பின்பற்றுபவர்கள்

24 நவம்பர், 2008

இலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் !

"நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டு உங்களை தலை கவிழ வைக்கிறேன்" பாருங்க என்றான் பதிவர் மற்றும் அன்பு தம்பி விக்னேஷ்வரன் பிள்ளையாண்டான். 'சரி சரி கேளு நானும் சுறுசுறுப்பாக பதிவு எழுதி நாளாச்சு' என்றேன். வலைப்பதிவு எழுதுவதில் எதும் கண்டிப்புகள் இல்லை என்பதால் நாம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் நட்டமில்லை. வார இதழ், மாத இதழ்களில் எழுதுவோருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் எழுத வேண்டிய கண்டிப்புகள் (Conditions) இருக்கும். தம்பி அப்படி என்ன கேட்டுவிட்டான் ? ஒரு தொடர்பதிவில் இணைத்து வைத்திருக்கிறான். அவன் இன்னும் அந்த தொடர் பதிவைப் வெளியிடவில்லை :). 'பத்திரிக்கை வாசிப்பில் சுவாரிசியம்' என்கிற தலைப்பில் தொடர் பதிவு ஓடுகிறது. பத்திரிக்கை என்பதும், சுவாரிசியம் என்பது தமிழ் சொல் அல்ல என்பதால் நான், 'இலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம்' என்று தலைப்பை மாற்றி வைத்திருக்கிறேன்.

எளிதில் புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கூட கவனமின்மையால் மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறோம், உபயோகம் என்பதற்கு பதிலாக எளிதாக பயன் என்று எழுதலாம் செய்கிறோமா ? இன்னும் எளிமையான தமிழ் சொற்களெல்லாம் எளிமையாகவே விடுபட்டுப் போகிறது, வருடாவருடம் என்று வருடத்துக்கு வருடுவதைவிட ஆண்டாண்டு அல்லது ஒவ்வொரு ஆண்டும் என்று எழுதலாம், தினம் தினம் என்பதை நாள்தோறும் என்றும் எழுதலாம், செய்தி இதழ் என்ற சொல்லுக்கு சஞ்சிகை என்ற சொல்லே மணிபிரளவ சொல்லாக எழுதப்பட்டு அதன் படியே விவாஹ சுபமூகூர்த்தப் பத்திரிக்கை என்று எழுதி அதனை பரவலான புழக்கத்தில் விட்டு வைத்திருந்தார்கள், காரணம் செய்தி ஊடகங்கள் கையில் இருந்தவர்களுக்கு தமிழின் மீது இருந்த பற்றுதலே(?). தற்போழுது திருமண அழைப்பிதழ் என்ற இருசொல்லில் 'திருமணம்' என்கிற செய்தியை 'அழைப்புடன்' சொல்வது சிறப்பாக இருக்கிறது. சுபமூகூர்த்தம் என்பதற்கு தமிழ் சொல் நல்வேளை, மங்கள வேளை, நற்பொழுது என்று சிறப்பாக தமிழில் எழுத முடியும்

கேள்விகளுக்குச் செல்கிறேன்.

1)முதன் முதலில் எப்போது (இலக்கிய) இதழ்களை படிக்க தொடங்கினீர்கள்?

நான் சிறுவனாக இருந்த பொழுது அக்கம் பக்கத்து பெண்கள் இராணி முத்து என்ற திங்கள் இதழை ( மாதாந்திரி) வாங்கி சுழற்சி முறையில் படிப்பார்கள். எனக்கு ஒன்பது அகவை இருக்கும், தமிழ் நன்றாக வாசிக்க தொடங்கிய அகவை. முதன் முதலில் இராணி முத்துவில் வந்த கவியரசர் கண்ணதாசனின் 'அப்பா தேவை' என்ற நாவலைத்தான் படித்தேன். கதையின் கருவும் முடிவும் நன்றாக நினைவிருக்கிறது. விதவைத் தாய் தன் மகனின் 'அப்பா' குறித்த ஏக்கத்துக்காக தான் விதவை என்று தெரிந்தே விரும்பிய ஒருவருடன் வாழ்கையை தொடர்வது தான் கதை. கதையின் கடைசி வரியாக, இரு தண்டவாளங்களாக இருவரும் கணவன் மனைவியாக நடக்க இடையில் அவளது மகன் இருவரது கைகளைப் பற்றிய மூவரும் நடந்து கொண்டு இருந்தனர். என்பதாக முடியும். அந்த காலத்துச் சிந்தனையில் எழுதப்பட்டது, கணவனை இழந்த பெண் வாழ்க்கைத் துணைக்காக ஆடவன் ஒருவனை ஏற்றுக் கொண்டாலும் உடலால் இருவரும் இணைவதற்கு இசைவதில்லை என்பதாகத் தான் இப்போது அதன் பொருள் புரிகிறது. 'இந்த கதையை முழுவதும் படித்துவிட்டேன்' என்று சொன்னதற்கு, 'இந்த வயசில் இப்படி பட்ட கதையெல்லாம் படிக்கிறாயா ?' என்று முதுகில் பலமாக வாங்கியதை மறக்க முடியாது.

