம்ம ஊகமே வெளிப்படுத்துது என்பதை எதிரே உள்ளவர் நினைத்து வியப்படையனும்....என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடி என் உச்சி குளிர்ந்து கொண்டிருந்தது...எதிர்பார்த்தபடியே அதே போன்ற வியப்பை முகத்தில் காட்டினார்....

'நான் இங்கே தான் பக்கத்தில் ஒரு சீன நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியராக இருக்கிறேன்' என்றேன்

'க்ளையண்ட் ப்ளேசா ?'

'இல்லிங்க.....அதுதான் கம்பெணியே' என்றேன்

என் பெயரெல்லாம் கேட்டு....

'உங்களுக்கு திருமணம் ஆச்சா ?' என்றார்

'அதெல்லாம் எப்போவோ ஆச்சு.......பத்து ஆண்டுகள் ஆச்சு...இப்ப எனக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள்.......என் வயது.....இப்ப' என்பதாக சொன்னேன்

மறுபடியும் வியப்பு காட்டினார்

அதற்குள் உணவை உண்டு முடித்துவிட்டு....மேலும் நம்மைப் பற்றி நம்பும் படி இருக்கட்டும் என்பதாக விசிட்டிங்க் கார்டையும் கொடுத்துவிட்டு கைகழுவ சென்றேன், கைகழுவும் இடம் எதிரில் என்பதால் எனது அலுவலக பை அங்கேயே விட்டுச் சென்றேன்.

திரும்ப வந்து பையை எடுத்துக் கொண்டு அவருடன் மேலும் பேச காலம் போதவில்லை என்பதால்

'மறக்காம மெயில் போடுங்க, அதில் மெயில் ஐடி இருக்கு.......' என்றேன்

'மொபைல் போன் நம்பர் கொடுக்கிறிங்களா ?'

'அதிலேயே இருக்குங்க' என்பதுடன் அதைக் காட்டிவிட்டு

'நான் தமிழ் ப்ளாக்ஸெல்லாம் எழுதுவேன்.....உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்....மெயில் போடுங்க' என்று கூறி விடைபெற....

'கண்டிப்பாக போடுறேங்க' என்றார்

ஐந்தடி சென்றதும்.........'ச்சே........நம்ம பேரு தகவெல்லாம் கேட்டார்......பதிலுக்கு நாம அவர் பேரைக் கூட கேட்கவில்லையே என்பதாக நினைத்து வந்து.....திரும்பி வந்து

'சாரி..... உங்க பேரை கேட்க மறந்துட்டேன்........'

'என் பேரு கிருஷ்ணா' என்றார் (உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது)

******

பரவாயில்லை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுபவர்கள் மிகக் குறைவு, இந்த காலத்தில் இப்படிப்பட்டவர்கள் கூட இருக்கிறார்களே.......நம்ம தமிழ் வலையுலகத்தை அறிமுகப்படுத்திவிட்டு தமிழ் சேவை ஆற்றுவோம்... ஆற்றவைப்போம்..என்றெல்லாம் நினைத்து கொண்டு திரும்பினேன்.....அவரு சும்மா சொன்னாரா......இப்போதெல்லாம் ஐட்டியில் வேலை செய்கிறாவர்களுக்கு நேரம் கிடைத்து, நினைத்துக் கொண்டு மெயில் போடுவர்கள் இருக்கிறார்களா......அவராகத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார் கண்டிப்பாக மின் அஞ்சல் அனுப்புவார் என்று நினைத்துக் கொண்டே.....அடடா........நாம அவருடையை கைபேசி எண்ணை கேட்காமல் வந்துவிட்டோமே.... அது எப்படி நம்மைப் பார்த்தாலே நம்மிடம் வந்து பேசத் தோணுமோ.....அதான் முகராசி என்று சொல்லுவார்களோ......நினைக்க நினைக்க பெருமையாகக் கூட இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்வை பிறகு மறந்தே போனேன்.

