பின்பற்றுபவர்கள்

11 ஜனவரி, 2010

பனை !

தமிழ் எழுத்துக்கள் ஓலையில் எழுதியதால் தப்பித்தது என்கிற ஒரு கூற்றை (பனையண்ணன் என்கிற) ஒரு நூலில் படித்தேன். எதுவும் இயற்கைக்கும் கால மாற்றத்திற்கும் தப்பாது, முன்னோர்கள் முடிந்த அளவுக்கு நடப்புகளை கல்வெட்டு, பானையோடு, தந்தம், ஆமை ஓடு ஆகியவற்றில் எழுதி வைத்தனர். உலகெங்கிலும் எழுத்தாவணங்களை எழுதுவதற்கு தாள் கண்டுபிடிக்காத காலத்தில் பல்வேறு முறைகள் பயன்பட்டனவாம். எழுதும் முறைகள் ஏற்படுத்தி எழுதுவதற்காக கற்காலம் முதல் சென்ற நூற்றாண்டுவரையில் எலும்புகள், சிப்பிகள், சங்குகள், ஆமை ஓடுகள், விலங்குகளின் தோல்கள் ஆகியவற்றில் எழுதி வந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஆட்டுத் தோல் மற்றும் இளங்கன்றுத் தோல்களில் எழுதி வந்தனராம். சுமேரியர்கள் சுட்ட களிமண் மீது எழுதி வந்தனராம். எகிப்தியர்கள் 'பப்ரைஸ்' (பைபிள் என்னும் சொல்லின் மூலம்) என்ற ஒருவகை நாணல் புல்லில் எழுதினராம். மூங்கில் கண்டுபிடிக்கும் முன் துணிகளிலும் மூங்கில் மீதும் எழுதுவது சீன(ர்) வழக்கம். தமிழ் நாட்டிலும் பண்டைய இந்தியாவிலும் துணிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதி வந்திருக்கின்றனர். பழைய எழுது பொருள்களில் ஓலைகளின் எழுதுவது அவற்றை நூல்கள் போல் இதழ்களாக வைத்திருப்பதற்கும், எழுதுவதற்கும், பாதுகாப்பதற்கும் ஏற்றவையாக இருந்தபடியால் ஓலைகளில் எழுதுவது சீனர்களால் தாள்கள் கண்டுபிடிக்கும் வரையில் இந்தியாவில் நடைமுறையில் இருந்தன. 100 ஆண்டுகளுக்கு முன் சாதகங்கள் கூட ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. தாத்தாவின் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட சாதகமும், பலன்களும் வீட்டின் பூசை அறையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைக்கு நாம் பார்க்கும் பனைமரங்கள் பண்டைய இலக்கிய வாழ்வின் எஞ்சிய சின்னங்கள் தாம். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. பனை ஓலையில் எழுதுவதில் மற்றோர் வசதியும் இருந்திருக்கிறது. உலகெங்கிலும் இல்லாத ஒரு நடைமுறையாக இலக்கிய தரம் அறிய நம்மவர்கள் வைத்த சோதனைகள் மிகுதி. ஒரு நூல் நல்ல நூலா இல்லையா என்பதை அறிய அதை ஆற்றில் வீசியும், நெருப்பில் இட்டும் நிறைய சோதனைகள் செய்திருக்கிறார்கள். அதை மூட நம்பிக்கை என்பதைவிட உண்மை, நேர்மை ஆகியவற்றிற்கு கொடுத்த முதன்மைத்துவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு அரச சபையில் வெளி இடப்படும் நூல் கற்றோர்களால் சோதிக்கப்பட்ட பிறகு அது மக்களுக்கு பயன்படுமா என்பதை அறிய ஆற்றில் வீசப்படுமாம், ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லாவிடில் நல்ல நூல் என்பதாக அதை அறிமுகப்படுத்துவார்கள், அதே போன்று தீயில் இட்டு சோதனை செய்திருக்கிறார்கள். அனல் வாதம், புனல் வாதம் என்பவை கூட இப்படிப் பட்டவை தான் என்றாலும், சமண நூல்கள் எண்ணாயிரம் ஒருமுறை இலக்கிய தரச் சோதனைக்காக அவற்றில் எண்ணாயிரம் ஆற்றில் வீசப்பட அவற்றில் அடித்துக் கொண்டு செல்லாமல் மிதந்தவை வெறும் நானுறு, அவற்றை எடுத்து வந்து 'நன்னூல்' என்னும் தொகுதியாக வெளி இட்டதாக இலக்கிய குறிப்புகள் உண்டு.

