பின்பற்றுபவர்கள்

10 ஆகஸ்ட், 2008

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?

இந்த தலைப்பில் ஒரு பதிவைப் பார்த்து அதிர்ச்சயடைந்தேன், அதில் பெரியாருக்கு மாலை போடுவது ஏன் என்ற கேள்வியெல்லாம் எழுப்பி இருக்கிறார்கள். பெரியார் வாழ்ந்து மறைந்தவர், மாலை மரியாதை செய்வதற்கும் கடவுள் வணக்கத்திற்கு என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. மாலை மரியாதை செய்வது ஒரு வழக்கம். என்னைக் கேட்டால் பெரியாருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம். ஆனால் அது அவரது கொள்கைக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு பெரியார் என்றுமே தந்தைப் பெரியார் தான். மாதா பிதா குரு தெய்வம் என்கிற வரிசையில் தந்தையாக பெருவாரியான தமிழர்களால் போற்றப்படும் படும் பெரியார் இரண்டாவதாக இருக்கிறார். நான்காவது நிலையில் தான் கடவுளே, ஏனென்றால் அந்த கடவுளையும் கும்பிட அடைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட கோவில் கதவுகளைத் திறந்து விட்டவர் பெரியாரே. திருவரங்கம் அரங்கனை காணச் செல்பவர்கள், அதற்கும் முன்பு பெரியார் சிலையை கண்டு உள்ளே செல்வதற்கு போராடி வாய்பளித்த பெரியாருக்கு நன்றி செலுத்திவிட்டுதான் செல்கிறார்கள். அவர் வழிவந்தவரே மானமிகு வீரமணி ஐயா. வீரமணி ஐயாவைப் பற்றிய தனிப்பட்ட விமரசனங்களை அதாவது சொத்து சேர்த்தார் என்றெல்லாம் சொல்லப்படுபவற்றை விடுகிறேன், மனிதர்கள் ஒவ்வொருவரும் பாசம், பணம், புகழ் எதோ ஒன்றில் அல்லது மூன்றிலுமே பலவீனமானவர்கள் தான். ஆனால் கொள்கையளவில் இன்றும் அவரும் சரி, கலைஞரும் சரி சமரசம் செய்து கொண்டது கிடையாது.

வீரமணி ஐயாவுக்கு விவாதத்துக்கு வர அரைகூவல் விடுத்து அவரை அழைப்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் சற்றேனும் சிந்திக்க வேண்டும். பிராட்டஸ்டாண்ட் கிறித்துவர்களின் 'ஏசு அழைக்கிறார்' என்ற துண்டு சீட்டை (பிட் நோட்டிசை) வாங்கிப் படித்து முகம் சுளிக்காமல் செல்லும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா ? இந்துக்கள் இருக்கிறார்களா ? ஏன் கத்தோலிக்க கிறித்துவர்கள் இருக்கிறார்களா ? பிராட்டஸ் ஸ்டாண்ட் கிறித்துவர்கள் பகுத்தறிவு வாதிகளா ? பின்பு ஏன் அவர்களைப் பார்த்து ஒதுங்கியும் சில சமயும் முறைத்துவிட்டும் செல்கிறீர்கள்.

ஈராக் போரின் போது அந்தர்யாமி என்கிற வடநாட்டு ஊழியர் ஒருவரை அல்லாவின் பெயரைச் சொல்லி கழுத்தை அறுத்ததை அல்ஜெசீராவில் காட்டினார்கள், ஆப்கானில் முகத்தை மறைத்தே இஸ்லாமிய பெண்ணை பொது இடத்தில் சுட்டுக் கொன்றதையெல்லாம் காட்டினார்கள், இதையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்கிறான். அய்யோ அய்யோ என்று அலறி மகன்களுடம் மடிந்து துடித்த ஆஸ்திரேலிய பாதிரியாரை எந்த பகுத்தறிவாளன் கொன்றான். ஐயோகோ......கற்பினிப்பெண்களின் வயிற்றைக் கீறி குழந்தையை எடுத்து வெளியில் வீசிய குஜராத் நிகழ்வு போன்ற படுபாதக செயல்களையெல்லாம் எந்த பகுத்தறிவாளன் செய்தான் ? அன்றாடம் செய்தியாக எங்கோ ஒரு ஊரில் பிள்ளை வரம் தருவதாக பெண்களின் வன்புணர்ச்சி செய்வதை எந்த பகுத்தறிவாளன் செய்கிறான் ?

மாதாவின் கண்ணில் ரத்தம் வழிகிறதாம் ! எத்தனை மாற்றுமத நம்பிக்கையாளார்கள் அது உண்மையாக இருக்கும் என்று சொன்னார்கள். பிள்ளையார் பால் குடித்ததை பகுத்தறிவாளன் மட்டும் தான் கேலி செய்தானா ? சிலை வணக்கத்தை பகுத்தறிவாளன் மட்டும் தான் அபத்தம் என்று மறுக்கிறானா ? நாட்டார் தெய்வங்கள் எனப்படும் கிராம தெய்வங்கள் இழிவு என்று ஊருக்கு வெளியே அவற்றை நிறுத்து காவலுக்கு மட்டுமே அவை உரியது என்று புறம் தள்ளுபவன் பகுத்தறிவாளனா ? இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம். அறிவியல் ஆன்மிகத்தை மெய்பிக்கிறதாம். தாரளமாக மெய்பிக்கட்டும். அப்படியென்றால் அடுத்து அவர்கள் கண்டுபிடிக்கும் முன் அவற்றையெல்லாம் வெளியிட்டு காப்புறிமை பெற்றுக் கொள்ளலாமே.

மதவாதிகளே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட நாகரீக வளர்ச்சியில், தன்னம்பிக்கையில் முன்னேறி இருக்கிறார்கள், தயவு செய்து அவர்களின் காலைப் பிடித்து கற்காலத்துக்கு இழுத்துச் செல்லாதீர்கள். இறைநம்பிக்கை என்பது என்றுமே நம்பிக்கைதான். உணர்வு பூர்வமானதும் கூட, அதற்கும் மேல் அதை மெய்பிக்க முடியாது. அதனால் தான் அவ்வப்போது புதிய கொள்கைகளுடன் புதிய மதங்கள் பிறக்கிறது. என்றோ அதையெல்லாம் மெய்பித்து இருந்தால் ஒரே மத்துடனே இறைநம்பிக்கை நின்றிருக்கும். பகுத்தறிவாளர்கள் தகர்க்க நினைப்பது இறை நம்பிகையல்ல, அதன் மூலம் பரப்படும் கட்டுக் கதைகளைத்தான். இவை இல்லாது இருந்தால் பகுத்தறிவாளர்களையே 'இறைவன்' படைத்திருக்கமாட்டான்.

நான் இங்கு சொல்லி இருப்பது எந்த மதத்திற்கும், அதன் அடிப்படைவாதிகளுக்கும் பொருந்தும் !

மதங்கள் கடவுளல்ல, மதங்கள் கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லைதான். அதில் கூறப்பட்டுள்ளதை மட்டுமே நம்பி அடுத்த மதத்ததைத் தூற்றுபவன் அந்த கடவுளை நம்பினாலும் அவன் காட்டுமிராண்டியே. உங்களுக்கு இருப்பது இறைநம்பிக்கையா ? கடவுள் நம்பிக்கையா ? அதில் தெளிவு இருந்தால் பகுத்தறிவாளர்களுடான உங்கள் விவாதம் தேவையற்றது !

போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கும் முன் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய மூன்று மதநம்பிக்கையாளர்களும் எந்தமதம் சிறந்தது ? எது அறிவியல் பூர்வமானது ? எது மூடநம்பிக்கையற்றது ? என்று தங்களுக்குள் விவாதித்துவிட்டு, அதில் வெற்றிபெற்றால் அடுத்து பொது எதிரியான(?) பகுத்தறிவாதிகளுடன் விவாதிக்களாம் !

கடவுள் தான் காப்பாறனும் !

ஒன்றே குலம் ! ஒருவனே இறைவன் !

40 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, நாந்தான் முதல்ல.

நீங்கள் எழுதியது முற்றிலும் சரி. மதம் என்ற பெயரில்தான் இன்று வன்முறைகள் நடக்கின்றதே தவிர, எந்த நாத்திகவாதியும் வன்முறைகளில் ஈடுபட்டதில்லை. இதே கருத்துக்களை என் கீழ்கண்ட பதிவில் தெரிவித்துள்ளேன்.
http://maraneri.blogspot.com/2008/01/blog-post_04.html

Kanchana Radhakrishnan சொன்னது…

முற்றிலும் சரி..பாராட்டுக்கள்

அது சரி சொன்னது…

கோவி, நீங்கள் சொல்வது மிகவும் சரி. 17,18 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த சிலுவை போர்களில் இருந்து, இன்றக்கு நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதம் வரை மதவாதிகளால், கடவுளை நம்புகிறவர்களால் தான் நடந்ததே ஒழிய, கடவுளை நம்பாதவர்க்ளால் நடத்தப்பட்டதில்லை.

கடவுளை நம்பாதவர்கள், தந்தை பெரியார் போல் பிரச்சாரம் செய்கிறார்களே தவிர (அதுவும் கூட, மத மாற்றம் செய்பவர்கள் அளவு அல்ல!), எவர் தலையையும் எந்த காலத்திலும் வெட்டியதில்லை. எந்த பெண்ணையும் வெட்டி கொன்றதில்லை.

கடவுள் பெயரை சொல்லி கற்பழித்ததில்லை.

கடவுளை நம்பாதவர்கள் அல்லது கடவுளை உதாசீனப்படுத்துவர்கள், அவர்கள் இருக்கும் நாடு வளம்பெறும் என்பதற்கு உதாரணம் அமெரிக்கா, பிரிட்டன், இப்பொழுது வேகமாக வளரும் சைனா.

கடவுளை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா.

இந்தியாவில் இன்னொரு பெரிய காமெடி இருக்கிறது. கடவுளை நம்புவதாக் சொல்லும் மக்கள் இருக்கும் இந்த நாட்டில் தான் லஞ்சம், ஊழல், பொது வாழ்க்கையில் மோசடி என்று பல அலங்கோலங்கள்.

எந்த அரசு அதிகாரி லஞ்சம் வாங்கமல் இருக்கிறான்?? ஆனால், அவன் வெள்ளி, செவ்வாய் தவறாமல் கோவிலுக்கு போவான்.

திருடர்களுக்கு மட்டுமே மற்றவர்களை ஏமாற்றி தொந்தி பெருக்க கடவுள் தேவை. பகுத்தறிவாளர்களை பொறுத்தவரை மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை!!!

Sivaram சொன்னது…

கடவுளை நம்பாதவர்களால் வந்ததைவிட, மத வெறி பிடித்தவர்களால் ஏற்பட்ட அழிவுகள், பாதகங்கள் ஏராளம் .. நல்ல பதிவு..
ஆனால் ,
//ஆனால் கொள்கையளவில் இன்றும் அவரும் சரி, கலைஞரும் சரி சமரசம் செய்து கொண்டது கிடையாது//
இதில் எனக்கு உடன்பாடு இல்லை..

கோவி.கண்ணன் சொன்னது…

//கடவுளை நம்பாதவர்கள் அல்லது கடவுளை உதாசீனப்படுத்துவர்கள், அவர்கள் இருக்கும் நாடு வளம்பெறும் என்பதற்கு உதாரணம் அமெரிக்கா, பிரிட்டன், இப்பொழுது வேகமாக வளரும் சைனா. //

இது மேம்போக்கான வாதம், திட்டமிட்டு செயலாற்றுவதால் மட்டுமே ஒரு நாடு மேன்மையடைய முடியும், இறை நம்பிக்கையின்மைக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

//கடவுளை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆஃப்கனிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா.//

நான் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவன் அல்ல, இறை நம்பிக்கைக் குறித்து குறைச் சொல்ல ஒன்றும் எல்லை.

ஆனால் மத அடிப்படைவாதம், மதவாதம் ஆகியவை மிக மிக ஆபத்தானவை. மதவாதிகள் அனைவருமே போலி ஆன்மிகவாதிகளே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...

//ஆனால் கொள்கையளவில் இன்றும் அவரும் சரி, கலைஞரும் சரி சமரசம் செய்து கொண்டது கிடையாது//
இதில் எனக்கு உடன்பாடு இல்லை..//

ஏன் உடன்பாடு இல்லை ?

வீரமணியும், கலைஞரும் எந்த மதத்து கடவுளை வழிபடுவதாகச் சொல்கிறார்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
முற்றிலும் சரி..பாராட்டுக்கள்

2:53 AM, August 10, 2008
//

kanchana Radhakrishnan ஐயா,

பெரியவங்க பாராட்டினால் அந்த பெருமாளே பாராட்டுவது போல !
மிக்க நன்றி !

Darren சொன்னது…

//கோவி.கண்ணன் said...
kanchana Radhakrishnan ஐயா,

பெரியவங்க பாராட்டினால் அந்த பெருமாளே பாராட்டுவது போல !
மிக்க நன்றி !//

Nice view but who is Perumal?

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
//கோவி.கண்ணன் said...
kanchana Radhakrishnan ஐயா,

பெரியவங்க பாராட்டினால் அந்த பெருமாளே பாராட்டுவது போல !
மிக்க நன்றி !//

Nice view but who is Perumal?

3:38 PM, August 10, 2008
//

பெரியார் என்பதற்கு பதில் பெருமாள் என்று எழுதிவிட்டேன். ஐ யம் வெர்ரி சாரி !
:)))))))))))

வசந்தத்தின் தூதுவன் சொன்னது…

தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறது மதவெறிக் கூட்டம். தந்தை பெரியாரின் தோளில் ஏறி மத மாற்றங்களை நிகழ்த்திவிட்டு இப்போது அவரின் முதுகில் குத்துகிறது இந்த மத வெறி பிடித்த கோடாரிக் காம்புகள். மூடத் தனத்திற்கும் பிற்போக்குத் தனத்திற்கும் பெரியாரைத் துணைக்கு அழைக்கின்றன. இந்து மத இழிபாடுகளில் இருந்து தப்ப இஸ்லாம் சரியான வழியல்ல என்பதை நிரூபிப்பது இவர்கள் செயல்பாடுகள்.
தந்தை பெரியார் வழியில் கடவுளை மறுப்போம், மதங்களை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்.

Sivaram சொன்னது…

கலைஞர் மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்ததை , கொள்கை சமரசம் என்றே நான் கருதுகிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
கலைஞர் மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்ததை , கொள்கை சமரசம் என்றே நான் கருதுகிறேன்..

5:10 PM, August 10, 2008
//

அது தேர்த்தல் கூட்டணிதான், அவர் இந்துத்துவாக்களுடன் சமரசம் செய்து கொண்டது கிடையது, சென்னைக்கு குடீநீர் கிடைக்க உதவுவதாகக் கூறிய சாயிபாபாவிற்கு பாராட்டுவிழா நடத்தினார் இதையெல்லாம் கொள்கை சமரசம் என்று சொல்ல முடியாது. பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது, நலத்திட்டங்கள் கிடைத்தது !

