பின்பற்றுபவர்கள்

4 ஆகஸ்ட், 2008

பதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கேட்ட கேள்வி !

பதிவர் சந்திப்பின் போது பதிவர் இராம் 'உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா ?' என்ற கேள்வியை முன்வைத்தார். எனக்கு அதற்கான தேவை இல்லை என்பதைத் தவிர்த்து என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. சொல்ல ஆரம்பித்து இருந்திருந்தால் அங்கேயே என்னை சாமியார் ஆக்கிவிட்டு இருப்பார்கள், இல்லை எழுந்து ஓடி இருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்கள் எப்பொழுதும் கடவுளை நினைக்கிறார்கள் ? என்ற கேள்வியில் எந்த ஒரு மத நம்பிக்கையாளரும், (மத நம்பிக்கை என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் கடவுள் நம்பிக்கைக்கு நம் சார்ந்துள்ள மதமே காரணியாக அமைந்துவிடுகிறது) அவரவருக்கு கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது. வழிபாட்டுக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும், மதம் சார்ந்த பண்டிகைகளும் சில நொடிகளுக்கு கடவுள் இருப்பு பற்றியும், தன்னை அது பாதுகாக்கும் என்ற நம்பிக்கை வந்து செல்லும், மற்ற நேரங்களில் நம்பிக்கை இருப்பவர்கள் / இல்லாதவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

கடவுள் நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டாலும் அதை மதம் சார்ந்த நம்பிக்கை அல்லது ஒரு கோட்பாட்டின் நம்பிக்கை, கடவுள் என்ற உருவக குறியீட்டின் நம்பிக்கை என்றே அதைச் சொல்லமுடியும். இப்போதெல்லாம் நம்பிக்கையாளர்கள் மிகத் தெளிவாகவே அவரவர் மதக் கோட்பாட்டில் கூறியுள்ள கடவுள்களிடம் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதற்குப் பெயர்தான் கடவுள் நம்பிக்கையா ?

இல்லை என்று மறுத்து கடவுளை எதிர்த்து பேசிவிட்டு (இல்லை என்று நம்புபவன் எப்படி இல்லாத ஒன்றை எதிர்த்து பேசுவான்) பின்பு நரக நெருப்பில் வாடினால், அல்லது எதாவது தெய்வ நிந்தனை தண்டனைக் கிடைத்துவிட்டால்? என்கிற உள்ளார்ந்த அச்சமே தொடர்ந்து கடவுள் பற்றிய நம்பிக்கையில் ஒருவரை வைத்திருக்கிறது.

எல்லாவற்றையும் குரானில் கூறியுள்ளபடி அல்லா படைத்தார் என்று சொல்லும் இஸ்லாமியரைப் பார்த்து இந்துக்கள் கேலியாகவே சிரிப்பார்கள். இந்துமதத்தில் தத்துவசார்பாக சிலக் கோட்பாடுகள் இருப்பதால் 'அல்லா' பற்றிய இறை நம்பிக்கையை மறுத்து அவர்களால் சிரிக்கமுடிகிறது. இவை இறை நம்பிக்கையாளர்களிடம் உள்ள மிகப் பெரிய முரண்பாடு, இது அடுத்த மதத்தை கேலி செய்யும் எந்த மதத்திற்கும் பொருந்தும்.

உயிரோடு இருக்கும் போது இறைவனின் தேவை என்பதைவிட இறந்த பின்னால் என்ன ஆவேனோ என்ற பயமே இறை நம்பிக்கையின் ஈரம் காயாமல் வைத்திருக்கிறது. கடவுளுக்கு பயப்படுபவர்கள், இறையச்சம் உள்ளவர்கள், இறைவனை நம்புபவர்கள்... இவர்களே நல்லவர்கள்' என்ற கருத்து பரவலாக நம்பிக்கையாளர்களிடம் இருக்கிறது. இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை. இறை நம்பிக்கையற்றவர்களாக இருப்பவர்களிடையே ஒருசிலர் குற்றம் செய்யும் போது அக்குற்றம் செய்யத் தூண்டுதலாக இருப்பது நம்பிக்கையின்மையா ? இறைநம்பிக்கைக்கும் குற்றத்திற்கும் என்ன தொடர்போ ? இதற்கு சரியான விளக்கம் ஆத்திக அன்பர்கள் தான் தரவேண்டும். கிருஷ்ணனை மறுத்த ஹிரன்ய கசிபுக் கூட இறைமறுப்பாளன் அல்ல, பிரம்மனை வேண்டியே அவன் சில நிபந்தனைகளுடன் கூடிய இறவா வரம் பெற்றான். பின்பு யார் பெரியவர் என்ற போட்டியில் நரசிம்ம அவதாரம் நடைபெற்றதாக கதைகள் சொல்லப்படுகிறது, அந்த கதையில் நாத்திக உருவகமாகவே ஹிரன்யகசிபு படைக்கப்பட்டான். ஹிரன்யகசிபு சைவனாகவும் காட்டப்படுகிறான். சைவ சமயப்பிரிவில் உள்ள சிவ வணக்கத்தைப் பழித்துக் கூறவே கண்ணன் பற்றிய தசாவதாரக்கதைகள் எல்லாம் தோன்றின.

