பின்பற்றுபவர்கள்

24 மார்ச், 2010

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை மற்றும் பக்தி வளர்ச்சி !

'கோவில்கள் கூடாது என்றோம் ஏனெனில் அவை கொடியவர்களின் கூடாரம் ஆகிப் போனதால்' என்று திரைவசனங்கள் வந்த போது தற்போதைய நவீன கேமராக்கள் இல்லாததால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் அந்த வரிகளின் மீது மனவருத்தம் உண்டு, 'கோவில்' என்பதற்கு பதிலாக 'வழிபாட்டுத் தலங்கள்' என்று சொல்லி இருந்தால் இன்னும் பொருத்தமாகவும் மதச் சார்பற்ற சமூக சிந்தனைத் தொடராக அமைந்திருக்குமே என்கிற மனவருத்தம் தான். ஏனெனில் வழிபாட்டுத் தலங்கள் தான் சமூக எதிரிகளின் புகலி(ழி)டமாக இருக்கின்றன என்பதை பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வநிருபனம் செய்துவருகின்றன

*****

மூட நம்பிக்கைக்கும், இறை நம்பிக்கைக்கும், ஆன்மிகத்திற்கும், பகுத்தறிவிற்கும் விளக்கம் தெரியாத ஆத்திக, நாத்திக தரப்புகளின் கேள்விகளும் பதில்களும் என்னாளும் கேட்கப்பட்டுவருபவையே. நிறுவன மயமான ஆன்மிக வியாபரங்களைக் கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் தனிமனித இறை நம்பிக்கையை கேலிசெய்யும் நாத்திகர்களின் பொதுவான கேள்வி, "கடவுள் என்று இல்லாத ஒன்றை கற்பனையாக படைத்துக் கொண்டு வழிபடுவது மூடத்தனம் தானே ?" இதற்கு பதிலாக ஆத்திகர்கள் என்ற பெயரில் பலர் சொல்லும் ஒரே விடை, "கற்பனையானது என்றால், நாள் தோறும் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது, எனவே கடவுள் நம்பிக்கை எப்படி வெறும் கற்பனையாகும் ?"

என்னைப் பொருத்தவரை தனிமனிதனின் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி எழுப்புவதும் தவறு, அதற்கு பதிலாக ஒரு சமூகத்தின் செயலை விடையாக கூறுவதும் தவறு, அது சரியானவிடை என்பதைவிட அதில் சப்பைக் கட்டுதல் அல்லது கட்டுமானம் மட்டும் தான் இருக்கிறது என்பதாக எனது புரிதல். நமக்கு பிடிக்காத உணவு மற்றவருக்கு பிடித்த உணவாகக் கூட இருக்கும், இங்கு உணவின் சுவை என்பது மாறுபடாது, பிடித்தது பிடிக்காதது என்பது இருவரின் வேறு வேறு உணர்வுகள் மட்டுமே. இதில் எந்த ஒருவர் உணவைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும் ? பிறரை எந்தவிதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காத தனிமனித உணர்வுகள், விருப்புகள் அவரவருடைய தனிப்பட்ட முடிவு, இதை விமர்சனம் செய்வது அறிவுடைமை அல்ல. இது தனிமனிதனின் இறை நம்பிக்கைக்கும் பொருந்தும். என்னைப் பொருத்த அளவில் தனிமனித இறை நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

வழிபாட்டுத்தலங்களின் எண்ணிக்கை ? என்பது நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்த தேவையா அல்லது நம்பிக்கையாளர்களின் பக்தி உணர்வுகள் மிகுந்ததன் அடையாளமா ?

30 ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்களின் எண்ணிக்கை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், ஆனால் தற்போது உணவகங்களின் எண்ணிக்கை தெருக்களின் எண்ணிக்கையை விட மிகுதி, இதை வைத்து மக்கள் ஓட்டல் உணவுகளை மிகுதியாக நாடுகிறார்கள் என்று சொல்ல முடியும், காரணம் சமையல் என்பதே ஒரு சுமையான வேலையாக போய்விட்டது, வீட்டில் சமைப்பதற்கு ஆயத்தம் செய்வதும், அதன் பிறகு பாத்திரங்களை கழுவி வைப்பதும் பெரிய வேலையாகிவிட்டது, ஆண் பெண் இருவரும் வேலை செய்வதால் சமையல் என்பது சுமையாகிவிட்டது எனலாம். ஓட்டல்களின் எண்ணிக்கையும் மிகுந்ததற்குக் காரணம் வீட்டில் சமைக்கும் வேளைகளின் எண்ணிக்கை குறைந்ததுவும் ஒரு காரணம். இந்த காரணங்களை வைத்து ஓட்டல்களில் தரமான உணவைத் தான் தருகிறார்கள் அதனால் தான் ஓட்டல்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது, மக்களுக்கும் ஓட்டல்கள் என்றென்றும் தேவையாக இருக்கிறது என்று தீர்ப்பு எழுதிவிட முடியமா ?