Darren சொன்னது…

கோவி.கண்ணன் said...
//Dharan said...
//கோவி.கண்ணன் said...
kanchana Radhakrishnan ஐயா,

பெரியவங்க பாராட்டினால் அந்த பெருமாளே பாராட்டுவது போல !
மிக்க நன்றி !//

Nice view but who is Perumal?

//3:38 PM, August 10, 2008
//

பெரியார் என்பதற்கு பதில் பெருமாள் என்று எழுதிவிட்டேன். ஐ யம் வெர்ரி சாரி !
:)))))))))))

3:44 PM, August 10, 2008//

Excellent timing. haha.

Kanchana Radhakrishnan சொன்னது…

சிறியோர் செய்த பிழை எல்லாம் பெரியோராயின் பொறுத்தல் கடனே...
:-)))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கருத்துக்கள் உரத்து,சுரத்து,நிறுத்து வழங்கியிருக்கிறீர்கள். எல்லோரும் வாழ்த்தையில் நான் மட்டும் வாழ்த்தாமல் இருக்க முடியுமா? முடியும்! ஆம் வயதில்லை வணங்குகிறேன்.

நிறுத்து என்றவுடன் ஞாபகத்துக்கு வருகிறது, கொள்கைத் தங்கங்களுக்குத் தங்கமாகவோ,வெள்ளியாகவோ அல்லது ரொக்கமாகவோ எடைக்கு எடை நிறுத்துக் கொடுக்கிறார்களே, அது இந்த பகுத்தறிவில் எந்த மூலை(ளை)யிலாவது வருகிறதா? தேவையா? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம்.

இட்டால் (எதை இட்டாலும்) பெற்றுக் கொள்பவன் முட்டாள் என்று சொன்னால் அது மிகையாகாது. அவனுக்கு பகுத்தறிவு எங்கு இருக்கப் போகிறது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொதிகைச் செல்வன் said...
தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறது மதவெறிக் கூட்டம். தந்தை பெரியாரின் தோளில் ஏறி மத மாற்றங்களை நிகழ்த்திவிட்டு இப்போது அவரின் முதுகில் குத்துகிறது இந்த மத வெறி பிடித்த கோடாரிக் காம்புகள். மூடத் தனத்திற்கும் பிற்போக்குத் தனத்திற்கும் பெரியாரைத் துணைக்கு அழைக்கின்றன. இந்து மத இழிபாடுகளில் இருந்து தப்ப இஸ்லாம் சரியான வழியல்ல என்பதை நிரூபிப்பது இவர்கள் செயல்பாடுகள்.
தந்தை பெரியார் வழியில் கடவுளை மறுப்போம், மதங்களை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்.
//

இதை மறுக்கிறேன். இந்துமதத்தில் இருக்கும் சாதிப்பாகுபாடுகள் இஸ்லாமில் இல்லை என்று தான் சொல்லி இருப்பார். இஸ்லாமில் இன உணர்வு இருக்கிறது அன்றாடம் பாகிஸ்தானில் மசூதிக்குள் குண்டு வெடிப்பதே அதற்கான சாட்சி. பெரியார் யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. அப்படி சொல்பவராயின் அவரே மாறி இருப்பார். பெரியார் மீது பழியைப் போடாதீர்கள் ! திராவிடக் கழகத்தில் எல்லா மதத்தினரையும் தான் குறை சொல்கிறார்கள். மற்ற மதங்களைச் சொல்லும் போது இறை நம்பிக்கையை குறைசொல்வதாக இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களைச் சொல்லும் போதுதான் இறைவ நம்பிக்கையை குறைச் சொல்வதாக காண்கிறார்கள்.

இந்துவெறி கும்பலும் அவ்வபோது திகவிடம் சவால் விட்டுதானே வருகிறது, எங்களைச் சொல்வது போல் சிறுபாண்மையினரான இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் ஏன் சொல்வதில்லை, அவர்கள் கொடுக்கும் பிரியாணிக்கு மயங்கிவிட்டீர்களா என்று.

மதங்களின் பெயரில் எல்லாமே இறை நம்பிக்கைதான், திராவிடக் கழகத்தினருக்கு எல்லா மதமும் ஒன்று போல் தான்.

மதமற்ற இறைவனை யாராவது காட்டினால் அவர்கள் ஏன் கேள்வி கேட்கப் போகிறார்கள்.

manikandan சொன்னது…

*********திருவரங்கம் அரங்கனை காணச் செல்பவர்கள், அதற்கும் முன்பு பெரியார் சிலையை கண்டு உள்ளே செல்வதற்கு போராடி வாய்பளித்த பெரியாருக்கு நன்றி செலுத்திவிட்டுதான் செல்கிறார்கள்*******

திருவரங்கம் வந்து இருக்கீங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//திருவரங்கம் வந்து இருக்கீங்களா ?

12:07 AM, August 12, 2008
//
சென்றிருக்கிறேன் !

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தொடர்ந்து இதுபொல பதிவை எதிர்பார்க்கும் ஆ.ஞானசெகரன்

manikandan சொன்னது…

திருவரங்கதுல நடக்கிற தி க கூட்டம் இதுக்கு முன்னாடி ராஜகோபுரத்துக்கு கீழ நடக்கும். கோவிலுக்கு போற மக்களை ஒவ்வொரு புதன் கிழமையும் (கிழமை சரியா ஞாபகம் இல்ல ) கேவலமா திட்டுவாங்க. பெரியார் சிலை வந்ததுக்கு அப்புறம் தி க கூட்டம் கொஞ்சம் தள்ளி போய்டுது. (பெரியார் சிலைக்கு பக்கத்துல )

ஒருவேள அதுக்காக பெரியார சேவிச்சுட்டு போறாங்களோ என்னவோ.

அது சரி, ஸ்ரீரங்கத்த சீரங்கம்ன்னு எழுதினா தப்பா ? அதுக்கு எதுக்கு மொழிபெயர்ப்பு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
திருவரங்கதுல நடக்கிற தி க கூட்டம் இதுக்கு முன்னாடி ராஜகோபுரத்துக்கு கீழ நடக்கும். கோவிலுக்கு போற மக்களை ஒவ்வொரு புதன் கிழமையும் (கிழமை சரியா ஞாபகம் இல்ல ) கேவலமா திட்டுவாங்க. பெரியார் சிலை வந்ததுக்கு அப்புறம் தி க கூட்டம் கொஞ்சம் தள்ளி போய்டுது. (பெரியார் சிலைக்கு பக்கத்துல )
ஒருவேள அதுக்காக பெரியார சேவிச்சுட்டு போறாங்களோ என்னவோ.
//

எப்படியோ உங்க பார்வையில் நல்லது தானே !


அது சரி, ஸ்ரீரங்கத்த சீரங்கம்ன்னு எழுதினா தப்பா ? அதுக்கு எதுக்கு மொழிபெயர்ப்பு ?
//

ஸ்ரீரங்கம், சீரங்கம், திருவரங்கம் எப்படி வேண்டுமானலும் எழுதுங்க தப்பே இல்லை, ஆனால் பெருமாளுக்கு தென்கலை(U) நாமம் போடாமால் வடகலை (V) நாமம் போடனும் அதை மட்டும் சரியா செய்யனும், இல்லாட்டி வெட்டு குத்தே விழுந்துடும். அதுதான் முக்கியம் !
:)

manikandan சொன்னது…

******எப்படியோ உங்க பார்வையில் நல்லது தானே*****

அமாம் நிச்சயமா. சாயங்காலம் மார்க்கெட் போறதுனா கூட அந்த கோபுரம் வழியா போனா தான் வசதி....ஏற்கனவே கோவிலுக்கு ஒரு பெரிய கூட்டம். இப்ப இவங்க கூட்டமாவது கொஞ்சம் தள்ளி போய் இருக்கு. நல்லது தான்.

