பின்பற்றுபவர்கள்

16 ஜனவரி, 2012

முற்றுப் புள்ளி !

தொடர்ச்சியாக எழுதுவதனால் பயன் என்று எதுவும் கிடையாது, நம்முடைய நேரத்தை பெரிதும் விழுங்கி இருக்கும் என்கிற கெடுதல் தான் அதில் உண்டு, நிறைய பாலோயர்கள் கிடைக்கலாம், அதனால் பெரிய பலன் ஒன்றும் கிடையாது, ஆனால் பதிவில் தொடர்சியாக எழுதுபவர்கள் நினைக்கப்படுகின்றனர், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம், நம்ம சிபி செந்தில் குமார் ஆயிரம் பதிவுகளை ஒண்ணறை ஆண்டுகளில் இட்டு முடித்து இருக்கிறார், ஆரம்பகாலங்களில் காபி பேஸ்ட் செய்தவர் பின்னர் தாமாகவே எழுதி அந்த எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறார், அதற்கு அவர் இழந்த நேரம் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். எனது பதிவுகள் பெரும்பாலும் நிகழ்வுகளின் விமர்சனம் என்ற வகையில் தான் எழுதப்படுகிறது. நாள் தோறும் சர்சைகள், ஒவ்வாநிகழ்வுகள், அரசியல் நிலைப்பாடுகள் மாற்றம் என்று எதாவது ஒன்று நிகழ்வதால் நாள் தோறும் எழுத விமர்சனம் செய்ய எதேனும் கிடைப்பதால் எழுதுவதன் தொடர்சிக்கு தீணி கிடைத்துக் கொண்டே இருக்கும், நான் எழுதுவதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பதே இல்லை. இருந்தாலும் அவற்றில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் எழுதுவது என்பதன் கட்டுப்பாடுகள் காரணமாக எனது நேரத்தை நான் சரியாகப் பயன்படுத்துவதில் உறுதியாகவே உள்ளேன், இது கடந்த ஆண்டுகளின் என் நேரங்கள் விழுங்கப்பட்டதில் கற்றுக் கொண்ட பாடம், நீங்கள் தொடர்ந்து நாள் தோறும் பதிவிடுபவர், அல்லது அனைத்தையும் வாசிப்பவர் என்றால் அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் இழந்த நேரங்களும், அவற்றினால் நீங்கள் இழந்தவை, செய்ய மறந்தவைப் பற்றி யார் சொல்லாமலும் அறிந்து கொள்வீர்கள்

*******

பாலாறும் தேனாறும் பற்றிய பதிவைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிரிவினைகள், நானே ஓட்டுப் போடாத என் பதிவுக்கு பலரும் வாக்களித்து இருந்தனர், மிக்க நன்றி, அதே சமயத்தில் வாக்குகள் எழுத்தின் தரத்தின் தீர்ப்பு அல்ல என்பதை நான் நன்றாகவே அறிவேன். வாக்குகளையும் வாசகர்களையும் பெற ஆயிரம் வழிகள் உண்டு, பிரபலப் பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அந்த உத்திகளை நன்றாக கையாளுகிறார்கள், அதில் எனக்கு எந்த குடைச்சலும் இல்லை, சும்மா உதாரணத்திற்கு சுட்டினேன்.

மதத்தீவிரவாதம் மிக மோசமானது, உலகில் மதச்சார்பற்ற நாடுகள் அனைத்தும் மதத்தீவிரவாதங்களை கடுமையாகவே எதிர்கின்றன. எனது நிலைப்பாடும் அதுவேதான், கூடவே தமிழ்நாட்டில் பிறந்ததால் சாதி எதிர்ப்பு மனநிலையும் உண்டு, ஒருவர் மதவெறியரா இல்லையா என்பதை அவர் மதம் சார்ந்த சமூகத்தை விமர்சனம் செய்யும் போது எரிச்சல் அடைவதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மனிதர்கள் தான் சார்ந்த கொள்கைகள் பாதிக்கப்படாதவரை சமத்துவமானவர்களாக தெரிகிறார்கள், பிறருக்கு அறிவுரைச் சொல்பவர்களாக தெரிகிறார்கள், எனக்கு வருத்தமெல்லாம் பெருவாரியான நல்லவர்கள் தங்கள் ஏன் நல்லவன் என்பதை நினைப்பது இல்லை, பெரும்பாலும் தத்தமது நல்ல மனம் தன் சாதிமதத்திற்கு ஆதரவாக அடமானம் வைப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. மதத்திற்கான அடிப்படை குணம் அது வழிபாடு அளவில் என்ற அளவில் தான், அடிமனதில் இருக்கும் நம்பிக்கை துன்ப வேளைகளில் ஒருவர் எந்த கடவுளின் பெயரைச் சொல்கிறார் என்பது மட்டுமே, மற்றபடி ஒரு மனிதனை தரம் பிரிப்பதில் மதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

