பின்பற்றுபவர்கள்

14 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 1

தெற்காசிய சுற்றுலா பயணிகள் ஈர்ப்பில் முன்னனியில் இருக்கும் நகரங்களில் பேங்காக் மற்றும் பாலித் தீவு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பேங்காக் தாய்லாந்தின் தலைநகர், பாலி -33 வது மாநிலமாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசிய தீவு. நான் இந்த இரு நகரங்களுக்கும் சென்று இருக்கிறேன், பாலி அண்மையில் (சென்ற வார இறுதியில்) சென்ற நகரம். ஒப்பிடத் தக்க அளவில் கிட்டதட்ட இரண்டுமே பயணிகளின் மனநிறைவின் பாராட்டைப் பெருகின்றன என்றாலும் பாலித் தீவினர் சுற்றுலாவாசிகளின் பாராட்டுதலைப் பெருவதில் முன்னிலையில் இருக்கின்றனர், காரணம் சுற்றுலா பயணிகளிடம் பணிவும் அன்பும் காட்டுவதில் பாலித் தீவினரே சிறந்தவர்கள்.

*****

சுற்றுலா செல்வதை விரும்பாதவர்கள் எவருமே கிடையாது, வாய்ப்புகள் வாய்க்கும் போது எல்லோருமே சென்றுவருகிறோம், என்னதான் நம்வீடே சுவர்கம் என்று கூறிக் கொண்டாலும் அதையும் தாண்டி பறந்த விரிந்த வெளியுலகம் அதன் வனப்புகளை கண்டுகளிப்பது அதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பயணம் இவற்றை மனம் விரும்பத்தான் செய்கிறது. குறிப்பாக உண்ணுவது உறங்குவது உள்ளிட்ட த்னிமனித தேவை தவிர்த்த அன்றாடக் கடமைகளில் இருந்து ஓய்வு, சூழல்களில் இருந்து தற்காலிக விடுப்பு என்பவை சுற்றுலாக்களினால் ஏற்படும் நன்மை மற்றும் பொழுது மகிழ்தல். ஆனால் சுற்றுலா செல்வதை பொழுது போக்கு வகை என்றே சொல்கிறோம் காரணம் வெட்டிப் பொழுதின் போக்கிடம் என்பதாலோ என்னவோ.

இந்தக் கட்டுரையை பொரும்பாலும் சென்றுவந்த இடங்களின் விவரிப்பு (வர்ணனை) என்ற அளவில் எழுத வேண்டாம் என்றே நினைத்தே எழுதுகிறேன், சுற்றுலாவின் என்னுடைய கவனிப்புகள் பெரும்பாலும் எழுத்து சார்ந்தவையாக இருப்பதால் பொதுப் புத்தியைத் தாண்டித்தான் அவை எனக்குள் பதிய வைக்கப்படுகின்றன. அவற்றை எழுதும் போது சில சுவையாகவும், சில சுனக்கமாகவும் இருக்கும், என்னுடைய கட்டுரைகள் யாவும் முன்னோட்டங்களுடன் துவங்குவதன் மூலம் தொடர்ச்சியான வாசிப்பின் மன நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, அதற்காக மேல் பத்தியை திரும்பவும் படிக்க வேண்டாம், பழைய கட்டுரைகளிலும் கூட அவ்வாறே சில முன்னோட்ட வரிகள் எழுதப்பட்டு இருக்கும் என்பதை ஏற்கனவே வாசித்துவருபவர்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

*****

எனக்கு கிடைத்த பாலித் தீவு சுற்றுலா வாய்ப்பு வேலை செய்யும் நிறுவனத்தால் கிடைத்ததாகும், 2010 ஆம் ஆண்டின் வரவு செலவு போக குறிப்பிட்ட தொகையை பொழுது போக்கு செலவிற்காக எடுத்து வைத்திருந்தனர், இதுவரை சரியான நேரம் வாய்க்காததால் இந்த ஆண்டு உற்பத்தி கொஞ்சம் சுனங்கியதாலும் தற்போது அவற்றை சுற்றுலாவிற்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் கொடுத்து என்னையும் சேர்த்து இருவரிடம் ஏற்பாட்டின் பொறுப்புகளை கொடுத்திருந்தனர். சுற்றுலா தேதி உள்ளிட்டவைகள் நான்கு மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது, அப்போதைக்கு தாய்லாந்த் வெள்ளம் அச்சமூட்டியதால் நாங்கள் தேர்வு செய்த இடங்களின் ஒன்றான பாலியை மற்றவர்களின் ஒப்புதல் கிடைக்க இறுதி செய்தோம். திட்டமிட்டபடி கடந்த் பெப் 11 - 13(2012) வரை மூன்று பகல் இரு இரவுகள் பாலியில் சுற்றுலா மேற்கொள்வதாக் முடிவு செய்திருந்தோம்.

