
*******
எரிமலையைப் பார்த்துவிட்டு கிளம்பினோம், அதே மலைப்பகுதிப் பாதையில் ஒரு அரைமணி நேரப் பயணம் பிறகு உபுட் (UBUD) கிராமம் நோக்கிய சாலையில் பேருந்து சென்றது. மலைப்பாங்கு மற்றும் பள்ளத்தாக்கான பசுமையான பகுதிகளில் பயணம் இருந்தது, பாலித் தீவு பார்க்க கோழியும் முட்டையும் சேர்ந்த வடிவமாக இருக்கும், அதைக் குறிப்பிட்டுச் சொல்லிய வழிகாட்டி, எங்கள் நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு கண்டிப்பாக லாபம் உண்டு என்பதைத் தான் எங்களது நாட்டின் வரைபடம் சொல்லுகிறது என்றார். பெரும்பாலும் வெளிநாட்டினர் முதலீடு என்பது பாலியில் சுற்றுலா சார்ந்தது தான், விடுதிகள் கட்டுவதில் வெளிநாட்டினர் மிகுதியாக முதலீடு செய்கின்றனர், அதனால் சுற்றுலாத் துறை வளர்ச்சி பாலியில் கனிசமாக உயர்ந்துள்ளது, 2002 அக்டோபர் பாலி குண்டுவெடிப்பின் பிறகு மூன்று மாதம் சுற்றுலாவாசிகள் இன்றி தீவு வெறிச்சோடிக் கிடந்ததாம் அரசு முயற்சி எடுத்து விடுதியில் தங்கும் செலவில் பல சலுகைகள் கொடுக்க முன்வந்த பிறகு நிலைமை வெறும் மூன்று மாதத்திற்குள் சரி ஆனதாம். தொடர்ந்து சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒருமுறை விமானங்கள் தரையிரங்கும் சுறுசுறுப்பான தீவில் விமானப் போக்குவரத்து நின்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் ?
உலகெங்கிலும் இல்லாத நடைமுறை ஒன்றை வழிகாட்டி குறிப்பிட மிகவும் வியப்பாக இருந்தது, அதாவது பாலித் தீவினர் 'அமைதி நாள்' என்று மார்ச் மாதம் ஒரு விடுமுறை நாள் வழக்கில் வைத்திருக்கிறார்கள், அன்று மின்சார விளக்குகள் மற்றும் மின்சாரம் தொடர்பாக எதையும் இயக்கமாட்டார்களாம், குறிப்பாக பாலி இந்துக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்களாம், சாலையில் போக்குவரத்து என்பதே இருக்காதாம், ஆனால் அவசரத் தேவை என்பதற்காக காவல் துறை, மருத்துவமனை மற்றும் தீயணைப்புத் துறை மட்டுமே இயங்குமாம். அன்று 24 மணி நேரத்திற்கு பாலி டென்பசார் விமான நிலையத்தில் இருந்து எந்த ஒரு விமானமும் கிளம்பாது, எந்த ஒரு விமானமும் தரையிறங்காது என்றார். இது மிகவும் வியப்பானது. உலகில் எந்த ஒரு விமான நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்று போக இயற்கைப் பேரிடர், பனிமூட்டம், பனிப்பொழிவு அல்லது தீ ஆகிய காரணங்கள் மட்டுமாகத்தான் இருக்கும், ஆனால் பாலித் தீவில் கடைபிடிக்கும் அமைதி நாளுக்காக விமான நிலையமே மூடி இருப்பது பாலித் தீவின் வியப்புகளுள் ஒன்று.
ஏற்கனவே முந்தைய நாள் வந்துள்ள சுற்றுலா பயணிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடும் செய்யும் நிறுவனமும், விருந்தினர் விடுதிகளும் முன்கூட்டியே குறிப்பிட்ட நாளில் பாலியில் எங்கும் வெளியே செல்ல முடியாது, விடுதிக்குள் மட்டும் தான் இருக்க முடியும், விரும்பினால் தியானம் யோகம் இவை பயிற்றுவிக்கப்படுவதில் அன்று இணைந்து கொள்ளலாம் என்று கூறுவார்களாம், அதற்கு ஒப்புக் கொண்டு விருப்பமுள்ள சுற்றுலாவாசிகளே அன்று அங்கு இருப்பார்களாம். 90 விழுக்காட்டு மக்கள் அமைதி நாளை கடைபிடிக்கும் போது அதற்கு ஒத்துழைப்பாக 10 விழுக்காட்டு மக்களும் பிற வெளி நடவடிக்கை எதிலும் ஈடுபடமாட்டார்களாம். அமைதி நாள் அன்று வானம் மிகத் தெளிவாகத் தெரியும், நட்சத்திரங்கள் நிறைந்து காணப்படும் ஏனெனில் இரவில் மின் விளக்குகளே இல்லாததால் பாலித்தீவில் இருந்து பார்க்கப்படும் வானத்தின் கருமை நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் என்றார்.