ஒருவர் நல்லவர் என்றால் அவர் தம்மை தாமே உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நற்பண்புகளின் தொகுப்பு தான் அவர், அதற்கும் அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது, ஒருவீட்டில் நால்வரில் ஒருவர் நல்லவர் என்றால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை மதிப்பீடு செய்ய உதவாதது என்பது போல் தான். நீங்கள் நல்லமனிதர் என்றால் இருந்துவிட்டுப் போங்கள், ஆனால் அதை உங்களின் மதத்தில் உள்ளவர்களுக்கு சாதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை அளவுகோல் ஆக்கிவிடாதீர்கள், அது நீங்கள் உங்களுக்கு செய்யும் துரோகம், அவ்வாறு செய்வதனால் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் பிறர் செய்யும் கெடுதல்களையும் நீங்கள் உங்கள் முதுகில் சுமக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள்படும்.

பொதுவாக நான் எப்போதும் எழுதுவது சாதி வெறி மத வெறி குறித்த எனது பார்வை, பிரச்சனை இல்லாதவரை இவற்றினால் ஆபத்துகள் இல்லை, ஒருவர் சாதி சார்பாக இருப்பதற்கு சாதிவெறியனாக இருப்பதற்கு ஒரு நிகழ்வு தான் வேறுபாடு, உதாரணத்திற்கு சாதி சார்ந்த ஊர்வலம் செல்கிறது, யாரோ ஒருவன் ஒரு பேருந்துன் மீது கல் அல்லது யார் மீதோ கல் எறிகிறான், அது வெளியில் இருந்து வந்த கல்லாகக் கூட இருக்கும், நம்ம சாதிக்காரன் மீது கல்வீசிவிட்டான் டா என்று ஒருவன் கூவினாலே போதும் ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த இடத்தை ரண களமாக்கிவிடும், முடிவில் அவை சாதிவெறியின் அடையாளமாக மாறிக் கிடக்கும், கையில் தீவட்டியுடன் ஊர்வலம் போகும் சாதி சார்ந்த கூட்டம் அதே தீவட்டியை அங்கு உள்ள வீடுகளின் மீது வீசினால் அது சாதிவெறி அங்கு கலவரங்களால் பலர் கொல்லப்படும் வாய்ப்பு மிகுதி,. ஆக சாதிவெறி / மதவெறி ஆகியவற்றிற்கு இடையே வன்செயல் என்று நிகழ்வு தான் வேறுபாடு அந்த நிகழ்வு எந்த ஒரு நொடியுலும் ஏற்படக் கூடியது என்பதால் சாதி பற்றுக்கும் சாதிவெறிக்கும், மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

உங்கள் சிந்தனைக்கு...

விநாயக சதுர்தியின் போது சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மத ஊர்வலம் தான் செல்கிறது, அது மதவெறி ஊர்வலமாக மாற எத்தனை வினாடிகள் எடுக்கும் ?

*******

மதவெறி பற்றி பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர், அவற்றை நான் புறக்கணிக்கிறேன், குஜராத் மோடி அரசை விமர்சனம் செய்ய குஜராத்திகளாக இருக்க வேண்டுமா ? பின்லேடனை தீவிரவாதி என்று விமர்சனம் செய்ய இரட்டை கோபுரத்தில் எரிந்து உருக்குலைந்தவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டுமா ? இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஒரு இஸ்லாமியர் தான் அதனை மறுக்க வேண்டும் என்ற யாரும் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை, எனவே பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் நிகழ்வைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை கடுமையாக புறக்கணிக்கிறேன்.


