பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2012

சொந்தக் கதை இரண்டு !

வழக்கம் போல் சீனப் புத்தாண்டுக்கு சென்ற வாரம் முழுவதும் விடுமுறை, எழுதவோ படிக்கவோ நேரமில்லை, விடுமுறையின் முதல் இரு நாட்களில் அதாவது சென்ற ஞாயிறு 22 ஜெனவரி 2012 மற்றும் மறு நாள் திங்கள் சிங்கப்பூருக்கு வெகு அருகில் அமைந்துள்ள மலேசியாவின் ஜோகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 'பத்து பகாட்' என்ற சிறு நகருக்குச் இல்லத்தினரை அழைத்துச் சென்றேன். சிங்கப்பூரைக் கடந்து மலேசியாவில் நுழைந்து பேருந்து எடுத்தால் இரண்டு மணி நேரப் பயணத்தில் அந்த ஊரை அடைந்துவிடலாம். முன் பதிவு செய்யவில்லை, அங்கெல்லாம் விடுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே சென்று வந்த ஊர் என்பதால் சென்றேன், நம்பிக்கை பொய்க்கவில்லை, சீனப் புத்தாண்டின் துவக்க நாள் என்பதால் கூடுதலாக 30 ரிங்கிட்டுகள் வாங்கிக்கொண்டு 153 ரிங்கிட்டுக்கு 8 ஆம் மாடி அறை கிடைத்தது. அங்கு செல்லும் போதே இரவு 8 மணி ஆகி இருந்ததால் சிறுது ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த கடை பெருவளாகத்திற்கு சென்று விட்டு திரும்ப இரவு 11 மணி ஆகி இருந்தது, விடுதியில் இருந்து அருகே உள்ள இடம் என்றாலும் இரவு நேரத்தில் விடுதிக்கு திரும்ப வாடகை உந்திகளுக்கு காத்திருந்தால் எதுவும் கிடைக்கவில்லை. போகும் போது வாடகை உந்தியில் தான் சென்றோம், வேறு வழியில்லாமல குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு நடந்தோம், சீனப் புத்தாண்டின் இரவு என்பதால் நடமாட்டங்கள் இருந்தன. வான வேடிக்கைகள் துவங்கி இருந்தது, விடுதிக்கு வந்து சன்னலை திறந்து வைக்கவும் மணி இரவு 12 ஐ நெருங்க வான வேடிக்கைகளை சீனர்கள் கொளுத்திக் கொண்டு இருந்தனர், மேலிருந்து பார்க்க நகர் முழுவதும் வெடிச் சத்தமும் உயரே சென்ற வானங்களும் ஒளிக்கு அழகு சேர்ப்பது இரவு தான் என்று காட்டியது. ஒரு அரை மணி நேரம் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு பிறகு தூங்கிவிட்டோம்.

மறு நாள் காலையில் விடுதியின் பாடாவதி உணவில் ரொட்டிகள், காஃபி தவிர்த்து எதையும் சாப்பிட முடியவில்லை, எல்லாவிற்றிலும் அசைவம், நெத்திலி கருவாடு இல்லாமல் மலாய்காரர்கள் எதையும் சமைக்க மாட்டார்கள் போல, விடுதியை அடுத்து அங்கே அருகில் ஒரு சில தமிழர் உணவகங்களும் மலையாளிகளின் உணவகங்களும் இருந்தது. ஏற்கனவே தின்ற ரொட்டி (ப்ரட்) துண்டுகள் போதுமானவையாக இருந்தால் வேறு இடத்தில் எதையும் சாப்பிடாமல் பத்து பகாட் மால் எனப்படும் மிகப் பெரிய கடை பெருவளாகத்திற்கு செல்ல முனைந்தோம், பேருந்து நிலையம் அருகே ஆறு ஒன்று ஓடுவதாக விடுதியாளர்கள் சொன்னார்கள், அதையும் பார்த்துவிட்டு பிறகு பெருவளாகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்து ஆற்றுப் பகுதிக்குச் சென்றோம், கரை புறண்ட வெள்ள மாக பெரிய ஆறு ஓடிக் கொண்டு இருந்தது.


ஆற்றின் கரைகளில் நிறைய உணவகங்கள் இருந்தன ஆனால் அவை மாலை வேளைகளில் தான் திறக்கப்படுமாம், ஒவ்வொரு உணவகத்திற்கு பின்னும் ஆற்றின் கரைப் பகுதி இருந்தது, இறங்கி கால் நினைக்கும் அளவுக்கு வசதிகள் இல்லை, தடுப்புகள் இருந்ததன, படகு சவாரி செய்யும் இடங்களும் இருந்தன, சுள்ளென்ற வெயில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, பிறகு பேருந்து நிலையம் வந்து கடை பெருவளாகத்திற்கு பேருந்து ஏறினோம். பெருவளாகத்தில் பசிபிக் என்ற பேரங்காடி இயங்கியது அங்கு குழந்தைகளுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு திரும்ப மாலை 3 மணி ஆகியிருந்தது ஏற்கனவே பேருந்தில் மாலை 4 மணிக்கு முன் பதிவு செய்திருந்ததால் விடுதிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பேருந்தில் ஏறி சிங்கப்பூருக்கு திரும்பினோம்.

பத்து பகாட் சிறிய நகரம் தான் சுற்றுலா நகரம் இல்லை, சிங்கப்பூரில் இருந்து காலையில் புறப்பட்டால் மாலைக்குள் வந்துவிடலாம், ஒரு நாள் அங்கு தங்குவது குழந்தைகளுக்கும் மாற்றாக இருக்கும் என்றே சென்று தங்கி வந்தோம், கைக் குழந்தையை வைத்துக் கொண்டு நெடும் தொலைவு பயணம் அதுவும் பேருந்தில் சென்றுவருவது எளிதல்ல, இரண்டு மணி நேரம் பேருந்தினுள் இருப்பதற்கே படுத்திவிட்டான்.

******

ஒருவார விடுமுறையில் அலுவலக வழங்கிகளுக்கு (சர்வர்) மற்றும் அந்த அறையில் குளிரூட்டிக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று அனைத்தையும் முறைப்படி நிறுத்திவிட்டு வெள்ளிக்கிழமை துவக்கி விடுவதாகத் திட்டம், சீனப்புத்தாண்டு விடுமுறையின் முந்தைய கடைசி வேலை நாள் முடிவில் திட்டப்படி அனைத்தையும் நிறுத்தினேன், இவ்வாறு செய்வதால் கொஞ்சம் மின்சாரம் சேமிக்க முடியும் மற்றும் வழங்கிகள் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப கருவிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம், தொடர்ச்சியாக ஓடுவதில் இருந்து சற்று அதற்கு சற்று ஓய்வு கிடைக்கும். திட்டமிட்டபடி சென்ற வெள்ளி அலுவலகம் சென்று வழங்கிகளை இயக்கினால் சரியாக வேலை செய்யவில்லை, இணைய இணைப்பு மற்றும் பிற வழங்கிகளையும் வழி நடத்தும் வழங்கி தொங்கி நின்றது. இரண்டு நாள் கழித்து திங்கள் தான் அலுவலக வேலைகள் துவங்குகிறது என்றாலும் முன்கூட்டியே செயல்பாட்டில் வைத்திருந்தால் திங்கள் கிழமை பதட்டம் இல்லை என்பதால் முன்கூட்டியே வெள்ளி அன்றே இயக்கத் துவங்கினேன், அன்றைக்கு எனக்கு நேரம் சரி இல்லை, அன்று முழுவதும் எத்தனையோ முந்தைய நாள் வழங்கி இயக்க சேமிப்புகளை உள் செலுத்தில் இயக்கினாலும் முரண்டு பிடித்தது. சீனர்கள் மிகவும் செண்டிமென்ட் பார்ப்பவர்கள் சீனப் புத்தாண்டு முடிந்து முதல் நாள் இணைய இணைப்பு மற்றும் கணிணிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எரிச்சல் அடைவார்கள், இது நன்கு தெரிந்ததால் எனக்கு மன அழுத்தம் மேலும் மேலும் கூடிக் கொண்டே வந்தது அடுத்து என்ன செய்வது ? இது போன்று மிக தேவையான வேளைகளில் உதவும் தொடர்பிலுள்ள பிற நிறுவனங்களிம் விடுமுறை என்பதால் திங்கள் கிழமையை எப்படி எதிர்கொள்வோம் ? என்ற கேள்வியில் அதற்கு மேல் தெளிந்த சிந்தனைகள் ஏற்படவே இல்லை, வேலை பறிபோகுமா என்பது கூட எனக்கு கவலை இல்லை. திங்கள் கிழமை காலையில் மின் அஞ்சல் பார்க்க முடியாமல் போக, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு பதில் சொல்வது நிறுவன செயல்பாட்டையே கேள்வியாக்கிவிடும் என்ற கவலை ஏற்பட்டது.

இவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கையில் முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த போது அங்கு சேவையாளராக வந்து உதவிய ஒரு சீன நண்பரின் அலைபேசிக்கு குறுந்தகவல் 'அனுப்பிவிட்டு காத்திருந்தேன், இத்தனைக்கும் எனக்கும் அவருக்குமான தொடர்புகள் விட்டுப் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது, இடை இடையே பண்டிகைகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதுடன் சரி. உடனேயே நாளை உதவுகிறேன் என்பதாக பதில் அனுப்பி இருந்தார்

அன்றைய நாள் இரவு 9 மணி வரை வழங்கியை பல முறை முயற்சி செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன், மறு நாள் காலையில் அழைத்துப் பேசினார், மாலை வருவதாகச் சொன்னார், அன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று காத்திருந்தேன் மாலை வரை வரவில்லை, பிறகு இரவு 11 மணிக்குத்தான் என்னால் வரமுடியும் என்றார். அவர் வீடு என் வீட்டில் இருந்து சில கிமி தொலைவில் இருப்பதால் நான் வீட்டுக்கு சென்று, உணவிற்குப் பின் இரவு 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகச் சொன்னேன், சொன்னபடி அங்கு காரில் வந்து என்னை ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார்

நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழங்கியை முற்றிலும் நிறுத்திவிட்டு மற்றொரு வழங்கிக்கு சேவைகள் அனைத்தையும் மாற்றிவிட்டு இயக்க அனைத்தும் இயங்கத் துவங்கியது. இங்கே பிரச்சனை என்னவென்றால் ஒரு மருத்துவர் ரத்த தொடர்புள்ளவர்களின் மீது கத்தியை வைக்க யோசிப்பது போன்றது தான், அவர் செய்த அதே வேலையை என்னால் செய்ய முடியும் இருந்தும் நம் முயற்சி வீணாகுமோ, குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட முடியுமோ என்ற அச்சம். இதே உதவியை வேறு யாரும் என்னிடம் கேட்டிருந்தால் நான் செய்து முடித்திருப்பேன். பாதிப்பு நமக்கு இல்லாத இடத்தில் நம்மால் பொருமையாக சிந்தித்து செயல்பட முடியும், நம் சார்ந்தவற்றில் ஏற்படும் பாதிப்பு அதை சரிசெய்ய நேரும் போது ஏற்படும் பதட்டம் மூளையை சிந்தனை செய்யவே விடாது.

வழங்கி வேலை செய்யமல் போனது, அவற்றை சரி செய்தது இங்கு முக்கிய தகவல் இல்லை, ஆனால் தொடர்ந்து தொடர்பில் இல்லாத ஒருவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நினைப்பு எனக்கு ஏன் ஏற்பட்டது ? அவர் பழகியவிதம் மட்டுமே, எத்தனையோ சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் சொல்லப்படும் ப்ரண்ட்லி முறையில் இணைந்து செயல்படுபவர்கள் குறைவே, நான் உதவி செய்யக் கோரி குறுந்தகவல் அனுப்பிய போது அவர் சீனப் புத்தாண்டு விடுமுறையில் அவரது சொந்த ஊருக்கு மலேசியா சென்று திரும்பிக் கொண்டு இருந்தாரம், அவருக்கு 4 வயதிற்குள் மூன்று குழந்தைகள் வேறு, அன்றைய நாள் சனிக்கிழமை தான் மாலை தான் திரும்பி இருக்கிறார், உடனே வரமுடியாமல் போனது, வேறு யார் என்றாலும் என்னால் முடியாது ரொம்ப அலுப்பு வருந்துகிறேன் என்று மின் அஞ்சல் அனுப்பி இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் ஒப்புதல் பெற்று இரவு 11 மணி ஆனாலும் உதவுகிறேன் என்று உதவிக்கு வந்து அனைத்தையும் சரி செய்த போது எனக்கு கடவுளாகத் தெரிந்தார், ரொம்பவும் நெகிழ்சியாக இருந்தது, என்னையும் அதிகாலை நான்கு மணிக்கு என் வீட்டின் அருகே இறக்கிவிட்டு, அருகே காபி வாங்கிக் கொடுத்துச் சென்றார். எனது அலுவலக்த்தில் என்னுடன் நல்ல நட்புடன் இருக்கும் சீனர்கள் கூட சனி / ஞாயிறு எங்காவது அழைத்தால் வரமாட்டார்கள், சனி / ஞாயிறு குடும்பத்திற்கான நாள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார்கள். அவர் செய்த உதவிக்கான பணத்தை என்னால் பெற்றுத் தரமுடியும் மற்றும் அவருக்கு அந்த வேலைக்கு பணம் கிடைக்கும் என்றாலும் வேறு சிலரிடம் கேட்கப்படும் இதே போன்ற நெருக்கடி வேலை உதவிக்கு முன்கூட்டியே பணம் பற்றி பேசப்படும், விடுமுறை நாள் என்பதால் மிகவும் கூடுதலாகவே கேட்பார்கள், எந்த ஒரு வேண்டுகோளும் வைக்காமல் வந்து உதவி செய்பவர்கள் மிக மிகக் குறைவே.

நாம எப்படிப் பட்டவராக இருந்தாலும் நம்முடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய இக்கட்டான நேரத்தில் யாருடைய முகம் தெரிகிறதோ அவர்கள் தான் நமக்கு முக்கியமானவர்கள். அப்படிப்பட்டவர்கள் நமக்கு கிடைக்கலாம் கிடைக்காமலும் கூடப் போகலாம் ஆனால் அப்படிப் பட்ட முகத்தை நாமும் வைத்திருக்க வேண்டும் என்பது நான் அவரிடம் கற்றுக் கொண்டது. நமக்கான உதவி சரியான வேளையில் கிடைக்க நாமும் கொஞ்சமேனும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்படித் தான் இருக்கிறேன் என்று அவர் வந்து உதவிய போது எனக்கும் கொஞ்சம் என்னைப் பற்றிப் பெருமையாகத் தான் இருந்தது

30 ஜனவரி, 2012

பெருவெடிப்பும் வாயுப் பிரிப்பும் !

கடைசியாக நடந்த பெருவெடிப்பு என்று 14 பில்லியன் ஆண்டுகளைச் சொல்லுகிறார்கள் அறிவியாலாளர்கள், 14 பில்லியன் ஆண்டுகள் என்பது மனித வயதையும் மனித இனத் தோற்றதையும் ஒப்பிட எண்ணற்ற ஆண்டுகள் அதாவது வரலாறுகளுக்குள் அடங்காத ஒரு காலம். 14 பில்லியன் ஆண்டுகள் என்கிற கணக்கு பால்வெளித் திறள்களின் இடப்பெயர்வு அல்லது விரிவு அவற்றின் ஒளித்தன்மையையும் வைத்துச் சொல்லப்படுகிறது. நூற்றாண்டுகள் தொலைநோக்கி வழியாக ஆய்ந்ததின் பயனாக பால்வெளித் திறள்கள் சுழலுகின்றன மற்றும் நகர்ந்து விரிவடைகின்றன, பால்வெளித் திரள்களின் விரிவுகள் என்பது முன்பு இருந்த இடத்தில் இருந்து மொட்டுகள் வளர்ந்து விரிவது போன்றது என்று படங்களின் வழியாக விலக்குகிறார்கள், அதாவது அடர்வுமிகு ஒரு புள்ளியில் இருந்து அடர்வின் விசையையானல் வெளித் தள்ளப்பட்டு விரிவது தான் பிரபஞ்சத் தோற்றம் என்பது தற்போதைய அறிவியலாளர்களின் முடிவு.

இதை முற்றிலும் தகர்க போதிய அளவு மதங்களிடையே எந்த ஒரு ஆதாரமும் இல்லை, மாறாக பிரபஞ்ச விரிவும் அவற்றின் வாயுக்களின் சேர்க்கையும் பிரபஞ்சம் மற்றும் கோள்களை தோற்றுவிக்கின்றன என்பதௌ மதங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது என்று காட்டிவிட்டாலே தங்கள் மதம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்று காட்டிவிடலாம் என்பதே மதப் பற்றாளர்களின் திட்டமாக உள்ளது.

