பின்பற்றுபவர்கள்

9 ஜனவரி, 2012

மாட்டுக்கறி துன்னா தப்பா ?

மூன்று நாளாக மாட்டுக்கறி மேட்டர் நக்கீரன் கட்டுரையையும் அதன் பின் விளைவைகளையும் முன் வைத்து ஓடிக் கொண்டு இருக்கு. மேலை நாடுகளிலும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்ணும் உணவை வைத்து மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது. உணவு சார்ந்த நாகரீகம் என்பது திருவள்ளுவருக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இந்தியாவில்/ தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. கொல்லாமை, புலால் மறுப்பு என்பதாக ஊண் உணவு பற்றிய தம் பார்வையை திருவள்ளுவர் குறிப்பிட்டு உள்ளதிலிருந்து நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம், பிற உயிர்களை துன்புறுத்தாமை அல்லது அனைத்து உயிர்களையும் நேசித்தல் என்ற அளவில் தான் புலால் உணவு முன்மொழியப்பட்டு இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவற்றை வழியுறுத்த சொர்க / நகரக் கோட்பாடுகள் இடைச்சொருகலாகப்பட்டிருக்க வேண்டும். இவை இவை உண்ணத்தக்கவை என்று இயற்கை கூட எதையும் சொல்லி இருக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது, அவற்றையெல்லாம் வயிறும், செரிமான மண்டலமும் தான் முடிவு செய்கின்றன. விலங்குகள் உண்ணும் பச்சை ஊண் உணவை மனிதனால் உண்ண முடியாது, காரணம் செரிக்காது, சுவை மற்றும் செரித்தல் ஆகிய இருகாரணங்களுக்காக சமைத்து உண்ணுதல் என்ற அளவில் காய்கறி உணவுகளும், உயிரின சதைகளும் உண்ணப்படுகின்றன.

இந்தியாவுக்கு வெளியே மனித வேற்றுமை என்பது இனம் சார்ந்தது. உண்ணும் உணவில் பெரிய வேறுபாடுகளற்ற நிலையில் ஒரு இனத்தைத் தாழ்த்த அவற்றின் உடல் நிற அமைப்புகளை பழிப்பதிலிருந்து வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருந்தனர். கருப்பு இனத்தின் மீது இவற்றை எளிதாக செய்ய முடிந்தது, அடிப்படையில் பெரிய உருவ வேற்றுமை இல்லாத யூத - செருமானிய இனம் மொழி அடிப்படையில் ஆன இனவேற்றுமையை வளர்த்துக் கொண்டிருந்தன, காரணம் மத அடிப்படையில் யூதர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொண்டனர், செருமானியர்களும் தங்களை உயர்ந்த இனம் என்று கூறிக் கொண்டு இருந்தனர், ஆளுமையை வளர்த்துக் கொள்ளுதல் என்பதில் அவர்களுக்கு மொழியும் மதமும் கைகொடுத்தன.

இந்தியாவின் அடிப்படை இனம் திராவிட - ஆரிய என்று இருந்தாலும் நூற்றாண்டு ஆயிரம் ஆண்டு கலப்புகளில் அவற்றைப் பிரித்து வேற்றுமை பாராட்டும் சிக்கலில் மதம் மற்றும் உணவு முறைகள் முக்கிய பங்காற்றியது, கொன்று புசிப்பவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்னும் கொல்லாமை கோட்பாடுகளில் புத்த - சமண மதத்தினரால் ஆரிய இனமும், மதமும் பின்னுக்கு தள்ளப்பட்ட போது, அவற்றைச் சரி செய்ய கொல்லாமையை வரிந்து கொள்ள முற்பட்டது ஆரிய இனம். இதன் மூலம் ஆரியர்கள் சைவர்கள் ஆனாலும் உயர்ந்த என்ற அடைமொழிக்காக வருண அடிப்படை பிறப்பு கற்பனைகளை அமைத்துக் கொண்டு அரசர் முதல் ஆண்டி வரை பின்பற்றச் செய்தனர். நாளடைவில் அரச மதம் என்ற தகுதியை புத்த சமண மதங்கள் இழக்க ஆரிய சமய பழக்க வழக்கங்களுடன் கொல்லாமை அறமும் சேர்ந்து சமூக உயரிய பண்புகள் என்ற உருவகங்கள் உருவாயின.