மதவெறி பற்றிய விழிப்புணர்வுகளை பதிவுலகில் சார்ந்த பலர் நன்றாகவே அறிந்துள்ளனர், அதற்கு எனது கடந்த சில பதிவுகளும் கூட காரணமாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவதன் அயற்சி எனக்கு ஒவ்வாத ஒன்று, "தமிழ்மணத்தில் முகப்புகள் மதவாதிகளால் வாக்கு குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் நான் தமிழ்மணம் வழியாக படிக்க விரும்பவில்லை, ரீடர் வழியாக குறிப்பிட்ட பதிவுகளை நான் வாசிக்கிறேன்" என்றார் நண்பர் ஒருவர். இதனால் பாதிக்கப்படுவது புதிதாக பதியவரும் வலைப்பதிவர் தான், ஒருவேளை அவர் நன்றாக எழுதுபவராக இருந்தால் அவர் பதிவுகள் வாசிக்கபடாமலேயே போகலாம்.

எனக்கு சூடான இடுகை, முகப்பை ஆக்கிரமிப்பதில் ஆர்வம் இல்லை, மூன்றாண்டுக்கு முன்பு எழுதியதில் பெரும்பாலனவை அங்கு வந்து சென்றவை, அப்போது பதிவர்களின் எண்ணிக்கையும் குறைவு, இப்போது அந்த இடங்களை நான் தொடர்ந்து துண்டு போட விரும்பவில்லை, புதியவர்கள் தொடருட்டுமே. என் பெயரில் பிறர் எழுதியதும் சேர்த்தே தமிழ்மணத்தை ஆக்கிரமித்தவைகள் கீழ்கண்டவை.

தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, கடந்தவாரப் பதிவுகள் புதிய பதிவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன், பாலோயர்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.

*********

பின்குறிப்பு : முகம் தெரிந்த நண்பர்கள் பதிவுகள் தவிர்த்து எவருடைய எதிர்வினைகளுக்கும் நான் பதிவில் போடுவது கிடையாது. நான் எப்போதும் அறிவுரை செய்வதில்லை, பரிந்துரை மற்றவை விமர்சனம். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கம் சொல்லத் தேவை இல்லை, தெரியாதவர்களுக்கு என் விளக்கமும் பயன் தராது. இங்கும், தொடர்ச்சியாகவும் முன்பும் குறிப்பிட்ட மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை, குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன், அப்படியாக அனுமானிக்கும் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும், குறிப்பாக இந்தப் பதிவின் நெகட்டிவ் ஓட்டுகளும் கடந்த ஒருவாரப் பதிவுகளின் நெகட்டிவ் ஓட்டுகளும் பாசிட்டிவ் என்றே கொள்ளப்படும், வாக்களிப்பவர்கள் முடிவு செய்க.

:)

21 கருத்துகள்:

Riyas சொன்னது…

//மனிதர்கள் தான் சார்ந்த கொள்கைகள் பாதிக்கப்படாதவரை சமத்துவமானவர்களாக தெரிகிறார்கள், பிறருக்கு அறிவுரைச் சொல்பவர்களாக தெரிகிறார்கள்//

உண்மைதான் தான் கொண்ட கொள்கைகள் பிறரை பாதிப்பதை எந்தவிததிலும் அனுமதிக்க முடியாதுதான்..

Riyas சொன்னது…

//ஒருவர் நல்லவர் என்றால் அவர் தம்மை தாமே உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நற்பண்புகளின் தொகுப்பு தான் அவர், அதற்கும் அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது,//

இங்கே நல்லவர்,கெட்டவர் என்ற அளவுகோலை மதத்தை அடிப்படையாக வைத்து தீர்மானிப்பதை நானும் எதிர்க்கிறேன்.

இங்கே நான் இஸ்லாமியன், நான் பழகியவர்களில் எங்கள் மதத்திலும் கெட்டவர்கள் இருக்கிறார்கள். அதே நேரம் ஏனைய மத நண்பர்களில் மிக அருமையான நற்குணம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.. ஒருவரின் நடத்தையை மதத்தை வைத்து தீர்மானித்துவிட முடியாது.. அதேநேரம் மதத்தின் நல்ல கருத்துக்களால் ஒருவன் நல்வழியை தேடிக்கொள்ளவும் முடியும் என்பதே என் கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதேநேரம் மதத்தின் நல்ல கருத்துக்களால் ஒருவன் நல்வழியை தேடிக்கொள்ளவும் முடியும் என்பதே என் கருத்து.//

அது ஒரு நம்பிக்கை தான், அதனால் தான் சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்கு போதனை செய்து தன் மதத்திற்கு மாற்ற முடியும் என்று நம்பிச் சென்று அது போல் மாற்றி இருக்கிறார்கள்.