பாலி செல்லும் முன் பாலியைப் பற்றி தெரிந்து கொள்வோம் என்று தகவல்களைத் தேடினேன். என்னை வியப்படைத்த முதல் தகவல் அங்கு வசிப்பவர்களில் 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள், பாலி இந்தோனேசியாவின் பகுதி என்பதாலும் இந்தோனேசியா உலகில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மிகுதியாக வசிக்கும் நாடு என்று அறிந்துள்ளதாலும் இந்தத் தகவல் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. உலகின் இந்து நாடு என்று சொல்லிக் கொள்ளும் நேபாளில் கூட இந்து மக்கள் தொகை 80.6 விழுக்காடு தான். இந்தியாவிற்கு 3000 கிமீ தள்ளி இருக்கும், சுற்றிலும் இஸ்லாமிய பெரும்பான்மை வசிக்கும் நாடுகளைக் கொண்ட இந்தத் தீவில் மட்டும் எப்படி ? வியப்பானது தானே! அதற்கான காரணம் பின்னர் அங்கு செல்லும் போது தான் தெரிய வந்தது.

சுற்றுலா முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்திருந்தாலும், ஏற்பாட்டாளர் என்ற முறையில் என்னிடம் உடன் பணி புரியும் அண்மையில் திருமணமான பெண் தனது கணவருடன் தேன்நிலவாக கொண்டாட நினைத்து சேர்ந்து கொண்டவர் ஒருவர், அவர் நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணிபுரியும் மலாய் இஸ்லாமியர்களில் ஒருவர், உணவு குறித்த தனது எதிர்ப்(பார்)பை வெளிப்படுத்தினார்.'அங்கு ஹலால் உணவு கிடைக்குமா ?' என்று கேட்டார் பாலி இந்தோனேசியாவின் பகுதிதானே ? ஏன் கிடைக்காது ? என்ற என் கேள்விக்கு பாலி இஸ்லாமியர் வாழும் பகுதி இல்லையே ? என்றார் 'எனக்கு தெரியாத தகவல் என்ற அடிப்படையில் பார்க்கும் போது இங்கு பிறந்து வளர்ந்தவர்கள், தெற்காசிய பண்பாடு மற்றும் வரலாறுகள் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் பாலியைப் பற்றி நல்லாத் தெளிவாகத்தான் இருக்காங்க' என்று நினைத்தவாறு, சுற்றுலா நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள, சுற்றுலாவின் போது வழங்கப்படும் அனைத்து உணவுகளும், குறிப்பாக தெற்காசிய சுற்றுலா பயணிகளில் இஸ்லாமியர் உண்டு என்பதால் ஹலால் உணவு தான் ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்னார்கள். அந்தத் தகவலை அவரிடம் தெரிவித்தேன். எனக்கு என் கவலை சைவ உணவு கிடைக்குமா ? என்பது தான். இணையத்தைத் தேட வட இந்திய உணவகங்கள் சிலவற்றின் பெயர்கள் முகவரிகள் தென்பட்டன, அவற்றின் விலைகளும் அமெரிக்க வெள்ளி மதிப்பில் ஒரு பொழுதிற்கு 15 டாலர் என்ற அடிப்படையில் இருந்தது, (ஒண்ணும்) 'இல்லாத வாயிக்கு இலுப்பைப் பூ சர்கரை' - சைவ உணவு கிடைக்கவில்லை என்றால் போக்கிடம் உண்டு என்று தெரிந்து கொண்டேன்.