Job 9:8
He alone stretches out the heavens and treads on the waves of the sea.

Psalm 104:2
He wraps himself in light as with a garment; he stretches out the heavens like a tent

Isaiah 40:22
He sits enthroned above the circle of the earth, and its people are like grasshoppers. He stretches out the heavens like a canopy, and spreads them out like a tent to live in.

பழைய ஏற்பாட்டின் வசனங்களாம்,

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.

மேலே ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளதற்கும் கீழே தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேறு சில பழைய ஏற்பாட்டு வசனங்களும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, மேலே கடவுளின் செயல் என்று குறிப்பிட்டு இருப்பவையில் சுவர்கத்தை ஒரு டெண்ட் டைப் போல் விரித்தான் என்றும் கீழே பூமி படைக்கப்பட்டபிறகே சூரியன் உள்ளிட்டவைகள் படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பெருவெடிப்பு நிருபனம் செய்ய முடியாத நிலையிலும் பூமியும் மற்ற சூரிய குடும்ப கோள்களும் சூரியனில் இருந்து பிரிந்தவை என்பதும், நிலவு பூமியில் இருந்து பிரிந்தது என்பதே (அவை சுற்றும் விசைகளின் மையம் தொட்டு அறிவியலாளர்களின் கூற்று) இதை இன்று வரை மதப்பற்றாளர்களால் மறுக்கவும் முடியவில்லை. இதற்கான வசனங்கள் இறைப்புத்தகங்களில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறார்கள், ஆனால் மதப்புத்தகங்களில் பூமி முதலில் படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால் தடுமாறுகிறார்கள்.

பெருவெடிப்பு என்ற கொள்கையின் தொடர்ச்சியில் தான் பரிணாமக் கொள்கையும் வருகிறது, ஆனால் பெருவெடிப்புக்கு வசன ஒட்டுப் போடும் மதப்பாற்றாளர்கள் பரிணாமம் என்றால் எட்டிக்காயாக தெரிகிறது, காரணம் ஆதாம் - ஏவாள் பற்றிய கருத்தாக்கத்தை முற்றிலும் சிதைக்கிறது. அனைத்தும் தான் தோன்றியவை என்பது பரிணாமவாதிகளின் கூற்றாக இருக்கும் போது கடவுளால் படைக்கப்பட்டது, படைப்பு அற்புதம் என்றெல்லாம் சுட்டிக்காட்ட ஒன்றும் இல்லாத சூழலில் பரிணாமவாதிகளை மறுக்க வழியில்லாமல் டார்வினுக்கு குரங்குபடம் போட்டு ஆத்திரம் தீர்த்துக் கொள்கிறார்கள் அன்றி அவற்றிற்கு மூலமான பெருவெடிப்புக் கொள்கையை கைப்பற்றிக் கொள்கின்றனர்.

ஆம் வானத்தில் இருந்து பூமியைப் பிரித்தான் என்ற வசனம் பெருவெடிப்பைத்தான் பேசுகிறது, எனவே எங்கள் மதம் கடவுளால் உண்டாகப்பட்டதற்கு இதுவே நிருபனம் என்கிறார்கள்.

******

மிக எளிதாக போர்களின் மீதும், கைப்பற்றுவதன் மூலமும் பரவிய மதங்கள் (குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை, பெருவாரியான மதங்கள் அப்படித்தான் பரவின) அரசர் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்று தான் மதங்கள் அரசர்கள் மதம் மாறியதன் மூலம் மாறினார்கள், ஆங்கிலேயர்களின், ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பால் கிறித்துவம் பரவியது, இஸ்லாம் பரவிய விதம் பற்றி நான் சொன்னால், அவர்கள் மதத்தை கிள்ளிவிட்டேன் நான் என்று சர்சை ஆகிவிடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையில் அதைப் பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. பவுத்தமும் அரசர்கள் வழியே தான் பெருவாரியாகப் பரவியது.

இன்றைக்கு மன்னர் ஆட்சிகள் ஒழிந்து மக்கள் ஆட்சிகள் ஏற்பட்ட நிலையில் மதங்களைப் பரப்ப அறிவியல் முட்டுக்கட்டையாக நிற்பதால் அறிவியலை வரித்துக் கொள்ளுதல் என்ற நிலையில் மதப்பற்றாளர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள், அதாவது மதம் அறிவியலை மெய்ப்பிக்கிறதாம், அறிவியல் மூலம் மதக்கருத்துகள் நிருபனம் செய்யப்படுகிறதாம், அறிவியலை மதம் மெய்பிக்கிறதா ? அல்லது அதிலிருந்து உருவப்படும் தகவல் மதக்கருத்துகளுடன் ஒட்டவைக்கப்பட்டு மதங்களுக்கு உயிர்பிச்சை கேட்கப்படுகிறதா என்பது வேறு விவாதம். இதுவே இப்படிப் பட்ட விவாதமாகப் போகும் போது 'உங்கள் வேதம் இறைவனால் அருளப்பட்டதா ?' என்ற விவாதங்களின் மூலாம் எதை மெய்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மற்றவர்களின் மதநம்பிக்கை விமர்சனம் செய்யத் தக்கது என்ற நிலையில் இருப்பவர் தம் மதம் விமர்சிக்கப்படும் போது பொங்கி எழுவது சகிப்புத்தன்மை அற்ற செயலின்றி வேறு என்ன ?

திரும்பவும் பிக்பாங்க், ஆம் அவை ஏற்கனவே என்னுடைய மதத்திலும் சொல்லப்பட்டுள்ளது அவை வாயுப்பிரிதல் போன்று மிகப் பெரிய சத்தத்துடனும் வெளிப்பட்ட வாயு அதிலிருந்தே அனைத்தும் தோன்றின. என்னுடைய மதத்தின் பெயர் பூனையிசம், பூனை தான் எனது கடவுள். பூனை எப்படி கடவுளாக முடியும் ? எகிப்தியர்களின் கடவுள் பூனையாம், நாமெல்லாம் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய பல்வேறு கூட்டங்களாம். நான் என் மூதாதையர்களின் மதத்தை முன்னும் பின்னும் பற்றுகிறேன்

28 ஜனவரி, 2012

மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ்மணம் !

இந்த இடுகைக்கு விளக்கம் தேவை இல்லை, இருந்தாலும் ஒரு சில விவரங்களைக் கூறிக் கொள்கிறேன்.

ஆக்கப்பூர்வமான படைப்புகளும், நல்ல விவாதங்களையும் எழுதுவதை ஊக்குவிக்க திரட்டிகள் பயன்படுகின்றன, அண்மைக் காலமாக மதவாதிகளின் பிரச்சாரக் கூடமாகவே பலர் எழுதுகிறார்கள், என்னைப் போன்றவர்கள் திரட்டிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறோம். நான் தமிழ்மணம் தமிழ்வெளி தவிர்த்து வேறு எந்த திரட்டிகளுக்கும் அடிக்கடிச் செல்வதில்லை.

தமிழ்மணம் முகப்பை திறந்தாலே எதோ ஒரு மதபிரச்சாரப் பதிவும், சூடான இடுகைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டும், மகுடம் பகுதியில் தங்கள் இடுகையே நிற்கவேண்டும் என்று வாக்குக் குத்தி நிறுத்துகிறார்கள், தனித்துக் குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை, அனைவருக்குமே இது தெரியும் என்பதால் தனியாகச் சொல்லி நான் மதவாதிகளின் கோபத்தைக் கிளறவிரும்பவில்லை, ஆம் நான் மதவாதிகளுக்கு பயப்படுகிறேன், அவர்களின் அவதூறுகளுக்காகப் பயப்படுகிறேன் என்று சொல்ல வெட்க்கப்படவில்லை, அது தான் உண்மை. என் பெயரில் அவர்களாவே பல இடங்களில் பின்னூட்டங்கள் கூடப்போட்டுக் கொள்கிறார்கள், அங்கெல்லாம் சென்று நான் விளக்கம் சொல்ல விரும்வும் இல்லை.

முன்பு தமிழ்மணம் மதவாதிகளையும், சோதிடப் பதிவர்களையும் கட்டம் கட்டியது, பின்னர் நாங்கள் மதம் பற்றி மட்டுமே எழுதவில்லை, 'இட்டலி பொடி செய்வது எப்படி ?' என்றும் போட்டுள்ளோம் என்று கூறி புரட்சி செய்து தமிழ்மணத்தின் வாயை மூடி மு(ம)டக்கினார்கள். பவர் ஸ்டார் லத்திகா படத்தை 300 நாள் ஓட்டியது போல் மதவாதிகளின் பதிவுகள் குழுவாக வாக்குக் குத்தப்பட்டு மிகச் சிறந்த இடுகை என்பது போல் காட்டப்படுகிறது. புதிதாக பதிவு எழுதவருபவர்கள் பதிவுலகில் மதம் தான் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியதோ, எழுத வேண்டியதோ என்று நினைத்து விலகி ஓட வைக்கும் ஆபத்து உண்டு.

திரட்டிகளும், பதிவுலகும் மேம்பட மதவாதிகளைப் புறக்கணிக்க வேண்டும், நானும் ஒரு சில மதவாதிகளின் சர்சைகளுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறேன், எதிர்வினை எழுதி இருக்கிறேன் இப்போது அது தவறு என்றே நினைக்கிறேன்.

இது இப்படியே போனால் பீடி சாமியார், கேடி சாமியார் கதைகள் கூட ஆன்மிகம் போன்று மதவாதிகளால் கடைவிரிக்கப்படும்.

பின்குறிப்பு : மைனஸ் ஓட்டு விழும் என்றாலும் கூட இது மிகவும் தேவையான ஒரு தகவல் தான், மதவாதிகளின் மைனஸ் ஓட்டுகள் வரவேற்கப்படுகின்றன, ஆனால் அவை பாசிட்டிவ் வாக்காக் கருதப்படும்.

26 ஜனவரி, 2012

அரசியல்வாதிகள் இவர்களின் காலில் விழலாம் !

வேறெந்த விலங்குகளைக் காட்டிலும் மனித விலங்கின் அடிப்படை குணம் நேர்மை, உண்மை, அன்பு, ஈகை, அரவணைத்தல் ஆகிய மற்றும் பிற நற்குணங்கள், ஆனால் கட்டுக்கடங்காமல் வளர்ந்த மக்கள் தொகை பெருக்கம் அதனால் போதிய உணவின்றி பஞ்சம் பட்டினி மற்றும் அரசியல் வாதிகளின் சுரண்டல் ஆகியவற்றால் மனித இனத்தின் அடிப்படை குணங்களை செய்தித்தாளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது, யாருடையது என்று தெரியாமல் கீழே கிடக்கும் ஒரு விலை உயர்ந்த பொருள் நம்முடையது இல்லை என்றால் நேரம் இல்லை என்றால் அதை கண்டும் காணாமல் செல்வது போதிய நேரம் இருந்தால் உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்வது இது தான் மனித குணமாக இருக்க வேண்டும், ஆனால் நடைமுறையில் தனதாக்கிக் கொள்வர், திருடினால் தானே தப்பு என்ற வியாக்கியானமும் தமக்குள்ளே செய்து கொள்வர், இது ஒருவகையில் திருட்டு தான் என்றாலும் கை நீட்டிக் குற்றம் சொல்ல முடியாத ஆனால் நமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை வைத்திருக்கிறோம் என்பதை தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இது போன்ற அதிர்ஷ்டங்கள் பிறரின் இழப்பின் எதிர்வினையான நிகழ்வு மட்டுமே. மனித குணம் தன்னலமாக மாறியதற்கு முதலில் மக்கள் தொகை பெருக்கமும், அதற்கு தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றிற்கு போதிய பொருளாதார வசதி இன்மையே. ஓரளவு பொருளியல் வளர்ச்சியில் உள்ள நாடுகளில் திருட்டுப் பழக்கம் குறைவு தான், பிறர் பொருளை எடுப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், அங்கெல்லாம் களவு என்பது அன்றாட நிகழ்வு அல்ல, ஆனால் நிகழ்ந்தால் அது அன்றைய செய்தியாகிவிடும். ஆயிரம் மதங்களும் அதில் நாலாயிரம் பிரிவுகளும் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலனவர்கள் அடிப்படை நேர்மைகளை கற்றுக் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல எதுவுமில்லை, காரணம் வயிற்றுப் பாட்டுக்கு முன்பு மதமாவது மண்ணாங்கட்டியாவது. அவற்றையெல்லாம் மீறி மனிதனில் சிலர் நேர்மையாளனாக இருப்பதற்கு காரணம் தன்னளவில் அவற்றை விரும்புகின்றனர் அதற்கு மதமோ மண்ணாங்கட்டியோ காரணமாக அமைவதும் இல்லை. ஏழைப் பணக்காரன் இவற்றிற்கு இடையேயான பொருளாதார இடைவெளி மனித நேர்மையை தொலைவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

மேலே புகைப்படத்தில் உள்ள அம்மா இரயில் பெட்டியை தூய்மை செய்யும் ஒரு துப்புரவாளர் தான், அவர் நினைத்திருந்தால் பணத்தை பதுக்கி இருக்க முடியும், ஆனால் மிகவும் நேர்மையாக அவற்றை ஒப்படைத்திருக்கிறார். இந்த தகவல் வாரம் பழையது என்றாலும் நான் இதனை இங்கு குறிப்பிடக் காரணம், நேர்மையாளர்களை தேடிப் பிடிக்கும் அளவுக்குத்தான் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நாட்டில் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கே நேர்மையாளர்கள் தென்படுகிறார்கள்.

இன்னும் ஒருவர் அவர் பெயர் 'பரிஜத் சாஹா'. தன் பெயரில் தவறாக செலுத்தப்பட்ட 49000 கோடி இருப்புக் கணக்கை வங்கியிடம் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி தானாகவே முன்சென்றிருக்கிறார்

நம்பிக்கை அடிப்படையில் ஆட்சிக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகள் திருடர்களாகவே மாறியுள்ளனர், கோடிகளில் ஊழல் புரியும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் இவர்களது காலில் விழுந்து வணங்க மிகவும் தகுதியானவர், திருத்திக் கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகள் இவரின் சிறு நீரைக் கூட குடிக்கலாம்.

25 ஜனவரி, 2012

18 வயதிற்கு மேற்பட்டோருக்கானது !

முன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க்கவும். மற்றபடி 18 வயதிற்கு மேலான ஆண்கள் பெண்கள் படிக்கலாம், பதின்ம வயதை கடந்த பெண்கள் அறிந்து கொள்வதினால் தவறு அல்ல.

கழுவதா ? துடைப்பதா எது சிறந்தது ? : இதை நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை, 'கால் கழுவி வந்தான்' - இடக்கரடக்கல் (நன்றி திரு டோண்டு) என்ற தமிழ் இலணக்கத்தை கற்று தான் வந்திருப்பீர்கள், பொதுவாகவே வெளிநாட்டினரை பேப்பரை வைத்துத் துடைத்துக் கொள்பவர்கள் சுத்தமற்றவர்கள் என்று நம்மவர்கள் கேலி செய்து தமக்குள் நகையாடுவார்கள், அதை வெளிநாட்டுக்காரர்களிடம் சொல்லி இருக்கிறார்களா ? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, குளிர் நாடுகளில் கழுவ எப்போதும் சுடுநீர் கிடைக்காத சூழலில் இலை தழை, துணிகளில் துடைத்துக் கொள்ளுதல் எளிய வழியாக இருந்து, நடுங்கும் குளிரில் பச்சைத் தண்ணீரும் குளிராகத்தான் இருக்கும், அதைப் பயன்படுத்திப் பார்த்தால் தான் அந்த கொடுமையே தெரியும். தாள்கள் கண்டுபிடிப்பின் பிறகு தண்ணீர் உறிஞ்சும் தாள்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். நாங்களெல்லாம் தண்ணீர் ஊற்றி கையினால் கழுவுவோம் என்று கூறினால் இந்தியர்களுக்கு கைகுலுக்க வருபவர்கள் யாரும் உவந்து கொடுப்பார்களா ? நம்மில் எத்தனை பேர் கழுவும் போதும் கழிவிய பின்பும் சோப்புகளைப் பயன்படுத்துகிறோம், சென்னைப் போன்ற பெருநகரங்களில் கழுவதற்கு ஒரு கப் தண்ணீர் தான் என்ற நிலையில் கைச் சுத்தம் என்று எதைக் கூறுவோம் ? இருந்தாலும் பிறரைப் போல் தான் நாமும் என்பதால் நம் தயக்கங்கள் நம்மிடையே கைகுலுக்களின் போது வருவதில்லை.