நல்ல மனிதன் ஒரே நாளில் கெட்டுப் போவது நடக்கிறது என்னும் போது மதம் எந்த விதத்தில் அம்மனிதனைக் காக்கும் ?

அடிப்படை நற்பண்புகளால் சிலர் நண்பர்களாக இணையலாம், ஆனால் அவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் என்பது மதம் தானே ?

எல்லா மதக்கலவரங்களின் போது பெரும்பாலும் ஒரு பிரபலம் குறிப்பிட்ட சிலரை காப்பாற்றி வீட்டுக்குள் வைத்துக் கொண்டார் என்பது தானே, அங்கே மதம் பார்க்கப்படாமல் மனித நேயம் தான் பார்க்கப்படுகிறது, அந்த மனித நேயம் மதங்களை மீறி மனிதனுக்கு உள்ள அடிப்படை குணம், அதைக் கெடுப்பதே மதங்கள் தான்

Riyas சொன்னது…

//மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் பிறர் செய்யும் கெடுதல்களையும் நீங்கள் உங்கள் முதுகில் சுமக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள்படும்.//

இது கொஞ்சம் சிக்கலானது.. எந்த மதமும் கெடுதல் செய்யும்படி யாரையும் வற்புறுத்தவில்லை...

தீமைகள் எங்கு நடக்கிறதோ அவற்றையெல்லாம் தட்டிக்கேட்கும்படிதான் இஸ்லாம் கூறுகிறது.. அதுவும் ஒரு எல்லை வரைதான் முடியும்..

உதாரணத்துக்கு இங்கே பாகிஸ்தான் காரனும் முஸ்லிம் இலங்கையனாகிய நானும் முஸ்லிம்.. பாகிஸ்தான்காரன் குண்டு வைத்தால். அவனும் முஸ்லிம் நானும் முஸ்லிம் என்ற காரனத்துக்காக என்னையும் கெட்டவன் தீவிரவாதி எனலாமா..?

அவனின் செயலுக்காக எங்களால் கவலைப்பட மட்டும்தான் முடியும்..
அவனின் செய்கைகளை எங்கள் முதுகில் சுமக்க முடியாது..

கோவி.கண்ணன் சொன்னது…

//உதாரணத்துக்கு இங்கே பாகிஸ்தான் காரனும் முஸ்லிம் இலங்கையனாகிய நானும் முஸ்லிம்.. பாகிஸ்தான்காரன் குண்டு வைத்தால். அவனும் முஸ்லிம் நானும் முஸ்லிம் என்ற காரனத்துக்காக என்னையும் கெட்டவன் தீவிரவாதி எனலாமா..?

அவனின் செயலுக்காக எங்களால் கவலைப்பட மட்டும்தான் முடியும்..
அவனின் செய்கைகளை எங்கள் முதுகில் சுமக்க முடியாது..//

நீங்கள் குறிப்பிடுவதன் பொருள் புரிகிறது, ஆனாலும் பின்லேடன் மற்றும் தீவிரவாதிகள் பற்றிய சப்பைக்கட்டுகள் பெரும்பாலும் அவர்கள் அப்பாவிகள் என்று தான் சுட்டிக்காட்டப்படுகிறது, உதாரணத்திற்கு பின்லேடன் அமெரிக்காவில் வளர்த்துவிடப்பட்டவன் அதாவது அடிப்படையில் அவன் நல்லவன் என்று வலிந்து திணிக்கவும் படுகிறது, இது போன்று திவிரவாத செயலுக்கான ஞாயமும் முட்டுக் கொடுத்தலும் பிறர் சமூகங்களால் ரசிக்கப்படுவதில்லை. ஏன் யாரோ செய்த தீவிரவாத செயலுக்கு சப்பைக் கட்டி அதை நீங்கள் முதுகில் சுமக்கிறீர்கள் ? அப்படியென்றால் உங்கள் நற்பண்புகள் உங்கள் மதத்தால் விளைந்ததா ? என்ற கேள்வி இயற்கையாகவே எழத்தான் செய்கிறது.

ரியாஸ், நான் பொதுமைப்படுத்தி நான் எழுதவில்லை. மற்றவர்களுக்கு இருக்கும் பொதுவான விமர்சனங்கள் வெளியே சொல்ல முடியாதவற்றின் திறந்த விமர்சனமாக நான் செய்கிறேன்.

