பின்பற்றுபவர்கள்

24 அக்டோபர், 2007

தீப ஆவலி - மற்றும் பெரியார் !

தீபம் அல்லது தீப என்ற வடசொல்லின் மூலம் 'தீ' என்ற தனித்தமிழ் சொல். அதாவது தீ > தீப என்று வடமொழியாகி மீண்டும் தமிழ்படுத்த தீபம் என்று திரிந்து வந்திருக்கிறது. விளக்குத் திருவிழா என்பது ஆசீய நாடுகள் அனைத்திலுமே கொண்டாடுகிறார்கள். பசுநெய் விளக்குக்கு மாற்றாக சமணத் துறவிகளால் ஆமணக்கு எண்ணை கண்டுபிடிக்கப்பட்டதன் அடையாளமாக தீபத் திருவிழா தொடங்கியதாக அயோத்திதாசர் தம் ஆராய்ச்சி வழி சொல்லி இருக்கிறார். அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை ஒருகாலத்தில் சமணர் மலையாக இருந்ததாகவும் சமண பள்ளிகள் மிக்கவையாக இருந்த இடம் என்று இன்றும் அறியப்படுகிறது. திருவண்ணாமலை தீபம் ஏற்றும் நிகழ்வு (வைபவம்) சமண முனிகளால் தொடங்கப்பட்டதாகவும், சமணம் நலிந்தபிறகு அது கார்த்திகை தீபம் என்னும் இந்து பண்டிகையாக மாறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொங்கலுக்கு முன்பு வரும் போகிப் பண்டிகை என்பது பெளத்தர்கள் கொண்டாடிய போதி சாத்துவர் நினைவாக கொண்டாடிய போதி பண்டிகையாம். ஏற்றுக் கொள்ளுதல் மறுத்தல் தாண்டி இதை ஒரு கருத்து என்ற அளவில் தான் கொள்கிறேன். தீபாவளி சமண / பவுத்த சமயங்களுக்கும் தொடர்புடையதாகவே இருக்கிறது.

தற்போதைய தீபாவளியை எடுத்துக் கொள்வோம், தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பழைய கதை (புராண) வேறு வேறாக இருக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் எப்பொழுதுமே சூரன், அசுரன் கதைகள் மிகவும் அறியப்பட்டவை ( பிரபலம்). முருகன் முதல் ஐயப்பன் வரை எதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூரனை பிளந்து இருப்பார்கள். அதனால் தென்னிந்தியாவில் சூரனை வைத்து...தீபாவளிக்கான கதை நரகாசூரனை மையப்படுத்தி உள்ளது ( நரன் - என்றால் மனிதன் + அசூரன் - சூராபானம் குடிக்காதவன்; அதர்வண வேத விளக்கப்படி சுரர் என்றால் சுராபானம் என்ற பானத்தை குடிப்பவர்கள், அசுரர்கள் அதற்கு மாற்றானவர்கள் அல்லது அது கிடைக்கப் பெறாதவர்கள், கிறித்துவ தேவலயங்களில் அப்பம் கிடைக்காத கிறித்துவரல்லாதவர்கள் போன்றவர்கள், சுராபானம் குடிக்காத மனிதனே அசுரன் எனப்பட்டன் ) . நரகாசூரனை கிருஷ்ணனின் மனைவி கொன்ற நிகழ்ச்சியின் வெற்றியாக தீபாவளி வந்ததாம். ஆனால் வட இந்தியாவில் சூரன் கதைகள் அதிகமாக இருந்ததில்லை. மிகவும் பேசப்பட்டது மகாபாரதமும், இராமயணமும் தான். எனவே இராமயணத்தில் இராமணால் இராவனன் வதம் செய்யப்பட்டதன் நினைவாக தீபாவளி கொண்டாடுகிறார்கள். வட இந்தியர்களைப் பொருத்தவரையில் இராவண வதமே தீபாவளி ( இராவண்ண - மனிதர்கள் மனதில் உள்ள இரவின் வண்ணமான கருமை நீங்கி விடியல் தோன்றியதற்காக - என்று சொன்னால் தத்துவ விளக்கமாக இருக்கும்)

