பின்பற்றுபவர்கள்

1 மார்ச், 2010

பொறியியல் பட்டப்படிப்பில் தமிழில் !

அண்மையில் தமிழக அமைச்சர் பொன்முடி தமிழ் வழிப் படிப்பாக பொறியியல் பட்டப்படிப்பு விரைவில் துவங்கும் என்று அறிவித்து இருந்தார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தும், அதனால் பெறப் போகும் பயன் நினைத்துப் பார்த்தால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடுகளில் குறிப்பாக சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் அந்த நாடுகளின் தாய்மொழி வழியாக அனைத்துக் கல்வியும் வழங்கப்படுகிறது. அந்த நாட்டு மக்கள் அம்மொழியிலேயே வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும் சூழலும் பெறுகிறார்கள்.

தாய் மொழி வழிக் கல்வி வழியாக வேலை வாய்ப்பு பெறும் சீன நாட்டைச் சேர்ந்த சீனர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட சீன மொழி பேசும் பெரும்பாண்மை மக்கள் வாழும் நாடுகளில் தான் வேலை கிடைக்கிறது. வேறு நாடுகளில் கிடைக்காது, கிடைத்தாலும் அவர்களால் செய்ய இயலாது.

தமிழக அரசு அலுவலகங்களிலும் அரசு ஆணைகளிலுமே தமிழ் முதன்மையாக இல்லாத பொழுது தொழிற்கல்வியை தமிழில் தருவதால் பயன் இருப்பது போல் தெரியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளின் வழியாக 80 விழுக்காட்டு ( சரியாகத் தெரியவில்லை) பொறியாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தாய்மொழிக் கல்வி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்குமா என்பதே தெரியாது. பன்னாட்டு நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுகளும் எழுத்து தேர்வுகளும், கலந்துரையாடல் தேர்வுகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. தமிழ் வழி கல்வி பெற்றவர்களால் அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வேண்டுமென்றால் ஆங்கிலம் மிக சரளமாக தெரிந்திருந்தால் தான் போட்டி போட்டு தேர்வாகவே முடியும். நான் முதன் முதலில் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற எல் என் டி நிறுவனத்தில் குருப் டிஸ்கசன் எனப்படும் கலந்துரையாடலில் பேந்த பேந்த விழித்து வெளியேறினேன். அதன் பிறகு தட்டு தடுமாறி வேலைக்கு சேர்ந்து பேச்சு வழக்கு ஆங்கிலம் பிடிபடவே இரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியது. பின்னர் பொறியியல் படித்த பிறகே நல்ல ஆங்கில புழக்கம் ஏற்பட்டு வேலை வாய்ப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன்.

தமிழ் மொழி வேர்சொற்கள் நிறைந்த வளமையான மொழி, எந்த ஒரு பிற மொழிச் சொல்லையும் தமிழிலேயே உருவாக்கி பயன்படுத்த முடியும் அந்த வகையில் பொறியியல் கல்வியை தமிழ் படுத்துவதும், பாடத் திட்டம் கொண்டுவருவதும் எளிமையானதே. தற்போது தொழிற் பயிற்சி கல்விகள்(ITI), பட்டய படிப்புகள் (DIPLOMA) தமிழில் இருக்கின்றன. அதே போல் பொறியியலையும் கொண்டுவருவது எளிது தான். ஆனால் போட்டி தன்மை மிக்க இவ்வுலகில், உலகமயம் என்கிற சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளைப் பெற தமிழ் வழிக் கல்வி பயனளிக்காது. பயனளிக்கும் வகையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ் நாடு தொழில் துறையில் தன்னிறைவு அடையவும் இல்லை. அப்படி எல்லாம் ஆகவேண்டும் என்ற ஆசையை மட்டுமே வைத்துக் கொண்டு கல்வியில் மட்டுமே நடைமுறைக்குக் கொண்டு வருவதால் மாணவர்கள் எதிர்காலத்தில் இடற்பாடுகளை எதிர் நோக்குவார்கள்.

* குறிப்பிட்ட விழுக்காடு தமிழ் வழி கல்வி பெற்றவர்களுக்கு எங்கள் மானிலத்தில் இருக்கும் பன்னாட்டு, இந்திய அரசு நிறுவங்கள் வேலை வாய்ப்பு தரவேண்டும்
* எல்லா தமிழக அரசு சார்ந்த பொறியியல் நிறுவனங்களும் தமிழ் வழி கல்வி பயன்றவர்களுக்கு சம வாய்ப்பு அல்லது முன்னுரிமை வழங்க வேண்டும்
* தமிழ் வழி கல்வி பயின்றவர்களின் ஆங்கில மொழி அறிவை முதன்மை தகுதியாக வைக்கக் கூடாது

இதற்கெல்லாம் அரசு எதாவது நல்ல நடவெடிக்கை எடுத்துவிட்டு தமிழ் வழி பொறியியல் கல்வியை நடை முறை கொண்டு வந்தால் வரவேற்கலாம்.