பாலித் தீவின் அமைதி நாள் பற்றி மேலும் தகவல்களை விக்கிப்பீடிய பகிர்ந்து கொள்கிறது: சுட்டி
உபுட் செல்லும் வழியில் மலைப் பாதை ஒன்றின் இடது பக்கம் சந்தைகள் நடந்தது, அந்த சந்தை பக்கத்து பெரிய தீவான ஜாவில் இருந்ந்து பொருள்கள் கொண்டு வந்து விற்கப்படுமாம், அவை ஜாவாத்தீவினரால் நடத்தப்படுகிறதாம், பாலித் தீவை ஒட்டி இருக்கும் ஜாவா தீவின் பகுதியில் உள்ளவர்கள் பாலியை நம்பித்தான் பிழைக்கிறார்கள்,
பேருந்து உபுட் கிராமத்திற்குள் நுழைந்தது, பெயர் தான் கிராமம் ஆனால் நன்கு வளர்ச்சி பெற்ற சிறுநகர் போன்று தான் இருந்தது, அந்த உபுட் கிராமத்தின் சிறப்பு அது பாலித்தீவினரின் பாரம்பரியத்தின் துவக்கப் புள்ளியாக இருந்ததாம், இன்றும் பாலித் தீவினருக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக உபுட் கிராமம் உள்ளது, அந்த கிராமத்தை உருவாக்கியவர் என்ற அளவில் ஒரு அரசரின் நினைவாக அவரது அரண்மனையும் அங்குள்ளது. அரண்மனைக்கு எதிரே உள்ள இடத்தில் மொத்த விற்பனை கடைகளை கட்டிக் கொடுத்து தன்னுடைய பார்வையில் அவற்றை மேம்படுத்தினாராம் அந்த அரசர். முன்பு பாலித்தீவில் விளையும் அரிசி உள்ளிட்ட அனைத்து வி ளைபொருள்களும் அந்த இடத்தில் தான் விற்க்கப்படுமாம், மருந்துப் பொருள்களும் மூலிகைகளும் அங்கு முக்கிய விற்பனை மையமாகச் செயல்பட்டதால் மூலிகை அல்லது மருந்தைக் குறிக்கும் பாலி மொழியில் அந்த இடத்தின் பெயர் 'உபுட்' என்று வழங்கப்படுகிறது.
உபுட் அரண்மனை அருகே பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி பார்வையிடச் சென்றோம், நிறைய சுற்றுலாவாசிகள் அலைந்து கொண்டு இருந்தனர், அரண்மனையின் முகப்பில் பாலி சாயல் கோபுரவாயில்கள் இருபக்க சுற்றுச் சுவரின் மையப்பகுதியில் அமைந்திருந்தது, நுழைவாயிலின் இடது பக்கம் அமைந்துள்ள சற்று உயரமான மண்டபம் அரண்மனை பாதுகாவலர்கள் நிற்பதற்காக அமைக்கப்பட்டு இருந்தது, நுழைவாயில் வழியாகச் செல்ல உள்ளே திறந்தவெளி மேடைப் பகுதியில் மற்றொரு நுழைவாயிலும் வலது பக்கம் அமைச்சரவைக் கூடம் ஒன்றும் அதன் வலப்பக்கம் 'அரண்மனை மணி' ஒன்றும் இருந்தது, அந்த அரண்மனை ஒரு ஏக்கர் சதுர அளவில் அமைந்திருந்தது, உள்ளே செல்ல சரஸ்வதி உருவம் ஒன்று பொறிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.
