பின்பற்றுபவர்கள்

2 நவம்பர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Swiss, Singapore And Expenses) - 9

ஓவியங்களில் புகைப்படங்களில் பார்ப்பதும் செலவுகள் குறைவானது தான் இருந்தாலும் மண் வாசனையுடன் காட்சிகளை நம் முன் சாட்சியாக நிற்க, முப்பரிணாமாக பார்ப்பதில் இருக்கும் துய்புகளே தனி. வின்வெளிப் பயணம் பற்றி நாம் எவ்வளவு தான் படித்தாலும், படமாக பார்த்தாலும் கூட அதற்கு சென்றுவருபவரின் துய்புகளை நாம் பெற முடியாது, அவை போன்றவையே சுற்றுலா தளங்களுக்கு சென்று வருவதின் அனுபவம் என்பதை இந்தச் சுற்றுலா எனக்கு உணர்த்தியது. செலவுகள், கடனட்டை பயன்பாடு பயமுறுத்தினாலும் சென்று வரும் வாய்ப்புகள் கிடைப்பதும் கூட அரிது என்றே தேற்றிக் கொண்டேன்.

*****
முந்தைய பகுதிகள்:
பகுதி 1 (ஏற்பாடு,புறப்பாடு)
பகுதி 2 (இலண்டனில் தீபாவளி, அரண்மனை)
பகுதி 3 (இலண்டன் மெழுகு அருங்காட்சியகம்)
பகுதி 4 (இலண்டன் கடற்கரை)
பகுதி 5 (பாரிஸ் - ஈபிள் கோபுரம்)
பகுதி 6 (பாரிஸ் - டிஸ்னி பொழுது போக்கு பூங்கா)
பகுதி 7 (பாரிஸ் - அருங்காட்சியகம்)
பகுதி 8 (சுவிஸ் - ஐரோப்பாவின் உயரமான இடம்)

24/அக்/2009 பயணத்தின் நிறைவு நாள், அன்று மதியம் 11 மணிக்கு விடுதியில் இருந்து புறப்பட வேண்டும், சூரிக் - சிங்கப்பூர் விமானம் இரவு 10:05க்கு புறப்படும். காலை 6 மணிக்கே எழுந்து கொண்டேன். நான் மட்டும் வெளியே சென்றேன். பொழுது விடியும் நேரம் மலைகள்உருவம் காட்டத் தொடங்கி இருந்தன. மாடுகள் மணி ஓசையுடன் மேய்ந்து கொண்டிருந்தன. விடுதிக்கு திரும்பிஎல்லோரும் குளித்து முடித்துவிட்டு, பெட்டிகளை ஆயத்தம் செய்து, விடுதிக்கு பணம் செலுத்திவிட்டு, மதியம் வந்து எடுத்துக் கொள்வதாகச் சொல்லி பெட்டிகளை அங்கே பாதுகாப்பில் வைத்துவிட்டு, வெளியே வந்து காலை உணவு எடுத்துக் கொண்ட பிறகு காலை 8 மணி ஆகி இருந்தது.



அருகில் உள்ள ஏரிகளைப் பார்த்து வரலாம் என்று நடந்தே கிளம்பினோம். விடுதிக்கு அருகில் உள்ள புல் வெளிப் பாதைவழியாக நடந்து ஒரு Interlaken கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் சாலைக்கு வந்தோம். சாலையைக் கடக்கும் இடத்தில் காசினோ எனப்படும் சூதாட்ட விடுதி ஒன்று மிக அலங்காரமாக காட்சி தந்தது, அதை அடுத்து Interlaken ல் இருக்கும் இரு அழகிய ஏரிகளையும் இணைக்கும் சிறிய ஆறு ஒன்றின் பகுதிக்கு வந்து ஆற்று பாலத்தில் சற்று நேரம் நின்றோம்.





இங்குள்ள தண்ணீர் தேக்கங்கள் அனைத்தும் ஒருவித நீலப்பச்சை (மயில் கழுத்து நிற) வண்ணத்தில் இருக்கின்றன. அந்த நிறம் மலைகளிலிருந்து வரும் இரசாயணக் கலவை சேர்த்திருக்கும் நிறமாக இருக்கலாம், ஆனாலும் அருகில் சென்று கரையோரம் பார்க்கும் போது மிகவும் தெளிந்த நிலையில் இருந்தன. தூய்மையான நீர் தான் என்பதற்கு சாட்சியாக வாத்துகளும் சில நீர்பறவைகளும் அதில் நீந்திக் கொண்டு இருந்தன. சற்று தொலைவில் வான்குடை வழியாக கீழே சிலர் இறங்கிக் கொண்டு இருந்தனர். அதுவும் இங்கே ஒரு சுற்றுலா பொழுது விளையாட்டாக நடத்தப்படுகிறது.





