பின்பற்றுபவர்கள்

1 டிசம்பர், 2008

யாருக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்பது உண்மையா ? கோர்வையற்ற எண்ணங்களாக !

எந்த ஒரு நாட்டிலும் இராணுவம், காவல் துறை என்ற சொல்லெல்லாம் "மக்களின் வாழ்வாதரத்தின் நம்பிக்கை" என்ற பொருளில் இருக்கிறது என்றே பலரும் நம்புகிறார்கள். மக்களாட்சி என்ற தத்துவத்தில் அரியணையேறும் கட்சி அரசுகள் அவற்றை கையாளுவதிலுற்கும் கட்டுப்படுத்தற்கும் சட்டம் அனுமதியளிக்கிறது.

ஆயிரம் பேர் கூடும் இடங்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பைவிட தேர்தல் வழியாக அரசு பதிவியில் இருப்பவர்களுக்கே அதாவது அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் போன்றோர்களுக்கு கொடுக்கப் படும் பாதுகாப்பு மிகுதி. ஆயிரம் பேரின் பாதுகாப்புக்கு 2 போலிசார் இருப்பதே பெரிய செயல்தான்.

இராணுவத்தின் மீதும், போலிசின் மீதும் இருக்கும் நம்பிக்கை உண்மையிலேயே நம்பத்தகுந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. கையூட்டு வாங்காத அலுவலர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம் என்பதால் தான் சமூகவிரோதிகள் மிக எளிதாக எதையும் செய்துவிடுவார்கள்.

சொல்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அல்கொய்தா போன்ற மிகவும் பயங்கரமான தீவிரவாதக் கும்பல் நினைத்தால் இந்தியா போன்ற நாடுகளை அழிப்பது எளிதுதான். ஊழல் மிகுந்த நாடுகளில் அரசு அலுவர்களை, அமைச்சர்களையும் வளைப்பது மிகவும் எளிதே என்பதை தெகல்கா போன்றவை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளனர்.

நாம் எதோ பாதுகாப்புகள் பலமானது என்றே நம்பிக் கொண்டு இருக்கிறோம். குண்டு வெடித்த ஒருவாரம் பொறுப்பான சோதனைகள் நடக்கும், அதன் பிறகு பழையடி ஒழுங்கீனத்தை தொடர்வார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் ஓடும் ரயில்களும், பேருந்துகளும் என்னேரமும் பாதுகாப்புடன் செல்வது கிடையாது, இவற்றை தகர்க்க வேண்டுமென்றால் ரயிலுக்கு இருவர் என்ற அளவில் அதனை செய்து முடித்துவிடுவர். கிட்டதட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

பொதுமக்களுக்கு என்னேரமும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் பொதுமக்களுக்கு ஏன் பாதுக்காப்பு தேவைப்படுகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். பொறுப்பற்ற மதவாதிகளின் தூண்டல்களால் பாதுகாப்பு இன்மை ஏற்படுகிறது. ஒரே நாளில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தை மிகுதியாக்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு கடந்து பிறகு தான்... 'அப்பாடா...எங்கும் குண்டுவெடிக்கல' நிம்மதி என்று அனைவரும் மூச்சுவிடுகின்றனர். மறுநாள் சோதனைகள் எதுவுமே இருக்காது. பழிக்கு பழிவாங்கவேண்டுமென்றால் டிச 6 ஐ மட்டும் தான் நினைவு வைத்து பழிவாங்குவதாகவே அரசாங்கத் தரப்பு நினைப்பது சிறுபிள்ளையின் சிந்தனைப் போல் இருக்கிறது அல்லவா ? அதற்காக ஆண்டுமுழுவதும் பாதுகாப்புச் சோதனை என்றால் அதில் சிக்கி அல்ல படுபவர்கள் பொதுமக்கள் தான். ஆனால் இவற்றை சீர் செய்யவே முடியாதா ?

கண்டிப்பாக முடியும், மதவாதிகள் மூடிக் கொண்டு இருந்தாலே இவ்வித அச்சுறுத்தல்கள் குறைந்து போகும். கோத்ரா போன்ற ஒரு ரயிலை எரித்துவிட்டு வீரவசனம் பேசும் மோடி போன்றவர்களுக்கு ஒன்றுமே ஆகாது, ஏனென்றால் அவர்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு வளையம் அத்தகையது. அதிலும் கூட ஊடுறுவி இந்திராகாந்தி படுகொலை போல் நடத்திவிடுவார்கள் என்று இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை.