*******ஸ்ரீரங்கம், சீரங்கம், திருவரங்கம் எப்படி வேண்டுமானலும் எழுதுங்க தப்பே இல்லை, ஆனால் பெருமாளுக்கு தென்கலை(U) நாமம் போடாமால் வடகலை (V) நாமம் போடனும் அதை மட்டும் சரியா செய்யனும், இல்லாட்டி வெட்டு குத்தே விழுந்துடும். அதுதான் முக்கியம் *****

உண்மை தான். இப்ப ரெண்டு நாமமும் போட்டு இருக்காங்க.

இல்ல நீங்க தமிழ் வார்த்தைகள அழகா உபயோகம் பண்ணி எழுதறீங்களேன்னு சொன்னேன் ! சொல்ல வந்த எனக்கு நீங்க நாமத்த போட்டுடீங்க.

சிவ சிவா !

வால்பையன் சொன்னது…

//இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் ஆகிய மூன்று மதநம்பிக்கையாளர்களும் எந்தமதம் சிறந்தது ? எது அறிவியல் பூர்வமானது ? எது மூடநம்பிக்கையற்றது ? என்று தங்களுக்குள் விவாதித்துவிட்டு, அதில் வெற்றிபெற்றால் அடுத்து பொது எதிரியான(?) பகுத்தறிவாதிகளுடன் விவாதிக்களாம் !//

அருமையான வரிகள்!

வால்பையன்

கோவி.கண்ணன் சொன்னது…

//...உண்மை தான். இப்ப ரெண்டு நாமமும் போட்டு இருக்காங்க. //

ஓ உண்மையிலேயே பெருமாளுக்கு இரண்டு நாமம் போட்டாச்சா !
:)

//இல்ல நீங்க தமிழ் வார்த்தைகள அழகா உபயோகம் பண்ணி எழுதறீங்களேன்னு சொன்னேன் ! சொல்ல வந்த எனக்கு நீங்க நாமத்த போட்டுடீங்க. சிவ சிவா !..
//

சின்ன திருத்தம், "நீங்க தமிழ் சொற்களை அழகாக பயன்படுத்துகிறீங்களேன்னு" சொல்லி இருந்தால் 'பண்ணி' இல்லாதிருந்திருக்கும் !
:)

நாராயணா நாராயணா !

manikandan சொன்னது…

//இல்ல நீங்க தமிழ் வார்த்தைகள அழகா உபயோகம் பண்ணி எழுதறீங்களேன்னு சொன்னேன் ! சொல்ல வந்த எனக்கு நீங்க நாமத்த போட்டுடீங்க. சிவ சிவா !..
//

(: சின்ன திருத்தம், "நீங்க தமிழ் சொற்களை அழகாக பயன்படுத்துகிறீங்களேன்னு" சொல்லி இருந்தால் 'பண்ணி' இல்லாதிருந்திருக்கும் !
:)

உபயோகம் கூட இல்லாம போயிருக்கும்.

Unknown சொன்னது…

கேள்வி கேட்பவனெல்லாம் புத்திசாலி இல்லை. அவனிடம் அவன் கொள்கை சார்ந்த கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லவும் தெரிய வேண்டும். இல்லையென்றால் அவன் கொள்கையில் அவனுக்கே உறுதி இல்லை என்றாகும்.

கடவுளை கண்ணில் காட்டினால்தான் நம்புவேன். அதுதான் அறிவியல் என்பவர்களிடம் அது அறிவியல் சார்ந்ததில்லை என்பதை விளக்க வேண்டி இருக்கிறது.

ஒருவரின் கொள்கையைப் பற்றி அது குறித்து விஷமத்தனமான கேலிக்கேள்வி கேட்பவரிடம் அவர் பாணியிலேயே பதில் சொன்னால், முதலில் அதை ஏற்கப் பழக வேண்டும். அல்லது தன் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

நல்ல வாய்ப்பு ஜி.கே. முஸ்லீம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய குறைகளை எடுத்துச் சொல்லி, தம் கொள்கையின் மேன்மையை பறை சாற்ற. இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததல்லவா?

கோவி.கண்ணன் சொன்னது…

// சுல்தான் said...
கேள்வி கேட்பவனெல்லாம் புத்திசாலி இல்லை. அவனிடம் அவன் கொள்கை சார்ந்த கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லவும் தெரிய வேண்டும். இல்லையென்றால் அவன் கொள்கையில் அவனுக்கே உறுதி இல்லை என்றாகும்.

கடவுளை கண்ணில் காட்டினால்தான் நம்புவேன். அதுதான் அறிவியல் என்பவர்களிடம் அது அறிவியல் சார்ந்ததில்லை என்பதை விளக்க வேண்டி இருக்கிறது.

ஒருவரின் கொள்கையைப் பற்றி அது குறித்து விஷமத்தனமான கேலிக்கேள்வி கேட்பவரிடம் அவர் பாணியிலேயே பதில் சொன்னால், முதலில் அதை ஏற்கப் பழக வேண்டும். அல்லது தன் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

நல்ல வாய்ப்பு ஜி.கே. முஸ்லீம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பற்றிய குறைகளை எடுத்துச் சொல்லி, தம் கொள்கையின் மேன்மையை பறை சாற்ற. இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததல்லவா?

8:07 PM, August 12, 2008

//

சுல்தான் ஐயா,

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !

கடவுளை கண்ணில் காட்டினால்தான் நம்புவேன் -------> இதுபற்றி சற்று விரிவாகவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன். அதிலிருந்து ஒரு பத்தி

கண்மூடித்தனமான இறைநம்பிக்கைக் குறித்த எதிர்ப்புகள் எனக்கும் வியப்பையே அளிக்கிறது. 'கண்ணால் காணமுடியாது ஒன்று இருக்கவே முடியாது என்றும், அப்படி ஒருவேளை இருந்தால் பல கோரத்தீவிபத்துக்கள், சுனாமி போன்றவற்றின் போது மக்கள் மடியும் போது உங்கள் கடவுள் எங்கே போனார்கள் என்று கேட்பார்கள். புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பக்கூடாது என்பதே இவர்களது கோட்பாடு, அதைச் சார்ந்தே இவர்களது இறை நம்பிக்கையின்மையும் இருக்கும். நமக்கு புலனாகாத எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது, வவ்வாலுக்கு கேட்கும் அல்ட்ரா சவுண்ட் நமக்கு கேட்கவில்லை என்பதால் அவை இல்லை என்று சொல்லிவிட முடியுமா ? மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கும் போது கழுகுக் கண்களுக்கு தெரியும் இறந்து மிதக்கும் மீன், நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா ? இறைநம்பிக்கை அற்றவர்கள் இறைவன் இல்லை என்று அறுதியிட்டுக் கூற எவ்வித முயற்சியுமே எடுக்காமல் வெறும் புலன்கள் காட்டும் தகவலே உண்மை என்று நம்புபவர்கள் தாம்.