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு மக்கள் தொகை உயர்ந்ததும், நகரங்கள் பெருகியதும், புதிய புற நகரங்கள் தோன்றியதும் காரணம், அந்தந்த பகுதிகளில் ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுத் தலம் என்பது மறுக்க முடியாத தேவை ஆகி இருக்கிறது என்பது காரணம் அன்றி, அது வழிபடுபவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறது, தீர்த்து வைக்கிறது, மக்களுக்கு இறை நம்பிக்கைக் கூடி இருக்கிறது என்பதற்கான அடையாளம் இல்லை. வழிபாட்டுத் தலங்களினால் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்தது என்பது உண்மையானால் அவற்றின் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்காது என்பதே உண்மை. ஒரு வழிபாட்டுத் தலத்தினால் பிரச்சனைகள் தீர்ந்தவர்கள் அந்த வழிபாட்டுத் தலத்தையே அவர்களது சந்ததிகளுக்கும் பரிந்துரைப்பார்கள் புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களின் தேவைக்கு வாய்ப்பே இருந்திருக்காது.

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ, அளவுகோலோ இல்லை.

100 ஆண்டுகளுக்கு முன் வெளி நாடுகளில் இந்து கோவில்கள் குறைவு, தற்பொழுது 100க் கணக்கில். அந்நாட்டு மக்கள் இந்துக்களாக மாறிவிட்டார்கள் என்று இதற்கு விடை சொல்ல முடியுமா ? மாறாக இந்துக்கள் அந்த நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளார்கள் என்பது மட்டும் தானே விடை.

****

நித்யானந்தம் போன்ற போலி சாமியார்களின் ஆன்மிக ஆதிக்கத்தால் பணக்காரர்களிடமிருந்து பெரிய அளவில் வருமானம் குன்றிய கோவில்களில் தற்போது உண்டியல் வசூல் மிகுந்து இருக்கிறதாம், இதை வைத்து மக்களுக்கு ஆன்மிக உணர்வும் இறை நம்பிக்கையும் வளர்ந்ததாகச் சொல்ல முடியுமா ? போலி சாமியாருக்கு போடும் பணத்தை பணக்காரர்கள் கோவில் உண்டியலில் போடுகிறார்கள் அவ்வளவு தானே.

9 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்.,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்...
(உங்களைச் சொல்லவில்லை)


அரைகுறையான ஆத்திக, நாத்திக அறிவால் வந்த கொடுமையிது. இடையில் அப்பாவி மக்களை குழப்பும் வேளையும் அருமையாக நடக்கின்றது...

கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

/அப்பாவி மக்களை குழப்பும் வேலையும்../

இருந்துவிட்டுப் போகட்டுமே!குழம்பிய குட்டை தான் சீக்கிரம் தெளிவடையும்!

சீர்திருத்தங்கள், மாற்றங்கள் தேவைப் படுவது தனிமனித அளவில் இருந்து தான் என்பதைப் புரிந்து கொண்டால் இத்தனை பிரச்சினைக்கே இடமிருந்திருக்காது!

பித்தனின் வாக்கு சொன்னது…

// வழிபாட்டுத் தலங்கள் தான் சமூக எதிரிகளின் புகழிடமாக இருக்கின்றன என்பதை பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வநிருபனம் செய்துவருகின்றன //
என்ன இருந்தாலும் நீங்க ஹிந்து நலத்து..........., அமை............ இப்படி சொல்லக்கூடாது.

நல்ல பதிவு. மிக்க நன்றி.

Cable Sankar சொன்னது…

thalaivare..இங்கு சென்னையில் ஒரு எக்ஸ்டஸி மய்யம் என் தலைமையில் ஆன்மீகத்தைபரப்ப ஆரம்பிக்க் இருக்கிறேன்.

நித்யானந்த, பிரேமானந்த கல்கி சீடர்களுக்கு முன்னுரிமை உண்டு..

எக்ஸ்டஸி மய்யம்
கேபிளானந்தா..

பிரியமுடன் பிரபு சொன்னது…

ulleen ayyaa

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

//"கற்பனையானது என்றால், நாள் தோறும் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது, எனவே கடவுள் நம்பிக்கை எப்படி வெறும் கற்பனையாகும் ?"//

மக்களுக்கு பயம் அதிகமாகிவிட்டதா?தன்னம்பிக்கை குறைந்து விட்டதா?வாழ்க்கை சூழல் அந்தளவு சிக்கலாகி விட்டதா? என்பதும் யோசிக்க வேண்டிய விசயம்!