இருநாட்கள் சென்று ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணிக்கு குட்டி இந்தியாவிற்கு சென்றேன்.....கூடவே இன்னொரு பதிவர் நண்பரும் வந்திருந்தார்.....இடையில் அலைபேசி அடித்தது, புதிய எண் அழைப்பு முகப்பில் தெரிந்தது

'ஹலோ........யார் பேசறது ?'

'நான் தான் கிருஷ்ணா ?'

மண்டைக்குள் அடித்த டார்ச்......அன்னிக்கு கோமளாசில் பார்த்து பேசியவர் என்று உணர

'சொல்லுங்க கிருஷ்ணா......அன்னிக்கு கோமளாசில் பார்த்தோமே......ரொம்ப மகிழ்ச்சி சரியாக நினைவு வைத்துப் மறக்காமல் பேசுகிறீர்கள்......மிக்க நன்றி'

'உங்க கிட்ட முக்கியமா ஒண்ணு பேசனும்.......அதான் அழைத்தேன்.....' என்றார்

'சொல்லுங்க சொல்லுங்க'

'இப்ப ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை ......சொல்லுங்க'

'ஒரு ஈ காமர்ஸ் பிஸ்னஸ் நானும் நண்பரும் செய்கிறோம்.....பார்ட்னர்ஸ் தேவைப்படுது'

கொஞ்ச நாளாக எதாவது பிஸ்னஸ் செய்யதால் நல்லா இருக்கும் என்று அடிக்கடி சொல்லும் என் மூளைக்கு சற்று பிரகாசம் ஏற்பட அதற்காகவே காத்திருந்தது போல்

'ஓ தாரளமாக செய்யலாம்.....நேரில் வேண்டுமானாலும் வருகிறேன்.......சொல்லுங்க' என்றேன்

'நாளைக்கு மாலை ப்ரியா இருப்பிங்களா.......'

'இல்லிங்க நாளைக்கு கடினம் நண்பர் வீட்டில் டின்னருக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள்......நாளை மறுநாள் வேண்டுமானால் வருகிறேன்' என்றேன் உண்மையும் அது தான்.

'அப்ப சரி.......நாளை மறுநாள் அதாவது டே ஆப்டர் டுமாரோ பார்ப்போம்' என்றார்

'சரி......ஆனால் என்னால் மாலை 7 மணிக்கு மேல தான் வரமுடியும்'

'அது பரவாயில்லை......பிஸ்னஸ் பற்றி என்னுடைய ப்ரண்டு தான் சொல்லுவார் நானும் அவரும்....இன்னும் சிலரும் செய்கிறோம்.......நான் வரமாட்டேன்........என்னுடைய பிரண்டு தான் உங்களிடம் எக்ஸ்ப்ளைன் பண்ணுவார்' என்றார்

மண்டைக்குள் பழைய நினைவுகள் ஒன்று பளிச்சிட

'நீங்க என்ன மாதிரி பிஸினஸ் செய்றிங்க........இந்த ஆம்வே.....கீம்வேன்னு.........எதுக்கு நான் கேட்கிறேன் என்றால் அதிலெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை'

எதிர்முனையில் ஐந்து செகண்ட் கள்ள மவுனம்.......... மனதுக்குள் எனக்கு அப்பாடா தப்பித்தேன் என்கிற உணர்வு ஏற்பட்டது

'நீங்க ஏற்கனவே அதை செய்திருக்கிறீர்களா ?' என்றார்

'ஆமாங்க.....நான் செய்யல.......ஒரு நண்பர் கொண்டு போய் விட்டார்.........எனக்கு அதில் விருப்பமில்லை.......நான் செய்யவில்லை' என்றேன்

'ஏன் ஏன் ........'