சுவடி ஏடுகளில் எழுதப்பட்டு, அதன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டதால் கல்வி முறைக்கு ஏ(ட்)டுக் கல்வி என்ற பெயர் வழக்கு வந்தது. 'Edu'cation சொல்லை ஆய்வு செய்தால் அதன் வேர்ச்சொல் தமிழாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

எழுதப் பயன்படும் பனை ஓலைகள் பூச்சிகளால் அரிக்காமல் இருக்க பல்வேறு மூலிகை சாறுகளில் ஊறவைக்கப்பட்டு காயவைக்கப்பட்டு பிறகே எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது,ஓலைகளின் அளவு மற்றும் எடை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் பண்டைய எழுதும் முறைகளில் ஓலையில் எழுதுவது சிறந்ததாகக் கருதப்பட்டது, ஏனெனில் சேர்த்து தொகுதியாக கட்டிவைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் எளிதாக இருந்திருக்கிறது. நாள் கணக்கில் எடுத்துப்பார்க்கமல் இருப்பது, பாதுகாக்கப்பட்ட இடத்தின் தீ ஆகியவையே ஓலைச் சுவடிகள் அழிந்து போவதற்கு காரணமேயன்றி மற்றபடி பரமரிக்கப்பட்டல் ஓலைச் சுவடிகள் நூற்றாண்கள் தாண்டியும் நிலைக்கும் என்பதற்காக ஓலைச் சுவடியில் எழுதுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்காகி இருந்தது.

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விட பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி, சென்ற 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டுவீடுகள் கட்ட பனைமரத்தின் தேவை இன்றியமையாததாகவே இருந்தது. பனையின் பயன்பாடு ஓலை (சுவடி) , நுங்கு, கள், பதனீர், பனைவெல்லம் மற்றும் வாரைகள் எனப்படும் பன மரத்த்தை அறுத்த கட்டைகள் தமிழ் நாட்டின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாகவே இருந்தன. பனைமரத்தின் பயன்கள் இவ்வளவு இருந்தாலும் பனை நிழல் பயன் தராதவை என்பதற்கான 'பனை மர நிழலும்.....பய உறவும் ஒட்டாதைவை' சாதி சார்ப்பு/சாடல் பழமொழி கூட உண்டு. முன்பெல்லாம் தொடர் வண்டி பயணத்தின் போது இருப்பக்கமும் பனை மரங்களைப் பார்க்க முடியும். தற்பொழுது அரிதான காட்சியாகவே அவை இருக்கின்றன. முதல் காரணம் புதிதாக ஓட்டுவீடுகள் யாரும் கட்டுவதில்லை, பனைமரத்தின் இதர பயன்பாடான கள் ஆகியவற்றிற்கான தடை இவையே பனைமரங்கள் பெருக்கத்திற்கு எதிராக எழுந்த தடைகள். மதுவிலக்கு இல்லாத நிலையிலும் பனைமரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதியும் கிடையாது. எனவே பனை மரங்களை வளர்க்க விரும்புவர்களும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் புதிய பனைமரங்கள் வளருவதற்கு தற்போதைய சூழல் மிகக் குறைவே.