நாங்கள் தண்ணீர் விட்டுக் கழுவோம் என்றதும் ஒரு சீனர், அருவெறுபான பார்வையுடன் 'நாங்கள் அங்கே வெறும் கையை வைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக நினைத்து தான் தாளை பயன்படுத்துகிறோம், உங்களால் எப்படி முடிகிறது ? தவிர நீங்கள் கையினால் பிசைந்து சாப்பிடுபவர்கள் அல்லவா ? (நாம அதுக்கென்றே கை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது) வெறுங்கையால் கழுவீர்களா ? என்று கேட்டார், பின்னர் 'சாக்கடையில் கையை விட்டு சோப்பு போட்டு கழுவினாலும் நமக்கு அறுவெறுபாகத் தானே இருக்கும் என்றார் ?' எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, 'இல்லை நாங்கள் சாப்பிட வேறு கையைப் பயன்படுத்துவோம்' என்று சொல்லும் முன் இரண்டு கையினால் தட்டப்பட்டு சாப்பிடப்படும் மசால் வடை மனசாட்சி தடுத்தது. தண்ணீரில் கழுவதினால் தான் நாகரீகம் என்பது இல்லை, இப்பொழுதெல்லாம் ஈரத் தன்மையுடன் கூடிய உறிஞ்சு தாள் வந்துவிட்டது, அதில் கிரிமி நாசினியும் சேர்த்தே வருகிறது, வெறும் பேப்பரில் துடைப்பதைக் காட்டிலும், தண்ணீரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நலமேன்மை கொண்டது, நன்றாக உறிஞ்சு தாளால் துடைத்துவிட்டு பின்னர் தண்ணீரால் கழுவி, பின்னர் கையையும் சோப்புப் போட்டுக் கழுவினால் பின்னர் யாருக்கும் கைகொடுக்கும் முன்பும் மனசாட்சி உறுத்தாது.

*********

விருத்த சேதனம் : நண்பர் சுவனப்பிரியன் மிக அழகாக விருத்த சேதனம் பற்றி கட்டுரை எழுதியுள்ளார், அவர் எழுதியதற்கு எதிர்வினை அல்ல இப்பதிவு, மாறுபட்ட கருத்து மட்டுமே. விருத்த சேதனம் என்றால் என்ன ? எனக்கு தெரிந்து இந்த சொல் பழைய ஏற்பாட்டு பைபிள்களின் மொழிப் பெயர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் சிலர் பயனபடுத்துகிறார்கள், பழைய ஏற்பாட்டு பைபிளின் மொழிப் பெயர்ப்பில் நிறைய வடமொழிச் சொற்கள் இடம் பெற்றிருக்கும், விருத்த சேதனம் என்ற சொல் வடமொழியில் 'ஆண் குறி முன் தோல் நீக்கம்' என்பதன் மொழிப் பெயர்ப்பு ஆகும், விருத்தம் என்பது ஆண் குறி - இன 'விருத்தி'க்கான உறுப்பு என்பதன் சுறுக்கம்
சேதனம் - என்றால் சிதைத்தால், அதாவது ஆண் குறி சிதைப்பு என்ற பொருளில் தான் அந்த சொல்லின் வடமொழிப் பொருள் உள்ளது, ஆண் குறியின் முனைவரை மூடியிருக்கும் தோலின் முன்பகுதியை வெட்டி எடுப்பதே விருத்த சேதனமாம். இதை ஆங்கிலத்தில் ( circumsion) என்பர், இதற்கு தமிழில் 'முன் தோல் நீக்கம்' என்று பொருள், இவை தொடர்புடைய இடத்தில் (Contextual) பயன்படுத்தும் போது புரிந்து கொள்ள முடியும் என்பதால் முழுதாக 'ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம்' என்று எழுதத் தேவை இல்லை. இவ்வாறு எளிதாக புரியக் கூடிய தமிழ் சொற்கள் இருக்க இவை இன்னமும் விருத்த சேதனம் என்றும், சுன்னத் என்றும் சொல்லப்படுவதற்கு காரணம் இவை இன்னமும் மதரீதியான சடங்காக இருக்கிறது என்பதே காரணம். தண்ணீர் கிடைக்காத பண்டையை பலதார பாலைவன தேசங்களில் முந்தோல் நீக்கம் ஆண் குறி கிரிமித் தொற்றினையும் அவற்றினால் ஏற்பட்ட அரிப்பு பாதிப்புகளை ஓரளவு தடுத்தது.

நண்பர் சுவனப்பிரியன் இவை என்னமோ ஒட்டு மொத்த ஆண்களின் தேவை போன்று மிகைப்படுத்தே எழுதியுள்ளார், இதை செய்து கொள்வதால் 60 விழுக்காடு உயிர்கொல்லி (எய்ட்ஸ்) பாதிப்பில் இருந்து பாலியல் தொழிலாளியிடம் சென்று வருபவர்களைக் காக்குமாம். உண்மை என்றாலும் மீதம் 40 விழுக்காட்டிற்கு எந்த உத்திரவாதமும் அதில் இல்லை. இவர் சொல்வதைப் படித்துவிட்டு முன் தோல் நீக்கிக் கொண்டவர்களில் ஒரு சிலர் பத்தாம் பசலியாக இருந்து தொலைந்து பாலியல் தேவைக்காக விலைமாந்தரை நாடுபவராக இருந்தால், அவர் தாம் ஆண் உறை இன்றி நாடமுடியும் என்று எண்ணி செயல்பட்டு நோயையும் நாடிவிடும் ஆபத்து உண்டு.

என்னதான் முந்தோலை வெட்டிவிட்டு ஆண் குறிமுனைப் பகுதி மரத்துப் போய் இருந்தாலும் உடலுறவு நேரங்களில் சிறுநீர்பாதையின் துளை (Urethra) சிறுது திறந்து திறந்து மூடுவதால் பாலியல் கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது, இது தான் அந்த 40 விழுக்காட்டு ஆபத்து, இதை சுவனப்பிரியன் சொல்லவில்லை,
சுவனப்பிரியன் சொல்லும் 60 விழுக்காட்டு வாய்ப்பு என்பது முந்தோலின் உட்புறத்தில் கிரிமி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் தான். இவற்றின் பாதிப்பை உடலுறவு முடிந்த பிறகு கழுவதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும், ஆனால் மேற்சொன்ன 40 விழுக்காடு வாய்ப்பில் முன் தோல் நீக்கியவரும் நீக்காதவரும் தகுந்த ஆணுறை பயன்படுத்தாவிட்டால் ஒன்றே.

முந்தோல் நீக்கம் என்பது யூதர்களாலும், அவர்களின் மத வழியின் பிரிவுகளில் ஒன்றான இஸ்லாமியர்களும் பின்பற்றி வரும் மதச் சடங்கு ஆகும், தற்போது யூதர்களிடையே இப்பழக்கம் குறைந்துவருகிறது, இஸ்லாமியர்களிடம் கட்டாயக் கடமை என்று தெரிகிறது, மற்றபடி இதில் அறிவியல் பயன் மருத்துவ பயன் என்று எதுவுமே இல்லை, முன்பல் நீட்டிக் கொண்டிருபவர்களுக்கு அவற்றை பின் தள்ளி சரி செய்யும் பல் மருத்துவம் போன்றதே, முந்தோலை தள்ள முடியாத மதவழக்கமாக அதை ஏற்கனவே செய்திருக்காதவர்கள் அதை நீக்கிக் கொண்டால் ஆண் குறி விரைப்பின் போது வழி ஏற்படாது,

அடுத்த நீடித்த இன்பம் தர முனைத்தோல் நீக்கம் பயன் அளிக்கிறது என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, காரணம் முன் தோல் நீக்கிக் கொள்வதால் குறி முனை உடல் தோல் போன்று தடிப்பாகி உணர்வு நரம்புகள் கட்டுப்பட்டிருக்கும் என்பதால் அவை உண்மையே என்றாலும் நீடித்த உடலுறவை பெண்கள் விரும்புகிறார்களா ? என்பதும் முக்கியம், பெண் குறி பாறையின் துளை அல்ல அதுவும் உணர்வுச் சதையே தேவைக்கு மிஞ்சிய உராய்வு பெண்ணுக்கு எரிச்சலையே தரும் என்றே நினைக்கிறேன்.

முன்தோல் நீக்கிக் கொள்ளாதன் பயன் என்று மருத்துவர்களாலும், ஆண்களாலும் உணர்ந்து சொல்லப்படுவை, உடலுறவு உராய்வின் போது முந்தோல் முன்னும் பின்னும் நகர்ந்து விரிவதால் ஆண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது, மேலும் உணர்ச்சி மிக்க ஆண் குறி முனையும் மென்மையும் முந்தோலால் பாதுக்காப்பட்டு மிக எளிதிலேயே விறைப்படைய உதவுகிறது, குறிப்பாக ஆண்களின் சுய இன்பத்தில் முந்தோலின் பங்கு என்னவென்றால் உடலுறவுக்கு நெருக்கமான இன்பத்தைக் கொடுக்கும், ஆனால் இதையெல்லாம் முன் தோலை சிறுவயதில் இருந்தே நீக்கப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சோகமே.

*********

பாலியல் நோய் பரவலை 60 விழுக்காடு முந்தோல் நீக்கம் கட்டுப்படுத்துகிறது என்பதும் உண்மை என்றாலும் அந்த உண்மை பாலியல் தொழிலாளியை நாடுபவர்களுக்கும் திருமணத்தைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பவர்களுக்கும் தேவைப்படலாம், ஒழுக்கமாக குடும்பம் நடத்துபவர்களுக்கும் குளிக்கும் போது முன்தோலை பின் தள்ளிக் கழுவி தூய்மையாக வைத்திருப்பவர்கள்க்கும் தேவையற்றது. ஒருவருக்கு ஒருவர் என்று வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான ஒன்று சுவனப்பிரியன் கூறுவதை நான் கடுமையாகவே மறுக்கிறேன், நகைப்புக்கு இடமான கூற்று, காரணம் எதோ ஒரு மதச்சடங்குகளில் ஒரு காதை அறுத்துக் கொள்வது காது கேட்கும் திறனை அதிகரிக்கும் என்று ஒரு கேணப்பயல் அறிவியல் / மருத்துவ உண்மை என்று கொளுத்திப் போட்டு அனைவரையும் காதுகளை அறுத்துக் கொள்வது தான் மனித குல நன்மை என்று சொல்லுவது போன்றது தான் இவை.

மதச்சடங்காக நீக்கிக் கொண்ட அமெரிக்க யூதர்களும், இஸ்லாமியர் அல்லாத பிறரும் அவற்றை மீண்டும் வளர்த்து எடுக்கின்றனர், நீக்கிக் கொண்ட தோலை வளர்த்தெடுக்க மருத்துவ முறைகளும் உண்டு. முன் தோல் நீக்கம் ஏன் செய்யக் கூடாது ? அல்லது முன் தோல் நீக்கம் செய்வதை தவர்க்க வேண்டும் ? என்பதற்கு 1000க் கணக்கான சுட்டிகள் உள்ளன, அவற்றில் ஒன்றை இரண்டையாவது சுவனப்பிரியன் படித்திருப்பார் என்பது ஐயமே,

நண்பர் சுவனப்பிரியன் மதப்புத்தகங்கள் தவிர்த்து பிறவற்றையும் படிக்க வேண்டும் என்று கீழ்கண்ட சுட்டியைத் தருகிறேன்

Foreskin restoration

Circumcision_controversies

பின்குறிப்பு: குற்றவாளிகள் நிறைந்த நாடுகளில் சட்டம் கடுமை மிக மிகத் தேவையான ஒன்று, அது போல் பாலியல் தொழிலாளியை மிகுதியாக நாடும் நாட்டினருக்கும் தேவையான ஒன்றாக முன் தோல் நீக்கம் இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அதன் மூலம் பாலியல் நோய் தடுப்பை 60 விழுக்காடு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை என்றாலும் அதன் பொருள் 60 விழுக்காடு தடுக்கப்பட்டதாக ஆகாது, அந்த 60 விழுக்காட்டின் பாதிப்பில் இல்லாதவர்கள் இன்னொருநாள் பாலியல் தொழிலாளிடம் செல்லும் போது சிக்கிக் கொள்வார்களா ? இல்லையா ? என்பதை முன் தோல் நீக்கம் முடிவு செய்யாது, சென்று வரும் எண்ணிக்கையே அதை முடிவு செய்யும்.

மதச் சடங்கு என்ற பெயரில் காதை அறுத்துக் கொள்ளட்டும், விரலை வெட்டிக் கொள்ளட்டும், காது குத்திக் கொள்ளட்டும், ஆனால் அது பொதுவான முக அழகையும், விரல் அழகையும் தரும் என்பது வெறும் பொய்யுரை தான்.

19 ஜனவரி, 2012

பக்வா (சீன வகை உப்பு கண்டம் ) !

சீனப் புத்தாண்டு நேரங்களில் சீனர்களிடையே வாங்கப்படும் மிக முக்கியமான பொருள்களில் இந்த 'பக்வா' உண்டு (肉干 - rou-gan,- dried meat). சீன உணவு வகைகளில் விலை உயர்ந்த உணவு பண்டமும் இது தான், மொழிப் பெயர்ப்பு என்ற அளவில் உப்பு கண்டம் என்று குறிப்பிட்டுள்ளேன், ஆனால் உப்பு கண்டமென்பது நமக்கெல்லாம் தெரியும் (மீன்) கருவாட்டைப் போன்று உப்பு சேர்த்து காய வைத்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தான் உப்பு கண்டம் என்று சொல்கிறோம், அவற்றில் உப்பு சேர்ப்பது அவை ஆண்டு கணக்கில் கெடாமல் இருக்கும் அதை தேவைப்படும் போது எடுத்து சமைக்கப் பயன்படுத்த முடியும், உப்பு கண்டம் என்படுவது ஊறுகாய் (முக்காலம் உணர்த்தும் வினைத்தொகையில் அமைந்த பெயர்ச் சொல்) போன்று ஊறூண் (அதாவது ஊறும் ஊண்) என்று சொல்ல முடியும், உப்பு கண்டம் என்றால் என்னவென்று தெரியாவதர்களுக்காக அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன், தமிழ் ஆராய்ச்சிகளை சற்று தள்ளி வைத்துவிட்டு மீண்டும் பக்வா வின் பக்குவம் பற்றிப் பார்ப்போம்.

பக்வா ஆடு, மாடு, பன்றி இறைச்சி என்ற வகைகளில் செய்யப்படுகிறது, இருந்தாலும் விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை, மற்றும் அது விரும்பி வாங்கப்படும் ஒன்றாகும். பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது, அதை வாங்கி பக்குவமாக (தணல் அல்லது நெருப்பில்) வாட்டி சிங்கை மற்றும் மலேசியாவில் விற்கிறார்கள், இவை மிளகு அடை போன்று தட்டையாக கருஞ்சி சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவை ? தட்டையாக்கி இதை பதப்படுத்தும் போதே இதனுடன் காரம், இனிப்பு, சோயாச் சாறு மற்றும் உப்பு சேர்த்து வெயிலில் பாறைகளின் மீது காய வைப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு காய வைக்கப்பட்டதை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடை பார்த்து காற்றுப் போகாமல் அடைக்கப்பட்டு ஏற்று மதி செய்யப்படுகிறது, அதை கடைகள் வாங்கி நெருப்புத் தணலில் இரு பக்கமும் வாட்டி சுட சுட விற்பனை செய்கிறார்கள்.

சீனப்புத் தாண்டு சீசனில் இவற்றிற்கென சிறப்புக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும், விளக்குகள் அலங்காரங்களுடன் குறிப்பிட்ட சில கடைகளின் பக்வா சுவை மிகுந்தது என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவே இருக்காது (இருட்டுக்கடை அல்வா போன்று), அதற்கு வாடிக்கையளர் சொல்லும் காரணம், அவர்கள் தரமான மூலப் பொருள்களை நம்பிக்கையான இடங்களில் இருந்து வாங்கி பக்குவமாக செய்து தருகிறார்கள், உடல் நலத்திற்கு பாதுகாப்புடன் சுவைக்கும் குறைவில்லை என்பதே.