'இல்லிங்க அதுபோன்ற பிஸினசில் எனக்கு விருப்பமில்லை...ஆம்வே என்றால் என்னை கூப்பிடாதிங்க.....' என்றேன்

சுருதி குறைய

'அப்ப சரி........ஓகே......' என்று அவர் சொல்ல

'ரொம்ப.................ப தாங்க்ஸ்... ! '

விசிட்டிங்க் கார்டெல்லாம் கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளப் பார்த்து....அப்பாடா தப்பித்தோம்..... என்று நினைத்துக் கொண்டே நிம்மதி பெருமூச்சுடன் போனை துண்டித்தேன்.


பின்குறிப்பு : தலைப்பில் க.அ.உ - கதை அல்ல உண்மை

23 கருத்துகள்:

DrPKandaswamyPhD சொன்னது…

கோவி-கண்ணன்,
//விசிட்டிங்க் காரெடெல்லாம் கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளைப் பார்த்து....//
இந்தப்பிளாக்குல சொந்தப்பேரை வச்சு எழுதறதும் சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கற மாதிரிதான் போல இருக்கு.

ஆனாலும் இந்த வார்த்தைப் பிரயோகம் - "சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது" யார் கண்டு பிடிச்சாங்களோ, அவங்களுக்கு நோபல் பிரைஸே தரலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனாலும் இந்த வார்த்தைப் பிரயோகம் - "சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது" யார் கண்டு பிடிச்சாங்களோ, அவங்களுக்கு நோபல் பிரைஸே தரலாம்.//

எனக்கு தெரிந்து முத்து தமிழினி என்கிற பதிவர் நண்பர் முதன் முதலில் பயன்படுத்தினார்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தற்பெருமை :))))

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பிரபல பின்னவீனத்துவ எழுத்தாளரை போல நீங்களும் உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களை புனைவாக எழுதுகிறீர்கள் :)

நோபல் பரிசு எழுத்தாளர் பழமும் போபெக் கூட உங்கள் சாயலில் தான் எழுதுவார். :)

இதை படித்ததும் அப்படியே தன்னிலை மறந்துவிட்டேன்.. இது போல நிறைய எழுதி வருடத்திற்கு பத்து புத்தகமாக போடவும்.

[அடுத்த முறை கோமளாசில் இரண்டு வடை வாங்கி குடுப்பீர்கள் என்ற எண்ணத்தில் கூவி இருக்கிறேன். பார்த்து செய்யுங்க :)) ]

துளசி கோபால் சொன்னது…

தகவல் பிழை இருக்கு.

சொ.செ.சூ: காப்புரிமை நம்ம வரவணையானுக்கு.


நான் பயன்படுத்தும்போது 'அவருக்கு நன்றி'ன்னு அடைப்புக்குள்ளே போட்டுருவேன்.


வரலாற்றைத் திரிக்கக்கூடாது. ஆமாம்.:-)

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...

தகவல் பிழை இருக்கு.

சொ.செ.சூ: காப்புரிமை நம்ம வரவணையானுக்கு.


நான் பயன்படுத்தும்போது 'அவருக்கு நன்றி'ன்னு அடைப்புக்குள்ளே போட்டுருவேன்.


வரலாற்றைத் திரிக்கக்கூடாது. ஆமாம்.:-)//

தகவலுக்கு நன்றி !

வரலாறு முக்கியம் பதிவரே ங்கிறிங்க.
:)

பிரியமுடன் பிரபு சொன்னது…

பச்ச புள்ள அண்ணே நீங்க .......