ஆற்றின் மறு கரையில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டு தொடர்வண்டிப் போக்குவரத்து நடைபெற்றது. ஆற்றின் கரையோரமாக நடந்து Interlaken கிழக்கு நிலையத்தை அடைந்தோம். அங்கு ஏரிகரைகளுக்குச் செல்லும் பேருந்து வரும் என்கிற தகவல் படி நின்றோம். சில நிமிடங்களில் பேருந்து வந்தது.


விடுதிகளில் தங்குவோருக்கு ஊருக்குள் எங்கு செல்லவும் தங்கும் நாட்களில் பேருந்தில் இலவச பயணம் தான், அதற்கான அடையாளச் சீட்டை விடுதிக்காரர்கள் கொடுக்கிறார்கள். Interlaken ஊரின் இருபுறமும் சற்றுத் தொலைவில் Brienzersee, Thunersee என இரு பெரும் ஏரிகள் இருக்கின்றன. பேருந்து Interlaken மேற்கு நிலையத்தின் வழியாக நாங்கள் சொன்ன இடமான Brienzersee கரையில் எங்களை இறக்கிவிட்டது. வெளி நாடுகளில் இருந்து படகு பயணத்தை பொழுது போக்காகக் கொண்டவர்கள் பலர் படகுகளுடன் அங்கு கூடாரம் அமைத்து தங்கி இருந்தார்கள்.




ஒரு சில படகுகள் சிறிய லாரிகளில் இருந்து இறக்கப்பட்டு ஏரித் தண்ணீருக்குள் விடப்பட்டு கொண்டு இருந்தது. ஏரியின் மறுபுறம் மலைப் பகுதி, அந்தப் பகுதியை ஒட்டி இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு தொடர் வண்டி சென்று கொண்டு இருந்தது. சிறுதி நேரம் ஏரியின் அழகை ரசித்துவிட்டு திரும்பினோம்.


அங்கே ஒரு பேரிக்காய் மரம் கூட இருந்தது. அந்த இடத்திற்கு சற்று தொலைவில் அங்கும் வண்ண வான்குடையில் சில சுற்றுலாவாசிகள் பறந்து பயிற்சி செய்து கொண்டு இருந்தனர். பேருந்து 5 நிமிடம் காத்திருந்தோம், வந்தது. புறப்பட்ட இடத்திலேயே (Interlaken Ost) இறங்கினோம் அங்கு அருகில் இருந்த COOP எனும் பேரங்காடியில் சில பொருள்களை வாங்கிக் கொண்டு, திரும்பவும் பேருந்து நிலையம் வந்தோம்.

பதிவர் மகேஷ் Interlaken Ost அருகே Mystery Park எனப்படும் அறிவியல் பூங்கா இருக்கிறது, இரண்டு பேருந்து நிறுத்தத் தொலைவு தான் நேரம் இருந்தால் அங்கு சென்றுவாருங்கள் என்று முதல் நாள் அலைபேசி வழி தொடர்பு கொண்டு தெரிவித்து இருந்தார். காலை மணி 11 இருக்கும், அன்று மாலை 5 மணிக்கு புறப்படும் தொடர்வண்டியில் சூரிக் செல்வதாக இருந்தது. எனவே Mystery Park சென்றுவரலாம் என்று பேருந்தில் ஏறி அமர்ந்து அங்கு சென்றோம். அங்கு கட்டணக் காட்சியும் இலவசக் காட்சி என இரு பகுதி வைத்திருந்தார்கள், கட்டணக் காட்சிக்கு நுழைவு சீட்டு வாங்கினால் முடிந்து வெளியே வர 3 - 4 மணி நேரம் ஆகும் என்பதால் இலவசக் காட்சியையும் அந்த பூங்காவின் உள் அரங்குகளைப் பார்த்து வந்தால் போதும் என்று இலவச வழியில் நுழைந்தோம்.