நம் மீனவர்கள் விற்காத அல்லது நொந்து போன மீனைக் குறுக்காக வகுந்து உப்பு சேர்த்து மணலில் காய வைத்து கருவாடு போடுவார்கள், வஞ்சிரம், கொடுவா மற்றும் வவ்வாள் மீன்கள் வீணாகமல் கருவாடு ஆக்கப்படுகிறது. பக்வா முன்பெல்லாம் விற்காமல் அல்லது பயன்படுத்தி மீதமான இறைச்சியை பதப்படுத்து பக்குவா செய்யப்பட்டதாம், தற்பொழுது இருமுறைகளில் அவற்றை தயாரிக்கிறார்கள், மெல்லப் பொடித்த இறைச்சியை தட்டையாக்கி செய்வது மற்றொன்று பெரிய துண்டங்களை சிறு சிறு தட்டையாக்கி செய்வது, இரண்டாம் முறையில் செய்வது விலை மிகுதி. இவ்வகை பாக்வா பெரும்பாலும் சதுர, செவ்வக வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது, மிகவும் தரமாக தாயரிக்கப்பட்டு அவை 5 செமி விட்டமுள்ள வட்டவடிவிலும் விற்கப்படுகிறது, அதற்கு பெயர் தங்கக் காசு (Golden Coin), இவை பெரும்பாலும் பரிசு பைகளாக வாங்கிக் உறவினர்களுக்கு அளிக்க தயாரிக்கப்படுகிறது.


மதம் சார்ந்த சீன விழாக்கள் மற்றும் சீன பாரம்பரிய திருமணத்தில் பக்வா கண்டிப்பாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று. தரமான பக்வா கிலோ 60 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது என்றாலும் பக்வா விலை கிலோவிற்கு 40 வெள்ளி என்பது மலிவான விலை. பெரிய சீன நிறுவனங்கள் தங்களுக்குள் விற்பனை உறவை பேன பக்வா அடங்கிய பெரிய பரிசு பொட்டலங்கள் மற்றும் பைகளை அனுப்பும். காரமும் இனிப்பும் சேர்ந்த இறைச்சி சுவையுடன் இருந்தாலும் காரம் மிகுந்த, இனிப்பு மிகுந்த, காரம் குறைந்த, இனிப்பு குறைந்த வகைகளில் பல்வேறு தரங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

நம்மக்களிடையே கருவாட்டுக் குழம்பு, மற்றும் உப்பகண்ட விரும்பம் போல், 40 வயதிற்கு கீழ் உள்ள சீனர்கள் இதை விரும்பி உண்ணுவது இல்லை, நன்கு பழகிய நாக்குகள் அந்த சுவையைத் தேடித் தேடி வாங்குகின்றனர். மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது, மிளகு அடை (தட்டை) போன்று தனியாகவும் கடித்து உண்ணுகிறார்கள், இது பார்க்க மென்மையாக வளைக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது.

உணவுகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு சுவை, இதில் பக்வாவுக்கு மட்டும் இடம் இல்லையா என்ன ?

நான் என் சீன நண்பர்கள் சிலரிடம் இந்த புத்தாண்டுக்கு பக்வா வாங்கியாச்சா ? என்று கேட்டால் சிலர் 'ஐயே......' என்பது போல் பார்கிறார்கள், சிலர் 'யெஸ்....' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்னொரு நாள் 'பக்குத்தே' என்ற பன்றி இறைச்சி வகை உணவு பற்றி எழுதுகிறேன். அவை பெரும்பாலும் உள்ளுறுப்புகள் எனப்படும் பன்றி ஆர்கன்களில் செய்யப்பட்ட ஒரு வகையாக சூடான சாறு வகை. கணவாய் மீன், அக்டோபஸ் மற்றும் பாம்பு கருவாடுகளையெல்லாம் இங்கு தான் பார்க்கிறேன்.

இவற்றையெல்லாம் நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் சாப்பிடுபவர்களின் ரசனையை ரசித்து இருக்கிறேன்.


அன்றைய விற்பனையில் 'பக்வா' தீர்ந்து போன அறிவிப்பின் பிறகும் வரிசையில் நிற்பவர்கள் ()

'பக்வா' வாங்க 8 மணி நேரமாக காத்திருப்பவர்கள் (S'poreans queuing overnight for bak kwa)


'பக்வா' வாங்கி வர அனுப்பி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் (சர்சை My boss told me to come, so I came, cannot argue. I'm very tired,' )

18 ஜனவரி, 2012

மீண்டும் வந்துவிட்டது டிராகன் !

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் ராசி விலங்கு (Shēngxiào (Chinese: 生肖)) டிராகனாம், நான் சிங்கையில் பார்ப்பது இரண்டாவது டிராகன், 12 ஆண்டுக்கு ஒரு முறை 12 விலங்குகளின் சின்னம் மாறி மாறி வரும். எலி, எருது, புலி, முயல், டிராகன்(யாளி), பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகியன பணிரெண்டு விலங்குகள்.

சீனர்கள் பிறரின் வயதை அறிந்து கொள்ள நீங்கள் எந்த விலங்கில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள், அதை வைத்து அகவை (வயதை) கணக்கிடுவார்கள், உடல் தோற்றம், தலை மயிர் அடர்த்தி, நிறம், தோல் அமைப்பு வைத்து நாம் பார்க்கும் எவரையும் கிட்டதட்ட வயது முடிவு செய்யமுடியும், ஒருவர் குதிரை ஆண்டு பிறந்திருந்தால் அவரது தோற்றத்தை வைத்து அந்த சுழற்சில் 12, 24, 36, 48 என்ற அளவில் கிட்டதட்ட அவரது வயது தெரிந்துவிடும், கூடவே இந்த ஆண்டு என்ன விலங்கு என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பதால் சரியான வயதை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆண்டு டிராகன் என்றால் 40+ வயது மதிக்கத் தக்கவர் தாம் குதிரை ஆண்டு பிறந்தவர் என்று சொன்னால் அவரது சரியான வயது 46 என்று அறிய முடியும், டிராகனில் இருந்து குதிரை ஆண்டு வர இரு ஆண்டுகள் ஆகும் அப்போது தான் அவருக்கு 48 ஆக இருக்கும். வயதை மறைப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால் எதாவது பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த விலங்கு ?' என்று போட்டு வாங்கித் தான் கண்டுபிடிப்பார்கள். சீனர்கள் இந்த பனிரெண்டு விலங்கு பெயர்களையும் அவை வந்து சென்ற ஆண்டையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், 1970 ஆ ஆண்டு என்ன விலங்கு ? என்று கேட்டால் 12 வாய்ப்பாட்டில் கூட்டிக் கழித்து அந்த ஆண்டு என்ன விலங்கு (சேவல்) என்று உடனேயே சொல்லிவிடுவார்கள்.

சீனர்களின் சோதிடம் இந்த 12 விலங்குகளையே சார்ந்தது, அதாவது குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த அனைவருக்கும் ஒன்று போல பலன் தான், மொத்தம் 12 வகையான பலன்களில் ஒவ்வொருவருக்கும் மான பலன் பார்க்கப்படுகிறது, அதாவது 12 பேரில் ஒருவருக்கு ஒருவர் பலன் மாறுபடும், இந்த ஆண்டில் (டிராகனில்) பிறந்தவர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு பிறப்பவர்களுக்கும், 2000 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் ஒரே பலன் தான், பிற ஆண்டுகளில் பிறந்தவர்களின் பலன் ஆண்டில் விலங்கு ஏற்றவாறு மாறி இருக்கும்.

ஆண் குழந்தை மோகம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே இல்லை, பொதுவாக ஆசிய இனத்தின் பண்பாகத்தான் இருக்கிறது, சீனர்களும் குடும்பத்தின் அடுத்தகட்ட தொடர்சிக்கும், கடைசி கால பாதுக்காப்பிற்கும் ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்பதை விரும்புவர்களாக இருக்கிறார்கள், சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் வேறு வழியின்றி அரசை பின்பற்றுகின்றனர். என்னுடன் பணி புரியும் சீனப் பெண் இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தைப் பெற்றதும் மிக மகிழ்ச்சியாக இப்போது என்னால் குழந்தை உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினாள்.

மேற்சொன்ன விலங்கு ஆண்டுகளில் டிராகன் மற்றும் புலிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது, பல சீனர்கள் இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், மற்ற விலங்குகளை விட இந்த இரு விலங்குகள் மிகவும் அதிர்ஷடம் வாய்ந்ததாம். திருமணம் ஆனவர்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவர்களாகவும் பலர் இருக்கின்றனர், மற்ற ஆண்டுகளைவிட சீன மக்கள் தொகையில் பிறப்பு விகிதம் இந்த இரு ஆண்டுகளில் ஓரளவு கூடுதலாகவே இருக்கும்.

******

சீனப் புத்தாண்டின் போது சீனா முழுவதும் ஒருவார அரசு விடுமுறை, அரசு அலுவலங்கங்கள், பொது நிறுவனங்கள் இயங்காது, அவரவர் அவரவரது பிறப்பிடங்களில் தொடர்பு இருந்தால் சென்றுவிடுவார்கள், வனிக வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கும், சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மை என்பதால் அவர்கள் நடத்தும் உற்பத்தி சார்ந்த நிறுவங்கள் பெரும்பாலானவை ஒருவார விடுமுறையை கடைபிடிக்கின்றனர். எங்கள் அலுவலகமும் ஒருவாரம் விடுப்பு தான், சீனப் புத்தாண்டு இரண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது, பழைய பொருளில் பயன்படுத்த முடியாதவற்றை வெளியே தூக்கி வைத்துவிடுவார்கள், பழைய கணிணி, தொலைகாட்சி பெட்டிகள் கூட வெளியே வைக்கப்பட்டு பார்த்திருக்கிறேன்,

சீனப் புத்தாண்டுக்கு சீனர்கள் பெரும் செலவு செய்வார்கள், ஏராளமான இனிப்பு பண்டங்கள், ரொட்டிகளை வாங்குவார்கள், குழந்தைகளுக்கு ஹங்பாவ் (ரெட் பாக்கெட்) எனப்படும் பணப்பரிசு கொடுப்பார்கள், அதற்கே அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் வரை தேவைப்படுமாம், சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அல்லது பொது இடங்களில் குடும்பங்களாகக் கூடி உண்டு மகிழ்வர். சீனப்புத்தாண்டின் இருநாட்களும் சிங்கையில் பொதுப் போக்குவரத்தில் சீனர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், பெரும்பாலும் அன்றைக்கு உறவினர்கள் வீடு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல வாகன வசதி இல்லாதவர்கள் வாடகைக்காரில் தான் செல்வார்கள். இந்த இரு நாட்களில் சுற்றுலா தளங்களில் சீனர்களைப் பார்ப்பதே அரிது. பேருந்துகள், தொடர்வண்டிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். சிங்கையில் வசிக்கும் சீனர்களில் ஏரத்தாள முப்பது விழுக்காட்டு சீனர்கள் அண்டை நாடு மலேசியாவில் இருந்து வந்து தங்கியவர்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது மலேசியாவிற்கு திரும்பிவிடுவர். அது போலவே பிற நாட்டு சீனர்களும் தாயகம் திரும்பி இருப்பார்கள்.

சீனரின் பாரம்பரிய நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இன்றும் தொடர்கின்றனர், குறிப்பாக இறந்த உறவினர்களுக்கு தாள்களை எரிப்பது, தாள்களினால் செய்யப்பட்ட இறந்தவர்களுக்கு விருப்பமான பொருள்களை செய்து எரிப்பது, சுற்றுச் சூழல் கெடுதல் என்ற வகையில் சிங்கப்பூர் அரசு அவற்றை தடுக்காவிட்டாலும் எரிக்கும் இடங்கள், அவற்றின் புகை, கரி பரவல் குறித்த கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. சீனர் நம்பிக்கை பழங்காலத் தொடர்பில் இருந்தாலும் எங்களுடைய நம்பிக்கையே உயர்ந்தது என்று அவர்கள் பிறரை வலியுறுத்துவதோ, தாழ்த்துவதோ கிடையாது. என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு குழுவும், அமைப்பும் மூட நம்பிக்கையைக் கடைபிடித்தாலும் அவற்றினால் பிறருக்கு தீங்கு இல்லாவிட்டால் அவற்றை விமர்சனம் செய்ய ஒன்றுமே இல்லை.

சீனப் புத்தாண்டுகள் அடிப்படையில் சீனர்கள் விரும்பும் சிவப்பு வண்ணம் மயமானது, பாரம்பரிய சோதிட நம்பிக்கையின் தொடர்சி, ஆண்டு முறையின் தொடர்சி என்றாலும் அவற்றை பல்வேறு மதத்தைச் சார்ந்த சீனர்கள் யாவரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். சீனர்களைப் பொருத்த அளவில் முதலில் சீன இனம், பிறகு பேசும் மொழி, பிறகு பழக்கவழக்கம் பண்பாடு, அதன் பிறகு இறுதியில் தான் மதம் சார்ந்தவற்றிற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.

மனித இனம் நிறங்களினாலும், தோற்றங்களினாலும் பல்வேறு இனகளாக அடையாளம் கொண்டுள்ளது என்னும் போது அவ்வினங்களுக்குள்ளான பொது அடையாளத்தை தொடர்ந்து பேணுவதால் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமையை நிலைத்திருக்க முடியும் என்று சீனர்கள் நம்புவதால் சீனப்புத்தாண்டு சீனர்களுக்கு பொதுவானதாகும்.

*****

மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு இனங்களுடன் பழகிவருவதால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான முயற்சி எடுத்துவருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது சமூக நல்லிணக்கத்தின் நோக்கங்களுள் ஒன்று தான், ஆனால் அந்த எண்ணம் மட்டுமே அவற்றை ஏற்படுத்திவிடாது, காரணம் மனிதன் பல்வேறு இனங்களுடன் இணக்கம் கொண்டிருக்க விரும்பினாலும் தத்தமது இன அடையாளங்கள் காக்கப்படவேண்டும் மற்றும் தாமே ஆளுமை மையமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறான். பல்வேறு இனங்கள் வசிக்கும் ஒரு நாட்டில் புதிதாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் ஆணா பெண்ணா என்பதைவிட நம் மனம் கணக்கிடுவது இவர் இந்த இனம் சார்ந்தவர் என்பதைத் தான். பல்வேறு தோற்றங்களுடன் மனித இனம் பரிணாமம் பெற்றிருப்பது இயற்கையின் சதியா ? இயற்கையின் ரசிப்பா ? ஒரே வகைப் பூக்களை, நாய்களை பல்வேறு நிறத்தில் பரிணமிக்கப்பட்டு அழகு காட்டுவதைப் போல் மனிதனின் நிறத்தை/ தோற்றத்தை ஒருவித ரசனைக்காக இயற்கை ஏற்படுத்திவிட்டு இருக்கலாம். ஆனால் இனத்தோற்றங்களை வைத்து மனிதர்கள் தான் உயர்வு, தாழ்வு மற்றும் ஆளுமை எண்ணங்களை ஆறாம் அறிவின் தொடர்பில் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் இடம் பெயரும் போது அங்கு ஒரு நாட்டை அமைத்துவிடுகிறார்கள், தங்களது பண்பாடுகளை அங்கு கொண்டு வந்துவிடுகிறார்கள், குறிப்பாக இடம் பெயர்ந்தால் பிறகு அங்கு திரும்பிச் செல்வதே இல்லை, அதனால் தான் சீன இனம் பல்வேறு நாடுகளில் நீண்டுள்ளது மேலும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஆளுமை சக்தியாக வளர்ந்துள்ளது. இடம் பெயரும் ஊரை சொந்த நாடாகவே மாற்றி அங்கேயே உழைத்து வாழ்பவர்கள் ஆசியாவில் சீனர்கள் தான். சிங்கப்பூரில் இந்தியர்களின் பெருமூச்சுகளில் ஒன்று 'நம்மால் பெரிய அளவில் சீனர்களுக்கு போட்டியாக வரமுடியவில்லை' என்பது தான், காரணம் கால் காசு சேர்த்தாலும் அதை இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு ரிடையர்மெண்ட் காலத்தில் அங்கு சென்று அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலோர் செயல்படுவது தான், ஒரு நிலையான அடித்தளத்தை சிங்கையிலோ பிற நாடுகளிலோ தமிழர்களாலும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது, இந்தியர்கள் சீனர்களை ஒப்பிட மிகச் சிலரே சென்ற நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறி இருக்கிறார்கள், சீனர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை, சென்று வசிக்கும் இடமே அவர்களது எதிர்கால தாய்நாடு.

16 ஜனவரி, 2012

முற்றுப் புள்ளி !

