வீட்டைக் கட்டிவிட்டு தான் கல்யாணம் செய்யனும் என்று சொல்லி வைத்தார்களோ, ஆனால் இரண்டுமே மிகவும் கடினமான செயல், ஈடுபடுத்திக் கொள்ளுதல் (கமிட்மெண்ட்) மிகுதி. நடுத்தரவாசிகள் கையில் பணம் வைத்துக் கொண்டு திட்டமிட்டெல்லாம் வீடு கட்டுவதையோ, திருமணம் செய்வதையோ செய்துவிட முடியாது. இரண்டுக்குமே கடன் வாங்கனும். அதைத் தவிர்த்து அதற்கான தேவையும் நெருக்குதலும் இருக்கனும், ஆனால் இவை பொதுவாக அனைவருக்குமே ஏற்பட்டுவிடும். வெளிநாட்டில் நீண்ட நாள் வாழ்ந்தாலும் அந்நாட்டின் குடிமகனாக மாறாமல் திரிசங்கு சொர்கமாக நின்று கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு பிறந்த ஊரில், மாநிலத்தில் வீடு ஒன்றை கட்டுவது தவிர்க்க முடியாத செலவினங்களில் ஒன்று. கட்டுவதற்கு நிறைய மெனக்கட வேண்டி இருக்கும், என்பதால் கட்டிய வீட்டை வாங்குவதே சரி எனப்பட்டது. அதுவும் விற்கிற விலையில் நகரத்தினுள் இடம் வாங்கி, ஒரு கட்டிட பொறியாளரிடம் பொறுப்பு கொடுத்து வீடு கட்டி முடிப்பது மிகவும் சிக்கலான ஒன்று, அதற்கு பதிலாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாங்குவது எளிதானது, இடம் வாங்கி வீடு கட்டுவதை விட செலவினம் குறைவானது. பல மனப் போராட்டங்களுக்கு பிறகு கையிருப்பு, கடன் என வாங்கி சென்னை புறநகர் தொடங்கும் முன் போருர் அருகே புதிதாக கட்டப்பட்ட ஆறுவீடுகள் அமைந்த அடுக்கு மாடி குடி இருப்பு ஒன்றில் ஒரு இருபடுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை வாங்கினேன்.
வீட்டுக்கு முறைப்படி புது மனை பூசை செய்வது பற்றி பேசி கொண்டிருக்கும் போது 'ஐயர்' வைத்து 'ஹோமம்' வளர்த்து செய்ய வேண்டும் என்று மனைவி மற்றும் பெரியோர்களால்(மனைவி தான் பெரியோரான்னு கேட்டால் பதில் இல்லை) முடிவு செய்யப்பட்டது. எனக்கு பூசை இவற்றில் விருப்பம் இல்லை, ஆனால் புதுமனை புகுவிழாவென்றால் இப்படியெல்லாம் இருந்தால் தான் உறவினர்களை அழைக்க அவர்களும் வந்து வாழ்த்திவிட்டுச் செல்வார்கள் என்பதால் ஒப்புக் கொண்டேன். 'சமஸ்கிர மந்திரத்தால் நல்ல அதிர்வு ஏற்படும்' என்று சொல்லிவிட்டு மனைவி வாங்கிக் கட்டிக் கொண்டது தனிக்கதை. சரி உன் விருப்பப் படி செய் என்று சொல்ல, ஐயர் ஒருவரை உறவினர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். மாடு மாடி ஏற முடியாதே, நானே ஒரு மந்திரத்தால் (மகி)மை ஊட்டப்பட்ட பொம்மை மாடு ஒன்றை எடுத்துவருவதாக ஐயர் கூறி இருந்தார். வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல மாட்டை ப்ளாட் கார் பார்க்கில் கொண்டு வந்து நிறுத்தி பூசை செய்வோம், என்று சொல்லி அதற்கு 500ரூபாய் ஆகும் என்று சொல்லி