பனைமரம் தென்னையைப் போன்று விரைவாகவும் வளருவதில்லை, ஒரு பனை மரம் வளர்ந்து பலன் கொடுக்க (கள் மற்றும் நுங்கு) குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும், அதுவரையில் அதன் மட்டைகளை வெட்டிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பனை மட்டைகளில் வீடு கட்டுபவர்கள் மிகக் குறைவு. கிராமங்களில் மாட்டுக் கொட்டைகைகளை (குடில்) கட்டுவதற்கு பனை மட்டைகளை பயன்படுத்தி வந்தனர். கிராமங்களில் மாடுகளே குறைந்துவிட்ட பிறகு மாட்டுக் கொட்டைகைகள் தேடித்தான் பார்க்க வேண்டும். பனைமரங்களின் தற்போதைய பயனுக்கான தேவை முற்றிலும் குறைந்துவிட்டது அல்லது மிக மிகக் குறைவு என்றே சொல்லாலாம். பனைவெல்லத்தில் மருத்துவ பயன்கள் கரும்பு வெல்லத்தைவிட மிகுதியாக இருக்கின்றன என்றாலும் அதனை நாடுபவர்கள் குறைவே. மிகுதியாக நார்சத்து உள்ள பனங்கிழங்கை விரும்பி உண்ணுபவர்களும் குறைவு. எப்படிப் பார்த்தாலும் பழந்தமிழர் வாழ்வில் ஒன்றாக இருந்த பனைமரம் தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

பனைமரத்தை வைத்து குலம் சார்ந்த தொழிலாக பனைத் தொழில் செய்து வந்த சான்றோர் (நாடார்) சமூகம் முற்றிலும் அந்த தொழிலை தொடர்ந்து செய்து வர இயலாத (குறிப்பாக கள் இறக்கத் தடை ஆகிய ) நிலையில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர், என்பதால் குலவழியாக பனைகளை காத்துவருவதும் முற்றிலும் குறைந்துவிட்டது.

வேறெந்த மரங்களைவிட தமிழர்களோடும், தமிழோடும் நெருங்கி இருந்த பனைமரங்கள் அடுத்த நூற்றாண்டில் ஒன்றிடண்டாவது நிற்குமா என்பதும் ஐயமே. பராமரிப்பில் கவனித்து வரவேண்டிய முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது போல் நாம் பராமரிக்க வேண்டிய நம் பழந்தமிழ் வாழ்வியல் சின்னமான பனைமரங்களும் புறக்கணிக்கப்பட்டே இருந்துவருகிறது. ஆனால் பனைமரம் பயன்கருதி பராமரிக்காவிடிலும் அவை இதுவரை தந்தப் பயனுக்காக ஊருக்கு 100 மரங்கள் வரை பாதுகாப்பது தமிழர்கள் கடமையாகவே நினைக்கிறேன். பனைமரம் மற்ற மரங்களைப் போன்ற மரம் என்றாலும் அவை பாதுக்காக்க வேண்டிய தமிழர் சின்னங்களில் ஒன்று என்பதை நாம் மறக்கலாது.

பனை பற்றிய தகவல்கள் அடங்கிய மற்றொரு பதிவு இங்கே (வி. ஜெ. சந்திரன்)

22 கருத்துகள்:

விஜய் சொன்னது…

இவை மட்டுமல்ல பனை மரங்கள் மழை தருவிக்கும் குடைகளாக இருக்கின்றது.

இயற்கையின் கொடையை அழிக்க அழிக்க துயர் தான்

விஜய்

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{உலகெங்கிலும் இல்லாத ஒரு நடைமுறையாக இலக்கிய தரம் அறிய நம்மவர்கள் வைத்த சோதனைகள் மிகுதி. ஒரு நூல் நல்ல நூலா இல்லையா என்பதை அறிய அதை ஆற்றில் வீசியும், நெருப்பில் இட்டும் நிறைய சோதனைகள் செய்திருக்கிறார்கள். அதை மூட நம்பிக்கை என்பதைவிட உண்மை, நேர்மை ஆகியவற்றிற்கு கொடுத்த முதன்மைத்துவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு அரச சபையில் வெளி இடப்படும் நூல் கற்றோர்களால் சோதிக்கப்பட்ட பிறகு அது மக்களுக்கு பயன்படுமா என்பதை அறிய ஆற்றில் வீசப்படுமாம், ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லாவிடில் நல்ல நூல் என்பதாக அதை அறிமுகப்படுத்துவார்கள்,}

கண்ணன்,
சம்பந்தரின் திருமுறை தவிர வேறு எந்த தமிழின் இலக்கிய அரங்கேற்றத்திற்கு இந்தவித சோதனைகள் செய்யப்பட்டன என்று சொல்ல முடியுமா?