அக்கால, இக்கால அறிவியல் நம்பிக்கைகளை காட்சியாக வைத்திருந்தார்கள் அதில் இந்தியர்களின் புராணங்களில் இடம் பெறும் விமானம் பற்றிய கூடம் ஒன்று கூட இருந்தது, எகிப்து பிரமீடுகள், வான வெளி ஆராய்சிகள் போன்றவற்றிற்கான கூடங்கள் என எட்டு கூடங்கள் இருந்தன. நடுவில் சிறுவர்களுக்கான விளையாட்டுத் தளம் ஒன்றும் இருந்தது.

அதில் பல்வேறு உருவங்கள் அமைக்கும் ஒரு சட்டம் போன்ற அமைப்பில் மூவரும் சாய்ந்து எங்களது உருவங்களை அமைத்தோம், அதற்கு முன் சிலர் நாடுகளின் வரைபடங்கள், விலங்குகள் போலெல்லாம் அமைத்துப் பார்தார்கள். அந்த பூங்காவை பார்வை இட்டு மீண்டும் பேருந்தில் ஏறி Interlaken Ost வர மணி 2 ஆகியது.

மூன்று மணிக்கு ஒரு தொடர்வண்டி இருந்தது அதில் முன்கூட்டியே சூரிக் செல்லலாம் எனவே விரைவாக விடுதிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம். நடந்து விடுதிக்கு வேறொரு வழியாகச் சென்றோம், அங்கே முன்பு பதிவில் போட்டு இருந்த நாய் சிறுநீர் கழிக்க அமைக்கப்பட்ட தனிப்பட்ட இடம் இருந்தது. அதைத் கடந்து வேறொரு சாலை வழியாக செல்ல வழியில் செர்ரி பழம், பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் மரங்கள் வீட்டுத் தோட்டங்களிலும் வெளிப்பகுதியிலும் இருந்தன.



அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு விடுதிக்குச் செல்லவே 2:50 ஆகி இருந்தது, 3:00 தொடர் வண்டியைப் பிடிக்க முடியாது என முடிவு செய்து, விடுதியில் ஒரு காஃபி குடித்துவிட்டு, பெட்டிகளை பொறுமையாக இழுத்துக் கொண்டு தொடர்வண்டி நிலையம் வர மாலை 3:30 ஆகி இருந்தது, அப்போது ஒரு தொடர்வண்டி புறப்படத் ஆயத்தமாக இருந்தது என்றாலும் அதில் சென்றால் இருமுறை தொடர்வண்டி மாறிச் சென்றால் தான் சூரிக் செல்ல முடியும் என்று நிலைய உதவியாளர் சொன்னார். அடுத்து 4:05க்கு ஒரு தொடர்வண்டி இருந்தது, அது Bern என்கிற ஒரு இடத்தில் நிற்கும், அங்கிருந்து சூரிக் செல்லும் மற்றொரு தொடர் வண்டிக்கு மாறிச் செல்ல வேண்டும்.அரை மணி நேரம் காத்திருந்து 4.05 வண்டியில் ஏறினோம்.

தொடர்வண்டி புறப்பட்டது, மீண்டும் Brienzersee ஏரியை நீளம் முழுவதையும் தொடர்வண்டி பயணத்தின் வழியாக பார்க்கும் படி அந்தப் பகுதி வழியாகவே வண்டி பயணித்தது. ஏரியில் பல படகுகள் மிதந்து கொண்டு இருந்தன. வயல் வெளிகள், வீடுகள் என காட்சிகள் மாறி மாறி ஓட Bern நிலையத்தில் இறங்கினோம். அங்கிருந்து வேறொரு வண்டிக்கு மாறினோம். சூரிக் நகரை நெருங்க நெருங்க தொழிற் பேட்டைகள்
தென்பட்டன.




இவை எல்லாம் முதலில் சூரிக்கிலிருந்து - இண்டர்லக்கான் வரும் போது காணாத காட்சிகள் ஏனெனில் அன்று இரவு தொடங்கி இருந்தது. வண்டி சூரிக் விமான நிலையத்தில் நிற்கும் போது 6:30 மணி ஆகி இருந்தது. அங்கே நிலையத்தில் மூன்று அடுக்கில் இரண்டு அடுக்கில் சுற்றுலாவினர் பொருள் வாங்கும் கடைகள் இருந்தன அங்கு சிறிது நேரம் பார்வை இட்டுவிட்டு, 7:30 மணிக்கு பெட்டிகளை விமானத்திற்கு அனுப்பிவிட்டு கைப் பைகளுடன் மீண்டும் கடைப் பகுதிக்கு வந்து சில நினைவுப் பொருள்களை வாங்கித் திரும்பும் போது 8:30 ஆகி இருந்தது.



