அந்நியன் என்றதும் தமிழ்மணத்தில் உலாவரும் அந்நியன் (வெங்கடரமணி) பற்றியதல்ல இந்த பதிவு. சாச்சாத் விக்ரம் நடித்த அந்நியன் பற்றியது தான். அது என்ன இரண்டாம் பாகம் என்று முதல் பாகத்தை தேடாதீர்கள். முதல் பாகம் ஒரிஜினல் அந்நியன் படம்தான், இந்த இரண்டாம் பாகம் சின்ன ட்ரெயலர் ... மூச் ... சிவாஜி முடிச்சிட்டு அடுத்தது இந்தபடம் என்று இயக்குனர் சங்கர் யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசியமாக என்னிடம் மட்டும் கதை சொன்னார்.
இடம் எமலோகம், எமதர்மனின் அவை:
அந்நியன் கைகள் கட்டப்பட்டு எமலோகத்தில் நிற்கிறார், அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

எமன் : யோவ் சித்ரகுப்தா, இவனுக்குத் தான் ஆயுள் முடியலயே, அதற்குள் ஏன் இவனைப் பிடித்து வந்தாய் ?
சித்ர குப்தன் : மண்ணிக்கனும் யஜமான், இந்த அந்நியன் என் வேலையில தலையிட்டு எனக்கு வேட்டு வெச்சுடுவான் போல இருக்கிறது. இந்த புகார்களை படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
என்று புகார்கள் அடங்கிய ஓலையை கொடுக்கிறார்.
எமன் : உன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறாய் ?
அந்நியன் கரகரத்த குரலில்,
அந்நியன் : என்ன குற்றச்சாட்டு ?
எமன் : குற்றச்சாட்டு ஒன்று, எருமை மாடுகளைவிட்டு ஒருவனை கொலை செய்திருக்கிறாய்.
அந்நியன் : ஆமாம் அவனை கொஞ்சி கேட்டும் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் அதனால் அநியாயமாக ஒரு உயிர்போய்விட்டது.
எமன் : அந்த உயிருக்கு நாங்கள் தேதி குறித்தும், காப்பாற்ற முயன்றது நீ செய்த குற்றம், அதுமட்டுமல்ல, நீ காரை நிறுத்தி சொன்ன இடத்தில் பெரும் டிராபிக் ஜாம் ஆகி, அந்த ட்ரைவர் போலிஸ்காரர்களால் எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார், அவர் கோர்டில் பைன் கட்டிய ரசீதும் வைத்து இருக்கிறார், நீ இது எதும் தெரியாமல் அந்த அப்பாவியை எருமைகளை விட்டு கொலை செய்திருக்கிறாய்.
அந்நியன் : வேறென்ன குற்றச்சாட்டு சொல்கிறீர்கள்?
எமன் : குற்றச்சாட்டு இரண்டு, எண்ணைக் கொப்பறையில் ஒரு அப்பாவி கேன்டின் ஓனரை பொறித்தது.
அந்நியன் : அப்பாவியா அவனா ? பல்லி விழுந்த சாப்பட்டை சப்ளை பண்ணிவிட்டு, தின்னா செத்தா போய்டுவாங்க?ன்னு தெனாவெட்டா கேள்வி கேட்குறான் அதான் அவனை பொறிச்சேன்
கேன்டின் ஓனர் கனல் கண்ணன் அவசரமாக : எமராஜா, சமையக்காரன் தலையில பல்லி விழுந்திடுச்சிங்க, அவன் எங்கிட்ட வந்து 'பல்லி தலையில விழுந்த செத்துடு வாங்களான்'னு கேட்டான், நான் சொன்னேன், 'ஒருவாரமா குளிக்காத உன் தலையில பல்லி விழுந்தா அதுதாண்டா செத்துடும்' னேன், அறைகுறையா காதில வாங்கின இந்த படுபாவி அந்நியன் என்னை ஒன்னுக்கு போக கூட விடாம அநியாமா மசாலா தடவி பொறிச்சிட்டான்.
எமன் : என்ன மிஸ்டர் அந்நியன் இதுக்கு என்ன சொல்லப்போற ?
உடனே அந்நியன் தலைகுனிகிறார்
எமன் : குற்றச்சாட்டு மூன்று, ஒரு ஆட்டோ மொபைல் ஓனரை அட்டை பூச்சியை விட்டு கொன்றது
அந்நியன் : மஹா ராஜா, நீங்க மேல சொன்ன குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்டாலும், இதை நான் ஒத்துக்கவே மாட்டேன், ஏன்னா ? இவன் கம்பெனி செஞ்ச ப்ரேக் ஒயர் ரொம்ப மோசம், அதனால் நிறையபேர் அல்ப ஆயுளில் சாகுராங்க, இதை நான் கண்ணால பார்த்தேன், இதை கேட்டா எனக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்றான்.
ஆட்டோ மொபைல் ஓனர் : எம ராஜா, எந்த மோட்டார் பைக் ப்ரேக் ஒயரும் மூன்று வருசத்துக்கு மேல் தாங்காதுங்க, இவன் அறுந்ததா சொன்னது ஐந்து வருசத்துக்கு முன் வாங்கினதுங்க, ஐந்து வருசமா ஓவராலிங் செய்யாத மோட்டர் பைக்கிலேர்ந்து தான் அது அறுந்துதுங்க, லஞ்சம் வாங்க வந்தியானு நான் கேட்டதை, லஞ்சம் வாங்கிக்கிறாயான்னு கேட்டேன்-னு நினைச்சு என்னை அனாவசியமா கொன்னுட்டான் பாவி, எனக்கு 2 பொண்டாட்டியும் ஒரு சின்ன வீடும் இருக்குங்க, அவுங்கல்லாம் இப்ப கஷ்டப்படுராங்க எஜமான்
எமன் : யோவ், அந்நியன், என்னய்யா இதல்லாம் ? உன்ன தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ வைக்க சொல்கிறேன்
உடனே அந்நியன் மயங்கி சரிந்து விழுந்து, அம்பியாக எழுகிறார்,
அம்பி : என்னை சுத்தி நிக்கிறாளே, இவாள்லாம் யாரு, எதாவது ட்ராமவுக்கு வேசம் போட்டுட்டு வந்திருக்கேளா, என் பாட்டி சொல்ற கருட புராண கதையில வர்ரவா மாதிரியே இருக்கேளே. என்று குடுமையை முடிந்துகொண்டே பயந்து கேட்கிறார்