சம்பந்தர் வரலாறு ஒரு அரிதினும் அரிய காலகட்டத்தில் நிகழ்ந்தது.

அம்முறையைப் பொதுமைப்படுத்துவதன் மூலம் கற்றறிந்த அறிஞர்கள் சபையிலும் தமிழ்ச் சங்கங்கள் மூலம் நிகழ்ந்த எண்ணற்ற அரங்கேற்றங்களை மறுத்து,ஒரு மோடி மஸ்தான் காட்சி நிலைக்கு எல்லா தமிழ் நூல்களின் அரங்கேற்றத்தையும் சுருக்கவது சரியா??

{சமண நூல்கள் எண்ணாயிரம் ஒருமுறை இலக்கிய தரச் சோதனைக்காக அவற்றில் எண்ணாயிரம் ஆற்றில் வீசப்படம் அவற்றில் அடித்துக் கொண்டு செல்லாமல் மிதந்தவை வெறும் நானுறு, அவற்றை எடுத்து வந்து 'நன்னூல்' என்னும் தொகுதியாக வெளி இட்டதாக இலக்கிய குறிப்புகள் உண்டு}

பவணந்தி முனிவர் ஒரு சைனர்,சமணர் அல்ல.

போகிற போக்கில் இவ்வாறான தவறான தகவல்களை அளிக்காதீர்கள்,ப்ளீஸ்..

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்ணன்,
சம்பந்தரின் திருமுறை தவிர வேறு எந்த தமிழின் இலக்கிய அரங்கேற்றத்திற்கு இந்தவித சோதனைகள் செய்யப்பட்டன என்று சொல்ல முடியுமா?//

அறிவன் சார்,

நான் ஊகமாக எதையும் எழுதுவதில்லை, 'பனையண்ணன் - ஆசிரியர் புலவர் ஆர்.எஸ்.ஜேக்கப்' என்பரது நூலில் இருந்த தகவலைத்தான் எடுத்து எழுதினேன். இடுகை பக்க அளவை கருத்தில் கொண்டு முழுத்தகவலையும் எழுதவில்லை. பக்கம் எண் 93ல் அந்த தகவல் அடங்கி இருக்கிறது. நூலகத்தில் அந்நூல் கிடைக்கும்.

நூலில் குறிப்பிட்ட பட்டிருக்கும் அந்த சோதனையை பாண்டிய மன்னன் உக்கிரபெருவழுதி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. நூலாக எழுதியவர் பொறுப்பின்றி தகவலை அதில் சேர்த்திருக்க மாட்டார் என்பதால் அந்த தகவலை எடுத்து எழுதினேன்.

மேலும் அவ்வாறு குறிப்பிட்ட நன்னூல் சோதனை சைவ - சமண சண்டை சார்பில் நடந்ததாக நான் சுட்டிக்காட்டவும் இல்லை.

தமிழ் சொன்னது…

அருமையான தகவல்

எத்தனை பேருக்குத் தெரியும்

பத்திரம்,பத்திரிக்கை என்னும் சொற்க‌ளுக்கு மூல‌ம் பனையோலைப் பட்டை என்ப‌து

சிங்கக்குட்டி சொன்னது…

வாவ் அருமை கோவி.கண்ணன்

உண்மையில் இது நீங்கள்தானா ?

//அதை மூட நம்பிக்கை என்பதைவிட உண்மை, நேர்மை ஆகியவற்றிற்கு கொடுத்த முதன்மைத்துவமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.//

சிங்கையில் மழை பொழிகிறதா இன்று! :-)

மிக அருமையான பதிவு.