இது போன்ற விமர்சனங்களினால் மட்டுமே புரிந்துணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும், என் மதத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்னும் இடத்தில் அம்மதத்தின் மீது பிறர் வைத்திருக்கும் எண்ணத்தை என்றுமே மாற்றாது காரணம் எண்ணத்திற்கு மாற்றான சிந்தனைகள் விவாதிக்கப்படுவதே இல்லை என்பது தான்.

Riyas சொன்னது…

//பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் நிகழ்வைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை கடுமையாக புறக்கணிக்கிறேன்.//

பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி நன்றாக புரியும்..
வெளியிலிருந்து பார்ப்பவர்களூக்குஅது வெறும் செய்திதான்..

கோவி.கண்ணன் சொன்னது…

//பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி நன்றாக புரியும்..
வெளியிலிருந்து பார்ப்பவர்களூக்குஅது வெறும் செய்திதான்..//

ஒப்புக் கொள்கிறேன்,

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு இருக்க வேண்டும்,

மனித நேயம் மிக்கவர்கள் எவராக இருந்தாலும் பாதிப்புகளின் காரணிகளை விமர்சனம் செய்யவதை தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை. உதாரணத்திற்கு நாத்திகர் பெரியார் ஆலய நுழைவு பொதுவானது என்று போராடாவிட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வழிபாட்டு உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்திருக்கும், அவர்கள் குரல் நசுக்கப்பட்ட போது அவர்களால் எப்படி பேச முடியும் ?

Riyas சொன்னது…

//ஏன் யாரோ செய்த தீவிரவாத செயலுக்கு சப்பைக் கட்டி அதை நீங்கள் முதுகில் சுமக்கிறீர்கள்//

இதை நானும் கண்டிக்கிறேன்.. தவறுசெய்பவன் இஸ்லாமியன் என்பதற்காக அவனுக்கு பரிந்து பேசுவதோ.. அவனில் குற்றமில்லை என்பதோ என கருத்தல்ல.. அது எனக்கு பிடிப்பதுமில்லை, ஒருவரை முதலில் அறிந்துகொள்ள நினைக்கும் போது அவர் எந்த மதத்துக்காரர் என்பதைவிட அவர் எப்படியானவர் எனபதையே தெரிந்து கொள்ள ஆசைப்படுவேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

மிக்க நன்றி ரியாஸ்,

உங்களைப் போன்ற புரிந்துணர்வில் பேசுபவர்கள் மிகக் குறைவு. உங்களைப் போன்றோர் மதம் கடந்து சிந்திப்பவர்கள், அதனை வரவேற்கிறேன்.

Riyas சொன்னது…

//"தமிழ்மணத்தில் முகப்புகள் மதவாதிகளால் வாக்கு குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால்//

இங்கே மதவாதிகள் பதிவு மட்டுமல்ல, மதவாதிகளின் உணர்வுகளை கேவலப்படுத்தும் பதிவுகளும் சூடான இடுகை பதிவுகளை அலங்கரித்திருந்தது..பார்க்கவில்லையா..?


நியுற்றனின் விதியை இங்கேயும் பொருத்திப்பார்க்கலாம்..

ஜோதிஜி சொன்னது…

ஒருவரை முதலில் அறிந்துகொள்ள நினைக்கும் போது அவர் எந்த மதத்துக்காரர் என்பதைவிட அவர் எப்படியானவர் எனபதையே தெரிந்து கொள்ள ஆசைப்படுவேன்.

ரியாஸ் சபாஷ். வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இங்கே மதவாதிகள் பதிவு மட்டுமல்ல, மதவாதிகளின் உணர்வுகளை கேவலப்படுத்தும் பதிவுகளும் சூடான இடுகை பதிவுகளை அலங்கரித்திருந்தது..பார்க்கவில்லையா..?


நியுற்றனின் விதியை இங்கேயும் பொருத்திப்பார்க்கலாம்..//

எனக்கு தெரிந்து இந்துத்வாக்கள் முன்பு வலைப்பதிவர்களால் பலமாக விமர்சனம் செய்யப்பட்டார்கள், பிறகு இந்துவாக்கள் (தமிழ் ஹிந்து) தனித்தளம் கண்டு அதற்குள் அவரகள் எழுதிவருகிறார்கள், அங்கு பலர் சென்று படித்தாலும் அவர்களிடம் விவாதிப்பது இல்லை.