அன்றைய ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 7000 இந்தோனேசியா ருபியா என்ற அடிப்படையில் தேவையான பணமாற்றங்களை செய்து கொண்டு, ஏற்பாட்டின் படி சென்ற சனிக்கிழமை சிங்கப்பூரில் இருந்து ஏர் ஏசியா வானூர்தி வழியாக நான் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமைகள் இருவருடன், உடன் பணிபுரியும் சிலரின் உறவினர், நண்பர்கள் மொத்தம் 35 பேர் புறப்பட்டோம், ஏர் ஏசியா மலேசியா நாட்டிற்கு சொந்தமானவை, தெற்காசியாவினுற்குள் குறைந்த கட்டண வானூர்தியாக செயல்படுகிறது, பயணம் காலை 7:30 மணிக்கு புறப்பட்டது, ஓடுதளத்தில் ஊர்ந்து சென்றது, ஓடுதளத்திலும் போக்குவரத்து நெரிசல், வானூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக சைகளுக்கான காத்திருப்பில் வரிசை கட்டி நின்றன, ஒவ்வொரு வானூர்தியும் இரண்டு நிமிட இடைவெளியில் ஓட்டம் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஓட்டம் எடுக்கும் தளத்திற்கு நாங்கள் பயணம் செய்யும் வானூர்தி திரும்பும் போது சன்னல் வழியாகப் பார்க்க கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வானுர்திகள் குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன, இப்படியான காட்சி முதன் முறையாக என்பதால் க்ளிக்கினேன்.

பறக்கத் துவங்கிய 10 ஆம் நிமிடம் வழக்கமாக எதுவுமே கொடுக்காத குறைந்த கட்டண சேவையில் ஊதிய ரொட்டி (Bun) பச்சைத் தண்ணீரும் கொடுத்தார்கள் என்பது ஆறுதல். இரண்டு மணி நேரப் பயணம் இடையே குட்டித் தூக்கம், வானூர்த்தி ஜாவா (இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா அமைந்துள்ள பெரிய தீவு) வைக் கடந்து மிகவும் தாழப் பறந்தது.


கிட்டதட்ட கடல் மேல் மிதந்து செல்வது போன்று இருந்தது, அப்படியே தரையிறங்க இந்திய பெருங்க கடலில், பாலி ஸ்டெரெய்ட் பகுதியில் இரு பெரும் நிலப்பரப்புகளை இணைக்கும் குறுகிய இடத்தில் அமைந்துள்ள டென்பசார் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியது. இறங்கி நிறுத்தும் இடத்திற்கு திரும்பும் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிமிட இடைவெளியில் வரிசையாக வானூர்திகள் இறங்கி இந்தத் தீவு சுற்றுலா வாசிகளின் மொய்கும் தீவு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தன.
வானூர்தி கதவுகள் திறக்கப்படும் முன் சன்னல் வழியாகப் பார்க்க பாலித் தீவின் முகப்பாக கோபுர வாயில்கள் தென்பட்டன, கதவுகள் திறந்து வெளியே செல்ல பாலி நடன மங்கையின் அழகான ஓவியம், அதைத் தாண்டி செல்ல முன்பு பார்த்த கோபுர வாயின் பின்பகுதி, அதைக் கடந்து 'வருகையின் போதான குடிநுழைவு' (visa on arrival) சோதனைகளை முடித்துக் கொண்டோம், இந்தோனிசாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல முன்கூட்டிய குடிநுழைவு அனுமதிகள் வாங்கத் தேவை இல்லை, வருகையின் போதே கடவுச் சீட்டு 6 மாதங்கள் செல்லுபடியாகத் தக்கது என்றால் வழங்குகிறார்கள். அதை மட்டும் பயணிகள் சரி பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.
பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம். சுற்றுலா நிறுவனத்தின் முகவர் ஒருவரும் எங்களுடன் பயணித்தார். மற்ற ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வது அவர் பொறுப்பாக சுற்றுலா நிறுவனமே அவரையும் அனுப்பி இருந்தது. வானூர்தி நிலையத்தில் இருந்து தங்கும் நான்கு நட்சத்திர விடுதிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, அங்கு பாலியில் வரவேற்பதற்கு மற்றும் ஒரு சுற்றுலா பாலித் தீவு முகவர் எங்களை எதிர்கொண்டு பயணப் பெட்டிகளை சேகரித்து மற்றொரு வாகனத்தில் ஏற்றி விடுதிக்கு அனுப்பினார், சுற்றுலாவிற்கு செல்லும் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மாலைகள் அணிவித்தனர். அவ்வாறு மாலை அணிவிப்பது எங்கள் நாட்டிற்கு வருகை தரும் நீங்கள் எங்களது விருந்தினர் மற்றும் மரியாதைக்குரியவர் என்பதனை வெளிப்படுத்தும் நிகழ்வாம். இளம் வயது பெண் தான் ஆண் பெண் அனைவருக்கும் மாலை அணிவித்தார்.