*******

மதத்தின் நம்பிக்கைகள் அந்தந்த மதத்தில் இருப்பவர்களுக்கு உயர்வாக தெரியலாம். ஆனால் அதை பொதுவில் வைத்து இதுவே சிறந்தது என்று சொல்லும் போது மூன்றாம் நபர்கள் அது குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க மாட்டார்கள். ஒரு குழுவாக இருந்து கொண்டு 'நம்' மதமே சிறந்தது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டால் யாருக்கும் எந்த குடைச்சலும் இல்லை. நமக்குள்ளே பேசிக் கொண்டிருக்கும் போது அதில் மூன்றாம் மனிதரின் தேவையற்ற நுழைவாக இருந்தால் அதுவும் கண்டிக்கத்தக்கது தானே ! அதைவிட்டு அதே குழு வெளியில் உள்ளோர்களிடம் 'எங்கள்' மதமே சிறந்தது என்று மார்த்தட்டினால் அது குறித்து கேள்வி வரவே செய்யும். இதில் யாரும் வருத்தப்பட ஒன்னும் இல்லை. ஒன்றை பொதுப்படுத்தி வலியுறுத்தாத வரை எல்லோருக்கும் அவரவர் கொள்கையே அவரவர்க்கு சிறந்தது.

தமிழ் ஓவியா சொன்னது…

இது தொடர்பான கருத்துக்களை அறிய
www.thamizhoviya.blogspot.com வலைப்பதிவை பார்க்கவும்.
மிக்க நன்றி.

வசந்தத்தின் தூதுவன் சொன்னது…

இந்து மதத்தில் நிலவி வரும் சாதிக் கொடுமைகள் மட்டுமே இஸ்லாமில் இல்லை எனச் சொல்லப் படுகிறது.(???) அது தவிர்த்து மற்ற மூட நம்பிக்கைகளை பொறுத்தவரையில் இவர்களுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல.
திராவிட இயக்கத் தலைவர்கள் இவர்களின் மூட நம்பிக்கைகளை பற்றிப் பேச பயப்படுகின்றனர். ஒட்டு வங்கியின் காரணமாக.

//மற்ற மதங்களைச் சொல்லும் போது இறை நம்பிக்கையை குறைசொல்வதாக இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களைச் சொல்லும் போதுதான் இறைவ நம்பிக்கையை குறைச் சொல்வதாக காண்கிறார்கள்//

நூற்றுக்கு நூறு உண்மை.

// திராவிடக் கழகத்தினருக்கு எல்லா மதமும் ஒன்று போல் தான்.//

இருந்தால் நல்லாதான் இருக்கும்.

//சிறுபாண்மையினரான இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் ஏன் சொல்வதில்லை, அவர்கள் கொடுக்கும் பிரியாணிக்கு மயங்கிவிட்டீர்களா என்று.//

பிரியாணிக்கு அல்ல. ஓட்டுக்காக.

Unknown சொன்னது…

//கண்மூடித்தனமான இறைநம்பிக்கைக் குறித்த எதிர்ப்புகள் எனக்கும் வியப்பையே அளிக்கிறது. 'கண்ணால் காணமுடியாது ஒன்று இருக்கவே முடியாது என்றும், ... ... ... ... நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா ? இறைநம்பிக்கை அற்றவர்கள் இறைவன் இல்லை என்று அறுதியிட்டுக் கூற எவ்வித முயற்சியுமே எடுக்காமல் வெறும் புலன்கள் காட்டும் தகவலே உண்மை என்று நம்புபவர்கள் தாம்.//

இதை வெகு சிறப்பாக எழுதி இருக்கின்றீர்கள் ஜி.கே..

//மதத்தின் நம்பிக்கைகள் அந்தந்த மதத்தில் இருப்பவர்களுக்கு உயர்வாக தெரியலாம். ... ... ... ... ஒன்றை பொதுப்படுத்தி வலியுறுத்தாத வரை எல்லோருக்கும் அவரவர் கொள்கையே அவரவர்க்கு சிறந்தது.//

சிறந்த கொள்கையையுடையவன் அதை தான் மட்டும் சார்ந்திராமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுதலே அழகு. பெரியார் தன் கொள்கைகளை பரப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நாமெல்லாம் தமிழகத்தில் அடிமைகளாய் அல்லல் பட நேர்ந்திருக்கலாம். மற்றதை விட சிறந்தது என்றதால்தானே பெரியார் அதை எடுத்துச் சொல்லி மனிதனை சிந்திக்கச் சொன்னார்.

இஸ்லாத்தை மதம் என்று பார்ப்பதை விடுத்து எங்கள் கொள்கையெனப் பாருங்கள். மூன்றாம் நபர்கள் இக்கொள்கை குறித்து கேள்வி எழுப்பி பதிலைப் பேற வேண்டும். கேள்வி பிறக்குமிடத்தில்தான் உண்மை வெளிவரும்.

கொள்கை சிறந்ததுதானென்றால், அதை உளமாற நான் நம்பினால், மூன்றாம் மனிதரின் நுழைவை தேவையற்றதாக நான் கருத மாட்டேன். அவரும் நன்மைகளைப் பெற வேண்டும் அதன் மூலம் சமுதாயம் நன்மை பெற வேண்டும் என்பது தான் நல்லவர்களின் விருப்பமாக முடியும்.

அவரவர் கொள்கை அவரவர்ககு சிறந்தது என்பது சமுதாயப் பார்வையாகாகது ஜி.கே. அவ்வாறு நினைத்தால் புத்தரும், பெரியாரும் அவசியமில்லையல்லவா?

கயல்விழி சொன்னது…

இந்த கட்டுரையை பதித்ததற்கு மிக்க நன்றி. அருமையான கருத்துக்கள்!

ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவரும் மாற்று மதத்தை கேலி செய்யும் போது ஆர்வத்தோடு கவனிக்கிறார்கள், மாற்று மத மூட நம்பிக்கைகளை கேலி செய்கிறார்கள். அதுவே தங்களுடைய மதம் விமர்சனம் செய்யப்பட்டால் ரொம்ப கோபம் வரும்.

உண்மையில் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகளும், தேவையற்ற சடங்குகளும் இருக்கிறது. இருந்தும், அவரவர் மதத்தில் இருக்கும் குறைகள் அவரவருக்கு எப்படியோ தெரியாமல் போவது வியப்பாக இருக்கிறது.

ஒரு கருத்தில் முழுவதுமாக உடன்படுகிறேன். "இங்கே ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் மதவாதிகளே"- இல்லை என்றால் கிறித்துவ வலைப்பதிவாளர் இஸ்லாமை விமர்சிக்க மாட்டார், இஸ்லாமிய வலைப்பதிவாளர் கிறித்துவமதத்தை விமர்சிக்க மாட்டார், இந்து ஆதரவாளர் மற்ற இரண்டு மதங்களையும் விமர்சிக்க மாட்டார்கள். நான் படித்த வரைக்கும் மேற்கூறிய அனைத்துமே நடக்கிறது.

suvanappiriyan சொன்னது…

கோவிக் கண்ணன்!

அழகிய பதிவைக் கொடுத்துள்ளீர்கள். இஸ்லாத்தை விமரிசிப்பதை இங்கு யாரும் குறை காணவில்லை. விமர்சனங்கள் வந்தால்தானே விளக்கம் பிறக்கும். ஒருவரை விவாதத்துக்கு அழைத்தால் மற்றவர்களிடம் வென்று விட்டு என்னிடம் வா என்று சொல்வது எந்த அளவு நியாயமான வாதம் என்று எனக்கு புரியவில்லை. ஏனெனில் பிரச்னையை ஆரம்பித்து வைத்தது உண்மை ஏடு. முடித்து வைப்பதும் அந்த உண்மை ஏட்டின் கையிலேயே உள்ளது. பார்ப்போம் வீரமணி என்ன பதில் தருகிறார் என்று.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் has left a new comment on your post "போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?":

இதை வெகு சிறப்பாக எழுதி இருக்கின்றீர்கள் ஜி.கே..//

சுல்தான் ஐயா,

மிக்க நன்றி !

