மறு நாள் காலையில் விடுதியின் பாடாவதி உணவில் ரொட்டிகள், காஃபி தவிர்த்து எதையும் சாப்பிட முடியவில்லை, எல்லாவிற்றிலும் அசைவம், நெத்திலி கருவாடு இல்லாமல் மலாய்காரர்கள் எதையும் சமைக்க மாட்டார்கள் போல, விடுதியை அடுத்து அங்கே அருகில் ஒரு சில தமிழர் உணவகங்களும் மலையாளிகளின் உணவகங்களும் இருந்தது. ஏற்கனவே தின்ற ரொட்டி (ப்ரட்) துண்டுகள் போதுமானவையாக இருந்தால் வேறு இடத்தில் எதையும் சாப்பிடாமல் பத்து பகாட் மால் எனப்படும் மிகப் பெரிய கடை பெருவளாகத்திற்கு செல்ல முனைந்தோம், பேருந்து நிலையம் அருகே ஆறு ஒன்று ஓடுவதாக விடுதியாளர்கள் சொன்னார்கள், அதையும் பார்த்துவிட்டு பிறகு பெருவளாகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்து ஆற்றுப் பகுதிக்குச் சென்றோம், கரை புறண்ட வெள்ள மாக பெரிய ஆறு ஓடிக் கொண்டு இருந்தது.
ஆற்றின் கரைகளில் நிறைய உணவகங்கள் இருந்தன ஆனால் அவை மாலை வேளைகளில் தான் திறக்கப்படுமாம், ஒவ்வொரு உணவகத்திற்கு பின்னும் ஆற்றின் கரைப் பகுதி இருந்தது, இறங்கி கால் நினைக்கும் அளவுக்கு வசதிகள் இல்லை, தடுப்புகள் இருந்ததன, படகு சவாரி செய்யும் இடங்களும் இருந்தன, சுள்ளென்ற வெயில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, பிறகு பேருந்து நிலையம் வந்து கடை பெருவளாகத்திற்கு பேருந்து ஏறினோம். பெருவளாகத்தில் பசிபிக் என்ற பேரங்காடி இயங்கியது அங்கு குழந்தைகளுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு திரும்ப மாலை 3 மணி ஆகியிருந்தது ஏற்கனவே பேருந்தில் மாலை 4 மணிக்கு முன் பதிவு செய்திருந்ததால் விடுதிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பேருந்தில் ஏறி சிங்கப்பூருக்கு திரும்பினோம்.
பத்து பகாட் சிறிய நகரம் தான் சுற்றுலா நகரம் இல்லை, சிங்கப்பூரில் இருந்து காலையில் புறப்பட்டால் மாலைக்குள் வந்துவிடலாம், ஒரு நாள் அங்கு தங்குவது குழந்தைகளுக்கும் மாற்றாக இருக்கும் என்றே சென்று தங்கி வந்தோம், கைக் குழந்தையை வைத்துக் கொண்டு நெடும் தொலைவு பயணம் அதுவும் பேருந்தில் சென்றுவருவது எளிதல்ல, இரண்டு மணி நேரம் பேருந்தினுள் இருப்பதற்கே படுத்திவிட்டான்.