தீபாவளி என்ற சொல்லை வைத்துப் பார்க்கும் போது ஒளி ஏற்றும் நாள் அதாவது துன்பம் என்னும் இருளில் இருந்து நீங்கி மகிழ்ச்சி பொங்கவைக்க ஓவ்வொருவரும் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்கென ஒரு அடையாள பண்டிகையாக தீபாவளி தோன்றி இருக்கிறது என்று சொன்னால் பொருத்தமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

*********

பெரியார் எவ்வளவோ சொல்லியும் தீபாவளி கொண்டாட்டங்களையும், கதைகளையும் அழிக்க முடியவில்லை என்று சில பற்றாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள், எதிர்பாளர்கள் கொக்கறிக்கிறார்கள். நல்லது. தீபாவளி என்பது அடிமைத் திருவிழா அல்ல. அதைக் கொண்டாடுபவர்கள் அதனால் நட்டம் அடைந்தது போல் தெரியவில்லை. கூலி வேலை செய்பவருக்கும் அவரது முதலாளி வேட்டி / புடவை எடுத்துக் கொடுத்து மகிழவைக்கிறார். ஏழைக்கு இதெல்லாம் இலவசமாக கிடைக்கும் போது தீபாவளியை எப்படி துறப்பார்கள் ? அதுபோல் நடுத்தரவர்கம், அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி என்றாலே ஊக்க தொகை ( போனஸ்) கிடைப்பது தான் நினைவு வரும். பின்பு எப்படி அவர்கள் தீபாவளியை மறப்பார்கள் ? வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகுகிறது. தீபாவளி மறக்கப்படாமல் இருப்பதற்கு இதெல்லாம் காரணமேயன்றி இராவண வதமா ? இல்லை நரகாசூர வதமா ? என்றெல்லாம் ஆராய்சியில் இவர்கள் யாரும் செல்வது இல்லை. யார் யாரை வதம் செய்தார்கள் என்ற கேள்விக்கெல்லாம் வியாபாரிகளுக்கோ, ஏழைகளுக்கோ எதுவும் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வழக்கமான கொண்டாட்டங்கள் எதுவும் பாதிப்படையப் போவதில்லை. எனவே தீபாவளி கொண்டாட்டம் களைகட்டுவதற்கு பெரியாரின் பேச்சு எடுபடவில்லை என்று சொன்னால் அதுசரியல்ல.. திபாவளிக்கான காரணங்களை தெரிந்துதான் திபாவளி கொண்டாடுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது. அது ஒரு பண்டிகை வரவும், மகிழ்ச்சியும் இருக்கிறது அவ்வளவுதான்.

பொதுவாகவே பெரியாரிசம், மார்கிசம் போன்ற முற்போக்கு கொள்கை எல்லாம் தேவைமிக்கதன் (அத்யாவசிய) காரணமாகவே எழுகிறது அல்லது தோன்றுகிறது என்றும் சொல்லலாம். அதன்பிறகு கொள்கை தாக்கம் என்பது எப்போதும் ஓரளவு மட்டுமே இருக்கும். ஆனால் காலப்போக்கில் அதன் வீரியத்துக்கான தேவை இல்லாது போகும் காரணம் அவை பழைய தாழ்வு நிலை உயர்ந்து சமச்சீரடைய உதவுமேயன்றி ஒரேடியாக தலைகீழாக புரட்டிப் போட்டுவிடாது. சீனப்புரட்சியில் நடந்த தலைகீழ் மாற்றம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பெரியாரின் தேவை தற்பொழுது கூட தேவையாகத்தான் இருக்கிறது ஆனால் அதே அளவு வீரியத்திற்கு தற்பொழுது காரணங்கள் குறைந்து போய் இருக்கிறது. காரணம் பெரியாரின் தாக்கம் ஏற்கனவே ஓரளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை சமச்சீர் செய்து வெற்றி பெற்றுவிட்டது.