தொடர்ச்சியாக எழுதுவதனால் பயன் என்று எதுவும் கிடையாது, நம்முடைய நேரத்தை பெரிதும் விழுங்கி இருக்கும் என்கிற கெடுதல் தான் அதில் உண்டு, நிறைய பாலோயர்கள் கிடைக்கலாம், அதனால் பெரிய பலன் ஒன்றும் கிடையாது, ஆனால் பதிவில் தொடர்சியாக எழுதுபவர்கள் நினைக்கப்படுகின்றனர், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம், நம்ம சிபி செந்தில் குமார் ஆயிரம் பதிவுகளை ஒண்ணறை ஆண்டுகளில் இட்டு முடித்து இருக்கிறார், ஆரம்பகாலங்களில் காபி பேஸ்ட் செய்தவர் பின்னர் தாமாகவே எழுதி அந்த எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறார், அதற்கு அவர் இழந்த நேரம் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். எனது பதிவுகள் பெரும்பாலும் நிகழ்வுகளின் விமர்சனம் என்ற வகையில் தான் எழுதப்படுகிறது. நாள் தோறும் சர்சைகள், ஒவ்வாநிகழ்வுகள், அரசியல் நிலைப்பாடுகள் மாற்றம் என்று எதாவது ஒன்று நிகழ்வதால் நாள் தோறும் எழுத விமர்சனம் செய்ய எதேனும் கிடைப்பதால் எழுதுவதன் தொடர்சிக்கு தீணி கிடைத்துக் கொண்டே இருக்கும், நான் எழுதுவதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பதே இல்லை. இருந்தாலும் அவற்றில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் எழுதுவது என்பதன் கட்டுப்பாடுகள் காரணமாக எனது நேரத்தை நான் சரியாகப் பயன்படுத்துவதில் உறுதியாகவே உள்ளேன், இது கடந்த ஆண்டுகளின் என் நேரங்கள் விழுங்கப்பட்டதில் கற்றுக் கொண்ட பாடம், நீங்கள் தொடர்ந்து நாள் தோறும் பதிவிடுபவர், அல்லது அனைத்தையும் வாசிப்பவர் என்றால் அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் இழந்த நேரங்களும், அவற்றினால் நீங்கள் இழந்தவை, செய்ய மறந்தவைப் பற்றி யார் சொல்லாமலும் அறிந்து கொள்வீர்கள்

*******

பாலாறும் தேனாறும் பற்றிய பதிவைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிரிவினைகள், நானே ஓட்டுப் போடாத என் பதிவுக்கு பலரும் வாக்களித்து இருந்தனர், மிக்க நன்றி, அதே சமயத்தில் வாக்குகள் எழுத்தின் தரத்தின் தீர்ப்பு அல்ல என்பதை நான் நன்றாகவே அறிவேன். வாக்குகளையும் வாசகர்களையும் பெற ஆயிரம் வழிகள் உண்டு, பிரபலப் பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அந்த உத்திகளை நன்றாக கையாளுகிறார்கள், அதில் எனக்கு எந்த குடைச்சலும் இல்லை, சும்மா உதாரணத்திற்கு சுட்டினேன்.

மதத்தீவிரவாதம் மிக மோசமானது, உலகில் மதச்சார்பற்ற நாடுகள் அனைத்தும் மதத்தீவிரவாதங்களை கடுமையாகவே எதிர்கின்றன. எனது நிலைப்பாடும் அதுவேதான், கூடவே தமிழ்நாட்டில் பிறந்ததால் சாதி எதிர்ப்பு மனநிலையும் உண்டு, ஒருவர் மதவெறியரா இல்லையா என்பதை அவர் மதம் சார்ந்த சமூகத்தை விமர்சனம் செய்யும் போது எரிச்சல் அடைவதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மனிதர்கள் தான் சார்ந்த கொள்கைகள் பாதிக்கப்படாதவரை சமத்துவமானவர்களாக தெரிகிறார்கள், பிறருக்கு அறிவுரைச் சொல்பவர்களாக தெரிகிறார்கள், எனக்கு வருத்தமெல்லாம் பெருவாரியான நல்லவர்கள் தங்கள் ஏன் நல்லவன் என்பதை நினைப்பது இல்லை, பெரும்பாலும் தத்தமது நல்ல மனம் தன் சாதிமதத்திற்கு ஆதரவாக அடமானம் வைப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. மதத்திற்கான அடிப்படை குணம் அது வழிபாடு அளவில் என்ற அளவில் தான், அடிமனதில் இருக்கும் நம்பிக்கை துன்ப வேளைகளில் ஒருவர் எந்த கடவுளின் பெயரைச் சொல்கிறார் என்பது மட்டுமே, மற்றபடி ஒரு மனிதனை தரம் பிரிப்பதில் மதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

ஒருவர் நல்லவர் என்றால் அவர் தம்மை தாமே உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நற்பண்புகளின் தொகுப்பு தான் அவர், அதற்கும் அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது, ஒருவீட்டில் நால்வரில் ஒருவர் நல்லவர் என்றால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை மதிப்பீடு செய்ய உதவாதது என்பது போல் தான். நீங்கள் நல்லமனிதர் என்றால் இருந்துவிட்டுப் போங்கள், ஆனால் அதை உங்களின் மதத்தில் உள்ளவர்களுக்கு சாதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை அளவுகோல் ஆக்கிவிடாதீர்கள், அது நீங்கள் உங்களுக்கு செய்யும் துரோகம், அவ்வாறு செய்வதனால் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் பிறர் செய்யும் கெடுதல்களையும் நீங்கள் உங்கள் முதுகில் சுமக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள்படும்.

பொதுவாக நான் எப்போதும் எழுதுவது சாதி வெறி மத வெறி குறித்த எனது பார்வை, பிரச்சனை இல்லாதவரை இவற்றினால் ஆபத்துகள் இல்லை, ஒருவர் சாதி சார்பாக இருப்பதற்கு சாதிவெறியனாக இருப்பதற்கு ஒரு நிகழ்வு தான் வேறுபாடு, உதாரணத்திற்கு சாதி சார்ந்த ஊர்வலம் செல்கிறது, யாரோ ஒருவன் ஒரு பேருந்துன் மீது கல் அல்லது யார் மீதோ கல் எறிகிறான், அது வெளியில் இருந்து வந்த கல்லாகக் கூட இருக்கும், நம்ம சாதிக்காரன் மீது கல்வீசிவிட்டான் டா என்று ஒருவன் கூவினாலே போதும் ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த இடத்தை ரண களமாக்கிவிடும், முடிவில் அவை சாதிவெறியின் அடையாளமாக மாறிக் கிடக்கும், கையில் தீவட்டியுடன் ஊர்வலம் போகும் சாதி சார்ந்த கூட்டம் அதே தீவட்டியை அங்கு உள்ள வீடுகளின் மீது வீசினால் அது சாதிவெறி அங்கு கலவரங்களால் பலர் கொல்லப்படும் வாய்ப்பு மிகுதி,. ஆக சாதிவெறி / மதவெறி ஆகியவற்றிற்கு இடையே வன்செயல் என்று நிகழ்வு தான் வேறுபாடு அந்த நிகழ்வு எந்த ஒரு நொடியுலும் ஏற்படக் கூடியது என்பதால் சாதி பற்றுக்கும் சாதிவெறிக்கும், மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

உங்கள் சிந்தனைக்கு...

விநாயக சதுர்தியின் போது சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மத ஊர்வலம் தான் செல்கிறது, அது மதவெறி ஊர்வலமாக மாற எத்தனை வினாடிகள் எடுக்கும் ?

*******

மதவெறி பற்றி பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர், அவற்றை நான் புறக்கணிக்கிறேன், குஜராத் மோடி அரசை விமர்சனம் செய்ய குஜராத்திகளாக இருக்க வேண்டுமா ? பின்லேடனை தீவிரவாதி என்று விமர்சனம் செய்ய இரட்டை கோபுரத்தில் எரிந்து உருக்குலைந்தவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டுமா ? இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஒரு இஸ்லாமியர் தான் அதனை மறுக்க வேண்டும் என்ற யாரும் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை, எனவே பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் நிகழ்வைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை கடுமையாக புறக்கணிக்கிறேன்.


மதவெறி பற்றிய விழிப்புணர்வுகளை பதிவுலகில் சார்ந்த பலர் நன்றாகவே அறிந்துள்ளனர், அதற்கு எனது கடந்த சில பதிவுகளும் கூட காரணமாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவதன் அயற்சி எனக்கு ஒவ்வாத ஒன்று, "தமிழ்மணத்தில் முகப்புகள் மதவாதிகளால் வாக்கு குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் நான் தமிழ்மணம் வழியாக படிக்க விரும்பவில்லை, ரீடர் வழியாக குறிப்பிட்ட பதிவுகளை நான் வாசிக்கிறேன்" என்றார் நண்பர் ஒருவர். இதனால் பாதிக்கப்படுவது புதிதாக பதியவரும் வலைப்பதிவர் தான், ஒருவேளை அவர் நன்றாக எழுதுபவராக இருந்தால் அவர் பதிவுகள் வாசிக்கபடாமலேயே போகலாம்.

எனக்கு சூடான இடுகை, முகப்பை ஆக்கிரமிப்பதில் ஆர்வம் இல்லை, மூன்றாண்டுக்கு முன்பு எழுதியதில் பெரும்பாலனவை அங்கு வந்து சென்றவை, அப்போது பதிவர்களின் எண்ணிக்கையும் குறைவு, இப்போது அந்த இடங்களை நான் தொடர்ந்து துண்டு போட விரும்பவில்லை, புதியவர்கள் தொடருட்டுமே. என் பெயரில் பிறர் எழுதியதும் சேர்த்தே தமிழ்மணத்தை ஆக்கிரமித்தவைகள் கீழ்கண்டவை.

தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, கடந்தவாரப் பதிவுகள் புதிய பதிவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன், பாலோயர்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.

*********

பின்குறிப்பு : முகம் தெரிந்த நண்பர்கள் பதிவுகள் தவிர்த்து எவருடைய எதிர்வினைகளுக்கும் நான் பதிவில் போடுவது கிடையாது. நான் எப்போதும் அறிவுரை செய்வதில்லை, பரிந்துரை மற்றவை விமர்சனம். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கம் சொல்லத் தேவை இல்லை, தெரியாதவர்களுக்கு என் விளக்கமும் பயன் தராது. இங்கும், தொடர்ச்சியாகவும் முன்பும் குறிப்பிட்ட மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை, குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன், அப்படியாக அனுமானிக்கும் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும், குறிப்பாக இந்தப் பதிவின் நெகட்டிவ் ஓட்டுகளும் கடந்த ஒருவாரப் பதிவுகளின் நெகட்டிவ் ஓட்டுகளும் பாசிட்டிவ் என்றே கொள்ளப்படும், வாக்களிப்பவர்கள் முடிவு செய்க.

:)

15 ஜனவரி, 2012

பிறமதத்தினர் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது நடக்குமா ?

இன்று மதியம் வீட்டின் அருகே ஒரு ஷாப்பிங் மால் (வணிக வளாகம்) சென்றுந்தேன், சீனப்புத்தாண்டு நெருங்குவதால் நாள் தோறும் வணிக வளாகங்கள் ஒவ்வொன்றிலும் அதனுள் இருக்கும் பொது மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்றைக்கு பார்த்த நிகழ்ச்சி கொஞ்சம் அதிர்ச்சி மற்றும் வியப்பை அளித்தது. மாலாய் முஸ்லிம்கள் மற்றும் சீனர்கள் இணைந்து சீனப் புத்தாண்டை வரவேற்றுப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்தனர். முழுக்க முழுக்க மலாய் பாடல்கள் அவை புரியாவிட்டாலும் ஒவ்வொரு பாடலுக்கு முன் ஆங்கில விளக்கம் கொடுத்தனர். மலாய்காரர்கள் என்றாலே அவர்களின் தாய் மொழி மலாய் மற்றும் அவர்கள் சார்ந்த மதம் இஸ்லாம் என்பது மட்டும் தெரியும். பாபாக்கள் என்ற ஒரு பிரிவினர் உண்டு அவர்கள் மலாய் - சீனக் கலப்பினர், அவர்களில் சிலரும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

எனக்கு தெரிந்து 'இஸ்லாமியர்கள் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா ?' அதாவது காஃபிர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு காஃபிர்களை இஸ்லாமியர்கள் வாழ்த்தலாமா ? என்ற சர்சைகள் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் ஒருபிரிவிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது, அந்த கேள்வியின் தேவை குறித்து ஆராய்ந்து அவர்களே பதிலும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்கள் இஸ்லாமிய இறைவனை வழிபடுவது இல்லை, அவர்கள் இணை வைப்பவர்கள் மற்றும் அவர்கள் வணங்கும் கடவுளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லாததால் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ஹாரம் (விலக்கப்பட்டுள்ளது) ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள், இதைப் படித்துவிட்ட நான் 'எனக்கு தமிழ் மற்றும் இந்து பண்டிகை நாள்களில் மதக் கட்டுப்பாடுகளை மீறி வாழ்த்து சொல்லும் இஸ்லாமிய நண்பர்கள் நன்மதிப்பு மிக்கவர்களாகவும் சமூக நேயம் தெரிந்தவர்களாகவும் தெரிந்தனர். ஏனெனில் கொஞ்சமாக மதத்தைக் கடைபிடிக்கலாம் என்பது போன்ற அனுமதிகள் அங்கு இல்லை, தன்னை இஸ்லாமியர் என்று உணர்ந்தவர் எவரும் இஸ்லாத்திற்கு புறம்பானவற்றை செய்யக் கூடாது என்பதே அம்மதம் வழியுறுத்துவதாகவும், மீறிச் செயல்பட்டால் அதற்கு ஏற்ற குறைவான நிரந்தர சொர்கப் பலன்கள் கிடைக்குமாம். எனவே தனது நிரத்தர சொர்கத்தின் பலன்களை நமக்கு வாழ்த்துச் சொல்வதால் செலவழிக்கிறாரே என்ற நெகிழ்ச்சியே இஸ்லாமிய நண்பர்கள் வாழ்த்து சொல்லும் போது எனக்கு ஏற்படும்.

மேலே சீனப் புத்தாண்டுக்கு வாழ்த்துப்பாடல் பாடும் மலாய்காரர்கள் (இசைக்குழு) பழமைவாதத்தை புறக்கணித்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டு சீனப் புத்தாண்டை வரவேற்கின்றனர்.

*******

தமிழ் கிறித்துவர்களில் கத்தோலிக்கப்பிரிவினர் பொங்கல் கொண்டாடி அவர்கள் மதவழக்கப்படி மாதாவுக்கும் ஏசுவிற்கும் படைத்து உண்ணுகின்றனர். அவர்கள் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுவது போல் தெரியவில்லை, நான் அறிந்தவரையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த சீனர்களுக்குள் சீனப் புத்தாண்டு பொதுவாகவே கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனாவில் பல்வேறு மதத்தை சேர்ந்த சீனர்களும், இஸ்லாமிய சீனர்களும் சீனப் பெயர்களைத்தான் இட்டுக் கொள்கின்றனர், அவர்கள் பெயர்களில் அரபு வாசனையோ, ஆங்கில வாசனையோ குறைவு, பவுத்த மற்றும் தாவோ இச சீனர்கள் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் சீனர்கள் மற்றுமே பிறர் கூப்பிடுவதற்காக தனக்கு தானே ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர், இது பொதுவாக அவர்கள் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையில் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பெயராக வெறும் அலுவலகம் சார்ந்த பெயராகவே அந்த ஆங்கிலப் பெயர்கள் இருக்கும். ***மலேசிய சீனர்கள் இஸ்லாமுக்கு மாறும் போது அவர்கள் பெயரும் அரபி பெயருக்கு மாறும் ஏனெனில் மலேசியா சீனர்கள் பெரும்பான்மை பெற்ற நாடு அல்ல*** ஆனால் சீனப் பெயர்கள் மதம் சார்ந்தவை அல்ல என்பதால் சீன நாட்டின் சீனர்கள் அப்பெயர்கள் அவர்களின் மதங்களுக்கு பொதுவான ஒன்றாகவே கருதி தம் மொழியில் பெயர் வைத்துக் கொள்கின்றனர். இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.

பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ? நான் ஆயுத பூசை அன்று ஆயுதங்களுக்கு பொட்டிட்டு அவல் பொறிகடலையுடன் அல்லாவுக்கு தொழுது கொண்டாடும் இஸ்லாமியரைப் பார்த்திருக்கிறேன் அது போல் செய்பவர்கள் மிகக் குறைவே. தமிழ்நாட்டில் தமிழ் சார்ந்த பண்டிக்கை என்று தான் பொங்கல் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது, அதை தத்தம் மத விதிகளின் படி கொண்டாடத் தடை எதும் இல்லை என்னும் போது, கொண்டாடுவதில் தவறென்ன. அதற்கான முயற்சிகள் இதுவரை மெத்தடிஸ்ட், பெந்தகோஸ் கிருத்துவரும் இஸ்லாமியரும் எடுத்தது போல் தெரியவில்லை.