நிகழ்காலத்தில்... சொன்னது…

பொங்கல் திருநாள் வரும் சமயத்தில் பொருத்தமான இடுகையாகவே அமைந்துவிட்டது கோவியாரே

நல்ல மனதை தொடும் வண்ணம் அமைந்திருக்கிறது

வாழ்த்துகள்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

பனையால் நீங்க ஆற்றிய வினை..திணையாக இருந்தது..

வேடிக்கை மனிதன் சொன்னது…

பனை பற்றி நல்லதொரு பதிவு, நிறைய புதிய தகவல்கள் அறியப்பெற்றேன்.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அண்ணா

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கட்டுரை, நல்ல கருத்துக்கள். ஒரு இடத்தில் சாதங்கள் எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். அது சாதகங்களா என சரி பார்க்கவும். (எனக்குப் புரியவில்லை).

பனங்கருப்பட்டி உடலுக்கு வலுவும், முறுக்கும் தரும் இனிமையான இனிப்பு ஆகும். பனங்கற்கண்டு பால் மிகவும் நல்லது. பனைஓலை விசிறி குளுமையான காற்று தரும்.

இது எல்லாம் வீட நாங்கள் சின்ன வயதில் ஓட்டிய நெங்கு வண்டி, உங்களின் நெங்குப் படம் பார்த்ததும் ஞாபகம் வந்துவிட்டது. மிக்க நன்றி.

Radhakrishnan சொன்னது…

பனை பற்றிய பல விபரங்கள் அறிந்தேன்.

பனை மரத்துக்கு கீழே பால் குடித்தால் கூட அது கள் எனும் பழமொழியும் உண்டு அல்லவா.

சி தயாளன் சொன்னது…

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இயற்கை வளங்களில் பனையும் அடங்கும்..A9 பாதையால் போகும் போது செல்லடியால் துண்டாடப்பட்ட பனைகளை காணலாம்...

பனை வளர்ப்பை ஊக்குவிக்கும் செயல்திட்டம் யாழில் 90 களில் இருந்தது...இப்பவும் இருக்கா என தெரியவில்லை...

கோவி.கண்ணன் சொன்னது…

/வெ.இராதாகிருஷ்ணன் said...
பனை பற்றிய பல விபரங்கள் அறிந்தேன்.

பனை மரத்துக்கு கீழே பால் குடித்தால் கூட அது கள் எனும் பழமொழியும் உண்டு அல்லவா.
//

:)

மாட்டுக்கு கொட்டகையில் நின்று கள் குடித்தால் அதைப் பால் என்று சொன்னால் பனை மரம் கள் பழமொழியும் சரி என்று சொல்லலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

/ பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை, நல்ல கருத்துக்கள். ஒரு இடத்தில் சாதங்கள் எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். அது சாதகங்களா என சரி பார்க்கவும். (எனக்குப் புரியவில்லை).//

சாதகம் தான், தட்டச்சுப் பிழை ஏற்பட்டு இருந்தது !

//பனங்கருப்பட்டி உடலுக்கு வலுவும், முறுக்கும் தரும் இனிமையான இனிப்பு ஆகும். பனங்கற்கண்டு பால் மிகவும் நல்லது. பனைஓலை விசிறி குளுமையான காற்று தரும். //

:) உண்மை தான்

//இது எல்லாம் வீட நாங்கள் சின்ன வயதில் ஓட்டிய நெங்கு வண்டி, உங்களின் நெங்குப் படம் பார்த்ததும் ஞாபகம் வந்துவிட்டது. மிக்க நன்றி.
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இயற்கை வளங்களில் பனையும் அடங்கும்..A9 பாதையால் போகும் போது செல்லடியால் துண்டாடப்பட்ட பனைகளை காணலாம்...

பனை வளர்ப்பை ஊக்குவிக்கும் செயல்திட்டம் யாழில் 90 களில் இருந்தது...இப்பவும் இருக்கா என தெரியவில்லை...
//

இந்த இடுகை எழுதும் போது இலங்கை / ஈழப் போர்களின் போது பனை மரத்தின் மீது விழும் பீரங்கி குண்டுகளும், மரங்கள் அப்படியே சாய்வதும் கூட நினைவு வந்தது தம்பி.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் said...
இவை மட்டுமல்ல பனை மரங்கள் மழை தருவிக்கும் குடைகளாக இருக்கின்றது.//

உண்மை தான்.