இது போல் பெரியார் எதிர்ப்பு குழு (கோஷ்டி) பெரியாருக்கு பிறகு கோவில்களும், அங்கு வரும் கூட்டம் பெருகிவிட்டதாகவும், பெரியார் கொள்கை நீர்த்துப் போய்விட்டதாகவும் வலிய வலியுருத்து கொக்கறிக்கிறார்கள். ஏன் பெருகிவிட்டது ? காரணத்தை ஆராய்ந்தால் முன்பு கோவிலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட பெரும்பாண்மை சமூகமான தலித் பெருங்குடிமக்கள் இன்று கோவிலுக்குள் உள்ளே சென்று வழிபடும் நிலைக்கு வந்து, வழிபாட்டு உரிமையுடன் சென்றுவருகிறார்கள். அதனால் கோவில்களில் கூட்டம் மிக்கவையாக உள்ளது. அவர்களின் வருகையே புதிய சிறிய கோவில்களின் தேவையாகவும் உள்ளது. அவர்களை கோவிலுக்குள் அனுப்பியது, உரிமையை பெற்றுத்தர அதற்காக போராடி வெற்றிகண்டுள்ளது... எல்லாமே பெரியாரின் அவர் கொள்கையின் வெற்றிதானே ?

தீபாவளி கொண்டாட்டங்களினால் எல்லோருக்கும் மகிழ்வென்றால் புராணங்களை மறந்துவிட்டு கொண்டாடுவதில் தவறே இல்லை.




அன்புடன்,

கோவி.கண்ணன்

7 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)
என்னைப் பொருத்தவரை தீபாவளி என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து வரும் விடுமுறை மட்டுமே. வீட்டில் நிம்மதியாக ஓய்வு எடுப்பேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
என்னைப் பொருத்தவரை தீபாவளி என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து வரும் விடுமுறை மட்டுமே. வீட்டில் நிம்மதியாக ஓய்வு எடுப்பேன்...
//

ஜெகதீசன்,

இன்னும் பால்மனம் மாறா பாலகனாகவே இருக்கிறீர்கள்.
விடுமுறை என்றால் குழந்தைகளுக்குத்தான் கொண்டாட்டம்.

Balaji Chitra Ganesan சொன்னது…

வட இந்தியாவில் தீபாவளி இராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். வரவேற்பதற்காக விளக்குகளெல்லாம் ஏற்றிவைக்கிறார்கள். இராவணனைக் கொன்ற தினத்தை தசராவாகக் கொண்டாடுகிறார்கள்.

தமிழர்கள் தீபாவளி ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது விந்தைதான். கிருஷ்ணரின் பிறந்தநாளையே கொண்டாடதவர்கள் அவரின் மனைவி ஒரு போரில் வென்றதைக் கொண்டாடுவார்களா என்று தெரியவில்லை.

மகாவீரர் இறந்த தினமும் தீபாவளிதான். சமணம் தமிழர்களின் மிகமுக்கியமான மதங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஒருவர் தவறிவிட்டால் அவரது இறுதி ஊர்வலத்துக்கு பட்டாசு வெடிப்பது தமிழரிடம் வழக்கமாயிருக்கிறது. ஒரு வேளை மகாவீரர் மறைந்ததைத்தான் அந்தக்கால தமிழர்கள் தீபாவளியாக அனுசரித்தார்களா என்று தெரியவில்லை.

தெரிந்தவர்கள் சொன்னால் தேவலை!

காரூரன் சொன்னது…

வர்த்தக மயப்படுத்தப்பட்டவை தான் இந்த பண்டிகைகள். இந்துவும், இஸ்லாமியனும் வட அமெரிக்காவில் நத்தார் பண்டிகை கொண்டாடும் போது, உங்க ஊரில் தீபாவளி என்ன விதி விலக்கா.
பெரியாரின் கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆயினும் அவர் கருத்துக்கள் தோன்றிய கால கட்டம், அரசியல் பின்னணிகள் வித்தியாசமானவை. ஆனால் அவருடைய கருத்துக்களை மதம் பரப்பும் அணுகுமுறையில் பரப்ப அணுகுவது தவறே.