சிங்கப்பூரைப் போல் சிறந்த ஆட்சியாகவும் தொழில் வளமான நாடாகவும் தமிழ் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கவில்லை, இந்திய அரசியல் சூழலில் மக்கள் நெருக்கம் காரணமாக ஊழல் என்பது தவிரக்க முடியாத ஒன்று ஆகிவிட்டது, மேலும் தேசிய நிரோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அப்படி ஆகுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்று உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்,

ஆனால் தமிழருக்கு பொதுவான நாள், தமிழர் திருநாள் தமிழ்பேசும் அனைத்து மதத்தினரால் பொதுவாகக் கொண்டாடப்படுவது எப்போது என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த ஏக்கம் கூட இங்கிருக்கும் சீனர்களைப் பார்த்து வந்தது தான், பல்வேறு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் பேசும் மொழிசார்ந்து அவர்கள் அனைவரும் சீனப்புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.

பொங்கல் கொண்டாடினால் தான் தமிழனா ?

நமக்கான பொது அடையாளம் மொழி என்ற அளவில் இருப்பதுடன் சேர்த்து ஒரு பொதுவிழா ஒருமித்து கொண்டாடுவதன் மூலம் நாம் அனைவரும் கொண்டாட்டங்கள் ஒன்றிலும் இணைந்துள்ளோம் என்ற உணர்வு ஏற்பட்டு நம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தும், மேலும் நாம் வேறு வேறு மதத்தை சார்ந்தவர் என்று பிரித்துப் பார்க்கும் கூறுகளையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தகர்க்கும்.


******

இன்றைய நாளை தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடும்
மற்றும்
பொங்கலாகக் (மட்டும்) கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்.

அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

13 ஜனவரி, 2012

பாலுக்கும் பூனைக்கும் காவல் - முதல்வர் அம்மா !

என்ன கொடுமை முதல்வர் அம்மா ?

பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா.
****
எமக்கெல்லாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் அரசியல்வாரிசு மற்றும் குறிப்பாக எம்ஜிஆரின் திராவிடக் கட்சியான அதிமுகவை கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்தும் திராவிட சிந்தனையாளர் (சிரிக்காதிங்க சார், நான் சீரியஸாக சொல்கிறேன்) மற்றும் திராவிடத் தாய், ஈழத்தாய் அம்மா முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் அம்மாவோ திடிரென்று தாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் மனதில் பதிந்துள்ளதால், அவர்களிடையே நக்கீரனின் செய்தி தாம் மாட்டுகறி சாப்பிடுவது தவறான செயல் என்று நினைத்திருக்கக் கூடும், என்று வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


முதல்வரம்மா, பொதுமக்களிடையே ஒரு பார்பனர் மாட்டுகறியோ வேறு 'மாம்சமோ' முட்டையோ மீனோ சாப்பிடுவது தவறான செயலாக நினைக்கப்படுவதில்லை, ஆனால் பொது மக்களின் கவலை பொருளியல் ரீதியானது மட்டுமே, பலர் வெளிப்படையாகவே 'பார்பனர்கள் அசைவம் சாப்பிடுவதால், மீன், ஆடு கோழி உள்ளிட்ட அசைவம் விலையேறிவிட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள், எனது பார்பன நண்பர்களில் சிலரோ 'யார் செய்த சதியோ, இவ்வளவு ருசியான அசைவ உணவை எங்கள் சமூகத்திற்கு கிடைக்கவிடாமல் செய்து எங்கள் பிராமண சமுதாயத்தை சைவ பிராணி ஆக்கிவிட்டார்கள்' என்று புலம்புவதுடன் வீட்டுக்கு வெளியே அசைவம் தவிர்த்து எதுவும் சாப்பிடுவதற்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். எனவே ஒரு பார்பனர் அசைவம் சாப்பிடுவது தவறு என்று பொது மக்களோ, பார்பனர்களோ கூட நினைக்காத போது பொதுமக்கள் தவறான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள் ?

ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் படி தவறாக நினைக்க வாய்பு இருந்தால் பின்னர் அல்லது முன்னர் 'உயர்சாதி ஆளுமை எண்ணம் கொண்ட பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஜெயலலிதா எப்படி தொடர்சியும், பாரம்பரியம் மிக்க , பெரியார் வழியில் உருவான திராவிடக் கட்சியின் மற்றொரு பிரிவிற்கான அண்ணாவின் பெயரை முன்மொழிந்து ஏற்பட்டுள்ள அதிமுக கட்சியினை வழிநடத்த முடியும் என்று நினைத்திருக்க மாட்டார்களா ?
பொதுவாகவே மக்கள் யாரும் தனிமனித நிலைப்பாடுகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை, ஒருவேளை அப்படி நினைத்திருந்தால்

பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கவர்ச்சி நடிகையாக முடியுமா ? அல்லது உங்களைப் போல் கதாநாயகி ஆக முடியுமா ? அதற்கு அந்த சமூகம் அனுமதி அளிக்குமா ? ஏற்றுக் கொள்ளுமா என்று நினைத்திருக்கக் கூடும்.

நடிப்பு மற்றும் அரசியல் ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பார்வையில்ஷகீலா, நமீதா,நயன்தாரா ஆகியவர்களின் மதம் பார்க்கப்படாது, ஜெயமாலினி ஜோதிலட்சுமி உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளின் சாதியும் பார்க்கப்படாது.

பூணூலை கழட்டிவிட்டு நடிக்கும் பார்பன நடிகர்களையாரும் பார்பனராகப் பார்ப்பதும் இல்லை, அப்படி இருக்க, ஒருவேளை நக்கீரன் வெளியிட்டது தவறான செய்தி என்ற போதிலும் உங்களுக்கு பொது மக்கள் இப்படித்தான் நினைத்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தவறானத் தகவலாக இருக்கும், உங்களின் இது போன்ற அறிக்கை உங்கள் அரசியலுக்கும் கட்சிக்கும் பின்னடைவே. நீங்களே நினைத்துப் பாருங்கள்

திராவிடத் தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது
திராவிடத் தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்
ஈழத்தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது
ஈழத்தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்
திராவிடக் கட்சியின் தலைவி ஜெயலலிதா அல்லது
திராவிடக் கட்சியின் தலைவியாக ஒரு பார்பன சமூகத்தைச் சார்ந்தவர்

எது மக்கள் மனதில் பதிந்திருக்கும் ?

சாதி, மதங்களைக் கடந்தவர் என்ற உறுதி மொழியில் முதல்வர் பதவி ஏற்ற தாங்கள், அதை வழங்கிய பொது மக்கள் தங்களை ஒரு பார்பனத்தியாகவே நினைப்பார்கள் என்று தாங்கள் நினைப்பது உங்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முரணானது, தவறான செய்தி என்பதற்காக நக்கீரனைக் கண்டிக்கிறோம் அதே வேளையில் தாங்கள் மீண்டும் ஒருமுறை தங்களை பிராமணப் பெண்' என்று மறைமுகமாக பொதுமக்களை சாக்கிட்டு, பழிபோட்டு கூறி பெருமைப்பட்டுக் கொள்வதையும் அரசியல்சாசனத்திற்கு எதிரான செயல் என்று கண்டிக்கிறோம். அப்படிக் கூறிக் கொள்வது உங்கள் விருப்பம் என்றால் உங்கள் கட்சி திராவிடக் கட்சியாக இருக்க முடியாது என்றே பொதுமக்கள் கருதுவார்கள், அதாவது 'பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த பெண் திராவிடக் கட்சிக்கு பொருத்தமானவரா ?

உங்கள் கட்சி திராவிடம் பேசுகிறதா இல்லையா என்பதெல்லாம் வேற, ஆனால் பார்பன உ(ர்)ணவு அடிப்படையில் நீங்கள் அதை பெரிது படுத்தும் போது உங்கள் கட்சியின் திராவிட சார்ப்பு அடிப்படை நிலைப்பாடுகளும் அதற்கு உங்களின் தகுதிகளும் உங்களாலேயே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

உங்கள் அறிக்கை ஒருவேளை மாட்டுகறி உண்ணும் பார்பனர் இருந்தால் அவர்கள் பொதுமக்கள் முன்பு வெட்க்கப்பட வேண்டும், அல்லது பொது மக்கள் அவர்களை தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்திருக்கிறது என்று நீங்கள் அறிந்துள்ளீர்களா ?

12 ஜனவரி, 2012

மதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் !

நாத்திகவாதத்திற்கு எதிராக எப்போதும் வேண்டுகோள் என்ற பெயரில் எள்ளி நகையாடப்படுவதில் ஒன்று "உங்க நாத்திக பிரச்சாரங்களை உங்கள் குடும்பத்தினருக்கு செய்தீர்களா ?, அவர்கள் வழிபாடு செய்வதை உங்களால் தடுக்க முடிகிறதா ?" ஐயா வெறும் வழிபாடு மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வழிபாடுகளை நாத்திகன் பழித்ததாகத் தெரியவில்லை, ஒரு நாத்திகனின் மனைவி வீட்டுகுள் சூடம் கொளுத்துவது அதிகபட்சமாக சூடத்தில் களப்படம் இருந்தால் கரும் புகையினால் கண் எரிச்சல் தரும் அவ்வளவு தான், அவற்றை நாத்திகர் பொறுத்துக் கொள்கிறார்கள். கழிவறை செல்லும் விருப்பங்களை யாருமே தவறு என்ற சொல்லமாட்டார்கள். அவரவருக்கான உந்துதல் என்ற அளவில் நாத்திகன் வழிபாடு செய்பவர்களை பழிப்பது கிடையாது, நடுத்தெருவை கழிவறையாக்கினால் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது அது போல் தான் ஆன்மீகம் என்ற பெயரில் பொது இடத்தில் மதவியாபாரங்கள் கடைவிரிக்கப்படும் போது மதத்தீவிரவாதத்தின் தன்மைகள், பாதிப்புகள் சுட்டப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாத்திகன் ஏன் தன் வீட்டினரின் வழிபாட்டை கேள்வி கேட்பதில்லை என்பது இப்பொழுது தெளிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பெரும்பாலும் நாத்திக பிரச்சாரங்கள் மூடநம்பிக்கை, மதவாத மற்றும் மனித இன வெறுப்புவாதங்களை எதிர்த்தும், அவ்வாறு எதிர்க்க அவற்றில் பிணைக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி துவங்கி மூடநம்பிக்கை, மதவாதாங்களை முற்றிலும் தகர்க்க முடியாவிட்டாலும் அவற்றில் உள்ள பித்தலாட்டங்களை, அரசியல்களை வெளிச்சம் போடுவதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் விழிப்புணர்வு தூண்டலை தம் பிரச்சாரங்கள் மூலம் செய்கின்றன நாத்திக வாதங்கள், நாத்திகவாதம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமே சார்ந்தவை அல்ல, நாத்திக வாதமென்பது புத்தர் காலத்திற்கு முற்பட்ட தேவையாக இருந்து இன்றும் அவை தேவை என்பதாக உள்ளது என்பது அவை தொடர்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்,

மதவாதிகளால் இந்த உலகம் சிதறடிக்கப்பட்டு இருக்கின்றனவே அன்றி ஒருமித்த ஒற்றுமைகான தீர்வு அவர்களால் என்றுமே சொல்லப்பட்டு இருந்ததில்லை என்பதை, ஒரு மதம் என்பது பிரிதொரு மதத்தை நாத்திக மதமாக பார்க்கிறது என்பதிலிருந்து அனைவருக்குமே தெரியும், ஏனெனில் மதக்கட்டுமானத்தில் கடவுள் என்பது அம்மதத்தை மட்டுமே உண்மையானதாகவும், அந்தக் கடவுள் மட்டுமே உண்மையானதாகவும் பிரிது யாவும் போலி என்றும் நம்பிக்கையற்றோர் என்றும் கூறிவருகின்றனர். மதவாதிகளை பொதுப்படுத்திக் கேள்வி கேட்கும் போது அவர்கள் தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக் கொண்டு தாங்கள் மதவாதிகள் அனைவரும் ஒரே இறைவனை நம்புவதாகவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அதில் இம்மியும் உண்மை இல்லை, ஒரு வழிபாட்டுத்தளத்தின் திருவமுதை, கடவுள் ஒன்றே என்றால் மற்ற மதத்தை பின்பற்றுபவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா ? ஆனால் அவர்கள் என்றுமே அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை, தீண்டத்தகாத ஒரு பொருளாக பார்த்து புறக்கணிக்கின்றனர் என்பது தான் உண்மை, மதவாதிகளின் மத, கடவுள் அரசியல் அறியாத பொது மக்கள் மட்டுமே எந்த வழிபாட்டுத் தளங்களையும் புறக்கணிப்பது இல்லை.

*****

மதவாதிகளே,

1.உங்கள் மதமோ மார்கமோ, நல்வழியோ எதுவாக இருந்தாலும் அவற்றை நீங்கள் நன்றாக உள்வாங்கி இருப்பதாகவும், அவற்றின் படியே நடந்தால் உலகம் உய்வுரும் என்று சொல்லுகிறீர்கள், அப்படி என்றால் அவற்றைப் பற்றி எதுவுமே அறியாதவர்களிடம் வந்து பிரச்சாரம் செய்வதை விட அவற்றைப் பற்றி உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?

இயந்திரவியல் படித்து அதன் படி, அல்லது சொந்தமாக தொழில் செய்து கொண்டு நல்ல நிலையில் இருப்பவர்களிடம் வந்து நீ மருத்துவம் படித்தால் இன்னும் சம்பாதிக்கலாம் என்று கூறுவது அபத்தம் தானே, அதற்கு பதிலாக ஏற்கனவே மருத்துவம் படித்து பாதியில் ஓடி அல்லது தேராமல் வெளியேறி அரசுக்கு தெரியாமல் அரை குறை மருத்துவம் பார்த்து நான்கு பேர் செத்துப் போவதற்கு காரணமான ஒருவருக்கு முறையான மருத்துவ பாடங்களை கற்றுக் கொடுப்பது எளிதா ? அல்லது முற்றிலும் துறைக்கே தொடர்பில்லாத ஒருவருக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்து மாமேதை ஆக்குவோம் என்று கூறி செயல்படுவது எளிதா ?


2. உங்கள் மதத்தின் உட்பிரிவுக்குள் ஒரு பிரிவான நீங்கள் மட்டும் தான் அக்மார்க் மற்றதெல்லாம் ஆகாத மார்க் என்கிறீர்கள், அப்படி என்றால் உங்கள் பிரச்சரங்களை உங்கள் உட்பிரிவுகளுக்கு நீட்டித்து அவர்களையெல்லாம் உங்கள் அக்மார்க்கத்துக்கு திருப்பிவிட்டு உங்கள் மதம் சாராதவர்களிடம் உங்கள் பிரச்சாரம் செய்யலாமே, உங்கள் மார்கத்தை ஓரளவு உள்வாங்கியவர்கள் புரிந்து கொள்ள முடியாதவற்றை உங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாதவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பின் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை. அதாவது உங்கள் வீடு தூய்மையானது என்றால் உங்கள் தெருவில் வசிக்கும் மற்றவர்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி மாற்றிவிட்டு அதன் பிறகு பக்கத்து தெருவோ வீடோ தூய்மையாக இருக்கிறதா என்று பார்க்கலாமே ?

3. மதவாதிகளே, உங்கள் கூற்றுப்படி, உங்கள் புனித நூல்களின் படி உங்கள் கொள்கைகளை ஏற்காத எவரும் நரக நெருப்பில் வாடுவார்கள் என்று நன்கு தெரிந்துள்ளீர்கள், நரக நெருப்பில் வாடப் போகிறவர்களுக்காக வருந்தாமல் அவர்களின் தற்கால வாழ்க்கையையும் உங்கள் மதத்தீவிரவாதங்களின் தற்கொலைகளால் நரகமாக்கப்படுவது உங்களுக்கு தெரியவில்லையா ? நாங்களெல்லோரும் இந்த பூமியோ சொர்கம், அதில் தத்தமவருக்கு கிடைத்தவர்களே உடனிருக்கும் சொர்கவாசிகள் என்று மெய்யான இந்த உலகை சொர்கமாகத்தான் நம்பியுள்ளோம், கற்பனை மற்றும் நம்பிக்கை சார்ந்த சொர்கம் பற்றி எங்களுக்கு கவலை எதுவும் கிடையாது, எங்களை எங்களது உலக சொர்கத்திலாவது அமைதியாக வாழவிடலாமே, உங்கள் கூற்றுபடி நரகத்திற்கு செல்லும் முன்பாவது நாங்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகிறோம், அதை செய்ய உங்களுக்கு என்ன தயக்கம் ?