2) அறிமுகமான முதல் புத்தகம்?

10 ஆம் வகுப்பு படிக்கின்ற காலகட்டத்தில் சாண்டில்யணின் வரலாற்று புனைவு கதைகளை படித்து இருக்கிறேன். முதன் முதலில் வாசித்த சிறப்பான கதைகள் என்றால் மேற்சொன்னதைவிட சாண்டில்யன் கதைகளைத் தான் சொல்ல முடியும், வருணனை, திருப்பங்கள், சுவையார்வம் குன்றாமல் கடைசிவரையில் எழுதப்பட்ட சாண்டில்யன் கதைகள் என்றுமே என் நினைவில் நிற்பவை, கடல்புறா, யவன ராணி, கன்னி மாடம் ஆகிய கதைகள் வாசிக்கும் போது அதிலேயே மூழ்கி இருந்தது மறக்க முடியாத வாசிப்பு துய்பு என்று சொல்லலாம். அதன் பிறகு லஷ்மி எழுதிய பல நாவல்களைப் படித்து இருக்கிறேன். லஷ்மி நாவல்கள் அனைத்திலுமே ஒரு ஆரம்பம் அதன் பிறகு பின்னோக்கிய நினைவுகளால் ( ப்ளாஷ் பேக்) கதை நகரும்.

3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?

பள்ளியில் கதை படிக்கும் அளவுக்கெல்லாம் துணிவு இருந்ததில்லை, பத்தாம் வகுப்பு படிக்கும் போது இராம கிருஷ்ணன் என்கிற மாணவன் காதல் கவிதை எழுதிவிட்டு அறிவியல் ஆசிரியரால் செ(ம்)மையாக கவனிக்கப்பட்டான், 'இந்த வயசில உனக்கு காதல் கவிதை கேட்குதா ?' என்று பின்னி எடுத்துவிட்டார். அந்த அகவையில் பலருக்கும் ஏற்படும் உணர்வு தான் அது என்று அறிவியல் ஆசிரியர் அறியாது இருந்திருக்கிறார் என்று தற்பொழுது நினைக்கையில் அந்த அறிவியல் ஆசியரியரின் 'அறிவியலை' நினைத்துப் பார்க்கிறேன். அப்போதைய காலகட்டங்களில் படக்கதைகள், சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரைக் நாவல்கள் நிறைய படித்து இருக்கிறேன்.

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?

நாவல் படிக்கும் பழக்கமெல்லாம் 19 ஆம் அகவைக்குள் முடிந்துவிட்டது, அதன் பிறகு 200 பக்கம் உள்ள நாவல்கள் கூட படிப்பதற்கு அலுப்பாகிவிட்டது, அதன் பிறகு சிறுகதைகள் விரும்பி படித்து இருக்கிறேன். வாடமல்லி மற்றும் சில தொடர்கதைகளைப் படித்து இருக்கிறேன். நல்ல நாவல்கள் என்று யாரும் சொன்னால் அதை படிபதுடன் சரி. வலைப்பதிவில் வாசிப்பின் நாட்டம் மிகுதியாக இருப்பதால், புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கு பொழுது போக்காக இல்லை.

நிறைய வாசித்து இருக்கிறேன். அவ்வளவையும் இங்கே ஒரு பதிவில் அடக்க முடியாது, சரளமாக எழுத முடிவதெல்லாம் நினைவில் இருப்பவை என்பதால் மேற்கண்ட தகவல்கள் என்றுமே நினைவில் இருக்கும் அளவுக்கு பதிந்தவை என்று பொருள் கொள்ளலாம்.

*****

தொடர் தொடர நாலு பேரைக் கூப்பிடனுமாம்,

1. நசரேயன்
2. கே.ஆர்.எஸ்
3. வடுவூர் குமார்
4. வெயிலான் ரமேஷ்

பதிவர் நண்பர்களே உங்கள் மீது உள்ள பேரன்பால் உங்களைக் கேட்காமலேயே உங்கள் பெயரை பரிந்துரைத்துவிட்டேன். மேற்கண்ட நண்பர்களை யாரும் வேறு எவரும் அழைக்கவில்லை என்றால், எழுதும் உந்துதல் இருந்து எழுதினால் மிக்க மகிழ்ச்சிதான்.

1 கருத்து:

நசரேயன் சொன்னது…

பெரிய இடத்து அழைப்பு மறுப்பு சொல்லமுடியுமா?
நானும் ஆட்டத்துல கலந்துகிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்