அதையே பிற மதவாதிகளும் பின்பற்றினால் இலக்கியம், நகைச்சுவை என்று எழுதுபவர்களுக்கு வாய்ப்பளித்தது போல் இருக்கும், மதவாதிகளை தூண்டிவிடுவது எளிது என்பதால் அவர்களை தூண்டுபவர்களும் மத உணர்வுகளை கேலி செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

Riyas சொன்னது…

//மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை,//

இதற்கு, என்னிடம் மாற்று கருத்து உண்டு.. மதத்தை கழிவறை என நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.. கோடிக்கணக்கானவர்களின் நம்பிகையை எடுத்த எடுப்பில் கழிவறைன்னு சொல்லிட்டாரே என்று உங்கள் மீது கோபபட்டு கடந்த பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு குத்தியதும் உண்டு..

Riyas சொன்னது…

//குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன்,//

அப்படியே இருக்கலாம், ஆனாலும் இந்த விளம்பர வரிகளிலேயே ஏதோ உள்குத்து இருக்குமோ என என் உளமனம் சொல்லுது.. ஹிஹி

ஜோதிஜி சொன்னது…

கண்ணன்

எழுதும் போது நேரம் விழுங்குவது உண்மை தான். ஆனால் நமக்குத் தேவையான தூக்கம், விருப்பம் சார்ந்த விசயங்கள் போன்றவற்றை கணக்கிட்டு தேவையில்லாத அலைச்சலை குறைத்து எழுத கவனம் செலுத்தினால் சில ஆச்சரியங்கள் இருக்கிறது.

அது சில வருடங்கள் கழித்து படிக்கும் போது புரியும். அல்லது ஆச்சரியப்படும் இடங்களில் இருந்து அழைத்து பேசுபவர் சொல்லும் போது உருவாகின்றது.

சென்னை புத்தக கண்காட்சியில் திருப்பூரில் உள்ள சுப்ரபாரதி மணியன் புத்தகத்தை வாங்கி வந்து படித்து விட்டு அவரை அழைத்து பேசினேன். முதல் முறையாக. ரொம்பவே சந்தோஷப்பட்டார். அப்போது உங்களுடன் பேச நினைய பேர்கள் என்னிடம் கேட்டார்கள். எனக்கு உங்கள் தொடர்பு இல்லை என்பதால் என்னால் அவர்களுக்கு உங்களைப் பற்றி சொல்ல முடியல என்றார். ஆக மொத்ததில் ஏதோவொரு இடத்திற்கு நாம் எழுதிய விசயங்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கு என்பதை புரிந்து கொண்டேன்.

சில மாதங்கள் கூட எழுதாமல் இருந்து இருக்கேன். தினந்தோறும் எழுதியும் இருக்கேன். எல்லோரும் கூகுள் பஸ்ஸில் கும்மியில் கவனம் செலுத்திய போதும் அளவாகவே வைத்து இருந்தேன்.

நேரம் என்பது மனைவி போல. நாம் எப்படி கையாள்கின்றோம் என்பதை பொறுத்தே அமைதியா அனர்த்தமா என்பது கிடைக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Riyas said...
//குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன்,//

அப்படியே இருக்கலாம், ஆனாலும் இந்த விளம்பர வரிகளிலேயே ஏதோ உள்குத்து இருக்குமோ என என் உளமனம் சொல்லுது.. ஹிஹி//

சென்ற பதிவொன்றின் பின்ன்னூட்டத்தில் மரைக்காயர் என்பவர் என்னை அவ்வாறு எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்

கோவி.கண்ணன் சொன்னது…

// Riyas said...
//மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை,//

இதற்கு, என்னிடம் மாற்று கருத்து உண்டு.. மதத்தை கழிவறை என நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.. கோடிக்கணக்கானவர்களின் நம்பிகையை எடுத்த எடுப்பில் கழிவறைன்னு சொல்லிட்டாரே என்று உங்கள் மீது கோபபட்டு கடந்த பதிவுகளுக்கு மைனஸ் ஓட்டு குத்தியதும் உண்டு..//

அந்தக் கருத்தில் எனக்கு மாற்றம் இல்லை, தனிமனிதனுக்கு மிக மிகத் தேவையானதாக இருப்பது கழிவறைகள் தான், சென்னைப் போன்ற பெருநகரங்களில் பொதுக் கழிவறையின் தேவை அங்கு அவதிப்படும் போது தெரியவரும் உண்மை