//சிறந்த கொள்கையையுடையவன் அதை தான் மட்டும் சார்ந்திராமல் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுதலே அழகு. பெரியார் தன் கொள்கைகளை பரப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நாமெல்லாம் தமிழகத்தில் அடிமைகளாய் அல்லல் பட நேர்ந்திருக்கலாம். மற்றதை விட சிறந்தது என்றதால்தானே பெரியார் அதை எடுத்துச் சொல்லி மனிதனை சிந்திக்கச் சொன்னார்.//

சிறந்த கொள்கை என்று யார் சொல்லுவார்கள் ? நம்மைப் பற்றி விமர்சனம் வராதவரை நமக்கு அது சிறந்த கொள்கையாகத்தான் தெரியும். பெரியார் கொள்கை சிறந்தது என்று சொன்னாலும் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடப்பவர்கள் பெரியார் தொண்டர்கள் மட்டுமே. பெரியார் கொள்கைகள் விழிப்புணர்வை முன்னிறுத்தியே நடந்தது, அதையும் மதப்பிரச்சாரங்களையும் ஒரே பார்வையில் என்னால் பார்க்கமுடியவில்லை. பெரியாரின் கொள்கைகள் சிந்தனையைத் தூண்டுபவை. மதக் கொள்கைகளில் கேள்விகளுக்கு இடமில்லை, அந்த மதத்தைச் சேர்ந்தவர் தமக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றைப் பற்றி வேண்டுமானால் சந்தேகம் தீர்த்துக் கொள்ளலாம், அதற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் அது தவறு புறக்கணிக்க முடியாது, மத கொள்கைகளில் அதற்கு இடமில்லை. ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

//இஸ்லாத்தை மதம் என்று பார்ப்பதை விடுத்து எங்கள் கொள்கையெனப் பாருங்கள். மூன்றாம் நபர்கள் இக்கொள்கை குறித்து கேள்வி எழுப்பி பதிலைப் பேற வேண்டும். கேள்வி பிறக்குமிடத்தில்தான் உண்மை வெளிவரும்.//

அண்மையில் இந்துத்துவாக்களின் விளம்பரங்களில் கூட 'இந்து நம்பிக்கை மதமல்ல, வாழ்வின் வழி' என்று சொன்னார்கள். :) எல்லா மதத்தினருக்கும் அதே போன்ற நம்பிக்கைதான் இருக்கும், அவர்கள் அதே மதத்தில் இருப்பதற்கும், பிற மதங்களை விமர்சித்து தூற்றுவதற்கும், 'மதமல்ல..மார்க்கம்' என்று சொல்ல வேண்டிய தேவை எல்லா மதத்தினருக்கும் இருக்கிறது. கேள்வி எழுப்பினால் உண்மைகள் வரும் என்பது போலவே கேள்வி எழுப்பினால் உண்மைகள் பற்றிய கேள்விக் குறியே வரும் என்பதை ஒப்புக் கொள்கீறீர்களா, உண்மைக்கள் பற்றி கேள்விக் குறி வரக் கூடாது என்பது தானே மதநம்பிக்கையாளர்களின் நாடியாக இருக்கிறது.

//கொள்கை சிறந்ததுதானென்றால், அதை உளமாற நான் நம்பினால், மூன்றாம் மனிதரின் நுழைவை தேவையற்றதாக நான் கருத மாட்டேன். அவரும் நன்மைகளைப் பெற வேண்டும் அதன் மூலம் சமுதாயம் நன்மை பெற வேண்டும் என்பது தான் நல்லவர்களின் விருப்பமாக முடியும்.//

நல்லது நடக்கவேண்டும் என்று பலதரப்பிலும் சிந்திக்கிறார்கள். எல்லா மதங்களும் நன்மைக்கே என்று சொல்லக் கூடிய மதநம்பிக்கையாளர்கள் யாரும் இருக்கவே முடியாது, கடவுள் நம்பிக்கையாளர்கள் வேண்டுமானால் இருக்கலாம். எந்த ஒரு கொள்கையும் அதைச் சார்ந்திருப்பவர்களுக்கு நன்மையாகவே இருக்கும், அவர்களுக்கு அது சிறந்ததாகக் கூட தெரியும், தெரியவேண்டும். சமுதாயத்தின் நன்மைகளை எந்த ஒரு ஒற்றைக் கொள்கைகளும் தீர்மானித்துவிட முடியாது. ஏனெனில் சமுதாயத்தின் தேவைகள்,
நன்மைகள் பல காரணிகளை உள்ளடக்கியது. எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள் தான் :)

//அவரவர் கொள்கை அவரவர்ககு சிறந்தது என்பது சமுதாயப் பார்வையாகாகது ஜி.கே. அவ்வாறு நினைத்தால் புத்தரும், பெரியாரும் அவசியமில்லையல்லவா? //

பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால் அவரவர் கொள்கைகள் அவரவர்க்கு சிறந்தது என்று அவரவர் வழியில் செல்வது எப்படி சமூக பார்வையாகாது என்று கருதுகிறீர்கள். இன்றைய உலகின், தனிமனிதவாழ்வின் அச்சுறுத்துதல் அணு ஆயுதம் இல்லை, மதவாதமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
கோவிக் கண்ணன்!

அழகிய பதிவைக் கொடுத்துள்ளீர்கள். இஸ்லாத்தை விமரிசிப்பதை இங்கு யாரும் குறை காணவில்லை. விமர்சனங்கள் வந்தால்தானே விளக்கம் பிறக்கும். ஒருவரை விவாதத்துக்கு அழைத்தால் மற்றவர்களிடம் வென்று விட்டு என்னிடம் வா என்று சொல்வது எந்த அளவு நியாயமான வாதம் என்று எனக்கு புரியவில்லை. ஏனெனில் பிரச்னையை ஆரம்பித்து வைத்தது உண்மை ஏடு. முடித்து வைப்பதும் அந்த உண்மை ஏட்டின் கையிலேயே உள்ளது. பார்ப்போம் வீரமணி என்ன பதில் தருகிறார் என்று.

8:05 AM, August 13, 2008
//

சுவனப்பிரியன்,

எந்த மதத்தைப் பற்றியும் மாற்றுமத அன்பர்கள் காலம் காலமாக கேள்வி எழுப்பித்தான் வருவார்கள், விடை எதுவும் கிடைக்காது ! விவதம் மட்டுமே நடக்கும். நம்பிக்கை சார்ந்ததில் விவதாம் மட்டுமே செய்யமுடியும், விடை தேடிச் சொல்லிவிட முடியாது.

வீரமணி ஐயா என்ன பதில் சொல்கிறார் என்று நானும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொதிகைச் செல்வன் said...


இந்து மதத்தில் நிலவி வரும் சாதிக் கொடுமைகள் மட்டுமே இஸ்லாமில் இல்லை எனச் சொல்லப் படுகிறது.(???) அது தவிர்த்து மற்ற மூட நம்பிக்கைகளை பொறுத்தவரையில் இவர்களுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல.
திராவிட இயக்கத் தலைவர்கள் இவர்களின் மூட நம்பிக்கைகளை பற்றிப் பேச பயப்படுகின்றனர். ஒட்டு வங்கியின் காரணமாக. //



பொதிகைச் செல்வன்,



திராவிடக் கழகம் அரசியல் கட்சி அல்ல, அது எந்த காலத்திலும் தேர்த்தலில் நின்றது இல்லை. கொள்கை அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள், அவர்களின் தொண்டர்களும் தலைமை சொல்லும் கட்சிக்கு வாக்களிக்கும். இங்கே வாக்கு வங்கியை எங்கே பார்க்கிறீர்கள். நீங்கள் திக வையும், திமுகவையும் ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், திமுக - பெரியாரின் தொண்டரான அறிஞர் அண்ணா ஏற்படுத்திய கட்சி, நீங்கள் சொல்வதெல்லாம் திமுகவிற்கு பொருந்தலாம். இந்த கட்டுரையில் திக, வீரமணி ஐயா பற்றிதான் பேசுகிறோம். இங்கு திராவிடக் கழகத்தினர் (தமக்கு தேவையில்லாத) வாக்கு வங்கியினால் பேச மறுக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டு தெரியாமல் சொல்லி இருந்தால் அறியாமை, தெரிந்தே சொல்லி இருந்தால் அபத்தம்.