எந்த ஒரு புராண இதிகாசங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அவை எதோ ஒரு காலத்தில் ஏற்பட்டவையாகவே இருக்கும், தான் தோன்றியாக எந்த ஒரு கதையும் காலம் காலமாக இருந்தது இல்லை. இவற்றின் வழி சொல்லப்பட்டுள்ள கதைகளின் மொத்த உருவகமே அந்தந்த மதங்களின் இறைநம்பிகையாக இருக்கிறது. நான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிறந்திருந்தால் என்னைப் பொருத்து ஏசு மற்றும் அல்லா பற்றிய நம்பிக்கைகள் இருந்திருக்காது. கிமு 500 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிறந்திருந்தால் எனக்கு புத்தமதத்தில் காட்டியிருக்கும் கோட்பாடுகள் தெரிந்திருக்காது, ஏனென்றால் அதன் பிறகு தான் புத்தரே பிறந்தார். ஒவ்வொரு நம்பிக்கையின் தோற்றமும் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. இவையெல்லாம் பல்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட கோட்பாடுகளே. 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எகிப்த்தியரின் கடவுள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. வேதகாலத்தில் உயர்வாகச் சொல்லப்பட்ட இந்திரன் இப்போதும் அதே உயர்வுடன் இருக்கிறானா ? சமஸ்கிரத ஸ்லோகங்களின் வாழ்வதாரத்தில் தான் அவன் உயிர் இன்னும் ஊசல் ஆடிக் கொண்டு இருக்கிறது. இராமனுஜர், மத்துவர்,ஆதி சங்கரர் ஆகியோர் அவரவர் ஆழ்ந்து சிந்தித்து அவர்களுக்குத் தோன்றியதெல்லாம் வைத்து இன்று ஒருங்கிணைப்பாக உள்ள இந்து சமயத்திற்கு முன்பிருந்த பலசமயங்களைத் தோற்றுவித்துவிட்டார்கள். கிரிமி கண்ட சோழனைப் பொருந்தவரையில் அன்றைய வைணவர்கள் இன்றைய இந்துக்களைப் பார்த்து கிறித்துவர்கள் சொல்வது போல பேய்களை வழிபாடு செய்பவர்கள். சைவர்களைப் பொருத்து 'சிவன்' என்ற பெயரே கடவுள், வைணவர்களுக்கு 'விஷ்ணு' என்னும் பெயர்.

இந்த பெயர்களுக்கெல்லாம் தனித்தனி குணங்கள் இருப்பதாக இருபிரிவினரும் நம்பினார்களேயன்றி இருவரும் ஒருவரே என்ற நம்பிக்கைக் கொண்டவர் எவரும் இருந்ததில்லை, பிற்காலத்தில் சித்தர்கள் இவர்களை கிண்டலடித்து அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு என்று சொல்லி இவர்களின் ஒற்றுமைக்கு வழிபிறக்குமா தூற்றிப் பார்த்தார்கள். இன்றைக்கு இவையெல்லாம் தத்துவ சமாச்சாரமாக பேசப்படுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது எக்காலத்திலும் மதவழி சொல்லப்படும் கடவுள் பெயர் (நாமகரண) குறித்த நம்பிக்கையே யன்றி வேறு இல்லை, அதுவே அதாவது பெயரை மூலமாக வைத்தே அதைக் கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அந்தந்த மதங்களினால் சொல்லப்படுகிறது.

கடவுள் நம்பிக்கையிலும் அதிலுள்ள வழிபாட்டு முறைகளில் ஏற்படுத்தப்பட்ட / புகுத்தப்பட்ட சடங்குகளில் உள்ள சமூக அரசியலை (யார் கோவிலுக்குள் செல்வது, யார் பூசைசெய்வது, எந்த மொழியால் பூசை செய்வது) ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒருவருடைய நம்பிக்கையின் ஆழத்தைத் தீர்மானிப்பதும்,அவரை அதிலேயே வைத்திருப்பதும் அவருக்குள்ள மரண பயம் தான். மரணம் பற்றிய தெளிவின்மையால், மரணம் பற்றிய உள்ளுணர்வு பயம் இருப்பதால் இத்தகைய நம்பிக்கையை அவர்கள் கைவிட்டுவிடாமல் தொடர்ந்து அவரை அதிலேயே வைத்திருக்கிறது. பிறந்த அத்தனை உயிர்களிலும் மனிதனுக்கு மட்டுமே மரணம் தம்மை முற்றிலும் அழித்துவிடும் என்பது தெரியும். மற்ற உயிர்களுக்கு மரணம் பற்றிய அறிவே கிடையாது. அப்படி இருந்தால் அருகில் அறுக்கப்படும் ஆட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு ஆடு அசை போட்டுக் கொண்டே இருக்குமா ? அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யாது ? மரண பயமற்ற மற்ற உயிரினங்களுக்கு கடவுள் என்கிற கோட்பாடு தேவையற்றதாகவே இருக்கிறது. விலங்குகள் பிறவிலங்குகளிடமிருந்து தப்பிச் செல்வது மரணபயத்தினால் அல்ல, பிறவிலங்கு தாக்கவரும் போது ஏற்படும் வலியில் இருந்து தப்பிக்கவே, தன்னால் செயல்படாமல் போய்விடும் என்ற அச்சமே அவைகள் ஒன்றை ஒன்று எதிர்த்து சண்டை இடுகின்றன, இல்லை என்றால் விலகி ஓடுகின்றன. உடல் அழிவுக்குட்பட்டது, விபத்துக்குட்பட்டது என்று உடலின் இறப்பு குறித்த நன்கு(!) தெரிந்த மனிதனுக்கு அந்த மரணம் பற்றிய பயம் இருப்பதும் இயல்பே.