//இயற்கையின் கொடையை அழிக்க அழிக்க துயர் தான்

விஜய்
//

பின்னூட்டத்திற்கு நன்றி சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ் said...
அருமையான தகவல்

எத்தனை பேருக்குத் தெரியும்

பத்திரம்,பத்திரிக்கை என்னும் சொற்க‌ளுக்கு மூல‌ம் பனையோலைப் பட்டை என்ப‌து
//

பாராட்டுக்கு நன்றி திகழ்

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கக்குட்டி said...
வாவ் அருமை கோவி.கண்ணன்

உண்மையில் இது நீங்கள்தானா ?//

கோவியாருக்கு ஆன்மிகம் எதிரி இல்லை, மதவாதம் தான் எதிரி

//அதை மூட நம்பிக்கை என்பதைவிட உண்மை, நேர்மை ஆகியவற்றிற்கு கொடுத்த முதன்மைத்துவமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.//

மிக அருமையான பதிவு.
//

நன்றி சிங்கக்குட்டி

கோவி.கண்ணன் சொன்னது…

// நிகழ்காலத்தில்... said...
பொங்கல் திருநாள் வரும் சமயத்தில் பொருத்தமான இடுகையாகவே அமைந்துவிட்டது கோவியாரே

நல்ல மனதை தொடும் வண்ணம் அமைந்திருக்கிறது

வாழ்த்துகள்

9:59 PM, January 11, 2010
//

பொங்கலுக்கு பனை மரத்திற்கும் தொடர்பு இருக்கிறதான்னு தெரியலை, ஆனால் கார்த்திகையின் போது பனம் பூவை நெருப்பில் இட்டு கரியாக்கி அதை தூளாக்கி துணியில் சுற்றிக் கட்டி கவட்டையில் வைத்தி நெருப்பு பற்றவைத்து இரவில் சுற்றுவோம். நம்மைச் சுற்றி நெருப்பு பொறி வளைங்கள் ஏற்படும், சிறப்பான காட்சியாக அமையும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
பனையால் நீங்க ஆற்றிய வினை..திணையாக இருந்தது..
//

நன்றி ஸ்வாமி ஓம்கார்

கோவி.கண்ணன் சொன்னது…

// வேடிக்கை மனிதன் said...
பனை பற்றி நல்லதொரு பதிவு, நிறைய புதிய தகவல்கள் அறியப்பெற்றேன்.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அண்ணா
//

நன்றி சரவணன்

Banukumar சொன்னது…

//சமண நூல்கள் எண்ணாயிரம் ஒருமுறை இலக்கிய தரச் சோதனைக்காக அவற்றில் எண்ணாயிரம் ஆற்றில் வீசப்படம் அவற்றில் அடித்துக் கொண்டு செல்லாமல் மிதந்தவை வெறும் நானுறு, அவற்றை எடுத்து வந்து 'நன்னூல்' என்னும் தொகுதியாக வெளி இட்டதாக இலக்கிய குறிப்புகள் உண்டு//

தவறான தகவல்! அப்படித் தொகுக்கப்பட்ட நூல் “நாலடியார்” ஆகும். எண்ணாயிரம் சமண முனிவர்கள் பாண்டிய நாட்டை விட்டு அகன்றதை தாளாமல் பாண்டிய மன்னனால் ஆற்றில் வீசியேறியப்பட்ட எண்ணாயிரம் ஓலைசுவடிகளில் கிடைத்த நானூற்று சுவடிகளைத் தொகுத்து “நாலடி நானூறு” என்று அழைக்கப்பட்டது!

இரா.பானுகுமார்

Banukumar சொன்னது…

//பவணந்தி முனிவர் ஒரு சைனர்,சமணர் அல்ல//

அறிவன் ஐயா! விளக்க முடியுமா?


இரா.பானுகுமார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்