4. கடைசி நாள், தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு நன்கு தெரிவதாகச் சொல்கிறீர்கள், அப்படி என்றால் அது குறித்த சிந்தனையில் உங்கள் கவனம் இருந்து உங்கள் சொர்க வாயிலின் டோக்கனை நீங்கள் பெற்றுக் கொள்ள உங்கள் மதம் சார்ந்த ஈகைகளை செய்ய முயற்சி எடுக்காமல் அவற்றில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நீங்கள் செய்யும் மதவாதப் பிரச்சாரம் உங்கள் நேரங்களை விழுங்குவதுடன் டோக்கன் உங்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் அபாயம் இருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா ?முதலில் உங்களை மேன்மைபடுத்திக் கொண்டு பிறருக்கு அறிவுரை கூறுங்கள். உங்கள் மத மார்க்கப்படி நீங்கள் ஆகாய மார்கமாக சொர்கம் செல்லுவீர்க்ள், ஆனால் நாங்கள் தரை மார்க்கமாக பேருந்திலோ, தொடர்வண்டியிலோ தான் செல்லவேண்டி இருக்கிறது, அதில் குண்டு வெடிப்பதால் எங்கள் வாழ்க்கைச் சொர்கம் நரகமாக்கப்படுகிறது என்பதால் இந்த வேண்டுகோள்.

*****

மதத் தீவிரவாதம் பற்றிய விக்கி இணைப்பு

ஒரே மதத்தைச் சார்ந்த பல நாடுகளில் சில உணவுக்கு வழியே இல்லாத ஏழைகளைக் கொண்டதாகவும் பிற மீதமான உணவை கடலில் கொட்டுவதாகவும் உள்ளன, இதிலிருந்து மதம் என்பது ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதாரத்தை சமப்படுத்தும் சாதனம் இல்லை என்று நன்கு தெரிந்து கொள்ளலாம், இதை ஒப்புக் கொண்ட நாடுகள் தங்களை மதச் சார்பற்ற நாடுகள் என்று கூறிக் கொள்கின்றன, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தங்கள் நாடு மதச் சார்பற்ற நாடாக தொடர்வதையே விரும்புகின்றனர், அதன் மூலம் மதம் சார்ந்த தங்கள் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் நாம் பெரும்பான்மை நிலைக்கு வளர்ந்து இந்த நாடு நம் மதம் சார்ந்த நாடாக மாறவேண்டும் என்ற தற்கால வாழ்க்கைக்கு முற்றிலும் ஒத்துவராத முரண்பட்ட கனவும் காண்கிறார்கள்.

உலகில் எந்த ஒரு காலகட்டத்திலும் 100 விழுக்காடு ஒரே மதத்தைப் பின்பற்றிய மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது அவை இனியும் ஏற்படாது என்பது தெளிவு, எனவே தம் பின்பற்றும் மதம் உலகின் ஒரே மதமாகும் என்கிற கனவுகளை மதவாதிகள் கைவிட்டுவிடலாம், தேவைக்கேற்ப ஊருக்கு பொதுக் கழிவறைகள் உருவாவது போல் மதங்களோ, புதிய மதங்களோ உருவாகிவிடும், இவை திறந்த வெளி கழிவறையாகி தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்படும் முன் அங்கு நாத்திக கழிவறைகளும் மாற்றாக ஏற்பட்டுவிடும். இது தான் இதுவரை நடந்துள்ளது.

பின்குறிப்பு : நான் ஆத்திகனோ, நாத்திகனோ இல்லை, அவற்றின் கடைகோடிகளை முற்றிலும் அறியாத நிலையில் அவற்றில் எந்த ஒரு நிலையையும் நான் சார்ந்து இருப்பது இல்லை, இதனால் என்னால் போலி மதவாதிகளையும், போலிச்சாமியார்களையும், மதத்தீவிரவாதிகளையும் 'இறை அச்சம்' எதுவுமின்றி விமர்சனம் செய்யமுடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரை வேண்டுகோளில் நான் எந்த ஒரு தனிமதத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை, அப்படி உங்களுக்குத் தோன்றினால் உங்கள் மதத்தின் மீதான உங்கள் ஆழ்ந்த பார்வை உங்களை அப்படி நினைக்கச் சொல்கிறது என்றே பொருள்.

நான்கு பேர் மத்தியில் யாராவது குசு விட்டிருந்தால், விளையாட்டாகச் சொல்லுவார்கள், 'குசு விட்டவன் கை சிவந்திருக்கும்' இதுல என்ன நகைச்சுவை என்றால் தன் கை சிவந்திருக்கிறதா என்று குசுவிடாதவரும் பார்ப்பார், அவ்வாறு பார்க்கத் தேவை இல்லை என்பது தான் பின்குறிப்பின் செய்தி. மதவாதிகளே நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் பொதுப்பயம் பலரின் வெளிப்படையான விவாதங்களை தடுக்கிறது, கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்கான வெற்றி அல்ல, அது உங்கள் மீது படித்திருக்கும் பொதுப்பார்வை, அவற்றை ஏற்படுத்தியது நீங்கள் தான், முடிந்தால் அவற்றை களைய /கழுவ முயற்சி செய்யுங்கள். நான் தனிமனித தாக்குதல்களோ, தனிமதத் தாக்குதலோ செய்வதில்லை என்பதில் உறுதியாகத்தான் உள்ளேன். எனக்கு புத்தமதம் உள்ளிட்ட அனைத்த மதங்களில் ஏராளமான நெருங்கிய நண்பர்கள் உண்டு.

மத நம்பிக்கைகள் கழிவறை பயன்படுத்துவது போன்று தனிமையான, யாருக்கும் தொந்தரவு செய்யாத, யாருடைய தொந்தரவையும் விரும்பாத ஒரு தனிமனித தேவை மற்றும் விருப்பம் போல் இருந்தால் அவை விமர்சனம் செய்யப்பட மாட்டாது.

11 ஜனவரி, 2012

நாகைக்கும் காரைக்கும் காதம் !

இன்றைக்கு நாம் மெட்ரிக் அளவுகளுக்கு மாறிவிட்டோம், ஆனாலும் நீளம் அகலம் எடை குறித்த அளவி (அளவு) சொற்கள் தமிழில் ஏராளமாக இருந்தன, வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு இவை முற்றிலும் வழக்கு இழந்து போயின, 35 ஆண்டுகளுக்கு முன்பு கூட 'வீசம்' என்ற நிறுத்தல் அளவீடுகளில் எடைகள் நிறுத்து கொடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சியின் கீழ் வந்த காமென் வெல்த் நாடுகளில் அளவைகள் இங்கிலாந்தைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் சாலைகளின் அளவீடுகள் கிமீ சொல்லப்படுவதில்லை, மைல் கணக்கில் தான் விரைவு தொலைவு உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்கள்.

*****

நாகைக்கும் காரைக்கும் காதம்
காரைக்கும் கடையூருக்கும் காதம்
கடையூருக்கும் யாழிக்கும் காதம்
யாழிக்கும் தில்லைக்கும் காதம்.

இது எந்த வகைப்பாடல், யார் எழுதியது என்று எனக்கு தெரியாது, சிறு வயதில் அம்மா வாய்பாடு போல் சொல்லக் கேள்விப்ப்ட்டிருக்கிறேன், இதன் பொருள்

நாகைக்கும் காரைக்காலுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் அது போன்று
காரைக்காலுக்கு திருக்கடையூருக்கும் இடைபட்ட தொலைவு ஒரு காதம்,
திருக்கடையூருக்கும் சீர்காழிக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் மற்றும்
சீர்காழிக்கும் (தில்லை) சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் என்பதாகும்

அதாவது நாகையிலிருந்து சிதம்பரம் நான்கு காதம் தொலைவில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். காதம் என்ற தொலைவு எவ்வளவு ?


வெட்டவெளியில் இருகை சேர்த்து ஒருமுறை பலத்த ஓசையுடன் கைதட்டினால் அல்லது இரவில் தீப்பந்தம் அல்லது விளக்கைக் காட்டி அது எவ்வளவு தொலைவில் உள்ளவரை ( தீப்பந்ததால் ஆட்டி சைகை செய்து) கூப்பிட வைக்க முடியும் என்பதே கூப்பீடு அளவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், தமிழில் பெரும்பாலும் சொல்லுக்கு நேரடியான பொருள் உண்டு என்பதால் அவ்விதம் நினைக்கிறேன். அதாவது கண்ணுக்கும் காதுக்கும் எட்டிய தொலைவு 'கூப்பிடு' என்ற நீளம் குறித்த நீட்டல் அளவையாக இருக்கிறது. அது போன்ற நான்கு அளவுகளான கூப்பிடும் தொலைவு ஒரு காத தொலைவு எனப்படுகிறது. இந்த ஊர்களின் இன்றைய தொலைவு ஒவ்வொன்றிற்கும் இடைப்பட்டு சுமார் 20 கி மீட்டர்கள், தமிழார்வளர்கள் காதம் என்பதற்கு வடபுல தென்புல வாய்ப்பாடு என்ற அளவில் இரு அளவீடுகளைத் தருகிறார்கள், ஒரு காதம் எனப்படுவது 6.7 கிமீ தென்புல அளவீடாகவும், அதில் அரை அளவான 3.35 கிமி அளவு ஒரு காதம் என வடபுல அளவீடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை இரண்டும் கூட மேல் குறிப்பிட்ட வாய்பாட்டு பாடலில் குறிப்பிடும் தொலைவான ஒரு காதம் = 20 கிமீ அளவுடன் முரண்படுகிறது. திரு இராமகி ஐயா அவர்களின் ஆய்வு கூற்றுபடி காதம் = 3.35 என்று வைத்துக் கொண்டால், மேற்கண்ட பாடலில் ஆறு என்ற எண் அளவு விடுபட்டு இருக்க வேண்டும்,



அதாவது

நாகைக்கும் காரைக்கும் ஆறு காதம்
காரைக்கும் கடையூருக்கும் ஆறு காதம்
கடையூருக்கும் யாழிக்கும் ஆறு காதம்
யாழிக்கும் தில்லைக்கும் ஆறு காதம்.

என்பதில் இருந்த 'ஆறு' காலப்போக்கில் வாய்பாட்டுப் பாடலில் இருந்து எதுகை மோனை மயக்கத்தில் விடுபட்டி இருக்க வேண்டும், அதாவது காதம் என்ற அளவுச் சொல் பயன்பாடு குறைந்த பிறகு முழுப்பாடலின் மையப் பொருளான தொலைவு வாய்ப்பாட்டின் பலன் தேவையற்றதாகி வெறும் தொலைவு சார்ந்த சந்தப் பாடலாக திரிந்திருகிறது.

எண்கள், பின்னங்கள் - வகுத்தல், நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவீடுகள் ஏராளமானவை தமிழில் இருந்தது, தற்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளாதது நமக்கு மட்டுமல்ல உலகத்தினருக்கே இழப்பு தான். ஒரு மொழியில் ஒரு கலைச் சொல் அழியும் போது அவற்றின் பயன்பாடுகள் அழியும், அவை கொண்டுள்ள அறிவின் பொருளும் அழியும், ஒரு வேளை இந்தச் அளவைகளைப் பயன்படுத்தினால் அளவீடுகளை பயன்படுத்தித் தீர்வு காணும் இன்றைய சிக்கலான கணக்குகள் கூட எளிமையான வடிவில் தீர்க்க முடியும். எடுத்துக்காட்டிற்கு போதையனார் பாடல் ஒன்று.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.



இவற்றின் பொருள் செங்கோண முக்கோன நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ண நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

10 ஜனவரி, 2012

சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் !

அன்பு நண்பர் திரு சுவனப்பிரியன் "சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது". என்று சவுதி அரேபியா பற்றி நெகிழ்ந்து பாலாறும் தேனாறும் அங்கு ஓடுவதாகவும், அதை சவுதி அரசு ஏற்றுமதி செய்து வளமிக்க நாடாக சவுதியை மாற்றி வருவதாகவும் மிக அருமையான கட்டுரையை எழுதியுள்ளார், அவருக்கு பாராட்டுகள்.

*****

எமெக்கெல்லாம் கவலை இந்தியா சவுதி அரேபியா போன்று ஆகாமல் போனாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும் என்பது தான்.

பாலாறும் தேனாறும் ஓடும் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக பணிப் பெண்களை கண்ணியத்துடன் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை, சென்ற ஆண்டு 'ஆணி அடிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினவில் கூட கட்டுரை எழுதி இருந்தார்கள், அதனுள் மற்றொரு செய்தியாக 'வளர்த்தக்கடா மார்பில் பாய்வதைப் போல் “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” குறிப்பிடப்பட்டு இருந்தது, பணிப் பெண் என்பவள் ஒரு அடிமை என்ற அளவில் தான் அங்கு நடத்தப்படுகிறதாம், அது எல்லாப் பணிப் பெண்களுக்கும் இருக்கும் சிக்கல் என இல்லாவிட்டாலும், சமூகக் குற்றம் என்பது ஒரு சில என்றாலும் அவர்களுக்காகத்தான் காவல் நிலையங்கள், எனவே தனிநபர் குற்றம் பேசப்படக் கூடாது என்பதை நான் எப்போதும் நிராகரிப்பேன், அப்படி மாரைப் பிடித்துப் பார்த்த நிகழ்வு உண்மையோ பொய்யோ அவைபற்றி ஆதாரம் இல்லை என்ற வகையில் அந்தச் செய்தியை நிராகரிக்கலாம் என்றாலும் கூட உடலெல்லாம் ஆணி அடிக்கப்பட்ட பெண் சவுதியில் இருந்து மீண்டது உண்மை தானே.

இன்றைக்கு வந்திருக்கும் செய்தி சவுதி அரேபியாவிற்கு இல்லப்பணிக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்களில் 50க் கும் மேற்பட்டவர்கள் பாஸ்போர்டுகள் பிடுங்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்களாம், தப்பி வந்தவர் கண்ணீர், பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது என்று அந்தச் செய்தியில் தகவல் இடம் பெற்றுள்ளன.

சவுதி அரேபியாவில் விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையாம், ஆனால் பணிப்பெண்களை அவ்வாறு கல்லால் அடித்துக் கொலை செய்யமாட்டார்கள் என்று நாம் நம்புவோம், ஏனெனில் அவர்களைப் பொருத்த அளவில் அவர்கள் அடிமைகள் தான், அடிமைகளை எப்படிப் பயன்படுத்தினாலும் அடிமைகளுக்கோ, அவர்களை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கோ, பயனாக்கிக் கொண்டவர்களுக்கோ தண்டனைகள் இருக்காது என்று நம்பலாம். விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லப்படுவதெல்லாம் சவுதி அரேபியவில் பிறந்து வளர்ந்த அந்த நாட்டுப் பெண்களுக்கான சட்டமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடட்டும் அதை நக்கிப் பலர் குடிக்கட்டும் நமக்கென்ன ஆனால் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு பணிப் பெண்களை அனுப்பும் போது அவர்களுக்கான பாதுகாப்பு, பெண்மைக்கான பாதுகாப்பு கேள்விக்குறி என்பதையே அந்த செய்தி காட்டுகிறது.

இன்ஷா அல்லா ! மாஷா அல்லா ....... ! மெக்காவுக்கு மிக அருகில் நடக்கும் பெண் / வன் கொடுமைகளைக் கூடத் தடுக்க முடியவில்லையே, நண்பர் சுவனப்பிரியனின் பேராசையாக சவுதியைப் போல் இந்தியா ஆகவேண்டும் என்பதை எப்படி நிறைவேற்றப் போகிறாயோ ?

பின்குறிப்பு : கட்டுரை தகவல் அடிப்படையில் அதற்குறிய சுட்டிகளுடன் எழுதப்பட்டுள்ளது, இதில் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ விமர்சனம் செய்யும் வரிகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

9 ஜனவரி, 2012

ஒருவார்த்தை சில எச்சம் !

விஜய் தொலைகாட்சியில் ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, நிகழ்ச்சிப்பற்றி தமிழ் பற்றிய பொது அறிவை வளர்ப்பது தமிழ் சொற்களை அறிந்து கொள்ள வைப்பது என்று தான் முன்மொழியப்படுகின்றன, அதில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ் பற்றிய தெளிந்த அறிவு இருக்க வேண்டுமோ என்ற எண்ணத்தை காண்போருக்கு ஏற்படுத்துகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த அளவில் அது சொல் குறித்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சி அவற்றில் சிற்சில தமிழ் சொற்களும் உள்ளன.

எனக்கு தெரிந்து தமிழ் அடையாளங்களில் ஒன்றான வேட்டியுடன் கலந்து கொண்டவர் வேணு அரவிந்த் மற்றும்ஆஜய் ரத்தினம் மட்டுமே, அதன் பிறகு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் பொது உடையில் தான் வந்தனர். உடைபற்றி பெரிதாக விவாதம் செய்ய ஒன்றும் இல்லை என்றாலும், தமிழ் சார்ந்த நிகழ்ச்சி என்று முன்மொழியப்படுவதில் பண்பாட்டு உடைகளுக்கு முதன்மைத்துவம் அளிப்பது நன்று. பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பண்டிகைகால ஒளிபரப்புகளில் அவற்றில் வந்து போகும் பெண்கள் மட்டுமே பட்டுப் புடவை அணிந்துவருகிறார்கள், நிகழ்ச்சி நடத்தும் ஆண்களில் இந்திய வடிவமைப்பு உடைகளை அணிந்துவருவது கிட்டதட்ட இல்லை என்ற அளவில் தான்.