மீண்டும் விமான நிலையத்திற்குச் சென்று பாதுகாப்புச் சோதனைகளை முடித்துவிட்டு இணைப்பு இரயில் வழியாக விமானம் இருக்கும் முனையத்திற்கு வந்தோம். அங்கு பயணிகள் அனைவரின் கைப் பைகளையும் கடுமையாக சோதித்தே அனுப்பினார்கள். பிறகு விமானத்திற்குள் செல்லும் முன் பயணிகள் காத்திருக்கும் அறைக்குள் வந்தோம், மணியும் 9:40 ஐ நெருங்கியது, ஐந்து நிமிடத்தில் விமானத்திற்குள் அனுப்பினார்கள். விமானம் சரியாக இரவு 10:05 க்கு புறப்பட்டது.




இந்த முறை பயணம் 13 மணி நேரம், சிங்கை நேரப்படி 25 அக் 2009 மாலை 4 மணிக்கு சிங்கையும் அடையும். சிங்கையில் இருந்து லண்டன் செல்லும் போது கொடுக்கப்பட்ட அதே போன்ற உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன். எழும் போது பார்த்தால் சிங்கை நேரப்படி மாலை 1:45 ஆகி இருந்தது. ஒவ்வொருவருக்கும் பணிப்பெண்கள் 'குட் மார்னிங்' சொல்லி முகம் துடைத்துக் கொள்ள வெது வெதுப்பான ஈரத் துணியை கொடுத்துக் கொண்டிருந்தனர். பல்விளக்க பலர் விமான கழிவரையில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர் சாப்பாடு வந்தது, அதே போன்ற சாப்பாடு. எல்லாம் முடித்துவிட்டு 3 மணி நேரம் தூக்கத்திற்கு பிறகு சிங்கப்பூரில் மூன்றாம் முனையத்தில் விமானம் தரை இறங்கியது. இம்முறை இந்துமா கடலை குறுக்காக கடக்காமல், இந்தியா, பங்களாதேஷ்,பர்மா,தாய்லாந்து, மலேசியா நிலப்பரப்பு மீது பறந்து சிங்கையை அடைந்திருந்ததை விமானத்தின் பயணப்பாதை காட்டியது.

சிங்கப்பூர் பயணிகள் வெளியோறும் சோதனைக்குச் செல்லும் இட விமானக் கூடத்தில் மலரால் அலங்கரிக்கப்பட்ட, செய்யப்பட்ட அழகிய யானை உருவங்கள், துளசி அம்மா நினைவு வரவே க்ளிக்கினேன். வெளியே வந்து காஃபி குடித்துவிட்டு, வாடகை சிற்றுந்து எடுத்து வீட்டுக்கு வரும் வழியில் "மீண்டும் சென்று சென்று வரவேண்டும்" என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

*****
பயணச் செலவுகள் :

(செலவுகள் எவ்வளவு ஆகும் என்று கேட்ட சிலருக்காகவும், செல்ல விரும்புபவர்களுக்கு விமானம், தங்கும் செலவு, மற்ற செலவுகள் குறித்த திட்ட உதவிக்காக இதை தருகிறேன்)

1. விமான வழி

அ. சிங்கப்பூர் - லண்டன்

ஆ. பாரிஸ் - சூரிக்

(இதை இரயில் பயணமாக மாற்றினால் 800 சிங்கப்பூர் வெள்ளி மீச்சப்படுத்த முடியும், இதற்கு மட்டுமே இருவழி விமானச் சீட்டு 1200 வெள்ளி, ரயிலில் 400 வெள்ளிகள் வரையில் தான் இருக்கும், விமானம் 1 + மணி நேரத்தில் செல்கிறது என்றாலும் விமான நிலையத்திற்கு 2 மணி நேரம் முன்னதாகச் செல்ல வேண்டும், ரயில் 3 - 4 மணி நேரத்திற்குள் பாரிஸிருந்து சூரிக் சென்றுவிடும்)

இ. சூரிக் - சிங்கப்பூர்

(பெரியவர் இருவர், சிறுவர் ஒருவருக்கு)