ஆழ்ந்த பக்தி கொண்டோர்களில் சிலர் சாகா வரம் பெறும் கதைகள் இருக்கின்றன, கதைகள் மட்டுமே சாகாமல் இருக்கின்றன, அதில் சொல்லப்பட்டுள்ள மார்கண்டேயன் போன்றோர் ? இல்லையே. சாகாவரக் கதைகள் சாகாமல் இருப்பதற்குக் காரணம் அவைகள் வழிவழியாகச் சொல்லப்பட்டும் வருவதால் தான் அன்றி அவற்றில் சொல்லப்பட்டுள்ளது உண்மையாக இருக்கும் என்று நினைக்கப்படுவதால் அல்ல. இது போன்ற கதைகள் மூலம் எப்போதும் இருக்கும் தன் மரண பயத்தை கடவுள் என்கிற உருவகத்துடன் இணைத்து தற்காலிக விடுதலை செய்துக் கொள்கிறான் மனிதன். இதுபோன்ற கதைகள் இல்லாத பிறமதங்களில் இறப்புக்கு பின்னால் 'நிரந்தர சொர்கம்' என்கிற கதைகள் எல்லாம் இருக்கின்றன. இவையும் அந்தந்த மதங்களைச் சார்ந்த மக்களின் மரணபயத்தைப் பற்றி சிந்திக்கவிடாமல் வாழ்வதற்கான வழிவகைகளில் அவர்களின் கவனம் செல்ல பயன்படுகிறது.

எதற்காக ஏன் பிறந்தோம் என்று தெரியாது,ஆனால் பிறந்த பின் நமது வாழ்க்கை என்பது புறக்காரணிகளையும் உள்ளடக்கியதே. ஒருவர் 100 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டாலும் கூட தண்ணீர் லாரி எதிரே வராவிட்டால் வாழ்ந்திருப்பார். பிறந்ததன் நோக்கமாக நாமாக நினைப்பது மகிழ்வான வாழ்கை, மகிழ்வு தனக்குள்ளே இருந்தாலும், வெளி உலகத்தினரிடம் பிறரிடம் அன்பு வைக்காவிட்டால் வெளி உலத்தினரின் தொடர்ப்பு மகிழ்வான வாழ்க்கையைத் குலைத்துவிடும், இவைதானே நடக்கிறது. பிறப்பவர் அனைவருமே இறப்புக்குட்பட்டவர்கள் தானே, வேறு என்ன இருக்கிறது ?

பதிவர் எனது அன்புக்குரிய மற்றொரு நண்பரான கேஆர்எஸ் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார், 'நாத்திகன் தோன்றுவது ஆத்திகனால், ஆத்திகன் தோன்றுவது நாத்திகனால்' என்று மிக அழகாகச் சொன்னார். நாத்திகனால் ஆத்திகன் உருவாகிறான் என்று தற்காலத்தில் சொல்ல முடியாது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்திருக்கலாம்.
ஆத்திகர்களின் அடாவடிகளாலேயே நாத்திகன் தோன்றுகிறான்.