******
ஒருவார விடுமுறையில் அலுவலக வழங்கிகளுக்கு (சர்வர்) மற்றும் அந்த அறையில் குளிரூட்டிக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று அனைத்தையும் முறைப்படி நிறுத்திவிட்டு வெள்ளிக்கிழமை துவக்கி விடுவதாகத் திட்டம், சீனப்புத்தாண்டு விடுமுறையின் முந்தைய கடைசி வேலை நாள் முடிவில் திட்டப்படி அனைத்தையும் நிறுத்தினேன், இவ்வாறு செய்வதால் கொஞ்சம் மின்சாரம் சேமிக்க முடியும் மற்றும் வழங்கிகள் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப கருவிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம், தொடர்ச்சியாக ஓடுவதில் இருந்து சற்று அதற்கு சற்று ஓய்வு கிடைக்கும். திட்டமிட்டபடி சென்ற வெள்ளி அலுவலகம் சென்று வழங்கிகளை இயக்கினால் சரியாக வேலை செய்யவில்லை, இணைய இணைப்பு மற்றும் பிற வழங்கிகளையும் வழி நடத்தும் வழங்கி தொங்கி நின்றது. இரண்டு நாள் கழித்து திங்கள் தான் அலுவலக வேலைகள் துவங்குகிறது என்றாலும் முன்கூட்டியே செயல்பாட்டில் வைத்திருந்தால் திங்கள் கிழமை பதட்டம் இல்லை என்பதால் முன்கூட்டியே வெள்ளி அன்றே இயக்கத் துவங்கினேன், அன்றைக்கு எனக்கு நேரம் சரி இல்லை, அன்று முழுவதும் எத்தனையோ முந்தைய நாள் வழங்கி இயக்க சேமிப்புகளை உள் செலுத்தில் இயக்கினாலும் முரண்டு பிடித்தது. சீனர்கள் மிகவும் செண்டிமென்ட் பார்ப்பவர்கள் சீனப் புத்தாண்டு முடிந்து முதல் நாள் இணைய இணைப்பு மற்றும் கணிணிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எரிச்சல் அடைவார்கள், இது நன்கு தெரிந்ததால் எனக்கு மன அழுத்தம் மேலும் மேலும் கூடிக் கொண்டே வந்தது அடுத்து என்ன செய்வது ? இது போன்று மிக தேவையான வேளைகளில் உதவும் தொடர்பிலுள்ள பிற நிறுவனங்களிம் விடுமுறை என்பதால் திங்கள் கிழமையை எப்படி எதிர்கொள்வோம் ? என்ற கேள்வியில் அதற்கு மேல் தெளிந்த சிந்தனைகள் ஏற்படவே இல்லை, வேலை பறிபோகுமா என்பது கூட எனக்கு கவலை இல்லை. திங்கள் கிழமை காலையில் மின் அஞ்சல் பார்க்க முடியாமல் போக, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு பதில் சொல்வது நிறுவன செயல்பாட்டையே கேள்வியாக்கிவிடும் என்ற கவலை ஏற்பட்டது.
இவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கையில் முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த போது அங்கு சேவையாளராக வந்து உதவிய ஒரு சீன நண்பரின் அலைபேசிக்கு குறுந்தகவல் 'அனுப்பிவிட்டு காத்திருந்தேன், இத்தனைக்கும் எனக்கும் அவருக்குமான தொடர்புகள் விட்டுப் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது, இடை இடையே பண்டிகைகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதுடன் சரி. உடனேயே நாளை உதவுகிறேன் என்பதாக பதில் அனுப்பி இருந்தார்

அன்றைய நாள் இரவு 9 மணி வரை வழங்கியை பல முறை முயற்சி செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன், மறு நாள் காலையில் அழைத்துப் பேசினார், மாலை வருவதாகச் சொன்னார், அன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று காத்திருந்தேன் மாலை வரை வரவில்லை, பிறகு இரவு 11 மணிக்குத்தான் என்னால் வரமுடியும் என்றார். அவர் வீடு என் வீட்டில் இருந்து சில கிமி தொலைவில் இருப்பதால் நான் வீட்டுக்கு சென்று, உணவிற்குப் பின் இரவு 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகச் சொன்னேன், சொன்னபடி அங்கு காரில் வந்து என்னை ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார்
நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழங்கியை முற்றிலும் நிறுத்திவிட்டு மற்றொரு வழங்கிக்கு சேவைகள் அனைத்தையும் மாற்றிவிட்டு இயக்க அனைத்தும் இயங்கத் துவங்கியது. இங்கே பிரச்சனை என்னவென்றால் ஒரு மருத்துவர் ரத்த தொடர்புள்ளவர்களின் மீது கத்தியை வைக்க யோசிப்பது போன்றது தான், அவர் செய்த அதே வேலையை என்னால் செய்ய முடியும் இருந்தும் நம் முயற்சி வீணாகுமோ, குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட முடியுமோ என்ற அச்சம். இதே உதவியை வேறு யாரும் என்னிடம் கேட்டிருந்தால் நான் செய்து முடித்திருப்பேன். பாதிப்பு நமக்கு இல்லாத இடத்தில் நம்மால் பொருமையாக சிந்தித்து செயல்பட முடியும், நம் சார்ந்தவற்றில் ஏற்படும் பாதிப்பு அதை சரிசெய்ய நேரும் போது ஏற்படும் பதட்டம் மூளையை சிந்தனை செய்யவே விடாது.