ஆனால் இவற்றைச் சரியாக செய்தார்களா ? என்பதும் வெறும் கொல்லாமை என்னும் கொள்கை மட்டும் தான் உயரிய அடையாளமா ? என்ற கேள்விகள் இன்றும் பதில் இல்லாமல் தொடர்ந்து கொண்டிடுக்கின்றன, பசுவிடம் இருந்து கறந்து குடிப்பது பாவம் இல்லை, அதைக் கொன்று தின்றால் தான் பாவம் என்று சொல்லப்படுகிறது, ஆனால் பசுவை கறவைக்காக வைத்திருந்த எந்த பார்பனரும் அதை தாமே கறக்கவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை ஆனால் முக்கியமானது கரவைக்கு பயன்படுத்தப்பட்ட பசுக்கள் பின் என்னவாயின என்பது தான் கேள்வி, ஒரு மாடு ஆண்டுக்கு ஒன்று அளவில் ஒன்றோ இரண்டு கன்று களை ஈணும், சுமார் பத்து ஆண்டுகள் வரை பால் பலன் கொடுத்து இருக்கும், அதன் பிறகு மடிவற்றிய மாடு அல்லது கிழடு என்று துறத்தப்படும், இவ்வாறு துறத்தப்பட்ட மாடுகளை தான் இறைச்சி உண்ணுபவர்கள் கொன்று தின்றார்கள், ஒரு பசு மாடு காளை கன்று ஈன்றிருந்தால் அவற்றில் கன்று பருவம் முடிந்த பிறகு அவற்றை வேளான்மைக்காரர்களிடம் உழவிற்காக விற்கப்படும். பெரும்பாலும் பசுமாடுகள் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டு அவற்றின் பலனை பார்பனர்கள் துய்த்துவந்தனர், அவற்றின் பராமரிப்புகளை பிறர் தான் செய்துவந்தனர். அவை நோய்வாய்பட்டு இறக்கும் போது அவற்றை சேரியினரிடம் ஒப்படைக்கப்படும், அவர்கள் அவற்றின் தோலையும் கறியையும் பயன்படுத்திக் கொள்வர். முறையாக மாடுகள் அடக்கம் செய்யப்படுவது எப்போதும் நடந்ததே இல்லை. மாட்டு கறியை உண்ணாத வேளான்மைகாரர்களின் செயலும் பாலுக்காக, உழவுக்காக பயன்படுத்திக் கொள்ளுதல் என்ற அளவில் தான் இருந்தது, அவற்றின் இறப்புகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களின் உணவாகத்தான் சென்று கொண்டிருந்தது. மாடுகளை உணவிற்காக வளர்க்கும் பழக்கம் முகலாய ஆட்சிக்கு பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும். மாடுகளை அடித்து உண்ணும் பழக்கம் இந்தியாவின் பிற பகுதிகளில் மொகலாய ஆட்சிக்கு பிறகு பரவிய போது மாடுகளை உண்ணுவது பாவம் என்று வழியுறுத்தல் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை, அவை மதம் சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரை மாடுகளை உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறிவந்ததிலும் சிக்கல் ஆகிப் போக, பின்னர் செத்த மாட்டை உண்பவர் நாகரீகமற்றவர்கள் கழுகுக்கு ஒப்பானவர்கள் என்ற ரீதியில் தாழ்வுகளின் கூறுகளாக மாறி தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தீண்டாமைக் காரணியாக தொடர்ந்தது.

தமக்கு விருப்ப உணவான மாடுகளை உயிரோடு வாங்கி கொன்று திண்ணும் பொருளாதார வசதிகள் இல்லாததால் முஸ்லிம் அல்லாதவர்கள் மாட்டு இறைச்சிக்கு இறந்த மாடுகளையே சார்ந்த அவல நிலை தான் தொடர்ந்தது. மாடுகளை உணவுக்கு கொல்லாவிட்டாலும் மாட்டுத் தோலின் மதிப்பினால் பார்பனர்கள் மாடுகளை அடித்து தோல் உறித்து பதப்பப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை தற்காலத்திலும் நடத்தியே வருகின்றனர். ஆக கொல்லாமை அறம் என்பது வெறும் உணவு சார்ந்த ஒன்று என்ற அளவில் தான் தற்பொழுது உள்ளது, மற்றபடி அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இக்காலத்தில் எடுபடாத ஒன்று. மாட்டுகறி உண்ணுவது தவறல்ல என்று வழியுறுத்த அவற்றை உண்ணுபவர்களைத் தூற்றாதீர்கள் அவர் பார்பனர் என்றாலும். மாட்டுக்கறி உண்ணுவது பாவ புண்ணியம் தொடர்பார்னது அல்ல பிற உயிர்களைக் கொல்லாமை என்பதில் மாடும், பன்றியும் கூட அடங்கி இருக்கிறது அவ்வளவே. பன்றி இறைச்சியை உண்ணுவது பாவச் செயல் என்று இப்படியாகத்தான் மதம் சார்ந்தே சொல்லப்படுகிறது ஆனால் இவற்றிற்கு அடிப்படைக் கூறுகள் பிற மதத்தினரை உணவு ரீதியாக பழித்தல் என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லை.