இந்தியாவில் ஒரு பெண் கணவன் தவிர்த்த பிற ஆண்களுக்கு மாலையிடுவது மரபு இல்லை, இங்கு பாலியில் இருக்கும் இந்து மதம், இந்திய மரபுகளில் மாறுபடும் முதல் காட்சியாக அதனை பதிவு செய்து கொண்டேன், எங்களை ஏற்றிக் கொண்ட குளிர் பேருந்து வானூர்தி நிலையத்தை விட்டுப் புறப்பட்டது, பாலி சுற்றுலா முகவர் தன்னை 'நியோமான்' அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களின் பயணத்திட்டத்தின் தொடர்பில் தனது ஏற்பாடுகள் எவை எவை என்று கரடு முரடான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.தொடரும்...

11 கருத்துகள்:

renga சொன்னது…

//ஏர் ஏசியா ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமானவை//

ஏர் ஏசியா மலேசியாவை சேர்ந்த டோனி ஃபெர்டனஸ் என்ற இந்தியர்ற்கு சொந்தமானது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏர் ஏசியா மலேசியாவை சேர்ந்த டோனி ஃபெர்டனஸ் என்ற இந்தியர்ற்கு சொந்தமானது.//

விமானத்தினுள் ஊறு விளைவிக்கும் பயணிகளுக்கு ஆஸ்திரேலிய சட்டப்படி தண்டனை தருவதாக விமானத்தினுள் அறிவிப்புகள் செய்தனர்

நிகழ்காலத்தில் சிவா சொன்னது…

பாலித்தீவு பயணத்தின் அனுபவங்கள்., அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் :)

துளசி கோபால் சொன்னது…

ஆரம்பமே அருமையாக இருக்கிறது.

ஏர் ஏசியா ஒரு மலேசிய நிறுவனம். மலிவு விலைப் பயணங்களுக்கு உறுதி(யாம்) ஆனால் நியூஸியில் இருந்து போகவேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் காலக்கட்டத்தில் பயணிக்கணும்.

அடுத்த மாதம் கிறிஸ்ட்சர்ச் - கோலாலம்பூர் ரிட்டர்ன் $239தானாம். ஹூம்....

கோவி.கண்ணன் சொன்னது…

நீங்கள் இருவரும் சொல்லும் தகவல் சரிதான், போகும் போது ஏர் ஏசியா வரும் போது ஜெட் ஸ்டாரில் வந்தோம், இரண்டுமே பட்ஜெட் விமானம் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

துளசி அம்மா, பாலி சென்றுவாருங்கள், உங்களுக்கு பிடிக்கும். தடுக்கி விழுந்தால் இந்து கோவில்

பிரியமுடன் பிரபு சொன்னது…

10 part varum pola...

2 Peru poi 3 day iruntha enna Selavu akum?

கோவி.கண்ணன் சொன்னது…

A visitor from Hadda, Makkah
viewed "காலம்: இந்துத் தீவு - பகுதி 1" 22 mins ago

*****

நம்ம பதிவுகள் இன்னும் சவுதி அரேபியாவில் தடைசெய்யவில்லை. தமிழ் தெரிந்த அரேபியர்களின் பார்வை இன்னும் படவில்லை

thequickfox சொன்னது…

சுவையயான பயணகட்டுரை. அவுஸ்ரேலியர்களை மிக கவர்ந்த இடம் பாலி என்பதை அறிந்தனான்.
பாலி மக்கள் சுதந்திரமான அதிஷ்டசலிகள்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ
பாலி இந்துக்கள் பற்றிய விவரங்கள் அருமை.அவ்ர்கள் இந்துக்கள் என்று எப்படி அறியப்படுகிறார்கள்?.வழிபாட்டு முறைகள்,வேத நூல்கள்,மொழி,கலாச்சாரம் பற்றி இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நன்றி

குறும்பன் சொன்னது…

//உலகின் இந்து நாடு என்று சொல்லிக் கொள்ளும் நேபாளில் கூட//
நேபாளம் அதிக இந்துக்கள் வாழும் நாடு ஆனால் இந்து நாடு அல்ல. கயேந்திரா போனதுக்கு அப்புறம் 2006ல் அது மதசார்பற்ற நாடாக மாறி விட்டது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்