வழங்கி வேலை செய்யமல் போனது, அவற்றை சரி செய்தது இங்கு முக்கிய தகவல் இல்லை, ஆனால் தொடர்ந்து தொடர்பில் இல்லாத ஒருவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நினைப்பு எனக்கு ஏன் ஏற்பட்டது ? அவர் பழகியவிதம் மட்டுமே, எத்தனையோ சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் சொல்லப்படும் ப்ரண்ட்லி முறையில் இணைந்து செயல்படுபவர்கள் குறைவே, நான் உதவி செய்யக் கோரி குறுந்தகவல் அனுப்பிய போது அவர் சீனப் புத்தாண்டு விடுமுறையில் அவரது சொந்த ஊருக்கு மலேசியா சென்று திரும்பிக் கொண்டு இருந்தாரம், அவருக்கு 4 வயதிற்குள் மூன்று குழந்தைகள் வேறு, அன்றைய நாள் சனிக்கிழமை தான் மாலை தான் திரும்பி இருக்கிறார், உடனே வரமுடியாமல் போனது, வேறு யார் என்றாலும் என்னால் முடியாது ரொம்ப அலுப்பு வருந்துகிறேன் என்று மின் அஞ்சல் அனுப்பி இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் ஒப்புதல் பெற்று இரவு 11 மணி ஆனாலும் உதவுகிறேன் என்று உதவிக்கு வந்து அனைத்தையும் சரி செய்த போது எனக்கு கடவுளாகத் தெரிந்தார், ரொம்பவும் நெகிழ்சியாக இருந்தது, என்னையும் அதிகாலை நான்கு மணிக்கு என் வீட்டின் அருகே இறக்கிவிட்டு, அருகே காபி வாங்கிக் கொடுத்துச் சென்றார். எனது அலுவலக்த்தில் என்னுடன் நல்ல நட்புடன் இருக்கும் சீனர்கள் கூட சனி / ஞாயிறு எங்காவது அழைத்தால் வரமாட்டார்கள், சனி / ஞாயிறு குடும்பத்திற்கான நாள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார்கள். அவர் செய்த உதவிக்கான பணத்தை என்னால் பெற்றுத் தரமுடியும் மற்றும் அவருக்கு அந்த வேலைக்கு பணம் கிடைக்கும் என்றாலும் வேறு சிலரிடம் கேட்கப்படும் இதே போன்ற நெருக்கடி வேலை உதவிக்கு முன்கூட்டியே பணம் பற்றி பேசப்படும், விடுமுறை நாள் என்பதால் மிகவும் கூடுதலாகவே கேட்பார்கள், எந்த ஒரு வேண்டுகோளும் வைக்காமல் வந்து உதவி செய்பவர்கள் மிக மிகக் குறைவே.
நாம எப்படிப் பட்டவராக இருந்தாலும் நம்முடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய இக்கட்டான நேரத்தில் யாருடைய முகம் தெரிகிறதோ அவர்கள் தான் நமக்கு முக்கியமானவர்கள். அப்படிப்பட்டவர்கள் நமக்கு கிடைக்கலாம் கிடைக்காமலும் கூடப் போகலாம் ஆனால் அப்படிப் பட்ட முகத்தை நாமும் வைத்திருக்க வேண்டும் என்பது நான் அவரிடம் கற்றுக் கொண்டது. நமக்கான உதவி சரியான வேளையில் கிடைக்க நாமும் கொஞ்சமேனும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்படித் தான் இருக்கிறேன் என்று அவர் வந்து உதவிய போது எனக்கும் கொஞ்சம் என்னைப் பற்றிப் பெருமையாகத் தான் இருந்தது