கண்மூடித்தனமான இறைநம்பிக்கைக் குறித்த எதிர்ப்புகள் எனக்கும் வியப்பையே அளிக்கிறது. 'கண்ணால் காணமுடியாது ஒன்று இருக்கவே முடியாது என்றும், அப்படி ஒருவேளை இருந்தால் பல கோரத்தீவிபத்துக்கள், சுனாமி போன்றவற்றின் போது மக்கள் மடியும் போது உங்கள் கடவுள் எங்கே போனார்கள் என்று கேட்பார்கள். புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நம்பக்கூடாது என்பதே இவர்களது கோட்பாடு, அதைச் சார்ந்தே இவர்களது இறை நம்பிக்கையின்மையும் இருக்கும். நமக்கு புலனாகாத எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது, வவ்வாலுக்கு கேட்கும் அல்ட்ரா சவுண்ட் நமக்கு கேட்கவில்லை என்பதால் அவை இல்லை என்று சொல்லிவிட முடியுமா ? மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கும் போது கழுகுக் கண்களுக்கு தெரியும் இறந்து மிதக்கும் மீன், நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடுமா ? இறைநம்பிக்கை அற்றவர்கள் இறைவன் இல்லை என்று அறுதியிட்டுக் கூற எவ்வித முயற்சியுமே எடுக்காமல் வெறும் புலன்கள் காட்டும் தகவலே உண்மை என்று நம்புபவர்கள் தாம். எல்லாவற்றையும் புலனில் படக் கூடிய தொலைவிலும், இருப்பையும் உணர்த்திவிட்டால் மட்டும் எல்லாவற்றிற்கும் தீர்வு பிறந்துவிடுமா ? என்றெல்லாம் இவர்கள் நினைப்பதே இல்லை. கண்ணுக்கு முன் கடவுள் நின்று கொண்டிருந்தால் நீதி மன்றங்களைக் காட்டிலும் பிரச்சனைகளுக்கான உடனடித் தீர்வென்று அங்குதானே நிற்பார்கள். எல்லாவற்றிற்கும் இவனே காரணம் என்று பாதிக்கப்பட்ட சிலர் கடவுள்(!) மீதே கோபத்தில் கைவைத்துவிடுவார்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் இறைவன் தான் காரணமென்பதை மறைமுகமாக சொல்லும் 'எல்லாம் அவன் செயல்' என்கிற அபத்தமான ஆத்திக கோட்பாடே நாத்திகர்களின் பலமாகப் போய்விடுகிறது.

மேலிருந்து கண்ணாடியைக் கீழே போட்டால் உடையும். கடவுள் அதை உடையாமல் தடுத்துவிடுவாரா ? கண்ணாடி பெளதீகப் பொருள், மேலிருந்து விழுவது என்பது பெளதீக விசை, எளிதில் உடையக்கூடிய கண்ணாடி கீழ்நோக்கிய விசையில் சிக்கும் போது உடையும் என்பது பெளதீக விதி. கீழே விழும் இடம் கண்ணாடியைவிட மிக மென்மையாக (தண்ணீர்) இருந்தால் கண்ணாடி உடையாது, இதுவும் பெளதீக விதிதான். பல்வேறு உயிருள்ள உயிரற்ற பெளதீகப் பொருள்கள் மோதிக் கொள்ளும் போது அல்லது எதிர்பாராத சேர்கையினால் விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ? கடவுள் எந்த ஒரு பெளதீக விசையயும் கட்டுப்படுத்தும் என்று நம்புவதும், சக்தி படைத்த கடவுள் அப்படி ஏன் செய்யவில்லை என்று எதிர்கேள்வி கேட்பதும் அபத்தமானவையே. அழிவுக்கு உட்படாத பொருள் என்று எதுவும் இருக்கிறதா ? மனிதன் உடலென்பது பல பொருள்கள் சேர்ந்த பெளதீகக் கலப்புதானே. அந்த உடல் உயிரை உடனடியாக இழப்பதற்கு ஏற்படும் ஆபத்தும் எதிர்பாராத விசையினால் தானே ?

பதிவர் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே வரும்கால சந்ததியினரிடையே ப்ரீ திங்கர்களின் எண்ணிக்கை கூடுதலாகிவிடும் என்று பதிவர் ஜோசப்.பால்ராஜ் குறிப்பிட்டார். இதற்குக் காரணமே நம்பிக்கையாளர்கள் நாணயமாக நடந்து கொள்ளாதது தான். இறைநம்பிக்கை உடையவர்கள் எல்லவாற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்று இருக்கிறர்களா ? நடைமுறையில் அப்படி இல்லையே. இவர்கள் எதிர்வினையாற்றி இறைவனின் இருப்பு இல்லை, எல்லாம் வெறும் நம்பிக்கை தான் என்பதாக புரியவைத்துவிடுகிறார்கள்.