//// திராவிடக் கழகத்தினருக்கு எல்லா மதமும் ஒன்று போல் தான்.//இருந்தால் நல்லாதான் இருக்கும்.//// இப்போதைய இந்த பதிவின் விவாதமே அவர்கள் மதச்சார்பற்றி இருப்பதினால் தான்.


//பிரியாணிக்கு அல்ல. ஓட்டுக்காக.//

மேலே விளக்கமாக சொல்லி இருக்கிறேன்

Unknown சொன்னது…

//பெரியாரின் கொள்கைகள் சிந்தனையைத் தூண்டுபவை. மதக் கொள்கைகளில் கேள்விகளுக்கு இடமில்லை, அந்த மதத்தைச் சேர்ந்தவர் தமக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றைப் பற்றி வேண்டுமானால் சந்தேகம் தீர்த்துக் கொள்ளலாம், அதற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் அது தவறு புறக்கணிக்க முடியாது, மத கொள்கைகளில் அதற்கு இடமில்லை. ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.//
இல்லை ஜிகே. ஒரு சில கருத்துக்கள் உண்டுதான் என்றாலும் அதற்கும் நியாயமான தெளிவான காரணங்கள் உண்டு. அதனால்தான் அதைத் தவறு என புறக்கணிக்க முடியாது.

//உண்மைகள் பற்றிய கேள்விக் குறியே வரும் என்பதை ஒப்புக் கொள்கீறீர்களா, உண்மைக்கள் பற்றி கேள்விக் குறி வரக் கூடாது என்பது தானே மதநம்பிக்கையாளர்களின் நாடியாக இருக்கிறது.//
எல்லா பதில்களின் மீதும் ஒரு கேள்வியை வைப்பது ஒன்றும் மிகக்கடினமானதல்ல. கேள்விக் குறியே வரும் என்ற இது மத நம்பிக்கைக்கு மட்டுமல்ல. திராவிடர் கழக கொள்கைகள் உள்பட எல்லா கொள்கைகளுக்கும் பொருந்தும். அதனால் மனிதர் யாருக்கும் எந்த கொள்கையும் கூடாது எனச் சொல்ல முடியுமா? இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அதை கொள்கையாக ஏற்பதற்கு முன்னர் சிந்தித்து, அதனால் கேள்விகள் கேட்டு விளங்குவதால் தவறேதுமில்லை.
ஒரு கொள்கை சரியென மனதால் ஒப்புக் கொள்ளும் வரை, தான் அந்தக் கொள்கையை உடையவன் என அறிவித்தல் தவறானது.

//இன்றைய உலகின், தனிமனிதவாழ்வின் அச்சுறுத்துதல் அணு ஆயுதம் இல்லை, மதவாதமே.//
சில நாடுகள் மற்றும் சில இயக்கங்கள் தம் சுயநலத்துக்காக இவ்வாறாக பொதுத்தளத்தில் திரித்து வைத்துள்ளது. அதன் அடியிலோடும் சுயநலத்தை சிந்திக்காமல் ஆட்டு மந்தைகளாய் நாமும் நிந்திக்க வேண்டி இருக்கிறது.

மேலோட்டமாக பொதுத்தளத்தில் பேசுவதை விட, இயன்றால் இஸ்லாத்தை படித்துப் பார்க்க முயலுங்கள் ஜிகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் has left a new comment on your post "போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?":

இல்லை ஜிகே. ஒரு சில கருத்துக்கள் உண்டுதான் என்றாலும் அதற்கும் நியாயமான தெளிவான காரணங்கள் உண்டு. அதனால்தான் அதைத் தவறு என புறக்கணிக்க முடியாது. //

சுல்தான் ஐயா,

அதைத்தான் நானும் சொன்னேன். மதங்கள் குறித்து கேள்விகள் அந்த மதத்தினரின் சந்தேகம் என்ற அளவிலேயே தான் நிற்கமுடியும். விவாதப் பொருளாக கொண்டு சென்று மறுப்பதற்கு மதத்தினருக்கு அனுமதி இல்லை. மதத்தை சீர்த்திருத்துவது -அப்படியெல்லாம் செய்ய முடிந்திருந்தால் இந்து மதத்தில் கூட எப்போதோ மனு தர்மத்தை எரித்து இருப்பார்கள், இன்றும் மனு எதிர்ப்பு என்ற அளவிலேயே இருக்கிறது.

//எல்லா பதில்களின் மீதும் ஒரு கேள்வியை வைப்பது ஒன்றும் மிகக்கடினமானதல்ல. கேள்விக் குறியே வரும் என்ற இது மத நம்பிக்கைக்கு மட்டுமல்ல. திராவிடர் கழக கொள்கைகள் உள்பட எல்லா கொள்கைகளுக்கும் பொருந்தும். அதனால் மனிதர் யாருக்கும் எந்த கொள்கையும் கூடாது எனச் சொல்ல முடியுமா? இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அதை கொள்கையாக ஏற்பதற்கு முன்னர் சிந்தித்து, அதனால் கேள்விகள் கேட்டு விளங்குவதால் தவறேதுமில்லை.
ஒரு கொள்கை சரியென மனதால் ஒப்புக் கொள்ளும் வரை, தான் அந்தக் கொள்கையை உடையவன் என அறிவித்தல் தவறானது.//

நான் கொள்கைக் கூடாது தவறு என்று சொல்லவில்லை. பிறரின் நம்பிக்கைக் குறித்து கேள்வி கேட்கும் தகுதியோ, உரிமையோ எனக்கு இருப்புவதாக நான் நினைப்பதில்லை. கொள்கைகள் அவற்றை முன்னிறுத்தி பிறரின் நம்பிக்கையைப் கேலி செய்தும், கேள்வி கேட்கும் போதும், தனது கொள்கையைப் பற்றி உயர்வாகப் பேசும் போதும், எதிர் தரப்பினரும் அது போன்ற கேள்வி எழுப்பமுடியும் என்று புரிந்து கொண்டாலே போதும்.

//சில நாடுகள் மற்றும் சில இயக்கங்கள் தம் சுயநலத்துக்காக இவ்வாறாக பொதுத்தளத்தில் திரித்து வைத்துள்ளது. அதன் அடியிலோடும் சுயநலத்தை சிந்திக்காமல் ஆட்டு மந்தைகளாய் நாமும் நிந்திக்க வேண்டி இருக்கிறது.

மேலோட்டமாக பொதுத்தளத்தில் பேசுவதை விட, இயன்றால் இஸ்லாத்தை படித்துப் பார்க்க முயலுங்கள் ஜிகே.
//


இங்கு நான் எல்லா மதத்தின் நம்பிக்கை குறித்தும் தான் பேசினேன். தலைப்பில் மட்டும் தான் இஸ்லாம் தொடர்புடைய தொடுப்பு இருக்கிறது. நீங்களும் இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான பதிவு என்று பொருள் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். இஸ்லாம் மட்டுமல்ல ஏனைய மதங்களின் ஆன்மிகம் சார்ந்த தத்துவங்களை எப்போதும் படித்தே வருகிறேன். அதில் மதம் தொடர்புடையவைகளை விட்டுவிடுகிறேன். அதில் கூறப்பட்டுள்ள மதக் கொள்கைகளை விருப்பமின்மையாலும் எனக்கு தேவையற்றது என்பதாலும் தவிர்க்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் ஐயா,

எனது இன்றைய இடுகை "ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !" என்ற தலைப்பையும், நேரமிருந்தால் படியுங்கள்.