எமன் : சித்ர குப்தா என்ன இது, இவன் ஏன் திடீர் என்று இப்படி பேசுகிறான் ?
சித்ர குப்தன் : நான் செல்கிறேன் எஜமான், இந்த அம்பி தான் நெஜம், ஆனா அடிக்கடி இவன் அந்நியனா மாறி நம்ம வேலையில தலையிடுறான், அடிக்கடி டீவியில் வருகிற, 'கிரைம் வாட்ச்' பார்த்து அந்நியனா மாறுகிறான், அப்பப்ப திருட்டுத்தனமா எம்.டிவி பார்த்து ரெமோ வாகவும் மாறுகிறான்.
அம்பி : என்னென்னுமோ பேசிறேள், நேக்கு ஒன்னும் புரியமாட்டேங்குறது, எனக்கு பயமா இருக்கு, நீங்கெல்லாம் என்னை விட்டுங்கோ ஆத்துல அம்மா என்னை தேடுவாள்.
அந்த சமயத்தில், இந்திரலோகத்து மேனகா அங்குவர, அதைப்பார்த அம்பி, துள்ளிக்குத்து ரெமோவாக மாறுகிறார்
ரெமோ : அல்லோ, மோனிகா, ஹவ் வார் யூ ?

மேனகா : ஐயோ ராமா, சாரி ரெமோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.. மோனிகா இல்லை நான் மேனகா
ரெமோ : ஐ நோ, மேனகா இட் ஈஸ் ஓல்டு நேம், மோனிகான்னு மாத்திக்க, அதுதான் நல்லாயிருக்கு, நீ மொதல்ல, உடம்பு புல்லா கவர் பன்ற ஓல்ட் காஸ்டியூம சேஞ்ச் பண்ணி, டூ பீஸ் அது இல்லாட்டி மிடி போட்டுக்க அதுதான் இப்ப பேஷன்.
எமன் தலையில் அடித்துக்கொண்டு,
எமன் : சித்ர குப்தா, எனக்கு கோபம் வர்ரத்துக்குள்ள இவனுக்கு தண்டனை கொடுக்க தூக்கிட்டுபோகச் சொல்லு,
சித்ர குப்தன் : எஜமான் இவனுக்கு ஆயுள் முடியவில்லை... இவனை மாற்றுவதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு
எமன் : உடனே சொல்லு, என்ன செய்ய வேண்டும் ?
சித்ர குப்தன் : எஜமான் ... கருட புராணத்தில் உள்ள 'ரோம சம்ஹாரம்' செய்யனும், இவன் தலையில உள்ள முடிக்கு தீ வைச்சிட்டா, இவன் இனி தலைய சிலுப்பி ... மாறி மாறி அவதாரம் எடுக்கமாட்டான்.
எமன் : உடனிடியாக தலைக்கு தீவைத்து, பின் மொட்டையடித்து பூலோகத்தில் இவனை தூக்கிப் போடு, அப்படியே இவன் வீட்டில் உள்ள டிவியையும் உடைத்து நொறுக்கு.
அடுத்தகாட்சி அம்பியின் வீட்டில் ...
தீ காயங்களுடன், மயக்கம் தெளிந்து அம்பி எழுந்து, தலையை தடவிபார்த்து,

அம்பி : என்னது டீவியெல்லாம் உடைஞ்சு கிடக்கிறது, யாரு என்ன பண்ணினா? ஐயோ, நான் ஆசை ஆசையாய் வெச்ச குடுமி எங்க போச்சு, பெருமாளே, என்ன சோதனையிது, சாதுவா இருந்த என்னை இப்படி சேதுவா மாத்திட்டாளே, அவாள்லாம் நன்னாயிருப்ளா, பகவானே எல்லாத்தையும் பாத்துண்டு இருக்கியே.
என்று அழுதபடி வெளியே வருகிறார்