வீரமணி ஐயா... நாத்திகம் என்பது மதமா ?
Monday, May 31, 2010
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் - கி.வீரமணி
ஐயா வீரமணி அவர்களே, திராவிடம் என்ற சொல்லை தமிழன் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளாத போது 'திராவிடத்தை' முற்றிலுமாக ஒழித்துவிட்டு தமிழன் என்றே போடலாமே. பழந்தமிழகத்தில் ஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்பதாக ஏசும் சொல்லாக புழங்கப்பட்ட தமிழர் நிலம் சார்ந்த சொல்லாக, மறைமுகமாக புழங்கிய சொல், தென்னிந்திய அரசியல் முன்னெடுப்பு மற்றும் பார்பனிய சித்தாந்தங்களின் எதிர்ப்பு என்பதாக அயோத்திதாசப் பண்டிதரால் 'திராவிட' என்னும் சொல் அரசியல் களத்தில் தென்னிந்திய நிலம் சார்ந்த அரசியல் சொல்லாக பரிந்துரைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பெரியார் அந்த சொல்லை அரசியலில் பொதுப்படுத்தி திராவிட இயக்கம் கண்டார். இயக்கங்கள் கொள்கைகளை காற்றில் (விற்று) விட்டு பரிணாமம் கண்டு, மன்னர் ஆட்சி அடிப்படையில் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்பதற்கு உங்கள் தலைமையிலான திக உட்பட தங்களுக்கு பின்னால் தங்கள் மகன் என்பதாக வாரிசு உடைமை ஆக்கிவிட்டன. இதில் எங்கே இருக்கிறது திராவிடம் ?
மேலும் மதம் என்பதில் நாத்திகன் என்று போடச் சொல்லுகிறீர்கள். நாத்திகம் என்பது மதமா ? அப்படி என்றால் அதனை உருவாக்கிய இறைத் தூதர் யார் ? நாத்திகத்தை மதம் என்று ஏற்க ஆக்கிய ஆசான் வேண்டும் என்பது பொதுவாதம்.
ஏற்கனவே ஏகப்பட்ட மதங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் புதிய மதமாக நாத்திகத்தை நுழைக்கும் நீங்கள் தான் நாத்திக மத நிறுவனரா ?
பெரியார் கொள்கையில் சுயமரியாதை, பெண்ணுரிமை, வாரிசு அரசியல், ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஒப்புக்காக பார்பன எதிர்ப்பையும் நாத்திகவாதத்தையும் பிடித்துக் கொண்டிருக்கும் தாங்கள், திராவிட அரசியல் என்றும் நாத்திகம் என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்பது விளங்கவில்லை. உங்களாவது விளங்கியதா ?
பெரியார் நாத்திகத்தை முன்னிருத்தி இருந்தால் அவர் பக்கத்தில் குன்றக்குடி அடிகளார் இருந்திருக்கமாட்டார். பெரியார் நாத்திகம் என்ற பெயரில் செய்தது மூட நம்பிக்கை மறுப்பு. பார்பன எதிர்ப்பு என்ற பெயரில் பழமை வாத எதிர்ப்பு. வருண வாதிகளின் ஆதரவுகளுடன் இருந்த மன்னர் ஆட்சிகளின் பரிணாமம் போல் இன்றைய வாரிசு அரசியலுக்கு சாமரம் வீசுபவரான தாங்கள் திராவிடம், நாத்திகம் என்றெல்லாம் பிதற்றுவது நகைப்புகிடமாக இருக்கிறது. பெரியாரை சாமியாக்கவும் பெரியாரின் கொள்கைகளை நாத்திக மதம் என்பதாக்கவும் பார்பனர்கள் தேவை இல்லை, அந்தப் பணியை தாங்களே சிறப்பாக செய்கிறீர்கள்.
தமிழன் திராவிடன் என்று சொல்ல தாங்கள் முன்வைக்கும் நிலம் சார்ந்த அரசியல் என்ன ? மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று குறிக்க.... நாத்திகம் என்பது ஒரு மதமா ? இன உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்கிறீர்கள். இன உணர்வாளர்கள் யார் ? முள்ளிவாய்க்காலில் வாய்கரிசி போட்டவர்களா ?
இனம் என்ற இடத்தில் 'தமிழன்' என்று சொல்லோ, மதமற்றவன் என்ற சொல் நாத்திகன் என்ற பொருளில் வராது. மதம் என்ற இடத்தில் 'மதம் சாராதவன்/மதமற்றவன்' என்ற சொல்லோ போடலாம் என்று சொல்லமுடியாமல் உங்களை தடுப்பது எது ?