பதிவு நீண்டுவிட்டது,

தன்னை நம்புவர்களை மட்டும் தான் கடவுள் காக்கும் என்று நம்புபவர்கள் உண்டென்றால் அவர்களின் அந்த கடவுளுக்கான உருவகம் மிகமிகத் தாழ்வானதே. படைப்புகள் இறைவன் படைத்ததா ? இயற்கைப் படைத்ததா ? அதன் படைப்புக்கான நோக்கம் எதுவென்று தெரியாதவரையில் நம்பிக்கை / நம்பிக்கையின்மை தொடரவே செய்யும். ஆறுநாளில் உலகைப் படைத்தான் என்று சொல்லும் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையாக இருந்தாலும் சரி, கல்கி அவதாரம் முடிந்து ஆலிழைக் கண்ணன் உலகத்தைப் படைக்கிறான் என்ற நம்பிக்கையில் இருந்தாலும் சரி அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரையில் படைப்பு என்ற ஒன்றே இருக்க முடியாது. பெளதீக பொருள்கள் அனைத்துமே மாற்றத்திற்கு உட்பட்டது. இல்லாத ஒன்றை உருவாக்கிவிட முடியாது, அப்படியே செய்தாலும் இல்லாத ஒன்றின் முந்தைய நிலை அதன் தற்போதைய இருப்பு நிலையின் முந்தைய வடிவம் மட்டுமே. மூலப் பொருள் இன்றி பெளதீகப் பொருள் (உயிருள்ளவையையும் சேர்த்தே) எதையுமே படைத்துவிட முடியாது. அப்படியென்றால் மூலப் பொருள் ? அதற்கும் மூலப் பொருள், அதற்கும் மூலப் பொருள் என விதை மரமாவதும், மரம் விதையாவது போன்ற சுழற்சியாகவே ஒரே பொருளின் பல்வேறு மாறுபட்ட வடிவங்கள் தான் அவை.

இறைவன் இருக்கிறான் என்று நம்புவதால் ஒருவகையான பலனோ, இறைவன் இல்லை என்று சொல்வதால் மாற்றான வேறு பலனோ எனக்கு ஏற்படப் போவதில்லை.

32 கருத்துகள்:

உதயம் சொன்னது…

GK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்!

அவனும் அவளும் சொன்னது…

மிக ஆழமாக சிந்தித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக உங்கள் நிலைபாட்டை முன்வைத்துள்ளீர்கள்.

இன்று உள்ள மிக அதிகமான ஆத்திகர்களின் பக்தி பயத்தை நோக்கியதாகவே இருக்கிறது. (அது தவறா என்ற கேள்விக்குள் போக எனக்கு தற்பொழுது விருப்பமில்லை)

முடிந்தால் "Evidence of God in Fading Universe" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஒத்த கருத்துள்ள புத்தகமே அது. ஆனால் முடிவில் மட்டும் வேறுபட்டுள்ளார்கள்.

TBCD சொன்னது…

படிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....

ஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..

:)

அவனும் அவளும் சொன்னது…

****GK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்****

அது ஒரு பொய்த்தோற்றம் (illusionukku தமிழ் வார்த்தை தெரியவில்லை)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நேத்து அவரு கேட்டப்ப ஒன்னுமே சொல்லலையே சரி மறந்துட்டீங்கனு நினைச்சோம். இவ்ளோ பெரிய பதிவா?

என்ன இருந்தாலும் சொல்லியிருக்க கருத்துக்கள் சிந்திக்க வைக்குது அண்ணே. ரொம்ப ஆழமா யோசிச்சு இருக்கீங்க. ( பூண்லே - பாஸிரிஸ் ரயில் பயணத்துல யோசிச்சீங்களா? )

கையேடு சொன்னது…

ஆர்வமாய் வாசிக்க வைத்த அருமையான பதிவு திரு. கோவி. கண்ணன்.

//கிபி 2000க்கு முன்பிறந்திருந்தால் //

இதில் தட்டச்சுப் பிழை வாசிப்பைக் குழப்புகிறது.

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

அடியேன் உள்ளேன் அண்ணா! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

//TBCD said...
படிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....//

எனக்குந் தேன்!
ஒரு ஜோடா ப்ளீஸ்! பன்னீர் ஜோடா...

//ஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..//

அதான் கோவி!
நீங்க அடிக்கடி பதிவர் சந்திப்புக்கு எல்லாம் போயி பழக வந்திருக்கோம்-ன்னு சொல்லி பழகணும் டிபிசிடி அண்ணாச்சி!

அப்ப தான் கோவி அண்ணனோட விஸ்வரூபம் தெரிய வரும்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

//சொல்ல ஆரம்பித்து இருந்திருந்தால் அங்கேயே என்னை சாமியார் ஆக்கிவிட்டு இருப்பார்கள்//

இன்னுமா ஆக்கலை?
ஆடி மாசம், வேப்பலை அடிச்சி, ஆக்கிருவமா? சொல்லுங்கண்ணோவ்! :)

உங்க மகிமைக்கு பல சூடான பதிவுகளை எல்லாம் மிதிச்சிங்க! தீ மிதிச்சிங்க! அடுத்து நியூக்ளியர் பவரைத் தான் நீங்க மிதிக்கணும், சொல்லிட்டேன்! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னது…

ஆரம்பமே தப்பு!

//கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது//

அழும் போது மட்டும் தான் கண்ணீரே வருகிறது! சரியா? :)

பச்சைக் குழந்தைக்குப் பசிக்கும் போது மட்டும் தான் அம்மா ஞாபகம் வருதோ?
பசிக்கும் போது அழுது, அம்மாவைத் தேடி இறுகுது! அவ்வளவு தான்!