தவிர ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே வழிபாட்டுத் தலங்களை விட பொதுக்கழிவறை மேலானவை என்று எழுதினேன், யாரும் அதில் இருக்கும் ஞாயங்களை படித்துவிட்டு சண்டைக்கு வரவில்லை, பொதுக்கழிவறை சாதி மதம் பார்க்காது அனைவரையும் (மூன்று ரூபாய்க்கும் சில இடங்களில் இலவசமாகவும்) அனுமதிக்கிறது. ஆனால் வழிபாட்டுத் தளங்கள் பொதுவானது இல்லை, வழிபாட்டுத் தளங்களுக்கு சென்று திரும்பும் போது மன அழுத்தம் தீரும் என்பது நம்பிக்கையே, சிலருக்கு தீர்ந்திருக்கலாம், ஆனால் அடிவயிற்றின் அழுத்தம், கண்ணீர் இங்கு எங்காவது கழிவறை கிடைக்காதா என்று கண்டு கொண்டவருக்கு அந்த விநாடியில் கழிவறையே சொர்கம், வரும் போது மன அழுத்தம் உடல் அழுத்தம் எல்லாம் களையப்பட்டு உற்சாகமாகவே இருப்பார்.

கறுத்தான் சொன்னது…

முதலில் ஒன்றை புரிந்து கொள்வோம்! மதம் என்பது நம்பிக்கையை மட்டுமே சார்ந்தது, அதன் வழிமுறைகளின் மீதோ நடவடிக்கைகள் மீதோஅறிவியல்பூர்வமான விமர்சனம் செய்யப்படும் போது ,அதனை சார்ந்தவரின் நம்பிக்கையின் மீது கை வைப்தாகதுடித்து போய்விடுகிறார்கள். ஆகவே முகம் தெரியாத பொதுதளத்தில் கருத்துகளை பதியும் நாம் முடிந்த வரை மத சம்பந்த மான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் அறிவியல் அற்ற நம்பிக்கையை மட்டுமே வைத்து கொண்டு வாதிடுபவர்களை புறக்கணிபதே சரி .

கோவி.கண்ணன் சொன்னது…

//நேரம் என்பது மனைவி போல. நாம் எப்படி கையாள்கின்றோம் என்பதை பொறுத்தே அமைதியா அனர்த்தமா என்பது கிடைக்கும்.//

கடுமையான கண்டனம்.

:)

மனைவி அல்லது உங்களுக்கு உடமை / உரிமை உள்ள பெண்ணை உங்கள் இஷ்டப்படி ஆட்டிவைக்க முடியும் என்ற பொருளும் வருகிறதே.

ஆணிய சிந்தனை

ஜோதிஜி சொன்னது…

ஒவ்வொருவர் பார்வையில் மனைவி என்பவரை எப்படி வைத்துக் கொள்கின்றார் என்பதில் தான் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் போன்ற வார்த்தைகள் வருகின்றது என்று நினைக்கின்றேன்.

உரிமை, உடமை போன்ற வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நீயும் நானும் நம் குழந்தைகளுக்கு நல்ல முன்னூதாரணமாக இருக்க வேண்டும்.

உறவினர்கள் மத்தியில் தேவையில்லாத வகையில் பேசு பொருளாக இருக்கக்கூடாது.

மற்றபடி இதற்காக நீ அதிகமாக உன் அளவில் உழைப்பை கொடு. என் அளவில் நான் உழைப்பை கொடுக்கின்றேன்.

இதில் தலைவன் பொருளாளர், செயலாளர் போன்ற பதவிகள் இல்லை.

எவர் சொல்வது சரியோ அதை ஏற்றுக் கொண்டு போய்விடுவது உத்தமம்.

மொத்தத்தில் குழந்தைகள் எதிர்காலத்தில் எங்க அப்பா அம்மா எங்கள் முன்னால் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாழ்ந்து விட்டாலே போதும் தானே? அதற்காக யாரோ ஒருவர் நாகரிக அடிமையாக இருந்தால் தப்பில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிஜி, சும்மா கிண்டலுக்கு ஸ்மைலி போட்டு தானே சொன்னேன், அதுக்கு இம்மாம் பெரிய சுய விளக்க பின்னூட்டமா ?

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்