5,200.00 SGD = 2,510.99 EUR

2. தொடர் வண்டி (ஈரோ ஸ்டார்) : லண்டன் - பாரிஸ்

Outward journey: London St Pancras to Paris Nord
Standard Non flexible2 x Adults @ £35.00
1 x Child @ £29.00

99 பவுண்டுகள் (110.428 EUR)

3. பாரிசில் 2 நாள் தொடர் வண்டி பயணச் செலவு32+12+10 = 52 EUR

4. டிஸ்னி லேண்ட் நுழைவுச் சீட்டு
52+52+48 = 152 EUR

5. பாரிஸ் விடுதி 2 நாள்களுக்கு
225 EUR

6. ஸ்விஸ் ரயில் பயணம்
230.00 CHF = 152.293 EUR

7. ஸ்விஸ் விடுதி இரண்டு நாள்
296.00 CHF = 195.985 EUR


8. இதர செலவுகள் (சாப்பாடு மற்றும் பிற பொருள்கள், மியூசியங்கள், ஈபிள் டவர் நுழைவுச் சீட்டு, )

300 EUR

2,510 EUR + 110 EUR + 52 EUR + 152 EUR + 225 EUR + 152 EUR + 195 EUR + 300 EUR = 3696 EUR

பயணச் செலவு ஏறக் குறைய = 3700 EUR
குளிராடைகள் மற்றும் காலணிகள் = 150 EUR
நுழைவு அனுமதி விசா (செங்கன் விசா மற்றும் பிரிட்டீஸ் விசா) மூவருக்கும் = 450 EUR

மொத்த செலவு 4,150.00 EUR = 8,595.21 SGD

(இலண்டனில் மூன்று நாட்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் விடுதி செலவும், வாகனச் செலவும் இல்லை, அதன் சேமிப்பு ஒரு 400 EUR = 825 SGD = 27,800.94 INR ஆக இருக்கலாம் )

8,595.21 SGD = 289,701.82 INR (இந்திய ரூபாயில்)

ஏறக் குறைய 300,000 INR

(இந்தியாவில் இருந்து ஐரோப்பா செல்ல சிங்கையில் இருந்து செல்வதைக் காட்டிலும் 25 விழுக்காடு விமானப் பயணச் செலவும் குறைவு, வளைகுடாவில் இருப்பவர்களுக்கும் இன்னும் 35 விழுக்காடு குறையும்)

இவை சேமிப்பாக இருந்தால் 'கையிருப்பு' என்னும் மன அமைதியைக் கொடுக்கும், இப்படி செலவாகினால் 'நாமும் சென்று வந்தோம்' என்கிற மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். செலவே இல்லை என்றால் எந்த ஒரு துய்புகளையும் (அனுபவங்களையும்) பெற முடியாது என்பதும் உண்மை. உண்பது, உறைவிடம் ஆகியவற்றிற்கு செலவழிப்பது போலவே மன அமைதிக்கும் உலக நாடுகள் சிலவற்றை கண்ணுற்று வருவதற்கு ஆகும் செலவுகள் கூட நமக்கே நமக்காக செய்து கொள்ளும் செலவுகளில் ஒன்று தான்.

*****



தொடரில் தொடர்ந்து பயணித்து, படங்களை ரசித்தும், கருத்துகளை சொல்லியும், படித்தும் வாழ்த்திய உள்ளங்களும், லண்டனில் என்னை சந்தித்து மகிழ்ச்சி ஏற்படுத்திய வெ.இராதாகிருஷ்ணன் அவர்களின் இல்லத்தினருக்கும், பாரிசில் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் விருந்து வைத்து நெகிழ வைத்த 'யோகன் - பாரிஸ்' அண்ணன் இல்லத்தினருக்கும், சுவிஸ்பற்றிய குறிப்புகள் கொடுத்து உதவிய பதிவர் நண்பர் துக்ளக் மகேஷ், விமான நிலையம் வந்து வழியனுப்பி வாழ்த்திய நண்பர் முகவை இராம் குமார், விமானப் பயணச் சீட்டு ஏற்பாடு செய்த கொடுத்து உதவிய மேக்னட்ரான் பயண நிறுவனத்தின் ஈஸ்வரன் ஆகிய அனைவருக்கும் நன்றி.

24 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பயணம் இனிதே முடிந்தது....

வாழ்த்துகள் சார்... புகைப்படங்கள் அருமை. நாங்களும் பார்த்தது போல உணர்வு. மிக்க நன்றி..