வசந்தத்தின் தூதுவன் சொன்னது…

திராவிட இயக்கம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். திராவிடர் கழகம் என்று குறிப்பிடவில்லை. திராவிட இயக்க அடிப்படைகளை விளக்கியமைக்கு நன்றி. திராவிட இயக்க பின்னணியில் இருந்து வந்திருப்பதால் நீங்கள் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை.
நான் சொல்ல வந்தது..
தி.க. வைப் பொறுத்த வரையில் பா.ஜ.க. இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதில்லை. ஆனால் பெயரிலேயே மதத்தை வைத்துக் கொண்டு இருக்கும் மதவாதக் கட்சிகளான முஸ்லீம் லீக், த.மு.மு.க., த.த.ஜ. போன்ற மதவாதக் கட்சிகள் இருக்கும் கூட்டணியை ஆதரிப்பது கொள்கைக்கு ஏற்றதா?
இவர்கள் இருக்கும் கூட்டணிக்கு வாக்கு கேட்டு தி.க.வினர் செல்வதில்லையா?
இப்போது எப்படி தி.க. எல்லா மதவாதி களையும் ஒரே மாதிரியாக பார்ப்பதாக சொல்ல முடியும்.

இணையத்திலும் வெளியிலும் பெரியார் முகமூடிகளை அணிந்துகொண்டு இந்த மதவாதிகள் மற்ற மதங்களை மட்டும் விமர்சித்து பெரியார் இவர்கள் பக்கம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருவது. தாங்கள் அறியாததா? பார்க்கவும்
http://idhuthanunmai.blogspot.com

பெரியார் படம் இல்லாத இவர்களின் மத ஏடுகளே இல்லை எனலாம்.

இது போன்ற பல சலுகைகளை தி.க.விடம் அனுபவித்துவிட்டு இப்போது பெரியாரையே வம்புக்கு இழுக்கும் இந்த மத வெறியர்களைத்தான் கோடரிக் காம்புகள் என்று குறிப்பிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொதிகைச் செல்வன் has left a new comment on your post "போலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா ?":

திராவிட இயக்கம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். திராவிடர் கழகம் என்று குறிப்பிடவில்லை. திராவிட இயக்க அடிப்படைகளை விளக்கியமைக்கு நன்றி. திராவிட இயக்க பின்னணியில் இருந்து வந்திருப்பதால் நீங்கள் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. //

பொதிகைச் செல்வன், எங்கள் பெற்றோர்களில் யாரும் திகவினர் கிடையாது, எல்லோருமே ஆத்திகர்கள், கோவிலுக்கு காவடி எடுப்பவர்கள், கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்பவர்கள் தான். பெரியார் பற்றியும் பெரியார் கொள்கைகளைப் பற்றியும் வலைப்பதிவு வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். நான் நாத்திகனோ ஆத்திகனோ இல்லை. நான் படித்து அறிந்து கொண்ட தகவலைத் தான் சொன்னேன்.


//நான் சொல்ல வந்தது..
தி.க. வைப் பொறுத்த வரையில் பா.ஜ.க. இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதில்லை. ஆனால் பெயரிலேயே மதத்தை வைத்துக் கொண்டு இருக்கும் மதவாதக் கட்சிகளான முஸ்லீம் லீக், த.மு.மு.க., த.த.ஜ. போன்ற மதவாதக் கட்சிகள் இருக்கும் கூட்டணியை ஆதரிப்பது கொள்கைக்கு ஏற்றதா?
இவர்கள் இருக்கும் கூட்டணிக்கு வாக்கு கேட்டு தி.க.வினர் செல்வதில்லையா?
இப்போது எப்படி தி.க. எல்லா மதவாதி களையும் ஒரே மாதிரியாக பார்ப்பதாக சொல்ல முடியும். //

சிறுபாண்மையினர் என்று சொல்லாடல் குறித்து கேள்வி பட்டு இருக்கிறீர்களா ? பெரும்பாண்மை இந்துக்கள் சிறுபாண்மையினரான கிறித்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் போது, மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு தமிழன் என்ற அடிப்படையில் ஆதரவளிப்பதை எப்படி மதச்சார்பின்மையினரோடு முடிச்சு போடுகிறீர்கள் என்று தெரியவில்லை. தாழ்த்தப்பட்டவன் என்று சாதியைச் சொல்லி தாழ்த்தினால், தாழ்த்தப்பட்டவர்கள் அதற்கு எதிராக திரளவேண்டுமென்றால் அதே சாதி பெயரால் அந்த மக்களே தானே ஒன்றினைய முடியும், சாதிப் பெருமை பேசுவன் சாதியைச் சொல்லி அடுத்தவர்களை தூற்றுவதும், தாழ்த்தப்பட்டவன் தனது சாதியை ஒன்று திரட்டுப் போராடுவதும் உங்கள் பார்வையால் இரண்டுமே சாதி வெறி என்று பொதுப்படுத்த முடியுமா ? இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்கள் சிறுபாண்மையினர் என்பதால் தான் திகவினர் கொள்கை ரீதியாக இல்லாவிட்டாலும் சிறுபாண்மை மதத்ததச் சேர்ந்த தமிழன் என்ற உணர்வு அடிப்படையில் தமிழக அளவில் மட்டுமே ஆதரவு அளிக்கின்றனர். இந்துக்கள் சிறுபாண்மையராக இருந்தால் அவர்களுக்கும் அதே நிலையை எடுப்பார்கள்.


//இணையத்திலும் வெளியிலும் பெரியார் முகமூடிகளை அணிந்துகொண்டு இந்த மதவாதிகள் மற்ற மதங்களை மட்டும் விமர்சித்து பெரியார் இவர்கள் பக்கம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருவது. தாங்கள் அறியாததா? பார்க்கவும்
http://idhuthanunmai.blogspot.com

பெரியார் படம் இல்லாத இவர்களின் மத ஏடுகளே இல்லை எனலாம்.

இது போன்ற பல சலுகைகளை தி.க.விடம் அனுபவித்துவிட்டு இப்போது பெரியாரையே வம்புக்கு இழுக்கும் இந்த மத வெறியர்களைத்தான் கோடரிக் காம்புகள் என்று குறிப்பிட்டேன்.
//

இது இருபக்கமும் நடக்கிறது, அண்மையில் இஸ்லாம் பெயரில் ஒரு பதிவர் கிறித்துவர்களை தாக்கி எழுதிவந்தார். அதே போல் ஒருவர் கிறித்துவர் பெயரில் இஸ்லாம் குறித்து தாக்கி எழுதி வந்தார். அப்படி எழுதியவர்கள் உண்மையில் இஸ்லாமியரோ, கிறித்துவரோ இல்லை என்று பலரும் பேசிக் கொண்டார்கள். இதுபற்றி பலர் பதிவிட்டு இருந்தனர். இதிலும் பெரியாரையே பயன்படுத்தினார்கள். பெரியாரை பெரியார் தொண்டர்களை விட மாற்று மதத்தினரை தூற்ற மதச் சார்புள்ளவர்களே மிகவும் பயன்படுத்துகிறார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்