அரண்மனை மட்டுமின்றி பாலித் தீவின் கோவில்களின் கதவுகள் ஒரு ஆள் நுழைவதற்கு ஏற்ற அளவில் குறுகியதாகவே உள்ளது, எதிரிகள் கூட்டமாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை, கதவுகளில் தங்க முலாமோ தங்க வண்ணக் கலவையோ பூசப்பட்டு இருந்தது, அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் வேலைப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது, நான் உள்ளே சென்ற போது யாருமே அங்கு இல்லை, உள்ளே ஒரே ஒரு மண்டபப்பகுதியில் சில பெண்கள் சமையலுக்கு தேவையானததிச் செய்து கொண்டு இருந்தனர்,
அரண்மனை முகப்புக்கு எதிரே சாலையின் அடுத்தப்பக்கம் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் 100க் கணக்கில் இருந்தன. மரச்சிற்பங்கள், பீங்கான் பொருள்கள், பித்தளைச் சிற்பங்கள், வாசனை திரவியங்கள், வேலைப்பாடுகள் நிறைந்த துணிகள் என்று சுற்றுலாவாசிகள் நினைவு பொருளாக வாங்கிச் செல்ல பொருள்கள் ஏராளமானவைகள் இருந்தன, விலை(?) நாலுமடங்கு சொல்லுவார்கள் நாம் குறைத்துக் கேட்டு வாங்க வேண்டும்,

உபுட் கிராமத்தில் ஒரு மணி நேரம் இருந்தோம். பிறகு மேற்கு கடற்கரை நோக்கிய பயணம் பொன் மாலையும், சூரியன் மறைவையும் அங்கு தனிச் சிறப்பு வாய்ந்த கடற்கோவிலையும் பார்வையிடுவது தான் அன்றைய முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இருந்தது, அது குறித்த அழகான படங்களுடன் அடுத்தப் பதிவு வரும்.
7 கருத்துகள்:
நல்ல பதிவு. ரசித்தேன்.
//பழனி.கந்தசாமி said...
நல்ல பதிவு. ரசித்தேன்.//
மிக்க நன்றி ஐயா, வெளி இட்டு இன்னும் 5 நிமிடம் கூட ஆகவில்லை.
:)
படங்கள் நல்லா இருக்கு. யானைகள் ஏராளம்!!!!! கட்டாயம் போகத்தான் வேணும்போல:-)))))
தமிழ்நாட்டுலே கலாச்சாரம் பண்பாடுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பழங்கால அரண்மனைகளைக்கூட வாழவிடலை:(
//படங்கள் நல்லா இருக்கு. யானைகள் ஏராளம்!!!!! கட்டாயம் போகத்தான் வேணும்போல:-)))))
தமிழ்நாட்டுலே கலாச்சாரம் பண்பாடுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பழங்கால அரண்மனைகளைக்கூட வாழவிடலை:(//
யானை பூனை ஏராளமாக இருக்கு, உங்க ஊரில் இருந்து 4 மணி நேர பயணத்தில் அடைந்துவிடலாம், போகும் போது சொல்லுங்க எங்க பரிவாரங்களையும் கூட்டி வருகிறேன்.
தமிழ்நாட்டுல அரண்மனைகளெல்லாம் சூட்டிங்க் ஸ்பாட்டாக மாறிவிட்டது :)
முழுவதும் படித்து முடித்தேன் முதல் தரமான பயண கட்டுரை.
7ம் பதிவில் உங்க உங்க சுற்றுலா குழுவின் படம்பார்த்தேன். ஒரு மலாய் இஸ்லாமிய பெண்ணும் உங்களுடன் வந்தவர் தானே பர்தாவுடன் ஒருவரையும் காணலே ஸோ வெளிநாடுகளுக்குவாற இஸ்லாமிய அரபிய பெண்கள் பலரும் பர்தா அணிவதில்ல அதுமாதிரி தான் இதுவும்.நல்ல முன்னேற்றத்தின் ஆரம்பம்
//ம் பதிவில் உங்க உங்க சுற்றுலா குழுவின் படம்பார்த்தேன். ஒரு மலாய் இஸ்லாமிய பெண்ணும் உங்களுடன் வந்தவர் தானே பர்தாவுடன் ஒருவரையும் காணலே ஸோ வெளிநாடுகளுக்குவாற இஸ்லாமிய அரபிய பெண்கள் பலரும் பர்தா அணிவதில்ல அதுமாதிரி தான் இதுவும்.நல்ல முன்னேற்றத்தின் ஆரம்பம்//
உங்கள் ஊகம் தவறு அந்த மலாய் பெண் புகைப்படம் எடுக்கும் போது அங்கு இல்லை, கணவருடன் கொஞ்சம் தொலைவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார், பயணம் முழுக்க இஸ்லாமிய ஆடை தான் அணிந்திருந்தார். வெளிநாட்டில் அவர்களால் இஸ்லாமிய ஆடை இல்லாமல் இருக்க முடியும், இந்தப் பெண் அவ்வாறு இருக்கவில்லை. என்னுடன் பணி புரியும் ஒரு சில மாலாய் பெண்கள் எப்போதுமே இஸ்லாமிய பாணி ஆடை அணிவதில்லை, ஒரு சிலர் இஸ்லாமிய ஆடை அணிபவர்கள் அவர்கள் மாற்றிக் கொள்வதுமில்லை.
புகைப்படத் தொகுப்பு அருமை
கருத்துரையிடுக