தன்னுடைய பேச்சிற்கும், மதசார்பிற்கும் இருக்கும் அச்சுறுத்தல் குறித்தே அத்வானி துணை பிரதமராக ஆகத்துடித்து 8 அடுக்கு பாதுகாப்புடன் வலம் வந்தார். இவையெல்லாம் தேவையா ? பேசக் கூடாதையெல்லாம் பேசி மதக்கலவரங்களுக்கு வழிவகுத்துவிட்டு, தனக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாதுகாப்பைக் கூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இவர்கள் மட்டுமே வலம் வருவதால் ஆத்திரம் அடைவோரின் குறி பொதுமக்கள் கூடும் இடங்களை நோக்கித்தான் செல்கிறது.

தீவிரவாதம் என்றால் அது எந்த மதத்தினரின் தீவிரவாதம் என்று ஆராயாமல் பொதுமக்களே அதனை முறியடிக்க வருவேண்டிய நேரத்தை நெருங்கிவிட்டோம் என்பதையே கடந்த கால இழப்புகள் காட்டுகின்றன

மதத் தீவிரவாதங்களினால் யாருடைய உயிருக்கும் உத்தரவாதமில்லை என்பது தான் உண்மை. மதக் கலவரங்களை தூண்டிவிடுவிடும் இவ்வளவு அடாத செயல்களை செய்துவிட்டு பாதுகாப்பாகவும் இருந்து கொண்டு நடக்கும் வன்செயல்களை மத அரசியலாக்கி. அதையும் வாக்குச் சீட்டாக, வாக்கு வேட்டையாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஏன் பலரும் உணரவில்லை.

முன்பெல்லாம் ஒருவினாடிக்கு மூன்று குழந்தைகள் பிறப்பதாக சொல்லுவார்கள், உலகெங்கிலும் மதத்தீவிரவாததினால் நிமிடத்திற்கு
10 பேராவது இறப்பார்கள், இதில் தற்கொலை தாக்குதல் நடத்துபவனும் "அடக்கம்".


போலிஸ் மற்றும் இராணுவம் எதிர்தாக்குதலை தொடுக்க உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திருப்பார்கள், தீவிரவாதிகள் யாருடைய ஏவலுக்கும் காத்திருக்காது, தங்களது உயிரைக் கூட பணயம் வைத்தே எளிதில் நினைத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள். அவர்களை எந்த ஒரு சட்டமும் கட்டுப்படுத்தாது. சட்டமும் தண்டனையும் பிடிபட்டவர்களுக்கு மட்டுமே. எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலும் "கண்டனம்" என்ற சொல்லால் முடிவுக்கு வந்துவிடுமா ? மதத்தீவிரவாதம் அது எந்த வடிவாக இருந்தாலும் புறக்கணிக்க வேண்டும், பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான மனநிலைக்கு பொதுமக்கள் செல்லாதவரை அவர்களின் உயிருக்கு யாருமே உத்திரவாதம் தரமுடியாது என்பது பேருண்மை.

உணர்வார்களா ? உணர்வோமா ?

இதோ இங்கே மதத்தீவிரவாதத்தை தூண்டி விடுபவர்கள் எத்தனை பேர் சொந்த பெயரில் எழுதுகிறார்கள் என்பதை பார்த்தாலே, இந்திய நாட்டின் பாதுகாப்பு இன்மைக்கு இவர்களும் ஒரு காரணமாக இருப்பதும், இவர்களின் எழுத்தே இவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உணர்ந்தே அவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் எதோ பெயரில் எழுத, இவர்களுக்கு சொந்த பெயரில் ஆதரவு வழங்குபவர்கள் சிந்திக்க வேண்டும். யாரும் பாதுகாப்பற்ற நிலையில் இன்று இருப்பதற்கு என்ன காரணம் ? தூண்டிவிடுபவர்கள் பாதுகாப்பாக வலம் வருவார்கள், ஆனால் இந்த தூண்டுதலில் எதிர்வினையால் பாதிக்கப்படுபவர்கள் வெளியில் இருப்பவர்களே.