RATHNESH சொன்னது…

ஓர் ஆசிரமத்தில் எலித் தொல்லை நிறைய இருக்க, ஒரு பூனை வளர்க்கப்பட்டதாம். குரு, தன் சிஷ்யர்களுக்கு உபதேச உரை கொடுக்கும் போதெல்லாம் அந்தப் பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடி அவர் கவனத்தைச் சிதைத்துக் கொண்டிருந்ததாம். குரு, அதனை அங்கே இருந்த தூண் ஒன்றில் கட்டிப் போடச் சொன்னாராம். அன்றிலிருந்து அவர் உபதேச வகுப்பு தொடங்கும் முன் அந்தப் பூனையை அந்தத் தூணில் கட்டிப் போட்டு விட்டுத் தான் வகுப்பு தொடருமாம். எலித் தொல்லை தீர்ந்த பிறகும் சாப்பாடு கிடைக்கிறதே என்று அந்தப் பூனை அங்கேயே தங்கி விட்டிருக்கிறது. அந்த குரு இறந்து போனபிறகு அவருடைய தலைமை சிஷ்யன் புதிய குருவாகி உபதேச வகுப்புகள் தொடர்ந்திருக்கிறார். அப்போதும் அந்தப் பூனையைக் கட்டிப் போடும் வழக்கம் தொடர்ந்திருக்கிறது. கொஞ்சநாளில் அந்தப் பூனை இறந்து விட்டதாம். மறுநாள் உபதேச வகுப்புக்கு முன் சிஷ்யர்கள் அவசரமாக ஊருக்குள் அலைந்து புதிதாக ஒரு பூனை வாங்கி வந்து அந்தத் தூணில் கட்டிப் போட்டார்களாம். புதிய குருவுக்கும் அதன் பிறகு தான் உரை நிகழ்த்தவே முடிந்ததாம்.

பழைய மதகுருக்கள் மட்டுமின்றி இஸங்கள் சொன்ன எல்லா பெரியவர்களுக்கும் அவர்தம் சிஷ்யர்களுக்கும் பொருந்துகின்ற கதை இது.

மற்றபடி தீபாவளி விஷயத்தில் நானும் ஜெகதீசன் கட்சி தான். கூடவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உலக வரலாற்றில் முதன்முறையாகத் திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்கள், செய்தித் தாள்கள் மற்றும் இதழ்களின் சிறப்பு மலர்கள்.

ஜெகதீசன் சொன்னது…

ரத்னேஸ் அவர்களே,
நீங்களும் என் கட்சியில் இருப்பதற்கு நன்றி(நீங்க எ.ஏ.தி.க வைத்தானே சொல்றீங்க? உங்களுக்கு கட்சியில் என்ன பதவி வேண்டும்? சொல்லுங்க தந்துவிடுவோம்....)

கோவி.கண்ணன், இப்ப என்ன செய்வீங்க??? இவரும் "பால்மனம் மாறா பாலகனா"

ரத்னேஸ், நீங்க சொன்ன கதை ரெம்ப நல்லா இருக்கு....

Unknown சொன்னது…

நானும் உங்க கட்ச்சி தானுங்க பெரியார் உங்களை முன்னேர சொன்னரய்யா அதை விட்டுட்டு இன்னிக்கு ஆர்த்தீகம் முக்கியமா நார்த்தீக்கம்முக்கியமனு பேசிக்குனு இருக்கீங்க மொதல்ல சிந்தியுங்கனு தான் சொன்னார் நம்ம அத விட்டுபுட்டு பெரியார் சாமீ இல்லனு சொன்னாரு ஒரே புடியா புடிக்கிரீங்க இந்த தீபாவலிக்காவது எதவது புதுசா கண்டுபுடிங இல்ல செய்யிங்க வேனும்னா தெனாலி பொறந்த நாள் பெரியார்பொறந்தனாள் எல்லாத்துக்கும் இனிப்பு செய்து கொழுக்கட்டை சுட்டு வெடிவெடிச்சி கொண்டடுவோம் இதல எங்க தெனலிராமன் வந்தானு பாக்கிரீங்களா பெரியாருக்கு முன்னாடியே பெரியார் செய்த எல்லாவேலையும் செய்தவன் தான் தெனாலிராமனும் என்ன அவனுக்கு ஒரே வீக்னஸ் பாய்ன்ட் அரசனுக்கு பயந்து காமெடியனா இருக்கவேண்டி இருந்தது வேனும்னா இன்னொருமுறை தெனாலிராமன் கதைய படிச்சி பாருங்க
இன்னிக்கு எல்லாமே வியாபாரமும் அரசியலும் அரிசியலும் தான் இருக்கு என்ன பன்ன தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்