பித்தனின் வாக்கு சொன்னது…

அருமையான தொடர், நல்ல பயணம். எங்களையும் பயணிக்க வைத்தமைக்கு நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

அருமையான தொடர், நல்ல பயணம். எங்களையும் பயணிக்க வைத்தமைக்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//உண்பது, உறைவிடம் ஆகியவற்றிற்கு செலவழிப்பது போலவே மன அமைதிக்கும் உலக நாடுகள் சிலவற்றை கண்ணுற்று வருவதற்கு ஆகும் செலவுகள் கூட நமக்கே நமக்காக செய்து கொள்ளும் செலவுகளில் ஒன்று தான்

//

கோவியானந்தாவின் பொன்மொழி :)

அண்ணன் ஞானசேகரனின் கருத்துக்கு ரிப்பீட்டு.

மங்களூர் சிவா சொன்னது…

very nice.

yrskbalu சொன்னது…

well done.

good finish of story.

அறிவிலி சொன்னது…

அசத்தல் தொடர். ஆர்வத்தை தூண்டி விட்டது.

வடுவூர் குமார் சொன்னது…

குடும்பத்தோடு கண்டு மகிழ்ந்தோம்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கிணற்றுத்தவளைகளாக இருந்துவிடுவ்தில் இருந்து விடுபடப் பயணங்கள் உண்மையிலேயே பயனுள்ளவை தான்! நாடு இனம் மொழி நிறம் எல்லாவற்றையும் கடந்து
மனிதம் ஒருமைப்படுவதும் கூடப் பயணத்திலும் ஆன்மீகத்திலும் மட்டுமே சாத்தியம்!

பயணம் இப்போது சாத்தியமாகி இருக்கிறது-பார்வைகளுமே விசாலமாகும்!

அடுத்தது எப்போதோ?

கிரி சொன்னது…

//இவை சேமிப்பாக இருந்தால் 'கையிருப்பு' என்னும் மன அமைதியைக் கொடுக்கும், இப்படி செலவாகினால் 'நாமும் சென்று வந்தோம்' என்கிற மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். செலவே இல்லை என்றால் எந்த ஒரு துய்புகளையும் (அனுபவங்களையும்) பெற முடியாது என்பதும் உண்மை.//

இதை தாறுமாறாக வழிமொழிகிறேன்..

சேமிப்பு அவசியம் தான் அதற்காக எந்த செலவும் செய்யாமல் பெட்டியில் பாதுகாப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்த அளவு செலவு செய்ய முடியாதவர்கள் அவர்களால் முடிந்த இடங்களை சுற்றி பார்க்கலாம்.

பல பேர் சேமிப்பு என்ற பெயரில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் சம்பாதித்தும் ஏழையாக இருக்கிறார்கள், அவர்கள் வாழும் வாழ்க்கை எந்த சுவாராசியமும் இல்லாதது.

கோவி கண்ணன் உங்கள் பயண கட்டுரை அருமையாக இருந்தது, நான் இன்னும் சில பதிவுகள் போகும் என்று நினைத்தேன் ;-)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
பயணம் இனிதே முடிந்தது....

வாழ்த்துகள் சார்... புகைப்படங்கள் அருமை. நாங்களும் பார்த்தது போல உணர்வு. மிக்க நன்றி..
//

மிக்க மிக்க நன்றி நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
அருமையான தொடர், நல்ல பயணம். எங்களையும் பயணிக்க வைத்தமைக்கு நன்றி.
//

மிக மிக நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...


கோவியானந்தாவின் பொன்மொழி :)//

:)

//அண்ணன் ஞானசேகரனின் கருத்துக்கு ரிப்பீட்டு.
//

நிரம்ப நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// மங்களூர் சிவா said...
very nice.
//

நன்றி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//yrskbalu said...
well done.

good finish of story.
//

பாராட்டுகளுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
அசத்தல் தொடர். ஆர்வத்தை தூண்டி விட்டது.
//

சென்று வந்து நீங்களும் எழுதுங்க. பார்வைகள் பலவிதம் சுற்றூலாவிற்கும் பொருந்தும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
குடும்பத்தோடு கண்டு மகிழ்ந்தோம்.
//
நன்றி அண்ணன்

கோவி.கண்ணன் சொன்னது…

///கிரி said...


இதை தாறுமாறாக வழிமொழிகிறேன்..//

நன்றி தம்பி!

