இந்த பதிவில் கேள்வியாக கேட்டு தனிப்பதிவாக போட்ட பதிவர் இளங்கோவிற்கான பதிவு இது:
பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? - இளங்கோ !
முதலில் கேள்வியே தப்பு, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பகுப்பில் பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள் என்று தவறாகவே சொல்லப்படுகிறது. பிராமணர் என்றால் எண்ணம் சொல் செயல் குறித்த மேலான எண்ணம் உடையவர்களுக்கு, அவர்கள் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தோர் என்ற பொருளில் பிராமணர்கள் என்ற தகுதிச் சொல் வழங்கப்பட்டது. பிராமணர் என்ற வடசொல்லுக்கு தமிழில் அந்தணர் என்ற பொருள். மேலும் பிராமணர் என்ற பண்புப் பெயர் தகுதியின் அடைப்படை அடைமொழி யன்றி பிறப்பின் அடிப்படையில் கிடையாது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மணியக்காரர் என்கிற பட்டம் ஊர் நாட்டமைகளுக்கு வழங்குவதுண்டு, மணியக்காரர் என்றால் குறிப்பிட்ட சாதியைச் சொல்வதன்று, அந்த கிராமத்தின் நாட்டாமைக்கு வழங்கப்படும் பட்டப்பெயரே. பின்னாளில் மணியக்காரரின் வாரிசுகளை மணியக்காரர் என்று சொல்ல ஆரம்பித்து ... சாதியாக பரிணமித்தது, தற்பொழுது இல்லை, சத்திரியன், பிள்ளைமார், பட்டமும் அப்படித்தான். சங்ககாலத்தில் அந்தணர் என்ற தகுதி படித்தவர்களுக்கு, குருக்களுக்கு என படித்தவர்கள் பல குலத்தொழில்களை செய்திகொண்டிருந்தவர், பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும் வழங்கப்பட்டது, அவர்களை பிறரில் இருந்து வேறுபடுத்திக் காட்ட 'பேட்ஜ்' போல முப்புறிநூல் அணியும் பழக்கமும் இருந்தது.
இன்றைய பார்பனர்கள் பல நிறத்திலும் இருப்பதற்கு காரணம் முன்பு அந்தணர்கள் பட்டம் பெற்றவர்களில் பல்வேறு வகுப்பினரும் இருந்திருந்தார்கள், அவர்களின் சந்ததிகள் ஆதிசங்கரர் மற்றும் இராமனுஜருக்கு பிறகு தங்களை பார்பனர்களாக நினைத்துக் கொண்டனர். உண்மையிலேயே பார்பனர்கள் மற்றும் ஆரியர்கள் யாரென்றால் அவர்கள் அனைவரும் இன்றும் இருக்கும் காஷ்மீரத்து பண்டிட்டுகள் மட்டுமே. இன்றைய தேதியில் மதமாற்றம் போல் பண்டைய காலத்தில் இன்றைய பார்பனர்களில் பெரும்பகுதி திராவிடர்களில் இருந்து பார்பனர்களாக 'இனம்' மாறியவர்களே. காஷ்மீரத்து பண்டிட்டுகளின் முகம், மூக்கு, உடல், நிறம் ஜெர்மானியர்களை அல்லது ஐரோப்பியர்களை ஒத்தே இருக்கிறது, தென்னிந்திய பார்பனர்கள் மற்றும் ஏனைய முன்னாள் திராவிட இன்னாள் பார்பனர்களுக்கு உடல் ஐரோப்பியர்கள் போல் இருப்பதில்லை, முன்னாள் திராவிடர்களான இன்னாள் பார்பனர்கள் யாரும் கைபர் போலன் கனவாய் வழி வந்தவர்கள் அல்ல
கேள்வியே....பார்பனர்கள் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? என்று இருக்க வேண்டும்.
கேள்விக்கு வருவோம்... 'ஆரியர்கள் ஜெர்மானியர்களே' என்றே பார்பனரான ஆவி மதன் தனது 'வந்தார்கள் வென்றார்கள்...' தொடரில் எழுதி இருக்கிறார். அதாவது ஆரியர்கள் அனைவரும் ஹிட்லர் வம்சம். அப்படி கைபர் போலன் வழியாக வந்த ஒர்ஜினல் ஆரியர்களில் மொழி பிராகிரதம் எனப்படும் வடமொழியின் முதல் வடிவம், அதன் ஒலிப்பு மற்றும் இலக்கணம் கிரேக்கம், லத்தீனம், ஜெர்மானியம் ஆகிய ஐரோப்பிய மொழிகளை ஒத்தது. சமஸ்கிரதத்தில், மாதா = மதர், பிதர்/பித்ரு = பாதர், பிராகிரதம் எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது, தென்னிந்தியாவில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் தான் சமஸ்கிரத்திற்கான இன்றைய எழுத்துவடிவம் கிருந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு, பின்னரே வேதங்கள் எழுத்தில் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சமஸ்கிரத்திற்கு எழுத்துக்கள் வந்த காலத்தில் ஒரிஜினல் ஆரியர் (பார்பனர்) மற்றும் முன்னாள் திராவிடர்களாக இருந்து ஆரிய இனமாக தங்களை மாற்றிக் கொண்ட இன்றைய பார்பனர்கள் பலரும் ஒரே பார்பனர்களாக ஆகி இருந்தனர். பண்டைய இந்தியாவில் பாலி, பிராகிரதம் மற்றும் ஆதித்தமிழ் ஆகிய மொழிகளே இருந்தன. இவற்றில் பாலி, சமஸ்கிரதமும் முற்றிலும் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து வடமாநில வட்டார மொழிகளாக திரிந்தது, ஆதித்தமிழ் திராவிட மொழிகளாக திரிந்தது.