நானும் எனது இல்லத்தினரும் கொல்லாமை என்ற அளவில் (விலங்கின, பறவை இன இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட)ஊண் உணவுகளை உண்ணுவது கிடையாது, மற்றபடி அதை உண்ணுவோர் பக்கத்தில் அமர்ந்து உண்ணுவதில் அல்லது ஊண் உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களில் செய்த காய்கறி உணவுகளையோ உண்ணுவதில் அருவெறுப்பு அடைந்தது இல்லை, சிங்கை போன்ற பல்வேறு இனம் கூடி உண்ணும் உணவு அங்காடிகளில் உண்ணும் நால்வரில் ஒருவர் பன்றி இறைச்சியும், மற்றொருவர் மாட்டிறைச்சியையும், இன்னொருவர் கடல் நத்தைகளையோ உண்ணுவர், என்னைப் போன்றவர் வெறும் காய்கறி உணவு எடுத்துக் கொண்டு ஒன்றாக அமர்ந்து உண்ணுவோம். மூக்கைப் பொத்திக் கொண்டதோ, முகம் சுளித்ததோ இல்லை.

பார்பனர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் அல்ல என்று நீங்கள் நம்பும் போது அவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவது கேலிப் பொருளாக சித்தரிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது முரண்பட்ட சிந்தனை. ஒருவேளை ஜெ மாட்டிறைச்சி உண்டு இருந்தாலும் அவற்றில் தவறு ஒன்றும் இல்லை, இதை நக்கீரன் நக்கல் அடித்திருக்கத் தேவை இல்லை, அதை வெறும் தகவலாகக் கொடுத்திருக்கலாம்.

6 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

சரியான பார்வை.
/ஒருவேளை ஜெ மாட்டிறைச்சி உண்டு இருந்தாலும் அவற்றில் தவறு ஒன்றும் இல்லை, இதை நக்கீரன் நக்கல் அடித்திருக்கத் தேவை இல்லை, அதை வெறும் தகவலாகக் கொடுத்திருக்கலாம்/
மாட்டுக்கறி உணவு யார் உண்டாலும் தவறில்லை.அது அவ்ர்களின் தனிப்பட்ட விஷயம்.இருந்தாலும் இது ஒரு தகவலாக கூட பகிர பிறருக்கு உரிமை இல்லை.
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//மாட்டுக்கறி உணவு யார் உண்டாலும் தவறில்லை.அது அவ்ர்களின் தனிப்பட்ட விஷயம்.இருந்தாலும் இது ஒரு தகவலாக கூட பகிர பிறருக்கு உரிமை இல்லை.
நன்றி//

வெளிநாட்டில் மாடுகளுக்கு ஏதோ நோய் வந்த போது 'ஜார்ஜ் புஷ் கூட தற்போது மாட்டிறைச்சி தான் சாப்பிடுகிறார், பொது மக்கள் அச்சப்படத் தேவை இல்லை' என்று செய்திகளை அமெரிக்க பத்திரிக்கைகள் வெளி இட்டன, அமெரிக்கர்களின் விருப்ப உணவு மாட்டிறைச்சி என்று தெரிந்து கொண்டேன், அது போல் ஜெவின் உணவுகளுள் மாட்டிறைச்சியும் ஒன்று என்று தெரிந்து கொள்வதால் அதை உண்ணுபவர்கள் தங்களை தாழ்வாக நினைக்கவோ, பிறர் தூற்றவோ இடம் கொடுக்கக் ஒன்றும் இல்லை என்று அறிந்து கொள்வர்.

மவுலாசா சொன்னது…

பசிக்கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு - பன்றிக்கறி புசித்தால் தவறில்லை என்கிறது இஸ்லா ம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பசிக்கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு - பன்றிக்கறி புசித்தால் தவறில்லை என்கிறது இஸ்லா ம்.//

அது பொதுவான புரிதல் தான், பசிக் கொடுமையால் (அறுவெறுப்பு இன்றி அனுமதியும் இருந்தால் மனித கறி உள்ளிட்ட) எதையும் திங்கும் நிலையே மனித நிலை, அதைச் சொல்ல மதம் தேவை இல்லை, மேலும் மதம் அதைச் சொல்வதால் அவற்றிற்கு தனித்தன்மை என்று எதுவும் ஏற்படுவதில்லை. பசிக் கொடுமையில் உண்பதால் பன்றி இறைச்சி மாட்டு இறைச்சி ஆகிவிடாது அல்லவா.

குறும்பன் சொன்னது…

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி எல்லாம் தின்பது தப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது போல் தகவலா சொல்லி இருக்கலாம், நக்கல் அடிப்பது தவறு. ஜெ மாட்டிறைச்சி தின்று மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்ற பொருள் பட நக்கீரன் அதை அட்டைப்படத்தில் போட்டது தவறு.

ஜோதிஜி சொன்னது…

அசைவம் வேண்டாம் என்று வந்து விட்ட பிறகு இதெல்லாம் எதற்கு ஆராய்ச்சி? மருத்துவரை நாடாமல் இருக்க சைவத்தை நாடவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்