உற்பத்தியிலும், பொருளியியலும் தமிழகம் சார்ந்த நிறுவனங்கள் வளர்ந்து வேலை வாய்ப்புக்கு பன்னாட்டு நிறுவனங்கள் சாராத ஒரு நிலையில் தமிழ் வழிக் கல்வியில் பொறியியல் பேச கேட்க, நடைமுறைக்கு நன்றாக இருக்கும்.

நடை முறையில் இருக்கும் இருமொழித் திட்டத்தில் தமிழ் வழி கல்வி பயலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாக பயிற்றுவித்தாலே போதும். ஆங்கிலம் நன்கு தெரிந்த ஒரு மாணவன்/மாணவி எந்த மொழியில் கல்வி கற்றாலும் அவன்/ள் மேலே வந்துவிடுவான்(ள்). ஆங்கில வழிக் கல்வியில் இருப்பது போன்றே ஆங்கில வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசிப் பழகவேண்டும் என்கிற விதிகளை வைத்து அவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுத்தால் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பழகிக் கொண்டு ஆங்கிலத்தில் நன்றாக பேச எழுதக் கற்றுக் கொள்வார்கள். இப்போது வேலை தேடும் தமிழ் வழி மாணவர்களுக்கு ஆங்கிலம் மட்டும் தான் அரை கூவலாக இருக்கிறது. அதில் மின்னுபவர்கள் எளிதில் வேலை வாங்கிவிடுகிறார்கள். மற்றபடி ஒரு மனிதரின் தனித் திறமைக்கு முன்பு மொழி ஒரு தடையே இல்லை.

பொறியியல் கல்விக்கு தமிழ் வழியாகவும் வித்திடும் முன் அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் மாணவர்களுக்கு சேர்ந்து படிக்கலாம், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிற தன்னம்பிக்கை ஏற்படும். இல்லாவிடில் தமிழை வாழவைக்கிறோம் என்கிற போர்வையில் ஏழை மாணவர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்துவிட, அது எவருக்கும் பயனில்லாத ஒரு திட்டமாக இருந்து தோல்வியில் முடியும்.

13 கருத்துகள்:

Robin சொன்னது…

தமிழ் வழி கல்வியை ஆதரிப்பவர்கள், தங்கள் பிள்ளைகளை முதலில் தமிழ்வழி கல்வி பயில வைக்கட்டும், பின்பு மற்றவர்களுக்கு அறிவுரை கூறட்டும்.
//தமிழை வாழவைக்கிறோம் என்கிற போர்வையில் ஏழை மாணவர்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றி வைத்துவிட, அது எவருக்கும் பயனில்லாத ஒரு திட்டமாக இருந்து தோல்வியில் முடியும்.// உண்மை.

நட்புடன் ஜமால் சொன்னது…

கடைசி பத்தி நிதர்சணம்.

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா

அப்பாவி முரு சொன்னது…

மாட்டை விக்கிறவங்க தும்பைக் கொடுக்கமாட்டாங்கப்பு...

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள், நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை, ஆனால் பெயர் மட்டுமே வாங்க நினைப்பவர்கள் இவற்றைக் காற்றில் பறக்க விடுவார்கள். இது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும், வழக்கம் போல பிரமாண்டமாக ஆரம்பித்துப் பின்னர் காற்றில் பறக்க விடுவார்கள். நன்றி அண்ணா. (என்ன நம்ம ப்லாக் பக்கம் வருவது இல்லை என்று எதாவது விரதம் இருக்கின்றீர்களா? ஒரு மாதத்திற்க்கு மேல ஆயிற்று உங்களுடைய பின்னூட்டம் பார்த்து.)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சரியா சொல்லியிருக்கீங்க.

இப்போ உள்ள சூழ்நிலையில எதைப்படிச்சாலும் வேலை இல்லை.

ஏதோ தெரிஞ்ச அரைகுறை ஆங்கிலத்தை வச்சுதான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கு.

தமிழ் உதயம் சொன்னது…

சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.


எந்த ஒரு விஷயத்தையும்- எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காகவோ, அல்லது வீம்புகாகவோ செய்யக் கூடாது. தெளிவான சிந்தனையுடன், எதிர்கால வாய்ப்புகளை மனதில் கொண்டு செய்ய வேண்டும்.