பிரியமுடன் பிரபு சொன்னது…

/ஆனாலும் இந்த வார்த்தைப் பிரயோகம் - "சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது" யார் கண்டு பிடிச்சாங்களோ, அவங்களுக்கு நோபல் பிரைஸே தரலாம்.//

எனக்கு தெரிந்து முத்து தமிழினி என்கிற பதிவர் நண்பர் முதன் முதலில் பயன்படுத்தினார்
///////


எங்கள் ஊரில் ரொம்ப காலமா உண்டு

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அண்ணே நான் சிங்கப்பூரில் இருக்கும்போது இப்படிதான் ஒரு கான்பரன்ஸ் வரை கூட்டிப்போனார் நண்பர்.. அங்கு போனதும்தான் ஆம்வே எனத்தெரிந்தது, சரி வந்திட்டோம் அடக்கிக்கொண்டு இருந்துவிட்டு ஓடிப்போயிடலாம் எனக் காத்திருந்தபோது.. பேசிய கனவான் ( நிறைய செக்குகள் மாற்றாமலே வைத்திருந்தவர்) என்னை பேச அழைத்தார்.

அப்புறமென்ன ஏன் புண்ணாக்கு கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல யாராலும் முடியாமல். இவன் வேண்டுமென்றே நம்மை வெறுப்பேத்துறான் என அறிந்து கொண்டு எதிர்கால கனவான் ( என் நண்பன்தான்) தனியாக கூட்டிப்போய் இந்த புண்ணாக்கை ( அது அவர்கள் வைத்த பெயர்தான்) ஏன் கூட்டி வந்தே என சண்டை போட்டிருக்கிறார்கள்..

பிரியமுடன் பிரபு சொன்னது…

ஊருக்கு போனால் அவனுங்க தொல்லை தாங்க முடியாது , இப்ப இங்கேயும் வந்துடனுகளா?

ஜோதிஜி சொன்னது…

கள்ள மௌனம்

ரசித்த வார்த்தை.

துளசி கோபால் சொன்னது…

ஜோதிஜி,

கள்ள மௌனத்தை ரசிச்சதுபோல் கள்ளத்தமிழரையும் ரசிப்பீங்களா?

என்னைத்தான் அப்படிச் சொன்னாங்க,
இலங்கைத்தமிழரான ஒரு தோழி(????)

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஹிஹி :)

interesting!

வால்பையன் சொன்னது…

ஆம்வே மாதிரி “என்வே” ஒரு கான்செப்ட் ஆரம்பிச்சு எங்கிட்ட ஆம்வே பத்தி பேச வர்ற வெட்டி பயலுகளை பேசியே கொல்லனும்ன்னு ரொம்ப நாளா ஆசை, எவனும் சிக்க மாட்டிகிறான்!

வால்பையன் சொன்னது…

[அடுத்த முறை கோமளாசில் இரண்டு வடை வாங்கி குடுப்பீர்கள் என்ற எண்ணத்தில் கூவி இருக்கிறேன். பார்த்து செய்யுங்க :)) ]//


வாங்கி தரவில்லையென்றால், வட போச்சே என்று கூவுவீர்களா!?

அப்பாவி முரு சொன்னது…

ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி 10 மணிக்கு நான்கு நண்பர்கள்(அதுவரைக்கும்) ஆ’ரம்பித்த எம்.எல்.எம் மொக்கையை சளைக்காமல் 2 மணிவரை தாங்கினேன்.
என்னுடைய கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல் நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைக்கச்சொன்னார்கள்.
போயா சொம்பையென ஓடி வந்துவிட்டேன்.

மற்றொருமுறை ஜே.பி போயிருந்த போது, ஒரு தமிழ் கும்பலிடம் மாட்டிக்கொண்டோம். அந்த கும்பலின் தலைவன் பேசுவதை அக்கும்பலிலுள்ள மற்றவர்கள் ”ஆ” வென நம்பிக்கையோடு கேட்ப்பதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

நான் கேட்ட கேள்விகளுக்கு மொக்கையாகவே பதிலளித்து நேரத்தை கடத்தினார்கள். தப்பிப்பதற்காக, அவர் பேசும் போது நாங்கள் மூவரும் மோட்டுவளையை பார்த்தபடியே உட்காரவும் மூன்றே நிமிடத்தில் விட்டுவிட்டனர்.

எப்பிடியெல்லாம் தப்பிக்க வேண்டியிருக்கு....