மற்ற நேரங்களில், அம்மா அந்தாண்ட நடக்கும் போதெல்லாம் திரும்பிப் பாக்கும் பாருங்க! அப்பவும் அம்மா ஞாபகம் உண்டு! ஆனால் இறுகாது! அம்புட்டே!

சரி, நீங்க அப்படித் தொடங்கியதால், நான் இப்படி முடிக்கிறேன்!
**கடும் துன்பம் தீராத போது கடவுள் நம்பிக்கையே போகிறது? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் said...
GK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்!

11:28 PM, August 04, 2008
//

எப்பவும் நல்லாதான் இருக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
நேத்து அவரு கேட்டப்ப ஒன்னுமே சொல்லலையே சரி மறந்துட்டீங்கனு நினைச்சோம். இவ்ளோ பெரிய பதிவா?

என்ன இருந்தாலும் சொல்லியிருக்க கருத்துக்கள் சிந்திக்க வைக்குது அண்ணே. ரொம்ப ஆழமா யோசிச்சு இருக்கீங்க. ( பூண்லே - பாஸிரிஸ் ரயில் பயணத்துல யோசிச்சீங்களா? )
//

ஜோசப்,

வியப்பளிக்கிறது, சரியா சொல்லிவிட்டீர்கள் பூண்லே - பாஸிரிஸ் ஒரு மணி நேரப் பயணத்தில் தட்டச்சு செய்தது தான் இவைகள்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
மிக ஆழமாக சிந்தித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக உங்கள் நிலைபாட்டை முன்வைத்துள்ளீர்கள். //

எனது கருத்துக்களைப் படித்துவிட்டு நான் இறைமறுப்பாளன் என்றும் சிலர் பாலபாரதி, லக்கிலுக் போன்றோர் நான் பக்தியாளர் என்றும் சொல்கிறார்கள். அதற்காக இந்த சிறு விளக்கம் ! :)

//இன்று உள்ள மிக அதிகமான ஆத்திகர்களின் பக்தி பயத்தை நோக்கியதாகவே இருக்கிறது. (அது தவறா என்ற கேள்விக்குள் போக எனக்கு தற்பொழுது விருப்பமில்லை)//

நம்புபவர்கள் சோதனை செய்து பார்பது இல்லை, வெறும் நம்பிக்கையிலேயே அவர்களின் கடவுள் பற்றிய புரிதல் ஓடிவிடுகிறது. அதற்குக் காரணம் பயம் தான், சரி தவறென்றெல்லாம் எதுவும் இல்லை.

//முடிந்தால் "Evidence of God in Fading Universe" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஒத்த கருத்துள்ள புத்தகமே அது. ஆனால் முடிவில் மட்டும் வேறுபட்டுள்ளார்கள்.

11:40 PM, August 04, 2008
//

ஆங்கிலப் புத்தகங்களை எப்போதும் ஆர்வமுடன் வாங்குவேன். ஒவ்வொரு நூலிலும் 50 பக்கத்துக்கும் மேல் படித்ததே இல்லை. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
படிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....

ஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..

:)

11:40 PM, August 04, 2008
//

என்னது வால் மட்டும் தான் நுழைந்ததா ?
:))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
****GK நேற்றுவரை நன்றாகதானே இருந்தீர்கள்****

அது ஒரு பொய்த்தோற்றம் (illusionukku தமிழ் வார்த்தை தெரியவில்லை)

11:41 PM, August 04, 2008
//

:)

பொய்யும் அல்ல, மெய்யும் அல்ல, அந்த காலகட்டத்தில் இருப்பது தான். கால ஓட்டத்தின் ஊடான நிகழ்வுகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
ஆர்வமாய் வாசிக்க வைத்த அருமையான பதிவு திரு. கோவி. கண்ணன்.

//கிபி 2000க்கு முன்பிறந்திருந்தால் //

இதில் தட்டச்சுப் பிழை வாசிப்பைக் குழப்புகிறது.

3:34 AM, August 05, 2008
//

தட்டச்சுப் பிழைதான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று மாற்றிவிட்டேன். பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//TBCD said...
படிக்கும் போதே மூச்சு முட்டிவிட்டது....//

எனக்குந் தேன்!
ஒரு ஜோடா ப்ளீஸ்! பன்னீர் ஜோடா...

//ஒரு கேள்விக்கு இம்புட்டு விளக்கமா..//

அதான் கோவி!
நீங்க அடிக்கடி பதிவர் சந்திப்புக்கு எல்லாம் போயி பழக வந்திருக்கோம்-ன்னு சொல்லி பழகணும் டிபிசிடி அண்ணாச்சி!