வடுவூர் குமார் சொன்னது…

எங்கும் த‌மிழ் எதிலும் த‌மிழ் என்ற‌ வாத‌ம் பொறியாள‌ர்க‌ளுக்கு ஒத்துவ‌ராது என்று தோன்றுகிற‌து.நீங்க‌ள் சொல்லிய‌ மாதிரி த‌மிழில் நுழைவு தேர்வு எழுத‌ எத்த‌னை வெளி நாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் விரும்புவார்க‌‌ள அல்ல‌து ஒத்துக்கொள்வார்க‌ள் என்று தெரியாது.நிஜ‌ வாழ்கையில் இப்ப‌டி வெளி வ‌ருகிற‌ பொறியாள‌ர்க‌ள் த‌னித்தே க‌ட்ட‌ம் க‌ட்ட‌ப்ப‌டுவார்க‌ள்.
அந்நிய‌னில் சொல்கிற‌ மாதிரி "த‌ப்ப‌விட்ட‌ த‌ருன‌ங்க‌ளில்" இதையும் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ள‌லாம்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

ஞானி எழுதிய இன்னொரு நிகழ்வு, தேனீ அருகில் தமிழ் மீடியம் படித்த ஒரு பய்யன் பொறியியல் கல்லூரியில் இருந்த ஆங்கில மீடியம் புரியாமல் தற்கொலை செய்து கொண்டான். இதற்க்கு மறைமுக காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர். இதை நிவர்த்தி செய்ய பொறியியல் கல்லூரியில் தமிழ் மீடியம் வைக்க வேண்டும் என்று எழுதினார்.
இதோ பொன்முடி தமிழ் மீடியத்தை கொண்டு வந்து விட்டார்.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

hi English fluency is different , passing out professional exam is different.

examples:
Pranoy roy has passed the CA exam in Hindhi medium

Rameshwar Takur (ex Governor of Karnataka) has also passed the CA exam in Hindhi medium.

So Tamil medium Engineers should also come up well.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger யாஹூராம்ஜி said...

hi English fluency is different , passing out professional exam is different.

examples:
Pranoy roy has passed the CA exam in Hindhi medium

Rameshwar Takur (ex Governor of Karnataka) has also passed the CA exam in Hindhi medium.

So Tamil medium Engineers should also come up well.//

ஹிந்தியில் சி ஏ முடித்துவிட்டு வெளி நாட்டில் வேலை பார்க்க முடியுமா ? நமக்கு தேவை வேலை தரும் படிப்பு. அடிப்படைக் கல்வி தமிழில் இருக்க வேண்டும், பேச்சு வழக்கு தமிழில் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆங்கிலம் பள்ளியில் ஒழுங்காக பயிற்சி கொடுக்காததால் தான் மாணவன் தற்கொலை செய்து கொண்டான் தமிழ் வழிக் கல்வி படித்த அனைவருக்கும் அந்த குறை இருக்கிறது, இருந்தாலும் தன் முயற்சியால் பின்னர் ஆங்கிலம் பழகிக் கொள்கிறார்கள். ஆங்கலத்தில் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப் படவேண்டும். ஞானி போகாத ஊருக்கு வழி சொல்லி இருக்கிறார்.

Unknown சொன்னது…

வெளி நாட்டில் வேலை வேண்டும் என்றால் அந்த நாட்டின் மொழி தெரிவது அவசியம். அனால் அதற்கும் தமிழ் வழி கற்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நீங்கள் சொன்னது போல், மொழியை மொழியாக படித்தல் மட்டும் போதுமானது. ஆழ்ந்த சிந்தனை, அராய்ச்சி மனப்பான்மை, தேடல் இவையாவும் நன்கு புரியும் தாய் மொழியில் இருத்தலே நலம்.

ஜெர்மனி, ஜப்பான், கொரியா, தைவான் மற்றும் நோர்டிக் நாடுகளில், எவரும் ஆங்கிலத்தில் பொறியியல் கற்பது இல்லை. அதே சமயம், உலகின் மற்ற பொறியியல் வல்லுனர்களுடன் சேர்ந்து செம்மையாக பணி புரிகிறார்கள். இவர்களே பன்னாட்டு நிறுவங்களை துவக்கியவர்களாகவும், ஆராய்ச்சிகளில் சிறந்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாய் செல்வதை விரும்புவது இல்லை.

தமிழ் வழி பொறியியல் சரியான முன்னேற்பாடுகளுடன் சரியான கோணத்தில் அனுகினோமேன்றால், நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும் என்று நம்புகிறேன். இது நல்ல, நீண்டகால பலன்களை கொடுக்க வல்லது.

Santhosh சொன்னது…

கோவி,
ஒரு மனிதன் தன்னுடைய தாய்மொழியில் மிகச்சிறந்த முறையில் சிந்திக்கிறான்.
உங்க கட்டுரை முழுவதுமே வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பற்றியே உள்ளது. Employee retention காரணமாக டெயோட்டோ, நிசான், zoho போன்ற கம்பெனிகள் கிராமங்களில் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து (அவர்கள் 10,+2 தேறி இருந்தாலே போதும்) அவர்களுக்கு சொந்த செலவில் பயிற்சி அளித்து வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அவர்கள் இவர்களிடம் ஆங்கில புலமையை எதிர்பார்ப்பதில்லை.முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் போகப் போக எல்லாம் சரியாகிவிடும்.மிஞ்சி போனால் இவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் திறமையை அதிகரித்துக்கொண்டாலே போதும்..அதுவும் இல்லா இப்ப இருக்குற நிலைமையில் படிப்பதற்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எவ்வுளவு வித்தியாசம் சொல்லுங்க?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்