//சேமிப்பு அவசியம் தான் அதற்காக எந்த செலவும் செய்யாமல் பெட்டியில் பாதுகாப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.//

:) வாரிசுகளுக்கும் வாரிச்சுருட்டுபவர்களுக்கும் பயன்படும்.

//இந்த அளவு செலவு செய்ய முடியாதவர்கள் அவர்களால் முடிந்த இடங்களை சுற்றி பார்க்கலாம்.//

அதே அதே !

//பல பேர் சேமிப்பு என்ற பெயரில் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்காமல் சம்பாதித்தும் ஏழையாக இருக்கிறார்கள், அவர்கள் வாழும் வாழ்க்கை எந்த சுவாராசியமும் இல்லாதது.//

சொந்த பணத்தை செலவு பண்ணவும்
கொடுப்பினை வேணும் போல !

//கோவி கண்ணன் உங்கள் பயண கட்டுரை அருமையாக இருந்தது, நான் இன்னும் சில பதிவுகள் போகும் என்று நினைத்தேன் ;-)
//

போச்சுடா. யாராவது கண்டனம் போட்டதும் நிறுத்தி இருக்கனுமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
கிணற்றுத்தவளைகளாக இருந்துவிடுவ்தில் இருந்து விடுபடப் பயணங்கள் உண்மையிலேயே பயனுள்ளவை தான்! நாடு இனம் மொழி நிறம் எல்லாவற்றையும் கடந்து
மனிதம் ஒருமைப்படுவதும் கூடப் பயணத்திலும் ஆன்மீகத்திலும் மட்டுமே சாத்தியம்! பயணம் இப்போது சாத்தியமாகி இருக்கிறது-பார்வைகளுமே விசாலமாகும்!//


//சரியாச் சொன்னிங்க. //
கடன் அட்டை கடன்களை முடித்துவிட்டு கொஞ்சம் மூச்சி விடனும், அப்பறம் தான் அடுத்த திட்டம், நம் நாட்டில் வட மாநிலங்களுக்குச் சென்றதில்லை. அங்கும் சென்று வர ஆவலும் ஆசையும் இருக்கிறது.

கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.





அடுத்தது எப்போதோ?
//

Mahesh சொன்னது…

அருமை கோவியாரே.... பலமுறை சென்று வந்தாலும் இவ்வளவு விவரமாக எனக்கு எழுத தோன்றவில்லை....

அலுவல் தொடர்பாக செல்வதால் செலவுகள் நமதில்லை என்பதால் இருக்குமோ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

/Mahesh said...
அருமை கோவியாரே.... பலமுறை சென்று வந்தாலும் இவ்வளவு விவரமாக எனக்கு எழுத தோன்றவில்லை.... //

பாராட்டுக்கு மிக்க நன்றி.

//அலுவல் தொடர்பாக செல்வதால் செலவுகள் நமதில்லை என்பதால் இருக்குமோ? :)
//

ம்கூம். விட்டுவிட்டு சென்றதாலும், அதே போன்று அவ்வப்போது பார்த்தாலும் ஒரு தொடர்ச்சி இருந்திருக்காது, அதனால் உங்களுக்கு எழுதத் தோன்றவில்லை. உங்கள் ரஷ்ய புகைப்படங்கள், சென்று வந்ததையெல்லாம் நன்றாக எழுதி இருந்தீர்கள் நினைவு இருக்கிறது

Unknown சொன்னது…

நண்பர் கோவி .கண்ணன் அவர்களுக்கு
தாங்கள் இயற்கை அன்னையின் வளமான இடங்களை பார்த்து எழுதிய கட்டுரைகள் மிக அருமை நன்று , தங்கள் எழுதிய இடுகை நேரில் சுற்றுலா சென்று வந்துது போல அதிலும் குறிப்பாக இவ்வளுவு செலவு ஆகும் என்று கூட குறிப்பிட்டு இருந்தீர்கள் , சுவையான இடுகை

cheena (சீனா) சொன்னது…

ஆகா இறுதியில் செலவுக் கணக்கினைக் காட்டிப் பயமுறுத்தி விட்டீர்களே - ம்ம்ம்ம் - மூன்று இலட்சமா அய்யோ

இருப்பினும் அவ்வப்பொழுது குடும்பத்தினருடன் உல்லாசப்பயணம் சென்று வருவது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வழி வகுக்கும்.

நல்வாழ்த்துகள் கோவி

venkat சொன்னது…

அருமை!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்