பண்டைய இந்தியாவில் வடக்கில் பெருமளவு ஐம்பூத வணக்கமும், தெற்கில் நிலப்பிரிவு படி ஐந்து நிலத்தில் (குறிஞ்சு முதல் பாலை வரை) தனித்தனியான கடவுளை வணங்கினர்.
நான்கு வேதங்களான ஒரிஜினல் ஆரியர்களின் இருக்கு, யஜூர், சாம, அதர்வான வேதங்களுக்கும், இந்திய சமயங்களுக்கும் அவ்வளவு தொடர்ப்பு இல்லை, பின்னாளில் தொடர்ப்பு ஒட்டவைக்கப்பட்டது. நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்கள் ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிக் கொண்ட கதைதான். அரசன் பெயராக இந்திரன், கண்ணன் போன்றோரின் பெயர் சொல்லப்பட்டுள்ளது, கண்ணன் ஆயர் குலத்தோன், ஆரிய குலத்திற்கு நண்பன் என்று வேதங்களில் சொல்லப்படுகிறது. வெகு பிற்காலத்தில் இருக்கு வேத கண்ணனும், திராவிட மருத நில மாலும் ஒன்றாக்கினர், அதுபோல் வேதகாலத்தில் இருந்த சங்கரன் என்கிற ஏவல் தெய்வமும், தமிழக (சைவ) சிவனும் ஒன்றென சொல்லிவைத்தனர். வடக்கில் இருந்த குமர குருபரனே தெற்கின் முருகன் அல்லது சேயோன் என்று சொல்லிவைத்தனர். இவற்றையெல்லாம் ஒட்ட வைத்தில் பெரும்பங்காற்றியது கந்தபுராணம்.
*****
இன்றைய தேதியில் "பிராமணர்" என்கிற தகுதியாருக்கும் இல்லை, எனவே ஆரியர்கள் எவராக இருந்தாலும் பார்பனர் என்று சொல்லலாம். பிரமணர் என்று சொன்னால் பிராமணர் அல்லாதோர் அதாவது சூத்திரர் என்று ஒரு சமூகத்தையும் நீங்கள் ஒப்புக் கொள்வதாக பொருள், சாதிகள் பிறப்பு அடிப்படை என்று ஆகிவிட்ட பொழுது 'பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர்' என்கிற தகுதியடைப்படைச் சொற்கள் எவருக்குமே பொருந்தது.
**********
ஒருவரை பிராமணர் என்ற சொல்லத் தகுதியானவை:
யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'
இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)
- நன்றி நண்பர் குமரன்
பிராமணர் என்கிற சொல்லுக்கான தகுதி ஒருவருக்கும் இல்லை, அனைவருமே சூத்திரன் என்ற சொல்லுக்கு இருக்கும் தகுதியில் தான் இருக்கின்றனர். நான் பார்பனர்களை மட்டுமே சொல்லவில்லை, இன்றைய தேதியில் பார்பனர் உட்பட நான் ஷத்திரியன் என்று மார்தட்டும் அனைத்து சாதிகளும் சூத்திரன் என்ற தகுதியில் தான் இருக்கின்றனர். ஒருவரை பார்பனர் என்று அறிந்து நீங்கள் அவரை பிராமணர் என்று சொல்வது, அழைப்பது மறைமுகமாக உங்களை நீங்களே சூத்திரன் என்று சொல்வதாக, ஒப்புக் கொள்வதாக பொருள்.
பார்பனர்களுக்கு பிறவி குணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, பார்பனீயம் என்ற கட்டமைப்பில், சூழலில் வளர்வதால் அந்த குணம் அவர்களுக்கு இருக்கிறது. மற்றபடி எந்த சாதியினர் வீட்டுக் குழந்தையும் பார்பனர் வீட்டில் வளர்ந்தால் பார்பன குணத்துடன் தான் வளரும், இது பிற சாதிவிட்டில் வளர்க்கப்படும் பார்பன குழந்தைக்கும் பொருந்தும். சிங்கையில் தமிழர்கள் வீட்டில் வளர்ந்த சீனர்கள் தமிழர்களைப் போல் பண்பாடும் நாகரீகமும், தமிழ் பேச்சும் உள்ளவர்களாகவே உள்ளனர்
Read more...