அதை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சமஸ்கிரத வழிபாடு, பூசை முடிந்ததும், என் பங்குக்கு தமிழ்வழி பூசைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன், அதிலும் அதிர்வு வருகிறதா ன்னு பாரு என்று சொல்ல, மனைவி மனப்பூர்வமாக சம்மதித்தார். சைவ சமயமன்றம் சார்ந்த ஓதுவார் (சிவாச்சாரியார்) ஒருவரை தமிழ்வழி பூசைக்காக ஏற்பாடு செய்தேன். அதிகாலையை ஐயருக்கும், அதன் பிறகு சிறுது இடைவெளி விட்டு ஓதுவார் (சிவாச்சாரியார்) பூசை செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 5 மணிக்கு ஐயர் வந்தார், ஓம குண்டங்களை அமைத்து பூசை சாமான்களை எடுத்து வைத்து, கலசங்களுக்கு நூல் சுற்றி முடிக்க, மணி 6 ஐ தொட்டது, அதன் பிறகு கோமாதா பூசைக்கு ஆயத்தமானார், சொல்லி இருந்த இடத்தில் இருந்து மாடு வரவில்லை, வேறொருவரிடம் மாடு - கன்று வரவழைத்து பூசையை தொடங்கினார். அவர் மந்திரம் சொல்ல சொல்ல மாட்டுக்கு நானும் மனைவியும் மகளும் பூசை செய்யனும், செய்தோம். அந்த காலத்தில் இருந்தே மாடுகள் பொருளியல் கூறுகளில் ஒன்று என்பதால் மாடு செல்வம், லட்சுமி என்றெல்லாம் சொல்லப்பட்டு அதற்கு பூசை செய்வது முதன்மையாக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக கோமாதா பூசையில் மாட்டுக்கு முன்பக்கம் இல்லாது பின்பக்கம் தான் பூசை செய்யச் சொல்கிறார்கள். செய்கிறார்கள். செய்தோம். இனவிருத்தி உறுப்புக்கு பூசையாம், அது எனது புரிதல். அவ்வளவு நேரடியாகச் சொல்லாமல், பின்பக்க பூசை என்று ஐயர் கொஞ்சம் டிசண்டாக சொன்னார். அது ஒரு 5 - 10 நிமிடம் இருக்கும், வாழைப்பழம் ஒவ்ஒன்றை கொடுக்க பசுவும், கன்றும் தின்று விட 500 ரூபாயுடன் அழைத்துச் செல்லப்பட்டது, எங்க பக்கத்தில் மாட்டுக்கு 1000 ரூபாய் வரை வாங்குகிறார்கள் என்று ஐயர் சொன்னார். 
அதன் பிறகு சுமார் ஒரு மணிநேரம் சமஸ்கிரத மந்திரத்துடன் வேள்வித் தீ என ஐயரால் நடந்தது. வாங்கம்மா வாங்க ... காலம் மாறிவிட்டது (கைம் பெண்கள் என்று சொல்லாமல்) முன்பு போல் மூத்தவர்கள் மறைவாக நிற்காமல் முன்னுக்கு வந்து தம்பதிகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று ஐயர் அழைத்தார். அந்த ஐயரின் செயல் வரவேற்கத் தக்கது, பாராட்டத் தக்கது.
புது மனை புகுவிழாவுக்கு எனக்கு நன்கு அறிமுகமான பதிவர்கள் சிலரையும் அழைந்திருந்தேன். அன்று திங்கள் கிழமை ஆகையால் பணிக்கு செல்லவேண்டிய கடமை இருப்பதால் அதிலும் சிலர் வர இயலாமல் போனது. துளசி அம்மா தனது கணவர் திரு கோபாலுடன் வந்திருந்தார். துளசி அம்மா வரும் போது சமஸ்கிரத வழிபாடு முடியும் தருவாயில் இருந்தது. அதன் பிறகு ஓதுவார் வந்தார்.