அப்ப தான் கோவி அண்ணனோட விஸ்வரூபம் தெரிய வரும்! :))

7:20 AM, August 05, 2008
//

அப்ப தான் கோவி அண்ணனோட விஸ்வரூபம் தெரிய வரும்! :))

டிபிசிடி ஐயாவுடன் சுற்றுலா சென்ற வகையில் 4 நாள்களுக்கும் மேலாக கூடவே இருந்திருக்கிறேன். ஒரு பதிவர் நண்பருடன் அதிக மணித்துளிகள் இருந்தது நண்பர் டிபிசிடியுடன் தான். மறக்க முடியாத நினைவுகள். அங்கே விஸ்வரூபம் காட்டி இருந்தால் அடிச்சு துறத்தி இருப்பார். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இன்னுமா ஆக்கலை?
ஆடி மாசம், வேப்பலை அடிச்சி, ஆக்கிருவமா? சொல்லுங்கண்ணோவ்! :)

உங்க மகிமைக்கு பல சூடான பதிவுகளை எல்லாம் மிதிச்சிங்க! தீ மிதிச்சிங்க! அடுத்து நியூக்ளியர் பவரைத் தான் நீங்க மிதிக்கணும், சொல்லிட்டேன்! :)
//

வேணாம் அழுதுடுவேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

கோவி.கண்ணன் சொன்னது…

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆரம்பமே தப்பு!

//கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது//

//அழும் போது மட்டும் தான் கண்ணீரே வருகிறது! சரியா? :)//

சரியான உதாரணம் இல்லை, கடும் துன்பத்தின் போது நினைக்கப்படும் கடவுள் ஏன் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்ய முடிவெடுக்கையில் வருவதில்லை. அப்படி வந்தால் அவன் நிதானம் இழந்திருக்க மாட்டானே. அழுதால் மட்டுமல்ல மிளகாய் பொடி போட்டாலும் கண்ணீர் வரும் !
:) கண்ணீர் வரக் காரணம் ஒன்று உணர்ச்சிவசத்தால், மற்றொன்று எரிச்சல். தவறான உதாரணம் ரிஜெக்டட் !

:))

//பச்சைக் குழந்தைக்குப் பசிக்கும் போது மட்டும் தான் அம்மா ஞாபகம் வருதோ?
பசிக்கும் போது அழுது, அம்மாவைத் தேடி இறுகுது! அவ்வளவு தான்!//

அம்மா ஞாபகம் வருமா என்று தெரியாது, பசி உணர்வை அழுகையாக வெளிப்படுத்தும், துணி ஈரமானாலும், எங்காவது கையை விட்டு நசுக்கிக் கொண்டாலும் வீரிடும்.

//**கடும் துன்பம் தீராத போது கடவுள் நம்பிக்கையே போகிறது? :))//

அது கடும் கடும் துன்பம் நேரும் போதுதான். 'இம்புட்டு நம்புனோம், கண்டுகொள்ளவே இல்லையே' பெரும்பாலும் அன்பு உறவினர்கள் எதிர்பாராமல் மறையும் போது, பெரும் பொருள் நட்டம் ஏற்பட்டு நடுத்தெருவுக்கு வரும் போது இறை நம்பிக்கை தற்காலிகமாக மட்டுமே இருக்காது. பிறகு வழக்கம் போல் மாறிவிடுவார்கள்.

கயல்விழி சொன்னது…

ரொம்ப ஆழமான பதிவு, இரண்டு பகுதிகளாகவோ அல்லது தொடராகவோ எழுதி இருக்கலாம். ஒரே பதிவில் எழுதக்கூடிய அளவு லைட் சப்ஜெக்ட் கிடையாது இது.

உங்களுடைய கருத்துக்களில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு.

கிரி சொன்னது…

//அவரவருக்கு கடும் துன்பம் நேரும் போது மட்டுமே கடவுள் பற்றிய நினைவே வருகிறது//

உண்மை, மறுப்பதற்கு இல்லை. நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான் என்று கூறுவார்கள்.

//பதிவு நீண்டுவிட்டது,//

திடீர்னு உண்மை தமிழன் மாதிரி ஆகிட்டீங்க :-) சத்யராஜை கூறவில்லை..நம்ம பதிவர் உண்மை தமிழன் :-)

//தன்னை நம்புவர்களை மட்டும் தான் கடவுள் காக்கும் என்று நம்புபவர்கள் உண்டென்றால் அவர்களின் அந்த கடவுளுக்கான உருவகம் மிகமிகத் தாழ்வானதே//

தாழ்வானதே என்பதை விட மிக மிக தவறானது..

//இறைவன் இருக்கிறான் என்று நம்புவதால் எனக்கு ஒருவகையான பலனோ, இறைவன் இல்லை என்று சொல்வதால் மாற்றான வேறு பலனோ எனக்கு ஏற்படப் போவதில்லை.//

எதுவாகவும் யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதாபிமானமுள்ள நபராக இருந்தாலே போதுமானது.