Gokul சொன்னது…

//வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ,
அளவுகோலோ இல்லை.//

இதுவே வழிபாட்டு தளங்களின் எண்ணிக்கை உயராமல் இருந்து இருந்தால் , "இந்த மக்கள் தொகை அதிகரிப்புக்கு எண்ணிக்கை உயர்ந்து இருக்க வேண்டாமா? எனவே கடவுள் பக்தி குறைந்துகொண்டு வருகிறது " என்று முடித்து இருக்கலாம், என்ன செய்வது கோவில்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் நீங்கள் இப்படி "வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை
உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ, அளவுகோலோ இல்லை." என்று எழுத வேண்டியதாக போய்விட்டது. எப்படியோ உணவு அளவிற்கு பக்தியும் அடிப்படை தேவை என்று ஒத்துக்கொண்டு எழுதி இருக்கறீர்கள்.

கோவி கண்ணன் அவர்களே, ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் நம் சமூகத்தில் பல சிக்கல்கள் உள்ளது , மக்கள் தொகையின் பெருக்கம், முக்கியமாக Dignity of Labour , பல விஷயங்களை இலவசமாக அனுபவிக்க நினைக்கும் மக்கள் என்று பல சிக்கல்கள். இந்த மனசிக்கல்களே பக்திக்கு பின்புலமாக இருப்பதாக நினைக்கிறேன்.

உதாரணமாக , தமிழ்நாட்டில் ஒரு மத்திய தர வர்கத்து மனிதன் (அல்லது மனுஷி) முழு சுதந்திரத்தை அனுபவிக்கிறானா? இல்லவே இல்லை. அதற்கு காரணம் , கல்வி முறை. அதாவது
தன் செயல்களுக்கு அதற்க்கான விளைவகளுக்கும் தானே காரணம் என்ற விஷயத்தை புரிய வைப்பதே இல்லை. மேலும் moral science எனப்படும் ஒழுக்க கல்விக்கும் இடமில்லை.

அதாவது நீங்கள் பக்தியில் இருந்து ஒழுக்க கேட்டை பார்க்கறீர்கள் , நான் ஒழுக்க கேட்டில் இருந்து பக்தியை பார்க்கிறேன்.மேற்கத்திய நாட்டில் நாத்திகவாதம் வளர்வதற்கு அங்கு நிலவும் அடிப்படை நியாய உணர்வே காரணம். அதாவது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும் இருக்கும் நாட்டில் வேறு வழியில்லாமல் பக்தியில் சரண்
ஆவதும் அதிகம். அந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளிடம் அடிக்கும் கொள்ளை போன்ற பெரிய விஷயங்களை பற்றி நான் பேசவில்லை.

அவன் தனக்கு விருப்பமே இல்லாத துறையில் , கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கிறது. கடமைக்கு படிக்கும், கடமைக்கு , விருப்பமே இல்லாத வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை, தனது சொந்த விருப்பு வெறுப்பை விட , மனைவிக்கு,பெற்றோர், உடன்பிறந்தோர், தன்னை சுற்றி இருப்பவரின் விருப்பத்தை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயம். எந்த வித அடிப்படை நியாய உணர்வும் இல்லாத மனிதர்களின் கருணை மூலமே வருமானத்தை ஈட்ட வேண்டிய கட்டாயம். சமூக மதிப்பீடுகளுக்கு தன்னை சுற்றி இருப்பவர் தரும் அளவுக்கதிகமான முக்கியத்துவம், அதற்கு உடன் பட வேண்டிய நிர்பந்தம் என்று பலப்பல காரணங்கள்.

இது போன்ற விஷயங்களை சரி செய்தாலே பகுத்தறிவு தன்னாலே வளரும்.

அப்படி ஒரு சமூக நிலையில் வரும் பகுத்தறிவே நிரந்தரமான பகுத்தறிவு, என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

Gokul சொன்னது…

-

கோவி.கண்ணன் சொன்னது…

திரு கோகுல்,

உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை, உடன்படுகிறேன்.

மக்கள் வடிகால் தேடி ஓடுகிறார்கள், அதற்கு அவர்களே அமைத்துக் கொள்ளும் ஒரு தற்காலிக தீர்விற்கான அமைப்பு வழிபாட்டுத்தலங்கள்.

உன்மையில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் கோவில்களின் எண்ணிக்கையும் கூட்டமும் கூட குறைவாகவே இருக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்