போலிசும் இராணுவம் பயங்கரவாதத்திற்கு பிறகு காப்பற்ற முயற்சிப்பார்கள், ஆனால் தடுப்பதற்கான, முறியடிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறைவுதான். யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையே பலநாடுகளில் தொடர்கிறது. குறுதி புனல் படம் தான் நினைவுக்கு வருகிறது. கையூட்டு பெறுபவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும், மதவெறியர்களும் நம்மிடையேவும் இருப்பார்கள்.

ப்ரேக்கிங் பாயிண்டை வைத்து எதையுமே செய்து முடித்துவிடுவார்கள் !

4 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

கோவி, நூற்றுக்கணக்கான தீவிரவாத செயல்களை போலீசும், ராணுவமும் தடுத்தாலும் நமக்கு அவை புரிய மறுக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் போலீஸ்/ராணுவ அராஜகம் என்றும் சொல்லி வருகிறோம்.

But everyone has to understand that we prefer freedom over security and not the other way around ! If we have to wait for 6 hours to board a train (for thorough checking) we would rather board it in 5 minutes even if the security is threatened. So, the majority of police/intelligence/military work is in background where they target the areas that are prone for such activities. And we can't understand that enough as our perception is different.

****** இந்தியா போன்ற நாடுகளில் ஓடும் ரயில்களும், பேருந்துகளும் என்னேரமும் பாதுகாப்புடன் செல்வது கிடையாது, இவற்றை தகர்க்க வேண்டுமென்றால் ரயிலுக்கு இருவர் என்ற அளவில் அதனை செய்து முடித்துவிடுவர். ******

அப்படி நடந்தால் குருதிபுனலில் வரும் ப்ரேக்கிங் பாயிண்டை மக்கள் அடைந்து விடுவர். (வேறு கோணத்தில்)

மணிகண்டன் சொன்னது…

****** கோத்ரா போன்ற ஒரு ரயிலை எரித்துவிட்டு வீரவசனம் பேசும் மோடி போன்றவர்களுக்கு ஒன்றுமே ஆகாது, ******

"மோடி, வீரவசனம் பேசுகிறார் என்று சொல்லுங்கள்" ஏற்றுக்கொள்ளலாம்.

"மோடி, குஜராத்தில் நடந்த கலவரத்தை சற்றும் அடக்க முயற்சி செய்யவில்லை என்று கூறுங்கள்" ஏற்றுக்கொள்ளலாம்.

"மோடி, குஜராத்தில் நடந்த கலவரத்தை போலீஸ் விட்டு அடக்காமல் ஊக்குவித்தார் என்று கூறுங்கள்" ஏற்றுக்கொள்ளலாம்.

"மோடி, முஸ்லிம்களுக்கு விரோதமாக நடக்கிறார் என்று கூறுங்கள்" ஏற்றுக்கொள்ளலாம்.

"மோடி, இந்து பெரும்பான்மையினரின் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்கிறார் என்று கூறுங்கள்" ஏற்றுக்கொள்ளலாம்.

ரயிலை எரித்தார் என்று சொல்வது இணையத்தில் எழுதப்படும் "எல்லாவற்றுக்கும் துலுக்கனே காரணம். அவனை விரட்டினால் நாடு உருப்படும்" என்று கூறுவதை போலே உள்ளது. எழுதும் ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரயிலை எரித்தார் என்று சொல்வது இணையத்தில் எழுதப்படும் "எல்லாவற்றுக்கும் துலுக்கனே காரணம். அவனை விரட்டினால் நாடு உருப்படும்" என்று கூறுவதை போலே உள்ளது. எழுதும் ஒவ்வொருவருக்கும் அவரவர் நியாயம்.

10:55 PM, December 01, 2008
//

திரு மணிகண்டன், ஆகுபெயர் இலக்கணம். இரட்டை கோபுரங்களை பின்லேடன் தகர்த்தான் என்று சொன்னால் பின்லேடன் ப்ளைட்டை ஓட்டினான் என்று பொருள் அல்ல, யார் தூண்டுகிறார்களோ, யார் உத்தரவு கொடுக்கிறார்களோ, அவர்கள் பெயரைச் சொல்வதே வழக்கு.

RAHAWAJ சொன்னது…

உங்கள் பார்வை,நேக்கம்,ஆதங்கம் புரிகிறது,இதற்கு எல்லாம் காரணம் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் இவர்களின் "சுயநலமே" தான் மட்டும் நன்று இருக்கவேண்டும் என்ற சுயநலம் சரியா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்