கோவி.கண்ணன் சொன்னது…

தனித்தனியாக மறுமொழிக்க நேரமில்லை,

பின்னூட்டமளித்த ஆன்றோர் சான்றோர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//விசிட்டிங்க் கார்டெல்லாம் கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளப் பார்த்து....அப்பாடா தப்பித்தோம்..... என்று நினைத்துக் கொண்டே நிம்மதி பெருமூச்சுடன் போனை துண்டித்தேன்.///

சிரித்தேன்...... சொல்வதை ரசித்தேன்.

அக்பர் சொன்னது…

அவருக்கிட்டயிருந்து போன் வரும் போதே மண்டைக்குள்ள மணி அடிச்சது. :)

இது மாதிரி அடிக்கடி எழுதுங்கண்ணே ரொம்ப நல்லாயிருக்கு.

Muthu சொன்னது…

இங்கே அமெரிக்காவில் Quickster என்ற பெயரில் அதே. மூன்று தடவை மாட்டி மரியாதைக்காக முதல் கூட்டம் போய்வந்து பின் மறுத்த அனுபவம் உண்டு.

எனக்கு புரியாத விஷயம் :

இவர்கள் இணையவெளியில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்குகிறார்கள். மேலும் நண்பர்களை சே(கோ)ர்த்துவிட்டு மேலும் தள்ளுபடி பெற்றுக்கொள்கிறார்கள். இதை எப்படி தாங்களும் வணிகம் செய்வதாக சொல்லிக்கொள்கிறார்கள் ?

அன்புடன்
முத்து

அறிவிலி சொன்னது…

அட.. நம்ப மேட்டரு.. எப்படியோ கவனிக்காம உட்டுட்டேன். :-))))

எவ்வளவோ வார்ன் பண்ணியும் சிக்கிக்க இருந்தீங்களே...

//'என் பேரு கிருஷ்ணா' என்றார் (உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது)//

எனக்கு தெரிஞ்சு சிங்கைல உண்மைலியே ஒரு ஆம்வே கிருஷ்ணா இருக்காரு.

//என் வயது.....இப்ப' என்பதாக சொன்னேன்//

ரகசியத்த மெயின்டெயின் பண்றீங்களே.

//'நான் தமிழ் ப்ளாக்ஸெல்லாம் எழுதுவேன்.....உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்....மெயில் போடுங்க' என்று கூறி விடைபெற....//

ரெண்டு பேர் மனசிலயும் "சிக்கிட்டான்யா ஒரு அடிமை" அப்படின்னு ஒரு எண்ணம்.
:-)))))

ராம்ஜி_யாஹூ சொன்னது…

வால் பையன், என்வே மாதிரியே நாங்க ஒரு திட்டம் வச்சு இருக்கோம்,

வீட்ல இருந்தே சி டி ல டைப் பண்ணி கொடுக்ற வேலை, ஒரு சி டி டைப் பண்ணி கொடுத்தா நாலயிரம் ரூபாய்.

ஆனால் சி டி கிடைக்க டெபாசிட் மூவாயிரம் கொடுக்க வேண்டும்

டெபாசிட் கொடுக்க நீங்க ரெடியா, சி டி கொடுக்க நாங்க ரெடி.

அபி அப்பா சொன்னது…

சொ.செ.சூ வுக்கு காப்புரிமை எனப்து வரவனையானுக்கு தான் என்பது முன்பு துளசி டீச்சர் நன்றி போடும் போதே எனக்கு தெரியும். ஆனா நினைத்தாலே இனிக்கும் என இப்ப வந்த ஒரு படம். அதிலே பிருதிவிராஜ் இந்த டயலாக்கை பேசும் போது என்னவோ பிருதிவிராஜே அதை கண்டுபிடித்த மாதிரி அத்தனை ஒரு அப்லாஸ்....நினைத்து கொண்டேன்...இதல்லாம் வரவனைக்கு போய் சேரவேண்டியது என:-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்