ஒருவார்த்தை ஒரு லட்சம் என்பதில் இருக்கும் 'வார்த்தை' என்பது தமிழ் சொல்லே அல்ல, உண்மையில் தமிழ் பற்றுடன் தமிழ்சார்ந்த தலைப்பு வைத்திருக்க வேண்டுமெனில் ஒரு சொல் ஒரு லட்சம் என்றே இருக்க வேண்டும். இந்த 'வார்த்தை' என்ற வடமொழிச் சொல் திராவிட மொழிகள் பிறவற்றில் 'செய்தி' என்ற பொருளிலும் தமிழில் சொல் என்ற பொருளிலும் திணிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சரி அது தான் போகிறது என்று பார்த்தாலும் அவர்கள் குறிப்புக் கொடுக்கும் விளையாட்டுச் சொற்கள் பலவற்றிலும் பரவலான வடசொற்களே இடம் பெற்றுள்ளன. இவர்கள் இப்படி தொடர்ந்து வடசொற்களை மறுபுழகத்தில் விடும் போது அவற்றிகு மாற்றாக புழங்கிவரும் தமிழ் சொற்கள் மறையும் நிலையைத்தான் ஏற்படுத்துகின்றன. எடுத்துகாட்டிற்கு 'நமஸ்காரம்' என்ற சொல்லைப் பற்றி குறிப்புக் கொடுக்கச் சொல்கிறார்கள், விளையாடுபவர் அதை குறிப்புகளின் வழியாக கண்டுபிடித்துவிடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நமஸ்காரம் என்பது தமிழ் சொல்லா ? அது நமஸ்கார் என்றோ வடமொழிச் சொல் தமிழில் புழங்கிவரும் வடிவம் தான், ஆனால் நாம் நமஸ்காரத்தை என்று விட்டு 'வணக்கம்' சொல்வதற்கு மாற்றிக் கொண்டுள்ளோம், மீண்டும் திரைகளில் இது போன்ற சொற்களை தமிழ் சொல் என்று காட்டுவதால் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் சொல் பற்றி மறந்துவிடும் கூறுகள் மிகுதியாகிறது.

அது தவிர நிகழ்ச்சியில் சொல்லை கண்டுபிடிக்கும் முறையை தற்போது விளையாட வரும் அனைவருமே ஒன்றுபோலவே பின்பற்றுகிறார்கள், கிட்டதட்ட அவை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒன்றும் கடினமான ஒன்று அல்ல என்ற முதல் படிநிலைகளில் அச்சொற்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு 'எச்சம்' என்ற சொல்லைப் பற்றி விளையாடுபவர்களில் ஒருவர் குறிப்புக் கொடுக்க மிகவும் கடினப்படத் தேவை இல்லை, அவர்கள் ஏற்கனவே வரிசைப்படி அறிந்துள்ள சொற்றொடர்களின் ஒவ்வொரு சொல்லையும் வரிசையாகச் சொன்னாலே போதும், எச்சம் - இதற்கு எவ்வாறு குறிப்பு கொடுப்பது ?

விளையாடுபவர் 1 : தலைவர்
விளையாடுபவர் 2 : தொண்டர்
விளையாடுபவர் 1 : சிலையில்
விளையாடுபவர் 2 : மாலை
விளையாடுபவர் 1 : காக்கை
விளையாடுபவர் 2 : 'எச்சம்'

அதாவது எச்சம் என்று கண்டுபிடிக்க 'தலைவர் சிலையில் காக்கை' என்று சொல்லி முடிக்கும் போது நமக்கு அதன்விடை 'எச்சம்' என்று தெரிந்துவிடும். இப்படித்தான் மிக எளிதாக கண்டுபிடிக்கும் படி விதிமுறைகள் உள்ளன

விளையாடுபவர் 1 : ஜெயலலிதா
விளையாடுபவர் 2 : கருணாநிதி
விளையாடுபவர் 1 : மீண்டும்
விளையாடுபவர் 2 : மறுபடியும்
விளையாடுபவர் 1 :ஆனார்
விளையாடுபவர் 2 : 'முதல்வர்'

அதாவது முதலமைச்சர் என்ற சொல்லுக்கு 'ஜெயலலிதா மீண்டும் ஆனார்' என்ற குறிப்பின் முடிவில் விடைத்தெரிந்துவிடும். 30 ஆயிரம் ரூபாய்க்கான போட்டிச் சொற்களில் பெரும்பாலும் வழக்கில் இல்லாத வடசொற்களே எடுத்துகாட்டிற்கு 'எதோச்சிகாரம், விவாஹம், முகூர்த்தம், வஸ்து, வாஸ்தவம், வஸ்திரம்' போன்ற வடசொற்களே தமிழ்சொற்கள் என்பதாக போட்டியில் வைக்கப்படுகின்றன.

ஒருவார்த்தை ஒரு லட்சம் - நிகழ்ச்சி என்ற அளவில் பார்க்க சுவையார்வமாக இருக்கிறது, ஆனால் அதை தமிழ் நிகழ்ச்சி, தமிழைத் தாங்கும் நிகழ்ச்சி என்றெல்லாம் முன்மொழியப்படாமல் 'பொழுது போக்கு விளையாட்டு நிகழ்ச்சி' என்று சொன்னால் தகும். இதில் சிலபடிகள் வெற்றிபெற பெரிய அளவில் தமிழ் சொற்கள் குறித்த அறிவு தேவை இல்லை, 'தலைவர் சிலையில் காக்கை' போன்று சொற்கோர்வைகளை அமைக்கத் தெரிந்திருந்தாலே போதும்.

மாட்டுக்கறி துன்னா தப்பா ?

மூன்று நாளாக மாட்டுக்கறி மேட்டர் நக்கீரன் கட்டுரையையும் அதன் பின் விளைவைகளையும் முன் வைத்து ஓடிக் கொண்டு இருக்கு. மேலை நாடுகளிலும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்ணும் உணவை வைத்து மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது. உணவு சார்ந்த நாகரீகம் என்பது திருவள்ளுவருக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இந்தியாவில்/ தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. கொல்லாமை, புலால் மறுப்பு என்பதாக ஊண் உணவு பற்றிய தம் பார்வையை திருவள்ளுவர் குறிப்பிட்டு உள்ளதிலிருந்து நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம், பிற உயிர்களை துன்புறுத்தாமை அல்லது அனைத்து உயிர்களையும் நேசித்தல் என்ற அளவில் தான் புலால் உணவு முன்மொழியப்பட்டு இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவற்றை வழியுறுத்த சொர்க / நகரக் கோட்பாடுகள் இடைச்சொருகலாகப்பட்டிருக்க வேண்டும். இவை இவை உண்ணத்தக்கவை என்று இயற்கை கூட எதையும் சொல்லி இருக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது, அவற்றையெல்லாம் வயிறும், செரிமான மண்டலமும் தான் முடிவு செய்கின்றன. விலங்குகள் உண்ணும் பச்சை ஊண் உணவை மனிதனால் உண்ண முடியாது, காரணம் செரிக்காது, சுவை மற்றும் செரித்தல் ஆகிய இருகாரணங்களுக்காக சமைத்து உண்ணுதல் என்ற அளவில் காய்கறி உணவுகளும், உயிரின சதைகளும் உண்ணப்படுகின்றன.

இந்தியாவுக்கு வெளியே மனித வேற்றுமை என்பது இனம் சார்ந்தது. உண்ணும் உணவில் பெரிய வேறுபாடுகளற்ற நிலையில் ஒரு இனத்தைத் தாழ்த்த அவற்றின் உடல் நிற அமைப்புகளை பழிப்பதிலிருந்து வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருந்தனர். கருப்பு இனத்தின் மீது இவற்றை எளிதாக செய்ய முடிந்தது, அடிப்படையில் பெரிய உருவ வேற்றுமை இல்லாத யூத - செருமானிய இனம் மொழி அடிப்படையில் ஆன இனவேற்றுமையை வளர்த்துக் கொண்டிருந்தன, காரணம் மத அடிப்படையில் யூதர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொண்டனர், செருமானியர்களும் தங்களை உயர்ந்த இனம் என்று கூறிக் கொண்டு இருந்தனர், ஆளுமையை வளர்த்துக் கொள்ளுதல் என்பதில் அவர்களுக்கு மொழியும் மதமும் கைகொடுத்தன.

இந்தியாவின் அடிப்படை இனம் திராவிட - ஆரிய என்று இருந்தாலும் நூற்றாண்டு ஆயிரம் ஆண்டு கலப்புகளில் அவற்றைப் பிரித்து வேற்றுமை பாராட்டும் சிக்கலில் மதம் மற்றும் உணவு முறைகள் முக்கிய பங்காற்றியது, கொன்று புசிப்பவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்னும் கொல்லாமை கோட்பாடுகளில் புத்த - சமண மதத்தினரால் ஆரிய இனமும், மதமும் பின்னுக்கு தள்ளப்பட்ட போது, அவற்றைச் சரி செய்ய கொல்லாமையை வரிந்து கொள்ள முற்பட்டது ஆரிய இனம். இதன் மூலம் ஆரியர்கள் சைவர்கள் ஆனாலும் உயர்ந்த என்ற அடைமொழிக்காக வருண அடிப்படை பிறப்பு கற்பனைகளை அமைத்துக் கொண்டு அரசர் முதல் ஆண்டி வரை பின்பற்றச் செய்தனர். நாளடைவில் அரச மதம் என்ற தகுதியை புத்த சமண மதங்கள் இழக்க ஆரிய சமய பழக்க வழக்கங்களுடன் கொல்லாமை அறமும் சேர்ந்து சமூக உயரிய பண்புகள் என்ற உருவகங்கள் உருவாயின.

ஆனால் இவற்றைச் சரியாக செய்தார்களா ? என்பதும் வெறும் கொல்லாமை என்னும் கொள்கை மட்டும் தான் உயரிய அடையாளமா ? என்ற கேள்விகள் இன்றும் பதில் இல்லாமல் தொடர்ந்து கொண்டிடுக்கின்றன, பசுவிடம் இருந்து கறந்து குடிப்பது பாவம் இல்லை, அதைக் கொன்று தின்றால் தான் பாவம் என்று சொல்லப்படுகிறது, ஆனால் பசுவை கறவைக்காக வைத்திருந்த எந்த பார்பனரும் அதை தாமே கறக்கவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை ஆனால் முக்கியமானது கரவைக்கு பயன்படுத்தப்பட்ட பசுக்கள் பின் என்னவாயின என்பது தான் கேள்வி, ஒரு மாடு ஆண்டுக்கு ஒன்று அளவில் ஒன்றோ இரண்டு கன்று களை ஈணும், சுமார் பத்து ஆண்டுகள் வரை பால் பலன் கொடுத்து இருக்கும், அதன் பிறகு மடிவற்றிய மாடு அல்லது கிழடு என்று துறத்தப்படும், இவ்வாறு துறத்தப்பட்ட மாடுகளை தான் இறைச்சி உண்ணுபவர்கள் கொன்று தின்றார்கள், ஒரு பசு மாடு காளை கன்று ஈன்றிருந்தால் அவற்றில் கன்று பருவம் முடிந்த பிறகு அவற்றை வேளான்மைக்காரர்களிடம் உழவிற்காக விற்கப்படும். பெரும்பாலும் பசுமாடுகள் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டு அவற்றின் பலனை பார்பனர்கள் துய்த்துவந்தனர், அவற்றின் பராமரிப்புகளை பிறர் தான் செய்துவந்தனர். அவை நோய்வாய்பட்டு இறக்கும் போது அவற்றை சேரியினரிடம் ஒப்படைக்கப்படும், அவர்கள் அவற்றின் தோலையும் கறியையும் பயன்படுத்திக் கொள்வர். முறையாக மாடுகள் அடக்கம் செய்யப்படுவது எப்போதும் நடந்ததே இல்லை. மாட்டு கறியை உண்ணாத வேளான்மைகாரர்களின் செயலும் பாலுக்காக, உழவுக்காக பயன்படுத்திக் கொள்ளுதல் என்ற அளவில் தான் இருந்தது, அவற்றின் இறப்புகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களின் உணவாகத்தான் சென்று கொண்டிருந்தது. மாடுகளை உணவிற்காக வளர்க்கும் பழக்கம் முகலாய ஆட்சிக்கு பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும். மாடுகளை அடித்து உண்ணும் பழக்கம் இந்தியாவின் பிற பகுதிகளில் மொகலாய ஆட்சிக்கு பிறகு பரவிய போது மாடுகளை உண்ணுவது பாவம் என்று வழியுறுத்தல் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை, அவை மதம் சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரை மாடுகளை உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறிவந்ததிலும் சிக்கல் ஆகிப் போக, பின்னர் செத்த மாட்டை உண்பவர் நாகரீகமற்றவர்கள் கழுகுக்கு ஒப்பானவர்கள் என்ற ரீதியில் தாழ்வுகளின் கூறுகளாக மாறி தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தீண்டாமைக் காரணியாக தொடர்ந்தது.

தமக்கு விருப்ப உணவான மாடுகளை உயிரோடு வாங்கி கொன்று திண்ணும் பொருளாதார வசதிகள் இல்லாததால் முஸ்லிம் அல்லாதவர்கள் மாட்டு இறைச்சிக்கு இறந்த மாடுகளையே சார்ந்த அவல நிலை தான் தொடர்ந்தது. மாடுகளை உணவுக்கு கொல்லாவிட்டாலும் மாட்டுத் தோலின் மதிப்பினால் பார்பனர்கள் மாடுகளை அடித்து தோல் உறித்து பதப்பப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை தற்காலத்திலும் நடத்தியே வருகின்றனர். ஆக கொல்லாமை அறம் என்பது வெறும் உணவு சார்ந்த ஒன்று என்ற அளவில் தான் தற்பொழுது உள்ளது, மற்றபடி அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இக்காலத்தில் எடுபடாத ஒன்று. மாட்டுகறி உண்ணுவது தவறல்ல என்று வழியுறுத்த அவற்றை உண்ணுபவர்களைத் தூற்றாதீர்கள் அவர் பார்பனர் என்றாலும். மாட்டுக்கறி உண்ணுவது பாவ புண்ணியம் தொடர்பார்னது அல்ல பிற உயிர்களைக் கொல்லாமை என்பதில் மாடும், பன்றியும் கூட அடங்கி இருக்கிறது அவ்வளவே. பன்றி இறைச்சியை உண்ணுவது பாவச் செயல் என்று இப்படியாகத்தான் மதம் சார்ந்தே சொல்லப்படுகிறது ஆனால் இவற்றிற்கு அடிப்படைக் கூறுகள் பிற மதத்தினரை உணவு ரீதியாக பழித்தல் என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லை.



நானும் எனது இல்லத்தினரும் கொல்லாமை என்ற அளவில் (விலங்கின, பறவை இன இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட)ஊண் உணவுகளை உண்ணுவது கிடையாது, மற்றபடி அதை உண்ணுவோர் பக்கத்தில் அமர்ந்து உண்ணுவதில் அல்லது ஊண் உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களில் செய்த காய்கறி உணவுகளையோ உண்ணுவதில் அருவெறுப்பு அடைந்தது இல்லை, சிங்கை போன்ற பல்வேறு இனம் கூடி உண்ணும் உணவு அங்காடிகளில் உண்ணும் நால்வரில் ஒருவர் பன்றி இறைச்சியும், மற்றொருவர் மாட்டிறைச்சியையும், இன்னொருவர் கடல் நத்தைகளையோ உண்ணுவர், என்னைப் போன்றவர் வெறும் காய்கறி உணவு எடுத்துக் கொண்டு ஒன்றாக அமர்ந்து உண்ணுவோம். மூக்கைப் பொத்திக் கொண்டதோ, முகம் சுளித்ததோ இல்லை.

பார்பனர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் அல்ல என்று நீங்கள் நம்பும் போது அவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவது கேலிப் பொருளாக சித்தரிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது முரண்பட்ட சிந்தனை. ஒருவேளை ஜெ மாட்டிறைச்சி உண்டு இருந்தாலும் அவற்றில் தவறு ஒன்றும் இல்லை, இதை நக்கீரன் நக்கல் அடித்திருக்கத் தேவை இல்லை, அதை வெறும் தகவலாகக் கொடுத்திருக்கலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்