காலை 7:30 - 9.00 இராகு காலம் என்பதால் 9 மணிக்கு மேல் ஐயர் ஏற்கனவே அமைத்திருந்த அதே ஓமகுண்டத்தில் ஓதுவார் பூசையைத் தொடங்கினார். வடமொழி, தமிழ் முறை வழிபாடு இரண்டுக்கும் பூசை முறைகளில் ஒரு சில வேறுபாடுகளத் தவிர வேறெதுவும் இல்லை, தமிழ் வழி வழிபாட்டில் என்ன சொல்கிறார்கள் என்பது நன்றாக புரிந்தது. 'தமிழில் மந்திரம் சொல்லி வழிபடுவது இழிவு அல்ல, வடமொழியும் தமிழும் இரண்டு கண் போன்றது', ஆனால் பலர் ஒரு கண்ணில் சுண்ணாம்பை தடவுகிறார்கள், நீங்கள் இரண்டையுமே செய்ய விரும்பி இருக்கிறீர்கள், ரொம்ப மகிழ்ச்சி' என ஒரு குட்டி பிரசங்கம் செய்தார் ஓதுவார். பதிவர் யுவகிருஷ்ணா வந்திருந்தார். அன்றைக்கு முதல்நாள் முதல் என்னுடன் இருந்த கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் நிழல்படங்கள், அசைபடங்கள் எடுத்து தந்தார்.

இருமடங்கு செலவுகள் என்றாலும், இரண்டு வகை பூசைக்கும் ஏறக்குறைய செலவுகள் ஒன்று தான். வந்திருந்தவர்களில் பலர் தமிழ் முறை பூசையும் சிறப்பாகவே அமைந்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.
எதற்காக இந்த பதிவு ? சுயபுராணத்திற்காக அல்ல.
வடமொழி வழியாக நடத்தப்படும் அத்தனை வகை இல்ல நிகழ்ச்சி, கோவில் நிகழ்ச்சி அனைத்தையும் தமிழ் வழியாகவும் நடத்த முடியும், அதற்கான அனைத்து தகுதிகளும் தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டு இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் அசை, இசை, ஓசை நயம்பட அமைக்கப்பட்டு இருக்கிறது. தமிழனே தமிழை புறக்கணித்து மட்டுமின்றி, 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' என்று தமிழுக்கு இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தமிழில் பூசை செய்வதால் தவறாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை, வடமொழியால் மட்டுமே வழிபாடு செய்வதால் உழைப்பும் முயற்சியும் இல்லாமல், சகல ஐஸ்வர்யங்களும் வந்து சேர்ந்துவிடப் போவதில்லை.
அவை எல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைகளில் தமிழுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காவிட்டால் தெலுங்கர்களோ, கன்னடர்களோ கொடுப்பார்களா என்ன ? தமிழை முன்னிருத்தும் பொறுப்பு தமிழர்களிடம் மட்டும் தான் இருக்கிறது.
வீட்டைக் கட்டிப்பாருங்கள், (ஒருமுறை) கல்யாணம் செய்து பாருங்கள், அதற்கான வழிபாட்டு முறைகளை தமிழ்மறை வழி செய்தும் பாருங்கள், கொஞ்சம் பேர் முகம் சுளிப்பார்கள்
பிறகு தமிழர் வழக்கமாகிவிடும். சென்ற ஆண்டு எங்கள் அக்கா மகளுக்கும் தமிழ்மறை வழி திருமணம் தான் செய்தோம், சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தமிழ்மறை திருமணம் செய்து கொண்டார்கள். எல்லோரும் தமிழ்வழியாக செய்தால், பார்பனர்கள் தமிழ் வழியாக நடத்திக் கொடுக்க முன்வருவார்கள். நம்மால் விரும்பி வாங்குகிற பொருள் தான் விற்கப்படனும்.
வழியில்லாமல் விற்பதைத் தான் நாமெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். நாம் முதலில் மாறுவோம், தமிழர் உலகம் தானாய் மாறும். புதுசாக திருமணம் செய்து கொள்ளப் போகிற அதிசா போன்ற கன்னிப் பசங்க தமிழ்மறை வழி திருமணத்துக்கு மாறனும் :)
Read more...