நல்ல பதிவு கோவி கண்ணன்

kanchana Radhakrishnan சொன்னது…

முகவை மைந்தன் ராமால் எங்களுக்கு ஒரு அருமையான பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்கள் முதல் நன்றி அவருக்கு.
கோவி சார் excellent

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
முகவை மைந்தன் ராமால் எங்களுக்கு ஒரு அருமையான பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்கள் முதல் நன்றி அவருக்கு.
கோவி சார் excellent
//

kanchana Radhakrishnan ஐயா,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

அவ்வப்போது இதை எழுதி வருவதன் சிறுதொகுப்புதான் இவை. எனது பதிவுகள், பின்னூட்டங்கள் என பலவற்றில் இதிலுள்ளவற்றைச் சொல்லி இருக்கிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

அம்மாடியோவ்வ்வ்வ்.....
எப்பப் படிச்சி முடிக்கிறது இந்தப் பதிவை...
நான் வரல சாமீ...
:P

நையாண்டி நைனா சொன்னது…

"ராம்" கேள்வி கேட்டாலும், "ராமரை" வைத்து கேள்வி கேட்டாலும் பெரிதாகவே உள்ளது. "ராம், ராமர்" பிரச்னை என்றாலே படிக்கும் போது கண்ணை கட்ட தான் செய்கிறது

பின் குறிப்பு:
இதில் உள்குத்து, புறகுத்து, மேல்குத்து, கீழ்குத்து எதுவும் கிடையாது. அப்படி தோன்றினால் அதற்கு நான் காரணமும் அல்ல.

பாரி.அரசு சொன்னது…

//இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை...
//

நல்ல நகைச்சுவை!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

/ஜெகதீசன் said...
அம்மாடியோவ்வ்வ்வ்.....
எப்பப் படிச்சி முடிக்கிறது இந்தப் பதிவை...
நான் வரல சாமீ...
:P
//
இன்னொரு முறை பதிவர் சந்திப்புக்கு மலை ஏறுவது போலவா இருக்கு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
"ராம்" கேள்வி கேட்டாலும், "ராமரை" வைத்து கேள்வி கேட்டாலும் பெரிதாகவே உள்ளது. "ராம், ராமர்" பிரச்னை என்றாலே படிக்கும் போது கண்ணை கட்ட தான் செய்கிறது

பின் குறிப்பு:
இதில் உள்குத்து, புறகுத்து, மேல்குத்து, கீழ்குத்து எதுவும் கிடையாது. அப்படி தோன்றினால் அதற்கு நான் காரணமும் அல்ல.
//

ஹேராம்..........!
என்றாலும் பிரச்சனை தானே ! மகாத்மா காந்தி பாவம் இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// பாரி.அரசு said...
//இறைநம்பிக்கையும் ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டதென்றே தெரியவில்லை...
//

நல்ல நகைச்சுவை!
:)
//

அப்படித்தான் பலர் சொல்லிக்கிட்டு திரியுறாங்க. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் மொன்மையானவர்களாம், சாதுவானவ்சர்களாம், அப்படி என்றால் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் முரடர்கள், கொலைகாரர்கள் என்று தானே பொருள். அபத்தமாக இல்லை ?

முகவை மைந்தன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
முகவை மைந்தன் ராமால் எங்களுக்கு ஒரு அருமையான பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.எங்கள் முதல் நன்றி அவருக்கு.//

இப்படித் தான் கொஞ்ச நாளா கல்லா கட்ட வேண்டி இருக்கு ;-)

கோவிண்ணா, முடியலை... அன்னிக்கு மட்டும் விளக்கம் சொல்லி இருந்தீங்க, உலகில் முதன் முறையா நடந்த இரவு பதிவர் கூட்டமாப் போயிருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...


இப்படித் தான் கொஞ்ச நாளா கல்லா கட்ட வேண்டி இருக்கு ;-)

கோவிண்ணா, முடியலை... அன்னிக்கு மட்டும் விளக்கம் சொல்லி இருந்தீங்க, உலகில் முதன் முறையா நடந்த இரவு பதிவர் கூட்டமாப் போயிருக்கும்.

5:33 PM, August 05, 2008
//

இராம்,
இரண்டு மணி நேரம் எழுதிய பதிவுக்கு 2 வரி பின்னூட்டம் அதும் பதிவிற்கு தொடர்பு இல்லாமல். கண்டனம் !

தருமி சொன்னது…

நம்பிக்கையாளர்களின் நிலைப்பாடுகள் பொதுவாகவே ஊட்டப் பட்ட விஷயங்களாக இருப்பதைக் காண முடிகிறது.அந்த விஷயங்களை ஆணியடித்து நிறுத்துவது 'stick & candy'தத்துவங்களும், நீங்கள் சொல்லும் மறுவாழ்க்கை பற்றிய நம்பிக்கைகளும், பயங்களும்.

அதுவும் மனிதனுக்கு மட்டுமே தெரிகின்றதாய் நாம் நினைக்கும் மரணபயத்தைப் பற்றி நீங்கள் கூறுபவை மிகச் சரியாகவே தோன்றுகின்றன.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்